அரசாட்சி முறை

பாடல் #247: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண்ட மும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.

விளக்கம்: உயிர்கள் அவரவர்கள் ஏற்றுக்கொண்ட சமய வழிகளின் நெறிமுறைகளின் படியும் ஒழுக்கத்தின் படியும் நடக்கத் தவறியவர்களை அனைத்து சமய வழிகளின் தலைவனாகவும் அனைத்து உயிர்களின் தந்தையாகவும் இருக்கும் சிவபெருமான் தாம் வழங்கிய சிவாகமத்தில் கொடுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப எந்தவித தண்டைனையானாலும் அவர்களின் ஆன்மாவிற்கு தண்டனைகளை தாங்கும் பக்குவத்தை கொடுத்து பின் தண்டனைகளையும் கொடுத்து மீண்டும் அவர்கள் அந்த தவறை செய்யாதபடி அவர்களை சீர் படுத்துவான். ஆனாலும் அவர்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவியில் இருக்கும் உடலுக்கு வேண்டிய தண்டனைகளைக் கொடுத்து அவர்களைத் திருத்துவது ஒரு நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. – திருக்குறள்

விளக்கம்: குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அது நிகழாதவாறு தகுந்த தண்டனை வழங்குவதே அரசனின் கடமை ஆகும்ஆகும்

கோர்ட்டில் ஒரு திருடன் திருட்டு வழக்கிற்கான நிறுத்தப்பட்டான். அவனிடம் நீதிபதி திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வருகிறாயே நீ திருந்தவே மாட்டியா? என்று கேட்டார். எத்தனை தடவை திருடினாலும் அதே தண்டனையே கொடுக்கறீர்கள் நீங்கள் சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா? என்றான் திருடன். நீதிபதி யோசித்தார். அவனின் கேள்வி நியாயமாகப்பட்டது. திருடனை சிறைச்சாலைக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்த நீதிபதி அவருக்கு சில கட்டளைகளை கொடுத்தார்.

நீதிபதியின் கட்டளைப்படி ஜெயிலர் பிக்பாக்கெட் அடித்த பத்துப் பேரை திருடனின் ஜெயில் அறையில் வைத்தார். திருடனிடம் வந்த ஜெயிலர் இந்த அறையில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த அறைக்கு அருகில் ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு என்றார். திருடன் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். ஜெயிலர் மற்ற பத்து பேரைத் தனியாக அழைத்தார். திருடன் வேலை செய்துவிட்டு கூலியை வாங்கிக் கொண்டு சாப்பிட கேண்டின் செல்லும் வழியில் அவனிடம் உள்ள பணத்தை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினமும் இந்த வேலையைச் செய்யணும். யார் எப்ப எப்படி பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது என்றார். அவர்கள் ஜெயிலரின் கட்டளையை ஏற்றார்கள். முதல் நாளே திருடன் பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் உணவு தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் சிறிதளவு உணவு சாப்பிடக் கொடுத்தார்கள். அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டு பரிதாபப்பட்டாலும் வேறு வழியில்லை. அவனின் பணத்தை திருடா விட்டால் ஒன்பது பேருக்கும் உணவு கிடைக்காது. பத்து பேர் பட்டினியில் கிடப்பதை விட ஒருத்தன் பட்டினி கிடப்பது பரவாயில்லை என்று அனைவரும் அமைதியாக இருந்து விட்டார்கள். தினமும் இப்படியே நாள் கடந்தது. தினமும் அவர் எவ்வளவு வேலை பார்த்து சம்பாதித்தாலும் அவனுக்கு கிடைத்தது உயிர் வாழத் தேவையான ஒரு வேளை சிறிதளவு உணவு மட்டும். அவன் விடுதலை ஆகும் நாள் வந்தது.

நீதிபதி அன்று திருடன் இருக்குமிடம் வந்தார். நீ கேள்வி கேட்டபடி சட்டத்தையோ தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது? என்றார். ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு வினாடியில் திருடிக்கொண்டு செல்வது எவ்வளவு அக்கிரமம்னு இப்போது புரிகிறது. இனி திருட எனக்கு மனசு வராது என்றான் திருடன். மற்ற பத்து திருடர்களும் திருடன் பசியில துடிப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. செத்தாலும் இனிமேல் திருட மாட்டோம் என்றார்கள்

நீதிபதி திருமந்திரம் மற்றும் திருக்குறளில் வள்ளுவர் சொன்னதை இங்கு செய்தார்.

