லட்சுமி நரசிம்மர்

பெட்டன்னா ஹெகடே சோமன்னா மற்றும் கேஷன்னா ஆகிய மூன்று சகோதரர்கள் பூர்வீகவாசிகளிடமிருந்து ஒரு இலவச இடத்தைப் பெற்று கி.பி 1234 இல் கோவிலைக் கட்டினர் என்று கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -2

வசிஷ்டர் தசரதரை பார்த்து இது சித்திரைமாதம் மங்களமான காலம் வனங்களெல்லாம் பூத்துக்குலுங்கும் நேரம். புஷ்ய நட்சத்திரத்தில் பட்டாபிஷேகத்திற்கு ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறினார். வசிஷ்டர் கூறிய நாள் வர இன்னும் 3 நாட்களே இருந்தது. இதனை அறிந்து மகிழ்ந்த தசரதர் இன்றிலிருந்து 3 ம் நாளில் ராமருக்கு பட்டாபிஷேகம் என்று அனைவர் முன்னுலையிலும் அறிவித்தார். வசிஷ்டரிடமும் வாமதேவர் என்ற அந்தணரிடமும் பட்டாபிஷேகத்திற்கான பூஜைகள் யாகங்கள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். பட்டாபிஷேகத்திற்கான அனைத்து பணிகளையும் விரைவாக செய்யுமாறு பணியாட்களுக்கு கட்டளையிட்டார்.

தசரதர் ராமரிடம் எனக்கு வயதாகிவிட்டது. நேற்றிரவு கெட்ட கனவு ஒன்று கண்டேன். அதன்படி எனக்கு பெரிய துக்கம் சம்பவிக்கும் என்று சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். எல்லா சுகங்களும் நீண்ட ஆயுளும் அனுபவித்து விட்டேன். செய்ய வேண்டிய தேவபித்ரு காரியங்களை அனைத்தையும் செய்துவிட்டேன். இனி உலகில் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. உனக்கு பட்டாபிஷேகம் செய்து சிம்மாசனத்தில் அமரவைக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே தற்போது உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இன்றிலிருந்து 3 நாளில் பட்டாபிஷேகம் நீயும் சீதையும் பட்டாபிஷேகத்திற்காக விரதம் இருக்க வேண்டும். தரையில் படுத்துத் தூங்கி விரதம் இருந்து மங்கள பூஜைகள் செய்துவா என்றார். பரதனும் சத்ருக்கனனும் தற்போது கைகய நாட்டில் இருக்கின்றார்கள். பட்டாபிஷேகத்திற்குள் அவர்களை வரவழைக்க முடியாது. அதற்காக காலம் தற்போது இல்லை. அவர்கள் வரும் வரை பட்டாபிஷேகத்தை தள்ளி வைக்கவும் முடியாது. பரதன் மிகவும் நல்லவன் உன்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவன். ஆகையால் அந்த பட்டாபிஷேகத்திற்கு எந்த ஆட்சேபனேயும் சொல்ல மாட்டான். அவர்கள் வந்ததும் அவர்களுக்கு நடந்ததை தெரியப்படுத்திக் கொள்ளலாம் என்றார். தங்கள் ஆணைப்படி நடக்கின்றேன் என்று ராமர் தசரதரிடம் கூறினார்.

தசரதர் கைகேயிக்கு பல காலங்களுக்கு முன்பு கொடுத்த வாக்கு ஞாபகத்திற்கு வந்தது. அதை பயன்படுத்தி ஏதேனும் விபரிதமாக கேட்டுவிடுவாளோ என்று தசரதருக்கு ஓரு பயம் வந்தது. தந்தையிடம் விடைபெற்ற ராமர் கௌசல்யையிடம் ஆசி வாங்க அவர் இருக்கும் இடம் சென்றார். ராமர் வருவதற்கு முன்பே கௌசல்யைக்கு தகவல் சென்றுவிட்டது. லட்சுமனனும் சீதையும் அவருடன் இருந்தனர். ராமர் கௌசல்யாவை வணங்கினார். சிரஞ்சீவியாக இருப்பாயாக ராஜ்யத்தை நிர்வாகித்து எதிரிகளை அழித்து விரோதிகளை அடக்கி மக்களை காப்பாற்றுவாய். உன் குணத்தினால் உன் தந்தையை திருப்தி செய்து விட்டாய் இது என்னுடைய பாக்கியம் என்று ஆசிர்வாதம் செய்தார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -1

