ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 41

ராமர் அனைத்து ராட்சச படைகளையும் வெற்றி கொண்டார். பல ராட்சசர்கள் பயத்தில் சிதறி ஓடி விட்டார்கள் என்று ராவணனிடம் செய்தியை தெரிவித்தார்கள். இலங்கை நகரம் எங்கும் பெண்களில் அழுகுரல் ராவணனின் காதில் விழுந்தது. கோபமும் கவலையும் சேர்ந்து ராவணனை நிலை குலைய வைத்தது. இறுதியில் சிறிது தெளிவடைந்தவனாக தானே யுத்தத்திற்கு கிளம்பினான். மகோதரன் மகாபார்சுவன் என்ற இரு ராட்சர்களை தனது படைக்கு தளபதியாக்கினான். யுத்தத்தில் உயிர் பிழைத்து மீதி இருக்கும் ராட்சச படைகளை யுத்தத்திற்கு கிளம்புமாறு ராவணன் கட்டளையிட்டான். அரசனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் ராட்சசர்கள் இருந்தார்கள். யுத்தத்திற்கு சென்றால் ராமரால் மரணம் செல்லா விட்டால் ராவணன் கொன்று விடுவான். ராட்சசர்கள் எப்படியாவது தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள பயத்தில் நடுங்கிய படியே காப்பு மந்திரங்களை வெளியில் யாருக்கும் கேட்காதபடி உச்சரிக்க தொடங்கினார்கள். ராவணன் தனது தேரில் ஏறி யுத்த களத்தை நோக்கி இலங்கை நகரத்தின் வடக்கு வாசல் வழியாக வெளியே வந்தான். அப்போது சூரியனை மேகம் மறைத்தது. பறவைகளை கொடூரமாக கத்தத் துவங்கியது. நரிகள் ஊளையிடத துவங்கியது. போர் குதிரைகள் நடக்கும் பொது இடறி விழுந்தது. ராவணனின் தேரின் கொடியில் கழுகு வந்து அமர்ந்தது. ராவணனுக்கு தனது இடது கண்கள் துடித்து எங்கும் அபசகுனங்கள் தெரிந்தது. தனது அறிவு மயக்கத்தாலும் அகங்காரத்தினாலும் எதனையும் பொருட்படுத்தாத ராவணன் யுத்த களத்திற்கு தொடர்ந்து முன்னேறிச் சென்றான்.

ராமரிடம் வந்த விபீஷணன் யுத்தத்தின் இறுதிக்கு வந்து விட்டோம் ராவணன் யுத்தத்திற்கு வந்து விட்டான். இப்போது அவனை வெற்றி கொண்டால் இன்றோடு யுத்தம் நிறைவு பெற்று விடும். இன்றே நீங்கள் சீதையை மீட்டு விடலாம் என்றான். இதனை கேட்ட ராமர் இதற்காக தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். எனது முழு வல்லமையையும் பயன்படுத்தி ராவணனை கொன்று விடுவேன் என்று ராமர் யுத்தத்திற்கு தயாரானார். யுத்தம் ஆரம்பித்தது. கடுமையான யுத்தத்தில் சுக்ரீவன் மகோதரனையும் அங்கதன் மகாபார்சுவனையும் கொன்றார்கள். இரண்டு தளபதிகளும் இல்லாமல் வழிகாட்ட தலைமை இல்லாமல் யுத்தம் செய்ய ராட்சச படைகள் திணறினார்கள். இதனை கண்ட ராவணன் எனது மகன் எனது உடன் பிறந்தவர்கள் எனது உறவினர்கள் என்னுடைய படைகள் அனைவரையும் அழித்த ராமரை இன்று அழித்து விடுகிறேன் என்று கோபத்தில் கத்தினான். தனது தேரை ராமர் இருக்குமிடத்திற்கு ஒட்டிச் செல்ல தேரோட்டியிடம் உத்தரவிட்டான். இடையில் எதிர்த்து வந்த அனைத்து வானரங்களையும் பிரம்ம கொடுத்த தாமஸ என்னும் ஆயுதத்தால் கொன்று குவித்த படி ராமரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான் ராவணன். பிரம்மாவின் ஆயுதத்தை எதிர்க்க முடியாமல் வானரங்கள் சிதறி ஓடினார்கள்.

ராமர் இருக்கும் இடத்திற்கு முன்னேறிச் செல்ல விடாமல் இடையில் ராவணனை விபீஷணன் தடுத்தான். ராவணனுக்கும் விபீஷணனுக்கும் கடுமையான யுத்தம் ஆரம்பித்தது. இருவரும் ராட்சசர்கள் இருவரும் வலிமையானவர்கள். இருவருக்கும் நடந்த யுத்தம் கடுமையாக இருந்தது. ராவணனின் அம்புக்கு சரியான பதிலடி கொடுத்தான் விபீஷணன். ராவணன் தனது அஸ்திரங்களை விபிஷணன் மீது உபயோகப்படுத்த ஆரம்பித்தான். விபீஷணன் உயிருக்கு ஆபத்து வர இருப்பதை உணர்ந்த லட்சுமணன் ராவணனின் அஸ்திரங்களுக்கு பதில் அஸ்திரத்தை கொடுத்து விபீஷணனை காப்பாற்றினான். இதனை கண்ட ராவணன் உனது அஸ்திரத்தால் விபீஷணனை காப்பாற்றி விட்டாய். ஆனால் இப்போது விபீஷணனுக்கு பதில் நீ உயிரை விடப்போகிறாய் என்று லட்சுமணனுடன் யுத்தம் செய்ய ஆரம்பித்தான். லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் கடுமையாக நடந்தது. இறுதியில் ராவணன் அனுப்பிய சக்தி என்னும் அஸ்திரம் லட்சுமணன் மார்பை துளைத்தது. வலிமையான அஸ்திரத்தினால் அடிபட்டு விழுந்த லட்சுமணன் தொடர்ந்து யுத்தம் செய்ய இயலாமல் பூமியில் விழுந்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.