கந்தகோட்டத்து உற்சவர் முருகன்

கந்தகோட்டம் கோவிலில் முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். சிற்ப சாஸ்திர வல்லுணர்களில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரை தேர்வு செய்தனர். சிற்ப சாஸ்திரரிடம் உற்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர். சாஸ்திரரும் புடம்போட்டு எடுத்தபின் வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம் மினு மினு வென மின்னியது, அதன் ஒளிச் சிதறல்கள் கண்களைக் கூசச் செய்தது. ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நல்லா வந்திருக்கிறது. ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.

தலமை சிற்பியும் துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார். அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாக்கியவர்போல் தூரப் போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பசாஸ்ததரரை தூக்கி வைத்து ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு ஐயா என்றனர். என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது வாய் குழறி குழறிக் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி இந்த விக்ரகம் நீறு பூத்த அணலாக இருக்கிறது. இதைச் சுத்தத் தூய்மையாக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் இது என்னால் இயலாது என்று கூறி போய்விட்டார். பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை தீண்டப் பயந்து வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல் விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர். இந்தச் செயலுக்குப் பின்பு இரண்டு ஆண்டுகளும் கடந்து போய்விட்டன.

ஒருநாள் காசியில் இருந்து சாம்பையர் எனும் துறவி கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க ஆலயத்திற்குள் புகுந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின் ஆர்வத்தோடு உற்சவர் இல்லையா? எனக் கேட்டார். சிவாச்சாரியாரும் விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரம் முதல் அனைத்தையும் சாம்பையரிடம் கூறிவிட்டு ஆலய முக்கியஸ்தரரிடம் அழைத்துப் போய் கொண்டு விட்டு விட்டார். இதன்பின் கோயில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர் அந்த உற்சவ விக்ரகத்தை நான் பார்க்கலாமா? என்றார். சாம்பையருடைய தோற்ற கோலத்தைக் கண்டு கட்டுப்பட்ட நிர்வாகிகள் உற்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள் நுழைந்த சாம்பையர் சில நிமிடத்தில் வெளியே வந்தார். சாம்பையர் கூடியிருந்த அனைவரையும் பார்த்து நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் இக்கோயிலில் உள்ள மூலவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே சக்தி இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்திருக்கிறது என்றார். விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வமானது. இங்கு இது அமையப் பெற்றதனால்தான் உங்களை நான் பாக்கியசாலி என்றேன் என்றார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல் இந்த உற்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார் இவர். இவரைப் பார்த்து வணக்கம் தியானம் ஆராதணை செய்யலாமே தவிர இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக் கூடாது என்றார்.

இந்தத் தன்மை கொண்ட உற்சவ விக்ரகங்களை ஆத்ம சக்தியால் மூலம் தூய்மைப் படுத்த முடியும். ஆயுதத்தால் தீண்டித் தொட முனைந்தால் அது நடவாது போய்விடும். இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார். தூய்மை செய்யும் நேரத்தில் கூறிப்பட்ட ராகத்தில் நாதஸ்வரம் வாசிக்க சொன்னார். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்று மகிழ்ந்த ஆலய நிர்வாகிகளும் பக்தர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். தனி அறையில் உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு திரை போட்டு மறைக்கப்பட்டது. வெளியே நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து வேத மந்திரங்களைச் சொல்லி ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலக்கி வெளியே வந்தார் சாம்பையர். முருகனின் முகத்தை மட்டும் சரி செய்ய இயலாது என்று கூறி விட்டு சென்று விட்டார்.

பேராணந்த ஒளிபொருந்திய உற்சவ முருகரைக் கண்ட கூட்டம் மொத்தமும் பரவசத்தோடு முத்துக்குமாரசுவாமிக்கு அரோஹரா எனக் கூறினார்கள். இப்போதும் கந்தகோட்டத்தில் இருக்கும் உற்சவர் இந்த முருகர் தான். மிகவும் அழகாக இருக்கும் முருகனின் முகம் மட்டும் அந்த பிசிருகளோடு இன்றும் இருக்கிறார். ஆறுமுகனின் அருளாடலால் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்திற்குச் சென்றால் தரிசிக்கலாம் வள்ளலாருக்கும் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கும் பாம்பன் சுவாமிகளுக்கும் அருள் புரிந்த கந்தக் கோட்ட கந்தசுவாமி நமக்கும் அருள் புரிவார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 189 அகத்தியான்பள்ளி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 189 வது தேவாரத்தலம் அகத்தியான்பள்ளி. மூலவர் அகத்தீஸ்வரர் அக்னிபுரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பாகம்பிரியாள் மங்கைநாயகி அம்மை சௌந்தரநாயகி. தலவிருட்சம் வன்னி அகத்தி. தீர்த்தம் அகத்திய தீர்த்தம் (கோயிலின் மேற்குப்பக்கம் உள்ளது). அக்னிதீர்த்தம் (கடல்) அருகாமையில் உள்ளது. சுவாமி சன்னதியில் உள்ள குளம் அக்னி புஷ்கரணி எனப்படுகிறது. ராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியருக்கு தனி கோயில் உள்ளது. கோவிலில் உள்ள அகத்தியர் உருவச்சிலை மிகவும் அழகிய வேலைப்பாடுடன் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன. கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் திரண்டிருந்தனர். இதனால் வடதிசையிலிருந்த கைலாயம் தாழ்ந்தது தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த சிவபெருமான் அகத்தியரை அழைத்து தென்திசைக்கு செல்லும்படி உத்தரவிட்டார். சிவனின் ஆணைப்படி அகத்தியர் தென்திசைக்கு சென்றார். சிவபெருமான் அகத்தியருக்கு அவர் விரும்பும் இடங்களில் எல்லாம் திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். இதையடுத்து அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு சில காலம் தங்கி சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்து வந்தார். அப்போது தான் கொடுத்த வாக்கின்படி பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை அகத்தியருக்கு இத்தலத்தில் காட்டி அருள்புரிந்தார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. அகத்தியர் திருவுருவம் கோவிலில் உள்ளது. குலசேகரப்பாண்டியனுக்கு இருந்த வியாதி போக இத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றதாக இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டில் வரலாற்றுத் தகவல் உள்ளது. ராஜராஜன் மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்குள் உள்ளன. எமதர்மன் தனது நீண்ட காலம் சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு ஜீவன் முக்தி பெற்றுள்ளான். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 122 திருப்பாம்புரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 122 வது தேவாரத்தலம் திருப்பாம்புரம் ஆகும். ஆதிசேஷன் (நாகம்) வழிபட்ட தலமாகையால் பாம்பு + புரம் = பாம்புரம் என்று பெயர் வந்தது. புராணபெயர் சேஷபுரி உரகபுரம். மூலவர் சேஷபுரீஸ்வரர் பாம்புரேஸ்வரர் பாம்பீசர் பாம்புநாதர். இறைவன் இங்கு சுயம்பு மூர்தியாக கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் பிரமராம்பிகை வண்டார்குழலி வண்டு சேர்குழலி. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராட்ச மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள். தலமரம் வன்னி. தீர்த்தம் ஆதிஷேச தீர்த்தம். ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சாரீமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம். இக்கோயில் திருநாகேஸ்வரம் நாகூர் கீழப்பெரும்பள்ளம் காளஹஸ்தி மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற தலம். எனவே இத்தலம் சர்வ தோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன.

