வினாயகரின் எலி வாகனம்

கந்தர்வர்களில் ஒருவனான கிரவுஞ்சன் விநாயகப் பெருமானின் தீவிர பக்தன். அவன் தினமும் விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தனது பணிகளைத் தொடங்குவான். ஒருநாள் அவன் இமயமலைப் பகுதியில் இயற்கை அழகை ரசித்தபடி வான் வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அழகிய பூந்தோட்டம் ஒன்றும் அதில் பூப்பறித்துக் கொண்டிருந்த அழகியப் பெண் ஒருத்தி அவன் கண்ணில் பட்டாள். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கய அவன் அவளை எப்படியாவது திருமணம் செய்து தன்னுடன் தேவலோகத்துக்கு அழைத்துச் சென்று விட வேண்டுமென்று எண்ணினான். வானிலிருந்து கீழிறங்கி வந்த அவன் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கி பெண்ணே தேவலோகத்தைச் சேர்ந்த கந்தர்வனான நான் வான் வழியாகச் சென்று கொண்டிருந்த போது உன் அழகைக் கண்டு மயங்கிக் கீழிறங்கி வந்தேன். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றான். அந்தப் பெண் கந்தர்வனே நான் இங்குள்ள ஆசிரமத்தில் இருக்கும் சவுபரி முனிவரின் மனைவி மனோரமை. என் மேல் நீ கொண்ட தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டு இங்கிருந்து சென்றுவிடு என்றாள். ஆனால் அந்தப் பெண்ணின் அழகு கந்தர்வனை மதிமயங்கச் செய்தது. நீ ஒரு முனிவரைத் திருமணம் செய்து கொண்டு ஒரு பணிப் பெண்ணைப் போல் வாழ்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாய். என்னைத் திருமணம் செய்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றான். அதைக் கேட்டுக் கோபமடைந்த அவள் நான் இன்னொருவரின் மனைவி என்று சொல்லியும் அதைக் கேட்காமல் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது உனக்குத் தவறாகத் தெரியவில்லையா? என்றாள். முனிவருடன் இருப்பதை விட என்னைப் போன்ற கந்தர்வனுடன் இருப்பதில் தான் இன்பம் அதிகம். இந்த முனிவரைக் கைவிட்டு என்னுடன் வந்தால் உன்னைத் தேவலோகம் அழைத்துச் செல்கிறேன். அங்கு நாம் இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினான் கந்தர்வன்.

முனிவரின் மனைவி சற்றும் தடுமாற்றம் இல்லாமல் கந்தர்வனே முனிவரின் மனைவியாக நான் இன்பமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னிடம் தேவையில்லாமல் பேசி உன் நேரத்தை வீணடிக்காமல் இங்கிருந்து செல். இல்லையென்றால் பெருந்துன்பமடைய நேரிடும் என்றாள். இதனால் கோபமடைந்த கந்தர்வன் அவளைக் கவர்ந்து போய் விடுவது என்று முடிவு செய்து மனோரமையை நெருங்கினான். அவன் எண்ணத்தை அறிந்த அவள் அவனிடமிருந்து தப்பிக்க ஆசிரமம் நோக்கி ஓடினாள். பின் தொடர்ந்து வந்த கந்தர்வன் ஆசிரமத்துக்குள் நுழைந்த மனோரமையின் கையைப் பிடித்து நிறுத்தினான். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அவள் சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டாள். மனைவியின் சத்தத்தைக் கேட்டு ஆசிரமத்திலிருந்து வெளியில் வந்தார் சவுபரி முனிவர். நிலைமயை உடனடியாக புரிந்து கொண்ட முனிவர் கந்தர்வனே என் மனைவியை விட்டு இங்கிருந்து போய்விடு. இல்லையெனில் என் கோபத்துக்கு ஆளாவாய் என்றார். மோக மயக்கத்தில் இருந்த கந்தர்வனுக்கு அவரது குரல் காதில் விழவில்லை. அவன் மனோரமையை கவர்ந்து செல்வதிலேயே குறியாக இருந்தான். இதனால் கோபமடைந்த முனிவர் கந்தர்வனே என் மனைவியை கவர்ந்து செல்ல நினைத்த நீ மண்ணைத் தோண்டி வளையில் ஒளிந்து வாழும் எலியாக மாறி துன்பப்படுவாய் என்று சாபமிட்டார்.

