சக்தி பீடம் 5. சங்கரி – மகாகாளம்

சக்தி பீடத்தில் 5 ஆவது கோயில் மகாகாளம் சங்கரி கோயிலாகும். அம்பாளின் பெயர் சங்கரி. ஹரசித்திதேவி என்ற வேறு பெயரும் உள்ளது. இக்கோயில் இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் உஜ்ஜைனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. புராண பெயர் அவந்திகா அவந்திபுரம் அவந்திபூர் அவந்தி ஆகும். இக்கோயில் மகோத்பலா சக்தி பீடமாகும். தேவியின் முழங்கை விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை கடைந்த பொழுது அசுரர்களுக்கு பங்கு தராமல் தேவகுரு அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டு ஓடும் பொழுது தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு புனித தலமாகும். தலமரம் ஆலமரம். இந்த மரத்தின் விதை பார்வதி தேவியால் போடப்பட்டது. பல நூறு வருடங்களாக இந்த மரம் சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. இந்த மரத்திற்கு சித்திவடம் என்று பெயர். தீர்த்தம் சிப்ராநதி தீர்த்தம் சூரிய குண்டம் நித்திய புஷ்கரணி கோடிதீர்த்தம்.

இக்கோயில் சிப்ர நதிக்கரையில் உள்ளது. இந்த ஆலயம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. அதில் ஒரு தளம் பூமி மட்டத்துக்குக் கீழே இருக்கிறது. இத்தலத்தில் விநாயகர் ஓங்காரேசுவரர் தாரகேசுவரர் பார்வதி தேவி சுப்ரமணியர் நந்தி ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். கருட புராணத்தில் சொல்லப்பட்டபடி ஏழு மோட்ச நகரங்களில் உஜ்ஜைனியும் ஒன்று. அயோத்தி மதுரா ஹரித்துவார் காசி காஞ்சி அவந்திகை (உஜ்ஜைனி) துவாரகை ஆகும். ஒரு தடவை பூஜித்த பொருள்களுக்கு நிர்மால்யம் என்று பெயர். ஒரு முறை பூஜை செய்த பொருட்களை வைத்து இன்னொரு முறை பூஜை செய்வதில்லை. இக்கோயிலில் இந்த வழக்கத்தை பின்பற்றுவதில்லை. பிரசாதத்தையும் வில்வம் போன்ற தளிர்களையும் இறைவனுக்கு மீண்டும் பூஜை செய்யப் படுகிறது.

ஹரசித்திதேவி என்ற இப்பெயருக்கு ஒரு புராணக் கதை உள்ளது. ஒரு சமயம் கயிலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது சண்டன் பிரசண்டன் என்ற இரண்டு அசுரர்கள் அங்கே வந்தனர். அவர்களிருவரும் தவமிருந்து மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத வரம் பெற்றிருந்தனர். வரத்தின் பலத்தினால் ஆணவம் கொண்ட அவ்விரு அரக்கர்களும் தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களை அடிமை ஆக்கினர். தேவர் முனிவர் மக்கள் யாவரையும் துன்பப்படுத்தினர். கயிலாயம் வந்து அங்கும் அமைதியைக் குலைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் புரிந்து வந்த நந்தி தேவரை அடித்து இம்சை செய்தனர். சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆடும் சொக்கட்டான் ஆட்டத்திற்கு இடையூறு செய்தனர். சிவபெருமானைப் போருக்கும் அழைத்தனர். சிவபெருமான் பார்வதி தேவியிடம் சண்டன் பிரசண்டன் பெற்ற வரம் பற்றிக் கூறினார். அவர்களை அழைக்கும் வல்லமை பார்வதி தேவிக்கே உள்ளது என்றும் கூறினார். எனவே அசுரர்கள் இருவரையும் அழித்து விடக் கூறினார். பார்வதி தேவி அசுரர்கள் அழிக்க மகாகாளியாக மாறினார். நவசக்தி தேவிமார்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு மிகுந்த கோபத்துடன் அசுரர்களுடன் போருக்குச் சென்றார். மகாகாளியின் உருவத்தைக் கண்ட அசுரர்கள் இருவரும் பயந்து போய் உஜ்ஜயினி காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர். மகாகாளி அவர்களை விடாமல் பின் தொடர்ந்து வந்து போரிட்டாள். அரக்கர் இருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்க வாகனம் எடுத்து அரக்கர்களை வதம் செய்தார். அரன் என்னும் சிவபெருமான் கட்டளையை பூர்த்தி செய்தமையால் அரசித்தி தேவி எனப்பெயர் பெற்றாள். அரசித்தி தேவியாக மகாகாளி தோன்றிய இடத்தில் ஒரு கோயில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

மகாகாளர் என்ற ஜோதிர்லிங்கத்தைப் பற்றிச் சிவபுராணத்தில் கதை ஒன்று உள்ளது. அவந்தி மாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான். சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன் இந்த நகரைச் சூறையாடி மக்களைத் துன்புறுத்தினான். மக்கள் விலாசனை அணுகி தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது அந்த அரக்கன் வந்து பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து சிவலிங்கத்தையும் அழித்தான். அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர். அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள் மகாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாகாளர் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார்.

உஜ்ஜயினி காலம் காலமாகப் பல சிறப்பம்சங்கள் கொண்ட நகரம். சமண மதத்தை சார்ந்த சுதன்வா என்ற மன்னன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஜைன மதம் அவ்வூரில் எங்கும் வியாபித்திருப்பதைக்கண்டு உஜ்+ஜைன் – உச்சத்தில் இருக்கும் ஜைனம் என்று பொருள் பட உஜ்ஜைய்ன் என்று பெயர் சூட்டினான். ஜைன சமயத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்த நகரம் என்பது பொருள். பல மன்னர்கள் இந்த நகரை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த தலம். முன்காலத்தில் மாளவதேசத்தின் தலைநகராகவும் விக்கிர மாதித்திய மகாராஜாவின் தலை நகரமாகவும் விளங்கியது. விக்கிரமாதித்திய மன்னனும் பட்டியும் இந்த மகா காளியிடம் வரம் பெற்றுத்தான் பல வருடங்கள் ஆட்சி புரிந்து பலசாகசங்கள் செய்தார்கள். விக்ரமாதித்தியன் குலதெய்வம் இந்தத் தேவியே ஆகும். விக்கிரமாதித்த ராஜாவின் தெய்வீக சிம்மாசனம் இருந்த இடம் இது.

அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். மவுரியப் பேரரசின் கிளைத் தலைமைப் பீடம் இங்கே இருந்திருக்கிறது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பற்றிய செய்திகள் உள்ளது. பாணினி பெரிபுளூசு ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். பதஞ்சலி காளிதாசன் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள். தமிழ் இலக்கிய நூல் பெருங்கதை என்ற நூலில் வரும் உதயணன் கதை நிகழ்ச்சிகள் நடந்த தலம் உஜ்ஜயினி என்ற கருத்து உள்ளது. சாலி வாகன சகாப்தம் என்ற ஒரு சகாப்தத்தையே உண்டாக்கிய திறமைமிக்க அரசர் இங்கு ஆட்சி செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த பட்டினத்து அடிகளார் துறவு பூண்டு வடதிசைக்கு சென்ற பொழுது சில காலம் இந்த ஊரில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் உள்ள வினாயகர் ஆலயத்தில் தங்கியிருந்தார். அப்போது உஜ்ஜையினியை அரசாண்டு வந்த பத்ரகிரி மகாராஜா துறவறம் பூண்டு பட்டினத்தாரை குருவாக ஏற்றுக் கொண்டு திருவிடை மருதூரில் வந்து ஞானம் பெற்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

இப்பிரதேசத்தில் முன்னொரு காலத்தில் அசுரர்களும் வேதாளங்களும் நிறைந்திருந்தமையால் பக்தர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் கயிலையை விட்டு இங்கே எழுந்தருளினார். திரிபுர அசுரர்களைச் சிவபெருமான் வெற்றி கொண்ட புனிதத் தலமாகும்.

இராமாயணம் மகாபாரதம் நடைபெற்ற கால கட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த தலம். இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியதால் ராமர் காட் என்னும் குளியல் கட்டம் ஏற்பட்டு உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர். கிருஷ்ணர் பலராமர் சுதாமர் ஆகியோர் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள். தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்டில் விட்டு அங்கே பிறந்திருந்த பெண்ணை வசுதேவர் தூக்கி வந்தார். அந்தப் பெண்ணைக் கம்சன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான் .ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு இங்கே தங்கி அருள் பாலித்தாள். காளிதாசருக்கு அருள் புரிந்த காளி மாதா இவள்தான்.

கார்த்திகை மாதப் பவுர்ணமி இங்கே சிறப்பாகப் கொண்டாடப்படுகிறது. அந்தச் சமயத்தில் கவி காளிதாசரின் நினைவு விழாவும் நடக்கிறது. இங்கு வான ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இது1693ல் நிறுவப்பட்டது. இதற்கு நட்சத்திர மண்டபம் என்று பெயர். இங்கு உள்ள கட்டிடங்களின் நிழலைக் கொண்டு மணி நிமிடம் திதி நட்சத்திரம் இவற்றை அறிய முடியும்.

