ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 48

ராமரின் அருகில் சீதை வந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள். ராமரிடம் தசரதர் பேச ஆரம்பித்தார். இத்தனை காலம் உனது வாழ்க்கையில் நடந்தவைகள் எல்லாம் ராவணன் அழிய வேண்டும் என்ன காரணத்திற்காக தேவர்களால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது. அத்திட்டத்தின்படி ராவணனை அழித்து விட்டாய். இதனால் உனது பராக்கிரமத்தையும் நீ கடைபிடிக்கும் தர்மத்தையும் இந்த உலகம் கண்டு கொண்டது. உனது பதினான்கு ஆண்டு கால வனவாசம் பூர்த்தியாகப் போகிறது. நீ கொடுத்த வாக்குறுதியை லட்சுமணனுடனும் சீதையுடனும் சேர்ந்து நிறைவேற்றி விட்டாய். உனக்காக பரதன் காத்திருக்கிறான். உன்னிடம் தளராத அன்பு கொண்ட பரதனிடம் நீ சேர்ந்திருக்கும் காட்சியை நான் காண விரும்புகிறேன். எனவே உடனே நீ அயோத்திக்கு சென்று அரசனாக முடிசூட்டிக் கொண்டு அஸ்வமேத யாகத்தை நடத்தி நல்லாட்சி செய்துவா. அயோத்தியில் உனக்கு பிறகு நல் புத்திரர்களை அரசனாக முடிசூட்டி பின்பு உனக்கான மேலுகத்திற்கு சென்று புகழை அடைவாய் என்று வாழ்த்தினார். லட்சுமணனிடம் தசரதர் பேச ஆரம்பித்தார்.

ராமருக்கும் சீதைக்கும் பக்தியுடன் பணிவிடைகள் செய்து இத்தனை காலம் இருந்திருக்கிறாய். இதில் நான் மிகவும் திருப்தி அடைந்திருக்கிறேன். அறநெறிக்கிணங்க நீ நடந்து கொண்டதால் அதற்கான புண்ணிய பயனை நீ அடைந்திருக்கிறாய். ராமருக்கு தொடர்ந்து பணிவிடைகளை செய்துவா. இதனால் ஈடு இணையில்லாத மேன்மையும் புகழையும் அடைவாய். ராமரின் மனதில் இடம் பிடித்த நீ அவரைப் போலவே உலகம் முழுவதும் பெயரையும் புகழையும் பெற்று நீண்ட காலம் வாழ்ந்து உனக்கான சிறந்த மேலோகத்தை அடைவாய் என்று வாழ்த்தினார். அனைவரிடம் விடைபெற்ற தசரதர் தெய்வீக ஒளியுடன் அங்கிருந்து கிளம்பி மேலோகம் சென்றார். தேவர்கள் அனைவரும் ராமருக்கு தங்களின் பாரட்டையும் வணக்கத்தையும் செலுத்திவிட்டு தங்களின் விண்ணுலகம் திரும்பினார்கள். யுத்தம் செய்து களைப்புடன் இருந்த வானரங்கள் அனைவரிடமும் இன்று இரவு நன்கு உறங்கி உங்களது களைப்பை போக்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் அதிகாலையில் விபீஷணன் ராமரிடம் வந்து இன்று தங்களுக்கு உபசாரங்கள் செய்து கௌரவப்படுத்த எண்ணுகிறேன். அனைத்தையும் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

ராமர் விபீஷணனிடம் பேச ஆரம்பித்தார். இத்தனை காலம் உங்களது ஆலோசனையிலும் உங்களது வழிகாட்டுதலிலும் உங்களது நட்புக்கேற்ற செயலிலும் நான் மிகவும் கௌரவப்படுத்தப்பட்டு விட்டேன். நான் இங்கு காட்டில் எப்படி தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ அது போல் சகல சௌகர்யங்கள் இருந்தும் பரதன் தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு எனக்காக காத்திருக்கிறான். எப்போது பதினான்கு ஆண்டு காலம் முடியும் எப்போது நான் வருவேன் என்று எனது வரவிற்காக தவித்துக் கொண்டிருப்பான். எனது அன்னையர்களையும் பரதனையும் சத்ருக்கன்னையும் அயோத்தி மக்களையும் பார்க்க எனது மனம் தவிக்கிறது. எனவே நான் உடனடியாக அயோத்திக்கு திரும்ப வேண்டும். அயோத்தி வெகு தூரத்தில் உள்ள படியால் நான் உடனடியாக கிளம்புகிறேன். நீங்கள் எனக்காக கொடுப்பதாக சொன்ன உபசாரங்கள் கௌரவங்கள் அனைத்தும் சுக்ரீவனுக்கும் அவனது படைகளுக்கும் கொடுங்கள் என்றார். அதற்கு விபீஷணன் நீங்கள் இத்தனை தூரம் ஏன் நடக்க வேண்டும் என்னுடைய பறக்கும் பூஷ்பக விமானத்தை தங்களிடம் அளிக்கிறேன். நீங்கள் அதில் சென்றால் உங்களது அயோத்திக்கு சில மணி நேரத்திற்குள் சென்று விடலாம் என்று சொல்லி புஷ்பக விமானத்தை கொண்டுவர தனது பணியாளர்களிடம் உத்தரவிட்டான் விபீஷணன்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 47

ராமரை வணங்கி வலம் வந்த சீதை எனது உயிர் இந்த ராமருக்கு சொந்தம் என்பது உண்மையானால் எனது மனம் ராமரை விட்டு ஒரு வினாடி கூட பிரியாமல் இருப்பது உண்மையானால் நான் மாசற்றவள் என்பது உண்மையானால் இந்த அக்னி தேவர் என்னை காப்பாற்றட்டும் என்று அக்னியில் இறங்கினாள் சீதை. ராமர் தன் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தார். ராமரை மீறி ஒன்றும் செய்ய முடியாமல் அனைவரும் நடுங்கியபடி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். அக்னி சீதையை சுடாமல் இருந்தது. எதனால் ராமர் இப்படி செய்கிறார் என்று கேள்வி கேட்க முடியாமல் அனைவரும் ராமரின் முகத்தையும் அக்னியையும் திரும்பத்திரும்ப பார்த்தபடி இருந்தனர். தேவர்கள் சூழ பிரம்மா ராமரின் முன்பு வந்தார்.