அயோத்திக்கு வலிமைமிகுந்த அரசனாக முடிசூட்டிக்கொள்ளும் தகுதி ராமருக்கு வந்து விட்டதை தசரதர் உணர்ந்தார். தன்னைப்போலவே ராமனும் இந்த உலகத்தை அரசனாக இருந்து ஆட்சி செய்வதை பார்க்க ஆசைப்பட்டார். ராமனுக்கு முடிசூட்டி இளவரசனாக்கி விடலாம் என்று தீர்மானித்தார். ஆகையால் இதனைப்பற்றி ஆலோசிக்க வசிஷ்டர் முனிவர்கள் மற்றும் வேற்று நாட்டு அரசர்கள் சிலரையும் ஆலோசனை சொல்வதில் வல்லவர்கள் சிலரையும் கலந்தாலோசிக்க வரவழைத்தார். ராமனை அரசனாக்க முடிவெடுத்த பின்னர் கேகய மன்னர் மற்றும் ஜனகரிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று தசரதர் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அரசவை கூடியது அனைவரும் வந்து அவரவர்களுக்கு தக்கபடி ஆசனங்களில் அமர்ந்தனர். அனைவரையும் வரவேற்ற தசரதர் பல ஆண்டுகாலம் இந்நாட்டை ஆட்சி செய்து பாதுகாத்து வருகிறேன். தனக்கு முதுமை வந்து விட்டபடியால் ராமனை இளவரசனாக முடிசூட்டி விடலாம் என்று ஆசைப்படுகிறேன். தங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று அனைவரிடமும் கேட்டார் தசரதர்.

ராமர் மக்களின் மனம் கவர்ந்தவராய் இருக்கிறார். எதிரிகளிடம் இருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் வல்லைமையும் இருக்கிறது. சத்தியத்தை கடைபிடிக்கும் ராமனை இளவரசனாக முடிசூட்டலாம் என்று அனைவரும் தரசதரின் கருத்தை வரவேற்றார்கள். இதனைக்கேட்ட தசரதர் தனக்கு இப்போது ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது அதனை இப்போதே கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளவிரும்புகின்றேன். தங்கள் கருத்தை ஒளிவு மறைவில்லாமல் யார் வேண்டுமானாலும் கூறலாம் என்று தனது சந்தேகத்தை கேட்க ஆரம்பித்தார். இத்தனை ஆண்டு காலம் நீதி நெறி தவறாமல் அயோத்தையை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றேன். நான் சொன்னதை கேட்டதும் எந்த மறுப்பேதும் சொல்லாமல் ராமரை இளவரசனாக முடிசூட்டலாம் என்று தங்கள் கருத்தை சொன்னீர்கள். இதன் காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றேன். என்னுடைய ஆட்சியில் ஏதேனும் குறைகள் இருக்கின்றதா என்று கேட்டார்.

தங்களுடைய புதல்வன் ராமர் தேவர்களைப் போல் புத்திமானாக இருக்கின்றார். சத்தியத்தின் உருவமாகவும் நல்லொழுக்கத்தின் உருவமாகவும் இருக்கின்றார். தேவ அசுர மானிடர்கள் என் அனைவரது அஸ்திர வல்லமைகளையும் பெற்றவராக இருக்கின்றார். தந்தையான உங்களை பார்த்துக்கொள்வது போல் அன்புடன் நாட்டு மக்களை பார்த்துக்கொள்கிறார். மக்கள் துக்கப்படும் போது தானும் துக்கப்படுகிறார். மக்கள் மகிழ்ச்சி அடையும் போது தந்தை குழந்தையை பார்த்து மகிழ்வதை போல் மகிழ்ச்சி அடைகிறார். ஆசைக்கு அடிமைபடாமல் தன்புலன்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். தங்கள் பரம்பரையில் வந்தவர்களில் மேன்மையானவராக இருக்கின்றார். இவ்வுலகில் அவரது பெருமைகள் வளர்ந்து கொண்டே செல்கிறது. இவரை தற்போது இளவரசனாக முடிசூட்டினால் தங்களுக்கும் தங்கள் பரம்பரைக்கும் மேலும் புகழை பெற்றுத்தருவார் ராமர். ஆகவே அவரை இளவரசனாக முடிசூட்டலாம் என்று கூறினோம் என்று தங்கள் கருத்தை கூறினார்கள். அனைவரது கருத்தை கேட்டு மகிழ்ந்த தசரதர் ராமரின் முடிசூட்டு விழாவுக்கு நல்ல நாள் பார்த்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -30