முகலாயரின் படையெடுப்பின் போது அல்டுமிஷ் என்பவன் இக்கோயிலை இடித்து விட்டு அங்கிருந்த சிவலிங்கத்தைஎடுத்து சென்று விட்டான். அதன் பிறகு ராமச்சந்திரன் என்பவர் புதிய லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து புதிய கோவிலை உருவாக்கினார். பின்னர் பல மன்னர்களின் கைங்கரியத்தினாலும் பொது மக்களின் திருப்பணிகளாலும் இன்று இத்திருக்கோயில் ஐந்து அடுக்குடன் மிகச்சிறப்புடன் விளங்குகிறது. இந்தத் தலத்தைப் பற்றி கந்த புராணம் மகாகாளவனம் என்று கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது என்று அக்கினி புராணம் குறிக்கிறது. இந்த நதியில் மூழ்கி மகாகாளரை வணங்கி காளி தரிசனம் செய்தால் கல்வியும் அறிவும் பெருகும். அசுர குணம் மறையும். இந்துக்கள் பௌத்தர்கள் ஜைனர்கள் ஆகிய மதத்தினரின் முக்கிய யாத்திரை தலமாகும்.

சக்தி பீடம் 4. விசாலாட்சி – காசி

சக்தி பீடத்தில் 4 ஆவது கோயில் காசி விசாலாட்சி கோயிலாகும். இக்கோயில் இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் வாரணாசியில் கங்கைக் கரையில் உள்ள மீர்காட்டில் அமைந்துள்ளது. இக்கோயில் மணிகர்ணீகா சக்தி பீடமாகும். தேவியின் காதணி விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. சதி தேவியின் காதணி முத்து (மணி) போல இருந்ததால் மணிகர்ணீகா என்று பெயர் ஏற்பட்டது. மற்றோரு நூல் விசாலாட்சியின் மூன்று கண்களில் ஒன்று இங்கு விழுந்ததால் இது சக்தி பீடம் என்று கூறுகிறது. கோயிலில் உள்ள அம்பாளின் பெயர் விசாலாட்சி ஆகும். விசாலாட்சி என்றால் ஆகன்ற பெரிய கண்களைக் கொண்டவள் என்று பொருள். இந்தக் கண்ணால் பிரபஞ்சம் முழுவதையும் உணர முடியும் என்பதால் விசாலாட்சி என்று அழைக்கப்படுகிறாள். தற்போது உள்ள விசாலாட்சியின் கருஞ்சிலை 1970ஆம் ஆண்டு கோயிலை புணரமைக்கும் போது நிர்மாணிக்கப்பட்டது. சிலைக்கு வலது பக்கத்தில் தேவியின் உண்மையான சித்திரம் இடம் பெற்றுள்ளது. தேவியின் பிரதான கல் சிலைக்கு பின்னால் மற்றொரு சிலை உள்ளது. பண்டைய காலத்தில் இருந்து வழிபடப்பட்ட சிலை இதுவாகும். இச்சிலை வெள்ளியால் செய்யப்பட்டது என்று ஒரு கருத்து உள்ளது. ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலுக்குச் சென்ற போது ​​பல படையெடுப்புகளின் சுமைகளைத் தாங்கிய கோயிலில் சக்திகளை நிரப்ப பிரார்த்தனை செய்து ஒரு ஸ்ரீ யந்திரத்தை நிறுவினார்.

கோயிலில் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள் அன்னை விசாலாட்சி. சாந்த வடிவத்தோடு எட்டு திக்குகளிலும் பக்தர்களுக்கு அருள் புரியும் வகையில் அன்னை விசாலாட்சி மணி கர்ணிகா பீடத்தில் அழகுற அருள் பாலிக்கிறாள். நவராத்திரியின் போது 9 நாட்களும் நவ துர்க்கா வடிவில் தோன்றி அருள்பாலிக்கிறாள். இந்த முக்தி தலத்தில் வந்து இயற்கையாக உயிர் நீத்தால் முக்தி கிடைக்கும். ஆன்மா பிரியும் தருணம் அவர்களை விசாலாட்சி தன் மடி மீது கிடத்திக் கொள்கிறார். அப்போது விஸ்வநாதர் அவர்களது காதில் ஸ்ரீ இராம நாமத்தை உபதேசிக்கிறார். ஆகவே அந்த ஆன்மாவானது பிறவியில்லாத நிலையை பெறுகிறது. கங்கை கரையோரத்தில் நீராடுவதற்கென்று 64 படித்துறைகள் தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை தீர்த்தக் குளம், ஞான வாவி சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள் ஆகும். கங்கையில் நீராடினால் தேகமும் விஸ்வநாதரை தரிசித்தால் ஆன்மாவும் புனிதமடைகின்றன.

புனித தலங்களில் சிறப்பு மிக்கது உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள காசி புராதனமான நகரான இது. முக்தி தலம் என்றும் அழைக்கப்படுகிறது. காசிக்கு இன்னொரு பெயர் வாரணாசி. அசி நதியையும் வருணை நதியையும் தெற்கு வடக்கு எல்லையாகக் கொண்ட கங்கைக் கரை நகரம் என்பதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. புராண பெயர் பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம் ஆகும். வட இந்தியாவில் அயோத்யா, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), துவாரகா ஆகிய ஏழு மோட்சபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வது காசி தலமாகும். 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான். கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும் திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும் துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலியுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி தலம் இருப்பதாக காசி ரகசியம் புராண நூல் கூறுகிறது. மகான்களான ஆதிசங்கரர் இராமனுஜர் குமரகுருபரர் முனிவர்கள் ஞானிகள் ரிஷிகள் தடம் பதித்த புனித பூமி. காசி என்றால் ஒளிநகரம் மற்றும் ஒளி மங்காத ஞானம் என்று பொருள். பிரளய காலத்தில் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்கிய பிறகும் இந்த நகரம் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சிவனை அழைக்காமல் தட்சன் யாகம் செய்த போது தாட்சாயிணி சிவனின் பேச்சை மீறி தந்தையை எதிர்த்தாள். அப்போது யாகத்தை நிறுத்த தீயில் மாய்ந்த தாட்சாயிணியைக் கண்டு சிவன் ஊழித்தாண்டம் ஆட திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி பார்வதி தேவியின் உடலை துண்டித்தார். அதில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு இடத்தில் சிதறி விழுந்தன. ஆவேசமடைந்த சிவன் பார்வதியின் உடல் பாகங்களைக் காசிக்கு கொண்டு வந்தார். அப்போது சிவன் பார்வதியின் காதில் தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார். அப்போது தேவியின் காதில் இருந்த காதணிகளைக் காணாத சிவபெருமானின் கண்களில் திருமால் தென்பட்டார். தமது சக்கரத்தால் கிணறு தோண்டி அருகே அமர்ந்து சிவனை நோக்கி தரிசனம் செய்தார். அவரிடம் சென்று அம்பிகையின் காதணியைக் கேட்க அவர் அருகில் இருந்த கிணற்றைக் கை காண்பித்தார். சிவன் கிணறை எட்டிப்பார்க்க அச்சமயம் சிவனின் காதுகளில் இருந்த குண்டலமும் விழுந்தது. அப்போது கிணற்றில் பிரகாசமான பேரொளியுடன் வெளிப்பட்ட சிவலிங்கத்தில் சக்தி சிவன் இருவரது சக்தியும் ஐக்கியமாக இருந்தது. அந்த ஜோதிர் லிங்கத்தை எடுத்து திருமால் வழிபட்டதோடு தொடர்ந்து சிவனை நோக்கி தவமிருந்து இந்த ஜோதிர் லிங்கத்தை மக்கள் வழிபட வேண்டும் என்றும் சிவனது பிறையில் குடிகொண்டிருக்கும் கங்கை இந்த லிங்கத்தை அபிஷேகம் செய்து இங்கு நீராடும் மக்களின் பாவங்களைப் போக்க வேண்டும் என்றும் வேண்டினார். சிவபெருமானும் திருமாலின் விருப்பத்துக்கு இணங்க அந்த ஜோதிர் லிங்கத்தில் ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு தரிசனம் தந்துகொண்டிருக்கிறார்.

காசி நகரத்தில் வசிக்கும் மனிதர்கள் மட்டுமல்ல அங்கு வசிக்கும் அனைத்து ஜீவன்களும் புண்ணியம் செய்தவையே. இங்கு நாய்கள் குரைப்பதில்லை. பல்லிகள் சத்தம் எழுப்புவதில்லை. மாடுகள் யாரையும் முட்டுவதில்லை. மேலும் பூக்கள் மணப்பதில்லை. எரிக்கப்படும் பிணங்களின் இருந்து கெட்ட நாற்றம் வருவதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர் ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் நின்றார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அதைக் கண்டதும் என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக் கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்றும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

காசி நகரம் வேதகாலம் புராண காலத்துக்கு முந்தையது. சூரியனின் புதல்வரான சனிபகவான் சிவனை நினைத்து தவம் செய்து நவக்கிரகங்களில் ஒரு வராகவும் மற்றொரு புதல்வர் எமதர்மர் எம்பெருமானை நோக்கி தவம் செய்து எமலோகத்துக்கு அதிபதியாகவும் ஆயினர். பிரம்மதேவன் இத்தலத்தில் யாகம் செய்து பிரம்ம பதவியைப் பெற்றார். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலமாக கூறப்படுகிறது. பல ஞானிகளும் யோகிகளும் சப்த ரிஷிகளும் இங்கு தவம் புரிந்து பல பேறுகளை அடைந்திருப்பதால் சொல்லில் அடங்கா சிறப்புகளைப் பெற்றது. காசி சேத்திரத்தில் பார்வை படும் இடமெல்லாம் லிங்க ஸ்வரூபம் காணப்படும். தரையில் பல இடங்களில் லிங்க ஸ்வரூபம் இருப்பதால் ராமகிருஷ்ண பரமஹம்சர் காசி நகரத்தில் மலஜலம் கழிக்க நகருக்கு வெளியே செல்வார். காஞ்சி மகாபெரியவர் காசியில் வசிக்கும் காலங்களில் காலில் பாதுகையே அணிய மாட்டார்.

