நாயன்மார் – 2. அப்பூதியடிகள்

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.

திருவையாறிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். திருநாவுக்கரசர் பெருமானை பார்க்காமலேயே அவரைத் தன் குருவாக ஏற்று அவரின் பெயரிலேயே அறச்சாலைகள் தொடங்கி தொண்டு செய்து வந்தார். அமைதி வடிவானவர் பொய் களவு காமம் கோபம் இவற்றையெல்லாம் நீக்கியவர். இத்தகைய அருந்தவத்தினரான அப்பூதி அடிகள் அப்பரடிகளின் திருத்தொண்டின் மகிமையையும் எம்பெருமானின் திருவருட் கருணையையும் கேள்வியுற்று அவர்மீது எல்லையில்லா பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். தாம் பெற்ற செல்வங்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அது மட்டுமல்ல அவரால் கைங்கரியம் செய்யப்பட்ட தண்ணீர்ப் பந்தல்கள், மடங்கள், சாலைகள், குளங்கள் அனைத்திற்கும் திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். திருநாவுக்கரசரை நேரில் பார்க்காமலேயே அவர் தம் திருவடிகளை போற்றி வணங்கி அவரிடம் பேரன்புடையவராய் விளங்கினார். ஒருநாள் திங்களூர் வந்த திருநாவுக்கரசர் தன் பெயரிலேயே கல்விச் சாலைகள், சோலைகள், தண்ணிர்பந்தல் ஆகியவை கண்டு ஆச்சரியப்பட்டு அங்கிருந்த பணியாளரை யார் இது போன்று தொண்டு செய்வது என வினவினார். அங்கிருந்தவருள் ஒருவர் இப்பந்தலுக்கு இப்பெயரை இட்டவர் அப்பூதி அடிகள் என்பவர் தான். அவர் தான் இதை அமைத்து மக்களுக்கும் அடியார்களுக்கும் நற்பணியாற்றுகிறார். அதுமட்டுமல்ல அவரால் அமைக்கப்பட்டுள்ள சாலைகளுக்கும், குளங்களுக்கும் இந்தப் பெயரையே சூட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் கூறினார். திருநாவுக்கரசருக்கு இவற்றையெல்லாம் கேட்டு மீண்டும் அவர்களிடம் அப்பூதி அடிகள் யார்? அவர் எங்குள்ளார் என்று கேட்டார். அவர்கள் அப்பரடிகளை அழைத்துக்கொண்டு அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு புறப்பட்டனர்.

சிவநாம சிந்தையுடன் இல்லத்தில் அமர்ந்து இருந்த அப்பூதி அடிகள் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருக்கும் அடியவர்களின் திருக்கூட்டத்தைக் கண்டார். சிவனடியார் எவரோ தமது இல்லத்திற்கு எழுந்தருளிகின்றார் என்பதறிந்து அப்பூதி அடிகள் வாயிலுக்கு ஓடிவந்தார். இரு கரங்கூப்பி வணங்கினார். திருநாவுக்கரசரும் அவர் வணங்கும் முன் அவரை வணங்கினார். அடியார்களை வழிபடும் முறையை உணர்ந்திருந்த அப்பூதி அடிகளார் திருநாவுக்கரசரை உள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரச் செய்தார்.சுவாமி தாங்கள் இந்த எளியோன் இல்லத்திற்கு எழுந்தருளியது எமது தவப்பயனே அருள் வடிவமான் அண்ணலே அடியார்க்கு யாம் ஏதாவது பணி செய்தல் வேண்டுமோ? என்று உளம் உருக வினவினார். திருச்சடையானைத் திருப்பழனத்திலே தரிசித்து விட்டு வருகிறேன். திங்களூர் முடியானை வணங்கும் பொருட்டு தங்கள் ஊர் வந்தேன். வரும் வழியே உங்களால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்ப் பந்தலைக் கண்டேன் அங்கு சிறிது நேரம் இளைப்பாறினேன். பின்னர் தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். தாங்கள் அறத்தில் சிறந்தவர். அடியாரைப் போற்றும் திறத்தில் மேம்பட்டவர். சிறந்த பல தர்மச் செயல்களைச் செய்து வருபவர் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். உடனே தங்களைப் பார்த்துப் போகலாம் என்று வந்தேன். தங்கள் சித்தம் என் பாக்கியம் தாங்கள் அமைத்துள்ள தண்ணீர்ப் பந்தல்களுக்கும் சாலைகளுக்கும் குளங்களுக்கும் தங்கள் பெயரை இடாமல் மற்றொருவர் பெயரை வைத்திருப்பதன் உட்கருத்து யாது என்பதனை யாம் அறிந்து கொள்ளலாமா என்று கேட்டார்.

