வால்மீகி முனிவர்

மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு வருண் பிரசேதாஸ் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். வருண் பிரசேதாவிர்க்கு ரத்னாகர் பத்தாவது குழந்தையாக பிறந்தார். ரத்னாகர் பிறந்தவுடன் அவருடைய தந்தை மரணமடைந்தார். பெற்றோர்களை இழந்த ரத்னாகர் காட்டிற்கு சென்றார். காட்டிலுள்ளவர்கள் ரத்னாகரை வளர்த்தார்கள். ரத்னாகர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருட ஆரம்பித்தார்.

ஒரு தடவை கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் நாரதர் மாட்டிக்கொண்டார். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டு நாராயண நாராயண என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் இவனைப் பார்த்து யாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அவன் நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும் என்றான். அப்பா நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குத் பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொண்டு போகலாம். நீ யாருக்காக இந்த கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய் என்று கேட்டார். வேறு யாருக்காக என் மனைவி மக்கள் இவர்களுக்காகத்தான். அவர்கள் தானே என் எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள். எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள். அப்படியா உன் பாவங்களில் அவர்கள் பங்கேற்பார்களா? சொல் என கேட்டார். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லை தான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை. உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார். அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள். அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா? இல்லையே அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்க முடியுமா? ஆகா முனிவரே தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது. இல்லையப்பா நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.

திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். என்னப்பா நடந்தது. சுவாமி நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள். அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல் வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. ஆமாம் சுவாமி அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே சுவாமி என்ன நாமம் அது? ராம நாமம் என் வாயில் நுழையவில்லையே சுவாமி. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன? இதுவா சுவாமி. இது மரா மரம். நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும். ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள். நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான்.

நாரதரும் தன் வழியே சென்றார். அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது ராம ராம ராம என்று ஒலித்தது. நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான். அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால் வால்மீகி என்று அழைக்கப் பட்டார். வால்மீகி முனிவரின் தன் ஆசிரமத்தை தமசா நதிக்கரையில் அமைத்தார். ஒருநாள் நாரதர் அங்கு வந்தார். அவருக்கு உபசாரங்கள் செய்து வரவேற்ற பிறகு வால்மீகி முனிவர் அவரை நோக்கி நாரதரே இந்த யுகத்தில் முப்பத்திரண்டு கல்யாண குணங்களும் பொருந்திய நேர்மையான் சத்தியம் தவறாத வீர தீர பராக்கிரமசாலியான புருஷன் யாராவது இருக்கிறானா? என்று கேட்டார். அதற்கு நாரதர் ராமபிரானுடைய வரலாற்றை முழுவதுமாக வால்மீகிக்கு எடுத்துரைத்தார். நாரதர் இறுதியில் விடைபெற்று சென்றபின் வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமசா நதிக்கரைக்குச் சென்றார்.

நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்திருந்த ஒரு ஜோடி நாரைகளைப் பார்த்தார். அவற்றின் அந்தரங்க அன்புப் பிணைப்பினைக் கண்டு ரசித்தவாறே அவர் நீராடுகையில் எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு ஆண் நாரையின் மீது பாய்ந்து அதன் உயிரைக் குடித்தது. அதைக் கண்ட பெண் நாரை துக்கம் தாளாமல் ஓலமிட்டது. இதைக் கண்டு மனம் பதறிய வால்மீகி அம்பை எய்த வேடனை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி இதயமற்ற அரக்கனே என்ன காரியம் செய்து விட்டாய் நீ? வாழ்நாள் முழுதும் நீ அமைதியின்றி தவிப்பாய் என்று உணர்ச்சி வசப்பட அவருடைய வாயிலிருந்து வந்த சொற்கள் அவரையறியாமலே ஒரு கவிதை வடிவில் வெளிவந்தன. ஆசிரமத்திற்குத் திரும்பி வந்த பிறகும் அவருடைய படபடப்பு அடங்கவில்லை. சற்று நேரத்தில் பிரம்மா வால்மீகியைக் காணவந்தார். பிரம்மாவை விழுந்து வணங்கி வால்மீகி நின்ற போது பிரம்மா வால்மீகி என்னுடைய அருளினால் உனக்கு கவிதை பாடும் திறமை உண்டாகி விட்டது. ராமபிரானது வரலாற்றை இதற்கு முன் நீ கேட்டு இருக்கிறாய். அதை நீ காவியமாக இயற்று. இந்த உலகம் இருக்கும் வரை அவை காவியமாக நிலைத்திருக்கும் என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். பிரம்மாவின் அருளினால் வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். த்ரேதாயுக அவதாரமான ஸ்ரீராமபிரானின் வரலாற்றைச் எழுதினார். வால்மீகி 24000 ஸ்லோகங்களைக் கொண்ட ராமாயணத்தைப் படைத்தார்.

யோகவாசிஷ்டம்
அத்புத ராமாயணம்
கங்காஷ்டகம்
ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.

வால்மீகி இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமாயணம் அதன் பாத்திரங்கள் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள் அரசுகள் போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது. இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளது. நான்கு பாதங்கள் கொண்ட செய்யுளில் வால்மீகியின் காவியத்தில் ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது. இடைச் செருகல் செய்ய முடியாது என்பது மகாகவி பாரதியின் வாக்கு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.