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

சித்திகள்

முனிவர் ஒருவர் தனது கடும் தவத்தின் காரணமாக பல சித்திகள் கைவரப்பெற்றார். அதனால் அவருக்கு தன்னால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்ற கர்வம் வந்தது. நல்ல குணங்களும் தவ வலிமையும் கொண்ட முனிவரின் கர்வத்தை நீக்க திருவுள்ளம் கொண்டார் இறைவன். சன்னியாசி உருவத்தில் முனிவர் இருக்கும் இடத்திற்கு வந்தார் இறைவன். முனிவரிடம் சுவாமி தாங்கள் செய்த தவ வலிமையால் பல சித்திகளைப் பெற்றிருப்பதாக அறிந்தேன். அப்படிப்பட்ட தங்களை காண வேண்டியே இங்கு வந்துள்ளேன் என்றார் சன்னியாசி. சன்னியாசியை வரவேற்று அமரும்படி கேட்டுக் கொண்டார் முனிவர். அச்சமயத்தில் அந்த வழியாக ஒரு யானை சென்று கொண்டிருந்தது. சுவாமி தங்களால் இந்த யானையையும் கொல்ல முடியும் அல்லவா எனக் கேட்டார் சன்னியாசி. ஏன் முடியாது இப்போது பாருங்கள் என்று நீரை கையில் எடுத்து மந்திரித்து யானையை நோக்கி வீசினார் முனிவர். உடனே அந்த யானை அதே இடத்தில் துடிதுடித்து செத்து வீழ்ந்தது. என்ன ஆச்சரியம் உள்ளபடியே தங்கள் மந்திர சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் மந்திர பிரயோகத்தால் யானையை எளிதாக வீழ்த்தி விட்டீர்களே என பாராட்டினார் சன்னியாசி. சன்னியாசியின் புகழுரைகள் சாதுவுக்கு பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது. மீண்டும் சுவாமி இப்போது தங்களால் இறந்து போன யானையை மீண்டும் பிழைக்க வைக்க முடியுமா? எனக் கேட்டார் சன்னியாசி. என்னால் எதையும் செய்ய முடியும். இப்போது பாருங்கள் என்று முன் போலவே நீரை கையில் எடுத்து மந்திரித்து கீழே சாய்ந்து கிடந்த யானையின் மீது வீசினார் முனிவர். யானைக்கு உயிர் வந்தது.

முனிவரிடம் சுவாமி உங்கள் அபார சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் அனுமதித்தால் தங்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். தாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ன எனக் கேட்டார் சன்னியாசி. தாராளமாக கேட்கலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்றார் முனிவர். சுவாமி தாங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்பு அதை உயிர் பிழைக்க செய்தீர்கள். இதனால் தாங்கள் பெற்ற பலன் என்ன? இறைவனை கண்டீர்களா? தங்களுக்கு எப்படிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி கிடைத்தது? தங்களின் சித்து விளையாட்டு இறைவனை எளிதாக அடைய தங்களுக்கு உதவியக இருந்ததா? என்று கேட்டார் சன்னியாசி வடிவில் இருந்த இறைவன். இந்த சித்திகள் எதற்கும் பயன்படாது என்பதை உணர்ந்த முனிவர் கர்வம் அழிந்த நிலையில் சன்னியாசியின் கால்களில் விழுந்தார். இறைவன் அவருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.

இறைவனின் அருளை பெற்ற பக்தன் இறைவனிடம் விலை மதிக்க முடியாத ஞானம் வைராக்கியம் பக்தி இவைகளை மட்டுமே கேட்டு பெற்றால் ஆனந்தமாக வாழலாம். கர்மாக்கள் விரைவாக அழிந்து இறைவனிடம் செல்லலாம். அதனை விடுத்து இறைவனே விட சித்திகளே பெரிது சித்திகள் வேண்டும் என்று அதன் பின்னால் சென்றால் எந்த பலனும் இல்லை. கர்வம் மிகுந்து மேலும் பிறவிகளே அதிகரிக்கும்.

நம்பிக்கை

தினமும் நான்கு காலப் பூஜைகளுக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடும் தீவிரமான சிவ பக்தன் ஒருவன் இருந்தான். சிலைகளையும் படங்களையும் எங்கு பார்த்தாலும் அப்படியே நின்று பக்தியில் உருகுவான். இப்படிச் சிலைகளிலும் ஓவியங்களிலுமே பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமானை நேரில் தரிசனம் செய்ய அவன் ஆசைப்பட்டான். ஒரு சிற்பியிடம் சொல்லி அற்புதமாகச் சிவபெருமான் சிலை ஒன்றைச் செய்து வாங்கி வந்தான். சிவனே உயிரோட்டமாக வந்திருப்பது போன்ற அற்புதமான சிலை அது. தன் வீட்டுப் பூஜையறையில் அந்தச் சிலையை வைத்துப் பூஜைகளை ஆரம்பித்தான். நீண்ட காலம் அவன் சிவபெருமானை நினைத்து பூஜை செய்தான். காலங்கள் கடந்தும் சிவ பெருமானின் தரிசனம் அவனுக்குக் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவன் தன்னுடைய பூஜையை நிறுத்தினார். சிவபெருமானை வழிபடுவதை நிறுத்தினான். தான் ஆசையாகச் செய்து வாங்கிய சிவன் சிலையைத் தூக்கிப் பரண் மேல் வைத்தான். இவ்வளவு நாட்களைச் சிவபூஜையில் வீணடித்ததற்குப் பதிலாக பெருமாளை வணங்கியிருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. உடனே இன்னொரு சிற்பியைத் தேடிப் பிடித்து பெருமாள் சிலை ஒன்றைச் செய்து வாங்கினான். தன் வீட்டுப் பூஜையறையில் பெருமாள் சிலையை வைத்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தான். பெருமாள் சிலையின் முன்பாக ஊதுவத்தி ஏற்றி வைத்தான். அதன் நறுமணம் அறை முழுவதும் பரவியது. அப்போதுதான் அவன் பரணில் இருந்த சிவபெருமான் சிலையைப் பார்த்தான். பெருமாளுக்கு ஏற்றிய ஊதுவத்தியின் நறுமணத்தைச் சிவன் சிலை நுகரக்கூடாது என்று அந்தச் சிலையின் மூக்கைத் துணியால் இறுக்கமாக மூடினான்.