திருநாவுக்கரசர் பெயரை மற்றொருவர் பெயர் என்று அடியார் சொன்னதைக் கேட்டு மனம் கலங்கினார் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் பெருமையை உணராமல் இந்த அடிகள் இப்படி ஒரு அபச்சார வார்த்தையை மொழிந்து விட்டாரே என்பதை எண்ணிச் சற்று சினம் கொண்டார். அவர் கண்களிலே கோபமும் துக்கமும் கலந்து தோன்றின. வாய் நின்றும் வார்த்தைகள் சற்று கடுமையாகவே வெளிப்பட்டன. அருமையான சைவத்திருக்கோலம் பூண்டுள்ள தாங்களே இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா? சமணத்தின் நாசவலையிலே நெறி இழந்த மன்னனுக்கு அறிவொளி புகட்டியவர். சைவத்தின் சன்மார்க்க நெறியை உலகோர்க்கு உணர்த்தியவர். இறைவன் திருவடியின் திருத்தொண்டால் இம்மையிலும் வாழலாம் என்ற உண்மை நிலையை மெய்ப்பித்து அருளிய ஒப்பற்ற தவசீலர் திருநாவுக்கரசர். அப்பெருமானின் திருப்பெயரைத்தான் யாம் எங்கும் சூட்டியுள்ளோம் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே. கொந்தளி்க்கும் ஆழ்கடல் அவருடன் கல்லைக் கட்டிப் போட்ட போது கல்லே தெப்பமாக மாறி அவரை கரை ஏற்றின. கருணை வடிவானவரின் பெருமையை அறியாதவர் இந்திருவுலகில் யாருமேயிருக்க நியாயமில்லையே எம்பெருமானே இப்படியொரு சந்தேகத்தை இன்று கேட்க எம் காதுகள் என்ன பாவம் செய்தனவோ? என் தேவருக்கு இப்படியொரு நிலை தங்களைப் போன்ற அடியார்களாலேயே ஏற்படலாமா? என்றெல்லாம் பலவாறு சொல்லி வருந்தினார் அப்பூதி அடிகளார். அடிகளார் தம் மீது கொண்டுள்ள வியக்கத்தக்க பக்தியையும் அன்பையும் கண்டு அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளைப் பார்த்து இறைவன் அருளிய சூலை நோய் ஆட்கொள்ள சமணத்திலிருந்து மீண்டு சைவத்திற்கு வந்து வாழ்வு பெற்ற சிறுமையோனாகிய திருநாவுக்கரசன் யானே என்றார்.