முனிவரின் சாபத்தைக் கேட்டு சுயநினைவுக்குத் திரும்பிய கந்தர்வன் தன்னுடைய செயலுக்காக வருந்தினான். முனிவரே அடுத்தவரின் மனைவியை அடைய நினைத்த எனக்கு தாங்கள் கொடுத்த சாபம் சரியானது தான். நான் நீங்கள் கொடுத்த சாபத்தை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் எனது தவறைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும் என்றான். இதனால் மனமிரங்கிய முனிவர் கந்தர்வனே தவறு செய்வது அனைவரின் இயல்பாக இருக்கலாம். ஆனால் தேவலோகத்தைச் சேர்ந்த உனக்கு இப்படியொரு எண்ணம் வந்திருக்கவே கூடாது. நீ தவறை உணர்ந்து நான் கொடுத்த சாபத்தையும் முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பதால் நான் உன்னை மன்னிக்கிறேன். பிற்காலத்தில் உனக்கு இந்த எலி உருவத்திலேயே மிகப்பெரிய சிறப்பு கிடைக்கும் என்றார்.

கந்தர்வன் மிகப்பெரிய எலியாக மாறினான். அந்த எலி காட்டிற்குள் சென்று பல இடங்களையும் தோண்டி நாசப் படுத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு இடமாக மாறி மாறிச் சென்ற எலி காட்டிற்குள் இருந்த பராசர முனிவரின் ஆசிரமப் பகுதிக்குள் சென்றது. அந்த இடம் எலிக்கு பிடித்துப் போனதால் அங்கேயே ஒரு வளை தோண்டித் தங்கிக் கொண்டது. அந்த எலி ஆசிரமப் பகுதிக்குள் இருந்த மரங்களின் வேர்களைக் கடித்து மரங்களைக் கீழே விழச் செய்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. மேலும் ஆசிரமத்தின் பல பகுதிகளிலும் வளை தோண்டி சேதப்படுத்தியது.

அபினந்தன் எனும் அரசன் இந்த நேரத்தில் நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று உலக நன்மைக்காக மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்த முடிவு செய்து முனிவர்களிடம் இந்த பணியை ஒப்படைத்தான். வேள்விக்கான பணிகளையும் அவனே முன்னின்று செய்து வந்தான். காலநேமி என்ற அசுரன் அபினந்தன் செய்து வந்த வேள்விகளை எல்லாம் அழித்தான். அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத முனிவர்கள் அவனை அழித்து உதவும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவர்களிடம் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள். என் மகன் விநாயகன் அவனை அழிப்பதற்காகப் பூலோகத்தில் தோன்ற இருக்கிறான். அவன் அரக்கன் காலநேமியை அழித்து வேள்விப் பணிகள் தொடர உதவி செய்வான் என்று அருளினார். சில காலத்தில் யானை முகமும் மனித உருவமுமாக விநாயகப் பெருமான் அந்நாட்டில் தோன்றினார். அந்தக் குழந்தையைக் கண்டு அரசன் அச்சமடைந்தான். இருப்பினும் குழந்தையைக் கொல்ல மனமில்லாமல் காட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தன்னுடைய படை வீரர்களுக்கு கட்டளையிட்டான். அவர்களும் ஒரு குளக்கரையில் விட்டு வந்தனர். காட்டிற்குள் இருந்த அந்த குளத்தில் நீராட வந்த பராசர முனிவர் குழந்தையை கண்டெடுத்து தன் ஆசிர மத்தில் வைத்து வளர்க்கத் தொடங்கினார்.