ராமர் பிரம்மாவை வணங்கி நின்றார். பிரம்மா ராமரிடம் பேசத் தொடங்கினார். ராம பிரானே தாங்கள் என்ன காரியம் செய்து விட்டீர்கள்? ஏன் இது போல் நடந்து கொண்டீர்கள் என்று கேட்டார். அதற்கு ராமர் சூரியனிடமிருந்து வெளிச்சச்தை எப்படி தனியாக பிரிக்க முடியாதோ அது போல் சீதையை என்னிடமிருந்து பிரிக்க முடியாது. சீதை கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போன்றவள். அவளை யாராலும் நெருங்க முடியாது. மூன்று உலகங்களிலும் உள்ள தூய்மையான பொருள்களை விட சீதை தூய்மையானவள். இவை அனைத்தும் எனக்கு நன்றாக தெரியும். ஆனால் சிலகாலம் ராட்சசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சீதையை தர்மத்தின்படி யுத்தம் செய்து அடைந்த நான் தர்மப்படி அவள் புனிதமானவள் என்று மூன்று உலகங்களுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அவளை அப்படியே ஏற்றுக் கொண்டால் ராமர் சீதையின் அழகில் மயங்கியதால் தான் அவளை ஏற்றுக் கொண்டார். சீதை மீது அன்பு ஒன்றும் இல்லை என்று யாரும் சொல்லி விடக்கூடாது. நான் எவ்வளவு அன்பு சீதை மீது வைத்திருக்கிறேன் என்றும் சீதை என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என்றும் எங்கள் இருவருக்கும் தெரியும். சீதை புனிதமானவள் என்பதை அனைவரின் முன்பும் நிரூபிக்க வேண்டி இத்தனை பெரிய கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதனால் சீதையிடம் சொல்லக்கூடாத கடுமையான வார்த்தைகளை சொல்லி அவளைக் காயப்படுத்தினேன். அதற்கு வேறு காரணங்களும் உண்டு. சிறிது நேரத்தில் சீதைக்கு அந்த காரணம் தெரியும் போது அனைவருக்கும் தெரியும் என்று சொல்லி முடித்தார் ராமர்.

ராமரின் முன் எரிந்த கொண்டிருந்த அக்னியில் இருந்து வெளிவந்த அக்னி தேவர் சீதையை அழைத்துக் கொண்டு வந்து ராமரிடம் ஒப்படைத்தார். அப்போது சீதை இளம் சூரியனைப் போல் பிரகாசித்தாள். அப்போது விண்ணிலிருந்து தசரதர் அங்கு வந்தார். தசரதரைக் கண்டதும் ராமர் உட்பட அனைத்து வானரங்களும் ராட்சசர்களும் அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். தசரதர் சீதையிடம் பேச ஆரம்பித்தார். ராமர் உன்னிடம் கடுமையான வார்த்தைகளை சொல்லி விட்டார் என்று வருத்தப்படாதே. ராமர் தர்மத்தை கடைபிடித்து அதன் படி நடப்பவர். தண்டகாருண்ய காட்டில் நீ விரும்பிய மானை ராமர் கொண்டு வரச் சென்ற போது லட்சுமணன் உனக்கு காவலாக இருந்தான். அப்போது ராவணனின் சூழ்ச்சியால் ராமரின் குரலில் அபயக் குரல் எழுப்பினான் மாரீசன் ராட்சசன். இதனை நம்பிய நீ உன்னை தாயாக எண்ணிய லட்சுமணனை தீயைப் போல் சுடும் பேசக்கூடாத கடுமையான வார்த்தைகளால் பேசி தவறு செய்து விட்டாய். கடும் வார்த்தைகளை பேசிய நீ அதே கடுமையான வார்த்தைகளால் உனது தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டின் படி நீ செய்த தவறுக்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும். அதற்கான தண்டனையை நீ அனுபவிக்க மிகவும் கஷ்டப்படுவாய் என்று எண்ணி தர்மத்தின் படி உன்னை கடும் சொற்களால் பேசினார். இதனால் நீ அடைந்த மன உளைச்சலைப் போலவே சீதையை இப்படிப் பேசி விட்டோமே என்று அவனும் மன உளைச்சல் அடைந்து உனது தண்டனையில் பாதியை ஏற்றுக் கொண்டான். மேலும் லட்சுமணனை தீ சுடுவதைப்போல் வார்த்தைகள் பேசிய உன்னை அக்னியில் இறங்க வைத்து தீயால் சுட்டு நீ செய்த தவறுக்கான தண்டனையை முழுமையாக அனுபவிக்க வைத்தது மட்டுமல்லாமல் நீ புனிதமானவள் என்பதையும் இந்த உலகத்திற்கும் காட்டி விட்டார் ராமர். எனவே அவரின் மீது கோபம் கொள்ளாதே என்று சீதையிடம் பேசி முடித்தார் தசரதர்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 46

ராமர் விபீஷணனிடம் கோபத்துடன் பேசியதை கவனித்த லட்சுமணன் சிந்திக்க தொடங்கினான். சீதை வருகிறார் என்ற மகிழ்ச்சி ராமரின் முகத்தில் இல்லை. அவரின் அங்க அசைவுகளை வைத்து பார்க்கும் போது சீதை வருவதே விரும்பாதவர் போல் காணப்படுகிறார். சீதையை அழைத்து வர உத்தரவிட்ட போது கூட தரையை பார்த்தவாரே மிகவும் யோசித்து விட்டே பேசினார் என்று சிந்தித்த வண்ணம் லட்சுமணன் மிகவும் வருத்தமடைந்தான். ராமர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று லட்சுமணனுக்கு புரியவில்லை. ராமருக்கு இத்தனை உதவிகள் செய்து இப்போது சீதையை அழைத்துக் கொண்டு வரும் விபீஷணனை பாராட்ட வேண்டிய நேரத்தில் ராமர் கோபத்துடன் பேசியது சுக்ரீவனையும் அனுமனையும் வருத்தமடையச் செய்தது. தரையை பார்த்தவாரே விபீஷணனை தொடர்ந்து வந்த சீதை ராமரிடம் வந்து வெட்கமுடன் அவரின் முகத்தை பார்த்து என் உயிர் துணையே என்று சொல்லி வணங்கி நின்று ஆனந்தக் கண்ணீருடன் அழத்தொடங்கினாள்.

ராமர் அனைவருக்கும் கேட்கும்படி சீதையிடம் பேசத் தொடங்கினார். சத்ரியனாக போரில் எதிரியை வென்று உன்னை மீட்டு விட்டேன். ராவணன் உன்னை தூக்கிச் சென்று இத்தனை காலம் அவனது நகரத்தில் வைத்திருந்தான். ஒரு வருட காலம் ராவணனது பிடியில் நீ இருந்ததால் என்னுடைய குலத்திற்கு பெரும் தலை குனிவு உண்டாகி விட்டது. அந்த தலைகுனிவை எனது நண்பர்களான அனுமன் சுக்ரீவன் விபீஷணன் இவர்களின் உதவியுடன் போக்கி விட்டேன். அவனது பிடியில் இருந்த உன்னை அவன் தொடாமல் இருந்திருப்பானா? இத்தனை பெரிய யுத்தத்தை செய்தது உனக்காக இல்லை என்பதை நீ முதலில் தெரிந்து கொள். இந்த உலகத்தை வெளிச்சம் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் கண் வலி உள்ளவனுக்கு வெளிச்சம் ஆகாதது போல எனக்கு வெளிச்சமாக இருந்த நீ இப்போது எனக்கு தேவையில்லை. உனக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுக்கிறேன். இந்த உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் நீ சென்று உன் விருப்பப்படி வாழலாம். நான் நன்றாக யோசித்த பின் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இதுபற்றி நீ லட்சுமணனிடமோ பரதனிடமோ உன் விருப்பமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் நீ ஆலோசித்துக் கொள்ளலாம் என்று சீதையிடம் பேசி முடித்தார்.