திருநாவுக்கரசன் சொன்னதை கேட்டு அப்பூதியடிகள் மெய் மறந்தார். அவர் கையிரண்டும் தானாகவே அவரை வணங்கின. கண்கள் குளமாகி அருவியாகி ஆறாகி ஓடின. உரை குழறியது. மெய் சிலிர்த்தது. கண்ணற்றவன் கண் பெற்றதுபோல் பெருமகிழ்ச்சி கொண்ட அப்பூதியடிகள் அன்பின் பெருக்கால் திருநாவுக்கரசரின் மலர் அடிகளில் வீழ்ந்து இரு கைகளாலும் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அப்பர் அடிகளும் அப்பூதியடிகளை வணங்கி ஆலிங்கனம் செய்து கொண்டார். இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். அப்பூதியடிகளாரின் இல்லததில் கூடியிருந்த அன்பர்கள் திருநாவுக்கரசரைப் பணிந்தனர். அவரது அடக்கத்தையும் பெருமையையும் வானளாவப் புகழ்ந்தனர். கைலாச வாசனே நேரில் வந்ததுபோல் பெருமிதம் கொண்ட அப்பூதியடிகள் சற்று முன்னால் தாம் சினத்தோடு பேசியதை மன்னிக்கும் படி திருநாவுக்கரசரிடம் கேட்டார். அப்பூதியார் உள்ளமும் உடலும் பொங்கிப் பூரிக்க உள்ளே ஓடினார். மனைவி மக்களை அழைத்து வந்தார். எல்லோரும் சேர்ந்து நாவுக்கரசரின் மலரடியைப் பன்முறை வணங்கினர். திருநாவுக்கரசரை வழிபாட்டிற்கு அழைத்து வந்து பாத கமலங்களைத் தூய நீரால் கழுவிப் புத்தம் புது நறுமலரைக் கொட்டிக் குவித்து அவ்வடிகளை வணங்கினார். அவரது பாதங்களைக் கழுவிய தூய நீரைத் தம் மீதும் தம் மனைவி மக்கள் மீதும் தெளித்துக் கொண்டார். தானும் பருகினார். திருநாவுக்கரசர் அவ்வடிகளின் அன்பிற்குக் கட்டுப்பட்டு உலகையே மறந்தார். பிறகு திருநீற்றை எடுத்து அப்பூதி அடிகளுக்கும் அவர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அளித்தார். அடிகளும் அவர்தம் குடும்பத்தினரும் நெற்றி முழுமையும் மேனியிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டார். அடிகள் திருநாவுக்கரசரிடம் ஐயனே எமது இல்லத்தில் உணவு அருந்தி எமக்கு அருள் புரிய வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி நின்றார். அங்ஙனமே ஆகட்டும் என்று அடியாரின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்தார் திருநாவுக்கரசர்.

திருநாவுக்கரசர் சம்மதிக்கவே அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் அகமகிழ்ந்தார்கள். அவரது மனைவி அறுசுவை அமுதிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள். சற்று நேரத்தில் நால்வகையான அறுசுவை உண்டி தயாரானது. அப்பூதி அடிகளாரின் மனைவியார் பெரிய திருநாவுக்கரசிடம் வாழை இலை அரிந்து வருமாறு பணித்தாள். அன்னையாரின் கட்டளையை கேட்டு மூத்த திருநாவுக்கரசு இலை எடுத்து வரத் தோட்டத்திற்கு விரைந்தோடினான். பின்புறம் அமைந்திருந்த தோட்டத்திற்குச் சென்ற அக்குமாரன் பெரியதொரு வாழை மரத்திலிருந்து குருத்தை அரியத் தொடங்கினான். அப்பொழுது வாழை மரத்தின் மீது சுற்றிக் கொண்டிருந்த கொடிய பாம்பு ஒன்று அச்சிறுவனின் கையை வளைத்துக் கடித்தது. பயங்கரமாக அலறினான். இலையும் கையுமாக வீட்டிற்குள்ளே ஓடினான். பெற்றோரிடம் இலையைக் கொடுப்பதற்கும் விஷம் உடலெங்கும் பரவி பாலகன் சுருண்டு விழுந்து உயிரை விடுவதற்கும் சரியாக இருந்தது. பெற்றோர்கள் ஒருகணம் துணுக்குற்றார்கள். மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட உணர முடியாத நிலையில் சற்று நேரம் செயலற்று நின்றார்கள். நீலம் படிந்த மகனின் உடம்பைப் பார்த்ததும் பாம்பு கடித்து இறந்தான் என்பதை உணர்ந்தனர். பெற்றோர்கள் உள்ளம் பதைபதைத்துப் போயினர். அவர்களுக்கு அலறி அழ வேண்டும் போல் இருந்தது. துக்கத்தை அடக்கிக் கொண்டனர். மகனின் உயிரைவிடத் தொண்டரை வழிபட வேண்டியது தான் தங்களது முக்கியமான கடமை என்று மனதில் கொண்டனர். வந்திருக்கும் தொண்டருக்குத் தெரியாதவாறு மூத்த திருநாவுக்கரசரின் உடலைப் பாயால் சுற்றி ஒரு சூலையில் ஒதுக்கமாக வைத்தனர். சோகத்தை அகத்திலே தேக்கி முகத்திலே சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டனர். தடுமாற்றம் சற்றுமின்றி முகம் மலர அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை அமுதுண்ண அழைத்தார். அவர் தம் மலரடிகளைத் தூய நீரால் சுத்தம் செய்து ஆசனத்தில் அமரச் செய்தார்.

