ஒரு நாள் பாண்டவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது ஏழை ஒருவன் வந்து யுதிஷ்டிரனிம் ஐயா நான் வறுமையில் வாடுகிறேன் ஏதாவது உதவி செய்யுங்கள் என்றான். உடனே யுதிஷ்டிரர் தனது இடது கையால் பக்கத்திலிருந்த வெள்ளிக் கிண்ணத்தை எடுத்து தானமாகக் கொடுத்தார். ஏழை வாங்கிச் சென்றதும் பீமன் அண்ணா இடது கையால் செய்வது பாவமாயிற்றே. தர்ம பலனும் இல்லையே. எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று கேட்டான்.
தம்பி ஏழையின் துயர் கேட்டதும் மனமிறங்கி அவனுக்கு வெள்ளிக் கிண்ணத்தை கொடுக்கும் எண்ணம் ஏற்பட்டது. நான் சாப்பிட்டுக் கைகழுவி வந்த பின்பு தரலாம் என்றால் அதற்குள் இந்தப் பொல்லாத மனம் மாற வாய்ப்பு இருக்கின்றது. ஒரு வேளை வேறு ஏதாவது பொருளைக் கொடுத்தால் போதாதா வெள்ளிக் கிண்ணம் கொடுக்க வேண்டுமா என்று தோன்றலாம். எனவே நல்லதைச் செய்ய நினைக்கும்போது அந்த நொடியிலேயே செய்வது நல்லது. அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமையைவிட பிறருக்கு ஏற்படும் நன்மையே முக்கியம் என்றார் யுதிஷ்டிரர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 ல் பிறந்தாள் ஆனந்தாம்பா. அந்த ஊரில் புகழ்பெற்ற பெரியநாயகி ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில் தேவியின் மூல விக்கிரகத்தை தரிசித்தவாறு மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பாள் சிறுமி ஆனந்தாம்பா. அவளது வீடு கோயிலின் அருகில் ஞ இருந்தது அவள் தந்தை சேஷ குருக்கள் கோயில் அர்ச்சகர்களில் ஒருவர். குருக்களின் புதல்வி என்பதால் ஆலயத்திற்கு அவளால் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. தியானத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கவும் முடிந்தது. அவள் வயதுடைய சிறுமிகள் பல்லாங்குழியிலும் பாண்டியிலும் பொழுது போக்கிய காலங்களில் அவள் மட்டும் தன் நேரம் முழுவதையும் தியானத்திற்கே அர்ப்பணித்தாள்.
அக்கால வழக்கப்படி அவளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. சட்டநாத மடத்தின் உரிமையாளன் கணவன் சாம்பசிவம் 24 வயதுப் பையன். சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் சட்டநாத மடம் என்றொரு மடம் இருந்தது. கோமளீஸ்வரன் பேட்டை இப்போது புதுப்பேட்டை எனப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த அவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டாள் ஆனந்தாம்பா. ஆனந்தாம்பாவை அவன் ஒரு வேலைக்காரி போல் நடத்தினான். சட்டநாத மடத்தின் அருகில் கோமளீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் இருந்தது. தற்போதும் கோயில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அங்கே போய் சிவன் சன்னதியில் அமர்ந்து கொள்வாள் ஆனந்தாம்பா. பெண்பித்துப் பிடித்து பல்வேறிடங்களில் அலைந்த சட்டநாதன் பெருவியாதி பிடிக்கப்பட்டு முப்பத்தைந்தே வயதில் காலமானான். ஆனந்தாம்பாவுக்கு அப்போது வயது இருபது. அக்கால வழக்கப்படி அவளுக்கு முடி மழித்து முக்காடு போட்டார்கள். கணவன் காலமானது அவளுக்கு ஆன்மிக வாழ்வுக்கு ஒரு வாய்ப்பே ஏற்படுத்தியது.
தேவிகாபுரத்தில் சிறிதுகாலம் இருந்த அவள் அதன்பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். வீட்டின் அருகிலிருந்த குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற உயர்நிலைத் துறவினி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவளை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியை தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீ சக்ர உபாசனையைக் கற்றுத் தந்தார். அந்த உபாசனையை மேற்கொண்டதால் தான் பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீ சக்ர அம்மா என அழைக்கப்பட்டார். அதுவே பொது மக்களின் வாய்மொழியில் மருவி சக்கரையம்மா ஆயிற்று. நான் மீண்டும் சென்னைக்கு, என் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமே என குருவான உங்களை இனி அடிக்கடிச் சந்திப்பது எவ்விதம் என்று சக்கரையம்மா கேட்டபோது குணாம்பா அதுபற்றிக் கவலைப்படாதே என்று லகிமா என்ற ஓர் ஆன்மிக சித்தியே அவருக்கு கற்று கொடுத்தார். லகிமா என்பது உடலை மிக லேசாக மாற்றிக் கொள்வது. அந்த சித்தி அடைந்தவர்களால் விண்ணில் பறக்க முடியும். இனி எப்போது வேண்டுமானாலும் நீ பறந்துவந்து என்னைப் பார்க்கலாம் என அருள்புரிந்தார் குணாம்பா.
சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் இருந்த தன் புகுந்த வீட்டுக்கு வந்தாள் ஆனந்தாம்பா. ஒருநாள் ஸ்ரீசக்ர உபாசனையில் அவள் பேரொளியால் சூழப்பட்டாள். தானே பரம் பொருளாய் ஒளிவீசுவதுபோல் தோன்றியது அவளுக்கு. அளவற்ற ஆனந்தத்தில் கடகடவென்று சிரிக்கலானாள். அவளது ஆன்மிக வளர்ச்சியை அறியாத புகுந்த வீட்டார் கணவன் இறந்ததால் அவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டதென்று கருதினர். அக்காலத்தில் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்ற புகழ்பெற்ற ஒரு மருத்துவர் இருந்தார். ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்தவர். உன்னதமான ஆன்மிகவாதி அவர். ஒரு சமயம் ஆனந்தாம்பாவின் சகோதரருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவம் பார்க்க டாக்டர் நஞ்சுண்டராவை அழைத்தார்கள். அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது மொட்டை மாடியிலிருந்து வித்தியாசமான அந்தச் சிரிப்பின் முழக்கம் கடகடவெனக் கேட்டது. ஆன்மிகவாதியான நஞ்சுண்டராவ் அந்தச் சிரிப்பால் கவரப்பட்டார். யார் உரத்துச் சிரிக்கிறார்கள் என்று விசாரித்தார். கணவனை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட ஆனந்தாம்பா என்ற பைத்தியத்தின் சிரிப்பு அது என்று அலட்சியமாகக் கூறினார்கள் உறவினர்கள். அந்த சிரிப்பு அவரை அழைத்ததுபோல் அவருக்கு தோன்றியது. மாடியேறிச் சென்றார். முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்ட அமர்ந்திருந்த ஆனந்தாம்பா மகனே வா என அழைத்தாள். தூக்கிவாரிப்போட்டது நஞ்சுண்டராவுக்கு மனிதர்களுக்கு முதுகில் கண் உண்டா என்று எண்ணி மேற்கொண்டு எதுவும் பேசாத ஆனந்தாம்பாளிடம் தானும் பேசாமல் விழுந்து வணங்கிவிட்டு வந்துவிட்டார்.
பின்னொருநாள் கோமளீஸ்வரன் கோயிலுக்குச் சென்றார். ஆலய வாயிலில் அமரந்து கடகடவென்று சிரித்துக் கொண்டிருந்த ஆனந்தாம்பாவை மறுபடி பார்த்தார். ஒளிவீசும் கண்கள். ஆனந்தாம்பாவின் மேனியிலிருந்து ஓர் அமைதி கலந்த பிரகாசம் பொங்கி வழிவதுபோல் தோன்றியது. நிச்சயம் இவர் பித்துப் பிடித்த பெண்மணி அல்ல என்பதை அவரது அவரது மருத்துவ மனம் உணர்ந்தது. ஏன் சிரிக்கிறீர்கள் தாயே என்று பக்தி கலந்த பணிவோடு விசாரித்தார். ஆனந்தாம்பா சிரிப்பை நிறுத்திவிட்டு நஞ்சுண்டராவைப் பார்த்தார். மகனே மனித உடலின் உள்ளே உறைந்திருக்கும் ஆன்மா எப்போதும் ஆனந்தம் நிறைந்தது. இன்ப துன்பங்கள் உடலுக்குத் தானே அன்றி ஆன்மாவுக்கில்லை. நீ உடல் அல்ல. நீ உடலில் உள்ளாய். அவ்வளவுதான். உனது தற்காலிகக் கூடாரமான இந்த உடலைப் பாராமல் கூடாரத்தின் உள்ளே நிரந்தர வஸ்துவாய் வசிக்கும் உன் ஆன்மாவைப் பார் அப்படிப் பார்க்கத் தொடங்கினால் நிலையான பேரின்பத்தை நீ அடைய முடியும். இந்த வார்த்தைகள் நஞ்சுண்டராவின் உள்ளத்தில் மின்னல் போல் பாய்ந்தன. சொன்ன வார்த்தைகளில் உள்ள பேருண்மை சொன்னவர் அந்த வார்த்தைகளின் கருத்தை வாழ்வில் அனுசரித்து வாழ்கிறார் என்பதால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்பட்டிருந்த மந்திர சக்தி. தன் குரு அவரே என உணர்ந்து ஆனந்தாம்பா என்கிற சக்கரையம்மாவைப் பணிந்தார் நஞ்சுண்டராவ். பின்னர் சக்கரையம்மா பற்றி வெளியுலகம் அறிய நஞ்சுண்டராவே காரணமானார். அடிக்கடி சக்கரையம்மாவைச் சந்தித்து உரையாடிப் பயன்பெற்று அவர் சக்கரையம்மாவின் சீடராகவே ஆனார். தம் குருவைப் பல திருத்தலங்களுக்கு நஞ்சுண்ட ராவ் அழைத்துச் சென்றார்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி சுவாமியையும் ரமணரையும் சக்கரையம்மா சந்தித்தார். தன்னை ஆசிர்வதிக்குமாறு சக்கரையம்மா ரமணரிடம் கேட்டபோது ரமணர் மலர்ச்சியோடு அவர் ஏற்கெனவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார். 