ராமர் அனைவருக்கும் முன்பு கோபத்துடன் பேசிய இத்தகைய கொடூரமான வார்த்தைகளை கேட்ட சீதை மிகவும் மனம் தவித்து வெட்கத்தால் தலை குனிந்தபடி அழுதாள். பின்பு ராமரிடம் பேச ஆரம்பித்தாள். உங்களது வார்த்தைகள் இத்தனை காலம் என்னுடன் வாழ்ந்த மேன்மை பொருந்திய மனிதனின் வார்த்தைகளைப் போல் இல்லை. ஒரு பாமர மனிதன் பேசுவதைப் போல் உள்ளது. மிகவும் கடுமையான சொற்களை பயன்படுத்தி விட்டீர்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் எப்படி நினைத்து பேசினீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தான் குற்றமற்றவள் என்று எனது கற்பின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களை பிரிந்திருந்த இத்தனை காலமும் என்னுடைய மனம் உங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது. அனுமனை முதல் முறையாக அசோகவனத்திற்கு அனுப்பினீர்களே அப்போதே இந்த செய்தியை நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பியிருந்தால் அக்கணமே நான் என் உயிரை விட்டீருப்பேனே இதனால் யுத்தமும் நடந்திருக்காது. தங்களது உயிரை பலர் இழந்திருக்க மாட்டார்கள் என்று அழுதபடி கூறினாள். ராமர் வேறு எதுவும் பேசாமல் மௌனமாக நின்றார். லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தாள் சீதை. எனக்கு எற்பட்டுள்ள துயரத்திற்கு அக்னியைத் தவிர வேறு மருந்து இல்லை. பொய்யான பழியை சுமந்து கொண்டு நான் வாழ விரும்பவில்லை. மரக் கட்டைகளை அடுக்கி இங்கே நெருப்பை மூட்டு அந்த அக்னியில் விழுந்து எனது பழியை தீர்த்துக் கொண்டு நான் எனது உடலை விடுகின்றேன் என்று கோபமடைந்தவளாக கூறினாள். சீதை பேசிய இத்தனை வார்த்தைகளை கேட்ட பிறகாவது ராமரின் மனம் மாறுகின்றதா என்று லட்சுமணன் ராமரின் முகத்தை பார்த்தான். மௌனமாக இருந்த ராமரின் உள்ளத்தை குறிப்பால் உணர்ந்து கொண்ட லட்சுமணன் மரக் கட்டைகளை அடுக்கி நெருப்பை பற்ற வைத்தான். ராமர் ஏன் இச்செயலை செய்கிறார் என்பதனை அறிந்து கொள்ள விண்ணவர்களும் அங்கு வந்து நின்றார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 45

ராமர் ராவணனை அழித்து யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டார் என்று அனுமன் நடந்தவைகள் அனைத்தையும் சீதையிடம் எடுத்துக் கூறினார். அனைத்தையும் கேட்ட சீதைக்கு பேச்சு வரவில்லை. அமைதியாக இருந்த சீதையிடம் அனுமன் மேலும் பேச ஆரம்பித்தார். இப்போது இந்நாட்டின் அரசன் விபீஷணன் அவரது அனுமதியின் பேரிலேயே தங்களை சந்தித்து உங்களது செய்தியை ராமரிடம் கொண்டு செல்ல வந்திருக்கிறேன். விரைவில் நீங்கள் ராமரை சந்திக்க போகிறீர்கள். தங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்திருக்கிறேன் தாங்கள் ஏன் பேசாமல் மௌனமாக இருக்கீறீர்கள் என்றார். அதற்கு சீதை பேச முடியவில்லை அனுமனை மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். இத்தனை பெரிய செய்தியை கொண்டு வந்த உனக்கு பரிசு கொடுக்க விரும்புகிறேன். மூன்று உலகங்களையும் அரசாளும் அரசனின் பதவியை உனக்கு பரிசாக கொடுத்தாலும் நீ செய்திருக்கும் காரியத்திற்கு ஈடு ஆகாது. உன்னுடைய விவேகம் பொறுமை வீரம் மனோபலம் இந்த உலகத்தில் யாருக்கும் இல்லை. நான் ராமரையும் அவருடன் எப்போதும் இருக்கும் லட்சுமணனையும் பார்க்க விரும்புகிறேன் என்ற தகவலை ராமரிடம் எடுத்துச்செல் என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறினாள். சீதையை சுற்றி நின்ற ராட்சசிகளை பார்த்த அனுமன் இத்தனை காலம் இவர்கள் உங்களை மிகவும் துன்புறுத்தி இருக்கிறார்கள். எனக்கு உத்தரவு கொடுங்கள் இவர்களை அழித்து விடுகிறேன் என்றார். அதற்கு சீதை அரசன் இட்ட உத்தரவை இவர்கள் பின் பற்றினார்கள். அரசன் இப்போது இறந்து விட்டான். இந்த ராட்சசிகள் இப்போது பயந்து கொண்டிருக்கிறார்கள். உலக உயிர்களுக்கு துன்பத்தை மட்டுமே கொடுப்பது பிறவி இயல்பாக இந்த ராட்சசர்ளுக்கு உள்ளது. ஆனால் நாம் உலக உயிர்களுக்கு நன்மை செய்வதையே இயல்பாக கொண்டவர்கள். இவர்களுக்கு நன்மை இல்லாததை நாம் செய்யக்கூடாது. எனவே இவர்களை தண்டிப்பது சரியல்ல எனது செய்தியை ராமரிடம் தெரிவித்து விட்டு அதன் பின் அவர் உத்தரவின்படி செயல்படுவாயாக என்று அனுமனிடம் சீதை கூறினாள். அனுமன் சீதையை வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

ராமரிடம் வந்த அனுமன் தங்களையும் லட்சுமணனையும் சீதை சந்திக்க விரும்புவதாக செய்தி சொல்லி அனுப்பினார் என்று கூறினார். இதனை கேட்ட ராமர் யாருடைய முகத்தையும் பார்க்க விரும்பாமல் தரையை பார்த்தபடியே மிகவும் சிந்தித்து விபீஷணனை வரவழைத்தார். சீதை புனித நீராடிய பின்பு நல்ல பட்டாடைகள் கொடுத்து இங்கு அழைத்து வர அந்தப்புறத்தில் இருப்பவர்களுக்கு உத்தரவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி விபீஷணன் உத்தரவிட சீதை இப்போது இருக்கும் கோலத்துடன் ராமரை சந்திக்க விரும்புவதாக கூறினாள். அதற்கு உடன் இருப்பவர்கள் இது ராமரின் உத்தரவு எனவே புனித நீராடி பட்டாடைகள் அணிந்து வாருங்கள் என்று சீதையிடம் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி சீதை ஒரு ராஜகுமாரிக்கு உண்டான கோலத்தில் பல்லக்கில் அசோக வனத்தில் இருந்து ராமர் இருக்குமிடம் கிளம்பினாள்.