சக்தி பீடமாக திகழும் அன்னை விசாலாட்சி கோயில் தென்னிந்திய பாணியில் அழகுற கட்டப்பட்டுள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் கிபி 1893 இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள் கிபி1908இல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தீபாவளியின் போது மட்டும் இரண்டு நாள்களுக்கு நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் உள்ள சுவர்ண உற்சவ விசாலாட்சி அம்மன் தரிசனத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளுகின்றாள்.

சக்தி பீடம் 3. மீனாட்சி அம்மன் மதுரை

சக்தி பீடத்தில் 3 ஆவது கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலாகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமள சக்தி பீடம் ஆகும். அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார். இவளுக்கு இடப்பக்கத்தில் சுந்தரேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் அம்மனின் இடப்பாகத்தில் இறைவன் அருள்புரிகிறார். போகத்தையும் முக்தியையும் வேண்டுபவர்களுக்கு சித்திதரும் தலம் என்று இத்திருத்தலத்தை திருவிளையாடல் புராணம் போற்றியிருக்கிறது. வேறு நூலின் குறிப்புப்படி சக்தி பீடத்தில் இவை மந்த்ரிணீ பீடம் ஆகும். 18 சித்தர்களின்  பீடத்தில் இதுவும் ஒன்று. தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் 191 ஆவது தலம் ஆகும். புராணபெயர் திருஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம். தலவிருட்சம் கடம்பமரம். இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும் தலத்தின் பெயரை படித்தாலோ கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.

பாண்டிய நாட்டை மலயத்துவசன் அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவன் சூரசேனன் என்னும் சோழ அரசரின் மகளான காஞ்சன மாலையை திருணம் செய்தான். ஆனால் இத்தம்பதியருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதனால் மலயத்துவசன் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் முடிந்த நிலையில் இந்திரன் இப்பாண்டியன் நூறு யாகங்களை முடித்தால் நொடிப்பொழுதில் இந்திரப்பதவி அவனுக்கு போய்விடும் என்று எண்ணி மலயத்துவசன் முன் தோன்றினான். பாண்டியனே நீ நற்புத்திரப் பேற்றினை விரும்பினாய். ஆதலால் உலக இன்பத்தை அளிக்கக் கூடியதும் நற்புத்திர பேற்றினை வழங்கக் கூடிய புத்திர காமேஷ்டி செய் என்று கூறி தன்னுலகத்தை அடைந்தான்.

பாண்டியனும் இந்திரனின் வழிகாட்டுதலின்படி புத்திர காமேஷ்டி யாகத்தை தொடங்கினான். யாகத்தின் பலனாக தலையின் இடது புறத்தில் கொண்டையுடன் கையில் கிளி வைத்துக் கொண்டு காலில் சதைங்கை அணிந்து முகம் நிறைய புன்னகையைச் சிந்தியவாறே மூன்று வயதினை ஒத்த சிறுமியாக உலக நாயகியான உமையம்மை மூன்று தனங்களுடன் தோன்றினார். அக்குழந்தையின் கண்கள் மீன்களைப் போன்று நீண்டு அழகாக இருந்தன. ஆகையால் அங்கயற்கண்ணி என்ற பெயரில் அழைக்கப்பட்டாள். அவள் தன் சின்னஞ் சிறு கால்களால் நடை நடந்து காஞ்சன மாலையின் மடியில் போய் அமர்ந்தாள். தன்னுடைய சின்னச்சிறிய செவ்விதழ்களால் காஞ்சனமாலையை அம்மா என்று மழலை மொழியில் அழைத்தாள். அதனைக் கண்டதும் காஞ்சன மாலை குழந்தை வடிவில் இருந்த உலக அன்னையை வாரி எடுத்து அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள்.

குழந்தையைக் கண்ட மலயத்துவசன் மனதில் மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் கவலை ஒன்று அவனை வாட்டியது. புத்திர பேற்றினை விரும்பி புத்திர காமேஷ்டி செய்த தனக்கு தான் விரும்பியபடி ஆண் குழந்தை தோன்றாமல் மூன்று தனங்களுடன் கூடிய பெண் குழந்தை தோன்றியதுதான் அவனுடைய கவலை ஆகும். மலயத்துவசன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சோமசுந்தரக் கடவுளை வழிபட்டான். தன்னுடைய மனக் குறையை இறைவனிடம் விண்ணப்பித்தான். இறைவனும் அவ்வரசனுக்கு மட்டும் கேட்குமாறு திருவாக்கு ஒன்றினைக் கூறினார். பாண்டியனே கலங்காதே. உன்னுடைய அன்பு புதல்விக்கு தடாதகை எனப் பெயரிட்டு எல்லா கலைகளையும் கற்பித்து அவளுக்கு ராணியாக முடிசூட்டு. அவளுக்கு ஏற்ற கணவனை அவள் காணும் போது அவளுடைய ஒரு தனம் தானே மறைந்து விடும். எனவே மனம் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று சொக்கநாதர் கூறினார். இறைவனின் திருவாக்கினை கேட்ட மலயத்துவசன் கவலை நீங்கி மனத்தெளிவு பெற்றான்.

மீனாட்சி அம்மையின் திருவதாரம் நிகழ்ந்து விட்டது என்று அகத்தியர் மற்ற முனிவர்களுக்கு கூறினார். அம்முனிவர்கள் அகத்தியரிடம் மலையரசனும் பல நாட்கள் வருந்தி தவம் இயற்றியே உலக அன்னையை தம் மகளாக பெற்றிருக்கிறான். தற்போது அன்னை பாண்டியனின் திருமகளாக இப்பூமியில் இறைவனை விட்டுவிட்டு தனியே தோன்றக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அகத்தியர் கந்தர்வ லோகத்தில் வசித்த விச்சுவாவசு என்வனின் மகளான விச்சாவதி உமையம்மையின் மீது மிக்க அன்பு கொண்டு இருந்தாள். ஒரு நாள் தனது தந்தையிடம் உமையம்மையின் அருளைப் பெற வழிபட வேண்டிய தலம் என்ன? என்று கேட்டாள். அதற்கு விச்சுவாவசுவும் துவாத சந்தம் எனப்படும் மதுரை சிறந்த இடம் என்று கூறினார். விச்சாவதியும் மதுரையை அடைந்து பல விரத முறைகளை மேற்கொண்டு தை மாதத்தில் அங்கையற்கண்ணி இறைவியின் சந்நதியை அடைந்து யாழினை இசைத்து அம்மன் பற்றிய இனிய பாடல்களை பாடினாள். அப்போது அங்கையற்கண்ணி அம்மை மூன்று வயது குழந்தையாக விச்சாவதிக்கு காட்சி தந்தாள். விச்சாவதியிடம் அங்கையற்கண்ணி உன் விருப்பம் என்ன? என்று கேட்டாள். விச்சாவதியும் தாயே நின் திருவடியில் நீங்காத அன்பினை நான் எப்போதும் பெற்றிருக்க வேண்டும். என்று கேட்டாள். அங்கையற்கண்ணி மேலும் இன்னும் வேறு என்ன வேண்டும் என்று கேட்டாள். அதற்கு விச்சாவதி அம்மையே தற்போது காட்சி தருகின்ற திருவுருவத்திலேயே என்னிடம் தோன்ற திருவருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாறள். அதனை கேட்ட அங்கையற்கண்ணி பாண்டியனின் மரபிலேயே மலயத்துவசன் தோன்றுவான். நீ அவனுடைய மனைவியாய் வருவாய். யாம் அப்போது இத்திருவுருவத்தியேயே உனது தவப்புதல்வியாய் உன்னிடம் வருவோம் என்று அருளினார். விச்சாவதியின் தவப்பயனால் உலக அன்னை மதுரையில் தடாதகையாகத் தோன்றினாள். என்று அகத்தியர் சொல்லி முடித்தார்.

