சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சி
ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் விளாதி மீரின் என்பவரின் ஆராய்ச்சியில் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கூறுகிறார். லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் தனக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒரு பொருள் தருவதாகவும் இருக்கிறது என்கிறார். குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால் அது மழை தரும் நெருப்புத் தரும் காற்று தரும் கேட்ட எல்லாம் தரும் என்றும் கூறுகிறார்.
சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரம் என்கிறார். டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியது. இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளம். அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறது. ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும் ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த கூட்டுறவோடும் செயல்படுகிது. சிவமூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர் மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்.
இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும் இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன் நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப்புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா ஐரோப்பா கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் கிராண்ட் கன்யான் என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் சிவம், விஷ்ணு, பிரம்மன் மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றன. ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும் அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட அல்லது உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து. இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தவர்
கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதல் அவருக்குப் பணிவிடைகள் செய்து தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில் தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கிருஷ்ணரரிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில் தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில் கிருஷ்ணர் உத்தவரிடம் இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும் நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள் தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன் என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும் சிறு வயது முதலே கிருஷ்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருந்த பல கிருஷ்ணனின் லீலைகள் புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன. அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.
கிருஷ்ண நீ வாழச் சொன்ன வழி வேறு. நீ வாழ்ந்து காட்டிய வழிவேறு. நீ நடத்திய மகாபாரத நாடகத்தில் நீ ஏற்ற பாத்திரத்தில் நீ புரிந்த செயல்களில் எனக்குப் புரியாத பல விஷயங்கள் உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா என்றார் உத்தவர். கிருஷ்ணர் சம்மதிக்க உத்தவர் கேட்க ஆரம்பித்தார். கிருஷ்ணா நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பவை மட்டுமல்ல நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கு அறிந்த ஞானியான நீ உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி முன்னதாகவே சென்று யுதிஷ்டிரா வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை. விளையாட ஆரம்பித்ததும் யுதிஷ்டிரர் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. யுதிஷ்டிரன் செல்வத்தை இழந்தான். தன் நாட்டை இழந்தான். தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால்விட்டான் துரியோதனன். அப்போதாவது உனது தெய்வீக சக்தியால் அந்த பொய்யான பகடைக்காய்கள் யுதிஷ்டிரனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக திரௌபதியின் துகிலை உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது தான் சென்று துகில் தந்தேன் திரௌபதி மானம் காத்தேன் ஆடை தந்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன் குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து சூதர் சபையில் பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு எஞ்சியமானம் என்ன அவளிடம் இருக்கிறது. அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்? ஆபத்தான இது போன்றசமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத நீ எப்படி ஆபத்பாந்தவன்? நீ செய்தது நியாயமா தருமமா? என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
உத்தவரே விவேகம் உள்ளவனே வெற்றி பெற வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் யுதிஷ்டிரனுக்கு இல்லை. அதனால் தான் யுதிஷ்டிரன் தோற்றான். துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும் ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி பகடையை உருட்டிச்சூதாடுவார் என்றான் துரியோதனன். அது விவேகம் யுதிஷ்டிரனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு நானும் பணயம் வைக்கிறேன். ஆனால் என் சார்பாக என் கிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாம். யுதிஷ்டிரன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான். இதனை மன்னித்து விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். விதி வசத்தால் சூதாடஒப்புக் கொண்டேன். இந்த விஷயம் கிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது கடவுளே என்று மனதில் எண்ணிக்கொண்டான். கிருஷ்ணன் மட்டும் சூதாட்டமண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும் அர்ஜுனனையும் நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிடவில்லை. அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது திரௌபதியும் என்னை கூப்பிடவில்லை. அவளும் தனது பலத்தையே நம்பி சபையில் வந்து வீண் வாதங்கள் செய்து கொண்டிருந்தாள். என்னைக் கடைசி வரை கூப்பிடவில்லை. துச்சாதனன் துகிலுரித்த போது தனது பலத்தால் போராடாமல் அபயம் கிருஷ்ணா அபயம் எனக் குரல் கொடுத்தாள் திரௌபதி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்சம்பவத்தில் என் மீது என்ன தவறு என்று பதிலளித்தார் கிருஷ்ணர்.