ராமரை நோக்கி சீதை பல்லக்கில் வந்து கொண்டிப்பதை அறிந்த வானர வீரர்களும் கரடிக் கூட்டமும் சீதையை பார்க்க விரும்பி ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்டு முன்னேறி வந்தார்கள். இதனை கண்ட விபீஷணன் தனது ராட்சச வீரர்களை கொண்டு அனைவரையும் விரட்டி சீதையை பாதுகாப்புடன் அழைத்து வந்தான். இதனை கண்ட ராமர் விபீஷணனிடம் கடுமையான வார்த்தைகளில் பேசத் தொடங்கினார். வானர வீரர்களும் கரடிக் கூட்டங்களும் என்னைச் சார்ந்து வந்திருக்கிறார்கள். எனது மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் அனைவரும் கலந்து கொள்வது தவறாகாது அவர்களை உனது ராட்சச வீரர்கள் விரட்டுவது சரியில்லை. அனைவரது முன்னிலையிலும் சீதை இங்கு வரட்டும் என்று கோபத்துடன் கூறினார். விபீஷணன் தலை குனிந்தபடி ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வானர வீரர்கள் யாரையும் விரட்ட வேண்டாம் என்று தனது வீரர்களுக்கு உத்தரவிட்டான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 44

ராமர் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினார். ராவணன் மூன்று உலகங்களையும் தன் வீரத்தினால் வெற்றி பெற்ற மகா பராக்கிரமசாலி. இந்த யுத்தகளத்தில் மரணம் அடையும் இறுதி வினாடி வரை பின்வாங்காமல் வீரனாக நின்று போர் புரிந்திருக்கிறான். யுத்தத்தில் வீர மரணம் அடைந்தவனை பற்றி சத்ரியர்கள் மன வருத்தம் அடைய மாட்டார்கள். இப்போது இதைப் பற்றி வருத்தப்படுவதற்கு சரியான நேரம் இல்லை. இலங்கையின் அரசனாக நீ செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது. அதில் உனது கவனத்தை செலுத்து என்றார். அதற்கு விபீஷணன் ராவணனுக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்வதற்கு தாங்கள் அனுமதி தாருங்கள் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ராமர் யுத்தத்தில் நாம் விரும்பிய பலனை அடைந்து விட்டோம். பகைமை என்பது ராவணன் உயிரோடு இருந்த வரை மட்டும் தான். இறந்த பிறகு பகைமை மறைந்து விடுகிறது. எனக்கும் ராவணனுக்கும் இப்போது எந்த பகையும் இல்லை. ராவணனுக்கு தம்பியாக இறுதி காரியம் செய்ய வேண்டிய கடமை உனக்கு உள்ளது. நீ எனக்கு சகோதரன் என்றால் ராவணனும் எனக்கு சகோதரன் ஆகிறான். ராவணனுக்கு நல்ல கதி கொடுக்க கூடிய சடங்குகள் எதுவோ அதனை செய்து உனது கடமையை நிறைவேற்றிக் கொள். நானும் உன்னோடு கலந்து கொண்டு செய்வேன் என்று விபீஷணனுக்கு அனுமதி கொடுத்தார்.

ராமர் ராவணனை கொன்றதும் தேவலோகத்தில் இருந்து வந்த இந்திரனின் தேரோட்டி மாதலியை பாராட்டிய ராமர் இவர் மீண்டும் தேவலோகம் செல்ல அனுமதி கொடுத்தார். யுத்தத்தை பார்க்க வந்த தேவர்களும் கந்தர்வர்களும் ராமரின் வீரப்பிராதபங்களை பாராட்டிப் பேசியபடி தங்களின் இருப்பிடத்திற்கு சென்றார்கள். இத்தனை காலம் ராவணன் கட்டளைப்படி செயலாற்றி வந்த இந்திரன் தனது தேவலோகத்திற்கு சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் யுத்தத்தில் இறந்த வானரங்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெறுவதற்கு வேண்டிய வரத்தை வானரங்களுக்கு கொடுத்தான். இறந்த வானரங்கள் துக்கத்தில் எழுவது போல் எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். முனிவர்கள் ராமரை வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். ராமர் ராவணனை அழித்து விட்டார் என்ற செய்தி இலங்கை நகரம் முழுவதும் பரவியது. ராவணனின் மனைவி மண்டோதறி யுத்த களத்திற்குள் வந்து ராவணனின் உடலை பார்த்து புலம்ப ஆரம்பித்தாள். ராமர் மானிடர் இல்லை. மகாவிஷ்ணுவின் அவதாரம். யமனே எதிர்ந்து வந்தாலும் இந்த ராமரை வெற்றி கொள்ள முடியாது அவரிடம் பகைமை வேண்டாம் என்று தங்களுக்கு எத்தனையோ முறை சொன்னேனே. தாங்கள் கேட்காமல் இருந்து விட்டீர்களே இப்போது உயிரற்ற உடலாக இருக்கிறீர்களே என்று ராவணனை பார்த்து கதறி அழுதாள். இலங்கை நகரத்திற்குள் இருந்து வந்த ராட்சச மக்கள் கூட்டம் ராவணனின் உடலைப் பார்த்து அசையினாலும் அகங்காரத்தினால் சேர்த்து வைத்த பெயரையும் புகழையும் இழந்து உங்களை நம்பிக்கொண்டு இருந்த பல வலிமையான வீரர்களையும் உறவினர்களையும் இழந்து விட்டு இப்போது உயிரையும் விட்டு விட்டீரே என்று பேசிய படி சென்றார்கள். ராவணனுக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை விபீஷணன் வேத முறைப்படி செய்து முடித்தான்.

ராமரும் லட்சுமணனும் அனுமன் சுக்ரீவன் உட்பட யுத்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள். இலங்கை நகர வாசிகள் முன்னிலையில் ராமர் விபீஷணனுக்கு அங்கேயே இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அனுமனை அழைத்த ராமர் இப்போது இலங்கை நகரத்தின் அரசன் விபீஷணன். இவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அசோக வனத்திற்குள் சென்று சீதையிடம் நடந்தவைகள் அனைத்தையும் சொல்லி அவளது செய்தியை பெற்று வா என்று கட்டளையிட்டார். ராமரை வணங்கிச் சென்ற அனுமன் விபீஷணனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அசோக வனத்திற்குள் சென்று சீதையை சந்தித்தார்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 43

