மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -19

சபை அடுத்த நாள் கூடியது. திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் பன்னிரண்டு வருடம் காட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு வருடம் யாருக்கும் தெரியாதபடி அக்ஞாத வாசம் இருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால் பாண்டவர்களுடைய நாடு செல்வம் அனைத்தும் அவர்ளுக்கு மீண்டும் திருப்பி அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்து காட்டிற்கு செல்ல உத்தரவிட்டார். மன்னர் திருதராஷ்டிரர் எங்களுக்கு எப்படி உத்தவு இடுகிறாரோ அப்படி அடிபணிந்து நடந்து கொள்ள நாங்கள் ஆயத்தமாய் இருக்கிறோம் என்று அமைதியாக யுதிஷ்டிரன் கூறினான். அப்போது விதுரர் வயது முதிர்ந்த காரணத்தால் குந்திதேவி காட்டில் இருக்க இயலாது ஆகையால் குந்தி தேவி செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். திருதராஷ்டிரர் ஒப்புக்கொண்ட பிறகு விதுரர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குந்திதேவி காட்டிற்கு செல்லவில்லை. காம்யக வனத்திற்கு செல்ல முடிவெடுத்து திரௌபதி மற்றும் சகோதரர்களுடன் காட்டிற்கு செல்ல யுதிஷ்டிரன் தயாரானான்.

ஆபரணங்களாலும் ஆடைகளாலும் பிரகாசிக்கும் தனது மகன்கள் மான் தோலை உடுத்தி தலையைத் தொங்கப் போட்டு செல்வதையும் அவர்களைச் சுற்றி எதிரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் பாண்டவர்களின் நண்பர்கள் கவலையுடன் நிற்பதையும் குந்திதேவி கண்டாள். குந்திதேவி கிருஷ்ணரிடம் பாண்டவர்களை காக்குமாறு கேட்டுக்கொண்டாள். மனித வாழ்க்கையில் கடினமான காலங்கள் வரும். அந்த கடினமான காலத்தை பாண்டவர்கள் தங்கள் மேன்மை அடைவதற்காக பன்னிரண்டு வருட காட்டு வாழ்க்கையையும் ஒரு வருட அக்ஞாத காலத்தையும் பயனுள்ளதாக நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். யாம் எப்போதும் அவர்களுக்கு துணை இருப்பேன் என்று குந்திதேவியை கிருஷ்ணர் சமாதானம் செய்தார்.

அஸ்தினாபுரத்தின் முதன்மையானவர்கள் அங்கிருந்த சென்றதும் வானத்தில் மேகமில்லாது இருந்த போதே மின்னல் வெட்டியது. பூமி நடுங்கத் தொடங்கி பல அபசகுனங்கள் தென்பட்டது. அப்போது சபையில் அனைவருக்கும் முன்னால் தேவலோக முனிவர்களில் சிறந்த நாரதர் தோன்றி இன்றிலிருந்து பதினான்காவது வருடம் துரியோதனனின் பிழையின் காரணமாக பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று சொல்லிவிட்டு வானத்தில் கடந்து மறைந்தார். துரியோதனன் கர்ணன் சகுனி ஆகியோர் துரோணரைத் தங்கள் ஒரே தஞ்சமாகக் கருதி காப்பாற்றுமாறு கேட்டனர். அதற்கு துரோணர் பாண்டவர்கள் கொல்லப்பட முடியாதவர்கள் என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் திருதராஷ்டிரனின் மகன்கள் அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து மரியாதையுடன் என்னிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். என்னால் முடிந்ததில் சிறந்ததை செய்து நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