அப்படி என்றால் நீ கூப்பிட்டால் தான் வருவாயா கிருஷ்ணா. நீயாக நீதியை நிலை நாட்ட ஆபத்துகளில் கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு வரமாட்டாயா என்று கேட்டார். உத்தவா மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம் மட்டுமே நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவன் மட்டுமே. அது தான் தெய்வ தர்மம் என்றார். அப்படியானால் நீ அருகில் நின்று நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்று கேட்டார் உத்தவர். அதற்கு கிருஷ்ணர். உத்தவரே நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக கவனியுங்கள்.
நான் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மனப்பூர்வமாக உணரும் போது உங்களால் தவறுகளையோ தீவினை செயல்களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. நான் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மறந்துவிடும் போதும் எனக்குத் தெரியாமல் ஏதாவது தீவினையைகளை மறைத்து எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அப்போதுதான் நடக்கிறது. எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று யுதிஷ்டிரன் நினைத்தானே அது அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும் எல்லோருடனும் இருப்பவன் என்பதை யுதிஷ்டிரன் உணர்ந்திருந்தால் இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் என்றார் கிருஷ்ணர். உத்தவர் தனது கேள்விக்கு கிடைத்த பதிலில் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். அவனின்றி ஓர்அணுவும் அசையாது என்ற நம்பிக்கையுடன் சரணாகதி அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை.

தேங்காய் வாழைப்பழம்

சிவன் அபிஷேக அலங்காரம்
இறைவன் சாப்பிடும் நைவேத்யம்
சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். இறைவனுக்கு நாம் செய்யும் நைவேத்யத்தை அவர் சாப்பிட்டால் பாத்திரத்தில் சிறிதளவாவது காலியாகி விடவேண்டும் ஆனால் உணவு அப்படியே இருக்கிறது. நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினான். இதனை கேட்ட குரு பதில் எதுவும் சொல்லாமல் அவனை ஊடுருவி பார்த்துவிட்டு நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன் என்றார். பாடம் ஆரம்பித்த குரு அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட பூர்ணமிதம் எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார். அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். கேள்வி கேட்ட சிஷ்யனை அருகில் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா என்று கேட்டார். முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே என்றான். எங்கே ஒரு முறை சொல் என்றார். கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தை கூறி முடித்தான். அனைத்தையும் கேட்ட குரு நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லை நான் கூறிய போது நீ எழுதிய சுவடியை காட்டு என்றார். பதட்டம் அடைந்த சிஷ்யன் சுவடியை எடுத்து காண்பித்தான். பிறகு குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் நீங்கள் சொல்லி சுவடியில் எழுயிருப்பதை போலவே கூறினேன் என்றான்.
இந்த சுவடியில் இருப்பதை படித்து உன் மனதில் உள்வாங்கினாய் என்றால் சுவடியில் மந்திரம் இருக்கிறதே சுவடியில் இருக்கும் மந்திரத்தை நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா என்றார். சிஷ்யன் குழப்பமாக பார்த்தான். குரு தொடர்ந்தார். உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. சுவடியில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் சுவடியில் இருக்கும் மந்திரம் அளவில் குறையவில்லை. அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும் சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம் என்றார்.

கிருஷ்ண லீலை
ஒரு முறை அஞ்ஞாத வாசத்தில் பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்த பொழுது ஏகாதசி அன்று கிருஷ்ணர் நீண்ட நாட்களாக வரவேயில்லையே என்று எண்ணினாள். அவனுக்கு பிடித்த பால் பாயசத்தை செய்து ஏகாதசியான இன்று நைவேத்யம் செய்வோம் என்று சுவையான பால் பாயசத்தை செய்து தான் வழிபடும் கிருஷ்ண விக்ரஹத்திற்கு நைவேத்யம் செய்ய முற்படும் பொழுது குடிலின் வாயிலில் நின்று அத்தை என்று கிருஷ்ணர் கூப்பிட்டார். குந்திதேவி அந்த பாயச பாத்திரத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு என்று அன்போடு வரவேற்றார்.