ராமர் ராவணனை பார்த்ததும் யுத்தம் செய்வதற்கு ஆயத்தமானார். அப்போது யுத்தத்தை பார்க்க வந்த முனிவர்களுள் அகத்தியர் ராமரிடம் வந்து பேச ஆரம்பித்தார். ரகசியமானதும் மிகவும் பழமை வாய்ந்ததுமான ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மந்திரத்தை கேட்டுக் கொள் இது உனது தைரியத்தை பல மடங்கு பெருக்கி உனக்கு சக்தியை கொடுக்கும் என்று ஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தை உபதேசம் செய்தார். சூரினை போற்றி வழிபடும் இந்த மந்திரம் பாவங்களை அழிக்கக் கூடியது கவலையை போக்கக் கூடியது ஆயுளை வளர்க்கக் கூடியது. இந்த மந்திரத்தை மனமொன்றி கூறினால் எதிரியை சுலபமாக வெற்றி கொள்ளலாம் என்று சொல்லி ராமரை வாழ்த்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார். ராமர் சூரியனை வணங்கி ஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தை செபித்து யுத்தம் செய்ய ஆரம்பித்தார். மந்தரத்தை செபித்த பிறகு மனம் மிகவும் உற்சாகமாக இருப்பதை ராமர் உணர்ந்தார். ராமருக்கும் ராவணனுக்கும் கடுமையான யுத்தம் ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கான அம்புகளை ஒரே நேரத்தில் ராமர் ராவணனின் மீது எய்தார். ராவணன் அத்தனை அம்புகளையும் தடுத்து ராமருக்கு சமமாக யுத்தம் செய்தான். வானர படைகளும் ராட்சச படைகளும் சிறிது நேரம் தங்களுக்குள்ளான யுத்தத்தை நிறுத்தி ராம ராவணனின் யுத்தத்தை கண்டு இந்த உலகத்தில் இப்படியும் யுத்தம் நடக்குமா என்று பிரமித்து நின்றார்கள்.

ராமர் பல அஸ்திரங்களை கொண்டு ராவணன் கழுத்தை அறுத்தார். ராமர் ராவணனின் கழுத்தை அறுக்க அறுக்க ராவணனின் தலையானது புதிதாக வளர்ந்து கொண்டே இருந்தது. இதனை கண்ட ராமர் திகைத்து நின்றார். என்னுடைய அஸ்திரங்கள் இத்தனை நாட்களாக பல ராட்சசர்களை சுலபமாக அழித்திருக்கிறது. ஆனால் இந்த ராவணனிடம் இந்த அஸ்திரங்கள் வலிமை குன்றி காணப்படுகிறதே என்று சிந்தித்தவராக ராவணனின் அஸ்திரங்களுக்கு பதில் அஸ்திரம் கொடுத்து யுத்தத்தில் கவனத்துடன் இருந்தார். அப்போது தேரோட்டி மாதலி ராமரிடம் பேச ஆரம்பித்தான். ராவணன் இந்த பூமியை விட்டு செல்ல குறித்து வைக்கப்பட்ட காலம் வந்து விட்டது. ராவணனை அழிக்க இதுவே சரியான நேரம். ராவணனின் அஸ்திரத்திற்கு பதில் அஸ்திரம் மட்டுமே தற்போது கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு தற்போது ஒன்றை ஞாபகம் செய்கிறேன். மூன்று உலகங்களையும் காக்க பிரம்மா தன்னுடைய எல்லையில்லா சக்தியினால் பிரம்மாஸ்திரத்தை உண்டாக்கி இந்திரனுக்கு அளித்தார். ராவணன் மூன்று உலகத்தையும் வெற்றி பெற்று அடக்கியாண்ட போது இந்திரன் அந்த அஸ்திரத்தை பாதுகாக்க அகத்தியரிடம் கொடுத்தான். தண்டகாருண்ய வனத்தில் நீங்கள் சில காலம் இருந்தீர்கள் அப்போது அகத்தியர் தங்களை சந்தித்த போது அந்த பிரம்மாஸ்திரத்தை உங்களுக்கு கொடுத்தார். அந்த எல்லையில்லா ஆற்றலுடைய அஸ்திரத்தை இப்போது ராவணனின் மீது விடுங்கள் என்றான்.

ராமர் பிரம்மாஸ்திரத்தை ராவணனின் மீது எய்தார். பிரம்மாஸ்திம் ராவணனின் மார்பை பிளந்து ராவணனின் உயிரை பறித்தது. ராவணன் இறந்ததை பார்த்த ராட்சச படைகள் நான்கு புறமும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். வானர வீரர்கள் வெற்றி வெற்றி என்று துள்ளிக் குதித்தார்கள். ராவணன் இறந்து விட்டான் என்றதும் தேவர்களும் முனிவர்களும் கந்தர்வர்களும் மலர்கள் தூவி ராமரை வாழ்த்தினார்கள். மலர் குவியலுக்கு நடுவே ராமர் வெற்றி வீரனாக நின்றார். வானத்தில் சங்கு நாதமும் துந்துபி சத்தமும் முரசுகளும் ஒலித்து தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அனுமன் லட்சுமணன் சுக்ரிவன் அங்கதன் பேரானந்தம் அடைந்து ஒருவருக்கொருவர் தழுவிக் கொண்டார்கள். விபீஷணன் ராவணனின் உடல் இருக்கும் இடத்திற்கு வந்தான். ராவணனின் உடலைப் பார்த்து யார் சொல்லையும் கேட்காமல் இப்படி இறந்து விட்டாயே ராவணா என்று கதறி அழுதான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 42

ராமர் லட்சுமணன் வீழ்ந்து கிடப்பதை கண்டதும் சுக்ரீவனிடமும் அனுமனிடமும் லட்சுமணனை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக அவனுடனேயே இருங்கள் என்று உத்தரவிட்டார். லட்சுமணனை தாக்கிய சக்தி அம்பை அவனது உடலில் இருந்து எடுக்க வானர வீரர்கள் அனைவரும் முயற்சி செய்தனர். எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. ராமர் லட்சுமணனின் உடலில் இருந்த அம்பை எடுத்து அவனின் காயத்திற்கு தேவையான மூலிகைகளை எடுத்து வருவாறு அனுமனுக்கு உத்தரவிட்டார் ராமர். அனுமன் மூலிகையை எடுக்க விரைந்து சென்றார். மூலிகை வந்ததும் சரியான படி உபயோகித்து லட்சுமணனை பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று ஜாம்பவானிடமும் சுக்ரீவனிடமும் சொல்லிய ராமர் ராவணனை நோக்கி முன்னேறிச் சென்றார். ராமருக்கும் ராவணனுக்கும் நடக்கும் யுத்தத்தை பார்க்க தேவர்களும் கந்தர்வர்களும் முனிவர்கள் பலரும் வந்தார்கள். ராமருக்கும் ராவணனுக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்தது. ராவணன் தனது தேரில் இருந்து ராமரை சுற்றிய வண்ணம் தனது வலிமையை காட்டி யுத்தம் செய்தான். ராமர் கீழே நின்ற படி ராவணனுக்கு இணையாக யுத்தம் செய்தார். அப்போது வானத்தில் இருந்து நவரத்தினங்கள் மின்ன தங்கத்தினால் செய்யப்பட்ட பிரகாசமாக ஜொலித்துக் கொண்டு ஒரு தேர் வந்து ராமரின் முன்பாக நின்றது.