சபாபருவம் முற்றியது அடுத்து வன பருவம்

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -18

திரோபதியின் சபதத்தை கேட்ட பீமன் எழுந்து திரௌபதியின் இரு சபதத்தையும் நிறைவேற்ற நானும் என் கதையும் துணை நிற்போம் இது சத்தியம் என்றான். அர்ச்சுனன் திரௌபதியின் இந்த சபதத்திற்கு மூல காரணமான கர்ணனை என் காண்டீபத்திலிருந்து புறப்படும் பாணங்களினால் துளைத்து மடியச் செய்வேன் இது சத்தியம் என்றான். திருதராஷ்டிரன் இபோது திரௌபதியை சமாதானம் செய்தால் நிலமையை சீர் செய்யலாம் அவளது சபதத்தை திரும்ப பெற செய்யலாம் என்ற எண்ணத்துடன் திரௌபதி உனக்கு வரம் தருகிறேன் என்றான். அதற்கு திரௌபதி இந்த சபையில் சூதால் தோற்ற அவர்களை சூதாலேயே வென்று பெற்று விட்டேன். பாண்டவர்களுக்கு அவர்கள் இராஜ்யம் வேண்டும். அதை நான் வரமாகக் கேட்க முடியாது. அது அவர்கள் தேசம். க்ஷத்திரியர்களான பாண்டவ புத்திரர்கள் தங்கள் ராஜ்யத்தை யுத்தம் செய்து வென்று பெற்றுக்கொள்வார்கள். ஆகையால் இப்போது தங்களின் வரம் தற்போது வேண்டாம் என்று கூறிவிட்டாள்.

மன்னன் திருதராஷ்டிரன் யோசிக்கிறான். பாண்டவர்கள் ஐவரும் இப்போது சுதந்திரமானவர்கள். இப்போது மேலும் பேச்சை வளர்த்தினால் இன்றே யுத்தம் துவங்கிவிடும். இதற்கு உடனே அணை போட வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு யுதிஷ்டிரா இங்கு சபையில் நடந்தவைகள் யாருக்கும் விருப்பமில்லாதவைகளாய் நடந்துவிட்டன. நாளை சபை கூடியதும் மறுபடியும் பேசலாம். இப்போது நீங்கள் ஐவரும் திரௌபயும் சென்று ஓய்வெடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தான். பாண்டவர்கள் வெளியேறியதும் பலரும் சபையை விட்டு தொடர்ந்து வெளியேறுகிறார்கள்.

துரியோதனன் மற்றும் அவன் உடன் பிறந்தவர்கள் துரியோதனனின் நலம் விரும்பிகள் திருதராஷ்டிரரிடன் ஆலோசனை செய்ய வேண்டும் என்று அந்த மண்டபத்திலேயே இருந்தார்கள். பாண்டவர்கள் நாடு நகரம் செல்வம் இவைகள் அனைத்தும் இல்லையென்றாலும் இப்போது சுதந்திரம் ஆனாவர்களாக இருக்கின்றார்கள். திரோபதியின் சபதத்தை முன்னிட்டு பீமனும் அர்ஜூனனும் துரியோதனனையும் துச்சாதனனையும் கொல்வதாக சபதம் எடுத்திருக்கின்றார்கள். நாளையே அவர்கள் யுத்தத்திற்கு வந்தால் அனைவரும் அவர்களுக்கே துணை நிற்பார்கள். ஆகவே இதற்கு ஓர் தீர்வு காணவேண்டும் என்று விவாதிக்கின்றாரகள். இறுதியில் பாண்டவர்களை 12 வருடகாலம் வனவாசம் செல்ல வேண்டும். ஒரு வருடம் அக்ஞாத வாசம் இருக்க வேண்டும் அப்படி அவர்கள் செய்தால் பகடையில் தோற்ற நாடு செல்வங்கள் அனைத்தையும் அவர்களுக்கு திருப்பி கொடுப்பதாக சொல்லி காட்டிற்கு அனுப்ப வேண்டும். ஒரு வருட அக்ஞாத வாசத்தில் அவர்களை கண்டு பிடித்து விட்டால் மீண்டும் 12 வருட காலம் காட்டில் இருக்க வேண்டும். இதை திருதராஷ்டிரர் யுதிஷ்டிரரிடம் சொல்லவேண்டும். மன்னரின் ஆணையை யுதிஷ்டிரன் தட்டமாட்டான். இதை செய்யாவிட்டால் பாண்டவர்கள் தாங்கள் எடுத்த சபதத்தின்படி யுத்தத்திற்கு வருவார்கள் என்று திருதராஷ்டிரரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தார்கள்.