இறைவனின் திருவாக்குப்படி தாடாகை என்ற பெயரை குழந்தைக்கு சுட்டி மனைவியுடன் அரண்மனை திரும்பிய மலயத்துவசன் தனக்கு குழந்தை பிறந்ததை உலகெங்கும் அறிவிக்கச் செய்தான். தடாதகை என்ற சொல்லுக்கு மாறுபட்டவள் என்பது பொருள் ஆகும். தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கினை மன்னன் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் சுமதியிடம் மட்டும் சொன்னான். தடாதகையும் போர் கலைகள் உள்ளிட்ட எல்லா கலைகளையும் கற்று குமரிப்பருவத்தை எய்தினாள். தடாதகை பிராட்டியார் குமரிப் பருவத்தை அடைந்ததும் மலயத்துவசன் தன் அமைச்சரான சுமதி என்பவரிடம் கலந்தாலோசித்து நல்லதொரு நாளில் தடாதகை பிராட்டியாருக்கு பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டினான். சில நாட்களில் மலயத்துவசன் விண்ணுலகத்தை அடைந்தான். மலயத்துவசனுக்கு பின் தடாகை ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தான் கற்ற கல்வியின்படி நாட்டினை சிறப்புற ஆட்சி செய்தார்.

மீனானது பார்வையாலே தன் குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டி பாதுகாப்பது போல தடாதகையும் தம் குடிமக்களைப் பாதுகாத்து அரசாண்டார். மீன் போன்ற கண்களைக் கொண்டு அரசியாக அரசாண்டதால் மீனாட்சி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். அம்+ அயல்+கண்ணி = அங்கயற்கண்ணி. அம் என்றால் அழகிய என்று பொருள். கயல் என்றால் மீன் கண்ணி என்றால் கண்களை உடையவள். அழகிய மீன் போன்ற கண்களை உடையவள். தடாதகை பிராட்டியார் கன்னிப் பருவத்தில் முடிசூடி பாண்டிய நாட்டை ஆண்டமையால் பாண்டியநாடு கன்னிநாடு என்னும் பெயர் பெற்றது. நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். தடாதகை மணப் பருவத்தை அடைந்தாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் திருமங்கல நாணை பிராட்டியாருக்குச் சூட்டினார். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.

அம்பாள் மீனாட்சி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப் போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார். மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார். அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன. மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது.

மீனாட்சியம்மன் கோவிலில் தினமும் முதலில் அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சிவனுக்கு பூஜை நடக்கிறது. மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால் அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள் பாலிக்கிறாள். திருவனந்தல் விளாபூஜை காலசந்தி திரிகாலசந்தி உச்சிக்காலம் சாயரட்சை அர்த்தஜாமம் பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது. இந்த எட்டு காலங்களில் முறையே மஹாஷோடசி புவனை மாதங்கி பஞ்சதசாட்சரி பாலா சியாமளா சோடஷி ஆகிய திருக்கோலங்களில் காட்சி கொடுக்கிறாள். இப்பூஜைகள் திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.

பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் கனவில் வந்த சிவனாரின் சடாமுடியிலிருந்து தேனாகிய மதுரம் இத்தலத்தில் வழிந்திட மதுராபுரி என அழைக்கப்பட்டு அது மருவி மதுரை ஆயிற்று. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 8 கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம் இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. இதில் 32 சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை.

மீனாட்சி அம்மன் கோயில் தீர்த்தம் பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி. நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே பொற்றாமரைக்குளம் ஆகும். இந்தக் குளம் கோயிலுக்குரிய தீர்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் பெயர் உள்ளது. நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின் படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே பொற்றாமரைக் குளம். கோயிலுக்குரிய தீர்த்தங்களில் இது முதன்மையானது. இதனை சிவகங்கை என்றும் அழைப்பார்கள். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி இக்குளத்தில் மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம். தேவேந்திரன் தனது சிவபூஜைக்காக பொன் தாமரையைப் பெற்றதும் நக்கீரர் இறைவனை எதிர்த்து வாதிட்டதும் இங்கு தான். 165அடி நீளமும் 120 அடி அகலமும் உள்ள இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலைநாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம் இது தான். பொற்றாமரைக் குளத்தில் மீன் போன்ற உயிரினங்கள் காணப்படுவதில்லை என்பது ஓர் அதிசயம். இக்குளத்தில் சங்கப்பலகை இருந்ததாகவும் புலவர்கள் இயற்றும் நூல்களை அதன் மேல் வைப்பார்கள் அப்பலகை ஏற்றுக் கொண்ட பின்னரே சங்கப்புலவர்கள் அந்நூல்களை ஏற்றுக் கொண்டதாகவும் திருக்குறளும் அவ்வாறே இக்குளக்கரையில் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் குளத்தில் அமாவாசை மாதப் பிறப்பு கிரகணகாலம் வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால் வேண்டும் சித்திகளைப் பெறலாம். இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த தீர்த்தத்தில் பல வருடங்களுக்கு முன்பாக தோன்றிய ஸ்படிக லிங்கம் இப்போதும் உள்ளது.

தெற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் முக்குறுணி விநாயகர் சந்நிதி உள்ளது. கி.பி. 1623 முதல்1659 வரை மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூர் தெப்பக்குளம் அருகே மண்ணை வெட்டியபோது மண்ணில் புதையுண்டிருந்த இந்த விநாயகர் திருவுருச் சிலையை கண்டெடுத்து இங்கே கிபி 1645 இல் பிரதிஷ்டை செய்தார். ஒரே கல்லினால் ஆன இவ்விநாயகரின் உயரம் 7 அடி. ஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் இந்த விநாயகருக்கு 18 படி (முக்குறுணி) அரிசியால் கொழுக்கட்டை தயார் செய்து படைக்கப்படுவதால் இவ்விநாயகர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

விருத்த்ராசுரன் விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பூசித்தவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும் விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள் இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. ஆலயம் கட்டிய இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று இறைவன் கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.

மீனாட்சி சன்னதிக்குள் நுழைந்ததும் இருப்பது அஷ்ட சக்தி மண்டபம். 18 அடி அகலமும் 25 அடி உயரமும் 46 அடி நீளமும் உள்ள இந்த மண்டபத்தை அஷ்ட லட்சுமி மண்டபம் என்றும் அழைப்பார்கள். மண்டபத்தில் இருபக்கங்களிலும் நான்கு நான்கு தூண்கள் உள்ளன. எட்டுத் தூண்களிலும் யக்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன் மணி, கவுமாரி, ரவுத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இந்த மண்டபத்தை கட்டியவர்கள் மன்னர் திருமலைநாயக்கரும் அரசிகளான ருத்திரபதியம்மையும் தோளியம்மையும் ஆவர்கள். பாண்டியன் மகளாக மீனாட்சி பிறப்பதும் முடிசூட்டிக் கொள்வதும் ஆட்சி நடத்துவதும் வீர உலா செல்வதும் இறைவனை காண்பதும் சோமசுந்தரர் ஆட்சி நடத்துவதும் இம்மண்டபத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணமும் உள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்த போது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக் கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன் சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியது. அது போல் இப்போதும் இறைவனை அடையத் தகுதி உடையவர்களுக்கு கிளி வழிகாட்டிக் கொண்டே இருக்கிறது. உலகத்திலேயே சிலைகளும் சிற்பங்களும் மூன்று கோடி உள்ள ஒரே திருக்கோயில் இதுதான். அன்னை மீனாட்சிக்கு 1981ல் தங்கத்தால் தேர் செய்யப்பட்டது. இத்தேரின் அப்போதைய மதிப்பு ரூ.14,07,093.80. 14.5அடி உயரத் தில் செய்யப்பட்ட இந்த ரதத்தில் 6.964 கிலோ தங்கமும் 87.667 கிலோ வெள்ளியும் 222.440 கிலோ தாமிரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் ரோஸ் பீட்டர் என்பவரின் கனவில் மீனாக்ஷி அம்மன் தோன்றி தூங்கி கொண்டிருந்த அவரை கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல சொல்லியிருக்கிறார். அவர் வெளியே சென்ற சிறிது நேரத்திலயே அந்த கட்டிடம் இடிஞ்சு விழுந்து விட்டது. அதனால் அவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயிலும் பொற்றாமரை குளமும் சங்க காலத்திற்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதன் பின் கோபுரங்கள் மற்றும் சன்னதிகள் கட்டபட்ட ஆண்டுகள் விவரம் வருமாறு.

1168 – சுவாமி கோபுரம்
1216 – கிழக்கு ராஜ கோபுரம்
1627 – அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – மேற்கு ராஐ கோபுரம்
1372 – சுவாமி சந்நிதி கோபுரம்
1374 – சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452 – ஆறு கால் மண்டபம்
1526 – 100 கால் மண்டபம்
1559 – தெற்கு ராஜ கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 – சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 – தேரடி மண்டபம்
1563 – பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – வடக்கு ராஜா கோபுரம், வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம்
1569 – சித்ர கோபுரம், ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 – அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

இத்தலத்தில் தான் முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கி குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத்தமிழ் அரங்கேற்றினார். திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான். திருஞானசம்பந்தர் அனல்வாதம் புனல்வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம். பாணபத்திரருக்கு தன் கைப்பட பாசுரம் எழுதிக் கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம். ராமர் லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம். திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் ஒரு நாரைக்கு முக்தியளித்த சம்பவம் கூறப்பட்டுள்ளது. அதனை மெய்பிக்கும் விதமாக 2016 மார்ச் மாதத்தில் ஒரு நாரை இக்கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக் குளத்தில் 4 நாட்களாகத் தவம் செய்வது போல் நின்று கொண்டிருந்ததது. உணவு எதுவும் உட்கொள்ளாமல் குளத்திற்குள் செல்வதும் கரைக்கு வந்து நிற்பதுமாக 4 நாட்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தது. 17-3-2016 அன்று அங்கேயே முக்தி அடைந்ததது. அதனை கோவிலுக்குள் உள்ள கோசாலையில் அடக்கம் செய்தனர். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் குமரகுருபரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

சக்தி பீடம் 2. காமாட்சி அம்மன்

சக்தி பீடத்தில் 2 ஆவது கோயில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலாகும். இந்த ஊரின் பெயர் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. காஞ்சியில் அனைத்துக் கோவில்களுக்கும் நடுநாயகமாக காமாட்சி அம்மன் கோவில் விளங்குகிறது. தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் நாபி (தொப்புள்) விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோவிலின் மிக அருகிலுள்ள ஆதி காமாட்சி கோவில் ஆதி பீட பரமேஸ்வரி கோவில் காளிகாம்பாள் கோவில் ஆதி பீடேஸ்வரி கோவில் அனைத்தும் சேர்ந்தே சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி அம்மன் கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது. இவ்வூரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள். தலமரம் செண்பகம். தீர்த்தம் பஞ்ச கங்கை. 70 கிலோ எடை கொண்ட தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.