ராமர் இது ராவணனின் மாயமாக இருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பித்தார். அப்போது தேரின் சாரதி ராமரை வணங்கி நின்று அவரிடம் பேச ஆரம்பித்தான். நான் தேவேந்திரனின் தேரோட்டி எனது பெயர் மாதலி. இந்த தேர் தங்கள் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்வதற்காக தேவேந்திரன் அனுப்பியுள்ளான். இந்த தேரில் தங்களுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் உள்ளது. தேவேந்திரனின் தோல்வி என்பதை அறியாத சக்தி அஸ்திரமும் உள்ளது. இந்த தேரில் அமர்ந்து ராவணனை எதிர்த்து யுத்தம் செய்து அவனை கொன்று வெற்றி பெறுங்கள் என்று கேட்டுக்கொண்டான். ராமர் இந்திரனின் தேரை வலம் வந்து வணங்கி தேரில் ஏறி ராவணனுடம் யுத்தம் செய்தார். இதனை கண்ட ராவணன் ராமரின் மீது ராட்சச அஸ்திரங்களையும் நாக அஸ்திரங்களையும் தொடர்ந்து எய்து கொண்டே இருந்தான். நாக அஸ்திரம் சீறிப் பாய்ந்து ராமரின் தேரை சுற்றி நெருப்பையும் விஷத்தையும் கக்கியது. ராமர் ராட்சச அம்புகளை சமாளித்து நாக அஸ்திரத்திற்கு எதிர் அஸ்திரமாக கருடன் அஸ்திரத்தை எய்தார். கருடன் அஸ்திரம் அனைத்து நாக அஸ்திரத்தையும் அழித்தது. இதனால் கோபம் கொண்ட ராவணன் ராமர் இருந்த தேரின் குதிரைகளை தனது அம்புகளால் காயப்படுத்தி தேரின் கொடியை அறுத்தான். குதிரைகள் காயமடைந்ததால் ராமரின் வேகத்திற்கு தேரால் ஈடு கொடுக்க முடியவில்லை. ராமர் மீது ராவணன் நொடிப்பொழுதும் இடைவிடால் அம்மை எய்து கொண்டே இருந்தான். இதனை பார்த்த தேவர்களும் கந்தர்வர்களும் சிறிது மனக்கலக்கத்தை அடைந்தார்கள்.

ராமர் ராவணனின் அனைத்து அம்புகளையும் முறியடித்தார். ராவணன் மீது ராமரின் கோபம் சிறிது சிறிதாக அதிகரித்தது. உடனே ராவணனை அழிக்க எண்ணிய ராமரின் பலம் பராக்கிரமம் அஸ்திரங்களின் வலிமை அனைத்தும் இரண்டு மடங்காக கூடியது. தனது அஸ்திரங்களை உபயோகப்படுத்தி ராவணன் மீது அம்பு மழை பொழிந்தார் ராமர். அதனை எதிர்பார்க்காத ராவணன் எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் கலங்கி நின்றான். ராமரின் அம்புகள் தொடர்ந்து ராவணனை துளைக்க அவமானத்தால் தலை குனிந்த ராவணன் மயக்க நிலைக்கு சென்றான். அதனை கண்ட ராவணனின் தேரோட்டி தேரை யுத்த களத்தில் இருந்து வேறு இடத்திற்கு ஓட்டிச் சென்றான். சிறிது நேரம் கழித்து கண் விழித்த ராவணன் தனது தேரோட்டி மீது கோபம் கொண்டான். யுத்த களத்தில் இருந்து இத்தனை தூரம் என்னை கொண்டு வந்து விட்டாய் நான் பயந்து ஓடி விட்டேன் என்று அனைவரும் எண்ணுவார்கள் என்று கோபத்தில் திட்டிய ராவணன் விரைவாக மீண்டும் யுத்த களத்திற்குள் செல் என்று கட்டளையிட்டான். ராவணனின் வார்த்தைகளில் பயந்த தேரோட்டி தேரை மீண்டும் யுத்த களத்திற்குள் ராமரின் முன்பாக கொண்டு சென்று நிறுத்தினான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 41

ராமர் அனைத்து ராட்சச படைகளையும் வெற்றி கொண்டார். பல ராட்சசர்கள் பயத்தில் சிதறி ஓடி விட்டார்கள் என்று ராவணனிடம் செய்தியை தெரிவித்தார்கள். இலங்கை நகரம் எங்கும் பெண்களில் அழுகுரல் ராவணனின் காதில் விழுந்தது. கோபமும் கவலையும் சேர்ந்து ராவணனை நிலை குலைய வைத்தது. இறுதியில் சிறிது தெளிவடைந்தவனாக தானே யுத்தத்திற்கு கிளம்பினான். மகோதரன் மகாபார்சுவன் என்ற இரு ராட்சர்களை தனது படைக்கு தளபதியாக்கினான். யுத்தத்தில் உயிர் பிழைத்து மீதி இருக்கும் ராட்சச படைகளை யுத்தத்திற்கு கிளம்புமாறு ராவணன் கட்டளையிட்டான். அரசனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் ராட்சசர்கள் இருந்தார்கள். யுத்தத்திற்கு சென்றால் ராமரால் மரணம் செல்லா விட்டால் ராவணன் கொன்று விடுவான். ராட்சசர்கள் எப்படியாவது தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள பயத்தில் நடுங்கிய படியே காப்பு மந்திரங்களை வெளியில் யாருக்கும் கேட்காதபடி உச்சரிக்க தொடங்கினார்கள். ராவணன் தனது தேரில் ஏறி யுத்த களத்தை நோக்கி இலங்கை நகரத்தின் வடக்கு வாசல் வழியாக வெளியே வந்தான். அப்போது சூரியனை மேகம் மறைத்தது. பறவைகளை கொடூரமாக கத்தத் துவங்கியது. நரிகள் ஊளையிடத துவங்கியது. போர் குதிரைகள் நடக்கும் பொது இடறி விழுந்தது. ராவணனின் தேரின் கொடியில் கழுகு வந்து அமர்ந்தது. ராவணனுக்கு தனது இடது கண்கள் துடித்து எங்கும் அபசகுனங்கள் தெரிந்தது. தனது அறிவு மயக்கத்தாலும் அகங்காரத்தினாலும் எதனையும் பொருட்படுத்தாத ராவணன் யுத்த களத்திற்கு தொடர்ந்து முன்னேறிச் சென்றான்.

ராமரிடம் வந்த விபீஷணன் யுத்தத்தின் இறுதிக்கு வந்து விட்டோம் ராவணன் யுத்தத்திற்கு வந்து விட்டான். இப்போது அவனை வெற்றி கொண்டால் இன்றோடு யுத்தம் நிறைவு பெற்று விடும். இன்றே நீங்கள் சீதையை மீட்டு விடலாம் என்றான். இதனை கேட்ட ராமர் இதற்காக தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். எனது முழு வல்லமையையும் பயன்படுத்தி ராவணனை கொன்று விடுவேன் என்று ராமர் யுத்தத்திற்கு தயாரானார். யுத்தம் ஆரம்பித்தது. கடுமையான யுத்தத்தில் சுக்ரீவன் மகோதரனையும் அங்கதன் மகாபார்சுவனையும் கொன்றார்கள். இரண்டு தளபதிகளும் இல்லாமல் வழிகாட்ட தலைமை இல்லாமல் யுத்தம் செய்ய ராட்சச படைகள் திணறினார்கள். இதனை கண்ட ராவணன் எனது மகன் எனது உடன் பிறந்தவர்கள் எனது உறவினர்கள் என்னுடைய படைகள் அனைவரையும் அழித்த ராமரை இன்று அழித்து விடுகிறேன் என்று கோபத்தில் கத்தினான். தனது தேரை ராமர் இருக்குமிடத்திற்கு ஒட்டிச் செல்ல தேரோட்டியிடம் உத்தரவிட்டான். இடையில் எதிர்த்து வந்த அனைத்து வானரங்களையும் பிரம்ம கொடுத்த தாமஸ என்னும் ஆயுதத்தால் கொன்று குவித்த படி ராமரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான் ராவணன். பிரம்மாவின் ஆயுதத்தை எதிர்க்க முடியாமல் வானரங்கள் சிதறி ஓடினார்கள்.