விநாயகர் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த போது அங்கிருக்கும் மரங்களில் ஏறி விளையாடுவார். அதேபோல் ஒரு மரத்தில் ஏறி விநாயகர் விளையாடிய போது மரத்தின் அடியில் இருந்த எலியானது வேர்களைக் கடித்து மரத்தைச் சரித்தது. மரத்தின் அடியில் வளை தோண்டி வசித்த பெரிய எலிதான் மரம் கீழே விழுவதற்கு காரணம் என்று விநாயகருக்கு தெரிய வந்தது. அந்த எலியைக் கொல்வதற்காக, தன்னிடம் இருந்த பரசு ஆயுதத்தை எடுத்து எலியை நோக்கி வீசினார் விநாயகர். ஆயுதத்தைப் பார்த்ததும் எலி வளைக்குள் புகுந்து ஓடியது. பரசு ஆயுதம் எலியை விடாமல் துரத்தியது. வளை தோண்டியபடி பாதாளம் வரைச் சென்ற எலி சோர்வடைந்தது. அதற்குமேல் செல்ல முடியாமல் பூமியின் மேற்புறத்தை நோக்கி ஓடி வந்தது. பரசு ஆயுதம் எலியை விநாயகரின் முன்பாக கொண்டு போய் நிறுத்தியது. விநாயகப் பெருமான் உருவத்தை நேருக்கு நேராகப் பார்த்ததும் அந்த எலிக்கு தான் கந்தர்வனாக இருந்ததும் சவுபரி முனிவரிடம் சாபம் பெற்றதும் நினைவுக்கு வந்தது .தன் தவறை மன்னிக்கும்படி வினாயகரிடம் வேண்டியது. மனமிரங்கிய விநாயகர் கவலைப்படாதே உனக்குச் சாபம் கொடுத்த முனிவரிடம் நீ சாபத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டபடியால் உனக்கு என்னால் சாப விமோசனம் வழங்க முடியாது. நீ கந்தர்வனாக இருந்த போது என் மேல் அதிக பக்தி கொண்டிருந்தாய். எனவே நான் உன்னை என் வாகனமாகக் கொள்கிறேன். இதன் மூலம் நான் இருக்கும் இடங்களிலெல்லாம் உனக்கும் மரியாதை கிடைக்கும் என்று அருளினார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த எலி விநாயகரை வணங்கி நின்றது. விநாயகப் பெருமானும் மூசிகனை வாகனமாகக் கொண்டு ஆயுதங்களுடன் சென்று அசுரன் காலநேமியை அழித்தார்.

ஆனேகுடே விநாயக கோவில்

அனேகுடே என்பது இந்தியாவின் உடுப்பி மாவட்டத்தில் குந்தபுரா தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமம் கும்பாசி என்றும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பியில் இருந்து குந்தாபுரா நோக்கி செல்லும் வழியில் அமைந்துள்ளது. கும்பாசி என்ற பெயர் இங்கு கொல்லப்பட்ட கும்பாசுரனிடமிருந்து வந்ததாக வரலாறு உள்ளது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான விநாயகர் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. ஆனேகுடே கடலோர கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி ஸ்தலங்களில் (பரசுராம க்ஷேத்திரம்) ஒன்றாகும்.

முன் காலத்தில் இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்ட போது ​​​​அகஸ்திய முனிவர் பல முனிவர்களுடன் மழைக் கடவுள் வருணனை மகிழ்விக்க யாகம் செய்ய இங்கு வந்தார். அந்த நேரத்தில் கும்பாசுரன் என்ற அரக்கன் யாகம் செய்யும் முனிவர்களை தொந்தரவு செய்து யாகத்தை சீர்குலைக்க முயன்றான். முனிவர்கள் வன வாசத்தில் இருந்த பாண்டவர்களிடம் யாகத்திற்கு இடையூறு ஏதும் ஏற்படாதவாறு காக்குமாறு பாண்டவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். யாகத்திற்கு இடையூறு ஏதும் வராதவாறு காக்கிறோம் என்று பீமன் முன் வந்தான். வினாயகர் பீமனுக்கு வாள் கொட்டுத்து ஆசிர்வதித்தார். அந்த வாளைப் பயன்படுத்தி பீமன் அரக்கனைக் கொன்று யாகத்தை முடிக்க உதவினார். அரக்கன் இரந்த அந்த இடத்திற்கு இதற்கு கும்பாசி என்று பெயர் வந்தது. யானைத் தலை கடவுளான விநாயகத்தின் இருப்பிடமாக இருப்பதால் ஆனே (யானை) மற்றும் குட்டே (குன்று) என்பதிலிருந்து ஆனேகுடே என்ற பெயர் வந்தது.