துர்வாசர் இவர் சிறந்த தேவி பக்தர். லலிதாஸ்தவ ரத்னம் என்ற நூலை இயற்றியவர். இவரே இப்போதுள்ள அம்மனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர். இவருக்கே அம்மன் முதன்முதலில் காட்சி தந்திருக்கிறார். வேத வியாசர் காமாட்சியை பிரதிஷ்டை செய்தவர் என்ற கருத்தும் உள்ளது. காஞ்சி என்றாலே காமாட்சிதான் என்று சொல்லும்படி காமாட்சி அம்மனால் மகிமை பெற்ற ஊர் காஞ்சி. கா என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும் நிறைவேற்றுபவள் என்பதாலும் அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. தந்திர சூடாமணி நூலில் உள்ளபடி தேவியின் பெயர் தேவகர்பா அல்லது கீர்த்திமதி ஆகும். காமாட்சி என்ற பெயருக்கு கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள் காமாட்சி ஆவாள். காமாட்சி இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும் மலர்க் கணைகளையும் மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள். இங்கு நான்கு கரம் கொண்டு அவற்றில் பாசம் அங்குசம் அபய ஹஸ்தம் கபாலம் கொண்டு அருளாட்சி நடத்துகிறாள்.

முன்னொரு காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த வரங்கள் அளித்த சக்தியாலும் ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால் அதிக துன்பமுற்ற தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது என்று கூறி அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.

அன்னை பராசக்தி தேவி காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் கிளி வடிவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள். தேவர் களும் முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனமிரங்கிய அன்னை பந்தகாசுரனைக் கொன்று அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம் பந்தகாசுரன் கயிலாயத்தில் ஒரு இருண்ட குகையினுள்ளே இருப்பதை அறிந்து அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை பதினெட்டுக் கரங்களில் பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக உக்கிர உருவம் கொண்டாள். பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும் மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து அவனது தலையை அறுத்து ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி தான் தவம் செய்த காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.

உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பயத்தில் நடுங்கினார்கள். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை உடனே அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள். அத்தரிசனம் கண்டு மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும் முனிவர்களும் அவளைப் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள். அப்போது அன்னை அவர்களைப் பார்த்து காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும் நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பும்படி கூறியதுடன் இந்த இடத்தில் கன்றுடன் கூடிய பசு தீபம் ஆகியவை இருக்கட்டும் என்று அருளினாள். அதன்படி தேவர்களும் செய்து அழகிய பீடத்தை அமைத்தார்கள். கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்த போது அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள் கிருத யுகத்தில் சுவயம்புவ மன்வந்த்ரம் ஸ்ரீமுக வருடம் பங்குனி மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும்.

காமாட்சி அம்மன் கோயிலின் உள்ளே பிரகாரங்களும் தெப்பக்குளமும் நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக் கோயிலின் கருவறையில் காமாட்சியின் உருவம் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளது. அம்பிகையின் வலப் புறத்தில் ஒற்றைக் காலில் பஞ்சாக்னி நடுவில் நிற்கிறாள். காமாட்சியின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஶ்ரீசக்ரத்தில் ஶ்ரீ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். காமாட்சி இங்கு பரப்ரஹ்ம ஸ்வரூபினி என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால் உக்ர ஸ்வரூபினி என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால் எட்டாம் நூற்றாண்டில் இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார். காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன் அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதி கொண்டிருக்கின்றனர். கருவறை அருகே ஆதிசங்கரின் சன்னதி உள்ளன. கோவிலில் காமாட்சி 5 வடிவங்களில் வழிபடப்படுகிறார்.

  1. காமாட்சி – காமாட்சி கோவிலின் முக்கிய தெய்வம். இந்த சிலை காயத்ரி மண்டபத்திலிருந்து சன்னதியின் உள் கருவறையின் மையத்தில் அருள் பாலிக்கிறாள். காமாட்சி ஐந்து பிரம்மாக்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய நான்கு கைகளிலும் ஒரு கயிறு கோடு கரும்பு வில் மற்றும் மலர் அம்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறாள். சிலை பத்மாசனத்தில் அமர்ந்து தென்கிழக்கு முகமாக அமர்ந்திருக்கிறாள். காமாட்சியின் தத்துவத்தை பிரதிபலிக்கும்படி இங்கு உள்ள மண்டபத்தை வானவர்கள் கட்டினார்கள். மண்டபத்தின் நான்கு சுவர்கள் நான்கு வேதங்களைக் குறிக்கும். மண்டபத்தில் உள்ள இருபத்தி நான்கு தூண்கள் காயத்ரி மந்திரத்தின் இருபத்தி நான்கு எழுத்துக்களைக் குறிக்கும்.
  2. தப காமாட்சி – காமாட்சியின் இந்த வடிவத்தை பிரதான சிலைக்கு வலதுபுறம் மற்றும் பிலா வாயிலுக்கு அருகில் காணலாம். பார்வதி சிவனிடமிருந்து பிரிந்து வாரணாசி அல்லது ஹொரநாட்டில் அன்னபூர்ணேஸ்வரியாக முதலில் தோன்றி பின்னர் காத்யாயன முனிவரின் ஆலோசனையின்படி காஞ்சிபுரத்திற்கு வந்து வேகவதி ஆற்றின் அருகே உள்ள மாமரத்தடியில் சிவனை ஏகாம்பரேஸ்வரராக வணங்கி அவரை மணந்ததாக புராணங்கள் கூறுகின்றன .
  3. அஞ்சனா காமாட்சி – அரூப லட்சுமி (உருவமற்ற லட்சுமி) என்றும் அழைக்கப்படுகிறாள். அவளுடைய சன்னதி பிரதான சிலையின் இடதுபுறத்தில் வடக்கு நோக்கியும் சௌபாக்ய கணபதி சன்னதிக்கு முன்னும் அமைந்துள்ளது. புராணத்தின் படி லட்சுமி ஒரு சாபத்தின் காரணமாக இந்த இடத்தில் தனது இழந்த அழகை மீண்டும் பெற விஷ்ணுவின் அறிவுரையின் படி தவம் செய்தாள்.
  4. சுவர்ணா (தங்க) காமாட்சி – தெலுங்கில் பங்காரு காமாட்சி என்றும் அழைக்கப்படும் இந்த தெய்வத்தின் சன்னதி இரண்டாவது பிராகாரத்தில் அமைந்துள்ளது. காமாட்சியின் மூன்றாவது கண்ணிலிருந்து சிவனின் மனைவியாக ஏகாம்பரேஸ்வரராக சேவை செய்ய இந்த வடிவத்தை உருவாக்கியது. சிவனை மணந்த பிறகு அவள் ஏலவார்குழலி தேவி என்று அழைக்கப்பட்டாள். மூல விக்கிரகம் இன்று தஞ்சாவூரில் காணப்படுகிறது . முஸ்லீம் படையெடுப்புகளை அடுத்து காமாட்சிதாசரால் தங்க சிலை தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போதைய சிலை பஞ்சலோகத்தால் ஆனது. இது 5 உலோகங்களின் கலவையாகும்.
  5. உற்சவ காமாட்சி – ஊர்வலங்களின் போது வெளியே கொண்டு வரப்படும் உற்சவ காமாட்சியின் சன்னதி இரண்டாவது பிராகாரத்தில் அமைந்துள்ளது. சிலையின் இருபுறமும் சரஸ்வதி மற்றும் லட்சுமி சிலைகள் உள்ளன. பெரும்பாலான சமயங்களில் தெய்வங்கள் மற்றும் தெய்வங்கள் பொதுவாக அவர்களின் துணைவியருடன் வந்தாலும் காமாட்சி சிவனை விட சக்தி வாய்ந்தவள் என்பதால் இங்கு சிவனுக்கு சன்னதி இல்லை. பண்டாசுரனை அழிக்க நெருப்பில் இருந்து தோன்றிய திரிபுர சுந்தரி பிரம்மாவால் காமாட்சி என்ற பெயரில் உலகுக்கு காட்சியளித்தார்.