ராமர் இருக்கும் இடத்திற்கு முன்னேறிச் செல்ல விடாமல் இடையில் ராவணனை விபீஷணன் தடுத்தான். ராவணனுக்கும் விபீஷணனுக்கும் கடுமையான யுத்தம் ஆரம்பித்தது. இருவரும் ராட்சசர்கள் இருவரும் வலிமையானவர்கள். இருவருக்கும் நடந்த யுத்தம் கடுமையாக இருந்தது. ராவணனின் அம்புக்கு சரியான பதிலடி கொடுத்தான் விபீஷணன். ராவணன் தனது அஸ்திரங்களை விபிஷணன் மீது உபயோகப்படுத்த ஆரம்பித்தான். விபீஷணன் உயிருக்கு ஆபத்து வர இருப்பதை உணர்ந்த லட்சுமணன் ராவணனின் அஸ்திரங்களுக்கு பதில் அஸ்திரத்தை கொடுத்து விபீஷணனை காப்பாற்றினான். இதனை கண்ட ராவணன் உனது அஸ்திரத்தால் விபீஷணனை காப்பாற்றி விட்டாய். ஆனால் இப்போது விபீஷணனுக்கு பதில் நீ உயிரை விடப்போகிறாய் என்று லட்சுமணனுடன் யுத்தம் செய்ய ஆரம்பித்தான். லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் கடுமையாக நடந்தது. இறுதியில் ராவணன் அனுப்பிய சக்தி என்னும் அஸ்திரம் லட்சுமணன் மார்பை துளைத்தது. வலிமையான அஸ்திரத்தினால் அடிபட்டு விழுந்த லட்சுமணன் தொடர்ந்து யுத்தம் செய்ய இயலாமல் பூமியில் விழுந்தான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 40

ராமரிடம் வந்த லட்சுமணன் அவரை வணங்கி நின்றான். தேவலோகத்தில் இந்திரனை வெற்றி பெற்றவனும் யாராலும் வெற்றி பெற முடியாத இந்திரஜித்தை அழித்து விட்டாய் உனது காரியத்தால் விரைவில் சீதையை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது என்று லட்சுமணனை கட்டி அணைத்து பாராட்டினார் ராமர். இந்திரஜித் லட்சுமணனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனிடம் தெரிவித்தார்கள். இதனை ராவணன் நம்பாமல் இந்திரஜித் இருக்கும் இடத்திற்கு சென்றான். அங்கு இந்திரஜித்தின் உயிரற்ற உடலை பார்த்ததும் அங்கேயே மூர்ச்சையாகி விழுந்தான் ராவணன். சுற்றி இருந்ந ராட்சசர்கள் என்ற செய்வது என்று தெரியாமல் விழித்து நின்றார்கள். சிறிது நேரம் கழித்து விழித்த ராவணன் புத்திர சோகத்தில் புலம்பினான். பின்பு கோபத்தில் எழுந்த ராவணன் அனைத்திற்கும் காரணமானவள் இந்த சீதை இவளால் தான் இவை அனைத்தும் நடந்தது. அவளை இப்போதே கொன்று விடுகிறேன் என்று தனது கத்தியை எடுத்துக் கொண்டு அசோகவனத்திற்கு சென்றான் ராவணன்.

ராமரின் சிந்தனையில் இருந்த சீதை தன்னை நோக்கி ராவணன் கத்தியுடன் கோபமாக வருவதை பார்த்ததும் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள். ராவணனின் மகன்கள் இல்லையென்றால் தம்பிகள் யாராவது ராம லட்சுமணர்களால் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை யூகித்த சீதை தன்னை கொன்று விடப்போகிறானோ என்று சந்தேகத்துடன் நின்றாள். அப்போது அங்கு வந்து சேர்ந்த ராவணனின் ஆலோசகனும் அமைச்சருமான சுபார்ச்வன் ராவணனை தடுத்தான். வேதத்தை ஓதி சகல வித்தைகளையும் கற்று உலகத்தையையே வென்ற உங்களுக்கு நிகர் யாரும் இல்லை. இவ்வளவு வலிமை வாய்ந்த நீங்கள் ஒரு மானிடப் பெண்ணை கொன்று அதனால் எற்படும் தோஷத்தையும் அவமானத்தையும் பெற்றுக் கொள்ளாதீர்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது. உங்களது கோபத்தை ராமரின் மீது காண்பியுங்கள். இன்று இரவு தாண்டியதும் நாளை அமாவாசை ஆரம்பிக்கிறது. நமக்கு உகந்த நாள். இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள். பிரம்மா உங்களுக்கு கொடுத்த கவசத்தை இது வரை நீங்கள் உபயோகித்ததில்லை. நாளை அதனை உபயோகித்து யுத்தத்திற்கு சென்று உங்களது கோபத்தை ராம லட்சுமணர்களின் மீது காண்பியுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் பிரம்மாவின் கவசத்தை மீறி அவர்களின் அம்பு உங்கள் உடலை துளைக்காது. உங்கள் வலிமையை உபயோகித்து அவர்களை அழித்து விடுங்கள். உங்களது புகழ் மேலும் பெருகும். உங்களுக்கு சீதை கிடைத்து விடுவாள் என்று சுபார்ச்வன் யோசனை தெரிவித்தான். ராவணன் சிறிது நேரம் யோசித்து நீங்கள் சொல்வது சரியான யோசனை என்று தனது சேனைத் தலைவர்களை அழைத்தான். நாளை அமாவசை ஆரம்பித்ததும் நான் யுத்தத்திற்கு வருகிறேன். அது வரையில் நீங்கள் இருக்கும் அனைத்து படைகளையும் அழைத்துக் கொண்டு யுத்த களத்திற்கு செல்லுங்கள். ராமரையும் லட்சுமணனையும் நான்கு புறமும் சுற்றி நின்று ஆயுதங்களை அவர்கள் மீது எரிந்து யுத்தம் செய்யுங்கள். நான்கு புறமும் உங்களுடன் யுத்தம் செய்த களைப்பில் ராமர் இருக்கும் போது நான் வந்து ராமரையும் லட்சுமணனையும் அழித்து விடுகிறேன் கிளம்புங்கள் என்று உத்தரவிட்டான். ராவணனின் உத்தரவுப்படி அனைத்து ராட்சச வீரர்களும் யுத்த களத்திற்கு புறப்பட்டார்கள்.