தசரதசக்ரவர்த்தியும் ராஜகுமாரர்கள் தங்கள் துணையுடன் அயோத்திக்கு வருவதை அறிந்த மக்கள் அயோத்தியை முழுவதுமாக அலங்கரித்தார்கள். பூலோக சொர்க்கம் போல் காட்சி அளித்தது அயோத்தி. மக்கள் அனைவரும் ஊருக்கு சிறிது தூரத்திற்கு முன்பே சென்று மேளதாளத்துடன் சங்கொலி முழங்க ஆடல் பாடலுடன் அனைவரையும் வரவேற்றார்கள். அரண்மனைக்கு வந்த திருமண தம்பதிகளை கௌசலை சுமித்ரை கைகேயி மூவரும்
வரவேற்றார்கள். அரண்மனைக்கு வந்ததும் கைகேயின் தந்தை கேகய நாட்டு மன்னர் கோமன் தசரதரிடம் பரதன் தன்னுடைய மனைவியுடன் கேகய நாட்டில் சிறிது காலம் தன்னுடன் தங்கியிருக்க வேண்டும் என்று வேண்டுகோள் ஒன்று வைத்தார். தசரதரும் மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்தார். பரதனையும் அவனுடன் இணைபிரியாமல் இருக்கும் சத்ருகனனையும் கேகய நாட்டிற்கு தசரதர் அனுப்பிவைத்தார். அவர்களை கைகேயின் சகோதரன் யுதாஜித் என்பவன் அழைத்துச்சென்றான்.

பரதன் சென்றதும் ராமரும் லட்சுமனணும் அன்னைக்கு தேவையான பணிவிடைகளையும் குருவுக்கு தேவையான பணிவிடைகளையும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப மிகவும் கவனத்துடன் செய்துவந்தார்கள். நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்தையின் அறிவுறைப்படி ராமரும் லட்சுமனனும் செய்தார்கள். ராமரின் நற்குணங்களால் தசரதர் மகிழ்ச்சி அடைந்தார். நான்கு குமாரர்களில் ராமர் தசரதரின் அன்புக்குரியவராக இருந்தார்.

ராமரும் சீதையும் அயோத்தியில் பன்னிரன்டு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் கழித்துவிட்டார்கள். சீதை தன்னுடைய நற்குணங்களாலும் பேரழகினாலும் அனைவராலும் கவரப்பட்டாள். ராமர் சீதை மேல் வைத்த அன்பைவிட இருமடங்கு சீதை ராமரின் மேல் அன்பு வைத்திருந்தாள்.

பால காண்டம் முற்றியது. அடுத்து அயோத்தியா காண்டம்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -29

பரசுராமர் கூறியதை கேட்ட தசரதர் தாங்கள் உலகையே வெல்லும் வலிமையுள்ளவர். ராமனோ சிறு பாலகன். ராமன் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்து அருளுங்கள். ராமன் உங்களுடன் போரிட்டு உங்களால் கொல்லப்பட்டால் ராமருடன் இல்லாத இந்த உலகத்தில் நான் என் உறவினர்களும் உயிருடன் இருக்க மாட்டோம். என்று பரசுராமரிடம் கேட்டுக்கொண்டார்.