மகாவிஷ்ணுவின் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்வர் பெருமாள் திருக்கல்வனூர் திவ்ய தேசம் காமாட்சி அம்மனின் கருவறைக்கு அருகில் 7 முதல் 10 ஆம் நூற்றாண்டின் ஆழ்வாரால் சிறப்பு பெற்ற விஷ்ணுவின் கோயில் இருந்தது. இக்கோயில் சிதிலமடைந்ததால் அங்குள்ள தெய்வம் இப்போது காமாட்சி அம்மன் கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கோயில் விமானத்தின் மேல் சிற்பங்கள் உள்ளன. பெருமாளின் சன்னதி காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் அருகிலேயே இருக்கிறது. இந்த கோயிலில் துண்டீர மகாராஜா சன்னதி உள்ளது. இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவன் காமாட்சியை நாள் தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான். இவனது பக்திக்கு மகிழ்ந்த காமாட்சி தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயருடன் அவதரித்தார். ஆகாசராஜனுக்கு பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார். துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. துண்டீர மகாராஜா காமாட்சியை வணங்கிய நிலையில் காமாட்சி சன்னதிக்கு எதிரே உள்ளார்.

மகா பெரியவா தம்முடைய அருளுரையில் மாயைக்குக் காரணமான பிரம்ம சக்தி காமாட்சி தேவி. அவளே ஞானமும் அருள்பவள். அனைத்துக்கும் அவளுடைய கருணைதான் காரணம். மாயைகள் பலவற்றை அவள் நம்முடைய வாழ்க்கையில் நிகழ்த்தினாலும், அவற்றில் இருந்து விடுவிக்கிற கருணையும் அவளிடம் பூரணமாக உள்ளது. மாயையினால் நாம் உண்டாக்கிக்கொள்கிற கஷ்டங்களுக்கும் துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும் மனதும்தான். இந்திரிய சுகங்களின் வழியில் நம்முடைய மனதைச் செலுத்தி நம்முடைய ஆத்ம சுகத்தை மறந்து விடுகிறோம். பஞ்சேந்திரியங்களும் மனமும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றுக்குக் காரணம் மாயை. அந்த மாயையே இவற்றைச் சுத்தப்படுத்தி இந்திரிய விகாரங்களில் இருந்தும் மன சஞ்சலங்களில் இருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காகவே அம்பிகை காமாட்சியாக வருகிறாள் என்று அருளி உள்ளார். மேலும் காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும். இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள். பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.

அயோத்தியை ஆட்சி செய்த தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இத்தகவல் மார்கண்டேய புராணத்தில் உள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஞானிகள் அம்பிகையைப் போற்றி ஸ்லோகங்களை இயற்றி இருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசரரால் 2000 ஸ்லோகங்களாலும் திரேதாயுகத்தில் பரசுராமரால் 1500 ஸ்லோகங்களாலும் துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1000 ஸ்லோகங்களாலும் கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன். மூக கவியின் மூக பஞ்சசதீ துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் ஆகியவைகளும் உள்ளது. புகழ்பெற்ற சங்க காலத்தைப் போற்றும் பண்டைய தமிழ் இலக்கியமான பெருநாற்றுப்படையில் இந்த பழமையான கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னர் தொண்டைமான் இளந்திரையன் இக்கோயிலைக் கட்டினார். இத்திருக்கோவிலில் 1841, 1944, 1976, 1995 ஆகிய வருடங்களில் கும்பாபிஷேம் நடத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது திருக்கோவில் முழுவரும் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சியம்பதியை சக்தியின் தலைமைப் பீடம் என்றே போற்றுகிறது காஞ்சி புராணம்.

சக்தி பீடம் 1. மூகாம்பிகை கோயில்

இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் இக்கோயில் அமைந்துள்ளது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் என பெயர் பெற்றது. புராண பெயர் மூகாம்பாபுரி மற்றும் கோலாபுரம். 51 சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும். இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும் சௌபர்னிகா நதியின் தென்புறத்திலும் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூகாம்பிகை தேவி முதன்மை தெய்வமாக வழிபடப்படுகிறார். கோயில் அமைந்துள்ள நிலப்பகுதி புராண காலத்தில் துறவியான பரசுராமரால் உருவாக்கப்பட்டது. கோயில் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது.

கொல்லூரிலிருந்து 25 கிமீ தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி குடஜாத்ரி மலையாகும். இதில் 64 வகை மூலிகைகளும் 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை சர்வஞபீடம் சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் கோலமகரிஷி தவம் செய்திருக்கிறார். இவரின் தேவைக்காக அம்பாள் ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்தார். குடஜாத்ரி மலையிலிருந்து 64 நீர்வீழ்ச்சிகள் தனித்தனியாக உருவாகி பின்னர் அவை ஒருங்கிணைந்து சௌபர்ணிகா நதியாக உருவெடுத்துப் பாய்கிறது. சுபர்ணா என்ற கழுகு இந்த நதிக்கரையில் தவம் செய்து இறுதியில் முக்தி அடைந்தது. எனவே இந்த நதிக்கு சௌபர்ணிகா என்று பெயர் வந்தது. கிருதயுகத்தில் இக்கோயிலுக்கு மகாராண்யபுரம் என்றும் பெயர். இக்காலத்தில் இதன் கரையில் ஏராளமான முனிவர்கள் தவம் இருந்தனர். இந்தப் பகுதிக்குப் பாத யாத்திரையாக வந்தார் கோலன் என்கிற மகரிஷி. இதன் அமைதியான சூழல் அவருக்குப் பிடித்துப் போக அங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கி இறைவனை நோக்கிக் கடுந் தவம் இருந்தார். கோல மகரிஷி தங்கியதால் இந்தப் பகுதி கொல்லாபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் கொல்லூர் ஆனது.

கோல மகரிஷி இங்கு தவம் செய்து கொண்டிருந்த போது ​​அவரை ஒரு அரக்கன் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தான். அரக்கனின் தொந்தரவுகளை பொருட்படுத்தாத முனிவர் அரக்கனால் பாதிக்கப்படாமல் அமைதியுடன் இருந்தார். அரக்கனால் முனிவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. முனிவரை மேலும் துன்புறுத்த இந்த அரக்கனும் தன்னை யாராலும் வெல்ல முடியாத சக்திகளைப் பெற சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்தான். இந்த அரக்கனின் தீய மனதை அறிந்த சக்திதேவி சிவபெருமான் அரக்கன் முன் தோன்றிய போது அரக்கனை மூக்கனாக (ஊமையாக) ஆக்கினாள். அதனால் அரக்கனால் வரம் எதுவும் கேட்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த அரக்கன் கோல மகரிஷியை தவம் செய்ய முடியாதபடி மேலும் துன்புறுத்தத் தொடங்கினான். கோல மகரிஷி சக்திதேவியை எண்ணி பிரார்த்தனை செய்தார். சக்திதேவி அரக்கனான ஊமை மூகாசுரனுடன் போரிட்டு வென்றார். மூகாசுரன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக்கு இணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி மூகாம்பிகை என்ற பெயரில் அம்பிகை தங்கினாள்.

கோல மகரிஷியின் தவத்தின் பலனால் சிவபெருமான் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று என்றார். இறைவன் தன் துணையுடன் என்றென்றும் இங்கே வீற்றிருந்து மக்களுக்கு அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிவபெருமான் மனம் மகிழ்ந்து இதோ இந்தப் பாறையில் உனக்காக ஒரு லிங்கம் அமைக்கிறேன். இதை நீ தினமும் பூஜை செய்து வா என்று அருளினார். சிவனருளால் அங்கு ஓர் அழகிய லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கோல மகரிஷி சிவபெருமானிடம் சக்தி இல்லாத சிவனை நாங்கள் எப்படி வழிபடுவது? என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் இந்த லிங்கத்தின் மத்தியில் உள்ள சுவர்ண ரேகையைப் பார். இதன் இடப் பாகத்தில் பார்வதியும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தாயான சரஸ்வதியும் செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமி ஆகிய மூவரும் அரூபமாக இருப்பார்கள். வலப்புறம் பிரம்மா விஷ்ணு ஆகியோருடன் நானும் இருப்பேன் என்று கூறி மறைந்தார். சிவபெருமான் அருளியவாறு சுவர்ணரேகை ஜொலிக்கும் அந்த ஜோதி லிங்கத்தை கோல மகரிஷி உட்பட மற்ற முனிவர் களும் பூஜித்து வந்தார்கள்.