இக்கோவில் நுழைவாயிலை அடுத்து விநாயகர் நந்தி பலிபீடம் ஆகியவை உள்ளன. அடுத்து இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் ஆவார். ஆதிசேஷனுக்கு இங்கு மூலவர் மற்றும் உற்சவர் விக்ரகம் தனியாக உள்ளது. பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி இருக்கிறார்கள். ஞாயிறு செவ்வாய் வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் பாம்பு நடமாட்டம் இருக்கும். 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி காலையில் முதல் கால பூஜைக்காக சந்நிதி திறக்கப்படும்போது இறைவன் மேனியில் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்புச் சட்டை இருந்ததை ஆலய அர்ச்சகர்கள் கண்டனர். அது தற்போது இறைவன் சந்நிதிச் சுற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் நடைபெற்ற மூன்று விதமான தலவரலாறுகள் சொல்லப்படுகிறது.

விநாயகர் கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை வணங்கிய போது அவர் கழுத்தில் இருந்த பாம்பு தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்க சாபமிட்டார். பின்னர் அஷ்ட மகா நாகங்களும் ராகு கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக மற்றவர்களையும் தண்டிக்கலாகாது என்றும் தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும்படியும் சிவனை வேண்டினர். மகாசிவராத்திரியன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் திருப்பாம்புரம் வந்து வழிபட்டு சாபவிமோசனம் பெறலாம் என சிவன் அருளினார். அதன்படி நாகங்கள் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் தங்களின் சக்தியையும் வலிமையையும் பெற்றது. இது தவிர இன்னொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு. முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது. இதனால் வாயுபகவான் தன் வலிமையால் மலைகளை புரட்டி போட ஆதிசேஷன் தன் வலிமையால் அதனை தடுத்தி நிறுத்தியது. இதனால் கோபம் கொண்ட வாயுபகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராண வாயுவை தடுத்து நிறுத்தினார். இதனால் உயிரினங்கள் சோர்ந்தன. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கியது. பின்னர் செய்த தவறுக்கு திருப்பாம்புரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து மன்னிப்பு கேட்டது.

ஆதிசேஷனின் தலைமையில் நாகங்கள் உலகைத் தாங்கும் சோர்வு நீங்கி நல்ல வலிமை பெறுவதற்காக இறைவன் அருளை வேண்டி உலகிற்கு வந்து மகாசிவராத்தி நாளில் முதற் காலத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் காலத்தில் திருநாகேச்சுரம் நாகநாதரையும் மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும் நான்காம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு உடல் வளம் பெற்றான் என்பது வரலாறு.

அனந்தன் வாசுகி தட்சன் கார்க்கோடகன் சங்கபாலன் குளிகன் பத்மன் மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் நாகராஜரான ஆதிஷேசன் பிரம்மா இந்திரன் பார்வதி அகத்தியர் அக்னி தட்சன் கங்காதேவி சூரியன் சந்திரன் சுனிதன் கோச்செங்கண்ணன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இராசராசன் இராசேந்திரன் சுந்தர பாண்டியன் சரபோஜி மன்னன் முதலியோர் காலத்திய 15 கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவன் பாம்புரம் உடையார் என்றும் விநாயகர் ராஜராஜப் பிள்ளையார் என்றும் இறைவி மாமலையாட்டி என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். சரபோஜி மன்னனின் பிரதிநிதி சுபேதரர் ரகுபண்டிதராயன் என்பவனால் வசந்த மண்டபமொன்று கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 102 மயிலாடுதுறை

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 102 மயிலாடுதுறை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 102 வது தேவாரத்தலம் மயிலாடுதுறை புராணபெயர் மாயூரம். அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும் மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது. மூலவர் மயூரநாதர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அபயாம்பிகை அஞ்சொல்நாயகி. அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார். தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால் அபயாம்பிகை என்று அம்பாள் அழைக்கப்படுகிறாள். இவள் வலது கையில் கிளியுடன் இருக்கிறாள். சுவாமியின் லிங்க ரூபத்தின் அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள். தலவிருட்சம் மாமரம் வன்னி. தீர்த்தம் இடபம் பிரம்ம அகத்திய தீர்த்தம் காவேரி ரிஷப தீர்த்தம். சிவன் இத்தலத்தில் நந்தியின் கர்வத்தை போக்கி அருள் செய்தார். இந்த நந்தி காவிரியின் நடுவில் இருக்கிறது. இந்த தீர்த்தமும் இடபதீர்த்தம் எனப்படுகிறது. ஆடிப்பூர அம்பாள் வீரசக்தி வடிவமாக தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஆடிப்பூரத்தன்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் காவிரிக்கரையில் எழுந்தருள்கிறாள். காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். இத்தல விநாயகர் அகத்திய விநாயகர் எனப்படுகிறார்.

பிரம்ம தேவர் இந்த ஊரிரை உருவாக்கி இத்தலத்து இறைவன் மாயூரநாதரை பூஜித்தார் என்று புராண வரலாறு கூருகிறது. கோவிலில் நான்கு பக்கம் சுற்று மதில்களும் கிழக்கே பெரிய கோபுரமும் மற்ற 3 பக்கம் மொட்டை கோபுரங்களும் வீதி உட்பட ஐந்து பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளையும் உட்கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டுள்ளது. இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படும். இங்குள்ள கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. கோவிலின் ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். குளத்தின் நடுவே நீராழி மண்டபம் உள்ளது. இங்கு நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் அருள்புரிகிறார். சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவார். ஆனால் இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குகிறார். மயூரதாண்டவத்தில் நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது. இதில் அம்பாள் சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர். ஐப்பசி விழாவில் சிவன் அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது. பிரகாரத்தில் சந்தன விநாயகர் சன்னதி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு அகத்திய சந்தன விநாயகர் என்றும் பெயரும் ஏற்பட்டது.

இக்கோயில் பிரகாரத்தில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனிபகவான் தலையில் அக்னியுடன் ஜுவாலை சனியாக இருக்கிறார். இவருக்கு அருகில் தனியே சனீஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து வடக்கு திசையை நோக்கி சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். ஐந்து பிரகாரங்களுடன் அமைந்த தலம் இது. இங்கு கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில் ஜுரதேவர் இருக்கிறார் இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும் அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும் அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார். இத்தலத்தில் ஐக்கியமான குதம்பை சித்தருக்கு சன்னதி உண்டு.

பார்வதியை மகளாக பெற்ற தட்சன் ஒரு யாகம் நடத்தினான். அதற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே அம்பாளையும் யாகத்திற்கு செல்ல வேண்டாமென கூறிவிட்டார் சிவன். மனம் பொறுக்காத பார்வதிதேவி யாகத்திற்கு சென்றாள். சிவன் வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். அப்போது யாகத்தில் பயன் படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளின் பாதத்தை சரணடையவே அதற்கு அடைக்கலம் கொடுத்து காத்தாள் அம்பாள். தன் சொல்லை மீறி யாகத்திற்கு வந்ததால் அம்பாளை மயில் வடிவம் எடுக்கும்படியாக தண்டித்தார் சிவன். மயிலாக மாறிய அம்பாள் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வேண்டி தவமிருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும் மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால் மாயூரநாதர் என்று பெயர் பெற்றார்.