1901இல் சக்கரையம்மா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினார். நஞ்சுண்டராவ் அழைத்துச் சென்றார். அப்போது நஞ்சுண்டராவைத் தவிர இன்னும் சிலரும் அவரது சிஷ்யர்களாகியிருந்தார்கள். திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னபோது வருத்தத்துடன் தலையாட்டினார் நஞ்சுண்டராவ். தம் குரு தம்மை விட்டு சென்றுவிடுவார் என்பதை அந்த சிஷ்யரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. வருந்தாதே மகனே நான் சமாதியில் என்றென்றும் இருந்து அனைவருக்கும் அருள்புரிந்து வருவேன். என் சமாதி இருக்குமிடம் அமைதியின் கோயிலாகத் திகழும் என்று சொல்லிச் சீடரை ஆறுதல் படுத்தினார் குரு. சொன்னபடியே 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் சக்கரையம்மா உடல் சட்டையை உதறினார். அவரது பொன்னுடல் அவர் குறிப்பிட்ட இடத்திலேயே சமாதி செய்விக்கப்பட்டது. சென்னையில் திருவான்மியூரில் உறவுகளைத் துறந்து துறவியான பெண் சித்தர் சக்கரையம்மா தன் சமாதியில் நிரந்தரமாய் வாழ்ந்து வருகிறார்.சுதந்திரப் போராட்ட காலத்தில் சக்கரையம்மா என்ற பெண்சித்தர் வானில் பறவைபோல பறப்பதைப் பலரும் பார்த்து வியந்திருக்கிறார்கள். தமிழறிஞரான திரு.வி.க. தாம் எழுதிய உள்ளொளி என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
விருத்தாசுரன் என்ற அரக்கன் இந்திரலோகத்தில் நுழைந்து அங்கிருந்தவர்களையெல்லாம் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினான். அவனுடைய தாக்குதலைக் கண்டு பயந்த அனைவரும் இந்திரனிடம் சென்று தங்களைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றனர். இந்திரன் தனது படையுடன் சென்று விருத்தாசுரனை எதிர்த்துப் போரிட்டான். விருத்தாசுரனின் அசுரத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத இந்திரன் அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று அங்கிருந்து வெளியேறினான். மேலும் விருத்தாசுரன் தன்னைக் கண்டுபிடித்து அழித்து விடுவானோ என்று பயந்து தாமரைத் தண்டு ஒன்றினுள் சென்று மறைந்து கொண்டான். பின்னர் அங்கிருந்தபடியே விருத்தாசுரனை எதிர்த்துப் போரிடுவதற்கான பலம் வேண்டி தவம் செய்யத் தொடங்கினான். இந்திரன் இல்லாததால் தேவலோகத்தை நிர்வகிக்க முடியாமல் போனது. எனவே தற்காலிகமாக ஒரு இந்திரனைத் தேர்வு செய்ய தேவர்கள் முடிவு செய்தனர். இந்திரப் பதவியில் அமர்ந்தால் விருத்தாசுரன் நம்மை அழித்து விடுவான் என்கிற பயத்தால் பலரும் அந்தப் பதவியை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில் பூலோகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வந்த நகுசன் என்ற மன்னனை இந்திரப் பதவியில் அமர்த்த தேவர்கள் முடிவு செய்தனர்.
நகுசன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து முடித்த பலனால் தேவர்கள் அவனைத் தேர்வு செய்தனர். நகுசனிடம் சென்று தேவர்கள் தங்கள் கோரிக்கையை கூறினர். நகுசனும் தேவர்கள் விருப்பப்படி இந்திரப் பதவியை ஏற்றுக் கொண்டான். அந்தப் பதவியில் அமர்ந்ததும் அவனுடைய செயல்பாடுகள் அனைத்தும் மாறிப் போயின. இந்திரப் பதவியின் பெயரிலான கர்வமும் பேராசையும் நகுசனை ஆட்டிப்படைத்தது. இந்திரலோகத்தில் இருக்கும் அனைத்துச் செல்வங்களும் பொருட்களும் தனக்குரியது என்று உரிமை கொண்டாடினான். அது மட்டுமின்றி அங்கிருக்கும் நடன மங்கைகளும் இந்திராணியும் கூட தனக்கே சொந்தமானவர்கள் என்றான். இதனால் கவலையடைந்த இந்திராணி தேவகுருவான பிரகஸ்பதியிடம் சென்று நகுசனிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள்.