Related image

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -17

சகுனி அவர்களே காலடியில் சரணமாய் வந்தவர்களுக்கு அனுகூலம் செய்ய வேண்டியது கடமையாகிரது. என்னால் முடிந்த வரை நிச்சயம் அதைச் செய்வேன். தவிர காக்கும் தெய்வங்களை வேண்டி வேண்டியதைச் செய்வேன். இது நிச்சயம். இப்போது பகடை எண்ணிக்கையை தாங்கள் கேட்கிறீர்களா அல்லது நான் கேட்கட்டுமா என்று கூறி இடது பக்கமாக காயை சுற்றி வருகிறாள். பலமுறை இடமாக வந்த திரௌபதி கிருஷ்ணரை நினைத்து பல வருடங்களாக விமோசனம் வேண்டி நிற்பவர்கள் சார்பில் கேட்கிறேன் விமோசனம் தரும் புண்ணிய பலத்தை எனக்குத் தாருங்கள் எனக் கூறிக் கொண்டே தன் இடது காலை எடுத்து பகடைகள் மேல் கூப்பிய கரங்களுடன் வைக்கிறாள். அந்த சில நொடிகளில் அவையில் ஒரே வெப்பம் எதோ எரிவது போல் அனைவரும் உணர்கின்றனர். திரௌபதி தனது காலை பகடை காய்களை விட்டு எடுக்கிறாள். அவை சற்று வெளுத்து வெண்சாம்பல் நிறத்தில் தெரிகின்றன. பகடையில் இருக்கும் சக்தி கிருஷ்ணன் அருளாள் எரிந்துவிட்டது.

மெதுவாக இடது கால் விரல்களால் எடுத்து வலது பாதத்தின் மேல் வைத்து சகுனியைப் பார்த்து என் வெற்றிக்கான எண்ணிக்கை ஐந்து. தங்கள் எண்ணிக்கை என்ன? எனக் கேட்கிறாள். என் எண்ணிக்கை ஒன்று என்று சகுனி கூறுகின்றான். நல்லது நான் முதல் ஆட்டத்தில் ஒன்றைக் கேட்டேன். யுதிஷ்டிரர் ஒருவரை அடைந்தேன். இந்த முறை நால்வருக்காக நான்கு என்று கேட்கலாம். ஆனால் என் கணவர்கள் ஐவரும் சமம் என்று எல்லோரும் அறிந்து கொள்வதற்காக ஐந்து என்று கேட்கிறேன். திரௌபதி காயை முன்னும் பின்னும் ஆட்டி பகடைக் காயை சொக்கட்டான் விரிப்பின் நடுவில் போடுகிறாள்.

தனது முன்னோர்களது எலும்பில் செய்த பகடையில் இருக்கும் சக்தியை திரௌபதி எரித்து விட்டாள். இந்த கலக்கத்தில் இருந்த சகுனி சற்றும் தாமதியாது பகடை ஐந்து துரியோதனா என்று கூறி இரு கைகளாலும் நான்கு முனைகளையும் பற்றி காயை மூடி எடுத்துக் கொண்டு சபையை விட்டு வெளியேறி பகடையில் சக்தியாய் இருந்த தன் முன்னோர்கள் அஸ்தியை கரைக்க நதிக்கரைக்கு சென்று விட்டான். சபையில் யாருக்கும் ஏதும் புரியவில்லை. விதுரர் மட்டும் நடந்ததை எதிர்பார்த்தவர் போல் உடன் எழுந்து மன்னர் திருதராஷ்டிரரிடம் நடந்ததை விளக்கி நால்வரும் சுதந்திரமானவர்கள் என்று அறிவித்து பாண்டவர் நால்வரையும் அவர்கள் ஆசனத்திற்கு அழைத்து வந்து அமர வைக்கிறார்.

திரௌபதி அனைவரையும் பார்த்து சபையோர்களே கேளுங்கள் இந்த துச்சாதனன் என் கூந்தலை பிடித்து சற்றும் யோசியாது இழுத்தானோ அந்த கைகள் சகதியில் இற்று விழ நான் பார்க்க வேண்டும். எந்த துரியோதனன் தன் துடைகளை தானே தட்டிக் கொண்டு அரச அவையில் பேசக்கூடாத வார்த்தைகளை இச்சபையில் பேசினானோ அந்த துடைகளை முறித்து கூழாக்கி அதை என் விரிந்த கூந்தலுக்கு நறுமண சாந்தாகப் பூசவேண்டும். இது திரோபதியின் சபதம் என்றாள்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -16