ஆசனத்தில் அமர்ந்து அடிகளார் அனைவருக்கும் திருநீறு அளிக்கும் போது மூத்த திருநாவுக்கரசரைக் காணாது எங்கே உங்கள் மூத்த புதல்வன் என்று கேட்டார். அப்பூதி அடிகள் என்ன சொல்வது என்பது புரியாது தவித்தார். கண் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். திருநாவுக்கரசர் திருவுள்ளத்தில் எம்பெருமானின் திருவருட் செயலால் இனந்தெரியாத தடுமாற்றம் ஏற்பட்டது. மூத்த மகனைப் பற்றி்க் கேட்டதும் அடிகளார் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைக்கண்ட திருநாவுக்கரசர் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை மட்டும் குறிப்பால் உணர்ந்து கொண்டார். மீண்டும் மூத்த மகன் எங்கே? என்று கேட்டார். அப்பூதி அடிகளால் உண்மையை மறைக்க முடியவில்லை. நடந்த எல்லா விவரத்தையும் விளக்கமாகக் கூறினார். செய்தியை கேட்டு மனம் வருந்திய அப்பரடிகள் என்ன காரியம் செய்தீர்கள் என்று அப்பூதி அடிகளை கடிந்து கொண்டே மூத்த திருநாவுக்கரசின பிணத்தைப் பார்க்க உள்ளே சென்றார். பார்த்தார் திடுக்கிட்டார் மனம் வெதும்பினார். உடனே இறந்த பாலகனை எடுத்துக் கொண்டு திருக்கோயிலுக்கு வாருங்கள் என்று கூறியவாறு கோயிலுக்குப் புறப்பட்டார். அப்பூதி அடிகள் பாலகனைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார். இச்செய்தி கேட்டு ஊர் மக்களும் திரண்டனர். திங்களூர் பெருமானை திருநாவுக்கரசர் மெய் மறந்து உருகிப் பணிந்தார். ஒன்று கொல்லாம் என்னும் திருப்பதிகத்தை திருநாவுக்கரசர் மெய்யுருகி பாடினார். திருநாவுக்கரசரின் பக்தியிலே பரமனின் அருள் ஒளி பிறந்தது. மூத்த திருநாவுக்கரசு துயின்று எழுந்திருப்பவன் போல் எழுந்தான். அப்பரடிகளின் காலில் விழுந்து வணங்கினான். அப்பரடிகளின் மகிமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினார். அவரது பக்திக்கும் அருளுக்கும் அன்பிற்கும் தலை வணங்கி நின்றனர். ஆலயத்துள் கூடியிருந்து அன்பர் கூட்டம் திருநாவுக்கரசரை கொண்டாடி போற்றியது. எல்லோரும் அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு வந்தனர். எல்லோரும் ஒருங்கே அமர்ந்து திருநாவுக்கரசரோடு சேர்ந்து அமுதுண்டனர். அப்பூதி அடிகள் திருநாவுக்கரசருடன் அமுதுண்ணும் பேறு பெற்றோமே என மகிழ்ந்தார். திருநாவுக்கரசர் சில காலம் அபபூதி அடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பின்னர் திருப்பழனம் பொழுது அப்பூதி அடிகளின் திருத் தொண்டினையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அப்பூதி அடிகள் நிலவுலகில் அடியார்களுக்குத் திருத்தொண்டு பல புரிந்தவாறு பல்லாண்டு வாழ்ந்து முடிவில் எம்பெருமானின் சேவடி நீழலை அடைந்தார்.