தேவகுரு நகுசனைத் தனியாக அழைத்து அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினார். அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் அவனில்லை. அடுத்த நாள் தன்னைத் தேடி வந்த இந்திராணியிடம் இனி நகுசன் உன்னைத் தேடி வரும் பொழுது நீ அவனை ஏற்றுக் கொள்ள எந்த மறுப்பும் தெரிவிக்காதே. இந்திரலோகத்தில் இருக்கும் குறு முனிவர்களால் செய்யப்பட்ட பல்லக்கில் அவர்கள் உன்னைச் சுமந்து வந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்று மட்டும் சொல்லி அனுப்பி விடு. அதன் பிறகு உனக்கு அவனால் எந்தத் தொல்லையும் இருக்காது என்று தேவகுரு சொல்லி அனுப்பினார். நகுசன் இந்திராணியைத் தேடிச் சென்ற போது அவளும் தேவகுரு சொன்னதைச் சொல்லி அனுப்பினாள். நகுசன் குறு முனிவர்களைத் தேடிச் சென்று தன்னைப் பல்லக்கில் அமர வைத்து இந்திராணி இருக்கும் இடத்துக்குச் சுமந்து செல்லும்படி கட்டளையிட்டான். அவன் இந்திரப் பதவியில் இருப்பதால் முனிவர்களான அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் அவனை அந்தப் பல்லக்கில் அமர வைத்துத் தூக்கிச் சென்றனர். அப்படித் தூக்கிச் செல்லும் வழியில் நகுசன் அவர்களிடம் வேகமாக வேகமாக என்று பொருள் தரும் வகையில் சமஸ்கிருத வார்த்தையான சர்ப்ப சர்ப்ப என்று சொல்லி விரட்டிக் கொண்டே இருந்தான். அந்தப் பல்லக்கைச் சுமந்து சென்ற முனிவர்களில் ஒருவரான அகத்தியருக்கு அது எரிச்சலைத் தந்தது. கோபமடைந்த அகத்தியர் நகுசனைப் பார்த்து எங்களைச் சர்ப்ப சர்ப்ப என்று விரட்டிய நீ இப்போதே மலைப்பாம்பாக மாறி பூலோகத்தில் விழுந்து காட்டில் அலைந்து திரிந்து கஷ்டப்படு என்று சாபமிட்டார்.
தன் தவறை உணர்ந்த நகுசன் பல்லக்கில் இருந்து கீழே இறங்கி தான் தெரியாமல் செய்த தவறை மன்னித்துச் சாபத்திலிருந்து விமோசனம் தந்தருளும்படி வேண்டினான். அகத்தியர் கோபம் குறைந்து நகுசனே நீ பூலோகத்தில் மலைப்பாம்பாக வாழ்ந்து வரும் காலத்தில் வனவாழ்க்கை மேற்கொள்ளும் பாண்டவர்களில் ஒருவரான பீமன் உன்னிடம் மாட்டிக் கொள்வான். அவனை உன்னிடமிருந்து மீட்பதற்காக அவனுடைய சகோதரன் ஒருவன் வருவான். அவன் நீ கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்வான். அப்போது உனக்கான சாபம் நீங்கும் என்றார். முனிவரின் சாபத்தால் பூலோகம் வந்த நகுசன் அஜகரம் என்கிற பெயரில் மலைப்பாம்பாக மாறினான். அவனுடைய பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போயின. மலைப்பாம்பு அங்கிருந்த மலைக்குகை ஒன்றைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டது. அந்தக் காட்டிற்குள் இருந்த பறவைகளும் விலங்குகளும் அந்த மலைப்பாம்பிற்கு இரையாகிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் கடந்து பின் பாண்டவர்கள் தங்களின் வனவாழ்க்கைக்காக அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஒரு நாள் பாண்டவர்களில் ஒருவரான பீமன் மட்டும் காட்டுக்குள் தனியாகச் சென்று பல விலங்குகளை வேட்டையாடினான். மலைப்பாம்பு வசித்த குகையின் அருகில் அவன் சென்றபோது அது அவனைச் சுற்றிவளைத்துக் கொண்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் பீமனால் அதன் பிடியில் இருந்து விடுபடமுடியவில்லை. மலைப்பாம்பு பீமனை விழுங்க முயன்றபோது அதற்கு தன்னுடைய முந்தைய வாழ்வும் சாபமும் நினைவுக்கு வந்தது. இந்த நிலையில் காட்டிற்குள் சென்ற தம்பியைக் காணாததால் அவனைத் தேடி யுதிஷ்டிரர் காட்டுக்குள் வந்தார். அப்போது மலைப்பாம்பிடம் பிடிபட்டிருக்கும் தன் தம்பியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
யுதிஷ்டிரர் அந்த மலைப்பாம்பிடம் பாம்பே உன் பசிக்குத் தேவையான உணவுகளை நான் கொண்டு வந்து தருகிறேன். என் சகோதரனை உன் பிடியிலிருந்து விட்டு விடு என்று கேட்டார். நீ கொண்டு வந்து கொடுக்கும் உணவு எதுவும் எனக்குத் தேவையில்லை. நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீ சரியான பதிலைச் சொன்னால் நான் உன் சகோதரனை விட்டு விடுகிறேன். சரியான பதில்களைச் சொல்லாவிட்டால் உன் சகோதரனை மட்டுமில்லாமல் உன்னையும் சேர்த்து எனக்கு இரையாக்கிக் கொள்வேன் என்றது மலைப்பாம்பு. யுதிஷ்டிரர் அதற்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் மலைப்பாம்பு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதிலளித்தார். அவரது பதில்களால் மகிழ்ந்த மலைப்பாம்பு பீமனை விடுவித்தது. மலைப்பாம்பு சாப விமோசனம் பெற்று நகுசனாக சுய உருவம் பெற்றான். அவன் யுதிஷ்டிரரை வணங்கி இந்திரலோகம் சென்றடைந்தான்.
