ஞானமலை முருகப்பெருமான்

சென்னை வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கம் சோளிங்கர் பாதையில் மங்கலம் என்னும் ஊரில் இருந்து சுமார் ஒரு கிமீ தொலையில் கோவிந்தச்சேரி என்னும் கிராமத்தில் இந்த ஞானமலை உள்ளது. ஞானமலை முருகன் கோவில். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்குச் செல்ல 150 படிக்கட்டுகள் உள்ளன. இந்த ஆலயத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. வள்ளி மலையில் வள்ளியினை மணமுடித்த முருகப்பெருமான் திருத்தணிக்குச் செல்லும் வழியில் இங்கு எழுந்தருளினார். இந்த தலம் அக்காலத்தில் இருந்தே பல முனிவர்களாலும் ரிஷிகளாலும் வழிபடப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் ஞானசித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். வழியில் கிராம தேவதை பொன்னியம்மன் ஆலயம் உள்ளது. வழியில் ஞான தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மலை உச்சியில் ஒரு முகம் நான்கு திருக்கரங்கள் கொண்ட ஞான முருகப்பெருமான் வள்ளி தேவசேனாவோடு காட்சியளிக்கிறார். வள்ளியை கரம் பிடித்த முருகப்பெருமான் வள்ளி மலையிலிருந்து திருத்தணிகை மலைக்குப் புறப்பட்டார். வழியில் உள்ள இந்த மலையில் வள்ளியோடு முருகப்பெருமான் அந்தக் குன்றில் தங்கினார்.

அருணகிரிநாதர் தன் கர்ம வினையால் கீழான வாழ்வில் சிக்கிச் சீரழிந்து பின் தற்கொலை செய்ய திருவண்ணாமலை வந்தபோது முருகப்பெருமான் அவரை தடுத்தாட் கொண்டார். அப்போது முருகப்பெருமானின் பாதங்களை அருணகிரிநாதர் கண்டார். அருணம் எனும் திருவண்ணாமலை மலை (கிரி) யில் ஞானம் பெற்றவர் என்பதால் அருணகிரிநாதர் என பெயர் பெற்றார். அதன் பின் அவர் ஒவ்வொரு முருகப்பெருமான் தலங்களுக்கும் சென்று பாடினார். அப்படி ஒவ்வொரு தலமாக செல்லும் போது இந்த தலத்துக்கும் வந்தார். அங்கேதான் அவருக்கு திருவண்ணாமலையில் முருகப்பெருமான் பாதம் கண்ட காட்சி நினைவுக்கு வந்து மீண்டும் முருகப்பெருமான் திருப்பாதம் காண ஆவல் கொண்டு முருகரிடம்

அடியனும் நினைத்து நாளும் உடலுயிர் விடுத்தபோது
அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே

என்று பாடலாகப் பாடி மன்றாடினார். அப்போது வந்த முருகப்பெருமான் அவர்முன் தோன்றி அவர் விரும்பிய அந்த பாதத்தை காண்பித்து அங்கே பதித்தும் வைத்தார். இதனை அருணகிரிநாதர் இத்தலத்தில் பாடிய தனது பாடல்களில் சொல்லியிருக்கிறார். முருகப்பெருமான் பாதம் பதிந்த ஒரே மலை இந்த ஞானமலை மட்டுமே. முருகரின் திருப்பாதம் ஞானத்தின் உறைவிடம். அந்த பாதம் இங்கு பதித்தபடியால் ஞானமலை என்று பெயர் பெற்றது. ஞானமலை திருப்புகழ் என அருணகிரியார் ஒன்றைப் பாடியதாக ஒரு கருத்து நிழவுகிறது. அந்த பாடல்கள் கொண்ட சுவடி கிடைக்கவில்லை. எனினும் திருப்புகழில் இந்த மலை பற்றிய குறிப்புகள் உண்டு.