திரௌபதி யுதிஷ்டிரனை பார்த்து நான் இப்போது தங்களில் பாதி. சுதந்திர புருஷனாக தாங்கள் பக்கத்தில் இருக்கும் போது என்னால் என்னையே பணயமாய் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதே போல் உங்களையும் பணயமாய் வைக்க முடியாது. இப்போது நான் இருமுறை ஆடுவேன் என்ற சொல்லிய படி இரண்டாம் ஆட்டம் ஆட வழி கேட்டு தங்கள் முன் நிற்கிறேன். தர்மத்தை உணர்ந்த தாங்கள் எனக்கு இரண்டாம் முறை ஆட அனுமதியையும் பணயம் வைப்பதற்கு வழியையும் காட்டுங்கள் என்றாள். அதற்கு யுதிஷ்டிரர் திரௌபதி உன்னை நன்கு உணர்வேன். நாம் இருவரும் பணயமாய் இரண்டாம் ஆட்டத்திற்கு உட்படுவதை தவிர எனக்கு வழி ஏதும் தெரியவில்லை. சூதில் ஒன்றுக்கு இரண்டாய் வெற்றி பெருவாய் என் ஆசிகள் என்றான்.

மன்னரே இரண்டாம் முறை ஆடுவேன் என்று கூறி தர்ம சங்கடத்தில் இருந்த எனக்கு யுதிஷ்டிரர் அனுமதி கொடுத்து பணயத்திற்கு தன்னையும் என்னையும் காட்டி விட்டார். அவர் சொன்ன வார்த்தைப்படி ஒன்றுக்கு இரண்டு என்றபடி எங்கள் இருவரையும் பணயமாய் வைத்து மற்ற நால்வரையும் மீட்க இரண்டாம் ஆட்டத்திற்கு நான் தயார் என்றாள். துரியோதனனுக்கு தான் நினைத்தபடி பாண்டவர் மீதி நால்வரை மட்டும் தான் இவள் கேட்கிறாள். இந்த முறை மாமா தோற்றாலும் நமக்கு வெற்றிதான். நாடு முழுவதும் நமக்குத்தான் என்று மனம் குதூகலித்தது.

சகுனி மனத்தில் கலக்கமுடன் இருக்கின்றான். இப்போது எனது இடது மடியில் இருக்கும் இன்னொரு பகடைக்காயை முன்பு மாண்ட என் முன்னோர்கள் எலும்பில் செய்து அதற்கு சக்தியூட்டி என் எண்ணப்படி எண்கள் விழும்படி செய்திருக்கிறேன். இதை எடுத்து ஆடலாம். ஆனால் திரௌபதி அதோ அனாதையாய் கிடக்கும் அந்த கட்டொழிந்த செந்நிற காய்களை வைத்து மறுமுறையும் ஆடுவேன் என்று சொல்லிவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு என்ன வழி என்று சகுனி யோசிக்கின்றான்.

சகுனி அவர்களே இரண்டாவது ஆட்டத்திற்கு நான் தயாராகி விட்டேன். பகடை ஆட்டத்தில் தங்களின் முதல் அஸ்திரம் தோற்றுவிட்டது. இந்த இரண்டாம் ஆட்டத்திற்கு இரண்டாம் அஸ்திரம் இருந்தால் அதை எடுத்து தாங்கள் பிரயோகிக்கலாம். அது மற்றொரு செந்நிற காயானாலும் சரி அல்லது தந்தம் போன்ற வெண்ணிற காயானாலும் சரி தங்கள் விருப்பம் என்று கூறினாள். பகடை ஆட வந்த சகுனி ஆடிப்போய் விட்டான். இவள் யுத்தத்தில் எதிர்வரும் அஸ்திரத்தைப் பார்த்து அதை முறியடிக்கும் அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் வீரனைக் காட்டிலும் அடுத்த அஸ்திரமான உன் வெள்ளைக்காயை எடு என சூளுரைக்கிறாள். இதையும் இவள் வென்று விடுவாளா? எப்படியோ அடுத்த அஸ்திரத்தை எடு என்று கூறி இடது மடியில் உள்ள காய்களை எடுத்து விட சம்மதம் கொடுத்து விட்டாள். சகுனி உடனேயே தன் இடது மடியில் இருந்த வெள்ளைப் பகடைக் காய்களை எடுத்து வேகமாய் வந்து திரௌபதியின் காலடியில் வைக்கிறான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -15

