ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 16

ராமர் சுக்ரீவனிடம் நீ செய்த இந்த செயலால் உனது வீரத்தையும் பராக்கிரமத்தையும் பார்த்து நான் வியப்பும் மிக்க மகிழ்ச்சியும் அடைகிறேன். ஆனால் அரசனாக இருப்பவன் எதிரிக்கு யுத்தம் செய்ய வருகிறேன் என்று முன் அறிவிப்பு இல்லாமல் இப்படி திடீரென்று தாக்குதல் செய்யக்கூடாது. இது தர்மத்திற்கு விரோதமானது. மேலும் உடன் இருப்பவர்களுடன் ஆலோசனை செய்யாமல் இது போல் அபாய காரியத்தில் ஈடுபடக்கூடாது. இது அரசனுக்கு நன்மையானதல்ல. எனவே இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சுக்ரீவன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உங்களை கேட்காமல் நான் சென்றது தவறு தான். தங்களுக்கும் சீதைக்கும் வஞ்சகம் செய்து ஏமாற்றிய ராவணனை கண்டதும் என்னுடைய கோபம் மேலோங்கி விட்டது. கோபத்தை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் இப்படி செய்து விட்டேன். இனி மேல் இப்படி நடக்க கொள்ளமாட்டேன் என்று ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் சூக்ரீவன்.

ராமர் வானர வீரர்களுக்கு கட்டளையிட்டபடி ராவணனின் நகரத்தை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். அங்கதனை அழைத்த ராமர் ராவணனிடம் இப்போது நீ தூதுவனாக செல்ல வேண்டும் என்று ராவணனிடம் பேச வேண்டியதை அங்கதனிடம் சொல்லிக் கொடுத்தார். தவத்தினால் நீ பெற்ற வரங்களினாலும் சக்திகளினாலும் கர்வம் கொண்டு துஷ்டனாகி பாவங்கள் பலவும் செய்து விட்டாய். இந்த உலகத்தில் உள்ளவர்களை மிகவும் துன்புறுத்தி விட்டாய். இறுதியாக ராமரின் மனைவியை ஏமாற்றி அவளை தூக்கிவந்து பெரும் பாவத்தை சேர்த்துக் கொண்டாய். இப்போது உனக்கு இறுதி எச்சரிக்கை செய்கிறோம். ராமரின் மனைவியை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரிடம் சரணடைந்து உனது உயிரை காப்பாற்றிக் கொள். இல்லையென்றால் ராமரின் அம்பில் நீ அழிந்து விடுவாய். உனது வலிமையின் மேல் நம்பிக்கை வைத்து யுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீ இருந்தால் இறுதியாக உன்னுடைய இந்த இலங்கையை ஒரு முறை சுற்றிப் பார்த்துகொள். யுத்தத்தில் நீ வெற்றி பெறுவாய் என்று உன்னை நம்பி உனக்கு சாதகமாக யுத்தம் செய்ய வருபவர்கள் ஒருவர் கூட தப்பிப் பிழைக்க மாட்டார்கள். இறுதியில் உனக்கு ஈமக்கிரியைகள் செய்யக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே உனது ஈமக்கிரியைகளை நீயே செய்து கொண்டு உனது கோட்டையை விட்டு வெளியே வந்து ராமரிடம் யுத்தம் செய். ராமர் யுத்தத்திற்கு தயாராக உனது கோட்டை வாயிலில் காத்திருக்கிறார். உன்னை அழித்ததும் இந்த இலங்கைக்கு விபீஷணன் அரசனாக இருப்பான். இந்த இலங்கையை ஆட்சி செய்யவும் இந்த மக்களை காப்பதற்கும் தகுதியானவன் விபீஷணன். ராமர் அவனுக்கு ஏற்கனவே இலங்கையின் அரசன் என்று பட்டாபிஷேகம் செய்துவிட்டார் என்று ராவணனிடம் தூதுவனாக நான் கூறிய இந்த செய்திகளை சொல்லி விட்டுவா என்று ராமர் அங்கதனை அனுப்பினார்.

ராமரின் கட்டளைப்படி கிளம்பிய அங்கதன் ஒரே தாவலில் ராவணனின் கோட்டைக்குள் நுழைந்து அரசவைக்குள் சென்றான். அங்கிருந்த ராவணனிடம் மிகவும் கம்பீரமாக பேச ஆரம்பித்தான் அங்கதன். வாலி யார் என்று உனக்கு தெரிந்திருக்கும். அந்த வாலியின் மகன் நான். எனது பெயர் அங்கதன். ராமரின் தூதுவனாக வந்திருக்கிறேன் என்று ராமர் கூறிய அனைத்து செய்திகளையும் ராவணனிடம் சொல்லி முடித்தான். அங்கதன் சொன்னதை கேட்ட ராவணன் கோபம் கொந்தளிக்க இந்த வானரத்தை பிடித்து கொல்லுங்கள் என்று கத்தினான். அதிபயங்கரமான ராட்சர்கள் பெரிய உருவத்தை எடுத்து அங்கதனை பிடித்து கயிற்றினால் கட்ட முயற்சித்தார்கள். உடனே அங்கதன் ராட்சசர்களோடு ஒரே தாவலில் ஆகாயத்திற்கு தாவி பிடித்திருந்த ராட்சசர்களை உதறித் தள்ளி உதைத்துத் தள்ளினான். அங்கதனை விட்ட ராட்சசர்கள் அனைவரும் கீழே விழுந்தார்கள். அதனை கண்ட ராட்சசர்கள் அனைவரும் ஒரு வானரத்திற்கே இத்தனை வலிமை என்றால் வந்திருக்கும் அனைத்து வானரங்களின் வலிமையையும் ஒன்று சேர்த்தால் எவ்வளவு வலிமை இருக்கும் அவர்களை எப்படி எதிர்த்து வெற்றி கொள்வோம் என்று பயந்தனர். அனைவரின் பயத்தை கண்ட ராவணன் இதனை ஒரு அபசகுனமாக கண்டு பெரு மூச்சுவிட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.