தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 208 திருச்செங்கோடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 208 வது தேவாரத்தலம் திருச்செங்கோடு. புராணபெயர் திருக்கொடிமாடச் செங்குன்றூர். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் மாதொருபாகர். சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து பூர்ண சந்திரன் சூடி கழுத்தில் ருத்ராட்சம் தாலி அணிந்து கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன் சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும் இடப்புறம் சேலையும் அணிவிப்பர். அம்பாள் பாகம்பிரியாள். தலவிருட்சம் இலுப்பை. தீர்த்தம் தேவதீர்த்தம். சுவாமியின் பாதத்தின் கீழ் தேவதீர்த்தம் உள்ளது. மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. தேவாரப் பதிகங்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பாடப்பெற்ற சிவஸ்தலம் தற்போது திருச்செங்கொடு என்று கூறப்படுகிறது.

சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன. இந்த சிவஸ்தலத்தில் உள்ள கோவில் மேற்கு நோக்கி ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த மலை செந்நிறமாக இருப்பதால் செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலம் 1901 அடி உயர மலையின் மீது உள்ளது. இந்த மலையில் ஏற 1200 படிகள் உள்ளன. மேலே செல்லும் வழியில் பல மண்டபங்கள் உள்ளன. குன்றின் உச்சிக்குக் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் உள்ளது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. வடக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்து 20 படிகள் கீழிறங்கி வெளிப் பிரகாரத்தை அடையலாம். இத்தலத்தில் இறைவி தவம் செய்து இறைவனது திருமேனியில் ஒரு பகுதியைத் தம்முடையதாகப் பெற்றார் என்று புராணம் கூறுகின்றது.

திருச்செங்கொடு மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவருக்கு தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தலத்து முருகனைப் பற்றி பாடியுள்ளார். சிவனின் இடப்பாகம் பெற அம்பாள் பூஜித்த லிங்கம் மூலஸ்தானத்திற்குள் உள்ளது. காலை, மதியம், மாலையில் நடக்கும் பூஜையின் போது மட்டும் இந்த லிங்கத்தை அர்த்தநாரீஸ்வரர் அருகில் வைத்து பூஜிப்பர். இந்த பூஜைகளை அம்பிகையே செய்கிறாள். உச்சிக்காலத்தில் இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கும். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்னு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது இவருக்கு தனியே கொடியேற்றி 10ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடக்கும். இம்மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும் என தலவரலாறு கூறுகின்றது. 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகத்தின் அருகே அமைந்துள்ள 60 படிக்கட்டுக்களை சத்தியப்படிக்கட்டு என்பர்.

இந்த மலை உருவானதற்கு புராணக்கதை உண்டு. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம். இதன்படி வாயு வேகமாக வீச மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகவும் ஓர் கருத்து உண்டு. இம்மலைக்கு நாககிரி, வாயுமலை என்றும் பெயர்கள் உண்டு. சிவன் கோயிலில் லிங்கம் இருப்பது மரபு. இங்கே மலையே லிங்கமாக கருதப்படுவதால் மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது. இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் அருளுகின்றனர். பிருங்கி முனிவர் கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில் சிவனை மட்டும் வணங்கும் வகையில் வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி முனிவரே சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீர் சக்தி இழந்து போவீர் என சாபமிட்டாள். இதையறிந்த சிவன் நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இருவரும் இணைந்த வடிவம் அர்த்தநாரீஸ்வரர் எனப்பட்டது.

அர்த்தநாரீ என்றால் இணைந்த வடிவம் எனப் பொருள். இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கும் வந்து சில தலங்களில் குடிகொண்டார். அதில் ஒன்றே திருச்செங்கோடு. செங்கோட்டு வேலவர் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல்சங்கிலிகள் ஆகிய சிற்ப விநோதங்கள் உள்ளன. நாகேஸ்வரரின் கருவறை, சிற்ப வேலைப்பாடுமிக்கது. கருவறை முன்மண்டபத்தில் குதிரை அல்லது யாளி மீதுள்ள வீரர்களின் கற்றூண் சிற்பங்கள் உள்ளன. ஆதிசேஷன், மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இக்கோவிலை வணங்கி பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது அவருடன் வந்த அடியார்களை நளிர்சுரம் பிடித்தது. அவ்வினைக் கிவ்வினை என்னும் பதிகம் பாடி தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு. இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய பாடல்களில் உள்ளன. வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது. இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இங்குள்ள ஆதிகேசவ பெருமாளை நம்மாழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.