ராமரையும் லட்சுமணனையும் சுற்றி நின்று தாக்கிய ராட்சச படைகளின் மீது ராமரும் லட்சுமணனும் அம்பு மழை பொழிந்து கொன்று குவித்தார்கள். மழை போல் வந்த அம்புகளுக்கு நடுவில் ராமரை ராட்சசர்களால் காண இயலவில்லை. ராட்சசர்கள் தங்களுடன் வந்தவர்கள் ராமரின் அம்புகளால் இறப்பதை பார்த்து பயத்தில் கலங்கி நின்றார்கள். ராவணன் உத்தரவுப்படி ஒரு நாள் தாக்குப்படிக்க முடியாது என்று உணர்ந்த மீதியிருந்த ராட்சசர்கள் இலங்கை நகரத்திற்குள் சிதறி ஓடினார்கள். இலங்கை நகரத்திற்குள் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களின் அழுகை சத்தம் கேட்ட வண்ணமாக இருந்தது. ராவணனின் அகங்காரத்தினால் அனைவரும் இறந்து விட்டார்களே என்று ராவணனை துற்றியபடி ராட்சச பெண்கள் ஒருவருக்கு வருவர் கூக்குரலிட்டு அழுது புலம்பினார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 39

ராமரிடம் வந்த விபீஷணன் கலங்காதீர்கள் நடந்தவற்றை இப்போது தான் அறிந்து உடனடியாக இங்கு வந்தேன். ராவணன் சீதைக்கு விதித்த ஒரு வருடம் முடிய இன்னும் 4 நாட்கள் இருக்கிறது. அது வரை சீதையை கொல்ல யாரையும் ராவணன் அனுமதிக்க மாட்டான். நீங்கள் கண்டது அனைத்தும் உண்மை இல்லை. சீதை போன்ற ஒரு உருவத்தை இந்திரஜித் மாயத்தால் உருவாக்கி உங்களை குழப்பியிருக்கிறான். மயக்கத்தில் இருக்கும் லட்சுமணனும் சிறிது நேரத்தில் எழுந்து விடுவான். எதற்கும் கலங்காத தாங்கள் இப்போது உங்களுக்குள் இருக்கும் குழப்பத்தை விட்டு மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நம்மால் யோசித்து செயல்பட முடியும் என்றான்.

ராமர் விபீஷணனிடம் சீதையை நான் எனது கண்களால் கண்டேன். எனது கண் முன்னே இந்திரஜித் சீதையை கொன்றான் என்றார். அதற்கு விபீஷணன் நிகும்பலை என்ற இடத்தில் ஒரு குகைக்குள் இந்திரஜித் பெரிய வேள்வி ஒன்றை செய்ய ஆரம்பித்திருக்கிறான் என்று என்னுடைய ஒற்றர்கள் தெரிவித்தார்கள். இந்த வேள்வியை இந்திரஜித் செய்து முடித்து விட்டால் அவன் மிகவும் வலிமை பெற்று பல வரங்களையும் பெற்று விடுவான். அதன் பிறகு அவனை நம்மால் எளிதில் வெற்றி பெற முடியாது. அந்த வேள்வியை நாம் தடுத்து நிறுத்தி விடுவோம் என்று பயந்து நம்மை திசை திருப்பவே இந்திரஜித் சீதை போல் ஒரு உருவத்தை மாயமாக செய்து நாடகமாடி இருக்கிறான். இந்த வேள்வியை தடுக்கும் முயற்சியை நாம் இப்போது உடனடியாக செய்ய வேண்டும். நிகும்பலையில் இந்திரஜித் வேள்வி செய்யும் குகையை யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறான். ஆனால் அவன் வேள்வி செய்யும் குகை எனக்கு தெரியும். லட்சுமணனையும் அனுமனையும் இப்போது அங்கு அனுப்பி வையுங்கள். இந்திரஜித்தை லட்சுமணன் எதிர்த்து வெற்றி பெறுவான். இந்திரஜித்துக்கு காவலாக இருக்கும் ராட்சசர்களை அனுமன் எதிர்த்து வெற்றி பெறுவார். அதன் பிறகு இலங்கைக்குள் ராவணன் மட்டுமே இருப்பான். அவனையும் அழித்து விட்டால் சீதையை நீங்கள் அடைந்து விடலாம் என்று சொல்லி முடித்தான் விபீஷணன். சுக்ரீவன் லட்சுமணனுக்கு மூலிகை வைத்தியம் செய்து விழிக்கச் செய்தான். விழித்த லட்சுமணன் விபீஷணன் கூறிய அனைத்தையும் ராமரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டான். இந்திரஜித்தை எதிர்த்து யுத்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று ராமரிடம் கேட்டுக் கொண்டான்.

ராமர் விபீஷணனின் பேச்சில் உண்மை இருப்பதை அறிந்து தெளிவடைந்தார். உடனடியாக லட்சுமணனுக்கு அனுமதி கொடுத்து அவனுடன் அனுமனையும் சில வானர படைகளையும் அனுப்பி வைத்தார். அனைவரும் இந்திரஜித் வேள்வி செய்த குகைக்கு அருகே சென்று சேர்ந்தனர். குகைக்கு வெளியே காவல் காத்த ராட்சசர்களுக்கும் வானர வீரர்களுக்கும் யுத்தம் நடந்தது. லட்சுமணனும் அனுமனும் வானர வீரர்களை கொன்று குவித்தார்கள். லட்சுமணனும் வானர வீரர்களும் ராட்சசர்களை கொன்று குவிப்பதை சில ராட்சசர்கள் இந்திரஜித்திடம் சென்று கூறினார்கள். இதனால் கோபம் கொண்ட இந்திரஜித் வேள்வியை தொடர்ந்து செய்யாமல் பாதியிலேயே விட்டு விட்டு அவர்களுடன் யுத்தம் செய்வதற்காக குகையை விட்டு வெளியே வந்தான். லட்சுமணனுக்கும் இந்திரஜித்துக்கும் யுத்தம் ஆரம்பித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சரிசமமாக யுத்தம் செய்து தங்கள் வலிமையை காண்பித்தார்கள். இறுதியில் லட்சுமணன் இந்திராஸ்திரத்தை எடுத்து ராமர் தர்மத்தை கடைபிடிப்பது உண்மையானால் இந்த அம்பு இந்திரஜித்தை அழிக்கட்டும் என்று சொல்லி அம்பை செலுத்தினான். அம்பு இந்திரஜித்தின் கழுத்தைத் துளைத்து தலையை துண்டாக்கி அவனது உயிரைப் பிரித்தது. இதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து மலர் தூவி லட்சுமணனை பாராட்டினார்கள். இந்திரஜித் கொல்லப்பட்டதும் அங்கிருந்த ராட்சசர்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். லட்சுமணன் காயத்துடன் யுத்தம் செய்த களைப்பில் அனுமன் மீது சாய்ந்து நின்றான். விபீஷணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து லட்சுமணனை பாராட்டினான்.