சிவபெருமான் அடுத்த நொடியே அவன் கண்முன் தரிசனம் தந்தார். வியந்துபோன அவன் சிவபெருமானை வணங்கிவிட்டு இத்தனை நாட்கள் நான் பூஜித்தபோது காட்சியளிக்காத நீங்கள் இப்போது காட்சி தருவது ஏன்? என்று கேட்டான். நான் கல்லாகவும் மண்ணாகவும் மலையாகவும் நீராகவும் காற்றாகவும் ஆகாயமாகவும் இருப்பவன். இந்த கல்லே நான்தான். ஆனால் நீயோ வெளியே இருந்து ஏதோ ரூபம் சிலைக்குள் வந்து காட்சி கொடுக்க போகிறது என்று எண்ணி பூஜித்து வந்தாய். இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் கல் சிலையாக நினைத்தாய். இன்றுதான் இந்தச் சிலையாகவே நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். நீ அப்படி உணர்ந்த அந்த நொடி நான் உன் கண்முன் வந்துவிட்டேன் என்றார் இறைவன்.

இறைவனைக் காண வேண்டுமெனில் அனைத்தும் இறைவனே என்ற எண்ணமும் உறுதியான சரணாகதி மற்றும் நம்பிக்கையே முக்கியம்.

எச்சரிக்கை

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் குடியானவன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் குழந்தை இல்லாமல் இருந்தான். ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக குழந்தை உண்டாவான் என தேற்றினார். எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் குழந்தை உண்டாகும் என்றார். தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான். ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதி வைத்துவிட்டு தன் தொழிலில் ஈடுபட்டான். பக்தியில் மேம்பட்ட அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது சமயம் வெயில் காலமாதலால் வெப்பத்தால் துடிதுடித்துச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு மரத்தடியில் வைத்திருந்த குடை செருப்பு விசிறி இம்மூன்றையும் கண்டார். அதை மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு அம் மூன்றையும் வைத்தவனை வாழ்த்திக் கொண்டே சென்றார். காசிக்குச் சென்று திரும்பி வரும் வழியில் உயிர் துறந்த அந்தணர் மூன்று பொருட்களையும் தானம் செய்தவன் வீட்டில் மகனாகப் பிறந்தார். தனக்கு மகப்பேறு உண்டானது கண்டு மகிழ்ந்தான். குழந்தை பிறந்து பேச ஆரம்பிக்கும் பருவத்தில் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்தது. அது கண்டு பெற்றோர்கள் கவலைப் பட்டனர். குழந்தை வளர்ந்து பதினாறு வயது அடைந்தது.

இவர்கள் வாழ்ந்த ஊரில் கள்வர்கள் பயம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை. அவ்வூர் அரசனிடம் சென்று அனைவரும் முறையிட்டனர். அரசன் நாள் தோறும் தினம் ஒருவராக ஊர் சுற்றி வந்து நான்கு ஜாமங்களும் பறை கொட்டி வரும்படி ஆணை பிறப்பித்தார். அவ்வாறே மக்களும் வீட்டிற்கு ஒருவராகப் பறை கொட்டி வந்தனர். ஒரு நாள் சக்கிலியன் முறை வந்தது. அன்று அவன் முக்கியமாக வெளியில் செல்ல நேர்ந்தது. மனைவியிடம் ஊமை மகனை பறை அடிக்க அனுப்பும் படிச் சொல்லி விட்டுச் சென்றான். அன்றிரவு தாய் மகனை அழைத்தாள். அவன் கையில் பறையைக் கொடுத்து சாம சாமத்திற்கு அடிக்கும் படி ஜாடை காட்டினாள். ஊமைச் சிறுவன் பறையை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்து அடித்துக் கொண்டே சென்றான். பிறந்தது முதல் பதினாறு வயது வரையிலும் பேசாமல் இருந்தவன் முதல் ஜாமம் முடிந்ததும் பறையை நிறுத்தி வடமொழியில் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னான். அந் நாட்டு அரசன் அதைக் கூர்ந்து கேட்டார். இவ்வாறு சிறுவன் நான்கு ஜாமங்களுக்கும் பறை கொட்டி நான்கு ஸ்லோகங்கள் சொல்லி முடித்தான். பொழுது புலர்ந்தது. வீட்டிற்குச் சென்றான். பறையை வைத்தான். பழைய படி மௌனமாயிருந்தான். அன்றிரவு முழுவதும் விழித்திருந்து அச் ஸ்லோகங்களைக் கேட்ட அரசன் அவைகளின் பொருளை ஆராய ஆவல் கொண்டான். விடிந்ததும் வீட்டிற்கு வந்த சக்கிலியன் தன் மகன் தனது கடமையை ஒழுங்காக செய்தானா என்று மனைவியிடம் கேட்டு ஒழுங்காக செய்தான் என்றதும் மகிழ்ச்சி அடைந்தான்.

அரசனும் காலையில் அரசவைக்கு வந்தார். மந்திரியிடம் நேற்றிரவு பறை கொட்டியவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார். அவர்கள் சேவகர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்கள் சக்கிலியனை அழைத்து அரசர் முன் நிறுத்தினர். சக்கிலியன் அரசரைக் கண்டு நடுக்கமடைந்தான். அரசன் சக்கிலியனை ஆசனத்தில் அமரச் செய்து நேற்றிரவு பறை கொட்டும் போது நான்கு ஜாமத்திற்கும் நான்கு ஸ்லோகங்கள் சொன்னீர்களே அதன் பொருள் என்ன? என ஆவலுடன் கேட்டார். சக்கிலியன் வியப்புடன் அரசே நேற்றிரவு பறை கொட்டியவன் என் மகன் அவன் பேச மாட்டான் ஊமையன் என்றான். உடனே அரசன் அச்சிறுவனை அழைத்து வரும் படிச் சொல்லச் சேவகர்கள் அவனை அழைத்து வந்தனர். அரசனது மனம் பக்குவம் பெற்றிருந்தது. சக்கிலியன் மகனைக் கண்ட அரசன் தம் சிம்மாசனம் விட்டிறங்கினார். அச்சிறுவனை எதிர் கொண்டு அழைத்தார். ஆசனத்தில் அமரும் படி பணிவுடன் சொன்னார். இக் காட்சியைக் கண்ட அனைவரும் பிரமித்தனர். அரசர் சிறுவனை உணர்ந்தார். அவனது உள்ளக் கிடக்கையை அறிய ஆவல் கொண்டு நேற்றிரவு நான்கு ஜாமங்களிலும் சொன்ன ஸ்லோகங்களின் பொருளை விளக்கும் படி வேண்டினன்.

