தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 263 திருவக்கரை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 263 வது தேவாரத்தலம் திருவக்கரை. புராணபெயர் வக்ராபுரி. மூலவர் சந்திரமௌலீஸ்வரர், சந்திரசேகரேஸ்வரர், பிறைசூடிய எம்பெருமான். இறைவன் இங்கு சுயம்புலிங்கமாக அருள்பாளிக்கிறார். சதுரஅடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் திருமேனி மும்முகத்துடன் உள்ளார். சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் எனப்படும். தெற்கே உள்ள அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரை பற்கள் உள்ளன. இதை பால் அபிசேகம் செய்யும் போது மட்டுமே தெளிவாக பார்க்க முடியும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் ஆகும். லிங்கத்தின் மூன்று முகங்களும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோரின் முகங்களைக் குறிக்கிறது. அம்பாள் அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் சூரியபுஷ்கரிணி, சந்திர தீர்த்தம். வராக நதிக்கரையில் ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் இடப்பக்கம் வக்கிரகாளி உருவம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் வடக்கு நோக்கிய அஷ்டபுஜகாளி கோவில் உள்ளது.

அஷ்டபுஜகாளியின் சந்நிதி முகப்பில் நான்கு பாலகியர் உருவங்கள் உள்ளன. வக்கரையில் உள்ள காளியாதலின் வக்கரைக்காளி என்றும் அழைக்கப்படுகிறாள். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்ர ராஜ எந்திரம் உள்ளது. சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருக்கரங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் , பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலை இடத் தோளிலிருந்து இறங்கி கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது. காளியின் சந்நிதிக்கு எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும். இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். இந்த லிங்கத்திற்கு வக்கிர லிங்கம் என்ற பெயரும் உள்ளது. காளி சந்நிதியைக் கடந்து நேரே சென்றால் வலதுபுறம் சிங்கமுகத் தூண்கள் அமைந்த கல் மண்டபம் உள்ளது. அதையடுத்துள்ள அடுத்துள்ள மூன்று நிலைகளையுடைய கோபுரம் கிளிக்கோபுரம் என்றழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு எதிரில் பெரிய கல்லால் ஆன நந்தி உள்ளது. கோபுரத்திற்கு இடதுபுறம் விநாயகர் சந்நிதி இருக்கிறது. 2 வது கோபுரம் வழியே உள் நுழைந்து உள்பிராகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதியும் முனிவரின் சமாதியின் மீது சிவலிங்கம் காணலாம். கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப் பெருமாள், விநாயகர், ஆறுமுகர், துர்க்கை உள்ளனர். எதிரில் கருடாழ்வார் உள்ளார். சஹஸ்ரலிங்கம் உள்ளது. துவார பாலகர்கள் இருபுறமும் இருக்கின்றனர். உள்சுற்றில் நால்வர் சந்நிதி உள்ளது. சண்டேசுவரர் எதிரில் உள்ளார். பின்னால் சுவர் ஓரமாகப் பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் சிலாரூபங்களாக வரிசையாக உள்ளனர். இங்குள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார். குண்டலினி சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளார். இங்கு அவரின் சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது.

குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்து இப்பகுதியை ஆண்ட வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசுரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள். வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷ்டபுஜகாளி அழித்தாள். துன்முகி அழிந்த போது அவள் கருவுற்று இருந்ததால் அவள் வயிற்றிலுள்ள குழந்தையை காளி தன் காதில் குண்டலமாக அணிந்து கொண்டாள். வக்ர காளி இங்கு சாந்த சொரூபமாக அருள்பாலிக்கிறாள். வக்கிராசுரனை அழித்த திருமால் இவ்வாலயத்தின் 2 வது பிராகாரத்தில் மேற்கு நோக்கியவாறு நின்ற கோலத்தில் வரதராஜப்பெருமாள் என்ற பெயருடன் கையில் பிரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார். வரதராஜ பெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இருக்காமல் சக்கரத்தின் அமைப்பு மாறி இருக்கிறது. வக்கிரன் வழிபட்டதால் இத்தலம் வக்கரை என்று பெயர் பெற்றது. மேலும் இத்தலத்தில் பல அமைப்புகள் வக்கிரமாகவே உள்ளது. இத்தலத்திலுள்ள நடராஜர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தூக்கிய திருவடி இடுப்புக்கு மேல் வரை வந்துள்ளது. இவ்வமைப்பு வக்கிரதாண்டவம் ஆகும். மற்ற ஆலயங்களில் உள்ளது போல் இல்லாமல் மூலவர் சந்நிதி, கொடிமரம், நந்தி ஆகியவை நேர்கோட்டில் அமையாமல் சற்று விலகி இருக்கின்றன.

நவக்கிரக சந்நிதியிலும் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது. காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும். இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும்.
இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் அதே தோற்றததோடு இன்று கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன. கி.மு.756 ல் கட்டப்பட்ட கோயில் இது.
ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள பழைய செங்கல் கட்டுமான கோயில்களை கற்றளிகளாக மாற்றிக் கொண்டே வந்தவர் ராஜ ராஜனின் பாட்டி செம்பியன் மாதேவி அவர்கள். திருவக்கரையில் உள்ள வக்கிரகாளி அம்மன் ஆலயத்தை திருப்பணி செய்து கொண்டிருந்த போது நான்கு பனை உயர அளவிற்கு தஞ்சையில் ஒரு கோயிலை ராஜ ராஜன் எழுப்புகிறான் என்ற செய்தி கேட்டு தன்னுடைய பங்களிப்பாக ஏதாவது வழங்க வேண்டும் என்று ஒரு நந்தியை பரிசாக திருவக்கரையிளிருந்து வராக நதிக்கரை வழியாக அனுப்பி வைக்கிறார். நந்தி வராக நதியில் சென்ற போது பெரு வெள்ளம் வந்து ஆற்றில் சிக்கிக்கொண்டு தஞ்சைக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்கி விட்டது. தஞ்சை பெருஉடையாருக்கு எதிரே கம்பீரமாக உட்கார வேண்டிய நந்தி தற்போது திருவக்கரை அருகில் உள்ள சன்னியாசி குப்பம் என்ற இடத்தில் நின்று கொண்டுள்ளது. திருஞானசம்பந்தர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.