அத்தை நீ என்னை நினைத்து பாயசம் வைத்தவுடன் வந்துவிட்டேன். பாயசத்தை விட உன் அன்பு என்னை இழுத்து வந்துவிட்டது என்றார் கிருஷ்ணர். உனக்காக செய்த பால் பாயசத்தை கொண்டு வருகிறேன் என்று கொண்டு வந்தாள். அனைவரும் எங்கை என குந்திதேவியிடம் கிருஷ்ணர் கேட்டார். அதற்கு கிருஷ்ணா அவரவர் வேலைகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்றாள். அரண்மனையில் இருக்க வேண்டியவர்கள் காட்டில் இருக்கின்றார்கள். இன்னும் சில காலம் தான் அத்தை எல்லாம் மாறும் என்றார். குந்திதேவி கர்ம வினையை அனுபவிக்கிறோம். எப்பொழுது நீ எங்களுடன் இருப்பதே எங்களுக்கு அரண்மனை வாழ்க்கை வாழ்வதுபோல் இங்கும் சந்தோஷமாக இருக்கிறோம். எதோ பேசி பாயசத்தை மறந்துவிட்டேன் இதோ ஒரு நிமிடம் என்று பாதி பாயசத்தை தனக்கும் தன் புதல்வர்களுக்கும் திரெளபதிக்கும் எடுத்து வைத்துவிட்டு மீதியை கிருஷ்ணருக்கு எடுத்து வந்தார் குந்திதேவி. கிருஷ்ண பரமாத்மா புன்சிரிப்புடன் அதை வாங்கி சுவைத்து குடித்து முடித்து ஆஹா என்ன சுவை அத்தை உன் கைவண்ணமே என்றும் சுவைதான். எனக்கு இன்னும் இதே அளவு வேண்டும் எனக் கேட்டார். தாய் என்கிற சாதாரண மானுட புத்தியால் குந்திதேவி செய்வதறியாமல் புதல்வர்களுக்கு பாயசம் இல்லையே என்று நினைத்துக் கொண்டே கிருஷ்ணரிடம் கொடுத்தாள். அதை வாங்கிய கிருஷ்ணர் கொடு என்று வேகமாக வாங்கி குடித்துவிட்டு இப்போதுதான் திருப்தியானேன் என்று கூறி மேலும் பல விஷயங்களை பேசிவிட்டு கிளம்பிவிட்டார்.
குந்திதேவி கிருஷ்ணா என் புதல்வர்களுக்கு ஒரு துளி பாயச பிரசாதம் கூட வைக்காமல் சென்று விட்டாயே. நான் எதேனும் தவறு செய்து விட்டேனா என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது உடனே தாமதிக்காமல் அசரீரி குரலில் வந்தது. அத்தை நீ எனக்கு பிடிக்கும் என்றுதானே பாயசம் செய்தாய். அதனால்தான் அவ்வளவு பாயசத்தையும் குடித்தேன். என்னுடையவர்களான உங்கள் 7 பேரையும் விடுவேனா. உள்ளே சென்று பார் நான் சாப்பிட்ட அதே பாத்திரத்திலும் தனியாக பீமனுக்கும் சேர்த்து வைத்திருக்கிறேன். இதுவும் என் லீலைதான் என்றது கிருஷ்ணரின் குரல் அசிரீரீயாக. இதைக்கேட்ட குந்திதேவி ஆனந்தக் கண்ணீருடன் பகவானே சாதாரண மனுஷியாக உன்னிடம் பாயசத்தை மறைத்தேன். என்னை மன்னித்துவிடு என்று கூறி உள்ளே சென்று பாயசத்தை எடுத்து கிருஷ்ணா என்று பருகினாள். பிறகு பஞ்ச பாண்டவர்களுக்கும் கொடுத்தாள். பீமனுக்கு ஒரே சந்தோஷம் தனி அண்டா பாயசத்தை ருசித்து சாப்பிட்டான்.

திருப்பதி
மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம்
பெரியவாளின் சமையல் விளக்கம்
காஞ்சி பெரியவர் பக்தர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? அங்கிருந்த பக்தர்கள் சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம் அதுதான் வித்தியாசம் என்றார்கள். குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம் என்றார். இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னார்.
தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால் நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல் ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம். இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் தான் என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பங்கள் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது. இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை ஆனந்தம் அவைதான் பாயசம், மோர், பட்சணம், இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. உணவு அருந்துவதில் மோர்தான் கடைசி. அதன் பிறகு வேறு எதுவும் சாப்பிடுவது இல்லை. பரமாத்மாவைக் கலந்தபின் மேலே செல்ல ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்று பதில் சொன்னார் காஞ்சி பெரியவர்.
குழம்பு-குழப்பம்
தான்-அகங்காரம்
ரசம்-தெளிவு
பாயஸம்-இனிமை
மோர்-ஆனந்தம்