சிறூவன் முதல் ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கம் செய்தனன்

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி
தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத
ஜாக்ரதா!”

இந்த உடம்பில் மதிப்பிட முடியாத ரத்தினத்தை விட உயர்ந்த ஞானம் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. காமம் குரோதம் லோபம் ஆகிய திருடர்கள் ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிக்கிறார்கள். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.

மகிழ்ச்சி அடைந்த அரசர் இரண்டாவது ஸ்லோகத்திற்கு பொருள் கேட்டார். சிறுவன் இரண்டாம் ஸ்லோகம் சொல்லி பொருள் கூறினன்.

“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந:
சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா:
ஜாக்ரதா”

பிறத்தல் மிகவும் துன்பம். பிறவியின் இறுதியில் வரும் முதுமை பருவம் பெருந்துன்பம். இடையில் இருக்கும் வாலிப காலங்களில் இனக்கவர்ச்சி மோகத்தால் உண்டாகும் துன்பங்கள் மிகப் பெரியதாகும். ஜனன மரண சம்சாரமாகிய சமுத்திரத்தில் படும் துயரம் மிகப்பெரியது. ஆகையால் ஆன்மாக்களே ஜாக்கிரதையாக இருங்கள்.

இரண்டாம் ஸ்லோகத்தின் மூலம் சம்சார சாகரம் தீராத துக்கம் என்றும் இதனின்று விலக அறிவு தனித்திருக்க வேண்டும் என்றும் தெளிந்தார் அரசர். சிறுவன் சொன்ன மொழிகளைக் உபதேசமாகக் கொண்டு வாழ்நாளில் அடைய வேண்டிய மெய்ப் பொருளை அடைய ஆவல் கொண்டு அடுத்த ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார்.

“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”

ஈன்று வளர்த்த அன்னையும் தந்தையும் நிலை இல்லாதது. இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும் பொருள்களும் நிலை இல்லாதது. தனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் நிலை இல்லாதது. ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள். எச்சரிக்கையாய் இருங்கள்..

அரசன் சிறுவன் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்தார். நான்காம் ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார் அரசர். அவ்வாறே சிறுவன் கூறினன்.

“ஆயசா பத்தே லோகே கர்மணா பஹு
சிந்தையா
ஆயுக்ஷீணம் நஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”

இந்த உலகில் மனிதர்கள் பலவித சிந்தைகளாகிய கர்ம சம்பந்தமான ஆசைகளினாலே கட்டுப்பட்டுள்ளார்கள். இதனால் தனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிவதில்லை. ஆகையினால் எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். கர்மாவை வெல்ல முயலுங்கள்.

சிறுவனின் ஞான உரைகளைக் கேட்ட மன்னர் மிக வியந்தார். சிறுவனின் தந்தையை அழைத்து உன் மகன் ஊமையன் அல்லன். பெரிய ஞானி. நான் அவன் ஞான மொழிகளைக் கேட்கும் பேற்றைப் பெற்றேன் என்று ஆனந்தமடைந்தார்.

நம்முள் இருக்கும் திருடர்களை கவனிக்காமல் வெளியே இருக்கும் திருட்டுகளைப் பற்றி கவலைப்பட்டு காலத்தை வீணாகக் கழிக்கின்றோம் என்பதை இக்கதையை உணர்ந்தால் தெரிந்து கொள்ளலாம்.

சாருகர்

சாருகர் ஒரு மாமிச வியாபாரி. தன் கடையில் எடை கல்லாக சாளக்கிராம மூர்த்தியை உபயோகித்து வந்தார். சாளக்கிராமத்தின் மகிமையை பக்தர் ஒருவர் சொல்லக்கேட்டு நாளடைவில் அந்த மூர்த்தி மேல் அன்பு ஏற்பட்டு வியாபார நேரம் தவிரத்து மற்ற நேரங்களில் அந்த சாளக்கிராம கல்லை வணங்கி வந்தார். ஒரு நாள் இதை கவனித்த விஷ்ணு பக்தர் அவரை ஏம்பா இந்த அடாத செயல் செய்கிறாய் என சாளக்கிராமத்தின் மகிமையையும் கிருஷ்ண பரமாத்மாவின் புகழையும் எடுத்து கூறி பண்டரி மேன்மையையும் கூற இதை அறிந்த சாருகர் பண்டரி யாத்திரை செல்ல முடிவு செய்து கிளம்பினார். வழியெல்லாம் பண்டரி நாதா பண்டரிநாதா எனு கூறி என்றும் விட்டல் விட்டல் என்று பஜனை செய்து கொண்டே சென்றார். இரவு பகலாக பஜனை செய்தபடி நடந்து சென்றார். பொழுதுபோன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.

ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார். இரவில் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார். இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. அந்த வீட்டுப் பெண் வேலை காரணமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள். அவரருகே சென்று தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே தாங்கள் யார்? என்று கேட்டாள். அதற்கு சாருகர் அம்மா வணக்கம் நான் ஒரு யாத்ரீகன். என் பேர் சாருகன். நான் பண்டரிபுரம் போகின்றேன் என்றார். அந்த பெண்மணி இவரிடம் என் உள்ளததைக் கொள்ளை கொண்ட உத்தமரே இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர் என அவரை ஆசையுடன் நெருங்கினாள். அம்மா இந்த உலகம் கடுகளவு மட்டுமே. இந்த கடுகளவு உலகத்தில் தவறு செய்யும் பாவத்தால் வரும் துன்பம் மலையளவு. நான் மனத்தினாலும் பெண்களைத் தீண்டாதவன். நீங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வதுதான் கண்ணியம். கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம் என ஒழுக்கத்தை போதித்தார். அவள் காதுகளில் ஏதும் விழவில்லை. வெறி பிடித்தவளைப் போல ஓடி கத்தியை எடுத்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துண்டித்தாள். என் உயிரினும் இனிய உத்தமரே என் கணவரைக் கொன்றுவிட்டேன். இனி நீர்தான் என் கணவர் என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள். இந்தக் கொடுஞ் செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார். கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா? பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார். அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள். சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள். பெரியோர்களே இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு வேலையாக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க துரத்தி வந்தான் என்று கூறி கதறியழுதாள். ஊர்க்காரர்கள் சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். பின்னர் காவலர்களிடம் ஒப்படைத்து சிறையில் அடைத்தார்கள். பொழுது விடிந்தபின் அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான்.

பாண்டுரங்கன் அனைத்தும் அறிவான் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை என நடந்ததை உள்ளபடி சொன்னார் சாருகர். குற்றம் புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள். சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. குற்றம் செய்யாத சாருகர் துடிதுடித்தார். கைகளில்லாமல் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார். அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள் அறங்காவலர்கள் தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி நமது பரம பக்தனான சாருகன் வருகிறான். கோயில் மேளம் குடை சுருட்டி பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள் என்று பணித்தருளினார். அனைவரும் சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர். சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார். கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார். அப்பாேது வெட்டப்பட்ட கைகள் இரண்டும் விட்டலன் அருளால் முளைத்தன.

தேவ தேவா விட்டலா என்று அன்பின் வெளிப்பாட்டில் கதறி அழுதார். மேலும் அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே. அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே. இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லையே என்று புலம்பினார். அப்போது விட்டலன் பிரசன்னமாகி அவரை தேற்றி கூறினார். அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓர் அந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான். அங்கு பசுவை வெட்ட வந்த புலையன் ஒருவன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினான் அந்த அந்தணன். புலையனும் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான். நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன. கொலையுண்ட பசுதான் தனவந்தனின் மனைவி. பசுவைக் கொலை செய்த புலையன்தான் அவளுடைய கணவன். உன்னுடைய துன்பங்கள் அனைத்தும் முற்பிறப்பில் நீ செய்த தீவினையால் வந்தவை. உன்னுடைய அனைத்து தீய வினைகளும் இப்போது தீர்ந்தது. இப்பிறவியில் நீ வினைகளின் காரணமாக பெற்ற துன்பத்திலும் விடாமால் செய்த உன் பக்தியின் பலனால் இன்று எமது தரிசனமும் கிடைத்தது என்று அருளிச் சென்றார். பின் சாருகர் காலமெல்லாம் பண்டரியிலேயே தங்கி நாம செபம் செய்து இறுதியில் வைகுண்டம் எழுந்தருளினார்.

துணையாக இறைவன்

ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். மீண்டும் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்கள். சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும் அந்த சிறுவன் நான் இப்போது வளர்ந்திருக்கிறேன் இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான். சிறிது யோசனைக்குப் பிறகு அவனது தந்தை ஒப்புக்கொண்டார். ரயில் நிலைய நடைமேடையில் நின்று சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூறிவிட்டு மகனே வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால் இது உனக்கானது என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் சரி என்று காகிதத்தின் மீது கவனத்தை வைக்காமல் ரயிலில் கிளம்பினான். முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும் திரில்லாகவும் இருந்தது. ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான். சிறிது நேரத்தில் இரவு சூழ ஆம்பித்தது. அந்நியர்கள் வருவதும் போவதுமான இருக்க மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்கினான். எதிரே அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும் சிறுவனுக்கு மேலும் பயத்தை கொடுத்தது. ரயிலின் வேகத்தைப் போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாகத் துடித்தது. ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி மூலையில் பதுங்கிக் கொண்டான். அவன் கண்களில் கண்ணீர் எழுந்தது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை சட்டைப் பையில் காகிதம் வைத்தது நினைவுக்கு வந்தது. கையால் நடுங்கியபடியே அந்தக் காகிதத்தை எடுத்து பிரித்து படித்தான். அதில் பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன் என்று எழுதி இருந்தது. கற்பனை செய்ய முடியாத நம்பிக்கை அவன் மனதில் துளிர்த்தது. இப்போது அவனது மனதில் பயம் காணாமல் போய் இருந்தது. பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து கம்பீரத்துடன் அமர்ந்தான்.

இது போலவே நம்முடைய ஆசைகளை தீர்த்துக் கொள்ள நம்மை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பினார். அப்போது​ நம்முடன் நம்பிக்கை ஒரு காகிதத்தில் நான் உன்னுடன் இருக்கிறேன் உன்னோடு பயணம் செய்கிறேன் என்று எழுதி வைத்திருக்கிறார். சொன்னது போலவே நமது இதயக் கமலத்தில் வீற்றிருந்து நமக்கு துணையாகவும் வருகின்றார்.