பாரத தேசம் முழுதும் புனித யாத்திரை மேற்கொண்ட ஆதிசங்கரர் கொல்லூருக்கு வந்தபோது மக்கள் அவரிடம் சுவாமி தங்க ரேகை மின்னும் சிவலிங்கத்தில் அம்பாள் அரூப வடிவில் இருக்கிறாள். ஆனால் மூகாம்பிகை அன்னையின் முகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே என்று முறையிட்டனர். ஆதிசங்கரர் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். அப்போது அம்பாள் அவருக்கு காட்சி கொடுத்தாள். பத்மாசனத்தில் வீற்று இரு கரங்களில் சங்கு சக்கரம் மற்ற இரு கரங்களில் ஒரு கரம் பாதங்களில் சரணடையத் தூண்ட மற்றது வரம் அருளி வாழ்த்தும் கோலத்தில் அன்னை தோற்றமளித்தாள். தன் முன் தோன்றிய அம்பாளின் உருவத்தை தேர்ந்த ஸ்தபதியிடம் விவரித்து விக்கிரகம் செய்யப் பணித்தார் ஆதி சங்கரர். அதன்படி அம்பாளின் அழகிய உருவம் பிரமிப்பூட்டும்படி உருவானது. சுவர்ண ரேகை லிங்கத்தின் பின்னால் மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஆதிசங்கரர் அருளியிருக்கிறார். கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே வகுத்து அருளினார். இன்று வரை அவை சற்றும் மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மூகாம்பிகை ஆதிசங்கரருக்குப் காட்சி கொடுத்த பிறகு அவர் இயற்றியதுதான் சௌந்தர்ய லஹரி.

கோயிலின் மூலஸ்தானத்தில் மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையை தன் திருவடியை சுட்டிக்காட்டும் படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் பார்வதி மகாலட்சுமி சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அமர்ந்தபடி கருவறையில் வீற்றுள்ளாள். ஐம்பொன்னால் ஆன காளி சரஸ்வதி சிலைகள் மூகாம்பிகையின் இருபுறமும் உள்ளார்கள். அன்னை அவ்வப் பொழுது நவமணியால் அலங்கரிக்கப்படுகிறார். மார்பின் இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. மூகாம்பிகைக்கு நெற்றி கண்கள் மூக்கு காது ஆகியவற்றில் விலை உயர்ந்த ரத்தினங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு வருகிறது. விசேஷ காலங்களில் அன்னையின் திருமார்பில் அணிவிக்கப்படும் பச்சைக்கல் அட்டிகை சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் கெதளி ராஜ வம்சத்தை சேர்ந்த அரசன் ஒருவன் தேவிக்கு காணிக்கையாக அளித்த ஒன்றாகும். இதன் விலை மதிப்பிட முடியாதது ஆகும். இத்திருவுருவம் ஆதி சங்கரரால் பஞ்சலோகத்தில் தனக்கு கிடைத்த காட்சிப்படி அமைக்கப் பெற்றதாகும். அதற்கு முன்னர் இங்குச் சிவலிங்கம் ஸ்ரீ சக்கரமும் மட்டுமே இருந்து வந்தன. பரமேசுவரர் தனது கால் விரலின் உதவியால் ஸ்ரீசக்கரத்தை வரைந்தார் என்று புராண செவி வழி செய்திகள் உள்ளது. மூகாம்பிகையின் முன் தரையோடு தரையாக சிவலிங்கம் உள்ளது. சுயம்பாகத் தோன்றிய அந்த சிவலிங்கம் பொற் கோடால் இரு பிளவுபட்டாற் போன்றும் இடப்பாகம் பெரிதாகவும் அமையப் பெற்றுள்ளார். உச்சிப் பொழுதின் போது கண்ணாடியின் மூலமாக இந்த லிங்கத்தின் மீது பிரதிபலிக்கச் செய்தால் அப்பொற்கோட்டைப் பார்க்கலாம். அசையாத சக்தியாக சிவமும் அசையும் சக்தியாக உடையவளும் இச் சிவலிங்கத்தில் ஒன்றி உள்ளனர். சுயம்பு லிங்கத்திற்கும் விசேஷ பூஜை காலங்களில் அணிவிப்பதற்கு என்றே தனியாக அணிவிக்கப்பட ஆபரணங்கள் உள்ளது.

கோயில் கருவறையில் மூகாம்பிகை தேவியின் மூல விக்கிரகம் பக்கத்தில் சிறிய இரண்டு தேவிகளின் விக்கிரங்கள் உள்ளது. இதில் ஒரு தேவியின் திருவுருவத்தை தினத்திற்கு மூன்று வேளை அதாவது காலை உச்சி வேளை இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் ஆலயத்தின் உள்ளேயுள்ள பிரகாரத்தைச் சுற்றி திருவுலா வருவது வழக்கம். இதற்கு சீவேலி என்று பெயர். உட்பிரகாரத்தில் சீவேலி வருவது போன்று குறிப்பிட்ட விசேஷ தினங்களில் அம்பாள் ஆலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய தெருக்களில் நகர்வலம் வருவதும் உண்டு. உட்பிரகாரத்தில் பலி பீடங்களுக்கு நைவேத்யம் படையலைத் தலைமை பூசாரி படைத்தவாறு அதற்குரிய பூஜைகளைச் செய்தவாறு செல்ல அதன் பின்னால் அம்மன் கொலுவிருக்கும் உட்பிரகாரத்திலேயே சீவேலி நடைபெறும். உட்பிரகாரத்தின் சீவேலி முடிந்ததும் வெளி பிரகாரத்தில் தேவியைத் தலையில் சுமந்தவாறு ஒரு முறையும் நீண்ட பல்லக்கில் ஒரு முறையும் பின்னர் வெள்ளி தகடு வேய்ந்த சிறிய பல்லக்கில் ஒரு முறையும் தேவி சீவேலியாக 3 தடவை வலம் வருவாள். காலை இரவு ஆகிய இரு நேரங்களில் மிக பெரிய மரத்தால் ஆன ரதத்தில் அம்மனை அமர்த்தி பக்தர்கள் வெளி பிரகாரத்தில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். சீவேலி சமயத்தில் நகாரா என்ற இரட்டை சிறிய முரசும் நமது ஊரில் உள்ள நாகஸ்வரம் வகையை சார்ந்த சற்றே பெரிய செனாய் என்ற இசைக்கருவியும் வாசிக்கப்படும். உடன் ஒத்து என்ற ஸ்ருதி வாத்தியக் கருவியும் இசைக்கப்படும்.

கோயிலில் பஞ்சமுக கணபதி பார்த்தேஸ்வரர் பிராணலிங்கேஸ்வரர் சந்திரமவுலீஸ்வரர் நஞ்சுண்டேஸ்வரர் துளசி கிருஷ்ணன் பெருமாள் அனுமன் சுப்ரமணியர் வீரபத்திரர் சன்னதியும் நாகக் கடவுள்களுக்கு உபசன்னதிகளும் உள்ளன. தீர்த்தம் அக்னி தீர்த்தம் காசிதீர்த்தம் சுக்ளதீர்த்தம் மதுதீர்த்தம் கோவிந்ததீர்த்தம் அகஸ்தியர்தீர்த்தம் அர்ச்சனைதீர்த்தம் குண்டுதீர்த்தம். இக்கோவிலின் கருவறை விமானம் முழுவதும் தங்க தகடுகளால் வேயப்பட்டதாகும். இக்கோயில் அம்பாளின் கொடிக் கம்பத்தை ஒட்டி விளக்குத்தூண் இருக்கிறது. ஒரே கல்லினால் ஆன அழகிய தூண் இது. இதில் ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம். அன்னையின் கருவறை எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் அம்மனின் சிம்ம வாகனம் உள்ளது. கருவறையின் இருபுறமும் தியான மண்டபம் உள்ளது. பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்யலாம். முன் வாயிலைக் கடந்து மீண்டும் வெளிப்பிரகாரம் சுற்றினால் ஆலயத்தில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் மேற்குப் பார்த்து அருள் பாலிக்கிறார். முருகன் சன்னதிக்கு அடுத்திருப்பது சரஸ்வதி மண்டபம். இங்குதான் ஆதி சங்கரர் மூகாம்பிகையை நோக்கி மனமுருகி இங்கு அமர்ந்து சவுந்தர்ய லஹரியை எழுதி அரங்கேற்றினார். இந்த சரஸ்வதி மண்டபம் கலா மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம் அன்று ஆதிசங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்றும் சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஆதிசங்கரரின் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

கோயில் மேற்கு கோபுரவாசல் அருகில் வடமேற்கு மூலையில் கிணறு உள்ளது. அதற்கு முன் ஆஞ்சநேயர் சன்னதி. இந்த தனிச்சன்னிதி வாயு திசையில் அமைந்துள்ளது. அதனை அடுத்து உள்ளது விஷ்ணு சன்னதி. கேரள பக்தர்கள் இந்த விஷ்ணுவை குருவாயூரப்பன் என்றே வணங்குகின்றனர். வடகிழக்கு மூலையில் துளசி மாடம். அதனை அடுத்து அம்பாளின் பரிவார தேவதைக்கு எல்லாம் தளபதியான வீரபத்திரர் சன்னதி அமைந்துள்ளது. வீரபத்திரர் இந்த தலத்திற்கு ரட்சா அதிகாரி. அன்னைக்குச் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் இவருக்கும் உண்டு. இவரின் எதிரே ஆஞ்சநேயர் இருக்கிறார்.

ஆதிசங்கரர் அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்து மூகாம்பிகையை சரஸ்வதியாக பாவித்து வணங்கி கலா ரோகணம் பாடி அருள் பெற்றார். ஒரு முறை ஆதிசங்கரர் இங்கு தவம் புரிந்து எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்தார். அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூகாம்பிமை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் புஷ்பாஞ்சலி ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப் படுவதில்லை.