குருபூஜை: அப்பூதியடிகள் நாயனாரின் குருபூஜை தை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

சித்தி

ஒரு யோகி தன் குருவிடம் சென்று நான் பதினான்கு வருடங்கள் காட்டில் தனியாக இருந்து தவம் செய்து நீரின் மேல் நடக்கும் சித்தியை அடைந்திருக்கிறேன் என்றான். அதைக் கேட்ட குருவானவர் அவனைப் பார்த்து மகனே பதினான்கு வருடங்களையும் வீணாக்கி விட்டாயே ஒன்றரையணா கொடுத்தால் ஓடக்காரன் உன்னை நீரின் மேல் கொண்டு போய் அக்கரை சேர்ப்பானே நீ அடைந்த சித்தி ஒன்றரையணா மதிப்புத் தான் என்றார் திருவடியை அடைய வழி சித்தி அடையும் ஆசையைக் கொண்டு யாரும் காசை வீணாக்க வேண்டாம். இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்ற நோக்குடன் உண்மையான பக்தி செய்யுங்கள். அற்புதங்களைக் காட்டி மக்களைக் கவர நினைக்கும் யோகிகளிடம் செல்ல வேண்டாம் என்பது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமொழி.

நாயன்மார் – 1. அதிபக்தர்

சோழ நாட்டின் துறைமுக நகராக நாகபட்டினம் விளங்கிய காலம். நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபக்தர் இருந்தார். அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும்  தவறாது சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து வந்தார்.

ஒரு சமயம் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபக்தர் பசியொடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழமையாக நிகழ்ந்தது. ஆயினும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார்.

அதிபக்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பாக இருந்தது. அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபக்தரின் கூறினார்கள். அன்றைய நாளில் அம்மீன் ஒன்றே கிடைத்தமையால், அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு முக்தியளித்தார்.

தங்க மீன் அர்ப்பணிக்கும் விழாஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது. அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்கிறது.
அதிபத்த நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

மனம்

நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்றான் அவன்.

என்ன காரணம்? என்று கேட்டார் ஒரு பெரியவர். மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள் உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான் என்றார் பெரியவர்.

அப்படியா சொல்கிறீர்கள்? அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?

மனதைப் புரிந்து கொள். அது போதும்.
எப்படிப் புரிந்து கொள்வது? என்றான் அவன்.

இந்தக் கதையைக் கேள் என்று அவர் சொன்னார். ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவுமில்லை வருந்தவுமில்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை துன்பமுமில்லை அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

Image result for பெரியவர் இளைஞர்"

கற்சிற்பம்

கற்சிற்பம் பிரதிஷ்டைக்குப் பின் கடவுளாவது எப்படி?

கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற்சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள். சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.

1. ஜலவாசம் :

3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறை பட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

2. தான்யவாசம் :

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய 48 நாட்கள் வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலைமூழ்கும் அளவுக்கு நவதானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்யவாசம். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசத்தையும் தாண்டி ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.

3. ரத்னவாசம்

ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்னவாசம்.

4. தனவாசம்

பின்னர் சிலைகளை பொற்காசுகளில் மூழ்கவைப்பர்கள் இதுதனவாசம்.

5. வஸ்திரவாசம்

பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலைவாசம் செய்யும்

6. சயனவாசம்

இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகாமஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான்தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலைவைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

7. ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். ரத்தினவாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான 
நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

8. 6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வசிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான்  திறக்கப்படும்.

கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வசிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை அதிர்வுகள் ஊட்டப்படுகிறது. ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் சுவாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது, கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை. அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது. மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன.