தசரதர் கூறிய எதையும் கேட்காத பரசுராமர் ராமரிடமே பேசினார். உலகில் யாராலும் அழிக்க முடியாத இரண்டு வில் இருந்தது. ஒன்று சிவனுடைய வில் இரண்டாவது விஷ்ணுவின் வில். நீ துருப்பிடித்து போன சிவ வில்லை உடைத்து அனைவரிடமும் வீராதிவீரன் என்று பெயர் பெற்றுவிட்டாய். உனக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறேன். நான் கொண்டு வந்திருக்கும் விஷ்ணுவின் வில்லான இந்த வில்லை வளைத்து நாண் ஏற்றி வீரன் என்று நிருபித்துக்காட்டு இல்லையேல் என்னுடன் போர் புரிந்து உன் வீரத்தைக்காட்டு. இரண்டில் ஒன்றை நீ செய்தே ஆகவேண்டும் இல்லையேல் இங்கிருக்கும் அனைவரையும் அழித்து விடுவேன் என்று கோபத்தோடு கூறினார். பரசுராமர் கூறியதை கேட்ட தசரதர் ராமருக்கு ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணி மயக்கமடைந்தார்.

ராமர் பரசுராமரை பார்த்து நீங்கள் அந்தணர் என்ற காரணத்தால் உங்களை வணங்குகின்றேன். உங்களிடம் இருக்கும் விஷ்ணுவின் வில்லை தாருங்கள் என்று வாங்கிய ராமர் அதனை வளைத்து நாண் எற்றினார். இப்பொழுது நாண் ஏற்றிவிட்டேன் நாண் எற்றி விட்டால் அம்பை அனுப்பியே ஆக வேண்டும் என்னுடைய இலக்கு என்ன சொல்லுங்கள் இப்போதே இலக்கை கூறிவைக்கின்றேன் என்றார் ராமர். இதனை கண்ட பரசுராமர் தங்களின் வீரத்தை ஏற்றுக்கொள்கின்றேன் என்னை மன்னியுங்கள் என்றார் பரசுராமர். அதற்கு ராமர் நான் உங்களை மன்னித்தாலும் இந்த விஷ்ணுவின் வில் மன்னிக்காது. வில்லில் நாண் ஏற்றிவிட்டேன். இதற்கு சரியான இலக்கை சொல்லுங்கள் என்றார். ராமா தாங்கள் யார் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். அம்பை என்னுடைய அகங்காரத்தின் மீது விடுத்து அழித்துவிடுங்கள். என்னுடைய அகங்கார தவவலிமை அனைத்தும் அழியட்டும் என்றார்.

ராமர் அம்பை விட்டு பரசுராமரின் அகங்கார தவவலிமைகள் அனைத்தையும் அழித்தார். அகங்காரம் அனைத்தும் அழிந்த பரசுராமர் ராமரை வணங்கி அவருக்கு ஆசி கூறிவிட்டு தவம் செய்ய சென்றுவிட்டார். ராமர் தசரதரின் மயக்கத்தை தெளிவித்து பரசுராமர் சென்று விட்டார். ஆபத்து ஒன்றும் இல்லை என்று கூறினார். பரசுராமரை ராமர் வெற்றி பெற்றுவிட்டார் என்று எண்ணி மகிழ்ச்சியடைந்த தசரதர் ராமரை கட்டி அணைத்தார். அனைவரும் அயோத்தி நோக்கி சென்றார்கள்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -28

ராமர் சீதை திருமணம் முடிந்த பின் தசரதன் மிதிலையில் சில நாட்கள் தங்கினார். விஸ்வாமித்திரர் ராமனுக்கு வேதங்களில் சில ராஜ நீதிகளை கற்று கொடுத்தார். பிறகு விஸ்வாமித்திரர் தவம் செய்வதற்காக இமய மலைக்குச் சென்று விட்டார். ஜனகர் ராமனிடம் என் மகள் சீதை உன் மனைவியாகி விட்டாள். இப்போது நீ செல்லும் தரும நெறியில் உன்னுடன் துணையாக இருப்பாள். உன் நிழல் போலவே எப்போதும் உன்னுடன் இருப்பாள் என்று கூறி சீதையை ராமனுடன் அனுப்பினார். தசரதர் தமது சுற்றமும் பரிவாரங்களும் சூழ ஜனகரிடம் விடைபெற்றுக்கொண்டு தனது நாட்டிற்கு புறப்பட்டார். ஜனகர் 4 பெண்களுக்கும் சீதனம்தந்து அறிவுரை கூறி வழியனுப்பினார். ராமர் சீதையுடன் தனித் தேரில் புறப்பட்டார்.