இங்கு வினாயகர் சித்தி விநாயகா என்றும் சர்வ சித்தி பிரதாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இடகுஞ்சி வினாயகர்

உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஹொன்னாவாரா தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய இடம் இடகுஞ்சி ஆகும். இங்கு இடகுஞ்சி கணபதி ஆலயம் உள்ளது. இடகுஞ்சி இடத்தின் முக்கியத்துவம் கந்தபுராணத்தின் சஹ்யாத்ரி காண்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. இடா என்றால் இடதுபுறம் குஞ்ச் என்றால் தோட்டம். சராவதி ஆற்றின் இடது கரையில் அமைந்திருப்பதால் இந்த இடத்திற்கு இடகுஞ்சி என்ற பெயர் வந்தது. இடகுஞ்சி கணபதி கோயில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான கோயிலாகும். கோவில் சற்றே பெரியது. வினாயகர் சிலை கருங்கல்லாலானது. விநாயகர் சிலை நின்ற கோலத்தில் இரண்டு கைகளுடன் மிகக் குட்டையான கால்களுடன் தரையில் தாழ்வுடன் ஒரு கல் பலகையில் நிற்கிறார். ஒரு கையில் மோதகத்தையும் மற்றோரு கையில் பத்மத்தையும் (தாமரை பிடித்துள்ளார். மார்பின் குறுக்கே ஒரு மாலையை அணிந்துள்ளார். சிறிய மணிகளால் ஆன மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

துவாபர யுகத்தின் முடிவில் கடவுள் கிருஷ்ணர் தனது தெய்வீக வசிப்பிடத்திற்கு செல்ல பூமியை விட்டு வெளியேற நேரம் வந்து விட்டதாக எண்ணினார். கிருஷ்ணரும் பூமியை விட்டு செல்வதால் கலியுகத்தின் வருகையை கண்டு அனைவரும் பயந்தனர். கர்நாடகாவின் சராவதி நதிக்கரையில் உள்ள குஞ்சவனம் என்ற வனப் பகுதியில் வாலகில்ய முனிவர் கலியுகத்தின் அனைத்து தடைகளையும் சமாளிக்க கிருஷ்ணரின் உதவியை நாடி யாகங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளை செய்யத் தொடங்கினார். இந்த நேரத்தில் அவர் யாகம் செய்வதில் பல இடையூறுகளைச் சந்தித்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். எனவே அவர் நாரத முனிவரின் ஆலோசனையை நாடினார். யாகத்தை மீண்டும் தொடங்கும் முன் தடைகளை நீக்கும் விநாயகரின் ஆசீர்வாதத்தைப் பெறுமாறு நாரதர் வாலகில்யருக்கு அறிவுறுத்தினார்.