நாதசர்மா அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் ஐப்பசி மாதத்தின் இறுதியில் ஸ்நானத்திற்காக இத்தலத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் ஸ்நானம் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன் மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல்நாளன்று அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. நாதசர்மா அனவித்யாம்பிகை தம்பதியினர் இக்கோயிலில் சிவனுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம் அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் அனவித்யாம்பிகை என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். அதேபோல் துலா நீராடலைக் கேள்விப்பட்டு தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால் இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது. முடவனுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை முடவன் முழுக்கு என்கின்றனர்.

கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை யமுனை சரஸ்வதி என்ற நதிகள் என்றும் தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் மாறி விட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் (ஜப்பசி மாதம்) காவிரியின் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூறினார். அவர்களும் அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். தேவர்கள் முனிவர்கள் சரஸ்வதி லட்சுமி கௌரி சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் இன்றும் நீராட வருகின்றனர்.

கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு உள்ளது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தலபுராணம் அபயாம்பிகை மாலையும் அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார். கிபி 1907 1911-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் மன்னர்கள் காலத்து 17 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பராந்தகச் சோழன் (10-ம் நூற்றாண்டு) இரண்டாம் ராஜாதி ராஜன் (கிபி 1177) மூன்றாம் குலோத் துங்கன் (கிபி 1201) ராஜராஜ தேவன் (கிபி 1228) மூன்றாம் ராஜராஜன் (கிபி1245) ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் விஜயநகர மன்னர்கள் என பல்வேறு மன்னர்களும் இந்த திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ளனர். கல்வெட்டில் இத்தல இறைவன் மயிலாடுதுறை உடையார் என்று குறிக்கப் பட்டுள்ளது. சோழர்கள் இக்கோவிலை கட்டியுள்ளனர். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 97 கோனேரிராஜபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 96 வது தேவாரத்தலம் கோனேரிராஜபுரம். புராண பெயர் திருநல்லம் மற்றும் திருவல்லம். மூலவர் உமாமகேஸ்வரர் பூமிநாதர் மாமனி ஈஸ்வரர். சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமா மஹேஸ்வரர் லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். அம்பாள் அங்கவளநாயகி தேகசுந்தரி தேக சவுந்தரி மங்கள நாயகி. அம்பாள் சன்னதி கிழக்குப் பார்த்து உள்ளது. உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அம்பிகை அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிர் திசையில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அருள்பாலிக்கிறார்கள். தலவிருட்சம் அரசமரம் வில்வம். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை உள்ளது. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் பூமி தீர்த்தம். பூமாதேவி இங்கு வழிபாடு செய்து அருள் பெற்றமையால் இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

இத்தல விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் எனப்படும். கோவில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் எதிரே நீண்ட முன் மண்டபமும் மண்டபத்தின் உள்ளே கொடி மரம் பலிபீடம் மற்றும் நந்தி உள்ளது. மண்டபத்தின் மேற்கு பக்கத்தின் உட்புறம் அறுபத்து மூவர் சிவமூர்த்தம் பன்னிரண்டு ராசிகள் மகரிஷிகள் ஆகிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மூலவர் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் தட்சிணாமூர்த்தி அகத்தியர் ஜ்வரஹரர் லிங்கோத்பவர் கங்காதரர் அர்த்தநாரீஸ்வரர் துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். கருவறை கோஷ்டத்தில் பின்புறம் கிழக்கு நோக்கி லிங்கோத்பவர் இருக்கிறார். அவரின் இரு பக்கமும் பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். கல்யாண சுந்தரர் கல்யாண கோலத்துடனும் மகாவிஷ்ணு பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சியுடன் அருள் பாலிக்கிறார்கள். மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர். சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். இத்தல வைத்தியநாத சுவாமி சன்னிதியின் எதிரில் முத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். திரிபுரத்தை எரித்த திரிபுரசம்ஹாரமூர்த்தி இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். கருவறையைச் சுற்றி வரும்போது உள் சுற்றில் கருவறைக்கு வெளிப்புறம் ஆனையுரித்தேவர் லிங்கத்திற்கு பூசை செய்தல் இறைவன் தேவியரோடு இருத்தல் உள்ளிட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.

முன் காலத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட உலகைக் காக்கும் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவிக்கு மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க திருமால் அவளுக்கு ஒரு உபாயம் கூறினார். பூமாதேவி சிவனை வழிபட்டு சிவனிடம் ஒரு வரம் கேள். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய் என்றார். அதன்படி பூமாதேவி வழிபாட்டிற்கு ஒரு இடத்தைத் தேடினாள். திருவீழிமிழலைக்கு வடமேற்கே திருமால் சொன்னபடி ஒரு அற்புத இடத்தைக் கண்டாள். அங்கே பிரம்மனால் எற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம் தூய்மையாக இருந்தது. தான் வணங்க வேண்டிய தலம் இது என்று உணர்ந்து தேவ சிற்பியிடம் ஆலயம் அமைக்க கேட்டுக் கொண்டாள் பூமாதேவி.

தேவ சிற்பியான விஸ்வகர்மா அங்கே ஆலயம் அமைத்தார். வைகாசி மாதத்தில் குருவாரத்தில் ரோகிணியும் பஞ்சமியும் கூடிய சுப நாளில் தேவகுருவான பிரகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தார். அதில் மகிழ்ந்த பூமாதேவி உரிய முறைப்படி நாள்தோறும் இறைவனை பூஜித்து வணங்கி வந்தாள். பூசையில் மகிழ்ந்த உமாமகேஸ்வரர் தரிசனம் கொடுத்தார். பூமாதேவியே இந்த உலக உயிர்களின் சகல பாவங்களையும் போக்கும் தீர்த்தம் ஒன்றை உருவாக்கு என்று பணித்தார் இறைவன். அதன்படி பூமாதேவி தீர்த்தம் ஒன்றை உருவாக்கினாள். அதுவே பூமிதீர்த்தம் ஆகும். பூமாதேவி இங்கு வழிபாடு செய்ததால் இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. பூமா தேவியால் அருளப்பட்ட அற்புத பெருமை வாய்ந்த சிவதுஷ்டிகர ஸ்தோத்திரம் இத்தலத்திற்கு உண்டு.

இத்தலத்தில் நடராஜர் திருஉருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த உலோகச் சிற்பம் உலகின் பழமையான சிலைகளில் ஒன்றாகும். இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார். இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. நடராஜரின் உடம்பில் மனிதருக்கு இருப்பது போலவே கை ரேகை தழும்பு ரோமம் மார்பில் மரு உள்ளது. மதுரை உத்திரகோசமங்கை கோனேரிராஜபுரம் ஆகிய இம்மூன்று தலங்களிலும் நடராஜருக்கு திருவீதிவுலா கிடையாது.

நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் கூறினார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். சிவ பக்தரான அந்த சிற்பி ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும் அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. பணி தாமதமாவதை அறிந்த மன்னன் ஸ்தபதியை கடிந்து கொண்டார். நாளைக்குள் சிலை தயாராகவில்லை எனில் தண்டனை நிச்சயம் என்று எச்சரித்தான். நேரம் செல்ல செல்ல சிற்பிக்கு கவலையும் ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (உலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமானும் அம்பாளும் தம்பதி சமேதராக வந்தார்கள். உலைக் களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர். சிற்பத்தை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி உலைக் களத்தில் ஏது தண்ணீர்? வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது குடியுங்கள் என்றார். அந்த தம்பதிகளும் அதனை வாங்கிப் பருகினார்கள். மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும் சிவகாமி அம்பாள் விக்கிரகங்களாக மாறிப் போனார்கள்.

இதனைக் கண்ட சிற்பிக்கு வந்தது இறைவனும் இறைவியும் என்று உணர்ந்து கொண்டார். நடந்தவற்றை அப்படியே அரசரிடம் சென்று சொன்னார். உடனடியாக அங்கு வந்த அரசர் சிற்பத்தைக் கண்டு மிகவும் அற்புதமான சிலை என்று சிற்பியை பாராட்டினார். நடராஜரின் சிலையில் நகங்கள் உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ஆனால் சிற்பி சொன்னதை அரசனால் நம்ப முடியவில்லை. சிற்பி பொய் சொல்வதாக நினைத்த மன்னன் இந்த சிலை மனித ரூபத்தில் வந்த இறைவன் என்றால் சிற்பத்தை வெட்டினால் இரத்தம் வர வேண்டும் என்று தனது வாளால் சிலையை வெட்டினான். உடனடியாக அந்த இடத்தில் இருந்து இரத்தம் வந்தது. உடனே மன்னனின் கை கால்கள் செயலிழந்தன. தொழு நோய் மன்னனை பீடித்தது. தவறை உணர்ந்த மன்னன் இறைவனிடமும் சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக பரிகாரமும் கேட்டான். ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம் என்று இறைவன் அசீரிரியாக அருளினார். அதன்படி செய்து மன்னன் வழிபட்டு குணமடைந்தான். நடராஜர் விக்கிரகம் இப்படித்தான் உருவானது. தானே சுயம்புவாக தோன்றியவர் என்பதால் தம்முடைய மேனியில் மனிதனுக்கு உள்ளது போன்றே கையில் ரேகைகள் மச்சங்களுடன் மார்பில் மருவுடன் திகழ்கிறார். ருத்ராட்ச பந்தலின் கீழ் ஸ்வாமி தெற்கு நோக்கி அருள இவரை தரிசனம் செய்தபடி நால்வர் பெருமக்களும் அற்புதமாகக் காட்சி தருகின்றனர். மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம் கைவிரல் ரேகைகள் என்று இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவராக அருள் பாலிக்கிறார்.

நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எமதர்மர் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான். அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள். சிவன் பார்வதி திருமணக் காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவனும் பார்வதியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பை குடித்து சுயம்பு மூர்த்தியாக நடராஜர் சிவகாமி அம்மனாக காட்சி கொடுத்துள்ளனர். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் சனிபகவானை வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி பகவான் இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரு முறை புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன் நோய் தீருவதற்காக பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோயிலுக்கு காணிக்கையாக சிவனின் சன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான். ஒரு கிளிக்கு ஆத்ம ஞானம் அளித்த ஞான கூபம் என்ற கிணறு இன்றும் உள்ளது.

இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன் இராசேந்திரன் முதலாம் இராசாதிராசன் இரண்டாம் இராசேந்திரன் முதலாம் குலோத்துங்கன் காலத்தியவைகளாக உள்ளது. கல்வெட்டில் இறைவன் திருநல்லம் உடையார் என்று பொறிக்கப்பட்டுள்ளது. கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றிக் கட்டினார். வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவரின் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும் நக்கன் நல்லத் தடிகள் என்பவரால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும் குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன. தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது. அகத்தியர் உட்பட 16 சித்தர்களும் பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார்கள். இத்தலத்தை பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும் என்று அப்பர் தனது பாடலில் பாடியுள்ளார். அப்பர் திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 93 திருவிடைமருதூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 93 வது தேவாரத்தலம் திருவிடைமருதூர் புராணபெயர் இடைமருதூர் மத்தியார்ச்சுனம். மூலவர் மகாலிங்கம் மகாலிங்கேஸ்வரர் இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெருமுலையாள் ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை. தலவிருட்சம் மருதமரம். தீர்த்தம் காருண்யமிர்தம் காவேரி. கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்திலும் மூகாம்பிகை இருக்கிறாள். இந்தியாவிலேயே கொல்லூரிலும் திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சந்நிதி உள்ளது. இக்கோயிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயில் கோபுர அமைப்பில் உள்ளது. இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலின் தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலுள் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும் கீழவீதியில் விசுவநாதர் கோயிலும் மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும் தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும் வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இத்தலத்தை பஞ்ச லிங்கத்தலம் என அழைக்கப்படுகிறது. இத்தல விநாயகர் ஆண்டகணபதி எனப்படுகிறார். கோயிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இந்த விநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் கொண்டு வந்து கொடுக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக வினாயகர் இறைவனை வழிபடுகிறார். மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில் தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவர் ஆண்ட விநாயகர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

திருவிடைமருதூருக்கு அகத்தியர் முனிவர்களோடு வந்து உமாதேவியை நினைத்து தவம் செய்தார். உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார். முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு விட்டு இறைவனையும் காண வேண்டும் என்று கூற உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவ தவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு மனமிறங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார். காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார். வியப்பு கொண்டு உமையம்மை இறைவனே பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே என்று வினவ உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே. நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர் அதனாலே பூசிக்கிறேன் என்றார். முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெறுகிறார்கள் என்று தலவரலாறு கூறுகிறது.

திருவிடைமருதூர் தலத்தின் அருகில் உள்ள காட்டிற்கு வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசன் வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்து விட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும் வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

திருவிடைமருதூர் கோவிலுக்குள் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன. இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் செய்த பலனை அடைவர்கள். பிரணவத் திருச்சுற்றில் இப்போதும் நாதோற்பத்தி விளங்கி வரும் சிறப்புடையது இத்திருச்சுற்றை வலம் வருவோர் மெஞ்ஞானம் பெற்றுச் சிறப்பார்கள் என்று தலவரலாறு சொல்கிறது. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணம் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வருகிறது.