அயோத்திக்கு சென்று கொண்டிருக்கும் போது வழியில் நான்கு பக்கமும் இருந்து பறவைகள் அபசகுனமாக கத்த தொடங்கியது. விலங்குள் அனைத்தும் வலதுபக்கமாக சென்றது. பூமி நடுங்க காற்று பலமாக அடிக்க மரங்கள் கீழே சாய்ந்து கொண்டும் இருந்தது. இதனைக்கண்ட தசரதர் வசிஷ்டரிடம் சகுனம் சரியில்லாமல் இருக்கிறது. எனது மனம் படபடக்கிறது இந்த சகுனத்திற்கு என்ன பலன் என்று கேட்டார். அதற்கு வசிஷ்டர் பறவைகளின் சத்தத்தில் உள்ள ஒலிக்குறிப்பில் இருந்து தெய்வ சங்கல்பமாக அபாயகரமான ஆபத்து ஒன்று விரைவில் வர இருக்கிறது. ஆனால் விலங்குகளின் நடவடிக்கையில் இருந்து பார்த்தால் அந்த ஆபத்து நீங்கிவிடும் ஆகவே பயம் கொள்ள தேவையில்லை என்று ஆறுதலான வார்த்தைகளை தசரதரிடம் தெரிவித்தார்.

ஜமதக்னியின் புதல்வரான பரசுராதர் அங்கே வந்தார். பரசுராமர் வந்ததை கவனித்த முனிவர்களில் ஒருவர் சத்ரிய குலத்தவரான தசரதர் குலத்தை அழிக்க வந்திருக்கின்றார் பரசுராமர் என்று கூறினார். இதனை கேட்ட வசிஷ்டர் தன் தந்தையை கொன்ற சத்ரியர்களை கொல்ல சபதம் செய்து சூரிய குலத்தின் 21 தலைமுறைகளை அழித்து விட்டு சத்ரியர்கள் மீதான வெறுப்பையும் கோபத்தையும் விட்டவர் பரசுராமர். ஆகவே இப்போது அதற்காக வந்திருக்க மாட்டார் என்று கூறினார். வசிஷ்டர் மற்றும் அங்கு உள்ள முனிவர்களின் உபசாரத்தை ஏற்றுக்கொண்டார் பரசுராமர்.

பரசுராமரைக் கண்ட தசரதர் இவரால் ராமருக்கு ஆபத்து ஏதும் வந்து விடுமோ என்று அஞ்சினார். ராமரிடம் வந்த பரசுராமர் உன்னுடைய அற்புதமான ஆற்றலை பற்றி கேள்விப்பட்டேன். சிவவில்லை உடைத்த உனது செயல் மிகவும் ஆச்சரியமானது. எண்ணிப்பார்க்க முடியாதது. அதனை அறிந்ததும் எனது தந்தையால் கொடுக்கப்பட்ட விஷ்ணு வில்லை கொண்டு வந்திருக்கின்றேன். இந்த வில்லை வளைத்து நாணேற்றி உன்னுடைய சொந்த பலத்தை எனக்கு காட்டு. இந்த வில்லில் நாண் எற்றுவதில் உன் தோள் வலிமையை நான் கண்டபின் உன் வீரத்தை அங்கிகரிக்க உன்னுடன் தனி ஒருவனாக போர் புரிகிறேன் என்றார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -27