மனிதர்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போது தன்னுடன் இருக்கும் இறைவனை மறந்து விடுகிறார்கள். தன்னுடைய ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போதும் இது இறைவன் கொடுத்தது என்பதையும் மறந்து விடுகிறார்கள். மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போதும் என்ன செய்கிறோம் என்று தெரியாமலும் தெரிந்தும் பல தவறுகளை செய்து விடுகின்றார்கள். செய்த தவறுக்கு தண்டனையாக துன்பம் என்று வரும் போது மட்டுமே இறைவனை நினைக்கிறார்கள். அந்த நினைப்பிலும் நான் என்ன தவறு செய்தேன் எனக்கு ஏன் இந்த துன்பம் கொடுத்தாய் இறைவா என்று நினைக்கிறார்கள். தவறு செய்யும் போது நம்முடன் இறைவன் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டால் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். தண்டனைகளும் இருக்காது. மகிழ்ச்சியாக இருக்கும் போதும் நம்முடன் இருக்கும் இறைவனை நினைத்துக் கொண்டால் துன்பம் என்ற ஒன்றே வராது.

இறைவனின் அருளாற்றல்

ஒரு முறை கிருஷ்ண பகவான் உதங்க முனிவரிடம் என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். ஒன்றும் வேண்டாம் என்றார் முனிவர். கிருஷ்ணர் வற்புறுத்தினார் நான் சுற்றிக் கொண்டே இருப்பவன். சில சமயம் தாகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது என்றார் உதங்கர் கிருஷ்ணர் அதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் ஒரு நிபந்தனையும் விதித்தார். தாகம் எடுக்கும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கிடைக்கும். ஆனால் நான் எப்படித் தண்ணீரை அனுப்பினாலும் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணர். உதங்கர் ஒப்புக் கொண்டார். நாட்கள் கடந்தன. உதங்கர் ஒரு முறை பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. அப்போது கிருஷ்ணனை நினைத்தார்.

கிருஷ்ணரின் திருவுள்ளம் தொலை தூரத்தில் இருந்தாலும் உதங்கரின் எண்ணத்தை உணர்ந்த கிருஷ்ணர் உடனே தேவேந்திரனைத் தொடர்பு கொண்டார். உதங்கருக்கு தேவாமிர்தம் தரும்படி சொன்னார். தேவேந்திரன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை மனித ரூபத்தில் உள்ளவர்களுக்கு தேவாமிர்தம் தருவதில்லை. நீங்கள் சொன்னபடியால் கொடுக்கிறோம். ஆனால் என் விருப்பப்படிதான் செல்வேன் என்றான். கிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். இந்திரன் ஒரு புலையரின் வடிவத்தில் உதங்கரிடம் சென்றான். அழுக்கான உடல் அதைவிட அழுக்கான ஒற்றை ஆடை பஞ்சடைந்த தாடி மீசை கையில் அழுக்குப் பிடித்த ஒரு தகரக் குவளை பக்கத்தில் சொறி பிடித்த நாய் இந்தக் கோலத்தில் சென்றான். உதங்கரிடம் சென்று தகரக் குவளையை நீட்டினான். அருவருப்படைந்த முனிவர் அவனை விரட்டினார். மாற்றுருவில் வந்த இந்திரன் நீரைக் குடிக்கும்படி வற்புறுத்தினான் முனிவர் கேட்கவில்லை. இந்திரன் சென்றுவிட்டான். தனக்கு வாக்களித்தபடி கிருஷ்ணர் நீரைக் கொடுக்கவில்லை என்று உதங்கருக்கு கிருஷ்ணர் மீது மகா கோபம் வந்தது. எப்படியோ சமாளித்துச் சற்றுத் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்று தாகத்தைத் தணித்துக் கொண்டார். கிருஷ்ணரை வேறொரு நாளில் மீண்டும் சந்தித்தார் உதங்கர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். புன் சிரிப்போடு நெருங்கிய கிருஷ்ணர் என்ன முனிவரே உங்களுக்காக இந்திரனிடம் தேவாமிர்தம் கொடுத்து அனுப்பினேன் நீங்கள் அவனை விரட்டிவிட்டீர்களே என்றார். உதங்கருக்குத் தன் தவறு புரிந்தது.

உதங்கர் பெரிய தவயோகி. ஆனால் ஏன் அவரால் கிருஷ்ணர் அனுப்பிய அமிர்தத்தைக் குடிக்க முடியவில்லை. விஸ்வரூபம் காட்டிய பரந்தாமனே அனுப்பிய நீர் என்றால் யோசிக்காமல் எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்ய விடாமல் உதங்கரைத் தடுத்தது எது? உயிர்களிடத்தில் உயர்வு தாழ்வு பேதம் பார்க்கும் அவரது குணம் காரணம். ஒருவர் எவ்வளவு தவம் செய்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சாஸ்திரங்களைப் படித்துக் கரைத்துக் குடிக்கிறார் என்பதும் முக்கியமல்ல. புறத் தோற்றம் முக்கியமல்ல. தோற்றத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம். பார்த்தல் கேட்டல் நுகருதல் உணர்தல் சுவைத்தல் என்று ஐந்து புலன்களினால் எதனை அனுபவித்தாலும் அதில் இறைவன் இருக்கிறார் என்பதை கிருஷ்ணர் உதங்கருக்கு உணர்த்தினார். உதங்கர் எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும் அவருக்கு மனிதர்களிடத்தில் பேதம் பாராட்டும் தன்மை இருந்தது. தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் தன்மை இருந்தது. அது இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. ஆகவே தனது மாய விளையாட்டால் இதனை உதங்க முனிவருக்கு உணர்த்தி அவரது குணத்தை மாற்றினார் கிருஷ்ணர்.