வாலகில்ய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க நாரதரும் மற்ற முனிவர்களும் சேர்ந்து தேவதீர்த்தம் என்ற புதிய குளத்தை உருவாக்கினர்கள். நாரதர் விநாயகரின் அன்னை பார்வதியிடம் விநாயகரை அனுப்ப வேண்டும் என்று வேண்டினார். அர்ச்சனைகள் செய்யப்பட்டு விநாயகப் பெருமானைப் போற்றும் பாடல்கள் பாடப்பட்டன. அவர்களின் பக்தியால் மகிழ்ந்த விநாயகர் எந்த பிரச்சனையும் இல்லாமல் யாகங்களை நடத்த அவர்களுக்கு உதவ அந்த இடத்தில் இருக்க சம்மதித்தார். இந்த சந்தர்ப்பத்தில் மேலும் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு கோவிலுக்கு தண்ணீர் வர விநாயகர் தீர்த்தம் என்று பெயரிடப்பட்டது. அதே இடம் இப்போது இடகுஞ்சி என்று அறியப்படுகிறது அங்கு விநாயகர் கோயில் கிபி 4-5 ஆம் நூற்றாண்டுகளில் பக்தர்களால் கட்டப்பட்டது.

ஆனந்த விநாயகர்

உலகம் முழுவதும் உள்ள கோவில்களில் முதற் கடவுளாக அருள்பாலிக்கும் ஆனைமுகன் சில இடங்களில் அபூர்வ கோலத்தில் தரிசனம் தருவதுண்டு. ஊர் தகடி. திருக்கோயிலூர் வட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அழகிய பொன்னாம்பிகை உடனுறை அழகிய நாதீஸ்வரர் ஆலயத்தில் வேத கோஷத்தை கேட்கும் ஆனந்த விநாயகராக தரிசனம் தருகிறார். நான்கு திருகரங்களுடன் இடதுகாலை மடித்து வலதுகாலை ஊன்றி ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் கண்மூடி தலையை சாய்த்து ஊன்றிக் கேட்கும் தோற்றத்தில் அருளுகிறார்.

தியானத் தோட்டத்தில் வினாயகர்

அயர்லாந்தின் கவுண்டி விக்லோவில் உள்ள ரவுண்ட்வுட் அருகே அமைந்துள்ள விக்டர்ஸ் வே தனியாருக்குச் சொந்தமான தியானத் தோட்டம். 22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்காவில் கருப்பு கிரானைட் கல்லினால் செதுக்கப்ட்ட விநாயகர் தெய்வங்களின் மூர்த்திகள் உள்ளன.

பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர்

விநாயகருக்கு உள்ள மிகப்பெரிய குடைவறைக்கோயில். மூலவரான விநாயகர் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகிறார். தேசிவிநாயகப் பிள்ளையார் என்ற வேறு பெயரும் உள்ளது. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க அழகுள்ள விநாயகர் என்று பொருள். ஆறு அடி உயரத்தில் கம்பீரம்மாக வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர். கோவில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் குடைந்து கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு இருக்கிறது. அர்ஜுனம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மருத மரம் என்று அர்த்தம். அதில் தமிழ் நாட்டில் மூன்றும் ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலும் ஒன்று. இக் கோயிலின் தலவிருட்சமாக அர்ச்சுனா மரம் உள்ளது. இக்கோவில் இருக்கும் பிள்ளையார்பட்டியின் புராண பெயர்கள் எருகாட்டூர் அல்லது எக்காட்டுர் மருதங்குடி திருவீங்கைகுடி திருவீங்கைச்வரம் இராசநாராயணபுரம் மருதங்கூர் தென்மருதூர் கணேசபுரம் கணேசமாநகரம் பிள்ளை நகர் ஆகும். முருகனுக்கு தான் ஆறு படை வீடுகள் போல் விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும்.

கோவிலில் இரண்டு பெரிய ராஜகோபுரங்கள் உள்ளது. ஒன்று கிழக்கு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இரண்டாவது கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.

தெற்கு நோக்கியபடி சங்கர நராயணர் அருளுகிறார். சண்டீசன் கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள். மலையைக் கடைந்து செதுக்கிய பெரிய மகாலிங்கம் உள்ளது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார். இங்கு திருமணம் நடைபெற வைக்கும் கார்த்தியாயினி அம்மன் சன்னதியும் பிள்ளை வரமளிக்கும் நாகலிங்கம் சுவாமி சன்னதியும் அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் பசுபதீசுவரர் சன்னதியும் உள்ளது. இக்குகைக் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மாள் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது.