திருமண மண்டபத்துக்கு அனைவரும் வந்து சேர்ந்தார்கள். பல தேசத்திலிருந்தும் மக்கள் திருமண நிகழ்ச்சியை பார்க்க கூடி இருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண நிச்சயதார்த்த மண்டபத்துக்கு சீதையை அழைத்து வருமாறு வசிஷ்டர் கேட்டுக் கொண்டார். ஜனகர் வசிஷ்டரை தொழுத பின்னர் சீதையை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். சீதையை அழகாக அலங்கரித்து அழைத்து வந்தார்கள். சீதையின் அழகை கண்டு கூடியிருந்த அனைவரும் கண்களை இமைக்க மறந்து விட்டனர். ராமன் சீதையை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். சீதை தன் இருக்கையில் அமர்ந்தபடியே தன் கண்களை சிறிது மேல் நோக்கி அன்று கன்னிமாடத்திலிருந்து பார்த்த அந்த அழகன் தான் தன்னை மணந்து கொள்ள போகும் மணாளன் என்பதை உறுதி செய்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.

தசரதன் வசிஷ்டரை பார்த்து திருமண நாள் என்று வைத்து கொள்ளலாம் எனக் கேட்டார். ஜனகர் விஸ்வாமித்திர முனிவரிடம் தன் மகளை ராமருக்கும் தன் தம்பியின் மகளை லட்சுமணனுக்கும், பரத, சத்ருக்குனருக்கும் கொடுக்க சம்மதித்து இரண்டாம் நாளான பங்குனி உத்திரம் நாளில் நால்வருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்து கொண்டனர். இரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் திருமணத்திற்காக வேலைகள் விரைவாக நடைபெற தொடங்கின. நாளை திருமணம் என்பதால் சீதை ராமனை நினைத்து அவதிபடுகிறாள். ராமனும் சீதையை நினைத்து ஏங்குகிறார். மிதிலை மக்கள் திருமணத்தை பார்க்க தங்களை அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள்.

திருமண நாள் வந்தது. மிதிலை நகரமே அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. வாழை மரமும் வண்ணமயமான தோரணங்களும் மிதிலை நகரை அலங்கரித்து கொண்டு இருந்தது. தசரதன் வெண்கொற்றக் குடையை விரித்து மங்கல வாத்தியங்கள் முழங்க சுற்றிலும் ஏனைய அரசர்கள் புடைசூழ சம்மந்தியாக திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான். இராமர் மங்கல நீராடி, காதணிகள், வீரப்பட்டம், திலகம், முத்தாரம், பட்டாடை உடுத்தி மேலும் பல ஆபரணங்களை அணிந்து அலங்காரமாய் தேரில் ஏறி திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்.

மண்டபத்தில் ஹோமம் தொடங்கி வசிஷ்டர் முன்னிலையில் சடங்குகள் தொடங்கின. முனிவர்கள் வேதமந்திரங்களை சொல்ல ஜனகன் சீதையின் கையைப் பிடித்து இராமனின் கையில் கொடுத்து கன்னிகாதானம் செய்து வைத்தான். அந்தணர்களும் தேவர்களும் ஆசி வழங்கினர். மன்னர்கள் வாழ்த்து சொல்ல மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரமும் செய்தனர். ராமரும் சீதையும் அக்னியை வலம் வந்து வணங்கினர். திருமண சம்பிரதாயாப்படி ராமன் சீதையின் கழுத்தில் மங்கல நாண் கட்டினார். அதே மண்டபத்தில் லட்சுமணன் ஊர்மிளைக்கும், பரதன் மாண்டவிக்கும், சத்ருக்குனன் ஸ்ருதகீர்த்திக்கும் திருமணம் நடைபெற்றது.

வள்ளலார்

வள்ளலார் அவர்கள் 1864-ம் ஆண்டு வேட்டவலம் கிராமத்திற்கு வருகை தந்தபோது ஜமீன் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது பிரபல ஓவியரான விழுப்புரத்தைச் சேர்ந்த செங்கல்வராசு என்பவர் வள்ளலார் அவர்களின் திருஉருவத்தை ஓவியமாக வரைந்தார்.