கோவில் தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த நிகழ்வு சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன் இடது புறம் மடி மீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் அரிய வடிவம். அருகில் அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக்காட்சியைக் கண்டு இன்புறுவார். இந்த சிற்பத்திற்கு குறமகள் தழுவிய குமரன் என்று பெயர். இந்தக் கோயிலின் வடமேற்கில் வள்ளி மலையும் வடகிழக்கில் திருத்தணிகையும் சம தூரத்தில் உள்ளது. இந்த மூன்று மலைகளும் சேர்ந்து ஒரு முக்கோண அமைப்பில் உள்ளது. திருக்கோயிலைச் சுற்றி விட்டு இன்னும் மலையின் மீதேறிச் சென்றால் தேவசுனை, ஞானகிரீஸ்வரர் சந்நிதி, ஞானவெளி சித்தரின் ஜீவசமாதி, காடுவெளி சித்தர் சமாதி, முருகப்பெருமானின் திருவடித் தடங்கள் என்று மலையெங்கும் அருள்காட்சிகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. பல்லவர் காலத்து கோயில் என்று சொல்லப்படும் ஞானமலையில் 14 ஆம் நூற்றாண்டு காளிங்கராயன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த கல்வெட்டில் கோயிலின் திருப்பணி பற்றிய தகவல்கள் உள்ளது.

முருகப்பெருமானின் திருப்பாதம்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். மூலவர் சுப்பிரமணியர். உற்சவர் தண்டாயுதர். தீர்த்தம் வள்ளி தெய்வானை தீர்த்தம். ஊர் திண்டுக்கல் அருகில் சாணாா்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த திருமலைக்கேணி. புராண பெயர் மலைக்கிணறு. இக்கோயில் இரண்டு அடுக்காக அமைந்திருக்கிறது. மலை மீது ஒரு முருகரும் மலையின் கீழ் ஒரு முருகரும் அருள் பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் சக்தி விநாயகர் சன்னதி இருக்கிறது. கோயில் வளாகத்திலுள்ள மாமரத்தின் அடியில் அருணகிரியார் திருவுருவம் உள்ளது. இத்தலத்தில் மௌனகுரு சுவாமிகள் என்ற சித்தா் பல காலங்களுக்கு முன்னா் ஜீவசமாதி நிலை அடைந்துள்ளாா். அவருக்கென அருகில் தனிக் கோயில் உள்ளது.

ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினாா். ஒருசமயம் அவா் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தாா். இங்கிருந்த சுனையில் நீா் பருகியவா் சற்று நேரம் ஓய்வெடுத்தாா். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன் தீா்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினாா். அதன்படி மன்னா் இங்கு கோயில் எழுப்பினாா்.

மூலஸ்தானத்தில் முருகன் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி இடக்கையை இடுப்பில் வைத்தபடி நளினமாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. உடன் வள்ளி தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுகிறார்கள். கிணற்றில் வள்ளி தீர்த்தம் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம் மலைக்கேணி என்று பெயர் பெற்றது. கேணி என்றால் கிணறு என்று பொருள்.

மலையில் அடர் வனத்திற்கு மத்தியில் அமைந்த கோயில் இது. காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமாகியது. கோயிலும் சேதமடைந்ததால் முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார் கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினார். பிரதான மூலவர் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் பழைய சிலையை இங்கிருந்து எடுக்க முடியவில்லை. எனவே அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன் மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கிலுள்ள ஆதி முருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே ஒரு துளையும் உள்ளது.

திருச்செந்தூர்முருகன் கோவிலில் கொடுக்கப்படும் இலை விபூதியின் மகத்துவம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழாவாகும். இங்கு வழங்கப்படும் பிரசாதங்களில் முக்கியமானது பன்னீர் இலை விபூதியாகும். ஒரு முறை ஆதிசங்கரர் காசநோயால் பாதிக்கப்பட்டு திருச்செந்தூர் முருகனிடம் வந்துள்ளார். அப்போது முருகப் பெருமான் ஆதிசங்கரரிடம் இனிய தமிழில் பாடல் பாடுமாறு கேட்டார். அதற்கு அவர் நான் எம்பெருமானை மட்டுமே பாடுவேன் என்று கூறினார். இதனால் வருத்தமடைந்த முருகப் பெருமானை அப்போது அங்கு வந்த எம்பெருமான் கண்டார். முருகன் வருத்தத்துடன் இருப்பதற்கு காரணத்தை அறிந்த எம்பெருமான் ஆதிசங்கரரிடம் சென்று முருகப் பெருமான் முன் சென்று கண்ணை மூடிக் கொண்டு என்னை நினைத்து பாடு என்று கூறினார். அதுபோலவே முருகப் பெருமான் முன் நின்று கண்ணை மூடிக்கொண்டு பாடினார் ஆதிசங்கரர். கண்ணை திறந்து பார்க்கும் போது முருகப் பெருமான் இருக்கும் இடத்தில் எம்பெருமான் இருந்தார். எம்பெருமான் தான் முருகன் முருகன் தான் எம்பெருமான் என்பதை உணர்ந்த ஆதிசங்கரர் முருகப் பெருமானிடம் மன்னிப்பு கேட்டு முருகனை பாடி காசநோயை குணப்படுத்த வேண்டும் என்று வேண்டினார். உடனே முருகப்பெருமான் இலையில் விபூதியை அவரிடம் கொடுத்தார். திருநீற்றுப் பச்சிலையில் (பன்னீர்இலை) வைத்து கொடுக்கப்பட்ட இலை விபூதியை சாப்பிட்டதும் காசநோய் குணமாகியது.