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும் மற்றொரு பகுதி கற்றளி ஆகவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளதால் வினாயகர் சன்னதியை வலம் வர இயலாது.

குடைவரை கோயில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் பல்லவ மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோயில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும் சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

விநாயகரின் சிறப்புகள்:

  1. இங்கு பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருக்கிறார்.
  2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குகிறார்.
  3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குகிறார்.
  4. வயிறு ஆசனத்தில் படியாமல் கால்கள் மடித்திருக்க அமர்ந்திருக்கிறார்.
  5. வலத்தந்தம் நீண்டும் இடத்தந்தம் குருகியும் காணப்படுகிறார்.
  6. வலக்கரத்தில் சிவலிங்கத்தைத் தாங்கியருள்கிறார்.

கோவில் திருவிழாக்களில் விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேஸ்வரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும். 9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மகா அபிஷேகமும் நடத்தப்படும்.

ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஞ்ஞூரு வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிராகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும் உமாதேவி உடனுறை சந்திரசேகரப் பெருமானும் திருவீதி உலா வருவார். பிள்ளையார் மருதங்குடி நாயனார் சந்நதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி உடனுறை நடராசப் பெருமான் திருவீதி உலா வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி கொடியேற்றம் நடக்கும். பிள்ளையார்பட்டி கோயிலின் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும் பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும் உச்சிகால பூசையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும் இரவு ஐம்பெருங்கடவுளரும் தங்க வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவார்கள்.

கமண்டல கணபதி கோவில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோப்பா என்பது கடல் மட்டத்திலிருந்து 763 மீட்டர் உயரத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். இந்த நகரத்தில் உள்ள சிறிய கிராமம் கேசவே. இங்கு கமண்டல கணபதி திருக்கோவில் இருக்கிறது. இந்த இந்தக் கோவிலில் உள்ள விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக தரையில் ஒரு துளை இருக்கும். அதன் வழியே தண்ணீர் பெருக்கெடுத்தபடியே இருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மழைக் காலங்களில் அதிக அளவிலும் வெயில் காலங்களில் குறைவாகவும் இந்த துளையில் இருந்து நீரூற்று வந்துகொண்டே இருக்கும். ஒருபோதும் இதில் நீர் வராமல் இருந்ததில்லை. இந்த அதிசயம் 1000 வருடங்களாக நடைபெற்று வருவதாக வரலாறு உள்ளது.

புராண வரலாற்றின்படி சனி பகவானின் கிரக நிலை ஆதிக்கத்தில் சில காலம் பார்வதி தேவி இருந்தாள். ஆகையால் அவர் துன்பத்தில் சிக்கினார். இதற்குத் தீர்வு காணும் வகையில் பூலோகம் வந்த பார்வதிதேவி தவம் செய்ய பூமியில் சிறந்த இடத்தைத் தேடி தவம் செய்ய முடிவு செய்தாள். தனது தவத்தில் உள்ள தடைகளைத் தவிர்ப்பதற்காகவும் சனி தோஷத்திலிருந்து விடுபடவும் விநாயகரை வழிபட விரும்பிய பார்திதேவி இங்கு கணபதியை ஸ்தாபித்தாள். விநாயகர் சுகாசனம் என்ற ஆசனத்தில் அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார். ஒரு கையில் மோதகமும் மறு கையில் அபயஹஸ்தா வும் ஏந்தியபடி இருக்கிறார். வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் தவித்த போது அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தன் ஆன கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில் வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.

விநாயகர் முன்பாக உள்ள இந்த துளையில் இருந்து வரும் நீரைத்தான் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்ய பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் பொங்கியும் சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது. விநாயகரின் காலடியில் வெளிப்படும் இந்த நீரானது இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி அங்குள்ள துங்கா நதியில் கலக்கிறது.