பார்த்தல் கேட்டல் நுகருதல் உணர்தல் சுவைத்தல் என்று ஐந்து புலன்களினால் எதனை அனுபவித்தாலும் அதில் இறைவன் இருக்கிறார். இறைவனின் அருளாற்றல் இருக்கிறது என்பதை நாமும் உணர்வோம். இறைவனடி சேர்வோம்.

வீணையுடன் அனுமன்

திரிலோக சஞ்சாரியான நாரதருக்கு வீணை இசைப்பதில் தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற கர்வம். தேவலோகத்தில் வீணை இசை வாசிப்பதில் சிறந்தவர்கள் நாரதர் மற்றும் தும்புரு. தும்புரு கைலாயத்திலும் நாரதர் வைகுண்டத்திலும் தம்முடைய திறமையை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம் இவர்களுக்குள் தம்முள் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை வந்தது. இருவரும் தீர்மானித்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர். அப்படி செல்லும் வழியில் ஓர் அடர்ந்த வனம் குறுக்கிட்டது. அந்த வனத்தில் இருந்து ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்ற ராம நாமம் ஒலித்தது. இது என்ன இந்த வனத்தில் ராமநாம ஜெபம் கேட்கிறதே? உள்ளே சென்று பார்ப்போம் என்று இருவரும் வனத்தினுள் நுழைந்தனர். அங்கே ஆஞ்சநேயர் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து ராமநாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். இருவரும் அனுமனை வணங்கினர். யாழிசை வல்லுனர்களே இருவரும் சேர்ந்து எங்கே பயணிக்கிறீர்கள்? என்று கேட்டார் அனுமன். உடனே நாரதரும் தும்புருவும் தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியையும் சிவனை தரிசித்து தீர்வு காண இருப்பதையும் கூறினர். யாழ் இசை வல்லுநர்களுக்குள் யார் இசை சிறந்தது என்ற போட்டியா? சரியான போட்டிதான் எனக்காக உங்கள் இசையை கொஞ்சம் வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்டார் அனுமன். இருவரும் தங்கள் யாழில் இசை மீட்டிக் காட்டினர். அருமையாக வாசிக்கிறீர்கள் நானும் கொஞ்சம் உங்கள் யாழை மீட்டட்டுமா? என்று அவர்களிடமிருந்த வீணையை வாங்கி வாசிக்கத் தொடங்கினார் அனுமன்.

அனுமன் வாசிக்க துவங்கியதும் அண்ட சராசரமும் அப்படியே உறைந்து நின்றுவிட்டது. நதிகளில் தண்ணீர் ஓடவில்லை. மரங்கள் கிளைகளை அசைக்கவில்லை. பறவைகள் அப்படியே பறந்தபடி நின்றன. உலகமே அந்த இசையில் மயங்கி அப்படியே நின்றுவிட்டது. அனுமன் அமர்ந்திருந்த அந்தப் பாறை அப்படியே உருகி வழிந்து ஓடத் துவங்கியது. நாரதரும் தும்புருவும் வெட்கம் அடைந்தனர். ஏதோ வாசித்து இதில் யார் சிறந்தவர் என்று போட்டியிட்டு கொள்கிறோமே? கல்லையும் கரைய வைக்கிறதே அனுமனின் இசை இவரல்லவோ சிறந்தவர். இவர் இசையல்லவோ சிறந்தது. இத்தனை திறமை இருந்தும் அடக்கமுடன் வாழும் இவரை பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். சிறிது நேரத்தில் அனுமன் இசைப்பதை நிறுத்தி யாழை பாறையில் வைத்தார். உறுகிய பாறைக்குழம்பு கெட்டிபட்டு அதில் யாழ் ஒட்டிக்கொண்டது. இப்போது அனுமன் சொன்னார். நாரத தும்புரு முனிவர்களே இதோ இந்த பாறையில் உங்கள் யாழ் ஒட்டிக் கொண்டு விட்டது. நீங்கள் மீண்டும் இசை வாசியுங்கள். உங்களில் யார் இசைக்கு இந்த பாறை உருகுகிறதோ அவரே சிறந்தவர். அவர் இந்த வீணையை எடுத்துக் கொள்ளலாம். இதற்குப் போய் எதற்கு சிவனை தொந்தரவு செய்ய வேண்டும் என்றார். இரு முனிவர்களும் அனுமனின் பாதம் பணிந்தனர். சுவாமி உங்கள் இசை எங்கள் கண்களை திறந்து விட்டது. கல்லையும் கரைய வைக்கும் திறமை எங்களுக்கு இல்லை. எல்லாம் இறைவன் அருள். இறைவனே எல்லாவற்றையும் தருகிறார். எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது இறைவனே. இனி எங்களுக்குள் போட்டி வராது. எங்கள் கர்வம் ஒழிந்தது என்று வணங்கி நின்றனர். அனுமன் மீண்டும் இசைக்க பாறை இளகி யாழ் கிடைத்தது. அதை இருவரிடம் கொடுத்த அனுமன் முனிவர்களே வித்யா கர்வம் கூடாது. கர்வம் நானே பெரியவன் என்ற பெருமையை கொடுப்பது போல் தெரியும். ஆனால் இறுதியில் அழித்து விடும். அடக்கமே சிறந்த குணம். இதை உணர்ந்து இறைவனை பாடி வாருங்கள் என்று கூறினார்.

