மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -6

பத்ம வியூக அமைப்பை கண்ட யுதிஷ்டிரர் கலக்க முற்றார். ஆபத்து மிக வாய்ந்த பத்ம வியூகம் பாண்டவர்களின் படைகளை விரைவில் அழித்துவிடும். இந்த நெருக்கடியில் அபிமன்யு யுதிஷ்டிரன் முன்னிலைக்கு வந்து தன்னுடைய கருத்தை தெரிவித்தான். இதுபோன்ற பத்ம வியூகம் ஒன்றை உடைத்துக்கொண்டு உள்ளே போகும் பயிற்சியை தந்தையான அர்ஜுனன் எனக்கு புகட்டியிருக்கிறார் என்றும் ஆனால் அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளியே வரும் பயிற்சியே தன் தந்தை இன்னும் தனக்கு புகட்டவில்லை என்றும் அவன் தெரிவித்தான். அதனைக் கேட்ட யுதிஷ்டிரன் எப்படியாவது இந்த பத்ம வியூகத்துக்கு உள்ளே நுழைவதற்கான உபாயம் ஒன்றை கையாளும் படி அபிமன்யு கேட்டுக்கொண்டான். அபிமன்யு வியூகத்திற்குள் செல்லும் போது அவனை பின்பற்றி பீமனும் பெரிய பெரிய போர் வீரர்களும் பின் தொடர்ந்து உள்ளே நுழைந்து விடுவார்கள். அத்தனை பேரும் உள்ளே போனபிறகு எதிரிகளின் வியூகத்தை உடைத்து தகர்த்து விடுவார்கள். வியூகம் உடைந்த பிறகு அதிலிருந்து தப்பித்துக் கொண்டு சுலபமாக வெளியே வந்து விடலாம் என்றும் யுதிஷ்டிரன் அபிமன்யுவிடம் கூறினான். அபிமன்யுவும் இத்திட்டத்திற்கு சம்மதித்தான்.

அபிமன்யு தன் திறமையை கையாண்டு பத்ம வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். பாண்டவர்களின் துர்பாக்கியவசத்தால் அபிமன்யுவை பின்பற்றி ஏனைய போர்வீரர்கள் உள்ளே நுழைய இயலவில்லை. அபிமன்யு உள்ளே நுழைந்ததும் பத்மவியூகம் மூடிக்கொண்டது. ஏனைய போர்வீரர்கள் இந்த வியூகத்திற்க்குள் நுழைய முடியாதவாறு ஜெயத்ரதன் தன் மாய சக்தி கொண்டு வியூகத்தின் நுழைவை மறைத்தான். அன்று முழுவதும் வீரியம் நிறைந்த போராட்டமே கழிந்தது ஆயினும் ஜயத்ரதனை வெல்ல பாண்டவ போர்வீரர்களுக்கு இயலவில்லை.

பல காலங்களுக்கு முன்னர் திரௌபதியை தூக்கிச் செல்ல முயன்று தோல்வியுற்று பாண்டவர்களால் அவமானப்பட்ட ஜயத்ரதன் பாண்டவர்களை பழிதீர்க்க சிவனை நோக்கித் தவம் செய்து பாண்டவர்களை கொல்ல வரம் கேட்டான். பாண்டவர்களுக்கு துணையாக கிருஷ்ணர் இருப்பதால் அவ்வரத்தை தர இயலாது என்று சிவன் மறுக்க ஒரு நாளாவது பாண்டவர்களை சமாளிக்கும் வரத்தை பெற்றிருந்தான். அந்த வரத்தை பயன்படுத்தி பீமன், நகுலன், சகாதேவன், யுதிஷ்டிரர் அபிமன்யுவிற்கு உதவி செய்யாதவாறு தடுத்தான்.

எதற்கும் அஞ்சாத அபிமன்யு வியூகத்தின் நுழைந்ததும் தன் முதல் அம்புவிலேயே தலையாய் நின்ற துரோணரின் வில்லை முறித்தான். அக்கினி ஆற்றை போல் உள்ளே நுழைந்தான் பயமின்றி துணிச்சலாக தாக்கினான். அபிமன்யு எட்டு திசையிலும் அம்புகளை அனுப்பினான். கர்ணனின் குதிரைகளை காயப்படுத்தினான். துரியோதனனின் மகுடத்தை மண்ணில் தள்ளினான். துச்சாதனனின் தேரை முறித்தான். அஸ்வதாமனை கதை கொண்டு விரட்டினான். துணைக்கு யாரும் இல்லாத நிலையில் மாபெரும் போர் வீரர்களுடன் பதினாறே வயதான அபிமன்யு தனித்து நின்று போரிட்டான். அவன் வீரம் கண்டு துரோணர் கிருபரிடம் இவன் வீரத்தில் அர்ஜூனனை விட சிறந்து காணப்படுகிறான் என்று வியந்து பாராட்டினார். இதைக் கண்ட துரியோதனன் எதிரியை புகழ்ச்சி செய்வது நம்பிக்கை துரோகம். இதனால் நம் படையின் உற்சாகம் குறையும் என்று எச்சரித்தான்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.