உத்தரகண்ட் டெஹ்ராடூன் மாவட்டத்தில் உள்ள முசோரியிலிருந்து 75 கி.மீ தூரத்திலும் சக்ரதாவிலிருந்து 68 கி.மீ தூரத்தில் லகா மண்டல் சிவாலயம் அமைத்துள்ளது. இந்த கோயில் வளாகம் தேசிய முக்கியத்துவச் சின்னமாக உள்ளது. இந்த கோயில் அழகிய மலைகள் மற்றும் யமுனா நதியால் சூழப்பட்டுள்ளது. லகா மண்டல் அதன் பெயரை இரண்டு சொற்களிலிருந்து பெறுகிறது. லகா என்பது பல என்னும் பொருளையும் மண்டல் என்பது கோயில்களையம் குறிக்கும். 6 ம் நூற்றாண்டின் கல்வெட்டின் படி லகா மண்டலில் உள்ள சிவன் கோயில் சிங்புராவின் ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசி ஈஸ்வராவால் கட்டப்பட்டது. ஜலந்திர மன்னரின் மகனும் தனது மறைந்த கணவர் சந்திரகுப்தரின் ஆன்மீக நலனுக்காக இது இளவரசி ஈஸ்வராவால் கட்டப்பட்டது. நாகரா பாணியில் தற்போதைய கட்டமைப்பு 12 – 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புராணத்தின் படி லகா மண்டல் பாண்டவர்களை துரியோதன் மெழுகினால் ஆன அரக்கு மாளிகையில் தங்க வைத்து எரிக்க முயன்ற இடம். அதிர்ஷ்டவசமாக பாண்டவர்கள் ஒரு குகை வழியாக ஓடி அங்கிருந்து தப்பினர். லகா மண்டல் கோவிலில் இருந்து குகையின் முனையை கோவிலிருந்து 2 கி.மீ தூரத்தில் காணலாம். இந்த இடம் துந்தி ஓடாரி என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் சிவலிங்கம் கிராபைட் கல்லால் ஆனவர். தண்ணீர் ஊற்றப்படும்போது அது பிரகாசித்து அதன் சுற்றுப்புறங்களிலும் பிரதிபலிக்கிறது. கோவில் வளாகத்தின் உள்ளே ஒரு பாறையில் பார்வதியின் கால் அடையாளங்களைக் காணலாம். சிவன், பார்வதி, கார்த்திகேயா, விநாயகர், விஷ்ணு மற்றும் பஜ்ரங்பாலி சிலைகள் உள்ளன.
இந்த பகுதி பழங்கால கோவில்கள் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளால் நிறைந்துள்ளது. பல சிலைகள் மற்றும் லிங்கங்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. தற்போது வரை 150 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 4 -5 ம் நூற்றாண்டு கல்வெட்டுகளாகும்.
கிராபைட் பற்றிய சில செய்திகள் நாம் எழுதப் பயன்படுத்தும் பென்சில் கிராபைட்டைக் கொண்டு தயாரிக்கப் பட்டதாகும். கிராபோ என்ற சொல்லுக்கு நான் எழுதுகிறேன் என்பது பொருளாகும். கிராபைட் இயற்கையாகப் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது கிரீன்லாந்து, பொஹீமியா, சைபீரியா, இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் கிடைக்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் சற்றுக் குறைவாகவே கிடைக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கையில் கிராபைட் இயற்கையாகக் கிடைக்கிறது. உலகிலேயே சிறந்த கிராபைட் இலங்கையில் கிடைக்கிறது. கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது. ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கிராபைட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டர்வால்ஸ் விசை ஆகும். இந்த அடுக்குகள் ஒன்றின் மீது ஒன்றும் நழுவும் தன்மை உடையது. இதனால் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது.