வெண்கல வினாயகர்

உலகின் மிக உயரமான விநாயகர் சிலை தாய்லாந்தின் க்லோங் குவானில் உள்ளது. 39 மீட்டர் உயரத்தில் வெண்கலத்தால் ஆன விநாயகர் இவர். இவர் கையில் 4 கைகள் உள்ளன. மேல் வலது கையில் பலாப்பழம் மேல் இடது கையில் கரும்பு கீழ் வலது கையில் வாழைப்பழம் கீழ் இடது கையில் மாம்பழம் வைத்திருக்கிறார்.

ஔவையாரை கயிலைக்கு தமது துதிக்கையால் தூக்கியருளிய கணபதி

சுந்தரர் வெள்ளை யானை மீதேரியும் அவர் தோழராரன சேரமான் பெருமாள்நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஔவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஔவையார் தானும் கைலாயம் செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய ஆரம்பித்தார். ஔவையாருக்கு விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும் கயிலைக்கு தான் அழைத்து செல்வதாகவும் அருளினார். ஔவையார் பொறுமையாக தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஔவையாரை கணபதி தனது துதிக்கையால் சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கையிலை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் விநாயகர் சந்நிதிக்கு முன்புறம் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது.

கணபதியின் மடியில் கிருஷ்ணன்

மூலவர் வினாயகர். மூலஸ்தானத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருக்கிறார். இக்கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. விநாயகரின் சதுர்த்தியும் கிருஷ்ணரின் கோகுலாஷ்டமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கோயில் சுற்றுப் பகுதியில் சாஸ்தா மகாவிஷ்ணு துர்க்கை அந்திமகா காவலன் யக்ஷி நாகர் சன்னதிகள் உள்ளன.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கணபதி மீது பக்தி கொண்ட ஒருவர் இக்கோவில் இருக்கும் இடத்தில் கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். ஆர்யபள்ளி மனை வடக்கேடம் மனை என்று இரு குடும்பத்தினர் அந்தக் கணபதி சிலையைச் சுற்றிக் கட்டிடம் கட்டிப் பராமரித்து வந்தனர். பிற்காலத்தில் அந்த இரு குடும்பத்திலும் வறுமையும் துன்பங்களும் ஏற்பட அவர்களால் அந்தக் கோவிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலில் மேற்கூரை இல்லாத நிலையிலும் அவர்கள் அங்கிருந்த கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர்.  அவர்களின் மரபு வழியில் வந்த சங்கரன் நம்பூதிரி என்பவர் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். அவர் தினமும் அங்கிருந்த கணபதி கோவிலின் முன்பு அமர்ந்து கிருஷ்ணன் பெருமைகளைச் சொல்லும் பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார். பின்னாளில் அவர் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்து கோவிலில் இருந்த கணபதியின் மடியில் வைத்து வழிபடத் தொடங்கினார். அதன் பின்னர் அந்தக் கோவிலில் வழிபட்டு வந்த இரு குடும்பத்தின் மரபு வழியினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். பின்பு கோவில் புதுப்பிக்கப்பட்டு அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது. இந்த ஆலய வழிபாட்டில் முக்குற்றி புஷ்பாஞ்சலி எனும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக முக்குற்றி எனப்படும் செடியை 108 எனும் எண்ணிக்கையில் வேருடன் பறித்து வந்து வாசனைத் திரவத்தில் மூழ்க வைத்து பின்னர் அதனை எடுத்து விநாயகருக்கான மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள். இவ்வழிபாடு ஒரு நாளில் ஐந்து முறை நடத்தப்படுகிறது.

கிருஷ்ணரை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் மூலம் நட்சத்திர நாளில் பாகவத சப்தக யஜ்னம் எனும் சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் எட்டு நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா சித்திரை முதல் நாள் வரும் விசுத் திருவிழா நாளில் வண்ண மயமான ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பாகவத பிரபாசனம் அகண்ட நாம ஜெபம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பெற்று வருகின்றன.