பத்திரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராக இருந்தவரின் இயற்பெயர் பத்ருஹரி. உஜ்ஜனியின் மாகாளம் என்ற பகுதியின் அரசராக இருந்தவர். அரசராக இருந்தாலும் சிவபக்தியில் சிறந்தவர். ஒரு நாள் அவருடைய அரண்மனையில் புகுந்த திருடர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். செல்லும் வழியில் இருந்த ஒரு விநாயகர் கோயிலில் தாங்கள் கொள்ளையடித்து வந்த ஆபரணங்களில் ஒரு மாணிக்கமாலையை விநாயகருக்குக் காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றார்கள். அந்த மாணிக்கமாலை விநாயகரின் கழுத்தில் விழுவதற்கு பதிலாக அங்கே நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் கொள்ளை போன செய்தியை அறிந்த பத்ருஹரி வீரர்களை நாலாபுறமும் அனுப்பி கொள்ளையர்களைத் தேடச் சொன்னார். வீரர்களின் பார்வையில் கோயிலில் நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரையும் அவர் கழுத்தில் இருந்த மாணிக்க மாலையையும் பார்த்து இவர்தான் திருடன் என்று நினைத்து கைது செய்து அழைத்துச் சென்றார்கள். பத்ருஹரியும் தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார். வீரர்கள் பட்டினத்தாரைக் கழுமரத்தின் அருகே கொண்டு சென்றனர். அப்போது பட்டினத்தார் என் செயலாவது ஒன்றுமில்லை என்று தொடங்கும் பாடலைப் பாடியதும் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பத்ருஹரி ஓடி வந்து பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து தமக்கு தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி பிரார்த்தித்தார். பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார் அவருக்கு தீட்சை வழங்கினார் அவரே பத்திரகிரியார் எனப் பெயர் பெற்றார். குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார் பத்திரகிரியார்.

திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் இருந்துகொண்டு தினமும் பிச்சை ஏற்று குருவுக்கு சமர்ப்பித்த பிறகே தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் அப்படித் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு உணவை உண்ணும் வேளையில் பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார் அதற்குச் சிறிது உணவு கொடுத்தார். அதுமுதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது. ஒருநாள் பட்டினத்தாரின் இறைவன் ஓர் ஏழை வடிவம் கொண்டு பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். அதற்கு பட்டினத்தார் மேலைக் கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் ஒருவன் இருக்கிறான். அங்கே செல்வாய் என்று கூறி அனுப்பினார். இறைவனும் மேற்கு கோபுரத்துக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் ஐயா எனக்குப் பசியாக இருக்கிறது. கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஒருவரிடம் பசிக்கு அன்னம் கேட்டபோது அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை இங்கே அனுப்பினார் என்று கூறினார். உடனே பதறிப்போன பத்திரகிரியார் ஐயோ இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும் நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே என்று வருந்தி பிச்சையோட்டை நாயின் மேல் விட்டெறிந்தார். அது நாயின் தலையில் பட்டு இறந்து போனது. பத்திரகிரியாரின் தொடர்பு காரணமாக அந்த நாய் அடுத்த பிறவியில் காசி அரசருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்ததும் அரசன் வரன் தேட முயன்ற போது அப்பா நான் யாருக்கும் உரியவள் இல்லை. திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்திருக்கும் தவ முனிவருக்கே உரியவள் என்று கூறினாள். அரசரும் பெண்ணின் மன உறுதியைக் கண்டு திருவிடைமருதூருக்கு அழைத்துச் சென்றார். பத்திரகிரியாரைக் கண்டு வணங்கிய அரசகுமாரி தங்களின் அடிநாய் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள். பத்திரகிரியார் அவளை அழைத்துக்கொண்டு கிழக்குக் கோபுரத்துக்கு வந்து தம்மை ஆட்கொண்ட பட்டினத்தாரிடம் எங்களுக்கு முக்திநிலை கிடையாதா? என்று கேட்டார். உடனே பட்டினத்தார் எல்லாம் மகாலிங்க சிவன் செயல் என்று கூறினார். பத்திரகிரியாரும் மகாலிங்கேச என்று இறைவனை நோக்கி செல்ல அவர் பின்னே இளவரசியும் செல்ல அப்போது லிங்கத்தில் தோன்றிய பேரொளி பத்திரகிரியாரையும் அரசகுமாரியையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டு மறைந்தது. பட்டினத்தார் எமக்கு முதலில் முக்தி அளிக்காமல் தன்னுடைய சீடருக்கு முதலில் முக்தி கொடுத்துவிட்டாய் தனக்கு எப்போது என்று இறைவனை வேண்டினார். அப்போது இறைவனை நம்புகிறவனை விட இறைவனை நம்பும் குருவை நம்பும் சீடர் மிகச்சிறந்தவர் என்பதை எடுத்துக் காட்டவே அவருக்கு முக்தி என்று அசிரிரியாய் இறைவன் கூறினார். அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது. கிழக்கு மட வீதியில் நாயடியார் கோயில் என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு வந்தால் இன்றும் காணலாம்.

ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்து
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?
என்பது போன்ற எண்ணற்றப் பாடல்களைப் பத்திரகிரியார் பாடி இருக்கிறார்.

வடக்கே வடுகநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனத்திற்கும் ஸ்ரீ சைலம் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர்க்கும் (புடார்ச்சுனம்) இடையில் இத்தலம் இருப்பதால் இதற்கு இடைமருது (மத்தியார்ச்சுனம்) எனும் பெயர் அமைந்தது. அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள். இம்மூன்று தலங்களிலும் தலவிருட்சம் மருத மரமே. அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம் காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும் சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் புராண வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முக்தி பெற்றான் என்று புராண வரலாறு கூறுகிறது.

இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும். இக்கோயிலில் சுமார் 180 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சரத் தேரோட்டம் 23 ஜனவரி 2016 இல் நடைபெற்றது. விநாயகர் வள்ளி தெய்வானையுடன் முருகன் மகாலிங்கசுவாமி தேவி சண்டிகேஸ்வரர் இந்த ஐந்து தேர்களில் எழுந்தருளினர். இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம் ஸ்காந்தம் லிங்கப்புராணம் பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. மருதவனப் புராணம் திருவிடைமருதூர் உலா திருவிடைமருதூர் கலம்பகம் திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி திருவிடைமருதூர் நொண்டி நாடகம் ஆகிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சோழர் பாண்டியர் நாயக்கர் மராட்டியர் ஆகியோர் இத்திருக் கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர். சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன. உமாதேவியார் விநாயகர் சுப்பிரமணியர் கோடி உருத்திரர் விஷ்ணு சந்திரன் பிரமாதி தேவர்கள் லட்சுமி சரஸ்வதி மூன்று கோடி முனிவர்கள் சந்திரன் சனிபகவான் ஆகியோர் இறைவனை பூசித்து பேறு பெற்றுள்ளனர். காசிப முனிவர்க்கு இடைமருதீசனாகிய மருதவாணர் பால கண்ணனாகக் காட்சி தந்துள்ளார். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். பட்டினத்தார், பத்திரகிரியார் வரகுணபாண்டியன் அருணகிரிநாதர் கருவூர்தேவர் ஆகியோர் வழிபட்டு பெரும்பேறு பெற்றிருக்கிறார்கள். பட்டினத்தார் இத்தலம் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார். அப்பர் சுந்தரர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். கருவூர்தேவர் காளமேகப் புலவர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 89 கும்பகோணம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 89 வது தேவாரத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆகும். மூலவர் சிவலிங்க வடிவில் ஆதிகும்பேசுவரர் அமுதேசுவரர் குழகர் கற்பகநாதேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கம் கீழே பருத்தும் மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். இங்கு மூலவருக்கு அபிசேகம் கிடையாது. பௌர்ணமி நாட்களில் மட்டும் புனுகு சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. உலகம் பிரளய காலத்தில் அழிந்த போது உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான் பிரம்மா மூலம் படைப்புக் கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். அந்த கும்பமானது பிரளய காலம் முடிந்ததும் உலகம் முழுவதும் நீரால் சூழ்ந்திருந்த போது கும்பமானது இத்தலத்தில் ஒதுங்கியதால் இந்த ஊருக்கு கும்பகோணம் என்று பெயர் ஏற்பட்டது. இறைவன் கும்பேஸ்வரர் என்று பெயர் பெற்றார். நவக்கிரகங்கள் எருக்க இலையில் தயிர்சாதம் படைத்து சிவபெருமானை வழிபட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஞாயிறு தோறும் உச்சிகால பூஜையின் போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு படைக்கின்றனர்.

இறைவியின் பெயர் மங்களாம்பிகை ஆகும். மந்திரபீட நலத்தாள் என்ற பெயரும் உள்ளது. தேவி விஷ்ணுவைப் போல ஒரு கையை தொடையில் வைத்து மங்களத்தை பொழிகிறாள். மங்களாம்பிகை மந்திர சக்தி நிரம்பியவள். தம்மை அன்போடு வணங்குபவர்களுக்கு மங்களத்தை அருளுகின்றாள் ஆகையால் மங்களநாயகி என்றும் சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும் தம் திருவடிகளை சரணடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தள் என்றும் பெயர் பெற்றாள். திருஞானசம்பந்தர் இவளை வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப் போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால் மொத்தம் 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபீடேஸ்வரி என்ற திருநாமமும் பெறுகிறாள். மங்காளாம்பிகை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள். அம்பாளின் வலது கையில் சாத்திய தாலிக் கயிறுகளை பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. சக்தி பீடத்தில் 12 ஆவது கோயில் மங்களாம்பிகை கோயிலாகும். இக்கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மந்திரிணி சக்தி பீடமாகும். அம்பாளின் உடற்பாகம் 51 சக்தி வடிவ பாகங்களாக 51 தலங்களில் காட்சியளிக்கின்றன. இதில 50 தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள் 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள். கோயில் விமானம் மங்கள விமானம். இறைவி மங்களாம்பிகை. வினாயகர் மங்கள விநாயகர். தீர்த்தம் மங்கள தீர்த்தம். புராணபெயர் திருமங்களக்குடி என அனைத்தும் மங்களம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. ஆகவே இத்தலம் பஞ்ச மங்கள சேத்ரம் எனப்படுகிறது.

ஊர் கும்பகோணம். புராண பெயர் திருக்குடமூக்கு திருமங்களக்குடி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் மகாமகம் குளம் பொற்றாமரை தீர்த்தம் வருண தீர்த்தம் காஸ்யப தீர்த்தம் சக்கர தீர்த்தம் மாதங்க தீர்த்தம் மற்றும் பகவத் தீர்த்தம் (காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்நானத் தலங்கள்) என கோயிலுக்கு வெளியே ஏழு தீர்த்தங்கள் உள்ளது. மங்கள குள தீர்த்தம் நாக தீர்த்தம் குர தீர்த்தம் ஆகிய மூன்று கிணறுகள் மற்றும் சந்திர தீர்த்தம் சூரிய தீர்த்தம் கௌதம தீர்த்தம் மற்றும் வராக தீர்த்தம் ஆகிய நான்கு குளங்களும் கோயிலுக்குள் அமைந்துள்ளன. பொற்றாமரை குளம் கும்பேஸ்வரர் கோவிலுக்கும் சாரங்கபாணி கோவிலுக்கும் நடுவில் உள்ளது.

கும்பகோணம் ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை பூமி குழிந்து தாங்குக என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது. இத்திருவிழாவின் போது கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி காவிரி குமரி பயோடினி சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுகின்றனர். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும் அவரைச் சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத் திருவிழாவும் சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கிமீ தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம் ஆனியில் திருமஞ்சனம் ஆடியில் பதினெட்டாம் பெருக்கு ஆடிப்பூரம் பங்குனித் திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. திருவிழாக் காலங்களில் கோயில் தெய்வங்களை ஏற்றிச் செல்வதற்காக வெள்ளி முலாம் பூசப்பட்ட ஐந்து தேர்கள் கோயிலில் உள்ளன.

இராஜகோபுரம் வழியாக நுழைந்து நீண்ட மண்டபத்தை கடந்தால் பலி பீடம் கொடி மரம் தொடர்ந்து நந்தி தேவர் உள்ளார். முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள் சப்த மாதர்கள் காமதேனு பவலிங்கம் சர்வ லிங்கம் ஈசான லிங்கம் பசுபதி லிங்கம் ருத்ர லிங்கம் உக்ர லிங்கம் பீம லிங்கம் மகாலிங்கம் தட்சிணாமூர்த்தி சற்று தள்ளி வலஞ்சுழி விநாயகர் பிட்சாடனர் முருகன் அட்சயலிங்கம் சகஸ்ரலிங்கம் அன்னபூரணி கஜலட்சுமி மகாலட்சுமி கோஷ்டத்திலுள்ள பிரம்மா சரஸ்வதி அஷ்ட புஜ துர்கை நவநீத விநாயகர் கிராத மூர்த்தி பைரவர் கால பைரவர் ஜுரகேஸ்வரர் சாஸ்தா மகான் கோவிந்த தீட்சிதர் நாகாம்பாள் ஆகியோர் உள்ளனர். நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் ஆதி விநாயகர் எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திரபீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறு முகத்துடன் ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் சன்னதியிலுள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் பூஜை நடைபெறுகிறது. இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.

