மொக்கணீஸ்வரர் ஆலயம்

வியாபாரி ஒருவர் தினமும் சிவதரிசனம் செய்த பின்பே சாப்பிடுவார். ஒருமுறை தன் நண்பருடன் வியாபார விஷயமாக வெளியூர் சென்றார். பயணக் களைப்பால் ஒரு காட்டில் தங்கி கண்ணயர்ந்தனர். வியாபாரிக்கு முன்பாகவே எழுந்த நண்பர் ஓடையில் குளித்து விட்டு கட்டுசாதத்தை சாப்பிட்டார். தன் நண்பர் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டார். இந்த காட்டுக்குள் சிவன் கோவிலுக்கு எங்கே போவது என்று யோசித்த நண்பர் ஒரு சாக்கில் மண்ணை நிரப்பி சிவலிங்கம் போல் வடிவமைத்து காட்டுப்பூக்களால் அலங்கரித்து ஓரிடத்தில் மண்ணைத் தோண்டி நட்டு வைத்தார். பார்ப்பதற்கு அசல் சிவலிங்கம் போலவே இருந்தது. வியாபாரி எழுந்ததும் மாமா நீங்கள் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிட மாட்டீர்கள். உங்கள் பக்கத்திலேயே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வணங்கியபின் சாப்பிடுங்கள் என்றார். எங்கும் சிவமயம் என்று மகிழ்ந்த வியாபாரியும் தன் நண்பர் காட்டிய சிவலிங்கத்தை தரிசித்து பின் சாப்பிட்டார்.

அப்போது நண்பா சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டீர்கள் என்பதற்காக ஒரு சாக்குப்பையில் மண் நிரப்பி நிஜலிங்கமென உங்களை நம்ப வைத்து விட்டேன். உங்கள் உடல்நலம் கருதி செய்த இந்த தவறை மன்னிக்க வேண்டும் என்றார். என்ன சொல்கிறீர்கள் நண்பரே நான் பார்த்தது நிஜமான லிங்கத்தை தான். என் சிவனையே லிங்க வடிவில் தரிசித்தேன் என்றார் உறுதியாக. சாக்குப்பையில் மண்ணை போட்டு நட்டு வைத்தது நான் தான் என்ற நண்பர் அங்கே சென்று சாக்குப்பையை எடுக்க முயன்றார். ஆனால் அசையக்கூட இல்லை. அங்கே நிஜமான லிங்கம் எழுந்தருளி இருந்ததைக் கண்ட நண்பர் மூச்சடைத்துப் போனார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவரும் சிவபக்தரானார். இந்த லிங்கத்தின் பெருமையை மாணிக்கவாசகர் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி என்று தனது பாடலில் போற்றுகிறார்.

மூலவர் மொக்கணீஸ்வரர். அம்பாள் மீனாட்சி. தலமரம் வில்வம். மிகச்சிறிய கோயில். அம்பாள் மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். முன்மண்டபத்தில் மாணிக்கவாசர் இருக்கிறார். கொள்ளு வைக்கும் சாக்குபைக்கு மொக்கணி என்ற பெயர் உண்டு. எனவே சிவன் மொக்கணீஸ்வரர் என்று பெயர் பெற்றார். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபத்தில் மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில் கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார். இத்தல விநாயகர் மூத்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.