பற்று

ஒருமுறை எண்ணெய் வியாபாரி ஒருவர், குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். அவர் நெடுநேரம் குருதேவரின் செயல்பாடுகளைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார். குருதேவரின் தீர்க்கமான பார்வை அவரின் மவுனத்தைக் கலைத்தது. குருதேவா நான் எண்ணெய் வியாபாரம் செய்துவந்தேன். நல்லமுறையில் வியாபாரம் நடந்ததால் பெரும்பொருள் சேர்ந்தது. வயது ஏறஏற தெய்வதரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிவைத்துவிட்டு வியாபாரத்தையும் அவர் களிடம் ஒப்படைத்தேன்.

பொருள் வியாபாரம் என்று அனைத்தையும் விட்டபிறகும் தெய்வதரிசனம் கிடைக்கவில்லையே ஏன்? என்று ஏக்கத்துடன் தெரிவித்தார். ராமகிருஷ்ணர் வியாபாரியைப் பார்த்து நீர் ஒரு வியாபாரி. நேற்றுவரை வியாபாரத்தில் அக்கறை காட்டினீர் உமக்குத் தெரியாத தொழில்நுட்பமா நான் சொல்லித் தரப்போகிறேன். நேற்று வரை கடையில் இருந்த எண்ணெய் குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெயை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் இருந்த எண்ணெய் தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய் விடுமா? என்று அவர் பாணியிலேயே பதில் கேள்வி கேட்டார். வியாபாரி குருவே மன்னித்து விடுங்கள். நான் தான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்துவிட் டேன் சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம். ஆனால் அதிலிருந்து பற்றை அவ்வளவு எளிதில் போக்க முடியவில்லை. பிறவிக்குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்துவிட்டேன் என்று சொல்லி குருதேவரை வணங்கினார்.

இறைதூதர்

ஜென் குரு ஒருவர் இமயமலையில் இருந்தார். ஒருநாள் அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் ஒருவர் வந்திருந்தார். ஐயா நான் பிரசித்தி பெற்ற மடாலயம் ஒன்றின் தலைவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் வந்தவர்.

குரு மௌனம் கலைக்காமல் தலையசைத்தார்

தற்பொழுது என் மனம் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. தெளிவு பெறவே தங்களை நாடி வந்தேன் என்றார் வந்தவர்.

நான் என்ன செய்யவேண்டும்? என்று பணிவுடன் கேட்டார் குரு.

குருவே எங்கள் மடம் மிகவும் புராதனமானது. பழைமையும் கீர்த்தியும் பெற்றது. உலகெங்கிலும் பல நாடுகளிலுமிருந்து ஆர்வமுள்ள பல இளைஞர்கள் வருவார்கள். ஆலயம் முழுவதும் இறைவழிபாட்டு ஒலியால் நிறைந்திருக்கும். ஆனால் சில காலமாக நிலைமை மோசமாக உள்ளது. எங்கள் மடத்தை நாடி யாரும் வருவதில்லை. அங்கு இருப்பதோ சில பிட்ச்சுக்கள் தான். அவர்களும் ஏனோதானோவென்று தங்கள் கடமையைச் செய்கிறார்கள். இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்க்கு என்ன பரிகாரம் காண்பதென்று விளங்கவில்லை. நீங்கள் தான் ஒரு உபாயம் சொல்ல வேண்டும் என்று வேண்டினார் அந்த மடத்தலைவர்.

அவரது குரலில் தென்பட்ட ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் கண்ட குரு மெல்லக் கூறினார். அறியாமை என்ற வினைதான் காரணம்

அறியாமையா? என்று வியந்தார் வந்தவர்.

ஆம் உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் இருக்கிறார். நீங்கள் அவரை உணரவில்லை. அவரை அறிந்துகொண்டால் போதும் இந்தக் குறைகள் நீங்கிவிடும் என்று அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார் குரு.

