பிரம்மா தன்னுடைய படைப்புத் தொழிலினை நேர்த்தியாய் செய்ய தட்சனைப் படைத்தார். தட்சனின் மகளாக தாட்சாயிணியாக பிறந்து சிவனை திருமணம் செய்து கொண்டாள் பார்வதி. இதனால் சிவனின் மீது கொண்ட கோபத்தில் தட்சன் சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்கிறார். பலரும் எடுத்துரைத்தும் சிவபெருமானை அழைக்கவில்லை. சிவபெருமானை திருமணம் செய்து கொண்ட தாட்சாயிணி தந்தையிடம் சென்று நீதி கேட்கிறார். பின்பு விவாதம் முற்றி தன்னையே யாகத் தீயில் தன்னை அழித்துக் கொள்கிறார் தாட்சாயிணி. மனைவி இறந்தமைக்காக சிவபெருமான் சினங்கொண்டு வீரபத்திரர் என்பவரைத் தோற்றுவித்து தட்சனை அழிக்க உத்தரவிடுகிறார். வீரபத்திரர் யாகத்தில் கலந்து கொண்டிருப்பவர்களை அடித்து துவம்சம் செய்து இறுதியாக தட்சனின் தலையை வெட்டி யாக குண்டத்தில் போட்டு விடுகிறார். அதன் பின் யாகத்தில் கலந்து கொண்ட அனைவரும் இறைவனை சரணடைய இறுதியாக சிவபெருமான் தன் சினம் தணிந்ததும் வீரபத்திரரால் கொல்லப் பட்டவர்களை உயிர்ப்பித்தார். தலைகணம் கொண்ட தட்சனின் தலை குண்டத்தில் போட்டு எரிந்து விட்டதால் சிவபெருமான் அருளால் ஆட்டுத்தலையுடன் தட்சன் உயிர்த்தெழுந்தார். மகரிஷிகளின் ருத்ர ஜபத்துடன் மீண்டும் யாகம் தொடங்கியது. ஆட்டுத்தலை பெற்ற தட்சன் யாகத்தில் சிவனுக்கு முதல் அவிர் பாகம் தந்து அவரது பாதங்களை வணங்கி பூதகணங்களில் ஒருவனாகத் தன்னையும் ஏற்று அருள்புரியும்படி வரம் கேட்டான். சிவனும் அவ்வாறே வரம் தந்தருளினார். கர்நாடாக மாநிலம் கேலடியில் உள்ள ராமேஸ்வரர் கோவிலில் தட்சனின் சிற்பம் ஆட்டுத் தலையுடன் உள்ளது.
பட்டீஸ்வரம் திருச்சத்தி முற்றம் ஆலய திருவிழாவை பற்றி:
இறைவனின் அருளை கொண்டு அதுபோல் அங்கே எமது ரூபத்தை பல நாட்களாக பலரும் காணாத நிலையிலேயே இத்தருணம் அங்கே இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தை வைத்து பூஜை நடப்பதை நாங்கள் வரவேற்றாலும் கூட பொதுவாக சித்தர்களை வணங்கு என்று ஒருபோதும் யாமோ வேறு சித்தர்களோ கூற மாட்டோம். அங்கே இறைவனுக்கே முன்னுரிமை. இருந்தாலும் அன்போடு செய்கின்ற அனைத்தையும் எமக்கு செய்தாலும் அதை இறைக்கு செய்ததாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மற்றபடி குறிப்பிட்ட நட்சத்திரம் தான் என் போன்ற மகான்களுக்கு உரியது என்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. ஆண் பெண் கலப்பிலே பிறக்கக் கூடிய குழந்தைகளுக்குத்தான் நட்சத்திரம். அக்னியில் உருவாகக் கூடிய ரிஷிகளுக்கு ஏதடா நட்சத்திரம்? இருந்தாலும் ஏதாவது ஒரு தினத்தை தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இதுபோன்ற நிகழ்வை நாங்கள் குறை கூறவில்லை. தொடர்ந்து ஒன்றுபட்ட உள்ளத்தோடு வேறு எந்த விதமான பங்கங்கள் இல்லாமல் பூஜைகள் செய்வதோடு இன்னும் புண்ணிய காரியங்களை அதிகரித்தால் எப்பொழுதுமே இறைவழிபாடு என்பது தர்ம சிந்தனையோடு இருக்கும் பொழுது தான் இறைவனின் பரிபூரண அருளை பெறத்தக்கதாகும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செய்ய நல்லாசிகள்.
