பார்பரிகா

பார்பரிகா இவருக்கு காட்டுஜி பார்பரிகா என்ற பெயரும் உண்டு. இவர் பீமனின் மகன் கடோற்கஜனுக்கும் யாதவ அரசன் மூருவின் மகள் மௌர்விக்கும் பிறந்தவனாவான். யட்சனான பர்பரிகன் மனிதனாக மறுபிறவி எடுத்தவன். குழந்தை பருவத்தில் இருந்தே மிகப்பெரிய போர் வீரனாக திகழ்ந்தான் மகாபாரத போரின் முன்பு போரை முடிக்க எத்தனை நாள் தேவைப்படும் என அனைத்து போர் வீரர்களிடமும் கிருஷ்ணர் கேட்டார். அனைவரும் சராசரியாக 15 முதல் 20 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர். பார்பரிகாவை கேட்ட போது தான் ஒரு நிமிடத்தில் போரை முடித்து விடுவதாக கூறினார். அனைவரும் அது எப்படி சாத்தியமாகும் என கேட்க கிருஷ்ணர் அவரிடம் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும். பதில் கூறுமாறு பார்பரிகாவிடம் கூறினார்.

சிவபெருமானால் தனக்கு வரமாக அளிக்கப்பட்ட மூன்று அம்புகளின் ரகசியத்தை பற்றி அவர் கூறினார். இந்த அம்புகளை கொண்டு ஒரு நிமிடத்தில் மகாபாரத போரை முடிவிடுவதாக பார்பரிகா கூறினார். பார்பரிகா சிவபெருமானின் தீவிர பக்தனாகவும் விளங்கினார். சிவபெருமானை குளிரச் செய்யும் நோக்கில் அவர் கடுமையான தவத்தில் ஈடுபட்டார். அதற்கு பலனாக மந்திர சக்தி அடங்கிய மூன்று அம்புகளை வரமாகவும் பெற்றார். முதல் அம்பு தான் அழிக்க நினைக்கும் அனைத்து எதிரிகளையும் முதலில் குறி வைக்கும் பின்பு மூன்றாம் அம்பை பயன்படுத்தும் போது குறியிட்ட அனைவரையும் அது அழித்து விட்டு மீண்டும் அவரின் அம்புக்கூட்டிற்குள் வந்து விடும். மூன்றாம் அம்பை தனியாக பயன் படுத்தினால் குறிப்பிடப்படாத அனைத்தையும் மொத்தமாக ஒரே அம்பில் அழித்து விடும். தான் காப்பாற்ற நினைக்கும் அனைத்து பொருட்களையும் மக்களையும் காப்பதற்கு இரண்டாம் அம்பு பயன்படும். அதனால் பார்பரிக்காவை தீன் பந்தரி மூன்று அம்புகளை கொண்டவன் என்று பெயர் பெற்றான்.

இந்த வரத்தை பற்றி கேட்ட கிருஷ்ணர் அனைவருக்கும் அவனது திறமையை காண்பிக்க முடிவெடுத்தார். அதனால் வெறும் மூன்று அம்புகளை கொண்டு பார்பரிகா போர் புரிவதை பற்றி கிண்டல் செய்த அவர் அவரின் சக்தியை வெளிப்படுத்த செயல்முறை விளக்கம் கேட்டார். கிருஷ்ணருடன் காட்டிற்கு சென்ற பார்பரிகா ஒரு மரத்தில் உள்ள அனைத்து இலைகளையும் எடுக்க முடிவெடுத்தார். பார்பரிகா கண்களை மூடிக்கொண்டிருந்த போது மரத்தில் இருந்து ஒரு இலையை எடுத்த கிருஷ்ணர் தன் பாதத்திற்கு அடியில் அதை மறைத்து வைத்துக் கொண்டார். இலைகளை குறி வைக்க முதல் அம்பை பார்பரிகா எய்திய போது அந்த மரத்தின் கடைசி இலையை குறிக்க வைக்க அது இருந்த இடமான கிருஷ்ணரின் பாதத்தை நோக்கி சென்றது. கிருஷ்ணர் தன் பாதத்தை தூக்கினார். உடனே அந்த இலையின் மீதும் குறி வைக்கப்பட்டது. அதன் பின் மூன்றாம் அம்பை எய்தியவுடன் அனைத்து இலைகளும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் போடப்பட்டது. இதனை கண்ட அனைவரும் வியந்தனர். பார்பரிகா பெற்ற வரத்தின் போது சிவன் இரண்டு நிபந்தனைகள் விதித்தார். முதல் நிபந்தனை தன் சொந்த பகைக்காக இந்த அம்புகளை அவர் பயன்படுத்த கூடாது. இரண்டாம் நிபந்தனை போர்களத்தில் பலவீனமான பக்கத்தில் இருந்து சண்டை போடும் போதே இந்த அம்புகளைப் பயன்படுத்த வேண்டும். வெற்றி பெரும் பக்கத்தில் இருந்தால் இந்த அம்பை உபயோகிக்க கூடாது. இது தவிர எந்த அணி தோற்கின்ற நிலையில் உள்ளதோ அந்த அணியுடன் சேர்ந்து போர் புரிவது என்று தனது குருவுக்கு தட்சிணையாக வாக்குறுதி ஒன்றை அளித்திருக்கின்றான்.

