மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -17

துரோணர் வருவதை அறிந்த கிருஷ்ணர் துரோணர் கேட்கும் கேள்விக்கு அஸ்வத்தாமன் என்னும் யானை பீமனால் கொல்லப்பட்டது என்று கூறுமாறு யுதிஸ்டிரனை கிருஷ்ணன் ஆயத்தப்படுத்தினார். பீமனிடம் யானை என்ற வார்த்தையே யுதிஷ்டிரன் கூறும் போது கர்ஜிக்க வேண்டும் என்று பீமனை ஆயத்தப்படுத்தினார். அஸ்வத்தாமன் இறந்தது உண்மையா என்று யுதிஷ்டிரனிடம் கேட்டார் துரோணர். யுதிஷ்டிரர் கிருஷ்ணரின் அறிவுரை படி அஸ்வத்தாமன் என்னும் யானை பீமனால் கொல்லப்பட்டது என்றார். பீமன் அந்த நேரத்தில் கிருஷ்ணர் அறிவுறைப்படி கர்ஜித்தான்

புத்திர பாசத்தில் மனக்கலக்கத்தில் யுதிஷ்டிரன் கூறியதை சரியாக கேட்காத துரோணர் மனம் உடைந்து சரிந்தார். என் மகன் கொல்லப்பட்டான் இனி நிலவுலக வாழ்வில் தனக்கு நாட்டம் எதுவுமில்லை என்று கூறிக்கொண்டு அம்பையும் வில்லையும் தூர எறிந்தார். தன்னுடைய தேரின் மீது தியானத்தில் அமர்ந்தார். அப்பொழுது திருட்டத்துயும்ணன் தன் வாளால் துரோணரின் தலையை கொய்து தனது பிறப்பின் காரணத்தை முடித்தான். துரோணரின் தலை தரையில் உருண்டு போனது. அவருடைய நிஜ சொரூபம் விண்ணுலகை நோக்கி மேல் சென்றது

துரோணாச்சாரியாரின் முடிவு கௌரவர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பாக இருந்தது. கௌரவ படைகள் உற்சாகத்தை இழந்து யுத்தத்தில் முன்னேறுவதற்கு பதிலாக பின்வாங்கியது. துரியோதனன் கவலை மிகவும் அடைந்தான். பாண்டவர்களை கொல்வது சாத்தியப்படாது என்று அவன் எண்ணினான். துரோணரின் முடிவு அஸ்வத்தாமன் காதிற்கு எட்டியது. கோபமடைந்த அஸ்வத்தாமன் துரோணாச்சாரியாரின் மனதில் குழப்பத்தை உண்டுபண்ணிய யுதிஷ்டிரனை நிந்தித்தான். தந்தையை கொன்ற திருஷ்டத்யும்னனை அழிக்க தீர்மானம் பண்ணினான். நாராயண அஸ்திரத்தை கையாண்டு பாண்டவர்களையும் அவர்களுக்கு துணை புரியும் கிருஷ்ணரையும் அழிப்பதாக சத்தியம் பண்ணினான்.

நிலவுலகிலோ சொர்க்கத்திலோ நாராயண அஸ்திரத்துக்கு நிகரான அஸ்திரம் எதுவும் இல்லை. துரியோதனனிடம் அஸ்வத்தாமன் இன்று நீ ஊழிக்காலத்தை காண்பாய். மரணத்திலிருந்து பாண்டவர்கள் தப்பித்துக் கொள்ளமாட்டார்கள் இன்னும் சில மணி நேரத்தில் நீ ஒப்புயர்வற்ற உலக சக்கரவர்த்தியாக இருப்பாய் என்று கூறினான். அஸ்வத்தாமன் அவ்வாறு சொன்னதும் கௌரவ படையில் இருந்த போர் வீரர்களுக்கும் காலாட்படை வீரர்களும் புத்துயிர் ஊட்டியது. அதன் அறிகுறியாக யுத்தகளத்தில் அவர்கள் சங்குகளையும் கொம்புகளையும் துத்தாரிகளையும் ஊதிக்கொண்டே முன்னேறி சென்றனர். கௌரவபடைகளிடம் திடீரென்று மாறி அமைந்த சூழ்நிலையை பார்த்த பாண்டவர்களுக்கு வியப்பு உண்டாயிற்று. துரோணரின் மைந்தன் அஸ்வத்தாமன் வீரியம் மிக்கவன். துரோணருக்கேற்ற மைந்தன் ஆகையால் பாண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.