மூகாம்பிகைக்கு வருடத்தில் நான்கு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படுகின்றன. அவை ஆனி மாதத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா. ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை விழா. புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா. மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகும். சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. கிழக்கு கோபுர வாயிலை 1996 ஆம் ஆண்டு புனர் நிர்மானம் செய்து பழைய அமைப்பு மாறாமல் கருங்கற்களால் கட்டியுள்ளார்கள். தேவியின் வலக் கையில் உயர்த்திப் பிடித்திருக்கும் வீர வாள் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அளித்தது. அந்த வாள் ஒரு கிலோ தங்கத்தில் செய்யப்பட்டு வெள்ளியால் அமைக்கப்பட்ட உறையுடன் கூடியது. இக்கோயிலின் மகிமை பற்றி கந்த புராணத்தில் உள்ளது. அங்குள்ள சுயம்பு லிங்கத்தில் சக்கர வடிவத்தில் பரப்பிரம்ம சொரூபியான பராசக்தி சகல தேவதைகளுடன் எழுந்தருளியுள்ளதாக சிவபெருமான் முருகனுக்கு விளக்குவதாகவும் அதைக் கேட்ட முருகன் அவர்களை வழிபட அத்தலத்திற்கு வந்ததாகவும் கந்த புராணத்தில் உள்ளது.

சக்தி பீடம் – முன்னுரை

சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும். தேவி பாகவதம் என்ற நூல் அன்னைக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும் அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானவை என்று கூறுகிறது. ஆனால் தந்திர சூடாமணியில் 51 சக்தி பீடங்கள் என்று உள்ளது. இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 51 சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும் 18 சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும் 4 சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியா விட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி. 1. அஸ்ஸாம் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில் 2. கல்கத்தாவின் காளிகாட் காளி கோவில் 3. ஒடிசாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில் 4. ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி ஆகிய நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும். எந்த சக்தி பீடத்திற்குச் சென்றாலும் அங்குள்ள பைரவரையும் வணங்க வேண்டும் என்பதும் ஒரு நியதியாகும். ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் (தாட்சாயிணியின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்களே சக்தி பீடமாகும்.

பிரம்மாவின் புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் பிரஜாபதி பட்டத்துடன் ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும் வரமாகப் பெற்றான். மேலும் உலகத்திற்கே தாயான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான். தன்னுடைய வரத்தின் பயனால் எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட தானே ஈஸ்வரன் என்று தட்சன் எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான். ஹரித்வாரில் அமைந்துள்ள கனகல் என்னும் தலத்தில் யாகம் தொடங்கப்பட்டது. தனது தந்தையான தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணிய தாட்சாயிணி யாக சாலையில் தோன்றி அறிவுரை கூறினாள். தட்சனோ தாட்சாயிணியை அவமதித்ததோடு ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயில் குதித்து யாகத்தை நிறுத்தி தன் உயிரை விட்டாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில் சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை சுமந்த படி ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் தன் ஆட்டத்தை நிறுத்தினார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின.

சனத்குமாரர்கள் எட்டு பேர் சதாசிவனை நோக்கித் தவம் செய்தனர். அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் ரிஷபாரூடராகத் தோன்றினார். ஆனாலும் ஆழ்ந்த தியானத்திலிருந்து சனத்குமாரர்கள் கண் விழித்துப் பார்க்கவில்லை. அவர்களை எழுப்ப சிவன் தன் கையிலுள்ள டமருகத்தை (உடுக்கை) வேகமாய் அடித்தார். உடுக்கையின் சத்தத்தில் சனத்குமாரர்கள் கண் விழித்துச் சிவனடி பணிந்தனர். இதனைச் சிவமகா புராணம் சொல்கிறது. அந்த உடுக்கையிலிருந்து டம்டம் என்று எழுந்த நாதமே 51 அட்சர எழுத்துக்களாயின. இவை 51 இடங்களில் எரி நட்சத்திரம் போல் தெறித்து விழுந்தன. இந்த 51 அட்சர எழுத்துக்கள் விழுந்த இடங்களிலேயே தேவியின் உடல் பகுதிகள் விழுந்தன. ஆகவே இவற்றிற்கு 51 அட்சர சக்தி பீடங்கள் என்று பெயர் வந்தது. இந்த அட்சர சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை மேரு தந்திரம் என்னும் நூல் கூறுகிறது. நித்யோத்சவம் வாமகேஸ்வர தந்த்ரம் போன்ற நூல்களும் சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகின்றன.

  1. தேவி பாகவதம் கந்த புராணம் பத்ம புராணம் ஆகிய நூல்களில் அம்பாளுக்கு 70 முதல் 108 வரை சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
  2. வேதவியாசரின் தேவிபாகவதம் 108 சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.
  3. காளிகா புராணம் நான்கு ஆதி சக்தி பீடங்கள் இருப்பதாகக் கூறுகிறது.
  4. ஆதி சங்கராச்சாரியாரின் அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரம் 18 மஹா சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.
  5. தந்திர சூடாமணி என்ற நூல் 51 அட்சர சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது. 52 என்று கூறுபவர்களும் உண்டு.
  6. லலிதா ஸகஸ்ரநாம ஸ்தோத்திரத்திலும் பீடங்களும் அங்க தேவதைகளும் என்ற பகுதியில் சக்தி பீடங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.
  7. மார்க்கண்டேய புராணமும் திருவிளையாடல் புராணமும் 64 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்த 64 பீடங்களும் தேவி பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

எத்தனை சக்தி பீடங்கள் உள்ளன என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது போலவே எது சக்தி பீடம் என்பதிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சந்தேகங்களும் உள்ளன. உதாரணமாக தந்த்ர சூடாமணியில் இரண்டாவதாகக் கூறப்படும் சர்க்கரரா பீடம் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவிலா அல்லது பாகிஸ்தானின் சிவஹர்கரையிலுள்ள கோவிலா என்ற சந்தேகம் உள்ளது. இரண்டில் ஒன்றை மட்டும் சக்தி பீடமாகக் கொள்ளாமல் இரண்டுமே இங்கு தரப்பட்டுள்ளது. சக்தி பீடம் என்பதற்கான பெரும்பான்மை ஆதாரம் கொண்ட கோவிலை முதலாவதாகவும் மிகக் குறைந்த ஆதாரங்களைக் கொண்ட கோவிலைக் கடைசியாகவும் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன்படி சர்க்கரரா பீடத்திற்கு கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில் முதன்மையானதாகவும் சிவஹர்கரை இரண்டாம் பட்சமாகவும் தரப்பட்டுள்ளது. எந்த சந்தேகமும் இல்லாமல் இது சக்தி பீடம்தான் என்று உறுதியாகக் கூறப்படும் கோவில்கள் மிகச் சிலவே. அவற்றில் முதன்மையானது மற்றும் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்படும் தலம் அஸ்ஸாமின் காமாக்யா கோவிலாகும். இந்தக் குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களுக்கான மூன்று முக்கியக் காரணங்கள் 1. உள்ளூர் மக்கள் தங்கள் பகுதியிலுள்ள சக்தித் தலங்கள் மீது கொண்ட பக்தியும் ஈடுபாடும் 2. நாளடைவில் பெருகிய சக்தித் தலங்களும் கலாச்சார மாற்றங்களும் 3. புராணங்கள் மற்றும் தந்திர சூடாமணியில் உள்ள பழைய புராதனப் பெயர்களுக்கும் தற்போதுள்ள பெயர்களுக்கும் உள்ள மாறுதலும் வேறுபாடுகளும். மேலும் சில கோயில்கள் உப சக்தி பீடங்களாக கருதப்படுகிறது. உப பீடங்கள் என்பவை மேற்கண்ட எந்த வகைப்பாட்டிலும் வராத சக்தி பீடங்களாகும்.

51 சக்தி பீடங்கள்

  1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்) கர்நாடகா
  2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்) தமிழ்நாடு
  3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
  4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்) உத்திரபிரதேசம்.
  5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்) மத்தியபிரதேசம்.
  6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்) தமிழ்நாடு
  7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்) தமிழ்நாடு
  8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்) தமிழ்நாடு
  9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்) தமிழ்நாடு
  10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்) தமிழ்நாடு
  11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்) மத்தியபிரதேசம்
  12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்) தமிழ்நாடு
  13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்) காஷ்மீர்
  14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்) மிர்ஜாப்பூர்
  15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்) ஆந்திரா
  16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்) இமாசலபிரதேஷ்
  17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்) ஆந்திரா
  18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
  19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
  20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்) தமிழ்நாடு
  21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்) கேரளா
  22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
  23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்) ஹரியானா
  24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
  25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
  26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
  27. மாணிக்காம்பாள்-திராக்ஷராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
  28. அம்பாஜி-துவாரகை-பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
  29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்) தமிழ்நாடு
  30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
  31. லலிதா-ஈங்கோய் மலை குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
  32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
  33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
  34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்) தமிழ்நாடு
  35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்) தமிழ்நாடு
  36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்) தமிழ்நாடு
  37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்) தமிழ்நாடு
  38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்) தமிழ்நாடு
  39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்) தமிழ்நாடு
  40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
  41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
  42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
  43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
  44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
  45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
  46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
  47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
  48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
  49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
  50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உத்திரபிரதேசம்
  51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்