தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 17 குறுமாணக்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 17 வது தேவாரத்தலம் குறுமாணக்குடி. புராண பெயர் திருக்கண்ணார்கோயில். கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்ரேஸ்வரர். இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாணம் சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. அம்பாள் முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை. தெற்கு நோக்கிய சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் உரிய கட்டமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன. தலமரம் சரக்கொன்றை. தீர்த்தம் இந்திர தீர்த்தம். மூலவர் மண்டபத்தில் சந்திரசேகர் திருமேனி உள்ளது. சுவாமிக்குத் தீபாராதனை செய்து அடுத்து அம்பாளுக்கும் தீபாராதனை செய்து அதற்குப்பிறகே திருநீறு குங்குமம் வழங்கும் மரபு இக்கோயிலில் இருந்து வருகின்றது.

கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு கட்டைக்கோபுர வாயிலும் இரண்டு பிராகாரங்களும் உள்ளது. கோவிலுக்கு வெளியே எதிரில் இந்திர தீர்த்தம் உள்ளது. தீர்த்தக் கரையில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. கட்டைக்கோபுர வாயிலின் முகப்பின் மேல் ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் சுதை வடிவில் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. உள்நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் உள்ளது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. 2 வது வாயில் வழியே உள்ளே சென்றால் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி பலிபீடங்கள் உள்ளன. உள்மண்டபத்தில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியை அடுத்தாற்போல் சித்திவிநாயகர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பிராகாரத்தில் நால்வரையடுத்து கன்னி விநாயகர் உள்ளார். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி உள்ளது. அதனால் எதிர் மண்டபத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் தொடர்ந்து பைரவர், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தின் வலதுபுறம் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன.

மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குறு மாண் (குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி மாபலியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக வாக்களித்தான். அப்போது வாமனர் திரிவிக்கிரம வடிவெடுத்து மண்ணை ஓர் அடியாலும் விண்ணை ஓர் அடியாலும் அளந்தார். மூன்றாவது அடியாக மாவலியின் முடி மீது வைத்தார். இவ்வாறு குறு மாண் வடிவில் வந்த திருமால் வழிபட்ட தலம் இக்கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்குக் குறு மாணக்குடி என்று பெயர் வந்தது.

தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே சென்ற சமயம் அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். இந்திரன் முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை பார்க்க சென்றான். இதற்குள் முனிவர் திரும்பி வர இந்திரன் பூனை வடிவமெடுத்தான். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் பெண்களுக்கான பெண் உறுப்பு உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார் முனிவர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான். அதற்கு பிரம்மன் சில கோவில்களில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். அக்கோவில்களில் குறுமாணக்குடி ஒன்று. இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட அவனது ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாறி இறைவன் ஏற்றுக்கொண்டார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் கண்ணாயிரமுடையார் ஆனார்.

திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை. இத்தல இறைவனை வழிபடுபவர்கள் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர். இத்தல பதிகப் பாடல்கள் பத்தினாலும் இறைவனை போற்றி வழிபடுபவர்கள் தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் கூறியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.