அந்த ஓவியத்தின் கீழேயே வரைந்தவரின் கையொப்பமும் ஆண்டு தேதியும் குறிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமே நேரடியாக வரையப்பட்ட படம். இந்த படத்தில் இருப்பதுதான் வள்ளலாரின் திருஉருவம்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -26

தசரதர் புதல்வனான ராமரின் வீரத்தை கண்களால் பார்த்துவிட்டேன். அற்புதமான காட்சி. இன்று இப்படி நடக்கும் என்று நான் எண்ணிப்பார்க்கவில்லை ராமரை கணவனாக அடைவதன் மூலமாக என்னுடைய பரம்பரைக்கு சிறப்பான புகழை கொண்டு வரப்போகின்றாள் என்னுடைய மகள் சீதை. விஸ்வாமித்ரரே அடுத்து என்ன செய்ய வேண்டும் தாங்கள் கூறுவதை செயல்படுத்துகின்றேன் என்றார் ஜனகர். விஸ்வாமித்திரர் தசரத சக்கரவர்த்தியை வரவழைத்து திருமணம் செய்வதே சிறந்த முறையாகும். ஆகையால் தூதர்களிடம் ஓலையை கொடுத்து அயோத்திக்கு சென்று இங்கே நிகழ்ந்தவற்றை தசரத சக்கரவர்த்தியிடம் கூறி அழைத்து வரும்படி கட்டளையிட்டார். ஜனக மகராஜாவின் தூதர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து அயோத்தியை அடைந்தார்கள்.

தசதர மன்னரை பார்த்து தசரத சக்ரவர்த்தி அவர்களே ஜனக மகாராஜர் தங்களுக்கு ஓர் நற்செய்தியை அனுப்பியுள்ளார். விசுவாமித்திரருடன் மிதிலைக்கு வந்த ராமர் சீதையின் சுயம்வரத்தில் நாணை இழுத்து சிவதனுசை ஒடித்து விட்டார். ஜனக மகாராஜர் தங்கள் புத்திரனின் திருமண அனுமதியையும் தங்களின் வரவையும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் எனக் கூறினார்கள். ராமனின் வீரச் செயல்களும் ராமனால் சிவதனுசு முறிபட்டதும் கேட்ட தசரதர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். நாட்டு மக்களுக்கு தசரதன் ராமனின் திருமணத்தை முரசொலித்து செய்தி அறிவித்தார். நாட்டு மக்களும் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர்.

தசரதரின் ஆணைப்படி தேரும், யானையும், குடைகளும், கொடிகளோடும், சேனைகள் புறப்பட்டன. வீரர்களும் பெண்களும் மிதிலை நகர் நோக்கி பிரயாணம் புறப்பட்டனர். வழியெங்கும் ஆடல் பாடலுடன் தங்களுக்கே திருமணம் நடப்பது போல் உணர்ந்து மகிழ்ந்தனர். திருமணம் நடத்தி வைக்க அந்தணர்களும் சென்றனர். பெண்களின் சிலம்பொலி, குதிரைகள் கனைப்பொலி, மக்களின் சிரிப்பொலி என போகப்போக மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது. தசரத மன்னருடம் பட்டத்தரசிகளும் இசையொலியின் இரைச்சலோடும் படைகளின் ஒலியோடும் வழிநடையாக சென்றனர். கோசலை, கைகேயி, சுமத்திரை மூவரும் தோழிகளுடன் புடைசூழ தேரில் சென்றனர். சீர் கொண்டு செல்லும் பெண்கள் மொத்தம் அறுபதினாயிரம் பேர். தசரதன் நவரத்தின தேரில் வசிஷ்ட முனிவருடன், பரதனும், சத்ருக்குனரும் சென்றனர். இளைஞர்களும், கன்னியர்களும் தங்களை அலங்கரித்து கொண்டு தங்களுக்கே திருமணம் என்பது போல் மகிழ்ச்சியோடு இருந்தனர். தசரதன் தன் பரிவாரங்களுடன் பயணம் செய்து ஐந்தாம் நாளில் மிதிலையை அடைந்தார். அவர்களுக்காக காத்து கொண்டியிருந்த ஜனகர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுத்தார். ஜனக மகாராஜா தசரத சக்கரவர்த்தியை ராமர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். ராமர் தசரதரிடன் ஆசி பெற்றார்.