தேவர்களை சிறை பிடித்து கொடுமைப்படுத்திய சூரபத்மனிடம் தேவர்களை விடுவித்து முருகப் பெருமானிடம் சரணடையுமாறு வீரபாகு தேவன் கேட்டபோது சூரன் மறுத்தான். முருகப் பெருமானிடம போர் புரிய தயாரானான். போர் தொடங்கியது போரில் முருகப் பெருமான் படை சார்பில் இருந்த வீரர்கள் சிலர் காயமடைந்தனர். அந்த காயத்திற்கு மருந்தாக இலை விபூதி கொடுத்து குணமாக்கியுள்ளனர். பின்னாளில் அதன் மகத்துவத்தை அறிந்து கோவிலை கட்டிய சாதுக்கள் பணியாற்றிய ஊழியருக்கு ஊதியமாக இலை விபூதியை கொடுத்துள்ளனர். பெற்றுக் கொண்ட ஊழியர்கள் விடலை கோவில் பிள்ளையார் அருகே வந்து அதைத் திறந்து பார்த்த போது ஊதியத்திற்கு ஏற்ப பொற்காசுகள் ஆக மாறியிருந்ததாம். வேலை செய்யாதவர்களுக்கு வெறும் விபூதி மட்டுமே இருக்குமாம். அதனுடைய தத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

சோமஸ்கந்த மூர்த்தி

அரிய பழங்காலச் சிலை. அந்தச் சிற்பத்தில் இருக்கும் தன் சிறு குழந்தை கந்தனைப் பார்த்துக் கொள்ளும் அன்னை பார்வதி. சிவனின் உடையும் பார்வதியின் புடவையும் அலங்காரம் மிகவும் அருமை. இடம்: காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி கோயில்.

திருசெந்தூர் தலபுராணம்

திருச்செந்தூர் தல புராணம் புத்தகம் PDF வடிவில் டவுண்லோடு செய்து கொள்ளும் வசதி இந்த பக்கத்தில் உள்ளது.

வேடுவ கோலத்தில் முருகன்

நமது சங்க இலக்கியம் சொல்லும் வடிவோடு பொருந்தக் கூடிய முருகனின் சிற்பம் ஒடிசாவில் உள்ளது. கொற்றவை சிறுவ பழையோள் குழவி என திருமுருகாற்றுப்படையில் சொல்லப்பட்ட கொற்றவையின் மகனாக குறிப்பிடப்படும் வடிவம் ஒடிசாவில் உள்ளது. துர்க்கை என ஆகிவிட்ட கொற்றவை ஆதி குடிகளின் தெய்வமாய் திகழ்ந்து தற்போது துர்க்கை வடிவமாகி விட்டாள். அவளின் மைந்தன் முருகனும் அவ்வாறே. இந்த தொன்ம தொடர்ச்சி பழங்குடிகளின் பண்பாட்டில் இருப்பது சான்றாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இடம் சித்தேஷவர் கோவில். புவனேஷ்வர். ஒடிசா மாநிலம்.

கார்த்திகேயன்

ஒடிசாவின் கட்டாக் கலிங்கன் கட்டிடக்கலையில் லலித்கிரியின் கைவினைஞர்களால் காதி கல்லில் செதுக்கப்பட்ட கார்த்திகேயனின் சிற்பம். அவருடன் மயிலும் நாகமும் உள்ளது. இடம் பத்ரேஸ்வர மஹாதேவ் கோவில் மெஹங்கா ஒடிசா மாநிலம்.