இமாச்சல் பிரதேஷ் மாநிலம் காங்ரா மாவட்டம் பைஜ்நாத்தில் உள்ள அருள்மிகு வைத்தியநாதர் ஆலயத்தில் உள்ள ஆன்ம நந்தியின் சிலையில் நந்தியம்பெருமானின் வாலைப் பிடித்து ஒருவர் தொங்கிக் கொண்டுள்ளார்.
மனிதன் மரணம் அடைந்த பின்னர் செய்யும் 11 நாள் கிரியை செய்த பலனானது சிவனருள் மூலம் ஆத்மாவை எம தர்மனிடமிருந்து மீட்டு ரிஷப உத்ஸ்ஜர்னம் மூலமாக பித்ரு தேவதையாக்கப்பட்டு மூதாதையார்கள் இருக்கும் பித்ரு லோகம் செல்கிறது. அப்போது ரிஷபத்தின் வாலை பிடித்து கொண்டு பல நரககங்கள் கடந்து ஆத்மா பித்ரு லோகம் சென்றடைகிறது. இது வேதத்தில் உள்ள அந்தியேஷ்டியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்காட்ட சிலையாக வடித்துள்ளார்கள்.
பல ஆலயங்களுக்கும் சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்தும் மோட்ச தீபம் ஏற்றியும் இப்பிறவியல் தர்ம சிந்தனையோடு வாழும் ஒரு குடும்பத்தில் ஒரே குழந்தையை கொடுத்து அது வாய் சரியாக சரளமாக பேச முடியாமல் அனுதினமும் அனைவரும் மனவேதனையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழி காட்டுங்கள்:
இறைவனை இறைவனின் கருணையை கொண்டு இதுபோல் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு யாம் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் இதுபோல் ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்பது போல பாவ வினைகளை அத்தனை எளிதாக ஒரு மனிதனால் நீக்கி கொள்ள முடியாது. அதனால்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஒரு பாவத்தை செய்வது எளிது. நீக்கிக் கொள்வது கடினம் இருந்தாலும் மனதை தளர விடாமல் தொடர்ந்து இறை வழிபாட்டில் இருந்தால் நல்ல பலன் ஏற்படும் என்பது உறுதி. ஒருவேளை நிறைய பரிகாரங்களை செய்து விட்டோம். நிறைய தர்மங்களை செய்து விட்டோம். எந்த பிரச்சனையும் தீரவில்லை என்றால் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் பரிகாரங்களை செய்த மனிதனுக்கு வேண்டுமானால் அதிகமாக செய்தது போல் தோன்றும். விதிக்கோ எமக்கோ தோன்றவில்லை என்பதுதான் உண்மை.
இதை வேறு விதமாக நாங்கள் அடிக்கடி கூறுவோம். ஒரு வங்கியிலே ஒருவன் பல லகரம் ருணம் (கடன்) பெறுகிறான். மாதாமாதம் ஒரு தொகையை அடைத்துக் கொண்டே வருகிறான். சில ஆண்டுகள் ஆகிறது. உழைத்த ஊதியத்தில் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டே வருகிறோம் இன்னுமா கடன் தீரவில்லை? என்று வங்கியின் சென்று பார்த்தால் அப்பனே நீ வாங்கியது இந்த அளவு. இதற்கு வாசி (வட்டி) விகிதம் இந்த அளவு. நீ இதுவரை செலுத்தியது இந்த அளவு. இன்னும் செலுத்த வேண்டியது இந்த அளவு என்று கூறுவார்கள். ஆனால் அடைத்த அவனுக்கு தான் வழியும் வேதனையும் தெரியும். நான் எந்த சுகத்தையும் காணாமல் ஊதியத்தையெல்லாம் கொண்டு கடனை அடைத்து வருகிறேன். இன்னுமா ருணம் (கடன்) தீரவில்லை என்று அவன் வேதனைப்படுவான். எனவே எமை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கூறுகிறோம். எத்தனையோ பரிகாரங்களை செய்து விட்டோம். இவையெல்லாம் வீண் வேலை. ஏமாற்று வேலை. பரிகாரம் செய்து எந்த பலனும் இல்லை என்று சோர்ந்து போகின்ற உள்ளங்கள் சோர்ந்து