பார்பரிகாவின் சக்தியை பார்த்த கிருஷ்ணர் குருஷேத்ர போரில் யாருக்கு ஆதரவாக சண்டை போடப்போவதாக எண்ணியிருக்கின்றாய் எனக்கேட்டார். கௌரவர்களிடம் பீஷ்மர் துரோணர் கிருபர் கர்ணன் என அதிரவர்கள் இருக்கின்றார்கள். படைபலமும் கௌரவர்களுக்கே அதிகமாக உள்ளது. கௌரவர்களை விட பாண்டவர்களே பலவீனமாக இருக்கின்றார்கள். எனவே பாண்டவர்கள் அணியில் இருந்து தான் போரிட போவதாக தெரிவித்தார். இதற்கு கிருஷ்ணர் பாண்டவர்களுடன் பார்பரிக்கா சேர்ந்து கொண்டால் தானாகவே அவர்கள் அணி வலுவடையும் சிறிது நேரத்தில் பாண்டவர்கள் வெற்றி அடையும் நிலைக்கு வருவார்கள். கௌரவர்கள் தோற்கும் நிலை அடைவார்கள். உன்னுடைய யுத்த நியதியின் படி தோற்கும் பக்கம் நின்று நீ யுத்தம் செய்ய வேண்டும். அதன்படி பின்பு நீ கௌரவர்கள் பக்கம் சேரவேண்டும். பின்பு கௌரவர்கள் வெற்றி அடையும் நிலைக்கு வருவார்கள். இப்படி நீ மாறி மாறி இரு அணிக்கும் போரிட்டுக்கொண்டே இருந்தால் இறுதியில் நீ மட்டும் தான் இருப்பாய் இரு அணியிலும் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். யுத்தம் வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்துவிடும் என கிருஷ்ணர் கூறினார். இதனால் பார்பரிகா குழப்பமடைந்தார். இந்த வரத்தின் நிபந்தனையை நிறைவேற்ற அவர் அணியை மாற்றிக்கொண்டே இருக்க நேரிடும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான்.

அப்போது கிருஷ்ணர் வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும் என்றார் கிருஷ்ணர். யார் அவன் சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன் என்றான் பார்பரிகா. உன் உறவினர்களுக்காகவும் போரின் முடிவுக்காகவும் உழைக்க எண்ணாமல் குருவிற்கு கொடுத்த தட்சணைபடியும் சிவபெருமான் விதித்த நிபந்தனைப்படியும் போர் செய்ய வேண்டும் என்று நினைத்த நீதான் அந்த ஆள் என்று அவன் தலையைக் கேட்டார் கிருஷ்ணர். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி அவனுக்கு வரம் ஒன்று கொடுக்க சித்தம் ஆனார். அவனோ தான் இறந்தாலும் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும் என்று வரம் கேட்டான். கிருஷ்ணரின் ஆசையை ஏற்றுக் கொண்ட பார்பரிக்க தன் தலையை துண்டித்துக் கொண்டார். இறப்பதற்கு முன்பு கிருஷ்ணரிடம் இருந்து ஒரு வரத்தை கேட்டார். அதாவது மகாபராத போரை தன் கண்களால் பார்க்க வேண்டும். அந்த வரத்தை அவருக்கு அளித்தார் கிருஷ்ணர். அவரின் தலையை மலையின் உச்சிக்கு எடுத்துக் சென்று வைத்தான் பீமன். அதனால் மகாபராத போர் முழுவதையும் கிருஷ்ணரின் அருளால் பார்பரிகா கண்டார். ராஜஸ்தானில் பார்பரிக்காவை காட்டு ஷ்யாம்ஜி யாக இன்றும் வணங்குகின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.