ரமணமகரிஷி

ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள். முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்கள். அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர் இதையெல்லாம் பார்த்துகொண்டு இருப்பார். இந்த வேதவிற்பன்னர்களைப் போல பேச முடியவில்லையே வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என வருந்துவார். அவரது ஏக்கத்தைப் புரிந்து கொண்டார் ரமணர். ஒருநாள் தனக்கு அவர் பணிவிடை செய்து கொண்டிருந்த போது இன்று சவரம் செய்து கொண்டாயா? எனக் கேட்டார். அவர் ஏதும் புரியாமல் ஆமாம் சுவாமி என்றார். கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய் என்று திரும்பவும் கேட்டார் ரமணர். பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல் ஆமாம் என்று பணிவுடன் தலையாட்டினார். கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். நீ சவரம் செய்யும் வரை அது உனக்கு தேவைப்படுகிறது. உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது. அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா என்றார் ரமணர். முடியாது சுவாமி என்றார் பக்தர். அதேபோல் தான் வேதங்களும் உபநிஷதங்களும் சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல் காயப்படாமல் முக்தியடைய அவை உதவும் அவ்வளவு தான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது. தீவிர பக்தியும் இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும். உன்னை இறைவனடியில் சேர்க்கும். அதை மட்டும் நீ செய்தால் போதும் என்றார்.

உண்மையான அன்போடு இறைவனை வழிபடுதலும் இறைவனின் அங்கமான ஒவ்வரு உயிருக்கும் தொண்டு செய்வதே உண்மையான பக்தி உண்மையான இறைவழிபாடு. பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் மணிகளும் வேண்டாம் மந்திரமும் வேண்டாம். அன்பு இருந்தால் மட்டும் போதும்.

ரமணர் மேற்கோள் 65 | Ramana maharshi, Words of wisdom ...

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.