போகாமல் தொடர்ந்து இறை வழியில் வந்தால் வெற்றி கட்டாயம் கிட்டும். தெய்வம் தோன்றாததோ தெய்வம் அருளாததோ தெய்வத்தின் குற்றமல்ல. மனிதரிடம் தான் குற்றம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட பிரச்சினைகள் வேண்டாம் என்றாலும் கூட மனித வேதனை அதனை தாண்டி கேட்க வைக்கிறது. இருந்தாலும் அண்மையிலே இதழ் ஓதும் மூடனை அவனறியாமல் ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றோம். அந்த ஆலயம் பெருமாள் ஆலயம். பேசுகின்ற பெருமாள் என்று காஞ்சி மாநகரத்தை ஒட்டி இருக்கக் கூடிய ஒரு சிறிய ஆலயம். இதுபோன்று வார்த்தைகளில் தடுமாற்றம் பெற்றவர்கள் வாக்கு வராத குழந்தைகள் அந்த ஆலயத்திற்கு சென்று முடிந்த பொழுதெல்லாம் வழிபாடு செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. திருசீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் சென்று முறையாக அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டு வந்தால் பலன் உண்டு. ஏற்கனவே இவ்வாறு குறைகள் உள்ள குழந்தைகளை கொண்ட அமைப்புக்கு முடிந்த உதவிகளை செய்தாலே நல்ல பலன் உண்டு. இந்த குற்றம் குறை எதனால் வருகிறது? என்றெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு மனிதன் ஒரு பிறவியிலே எந்த துன்பத்தை தீர்க்க முடியாமல் துன்பத்தில் ஆழ்கிறானோ அந்த துன்பத்தை அவன் பிறருக்கு செய்திருக்கிறான் என்பது பொருள். எனவே இந்த ஜென்மத்தில் கூடுமானவரை இது போன்ற பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்து கொண்டு மனதை தளரவிடாமல் இறை பிரார்த்தனை செய்து கொண்டு வந்தால் கட்டாயம் இறைவன் அருளால் நன்மைகள் நடக்கும். இறைவனை வேண்டி எமக்கு இதுவரை எந்த பலனும் இல்லை என்று எண்ணக் கூடியவர்கள் இரண்டு முடிவுகள் எடுக்கலாம். ஒன்று இறை மறுப்பு நிலைக்கு சென்று விடலாம் அல்லது மீண்டும் மனம் தளராமல் இறை வழியில் செல்லலாம். மரணம் தளராமல் பிரார்த்தனை செய்தால் நன்மை உண்டு நன்மை உண்டு நன்மை உண்டு.
சிவபெருமான் வசிக்கும் கயிலாய மலையை காவல் காப்பவராக இருப்பவர். நந்தியம்பெருமான். ஆலயங்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இவர்களுக்கு பஞ்ச நந்திகள் என்று பெயர்.
போகநந்தி:
ஒரு சமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன் நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். இவர் போகநந்தி ஆவார். போகநந்தி அல்லது அபூர்வநந்தி என்று அழைக்கப்படும் இந்த நந்தியானது கோவிலுக்கு வெளியே அமைந்திருக்கும்.
பிரம்மநந்தி:
பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும் முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். இவருக்கு பிரம்மநந்தி என்று பெயர். இந்த நந்திக்கு வேத நந்தி வேத வெள்விடை பிரம்ம நந்தி என்று பல பெயர்கள் உள்ளது. இந்த நந்தி சுதைச் சிற்பமாக பிரகார மண்டபத்தில் காணப்படும்.
ஆன்மநந்தி:
பிரதோஷ கால பூஜையை ஏற்கும் நந்திக்கு ஆன்ம நந்தி என்று பெயர். இந்த நந்தி கொடிமரம் அருகே இருக்கும். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார். உயிர்களுக்குள் இருக்கும் ஆன்மாக்களின் வடிவாக ஆன்மநந்தி உள்ளது.