அரோகரா என்ற சொல்லின் பொருள்

ஹர ஹரோ ஹரா என்ற மந்திரத்தின் சுருக்கமே அரோகரா ஆகும். அரன் என்றால் காப்பவன். ஹர என்றால் நீக்குபவன். அரோகம் என்றால் நோயில்லாமல். அரோகரா என்றால் இறைவனே நோய் நொடிகளை நீக்கி துன்பங்களில் இருந்து காத்து நற்கதி அருள்வாயாக என்பதாகும்.

அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளியில் இக்கோவில் உள்ளது. பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பிரிவுகளில் சுருளி மலை அமைந்துள்ளது. புராண பெயர் சுருதிமலை. மூலவர் சுருளிவேலப்பர் மற்றும் சுருளி ஆண்டவர். உற்சவர் வேலப்பர். தீர்த்தம் சுரபி தீர்த்தம் சுருளி தீர்த்தம். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால் சுருதி எனப்பட்ட தீர்த்தம் சுருளி என மருவியது. முருகனுக்கும் சுருளி வேலப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டிக் கோலத்தில் இருப்பதால் இவர் சுருளியாண்டி என்றும் அழைக்கப்படுகிறார். சுருளி வேலப்பர் மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதியில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர் மகாலிங்கம் சந்தான கிருஷ்ணர் வீரபாகு ராமபிரான் லட்சுமணன் உள்ளனர். முருகன் குடிகொண்டதால் நெடுவேள்குன்றம் என்றழைக்கப்படும் இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசிக்கின்றனர் என்பதலால் அனைவருக்கும் தனி சிலைகள் உள்ளன. இங்கு பூதநாராயணப்பெருமாள் கோயிலும் இருக்கிறது. பெருமாள் சன்னதிக்குள் சிவலிங்கம் இருக்கிறது. இதனால் இங்கு விபூதி குங்குமமும் தருகிறார்கள். சடாரி ஆசிர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக் கால பூஜையின் போது துளசி தீர்த்தம் தருகின்றனர். இக்கோயிலில் பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும் சிவனுக்கு தட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இவர் இடது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.

சுருளியாண்டவர் சந்நதியில் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரசித்தி பெற்றது. இமயமலையில் வாழ்ந்த சித்தர் ஒருவர் சுருளி மலையில் தங்கி தவமியற்றி சிவபெருமான் தரிசனம் பெற்றார். இந்த குகையில் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இது இமயகிரி சித்தர் குகை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒருவர் மட்டும் படுத்துக் கொண்டு போகக் கூடிய இந்தக் குகையில் சிறிது தூரம் தவழ்ந்து சென்றதுமே குகையின் உள்ளே பெரிய அறை போன்ற அமைப்பு உள்ளது. சுருளி ஆண்டவர் சன்னதியின் மேற்பாகத்தில் மரத்தின் வேர்களைப் பிடித்து மேலே சென்றால் அங்கு ஆகாசகங்கை வரும் வழியில் பல குகைகளைக் காணலாம். கோயில் உள்ள மலையில் கைலாச குகை என்ற ஒரு குகை உள்ளது. இந்த குகையில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி கொடுத்தபடியால் இந்த குகை கையிலாச குகை என்று அழைக்கப்படுகிறது. சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சம நிலையை இழக்க சிவன் தென் பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக் கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இக்குகை தவிர விபூதிக் குகை சர்ப்பக் குகை பாட்டையா குகை கிருஷ்ணன் குகை கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளது. இவற்றில் ரிஷிகள் தேவர்கள் சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்துள்ளனர். சில குகைகள் பொதுமக்களின் பார்வையில் தென்படக்கூடியது. பிற குகைகள் அடர் வனத்திற்கு உள்ளே யாரும் காணாத படி அமைந்துள்ளது.

கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டே இருக்கிறது. 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை தழைகள் பாறை போல மாறுகிறது. பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசை வழுக்குத் தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. இங்குள்ள மரம் ஒன்றின் மீது தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக மாறி காட்சியளிக்கிறது. கோயில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது. இந்த பாறையில் தீர்த்தம் பட்டு ஈரமான மணல் துகள்கள் காய்ந்த பின் வெண்ணிறத்தில் விபூதியாக மாறுகிறது. இந்த விபூதியையே பிரசாதமாக தருகிறார்கள். ஓம்கார வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடன் ஒரு பாறை உள்ளது.

மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமண சீராக நம்பிராஜன் தனது ஆட்சிக்குட்பட்ட மலைப் பிரதேசங்களைக் கொடுத்தார். அதில் இந்த மலேயும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒரு சமயம் சனி பகவான் தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள் தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார்.

ராவணன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக் காக்க மகாவிஷ்ணு பூத சொரூபத்துடன் பஞ்ச பூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவனேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார். திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர் மலைக் கோயில்களை குன்றுதோறாடல் என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசையன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும்.

விராலி மலை

விராலிமலை முருகன் கோயில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இம்மலையின் புராண பெயர் சொர்ணவிராலியங்கிரி. மூலவர் சண்முகநாதர் ஆறுமுகம். முருகர் மயில் மீது வீற்றிருக்கிறார். இந்த மயில் தெற்கு பார்த்திருப்பதால் இதற்கு அசுர மயில் என்று பெயர். அம்மன் வள்ளி மற்றும் தெய்வானை. தலமரம் விராலிச்செடி காசிவில்வம். தீர்த்தம் சரவணப் பொய்கை நாக தீர்த்தம். நாகதீர்த்தம் நடுவே நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகரின் வாகனமான மயில்கள் அதிகமாக நடமாடும் கோயில் இது. இடும்பன் சன்னதி பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.

வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் அவரை விராலிமலை இருக்குமிடத்திற்கு வர கட்டளையிட்டார். விராலி மலைக்கு வழி தெரியாமல் தவித்த அருணகிரிநாதருக்கு விராலிமலைக்கு செல்லும் வழியை காட்ட முருகன் வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி தற்போது இக்கோவில் இருக்குமிடத்தில் உள்ள குரா மரத்தினுள் மறைந்து விட்டார். இந்த விராலிமலைத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு முருகர் அஷ்டமாசித்தி என்னும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வழங்கினார். திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று.

சிவன் பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக அவரது ஒரு தலையைக் கொய்தார். அப்போது நாரதர் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால் அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். இதனால் அவரது தம்புரா வளைந்தது. சிவநிந்தையை போக்குவதற்கு இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தம்புரா இப்போதும் வளைந்து காணப்படுகிறது. கோயில் திருவிழாவின் போது சுவாமி முன்பாக இவரும் உலா வருகிறார்.

குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை. வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர். இவர் தீவிர முருக பக்தர். இக்கோவிலில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து ஈடுபட்டார். ஒருநாள் வெள்ளிக் கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. எப்படியாவது முருகனை தரிசிக்க வேண்டும் என்று முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா? எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். இருவருமாக ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது அவர் மறைந்து விட்டார். இதனைக் கண்டு வியப்புற்ற கருப்பமுத்து கோயிலை அடைந்ததும் அங்கு முருகனுக்கு முன்பாக தான் கொடுத்த சுருட்டு இருப்பதைக் கண்டு தம்மிடம் சுருட்டு பெற்றவர் முருகனே என உணர்ந்தார். கருப்பமுத்து அங்கிருந்த அனைவரிடமும் நடந்ததைக்கூற ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் உருவானது.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை. அன்று இரவு முருகர் அவர் கனவில் தோன்றி எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக் கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே என்றார். மேலும் நிவேதனமாக சுருட்டை வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூறினார். அடுத்தநாள் மன்னர் தான் போட்ட தடையை நீக்கினார். முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைத்தவுடன் மன்னரின் வயிற்று வலி குணமானது. அதன்பிறகு இன்று வரை இப்பழக்கம் இருக்கிறது. ஆறு கால பூஜையின் போது பாலும் பழமும் பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக செய்யப்படுகிறது. உச்சிகால வழிபாட்டின்போது மட்டும் சுருட்டு சேர்த்து நைவேத்தியம் செய்யப்படுகிறது

வசிஷ்டரும் அவரது துணைவி அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமியற்றி உள்ளார்கள். திருவாரூரில் இருந்த தட்சிணாமூர்த்தி என்னும் அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம். சனகர் சனந்தர் சனாதனர் சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் முருகன் தோன்றி காட்சி தந்த திருத்தலம். இத்தலத்தின் மீது விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார். பங்குனி உத்திரம் கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது. விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கிபி1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன.