திருநீறு

ஒருவன் வறுமையில் வாடிக் கொண்டிருந்தான். அவன் சோம்பேறியும் அல்ல. சென்ற ஜென்ம பிரதிபலனோ அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. அவன் பொய் பேச மாட்டான். ஆகையால் அவனை அனைவரும் வெறுப்பர்கள். ஒரு நாள் தன் வாழ்வை நொந்து நடந்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு அருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் ஐயா சற்று எனக்காக நிற்க முடியுமா என கேட்டான். சிவனடியாரும் என்ன வேண்டும் உனக்கு எனக்கேட்டார். சிறிய சந்தேகம் தீர்த்து அருள்வீராக என்று அவரை வணங்கி தன் கேள்வியை கேட்டான். ஐயா தாங்கள் ஏன் இப்படி சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான்.

சிவனடியாரும் இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு. அதன் அடையாளமே இது நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய் விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்க வேண்டும். ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக் கூடாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவும் இன்னும் உயிருள்ள வரை இதுவே மகாலட்சுமி அம்சம் இதையணிந்தால் செல்வம் பெருகும் என்பதற்காகவும் திருநீறு அணிகிறேன் என்றார். அதற்கு அவன் சுவாமி எங்கள் குல வழக்கத்தில் இதை அணிய மாட்டார்கள். நானும் வறுமையில் வாடுகிறேன் நான் என்ன செய்வேன் என்று சிவனடியாரிடம் புலம்பினான். சிவனடியாரும் சரி நீ திருநீறு அணியவில்லை என்றாலும் பரவாயில்லை அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும் என சொல்லி அங்கிருந்து கிளம்பினார். ஏழை சிந்தித்தான். நாம் பூச வேண்டாம் சிவனடியார் சொல்லியது போல் திருநீறு அணிந்தவரின் நெற்றியை பார்ப்போம் என்று முடிவு செய்தான். வீட்டின் எதிரில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டு அதிகாலை எழ வேண்டும் என்று உறங்க சென்றான். அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித் திருநீறை காண காத்திருந்தான். குயவர் வரவில்லை விசாரித்தான். அவர் சீக்கிரமாகவே சென்று விட்டார் என்று சொன்னார்கள். நாம் மண்ணெடுக்கும் இடத்திற்கே சென்று அவரின் நெற்றி விபூதியை தரிசனம் செய்யலாம் என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்.

குயவர் நெற்றி நிறைய விபூதியுடன் மண்ணை தோண்டிக் கொண்டிருக்கும் போது எதிர் பாராதவிதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது. அந்த தங்கப் பானை புதையலைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியுடனும் இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்று எண்ணினார். ஆனால் பானை இருவர் சேர்ந்தால்தான் தூக்க முடியும் என்ற அளவிற்கு எடை கணமாக இருந்தது. யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு வந்து சேர்ந்த ஏழையானவன் அவர் நெற்றியைப் பார்த்து பார்த்துட்டேன் பார்த்துட்டேன் என ஆவலாய் கூறினான். குயவர் இவன் புதையலைத்தான் பார்த்து விட்டானோ? என்று எண்ணி உண்மையாகவே நீ பார்த்தாயா? எனக் கேட்டான். ஏழையானவன் ஆமாம் நிறைவாகக் கண்டு விட்டேன் எனக் கூறினான். அதற்கு குயவன் அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைப்பிடி ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்வோம் எனக் கூறினான். ஏழைக்கு அப்போதுதான் உண்மை விளங்கியது. அப்போது சிந்தித்தான் நெற்றியைப் பார்த்ததற்கே தங்கம் பாதி கிடைத்தது இன்னும் நாம் பூசினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தன் குல வழக்கத்தை தள்ளி வைத்து விட்டு திருநீற்றை பூசினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 329

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இந்த பரந்த பாரத மண்ணிலே ஏராளமான ஞானிகள் தோன்றியும் இன்னமும் தோன்றவும் இருக்கிறார்கள். என்றாலும் எம்போன்ற ஞானிகளுக்கு என்ன வருத்தம் தெரியுமா? இதுபோல ஞான கருத்துக்களை கேட்க அதிகம் வாய்ப்புகளைப் பெறாத அல்லது பெற முடியாத மேலை தேச மனிதர்கள் கூட அடிப்படை தர்மத்தை மறக்காமல் ஓரளவு வாழுகிறார்கள். தான் வாழும் நாட்டையும் வீட்டையும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சகல தர்மங்களும் நியாயங்களும் போதிக்கப்பட்ட இந்த தேசத்தில்தான் சுத்தம் என்றால் என்ன? என்றே தெரியாத நிலைக்கு மனிதன் ஆட்பட்டு விட்டான். எதை எங்கே செய்யக் கூடாதோ அதை அங்கே செய்வதும் எதை எங்கே செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் இருக்கும் ஒரு சராசரி நிலையில் கல்வி கற்றவன் கல்வி கல்லாதவன் என்று அனைத்து தரப்பினரும் இருக்கிறார்கள். நதியை பாழ்படுத்துதல் விருட்சங்களை வெட்டி சாய்த்தல் தான் வாழ வேண்டும் என்றால் இந்த பூமி எந்த சூழலுக்கு ஆட்பட்டாலும் பாதகமில்லை. இன்றைய தினம் நானும் என் சமுதாயமும் வாழ்ந்தால் போதும் என்று விருட்சங்கள் மீது கருணையே இல்லாமல் அடியோடு வேரோடு வெட்டி சாய்த்தல் நீரை மாசுபடுத்துதல் என்று பஞ்ச பூதங்களையும் எந்த அளவுக்கு பாழ்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பாழ்படுத்திக் கொண்டு இருக்கிறான் இங்குள்ள மனிதன்.

இந்த அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு புரிதலோடு ஒன்று தவறு என்று தெரிந்து விட்டால் அதை உற்பத்தி செய்யாமல் நாட்டிற்கும் தன் சமுதாயத்திற்கும் பின்னால் வரும் சந்ததிக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்ற சிந்தனை இங்குள்ள மனிதர்களை விட கடல் தாண்டிய தேசத்தில் வாழும் மனிதர்களிடம் இருக்கிறது. எல்லா விதத்திலும் தன்னை பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் மனிதன் அவனை பார்த்து அடிப்படை தர்மத்தை ஒழுங்கை கற்றுக் கொண்டால் இந்த தேசமும் நன்றாக இருக்கும். இதையெல்லாம் ஒரு சித்தன் சொல்லி செய்ய வேண்டிய அவசியமேயில்லை. இவையெல்லாம் மிக மிக அடிப்படை விஷயமாகும். எனவே இந்தக் கருத்தையும் இங்குள்ள அனைவரும் மனதிலே வைத்து தம்மை நாடும் நட்புக்கும் உறவுக்கும் இது போன்ற கருத்துக்களை எடுத்துக் கூறினால் சஹஸ்ரம் எனப்படும் ஆயிரம் மனிதரிடம் உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறினால் அதில் கட்டாயம் ஒரு மனிதன் பின்பற்றுவான் என்ற அளவிலே அனைத்தும் நலம் நலம் என்று நலமாய் மாறும் அப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 328

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

நன்றாக உதவி செய்யக் கூடிய எண்ணம் ஒருவனுக்கு வலுத்து விட்டது. இனி யார் கேட்டாலும் என்ன கேட்டாலும் தருகின்ற மன நிலைக்கு வந்து விட்டான். அவனை பொருத்தவரை தயக்கமின்றி தன் ஆஸ்தி முழுவதையும் அள்ளித் தர சித்தமாகி விட்டான் என்ற நிலையிலே அடுத்த நிலையில் நாங்கள் என்ன கூறுவோம்? அள்ளிக் கொடுத்துக் கொண்டே போ. இவன் நல்லவனா? கெட்டவனா? என்று ஆய்ந்து பார்க்காதே. ஒரு அமைப்பு நல்ல அமைப்பா? தீமையான அமைப்பா? என்றெல்லாம் ஆய்ந்து பார்க்காதே என்று ஆதியில் கூறுவோம் ஏன்? எடுத்த எடுப்பிலேயே சிந்தித்து பார்த்து நீ இவனுக்கு உதவி செய்கிறாயே இவன் நல்லவனா? தீயவனா? நீ தருகின்ற தனத்தை வைத்துக்கொண்டு தவறான வழியில் செலவழித்தால் என்ன செய்வாய்? எனவே ஆய்ந்து (ஆராய்ந்து) பார்த்து செய் என்றால் ஏற்கனவே தர்ம சிந்தனையே இல்லாத மனிதன் சித்தர்கள் வாயிலாக இந்த வார்த்தையும் கேட்டு விட்டால் அவ்வளவுதான். சித்தர்களே பார்த்து செய் யோசித்து செய் என்று கூறி விட்டார்கள் என்று அவன் அணுவளவும் யோசிக்க மாட்டான் நிறுத்தி விடுவான். எனவே முதலில் செய்கின்ற மனநிலைக்கு சிந்தனைக்கு ஒருவன் வந்து விட வேண்டும். அப்படி வந்த பிறகு அடுத்த நிலையாக கட்டாயம் அள்ளி அள்ளி ஒருவன் தருகிறான் என்றாலே ஏமாற்றுகின்ற கூட்டம் வஞ்சகமான எண்ணம் கொண்ட கூட்டமும் அவனை சுற்றி வரத்தான் செய்யும். அது போன்ற நிலையிலே சற்றே நிதானித்து உண்மையில் உதவி தேவைப்பட்டு கேட்கிறானா? அல்லது நாம் தருகிறோம் என்பதற்காக கேட்கிறானா? என்று ஆய்ந்து பார்த்து ஒருவன் தரலாம்.

ஒரு வேளை தந்து கொண்டே வரும் சமயம் ஏதாவது ஒரு அமைப்பைக் குறித்து பிற்காலத்திலே அந்த அமைப்புக்கு அள்ளி அள்ளி தந்தோமே? அங்கு எதுவும் முறையாக பயன்பட்ட மாதிரி தெரியவில்லையே? ஏமாற்றிவிட்டார்களே என்று வருந்த வேண்டாம். அதுபோல் செய்திகள் வந்தாலும் கொடுத்தது கொடுத்ததுதான். கொடுக்க வைத்தது இறைவன். எப்படி சேர்க்க வேண்டுமோ எங்கு சேர்க்க வேண்டுமோ சேர்த்து விடுவார் என்று எண்ணி பயமில்லாமல் குழப்பம் இல்லாமல் தொடர்ந்து ஒரு மனிதன் அற வழியில் சென்று கொண்டே இருக்க வேண்டும். இந்த கருத்தைத்தான் எம்முன் அமரும் ஒவ்வொரு மனிதனுக்கும் கால காலம் கூறிக்கொண்டே இருக்கிறோம். இதுபோல் நிலையிலே செய்த பாவத்தை குறைத்துக் கொள்ளவும் இனி பாவங்கள் சேராமல் விழிப்புணர்வோடு வாழவும்தான் இந்த உடல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெறும் லௌகீக சுகங்களை நுகர மட்டும் அல்ல. லௌகீக சுகங்களை நுகர்வதோடு நாங்கள் கூறுகின்ற இந்த கருத்துகளையும் மனதிலே பதிய வைத்துக் கொண்டால் கட்டாயம் நல்ல பலன் ஏற்படும். இதுபோல் நிலையிலே மிகப்பெரிய ஞானிகளும் மகான்களும் தோன்றி இறைவனின் கட்டளைப்படி மனிதன் எங்ஙனம் வாழ வேண்டும்? எங்ஙனம் வாழக்கூடாது? என்றெல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 327

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

பொருளாதாரம் சார்ந்து மட்டும்தான் தர்மம் என்பதல்ல. ஓரளவு இறைவன் அருளால் நல்ல பொருளாதார நிலையில் உள்ள மனிதர்கள் அடுத்தடுத்து ருணம் (கடன்) பெற்றாவது தன் வாழ்க்கை வசதியை பெருக்கிக் கொள்ள எண்ணுகிறான். அவனுடைய விதியானது குறுக்கே நின்று கொண்டு அவன் பட்ட பாட்டுக்கெல்லாம் சரியான பலன் இல்லாமல் போய் விடுகிறது. ருணம் (கடன்) பெற்று போராடினாலும் அந்த கல்வியானது அவனுக்கு வெற்றியைத் தர வேண்டும் என்ற விதி இருந்தால்தான் விளைவுகள் சுபமாக இருக்கும். இல்லை என்றால் என்னவாகும்? அந்தக் காலமும் பட்ட பாடும் பெற்ற ருணமும் (கடனும்) வீணாகும். எனவே ஒவ்வொரு மனிதனின் பின்னால் எத்தனையோ பாவ வினைகள் மறைந்து செயலாற்றுகின்றன. இந்த வினையை எல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டிப் போட வேண்டும் என்றால் பகவானின் திருவடியை சதாசர்வ காலமும் எண்ணுவதோடு எந்தவிதமான குழப்பமும் இல்லாமலும் சந்தேகமும் இல்லாமலும் அள்ளி அள்ளி தந்து கொண்டே போகின்ற தர்மம் ஒன்றுதான் எளிய மார்க்கமாகும். எனவே நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல தர்மம் செய் தர்மம் செய் தர்மம் செய் என்று ஒரு மனிதனின் மனதிலே மீண்டும் மீண்டும் போதிக்க போதிக்க இயல்பாகவே தர்ம குணம் நிரம்பிய மனிதன் மேலும் தர்மவானாக மாறுகிறான். ஓரளவு தர்ம சிந்தனையுள்ள மனிதன் பல மடங்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வருகிறான். தர்மம் செய்யும் நினைவேயில்லாத மனிதன் ஓரளவு செய்யலாம் என்ற நிலைக்கு வருகிறான். இந்த நிலை உயர உயர ஒரு மனிதனின் உச்ச நிலையிலே இனி என்னுடையது என்று ஏதுமில்லை. எல்லாம் இறைவன் தந்தது. எனவே என் கண்ணில் படுகின்ற மனிதர்களுக்கு என்ன தேவையோ பிற உயிர்களுக்கு என்ன உதவி செய்ய என்னால் முடியுமோ என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். உதட்டால் முடிந்த உதவியை செய்கிறேன். உள்ளத்தால் முடிந்த பிரார்த்தனையை செய்கிறேன். யான் பெற்ற பொருளால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் பிறருக்காக அர்ப்பணம் செய்கின்ற குணம் வந்து விட்டால் இறைவன் அருள் அவனிடம் பரிபூரணமாக பரிமளிக்கத் துவங்கும். இதுபோல் நிலையிலே பிறருடைய பிரச்சினைகளை நீக்க ஒரு மனிதன் முயற்சி செய்தாலே அவனுடைய பிரச்சினைகளை தீர்க்க இறைவன் முன்வந்து விடுவான். எனவேதான் நாங்கள் (சித்தர்கள்) இதனை அடிக்கடி வலியுறுத்திக் கூறுகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 326

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஜீவ அருள் ஓலையை (ஜீவநாடி) ஒரு மனிதன் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஆய்ந்தாலும் நாங்கள் தர்மத்திலேயே நிற்பது பிறருக்கு மனத் தளர்வையும் விரக்தியையும் ஏற்படுத்தலாம். நாங்களே ஏராளமான குழப்பங்களோடும் பல்வேறு விதமான வேதனையோடும் இங்கு வந்தால் தர்மம் செய் தர்மம் செய் என்றால் அதற்குரிய சூழல் வேண்டாமா? ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற எங்களால் எங்கனம் தர்மம் செய்ய இயலும்? என்று கூட விமர்சனம் செய்கிறார்கள். சரியான கோணத்திலே நாங்கள் கூறுவதை புரிந்து கொண்டால் இந்தக் குழப்பத்திற்கு அவசியமே ஏற்படாது. ஒரு மனிதன் நேர்மையாக உழைத்து அவன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது அடிப்படை கடமை. அதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. ஆனால் அதே தருணம் ஒவ்வொரு மனிதனும் தன் சக்திக்கு ஏற்ப தன்னுடைய வருமானத்திலே ஒரு பகுதியை தாராளமாக ஏழை எளியவர்களுக்கும் ஆலயங்களுக்கும் உதவும் வகையில் செலவிட்டால் அவனின் பூர்வீக பூர்வீக பூர்வீக பாவங்களும் சந்ததி வழியாக கடத்தப்படும் பாவங்களும் தோஷங்களும் குறையும்.

எதிர்காலத்தில் விதி வழியாக வர இருக்கின்ற கடுமையான சூழல்களும் மெல்ல மெல்ல மாறும். ஒரு வேளை அதிக பொருளாதாரம் ஒரு மனிதனிடம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். வருகின்ற வருமானம் வயிற்றுக் கூட போதவில்லை என்றால் உடலால் பிறருக்கு உழைத்து நன்மையை செய்யலாம். உழவாரப் பணிகள் செய்து நல்லவிதமான புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளலாம். வார்த்தைகளால் இதம் பேசி பிறருக்கு நிம்மதியை ஏற்படுத்தலாம். எதுவும் இயலாவிட்டால் நன்மை செய்யா விட்டாலும் பாதகமில்லை. பிறரை வேதனைக்கு உள்ளாக்காமலும் தீமையான எண்ணங்களை எண்ணாமலும் வாழலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 325

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

நல்விதமாய் மென்மேலும் இறை வழி அற வழி தொண்டுகள் ஒற்றுமையோடு செய்ய நல்லாசிகள். ஒவ்வொரு மனிதனின் விதியானது மிக மிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையால் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் மிக மிக கடினமப்பா. இதுபோல் மனிதன் எண்ணிடலாம் கையிலே தனம் (பணம்) இருந்து உடலிலே வலு இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்று. அதுபோல் ஸ்தல யாத்திரை கூட ஒவ்வொரு மனிதனின் கர்ம பாவத்தை பொறுத்துதான் நிகழும். திட்டமிடுவதோ முயற்சி செய்வதோ தவறல்ல. ஆனால் அதனையும் தாண்டி இறைவனின் கருணையும் கடாட்சமும் ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் உள்ள ஒன்பதாம் இடத்திற்கு உரிய கிரகம் அதிபதி அதை சார்ந்த பாவங்கள் இவையெல்லாம் ஒத்துழைக்கும் தருணத்தில்தான் ஒருவனுக்கு புண்ணிய ஸ்தல யாத்திரைகள் நிகழும். இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா? குறிப்பிட்ட ஸ்தலத்திற்கோ வேறு ஸ்தலத்திற்கோ வேறு பணியின் காரணமாகக் கூட ஒரு மனிதன் செல்லலாம். அங்குள்ள ஆலயத்தின் வாசலில் கூட அவன் நிற்க வேண்டியிருக்கும். ஆனால் உள்ளே செல்வதற்கு உண்டான மன நிலையோ சூழலோ அத்தருணம் அவனுக்கு நிகழாது. ஆனால் அந்த ஆலயத்தையே எண்ணாமல் வேறு ஏதோ ஒரு சிந்தனையில் வேறு எங்கோ செல்லும் போது திசை மாறி அந்த ஆலயத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்பும் ஒரு மனிதனின் விதிப்படி நிகழும். ஏதோ ஆலய தரிசனம் என்றாலோ ஸ்தல தரிசனம் என்றாலோ மிக எளிமையான ஒரு விஷயம் சரியாக திட்டமிட்டாலே போதும் என்று ஒரு மனிதன் எண்ணி விடக்கூடாது. சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும். இறைவனின் அனுக்ரகமும் வேண்டும்.

இறைவன் அருளாலே இதுபோல் ஜீவ அருள் ஓலையிலே பல்வேறு கருத்துக்களைக் கூறும் பொழுது அந்தக் கருத்தின் ஓட்டத்திலே அதன் முன் கூறிய கருத்தும் அதனோடு இழைந்தோடி வருகின்ற கருத்தும் அந்தக் கருத்தை ஒட்டி பின்னால் நாங்கள் கூறுகின்ற கருத்தும் மனிதனுக்கு புரியா விட்டால் மத்தியில் கூறிய விஷயத்தை மட்டும் புரிந்து கொண்டு தவறான முடிவுக்கு வரவேண்டிய ஒரு நிலைமை வரும். அதனால்தான் இந்த சுவடியை ஓதுகின்ற ஆதிகாலத்தில் இருந்தே யாங்கள் (சித்தர்கள்) தெள்ளத் தெளிவாக பல விஷயங்களைக் கூறுகிறோம். குறிப்பாக பரிபூரண சரணாகதி தத்துவம் இறைவன் மீது எந்த விதமான ஐயமும் குழப்பமும் இல்லாமல் இறை திருவடியை சதாசர்வ காலமும் எண்ணி தம் கடமையை ஆற்றுதல் அதோடு மனித நேயத்தை மறந்து விட்டு பக்தி செலுத்துகின்ற முறையை நாங்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே மனித நேயத்தோடு அறப்பணிகளோடு அற சிந்தனையோடு கடமையை நேர்மையோடு செய்து கொண்டே செய்கின்ற இறை வழிபாட்டிலே பூரணத்துவம் கட்டாயம் கிட்டும். இறைவன் அருளும் கிட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 324

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மனதை வலுவாக்குதலே இந்த உலகிலே முதல் பணியாக மனிதனுக்கு இருக்க வேண்டும். வேண்டுமே வெறும் புலன் இன்பமும் அல்லது அதனைத் தாண்டிய எந்த இன்பமும் ஒரு மனிதனுக்குத் தொடர்ந்து அமைந்தால் அதன் பிறகு சிறு கவலையும் சிறு பிரச்சினையும் அவனை சாய்த்து விடும். மாறாக மாறி மாறி துன்பங்களும் கஷ்டங்களும் ஒரு மனிதனை தாக்க தாக்க சில காலத்தில் இவற்றையே பயிற்சியாக இவன் மேற்கொள்ள மேற்கொள்ள மனம் உறுதி பெற்று ஒரு கட்டத்திலே மிகப் பெரிய துன்பம் வரும் போது கூட அவன் ஆடாது அசையாது புயலுக்கு நாணல் ஈடு கொடுப்பது போல ஈடு கொடுத்து விடுவான். எனவே மனதை செம்மைப் படுத்துவதே ஆன்மீகத்தின் அடிப்படையாகும். அடித்தளம் ஆகும். மனமது செம்மையாக செம்மையாக யாதொரு பிரச்சினையும் எவ்வித மனிதனுக்கும் இல்லையப்பா. எனவே நிதானம் தெளிவு தெளிந்த சிந்தனை எந்த நிலையிலும் பதட்டமில்லாது முடிவு எடுக்கும் திறன் ஒன்றின் அதிக பட்ச விளைவு என்ன? என்று முன் கூட்டியே சிந்தித்து அதற்கு ஏற்றாற்போல் மனதை தயாராக வைத்துக் கொள்வது எதுவும் நடக்கலாம் எந்த சூழ்நிலையும் வரலாம் என்று ஒரு எதிர்பார்ப்போடு வாழுகின்ற முறை. இது போன்று சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் ஒரு மனிதனுக்கு எக்காலத்திலும் பிரச்சினைகள் இல்லை.

பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையைத் தா என்று கேட்பது சிறப்பல்ல. கேட்டாலும் இறை அதை யாருக்கும் வழங்காது. ஏனென்றால் அவ்விதமான அமைப்பு யாருக்கும் இல்லை. தெளிந்த ஞானியும் அல்லது ஞானம் அற்ற மனிதனுக்கும்தான் பிரச்சினை இல்லாதது போல் ஒரு வாழ்க்கை இருக்கும். காரணம் தெளியாத மனிதனுக்கு எதுவும் புரிவதில்லை. தெளிந்த ஞானியோ அனைத்திலுமே தேறி விட்டதால் அவனுக்கு எதுவும் பிரச்சினையாத் தோன்றாது. இந்தக் கருத்தை உன்னிப்பாக கவனித்து மனதிலே ஊன்றிக் கொண்டு விட்டால் மனிதனுக்கு எக்காலத்திலும் எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் துன்பம் என்பது இல்லை. ஒரு மனிதன் உடல் எடுத்ததற்கு மனித முயற்சி என்று எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதுதான் நடக்கப் போகிறதே என்று எந்த மனிதனையும் நாம் வாளாய் (சும்மா) இருக்க சொல்லவில்லை. சோம்பலாக இருக்க சொல்லவில்லை. அவன் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் விளைவு எதுவானாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மனம்தான் ஒரு மனிதனுக்கு எக்காலமும் நன்மையைத் தரும். இல்லையென்றால் ஒன்று மாற்றி ஒன்று அவன் மன விருப்பத்திற்கு மாறாக நடக்கும் போது மிகவும் விரக்தியுற்று சோர்வுற்று தன்னிலையை மறந்து மேலும் சிக்கலில் தானாகச் சென்று மாட்டிக் கொள்வான். எனவே ஒரு மனிதன் பதட்டம் குழப்பம் இல்லாமல் எதனையும் நிதானமாக மூன்றாவது பார்வை கொண்டு ஒவ்வொரு பிரச்சினையையும் பார்க்க பார்க்க அவனுக்கு அனைத்துமே தெளிவாகி விடும். அனைத்துமே சிக்கல் அற்றதாகி விடும். இந்தக் கருத்தை மனதில் பதியவைத்தால் என்றும் எக்காலமும் நலமாகும்.

எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் இன்னும் பக்குவப்பட வேண்டும். இந்தக் கருத்துக்களை உள் வாங்கி வாங்கி அவரவர்கள் சுய ஆய்வு செய்து சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது என்று ஆய்ந்து ஆய்ந்து தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனம் செம்மையாக வேண்டும். மனம் உயர வேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம் மணக்கின்ற மனமாக வேண்டும். அப்பேற்ப்பட்ட மனதிலேதான் இறை வந்து அமரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 323

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

பிரார்த்தனைகளும் தர்மங்களும் பலன் தரவில்லை என்றால் குறை அதனை செய்கின்ற மாந்தனிடம் (மனிதனிடம்) உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அறியுங்கால் முன்ஜென்ம வினையின் தாக்கம் அதிகம் உண்டு. அது குறித்து அவன் செய்யும் பிரார்த்தனைகளின் அளவு போதவில்லை தர்மங்களின் அளவு போதவில்லை என்பது பொருளாம். அல்லது இன்னும் சில காலம் கழித்து கிட்டப்போகும் நன்மைக்கு முன்னரே சில தீமைகள் போல் தோன்றுகின்ற நன்மைகளும் தீமைகளாய் மாற்றி இறை தருகின்றது என்பது பொருளாகும். எது எங்ஙனம் ஆயினும் இந்த உலகில் நிலவுகின்ற ஒவ்வொரு சம்பவமும் அவனவன் மன நிலையைப் பொறுத்தே அமைவது ஆகுமப்பா. அப்பனே இன்பம் என்ற ஒன்றை மனம் தேடும் பொழுதே அதன் மறுபக்கம் துன்பம் என்ற ஒன்று உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். துன்பம் என்ற ஒன்று வரும் பொழுதே அதன் மறுபக்கம் இன்பம் என்ற ஒன்று வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமப்பா இவை இரண்டும் வேண்டாத உள்ளம் வேண்டுமப்பா. மனம் சமநிலையில் இருக்குங்கால் யாதொரு தொல்லையும் இல்லை. விளம்புங்கால் நிதம் நிதம் ஆயிரம் ஆயிரம் விபத்துக்கள் நிதம் நிதம் ஆயிரம் கஷ்டங்கள். விளம்புவோம். நிதம் நிதம் எத்தனையோ மனிதர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள். வரியுங்கால் அதனை எல்லாம் எண்ணி அந்தப் பிரச்சினைகளை சாராத மனிதன் என்றாவது கலங்கி இருக்கிறானா? கவலைப்படுகிறானா? இல்லை. அதனை போலத்தான் ஒவ்வொரு மனிதனும் தனக்கு துன்பங்கள் வரும்போது மட்டும் கலங்குகின்ற நிலையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். வேண்டுமே மன உறுதி பெற உறுதி பெற எந்த பிரச்சனையும் பிரச்சினையாகத் தோன்றாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 322

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மனிதர்களை எதற்காக சித்தர்கள் நடமாட விட வேண்டும்? கட்டுப்படுத்தக் கூடாதா? என்ற ஐயம் பலருக்கு இருந்தாலும் கூட இந்த உலகிலே இறை நாமத்தை வைத்து ஏமாற்றுகின்றார்கள். இன்னும் பல்வேறு நிலைகளில் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். எனவே இவையெல்லாம் உலக இயக்கத்திற்கு கர்மக் கழிவிற்கு கர்ம பாவங்களின் பரிவர்த்தனைக்கு என்று இறைவனால் அந்தந்த மனிதனின் பூர்வீக வினைகளால் கொடுக்கப் படுவதாகும். எனவே உலகம் இயங்குவதற்கு எல்லா வகையான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களும் கர்மக் கழிவிற்காக தேவைப்படுகிறார்கள். எங்ஙனம் மின் சக்தியானது முழுமையாக பயன்பட வேண்டுமென்றால் அதற்கு நேர் மற்றும் எதிர் விளைவுகளைக் கொண்ட இருமுனை இணைப்பு தேவைப்படுகிறதோ அது போலத்தான் இந்த உலகிலே நல்லோரும் தீயோரும் இருக்கிறார்கள். ஒரு நல்லவனை ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால் நல்லவனின் பாவத்தை எடுத்துக் கொண்டு அது போக தீயவனிடம் இருக்கக் கூடிய சிறிதளவு புண்ணியத்தை அவன் நல்லவனுக்குத் தருகிறான் என்பதே பொருள். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு இந்த உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகி விட்டால் அனைத்தும் மிக எளிதாக மிக நீதியாகத் தோன்றும்.

தெய்வ சாந்நித்யம் என்பது ஆத்மார்த்தமான பக்தியினால் வருவதாகும். அது புறத்தை பொறுத்தது அல்ல. எனவே எந்த ஆலயத்திலும் மனம் ஒன்றி மனதிலே எந்த விதமான தீய எண்ணங்களும் எழாமல் வைராக்கியம் கொண்டு மனதைத் தெளிவாக வைத்து மனதை பக்தியிலே ஆழ்த்தி மனதை பரிபூரண சரணாகதியிலே வைத்து வேறு உலக சிந்தனை ஏதும் எழா வண்ணம் இறையை இல்லத்தில் இருந்து பூஜித்தாலும் அது நல்ல உள்ளத்தில் இருந்து வரும் பூஜையாக இருக்குங்கால் இறைவனின் அருளும் இறைவனின் சாந்நித்யம் கிட்டும் அப்பா. இதுபோல நிலையிலே இறைவனின் அருளாசி நிச்சயம் நிச்சயம் நிச்சயம்.