கோயிலில் வேடமூர்த்திக்கு சன்னதி உள்ளது. சிவபெருமான் வேடர் வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இந்த சன்னதி உள்ளது. முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது பிரம்மா தனது படைப்புத் தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில் மிதக்க விடு எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் இந்த இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது. கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே கும்பேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாஇலை தர்ப்பை உறி வில்வம் தேங்காய் பூணூல் முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக் கோயில்களாக விளங்குகின்றன. மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய கோயில் அமைப்பு 9 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டின் தஞ்சாவூர் நாயக்கர்களின் விஜயநகர ஆட்சியாளர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட பதினாறு தூண்கள் கொண்ட மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்தக் கோயில் பற்றிய புராண கதைச் செய்திகளை காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். இந்திரன் அஷ்டதிக்கு பாலகர்கள் காமதேனு கார்த்தவீரியன் சுவர்ணரோமன் காசிபர் உள்ளிட்ட பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்று பாடுகிறார். ஏழாம் நூற்றண்டில் வாழ்ந்த நாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. புரந்தர தாசர் தனது சந்திரசூடா சிவசங்கர பார்வதி ரமணா பாடலில் கும்பேஸ்வரரைப் போற்றி ஒரு பாடலை இயற்றினார். அப்பாடலில் கும்பபுர வசனு நீனே என்று குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 85 திருச்சத்தி முற்றம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 85 வது தேவாரத்தலம் திருச்சத்தி முற்றம். புராண பெயர் திருச்சத்திமுத்தம். மூலவர் சிவக்கொழுந்தீசர் தழுவக்குழைந்த நாதர் சக்திவனேஸ்வரர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை அரை வட்ட தொட்டி வடிவில் உள்ளது. அம்பாள் பெரியநாயகி. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. தீர்த்தம் சூல தீர்த்தம். அம்மாள் சிவனுக்கு பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் திருச்சத்திமுத்தம் என பெயர் பெற்றது. இங்கு அம்மாளுக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்திற்கு அருகில் சிவலிங்கத்தை அம்மாள் கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலம் உள்ளது. காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக தலவரலாறு உள்ளது.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிராகாரங்களைக் கொண்ட கிழக்கு நோக்கிய பெரிய கோவில். வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். வெளிப் பிராகாரம் பெரியது. இரண்டாவது கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன. நடராச சபை உள்ளது. மூல வாயிலின் முன்னால் ஒருபுறம் சோமாஸ்கந்தரும் மறுபுறம் சத்திமுத்தம் தரும் தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். உட்பிராகாரத்தில் தல விநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகம் கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன. சுவாமி சன்னதியின் வாசலின் வட புறத்தில் சக்தி சிவனுக்கு முத்தமளிக்கும் தல மூர்த்தியும் உள்ளனர். இவ்வைதீகச் சிற்பத்தின் பின்புறம் அம்மன் ஒரு காலில் நின்று தவம் செய்யும் காட்சியையும் காணலாம். சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். முருகப் பெருமான் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. நடராஜர் சரபேஸ்வரர் கஜலட்சுமி அகஸ்தியர் காசி விஸ்வநாதர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சூரியன் சந்திரன் ஆகியோர் திருவுருவங்கள் உள்ளது. நாகர் வழிபட்ட சிவலிங்கங்கள் உள்ளது. சனீஸ்வரர் பிரதான மண்டபத்தில் உள்ளர். இக்கோயிலில் நவக்கிரகம் இல்லை.

சிவனும் சக்தியும் பக்தியே முக்திக்கு வித்து என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினர். இதற்காக சக்தி காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணி சூல தீர்த்தத்தின் அருகே இத்தலம் உள்ள இடத்தில் இறைவனை பூஜை செய்து வந்தாள். சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டார். சக்தியின் மன உறுதியை அனைவரும் அறிந்து கொள்ள சிவன் வராமல் காலம் தாழ்த்தினார். சக்தி தனது உறுதி கலையாமல் தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான் காவிரி ஆற்றில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தினார். பார்வதி தேவி உருவாக்கிய சிவலிங்கம் வெள்ளத்தில் அழிந்து போகும் நிலையில் இருந்தது. உடனே அதைத் தழுவி நீரிலிருந்து பாதுகாத்தபடியே தவத்தை தொடர்ந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்தார் சிவன். தீப்பிழம்பாக காட்சி தந்தாலும் அதில் ஈசன் இருப்பதை உணர்ந்த சக்தி அந்த நெருப்பை கட்டித் தழுவினாள். சிவன் குளிர்ந்து அம்மாளை தன்னோடு ஏற்றுக் கொண்டார். தற்போதும் பிரதான லிங்கத்தில் அக்னியின் தடயங்கள் உள்ளன.

திருநாவுக்கரசர் தனக்குத் தருவடி தீட்சையருளுமாறு வேண்டிப் பாடினார். இறைவன் திருநல்லூருக்கு வருமாறு கூறி அருளிய மூர்த்தியே இங்கு மூலவராக உள்ளார். திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம். திருஞானசம்பந்தருக்கு இத்தலத்திலிருந்து இறைவன் முத்துப்பந்தல் அருளினார். அதன் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார். செங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்த செம்பியம் மாதேவி ஆவார். முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜ ராஜ சோழன் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன. அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும் விளக்கேற்ற காசும் ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்தை பார்வதி அகத்தியர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சேக்கிழார் பெரிய புராணத்தில் மருவாரும் குழல்மலையாள் வழிபாடு செய்ய அருள் தருவார்தம் திருச்சத்திமுற்றம் என்று பாடியுள்ளார். இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 83 நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 83 வது தேவாரத்தலம் நல்லூர் புராணபெயர் திருநல்லூர். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர். இங்கு சிவன் சதுர ஆவுடையாராக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். 1. தாமிர நிறம் 2. இளம் சிவப்பு 3. தங்க நிறம் 4. நவரத்தின பச்சை 5. இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம். இப்படி ஐந்து வண்ணத்தில் காட்சி தருவதால் இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிவலிங்கத் திருமேனி ஒரு நாளில் பகல் ஒன்றில் 6 நாழிகைக்கு ஒரு முறை ஐந்து தடவை நிறம் மாறுகிறார். பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதால் லிங்கத்தில் துளைகள் இருப்பதைக் காணலாம். மூலவருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது அகத்திய லிங்கம் எனப்படுகிறது. உற்சவர் கல்யாண சுந்தரேஸ்வரர். அம்பாள் கல்யாணசுந்தரி கிரிசுந்தரி. தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். தலவிருட்சம் வில்வம் மிகவும் பழமையானது. முதன் முதலாக தோன்றிய வில்வமரம் என்பதால் இதற்கு ஆதிமரம் என்ற பெயரும் உண்டு. தீர்த்தம் சப்த சாகரம். பிரம்மதேவர் இத்திருக்குளத்தின் கிழக்குத் திசையில் ரிக் வேதத்தையும் தெற்கு திசையில் யசூர் வேதத்தையும் மேற்குத் திசையில் சாம வேதத்தையும் வடக்கு திசையில் அதர்வண வேதத்தையும் நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதிணென் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது. திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். முருகப் பெருமான் ஒரு முகம் நான்கு கரங்களுடன் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். எட்டு கைகளுடன் கூடிய அஷ்டபுஜ மகாகாளி இங்கு அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் ஆடும் நடராஜர் அகத்தியர் காசிவிஸ்வநாதர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் காசி விஸ்வநாதர் கணநாதர் காசிவிநாயகர் பாணலிங்கம் விஸ்வநாதர் முருகன் நால்வர் குந்திதேவி தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை சண்டிகேஸ்வரர் ஆகியோரை மண்டபங்களிலும் பிராகாரத்திலும் தரிசிக்கலாம். முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து தியாகராஜரைப் பெற்று திருவாரூர் செல்லும் போது இத்தலத்தில் 3 நாள் இருந்து தியாகராஜரை வைத்து பூஜை செய்துள்ளார். கொடிய அரக்கனாகிய இரண்யனைக் கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்தார். இரணியனை மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாய் இருக்கவேண்டும் என்று இறைவன் பணித்தார். அதன்படி அந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்

பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் கோச்செங்கட் சோழன் கட்டிய ஒரு மாடக்கோவிலாகும். ஐந்து நிலை அழகான ராஜ கோபுரம் மற்றும் 3 நிலைகளையுடைய உள் கோபுரத்துடன் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் ஒரு விசாலமான இடம் உள்ளது. இந்தப் பிரகாரத்தில் கவசமிட்ட கொடிமரமும் அதற்கு முன்னால் கொடிமர விநாயகரும் உள்ளார். இதையடுத்து வடபுறம் வசந்த மண்டபமும் தென்புறம் அமர்நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த துலா மண்டபமும் உள்ளன. 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் தனது மனைவி மற்றும் மகனுடன் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தி பெற்ற தலம் திருநல்லூர். இத்தலத்தில் அமர்நீதி நாயனார் அவர் மனைவி மகன் அருகில் அந்தணர் உருவில் இறைவன் ஆகியோர் உருவச் சிலைகள் உள்ளது. ஒருசமயம் ஆதிசேசனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேசன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேசன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும் மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தார். நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.

இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என எண்ணிய அகத்தியருக்கு நினைக்கும் போது திருமண காட்சியை கொடுப்பதாக இறைவன் வரமளிக்கிறார். அதன்படி இத்தலம் வந்து திருமணக் காட்சியை காண எண்ணிய அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்தார். சிவலிங்கத்தின் பின்னால் அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதை வடிவில் காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும் பிரம்மாவும் காட்சி தர அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம். திருநாவுக்கரசர் திருச்சத்திமுற்றத்தில் இறைவன் தன்னுடைய திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருள வேண்டும் என்று இறைவனிடம் பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைவன் இத்தலத்தில் திருநாவுக்கரசருக்கு பாத தரிசனம் தந்தார். அன்று முதல் இங்கு பெருமாள் கோயிலைப் போல சடாரி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி மாசி மகத்தின் போது கோயிலுக்குள் உலா வருவார். மாடக்கோயிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் போது அடியார்கள் வெண்சாமரமும் விசிறியும் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம். இத்தலத்தின் மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம் பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும் காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். ஆண்டுக்கு ஒருமுறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும் பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது.

பாண்டவர்களின் தாய் குந்திதேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க குந்தி தேவி நாரதரிடம் யோசனை கேட்கிறாள். ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும் என நாரதர் கூறினார். நான் பெண் என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும் எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும் என்கிறாள் குந்தி. அப்படியானால் கும்பகோணம் அருகிலுள்ள நல்லூர் சென்று 48 நாட்கள் கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடு. அதற்குள் நான் வேறு வழி சொல்கிறேன் என்கிறார் நாரதர். குந்தி வழிபாடு செய்து வருவதற்குள் நல்லூர் தலத்திலுள்ள குளத்தில் ஏழு கடல்களின் நீரையும் நாரதர் சேர்த்து விடுகிறார். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடி தன் தோஷங்கள் நீங்கப் பெற்றாள். மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும் இக்குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று தல புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடல்கள் பாபாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 51 திருஐயாறு (திருவையாறு)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 51 வது தேவாரத்தலம் திருஐயாறு (திருவையாறு) ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால் இப்பெயர் பெற்றது. மூலவர் பஞ்சநதீஸ்வரர் ஐயாற்றீசர் செம்பொற்சோதீஸ்வரர் பிரணதார்த்திஹரன் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். அம்பாள் அறம்வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும் மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள். எனவே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது.

சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட தட்சிணாமூர்த்தி தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவரை ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சினாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம் அபய முத்திரையும் இடது கரங்களில் சூலம் வேதச்சுவடிகள் தாங்கியும் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து தட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் இது. திருவீழிமிசையில் கண் மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால் வேதங்களின் பெருமைகளை உணர்ந்து இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. எனவே இக்கோவில் குரு ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளார். தலமரம் வில்வம். தீர்த்தம் சூரியபுட்கரணி மற்றும் காவிரி. சிவனின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுள் ஐயாறப்பர் கோயில் தென் கயிலைக் கோயில் ஒலோகமாதேவீச்சரம் என்று மூன்று கோயில்கள் உள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள இன்ஜினியர்கள் இந்த சப்தம் கேட்பது பற்றி ஆய்வு செய்தனர். ஆனால் இதற்கான காரணத்தை அறிய முடியவில்லை.

கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும் 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுர மண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும் சப்தமாதர்களும் ஆதிவிநாயகரும் நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர் சுப்பிரமணியர் சோமஸ்கந்தர் தட்சினாமூர்த்தி நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும் அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும் அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும் உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம். இத்தலத்தில் முருகப்பெருமான் வில் வேல் அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக தனுசுசுப்ரமணியம் என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். நவக்கிரகங்களில் இக்கோவில் சூரிய தலமாகும். சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

இத்தலத்திலுள்ள வடகயிலாயம் தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் ஓலோக மாதேவீச்சுரம் என்ற கற்கோவில் உள்ளது. இது வட கைலாயம் எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதலாம் ராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் தென் கைலாயம் எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் ராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன் மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே இந்த ஆட்கொண்டாரின் உருவம். இவருக்கு வடைமாலை சாத்துகிறார்கள். சில சமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் சாற்றப்படுவதுண்டு. இங்குள்ள தியான மண்டபம் கட்டப்பட்ட விதம் அபூர்வமானது. சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது. அப்போது அங்கு நான்கு குழிகள் தோண்டி அதில் தங்கமும் வெள்ளியும் போட்டு வைத்திருந்தனர். இதனை கட்டியவர்கள் தங்களுக்கு கூலியாக தங்களால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.

இக்கோவில் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்த போது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது. திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். காசியில் தன்னுடன் வந்த அடியார்களை தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய் அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார்.

சிலாத முனிவர் என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. அவரது தந்தை குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால் நந்தி வாய்நுரைநீர் அமிர்தம் சைவ தீர்த்தம் சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். நந்திகேசர் தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதை அறிந்து கழுத்தளவு குளத்தின் நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஏழுகோடி முறை ஓம் நமசிவாய உருத்திர ஜபம் செய்தார். தவத்தை ஏற்றுக் கொண்ட இறைவன் ஞானோபதேசமும் நந்தீசர் எனும் தீட்சாநாமமும் சிவகணத் தலைமையும் முதல் குருநாதன் என்ற தகுதியையும் அருளினார். அத்துடன் இறைவன் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் மகளை சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூச நட்சத்திரத்தன்று திருமணம் செய்துவைத்தார். சுந்தரரும் சேரமான் நாயனாரும் அக்கோவில் இறைவனை தரிசிக்க வரும்போது காவிரியின் இரு பக்கத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரர் பதிகம் பாடியதும் வெள்ளம் ஒதுங்கி நின்று இருவருக்கும் வழி தந்தது. பிற்காலச் சோழர் பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. திருநந்தி தேவர் லட்சுமி இந்திரன் வருணண் வாலி சேரமான் பெருமாள் ஐயடிகள் காடவர்கோன் பட்டினத்துப் பிள்ளையார் அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். அருணகிரிநாதர் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.