கர்ணன் கிருஷ்ணரை பார்த்து கேட்டான் என் தாயார் நான் பிறந்த உடனே என்னை ஆற்றில் விட்டுவிட்டார். நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை. பரசுராமர் எனக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தார் ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க எனக்கு சாபம் கொடுத்தார். ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன். தாய் குந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது. ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்
அதற்கு கிருஷ்ணன் கர்ணா நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதிலிருந்து ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள், வாள் ஆகியவற்றின் இரைச்சலுடன் நீ வளர்ந்திருப்பாய். ஆனால் நானோ மாடு கொட்டகையில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன். நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை. ராணுவ பயிற்சி இல்லை. ஆனால் அனைவரும் நான் தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள். நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிற போது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன். நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றி திருமணம் செய்துகொண்டேன். ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு நான் ஓடிப்போன ஒரு கோழை. துரியோதனன் போரில் வெற்றி பெற்றால் உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பாண்டவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும். கிருஷ்ணன் தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்
கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும். எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம். எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம். எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது. நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை. எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே என்று கர்ணனுக்கு விளக்கினார்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம். இது ஆந்திராவில் துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. அது பூர்வ காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த இடம். அதனால் அந்த இடத்தையே தனது சமாதிக்குத் தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ ராகவேந்திரர். அப்பகுதியை ஆண்ட சுல்தான் மசூத் கானும் அதற்கு இணங்கி மாஞ்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுத்தார். ஸ்ரீ ராகவேந்திரர் 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார். கி.பி. 1812ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தின் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தது. அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய இவ்விடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர்தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து நிலைமையைச் சரி செய்யச் சொல்லி உத்தரவிட்டது.
சர்தாமஸ் மன்றோ தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார். ஆலயத்தின் நுழைவாயிலில் தனது ஷூவையும் தொப்பியையும் கழற்றி விட்டு பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார். ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற சர்தாமஸ் மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார். அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அங்கே மன்றோவைத் தவிர எதிரே யாருமே இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போல சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். ஆலயம் பற்றி அதை தானமாக அளித்தது பற்றி ஆங்கிலேய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பற்றி எல்லாம் அவர் யாரிடமோ விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார். அவர் யாரிடம் பேசுகிறார் எதற்குப் பேசுகிறார் ஒருவேளை சித்தப்பிரமை ஏதும் ஏற்பட்டு விட்டதா என்றெல்லாம் என்ணிய குழுவினர் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தனர். வெகு நேரம் கழித்து தனது உரையாடலை முடித்துக் கொண்டு தங்கள் ஆங்கிலேயப் பாணியில் அந்த பிருந்தாவனத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார் சர்தாமஸ் மன்றோ. அதுவரை திகைத்துப் போயிருந்த குழுவினர் அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் காரணம் கேட்டனர். அதற்கு சர்தாமஸ் மன்றோ பிருந்தாவனத்தின் அருகே காவி உடை அணிந்து ஒளி வீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கங்களை அளித்தேன். அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து விட்டார். இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை என்றார். மேலும் அந்த மனிதரது ஒளி வீசும் கண்கள் பற்றியும் அவரது கம்பீரக் குரல் பற்றியும் செழுமையான ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் வியந்து கூறியவர் ஏன் நீங்கள் அவரைக் காணவில்லையா என்று கேட்டார். தங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறிய அவர்கள் சர்தாமஸ் மன்றோவுடன் உரையாடியது சாட்சாத் ஸ்ரீ ராகவேந்திரர் தான் என்பதை அவருக்கு உணர்த்தினர்.
கடந்த நூற்றாண்டில் காலமான மகான் தன் முன் நேரில் தோன்றி அதுவும் தன் பாஷையான ஆங்கிலத்திலேயே தன்னுடன் பேசிப் பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு பிரமித்தார் சர்தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும் ஆளுநருக்கும் அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப்போனார். விரைவிலேயே சர்தாமஸ் மன்றோ தாற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் நிலை வர அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் மந்த்ராலயம் ஆலய வளர்சிக்கு உதவியதுடன் பல இந்துத் திருத்தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்கி வழிபட்டார். ஒருமுறை சர்தாமஸ் மன்றோவுக்கு மிகக் கொடிய வயிற்று நோய் ஏற்பட்டது. நம்பிக்கையோடு அவர் திருப்பதி பெருமாளை வேண்டிக் கொண்டார். வயிற்றுவலி குணமானதும் ஒரு கிராமத்தையே கோயிலுக்கு தானமாக அளித்ததுடன் தன் பெயரில் தினந்தோறும் பொங்கல் செய்து இறைவனுக்குப் படைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டார். இன்றும் தினமும் திருப்பதி திருமலையில் சர்தாமஸ் மன்றோ கட்டளை பெயரில் பொங்கல் செய்து விநியோகிக்கப்படுகிறது.
பீஷ்மருக்கு தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தை சந்தனுவால் எவ்வாறு தர இயன்றது.
இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னன் மஹாபிஷன். அவன் அஸ்வமேத யாகங்களையும் நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவன். இவனே பிரம்மனின் சாபத்தால் சந்தனுவாகப் பிறக்கிறான். சந்தனுவை விட்டு கங்கை நீங்கியபின் அவன் முப்பத்தாறு வருடங்கள் பல வேள்விகள் அறப்பணிகள் செய்கிறான். இவற்றால் அவனுடைய தவ வலிமை கூடுவதால் அவனுக்கு வாக்குபலிதம் உண்டாகிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும்.
காந்தாரியின் நூறு குழந்தைகள் எந்த முறையில் உயிர்பெற்றனர்? எந்த முறையில் வியாசர் கையாண்டார்?
இன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கிறோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்பகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது. நாம் பிறக்கும்போது நஞ்சுக்கொடி ரத்தத்தில் இருக்கும் ஸ்டெம் செல்களை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உருவாக்கலாம் என்று நவின விஞ்ஞானம் சொல்கிறது.
வியாசரின் இதுபோன்ற ஒரு முறையை கையாள்கிறார். தாயின் கர்ப்பப்பை போன்று 101 பானைகளை தயார் செய்கிறார். அவற்றில் கருவளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலிகைகளையும் மருந்துகளையும் சேர்க்கிறார். கருவளர்ச்சிக்குத் தேவையான ஆக்சிஜன் புரதங்கள் மற்ற இதர சத்துக்களை அந்த மருந்துகள் உருவாக்குமாறு செய்கிறார். இதனால் மாமிசபிண்டமாகக் கிடந்த ஸ்டெம்செல்கள் தனித்தனிக் குழந்தைகளாக முழுவளர்ச்சியை எட்டின.
இன்று விஞ்ஞானம் இதை செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்திருக்கிறது. தாயின் வயிற்றைப் போல குழந்தை வளர இன்குபேட்டர் உள்ளது. குறைமாதக் குழந்தைகளை அங்கே வைத்து சராசரி குழந்தையாக வளர்க்க முடிகிறது.
குருஷேத்திர களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர். பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். அருகிலேயே மரணதேவனும் பீஷ்மரின் அனுமதிக்கு காத்திருந்ததார். மனம் முழுதும் நிறைந்திருந்த பீஷ்மரை மண்ணை விட்டு அனுப்ப நான் காரணமாகிப் போனேனே என்று கிருஷ்ணரிடம் படபடத்தான் அர்ஜூனன். பீஷ்மர் மண்ணைவிட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா என்றார் கிருஷ்ணன். திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜூனன். மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால் அவரை தடுப்பார் எவருமில்லை. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது. தன்னைப் பற்றிய நினைவு இன்றி தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது. பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜூனா விருப்பு வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே பீஷ்மம். கொண்ட கொள்கைக்காக தன்னைப்பற்றிய சிந்தனையே இன்றி தொடர்ந்து கடமையாற்றுவதே பீஷ்மம். பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா தவறா என்றுகூட யோசிக்கமாட்டார். தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல் தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ அவரே பீஷ்மர். அதற்காக அவர் கொண்ட தவம் தான் பிரம்மச்சர்யம். மண்ணிலிருந்து தன்னை ஒட்டாமல் விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும் என்றார் கிருஷ்ணன்.
பஞ்சபூதங்களில் ஒன்று இம்மண். அதை விட்டு விலகி நின்றால் போதுமா என்று கேட்டான் அர்ஜூனன். நீர் நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி இருக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜூனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும் இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம். உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத விடவே இயலாத ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே மண்தான். கருவில் இருக்கும்வரை மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும் தாய்மடியில் இருக்கும்வரை தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை. எப்போது குழந்தை என்ற ஓர் உயிர் மண்தொட ஆரம்பிக்கிறதோ அப்போது தான் படுத்திருக்கும் இடம் தன் இடம் என்று உள்நுழைகிறது ஆசை. பிறகு மண்ணில் புரள்கிறது குழந்தை. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின் முன்னோக்கி நகர்கிறது. தவழ்கிறது இடம் பிடிக்க அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டும் என்று எழ முயற்சித்து தொட நினைக்கிறது. எழுகிறது நடக்கிறது ஓடுகிறது இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. ஓடுகிறது. தேடுகிறது. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது. முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே உயிர்பிரிந்து போனபின்னே மண்ணால் வந்த மனிதனின் ஆசை மண்ணுக்குள்ளேயே புதைக்கவும் படுகிறது.
இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும் அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது. வாழும் காலத்திலேயே மண்ணாசையை மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர் என கிருஷ்ணர் கூறியதைக் கேட்ட அர்ஜூனன் திகைத்தான். அதனால்தான் மண்படாமல் பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னேன் அர்ஜூனா. பீஷ்மர் வாவென்றழைக்காமல் மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர் இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால் மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை மண் அவருக்குள் புகுத்திவிட்டால் பீஷ்மர் மண்ணாள ஆசை கொண்டுவிட்டால் உன்னால் என்னால் எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன்.
ஒருவேளை அதிலிருக்கும் போதும் மண்தொட அவர் விரும்பினாலும் அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும். மண்தொட ஆசைப்பட்டால் வலிதான் மிஞ்சும் என்பதாலேயே மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல் விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன். இத்தனையும் நான் அறிந்து கொண்டேனே மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா என்று ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜூனன். சிரித்தார் கிருஷ்ணர். நீ நிற்பதே மண் மீதுதான். விண் நோக்கிச் செல்ல உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின் மண்ணில் தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராட வேண்டும் என்றார் கிருஷ்ணர். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. எதை வெல்ல நினைத்தோமோ அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும் இந்த மண் தந்ததுதான். உறவுகளையும் உணர்வுகளையும் கொடுத்த மண்தான் அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது அர்ஜூனனுக்குப் புரிந்தது.
நான் என்பது யார் இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும் புரியாவிட்டாலும் தான் யார் என்பதை மண் புரிய வைத்துவிடும். இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே ஒவ்வொருவரும் அர்ஜூனரே. கிருஷ்ணன் எனும் சாரதி ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. வாழும்போதே அதை உணர வேண்டும்.
ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு சந்தேகம் வந்தது. திரோபதி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். கிருஷ்ணன் முன்னால் பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் பீமனின் சந்தேகத்தை ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள். பீமனுக்குக் கோபம் வந்தது. தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து கிருஷ்ணா உனக்கே இது நியாயமா இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள் எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும் நீயும் சிரிக்கிறாய் திரெளபதியும் சிரிக்கிறாளே என்று கேட்டான்.
கிருஷ்ணர் சொன்னார் பீமா நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று எழுதப்பட்டவை தான் நடக்கிறது. இதில் நீ வருத்தப்படுவதற்கு ஒரு காரணமும் இல்லை. உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். வருடத்திற்கு ஒரு முறை திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் பார்த்திருக்கின்றாயா என்று கேட்டார். ஆம் பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் காலை உதயத்தில் திரும்பி வருவாள் என பீமன் சொன்னான். அப்போது திரெளபதி எப்படி இருப்பாள் என்று கிருஷ்ணர் கேட்டார். பீமனோ புடம் போடப்பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் என்றான்.
பீமா இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார் என்றார் கிருஷ்ணர். அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும் கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்க தடுத்து அங்கே பார் என்றார். பீமன் கண்களுக்கு தீக்குள் திரெளபதி சாட்சாத் அகிலாண்டேஸ்வரி சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைத்தார் கிருஷ்ணர்.
பீமா நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி. அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள். இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப்படும் காட்சி இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய் என்றார்.
மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்டு விட்டார் பீஷ்மர். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது. உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர் அர்ஜூனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார். மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக அர்ஜூனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கையை வரவழைத்துக் கொடுத்தான். இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது. உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை. பாண்டவர்கள் கௌரவர்கள் கிருஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர். பீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர்.
பீஷ்மர் வேதவியாசரிடம் என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் என்ன என்று கேட்டார். அதற்கு வியாசர் பீஷ்மரே ஒருவர் தன் எண்ணம் சொல் செயலால் செய்வது மட்டும் தீமை என்றில்லை. தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும். பீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது. தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். திரௌபதியை துச்சாதனன் துகில் உரித்த போது சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர். அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர் இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று வியாசரிடம் கேட்டார். பீஷ்மா ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது. தவறு செய்துவிட்டோம் என்று நீ உணர்ந்ததால் உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது. ஆனாலும் திரௌபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது கேட்காதது போல் இருந்த உன் செவிகள் பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள் தவறை தட்டிக் கேட்காத வாய் அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள் வாளை பயன்படுத்தாத உன் கைகள் இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள் தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி என்றார் வியாசர்.
இதனை கேட்ட பீஷ்மர் வியாசரிடம் தவறு செய்த இந்த உடலை பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. சூரிய சக்தியை பிழிந்து தவறு செய்த இந்த என் உடலுக்கு தாருங்கள் என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார். வியாசர் எருக்க இலை ஒன்றைக் காட்டி பீஷ்மா எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான் சூரியனின் உருவமான எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்தியாகும் என்றார். அதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய யுதிஷ்டிரரிடம் வியாசர் ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும் துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள் என்றாலும் உன் வருத்தத்துக்காக இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு பீஷ்மருக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும் என்று ஆறுதல் சொன்னார்.
சில காலங்களுக்கு முன்புவரை ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும் தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறை இருந்தது.