மால்விடை:
மால் என்றால் மகாவிஷ்ணு விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும் போது மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இந்த நந்தியானது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.
தருமநந்தி:
இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழிகாலத்தின் முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைபெற்று இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக்கொண்டார். இவ்வகையில் தரும நந்தியானது இறைவனைப் பிரியாது அவருடனேயே இருப்பார். இதை உணர்த்தும் வகையில் இந்த நந்தி இறைவனுக்கு அருகில் மகாமண்டபத்திலேயே எழுந்தருளியிருப்பார். பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலை காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன.
ஆலயங்களுக்குத்தான் பசுக்களை தானம் செய்ய வேண்டுமா? அல்லது வேறு அமைப்புகளுக்கு தானம் செய்யலாமா?
இறைவனின் கருணையால் கோ ஆ எனப்படும் பசு தானங்களை யாருக்கு வேண்டுமானாலும் மனம் உவந்து செய்யலாம். எந்த அமைப்புக்கும் தரலாம். எந்த ஆலயத்திற்கும் தரலாம். கூடுமானவரை நல்ல முறையில் பாரமரிக்க கூடிய அமைப்பிற்கு தருவது சிறப்பு. ஆனால் ஒவ்வொன்றையும் ஆய்ந்து ஆய்ந்து பார்த்தால் இந்தக் காலத்தில் தர்மம் செய்வதே அரிதாகிவிடும். எனவே எந்த நிலையிலும் யாருக்கும் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் பல ஆலயங்களில் பசுக்களை பராமரிக்க முடியாமல் அதனை வேறு எங்காவது சென்று விற்று விடுகிறார்கள். பசுக்களை தானம் செய்வது ஒரு நிலை. ஏற்கனவே பசுக்கள் இருக்கக் கூடிய ஆலயத்திற்கு முடிந்த உதவிகளை செய்வதும் பசு தானத்திற்கு சமம்தான். இயன்ற அன்பர்கள் ஒன்றுகூடி தக்கதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு பசுக்களை பராமரிப்பதும் குறிப்பாக கொலை களத்திற்கு அனுப்பப்படும் பசுக்களையெல்லாம் நிறுத்தி அவைகளை பராமரிப்பதும் மிகப்பெரிய புண்ணியமாகும். பசுக்களை காப்பாற்று என்று நாங்கள் கூறினால் ஆடுகளை பாம்புகளை காப்பாற்ற வேண்டாம் என்று பொருளல்ல. பசுக்கள் என்பது ஒரு குறியீடு. எல்லா உயிர்களையும் அன்போடு பராமரிக்க வேண்டும் என்பது அதன் பொருளாகும். எனவே எந்த நிலையிலும் எந்த அமைப்பிற்கும் எந்த ஆலயத்திற்கும் எப்பொழுது வேண்டுமானாலும் பசு தானம் செய்யலாம்.
1008 சிவாலயம் சுற்றி வர வேண்டும் என்பதற்கு சிறப்பான காரணம் உள்ளதா?
லட்சத்து எட்டு என்று சொன்னால் மனிதன் எழுந்து போய்விடுவான். 108 என்று சொன்னால் ஒரு மாதத்திற்குள் சுற்றி வந்துவிட்டு சுற்றிவிட்டேன் என்பான். சில காலம் இங்கு (அகத்தியர் குடில்) வரவேண்டாம் என்பதற்காக தான் அவ்வாறு கூறுகிறோம். அனைவரும் இறைவனை எண்ணி ஐயர்வு காண நல்லாசிகள்.
காக்கும் கடவுளான மகாவிஷ்ணு மகாபலியின் ஆணவத்தை அடக்க வாமன (குள்ள) ரூபமாக அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத்தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலம் இது. இந்த அவதாரத்தில் திரிவிக்ரமன் அஷ்டபுஜ விஷ்ணுவாக சித்தரிக்கப்படுகிறார். அவரது கூடுதல் நான்கு கைகளில் வில் அம்பு வாள் மற்றும் கேடயம் உள்ளன. உலகளந்தபெருமாளுக்குக் கீழே மகாபலி தானம் அளிக்கும் காட்சி உள்ளது. இடம்: இராமசுவாமி கோவில் கும்பகோணம்.