குரு சொன்னதை சிந்தித்தபடியே புறப்பட்ட மடத்தலைவர் மடத்திற்கு வந்து அங்குள்ளவர்கள் அனைவரையும் அழைத்து குரு சொன்ன செய்தியை விளக்கிக் கூறினார். இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவநம்பிக்கையுடனும் அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். இவராயிருக்குமோ? இல்லை அவரையிருக்குமோ? என்று சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். யார் தேவதூதர் என்று கண்டுபிடிக்க தங்களால் முடியாது. அது இங்குள்ள யாராகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த அங்கிருந்த ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தனர். ஒருவேளை இவர் தேவதூதராக இருந்தால்? என்ற கேள்வியோடு.மற்றவர்களை பரிவோடு நடத்தினர். இதனால் சில நாட்களிலேயே அந்த மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று. அங்கு வந்தவர்கள் பலரும் அங்குள்ள நிலையைப் பற்றி மற்றவர்களிடம் கூறத்தொடங்கினர். மீண்டும் பல இடங்களில் இருந்து இறைப்பணிபுரிய அங்கு வர ஆரம்பித்தனர்.
இதனைக் கண்ட பிறகு தான் மடாலத்தின் தலைவருக்கு குரு சொன்னதன் பொருள் புரிந்தது. இறைத்தூதர் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் மற்றவருடன் பணிவுடனும் பரிவுடனும் பழகும்போது நாம் இறைத்தூதராகிவிடுகிறோம்.

கடவுள் என்பவர் எங்கும் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம்மைப் போல பிறரையும் நேசித்தால் இறைவனை உணர முடியும்.

Image result for ஜென் குரு"

பூரி ஜெகன்னாதர்

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு
அற்புதங்கள்

1.கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

2.கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும்
சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் .

3.பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும் ஆனால்
பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.

4.இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.

5.இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை.

6.இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்.

7.இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில்
உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம்.

8.சிங்கத் துவாராவின் முதல் படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் சத்தத்தை உணர முடியும்.

Image result for பூரி ஜெகநாதர் கோவில்"
Suna Vesha or Golden Attire of Lord Shri Jagannath of Puri.jpg
1870 ம் வருடம்

ஆலயம்

ஆலயம் எதற்கு ?

சுவாமி விவேகானந்தர் ஆலயம் பற்றி ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான். ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் என்று கேள்வி கேட்டான்.

அதற்கு விவேகானந்தர் இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டார். அவன் ஓடிப் போய் ஒரு குவளை நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான். இதனை பார்த்த விவேகானந்தர் நான் தண்ணீர் தானே கேட்டேன். எதற்கு இந்த குவளை. இந்த குவளை இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா என்று கேட்டார். அவன் குழம்பிப் போனான் அது எப்படி முடியும் சுவாமி என்று கேட்டான்.

நீ கேட்ட கேள்விக்கு இது தான் பதில் தண்ணீரைக் கொண்டுவர குவளை தேவைப் படுவது போல ஆண்டவனை உணர்ந்து மகிழ ஓர் இடம் வேண்டும் அதுதான் ஆலயம். குவளை எப்பொதும் தண்ணீர் ஆகாது. அதுபோல் ஆலயமே ஆண்டவனாகாது என்று பதில் அளித்தார்.

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள் முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. அமைதியாக இறைவனை நினைத்துக்கொண்டு நடந்து செல்லுங்கள் என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார். கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.

திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர் கவட்டுக் கட்டைகளின் உதவியுடன் நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார். அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார் அதற்குக் காரணம் இருந்தது. பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். ஏன்? கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களை விட்டு விலகி யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார். அதனால் கடைசி முறையாக திருவண்ணாமலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான். பெரியவரை நெருங்கிய வாலிபன் ஓய் கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது என்று கூறிக் கொண்டே எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான். ஆமாம் அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு அவன் பாட்டுக்குச் சென்று விட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான். திட்டினான். கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான். தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர் ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து அப்படியே நின்றார். ஆமாம். கால் ஊனம் காணாமல் போய் கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது. அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.

இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார். ஆனால் இந்த உண்மைக் கதையில் வரும் அந்த இளைஞன் யார் என்று பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.

Image result for ரமண மகரிஷி திருவண்ணாமலை"