மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -10

கனகனால் தூண்டப்பட்ட சமையல்காரன் வல்லாளன் விராட மன்னனை விடுவிக்க விரைந்து ஓடினான். மரம் ஒன்றை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டு போனான். உனக்கு விருப்பமான போர் முறைகளை இங்கே கையாள வேண்டாம் ஏனென்றால் இன்னும் சில தினங்களுக்கு நாம் மறைந்திருக்க வேண்டும். சாதாரண போர் வீரர்கள் போன்று போர் செய்வாயாக என்று வல்லாளனுக்கு கனகன் எச்சரிக்கை பண்ணினார். கனகனின் ஆணைப்படியே நடந்து கொண்டா வல்லாளன் சுதர்மனை தோற்கடித்து விராட மன்னனை விடுவித்தான். அதோடு சுதர்மனின் கைகளையும் கால்களையும் கட்டி போட்டு தன்னுடைய ரதத்திலே வைத்து அவனைக் கொண்டு போனான். எதிரியின் படை தோல்வியுற்றது. தன்னை காப்பாற்றிய புதிய போர் வீரர்களுக்கு விராட மன்னன் நன்றி மிக செலுத்தினான். அவர்கள் அடைந்த வெற்றி நகரத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. மிக மகிழ்வுடன் இச்செய்தியை கேட்ட நகர மக்கள் தங்களுடைய நகரை நன்கு அலங்கரித்து தங்களுடைய பெரும் பாராட்டுகளோடு அவர்கள் வரவேற்றனர்.

விராட நாட்டின் வடக்கு திசையில் துரியோதனன் படை எடுத்து வந்து அங்கிருக்கும் மாட்டுப் பண்ணையில் பசுக்களை எல்லாம் அஸ்தினாபுரம் ஓட்டிச்சென்றான். அப்பண்ணையை நிர்வாகித்து வந்தவர்கள் ஆதரவற்றவர்களாயினர். துரியோதனன் பசுக்களை கொள்ளையடித்ததை தெரிவிப்பதற்கு விராட மன்னனுடைய சபா மண்டபத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு சபாமண்டபம் காலியாக கிடந்தது. அதன் பிறகு அவர்கள் நாட்டிய மண்டபத்திற்கு ஓடினார்கள். அங்கு இளவரசன் உத்தரன் வீணை வாசித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தார்கள். அரசாங்கத்துக்கு உரிய கால்நடைகளை துரியோதனன் அபகரித்துக் கொண்டு செல்கின்றான் என்று தெரிவித்தார்கள். உத்தரனுக்கு அதைப்பற்றி கவலை உண்டாயிற்று. போரில் வெற்றி பெருவதற்கு சாரதி மிகவும் முக்கியம் என்றும் தனக்கு சரியான தேர் ஓட்டும் சாரதி ஒருவன் கிடைத்தால் அர்ஜுனனுக்கு நிகராக போர்புரிய முடியும் என்று அவன் பெருமை பேசினான்.

அதைக்கேட்ட சைரந்திரி உத்தரன் முன்பு வந்து பிருஹன்நளா ஆடுவதிலும் பாடுவலும் கெட்டிக்காரியாக இருப்பது போன்று சாரதி தொழிலிலும் வல்லவள். அவளை அழைத்துச் சென்றாள் போர் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அவளால் சிறப்பாக தேரை ஓட்ட முடியும் என்றாள். உத்தரனும் பிருஹன்நளா சாரதியாக வருவதற்கு சம்மதித்தான். இந்த நெருக்கடியை கருத்தில் வாங்கிக்கொண்டு பிருஹன்நளா உடனடியாக ஆயுதங்களை எடுத்து அணிந்து கொண்டு ரதத்தில் குதிரையைப் பூட்டி அதனுள் அரசகுமாரனை அமரச்செய்து அந்த ரதத்தை வடக்கு திசை மாட்டுப்பண்ணை நோக்கி விரைந்து ரதத்தை ஓட்டிச் சென்றாள். கையில் ஆயுதம் பிடித்திருந்த உத்தரனுக்கு இப்போது உற்சாகம் மிகுதியாக இருந்தது. தன்னால் இயன்றவரை போர் புரிய வேண்டுமென்று அவன் துணிந்து சென்றான். கௌரவர்களுடைய சேனை எங்கு இருந்தது என்பதை கவனித்து பார்த்து அத்திசையை நோக்கி ரதத்தை பிருஹன்நளா செலுத்தினாள். அங்கு கௌரவர்கள் பெரும் கூட்டமாக போரில் சிறந்த வீரர்கள் போருக்கு ஆயத்தமாய் இருப்பதை பார்த்து பயந்து போன உத்தரன் ரதத்திலிருந்து கீழே குதித்து தம் உயிரை காப்பாற்றிக்கொள்ள விரைந்து ஓடினான்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.