அனுமன் வாசிப்பில் ஒவ்வொரு ஸ்வரமும் ராம் ராம் என்று சொல்லும். அவர் வீணையுடன் ஒன்றி வாசிக்க அந்த நாதத்தில் ஸ்ரீ ராமனும் ஒன்றி விடுவார்.  இவருக்குப் பிடித்த ராகத்தின் பெயர் ஹனுமத்தோடி என்று புராண வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இடம் குடந்தை ராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ அனுமான் வீணையுடன் காட்சி தருகின்றார்.

சரணடைதல்

ஒரு சமயம் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு காட்சியில் கிருஷ்ணன் தனது துணிகளை சலவைத் தொழிலாளி ஒருவனிடம் கொடுத்து சுத்தம் செய்து கொடுக்கும் படி கேட்டிருந்தார். அடுத்த நாள் தமது துணிகளை அந்த சலவை தொழிலாளியிடம் கேட்ட போது கிருஷ்ணரிடம் அவரது துணிகளையே அவரிடம் தர மறுத்தான். இதனை தொடர்ந்து உபன்யாசம் சென்றது. உபன்யாசம் முழுவதையும் அந்த கூட்டத்தில் கேட்ட ஒரு சலவை தொழிலாளி ராமானுஜரிடம் வந்து கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று மிகத் தூய்மையாக புதியது போல் துவைத்து ராமானுஜரிடம் காட்டி பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாரப் பாராட்டுவார்.

ஒரு நாள் சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் நீங்கள்தான் என்னைப் பாராட்டுகிறீர்கள். ஆனால் ரங்கநாதர் பாராட்ட வில்லையே என்றான். அதனை கேட்ட ராமானுஜர் சலவைத் தொழிலாளியை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக துணிகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வந்து கொடுக்கிறான். ஒருநாள் அவனிடம் பேசுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். ரங்கநாதர் சலவைத் தொழிலாளியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்றார். அதற்கு சலவைத் தொழிலாளி கிருஷ்ணாவதாரத்திலே உங்களுக்கு துவைத்த உங்களுடைய துணிகளைத் தர மாட்டேன்னு சொன்ன அந்த சலவைத் தொழிலாளியை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க வேண்டும் என்றான். அதற்கு ரங்கநாதர் அவனை மன்னித்து அப்பொழுதே அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன் என்றார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராமானுஜர் கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டாய். உனக்காக நீ ஏன் ஒன்றும் கேட்க வில்லை எனக் கேட்டார். அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி உங்களை குருவாக நான் ஏற்றுக் கொண்டேன். முக்திக்கு வழிகாட்டி என்னை இறைவனிடம் அழைத்துச் சென்று விடுவீர்கள் என்று நம்புகிறேன். இதனைக் கேட்ட ராமானுஜர் மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார்.

உண்மையான பக்தர்கள் குருவிடம் முழுமையாக சரணடைந்து விடுவார்கள்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

ஒரு யானைப் பாகன் தனக்கு 100 ஏக்கர் நிலம் வேண்டும். 50 யானைகளுக்கு சொந்தக்காரனாக வேண்டும். சுற்று வட்டாரத்தில் இல்லாத அளவுக்கு பெரிய வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காக இறைவனுக்கு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பித்தான். பல நாட்கள் செய்த கடுமையான பூஜைகளின் பலனாக இறைவன் அவனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். அவன் தன்னுடைய நீண்ட நாள் ஆசைகளை வரிசைப்படுத்தி அனைத்தும் வேண்டும் என கேட்டான். இறைவனும் சிரித்தபடி 50 யானைகளை காட்டி இது போதுமா? என்றார். அவன் மகிழ்ச்சியாக தலையாட்டினான். 100 ஏக்கர் நிலத்தை காட்டி இது போதுமா? என்றார். அதற்கு அவன் நிலத்தில் இன்னும் நான்கு கிணறுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றான். பெரிய மாளிகையை காட்டினார். வீடு முழுவதும் தங்கம் மற்றும் நவரத்தினங்களால் அலங்கரித்து வேண்டும் என்றான். அவன் கேட்ட அனைத்தையும் கொடுத்த இறைவன் நீ எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும் என கேட்டார்.

நீங்கள் கொடுத்த அளவுக்கதிகமான செல்வம் என்னிடம் இருக்கிறது. என்னால் செய்ய முடியாதது இப்போது எதுவும் இல்லை. என்ன உதவி வேண்டும் நீங்கள் சொல்வதை செய்து முடிக்கிறேன் என்றான். நீ இறந்த பின் மேலே வரும்போது உன்னிடம் இருக்கும் யானையின் வாலின் முடியில் ஒன்றை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் தர வேண்டும் என்றார். இதற்கு ஏன் சாகும்வரை காத்திருக்க வேண்டும் இப்போதே பிடுங்கித் தருகிறேன் என்றான். இல்லை இப்போது எனக்கு தேவையில்லை என்றார் இறைவன். அதற்கு அவன் இறந்த பின் ஒரு துரும்பை கூட எங்கும் கொண்டு போக முடியாதல்லவா என்றான். பிறகு ஏன் உனக்கு இவ்வளவு பேராசை? என்று இறைவன் கேட்க அவர் கொடுத்த அத்தனை சொத்துக்களையும் திருப்பி கடவுளிடமே கொடுத்துவிட்டு என்றும் அழியாத எங்கு சென்றாலும் தன்னுடன் வரக்கூடிய இறை அருளை சேர்க்க பூஜைகள் தானங்கள் தர்மங்கள் செய்வது எப்படி என்ற சிந்தனையுடன் நடக்க ஆரம்பித்தான் யானைப் பாகன்.