திரௌபதி சகுனியை பார்த்து தாங்கள் அங்கு அமர்ந்தபடியே பேசலாம். பகடை காயை நான் உருட்டுவதால் தாங்கள் முதல் எண்ணிக்கையை கூறுங்கள். எனது வெற்றிக்கான எண்ணிக்கையை அடுத்துக் கூறுகிறேன் என்றாள். எனது எண்ணிக்கை ஐந்து என்றான் சகுனி. திரௌபதி கிருஷ்ணரை சரணடைந்தாள். தான் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி எனது எண்ணிக்கை ஒன்று இதில் நான் வெற்றி பெற்றால் இதற்கு நான் விரும்பி கேட்பது ஒருவரை மட்டுமே என்றாள். பாண்டவர் ஐவரையும் கேட்பாள் என்று நினைத்த பலர் மனத்திலும் யார் ஒருவரை இவள் கேட்கப் போகிறாள் ஆர்வத்தில் இருந்தார்கள். கையிரண்டையும் கூப்பி இதுவரை வலது புறங்காலில் ஆட்டிக்கொண்டிருந்த பகடைக்காய்களை தனக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையே போடுகிறாள். பகடை ஒன்று. பக்கத்தில் இருந்த விகர்ணன் ஆவலாய்ப் பார்த்து பகடை ஒன்று. என சந்தோஷ மிகுதியால் கூறுகிறான்.

துரியோதனன் முதல் ஆட்டத்தில் தாம் தோல்வி அடைந்து விட்டோம். அடுத்த ஆட்டத்தில் மற்ற நால்வரில் ஒருவரையோ இல்லை நால்வரையுமே கேட்டு இவள் வெற்றி கொண்டாலும் பாதகமில்லை. எப்படியும் இந்திரபிரஸ்தம் மற்றும் அவர்களுடைய செல்வம் அனைத்தும் நம்முடையது தான். இவளை அவையில் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். நினைத்தது அனைத்தும் நடந்து விட்டது என நினைத்து அடுத்த ஆட்டத்தில் மற்ற நால்வரையும் சந்தோஷமாய் கொடுக்க தயாராகி விட்டான் துரியோதனன். கௌரவர்களின் அடிமையாய் இருந்த யுதிஷ்டிரர் ஆசனத்தில் அமர்ந்ததும் திரௌபதி அவரை வணங்குகிறாள்.

குந்தி புத்திரரே என்னை முதல் ஆட்டத்திற்கு பணயமாய் வைத்தேன். பகடைக் காயை மன்னர் காலடியிலிருந்து எடுத்து வந்து தாங்கள் என் காலில் காயை வைத்த போது பலரும் தங்களுக்கு நான் செய்யும் அவமரியாதை என்றே நினைத்திருக்கக் கூடும். அந்த நிலையில் வேறு வழி ஏதும் தெரியவில்லை. பகடை ஆட தாங்கள் சம்மதமும் வெற்றி பெற ஆசியும் வேண்டும். தாங்கள் பகடையை கொண்டு வந்து கொடுத்ததில் சம்மதமாய் எடுத்துக்கொண்டேன். மாமா சகுனியின் ஆயுதமான பகடைக்காயை கைகளால் தொடுவதில்லை என சத்தியம் செய்ததால் காலால் வேகமாய் உதைத்தேன். அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. மாமா சகுனிக்குத் தெரியும் அவர் ஆயுதம் எவ்வளவு சக்தி வாய்ந்ததென்று. ஆடுவதற்கு முன்பு அதன் வீர்யத்தைக் குறைக்க அது ஒன்று தான் வழி. அனைத்தும் எதற்காக செய்தேன் என்று அப்போது தங்களிடம் எடுத்துச் சொல்ல வழியில்லை. மோட்சத்திற்கு வழி என்று நான் சொன்ன போதே இங்கு மரணம் நிகழ்ந்து விட்டது. அதை மாமா சகுனி மட்டும்தான் அறிவார். பின் அஸ்தி கரைப்பது தங்கள் கையால் நடக்க வேண்டும் என நான் விரும்பியபடி காய்களை தாங்கள் ஏந்தி வந்தீர்கள். கண்ணில் வழியும் கண்ணீரை கங்கையாக பாவித்து தங்கள் கையில் தெளித்து அதையும் தாங்களே செய்து முடிக்கும்படி செய்தேன். இது மாமா சகுனிக்கு முழுவதுமாய் புரிந்திருக்கும். எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -14

காந்தார தேசத்து மன்னர் சகுனியே ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்டாள் திரௌபதி. சகுனி ஆசனத்தை விட்டு எழ ஆரம்பிக்கிறான். துரியோதனன் மாமா சற்று அமருங்கள். இவள் காயை எட்டி உதைத்தாள். ஏதோ கேட்டாள். ஆமாம் என்று கூறி அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டீர்கள். தற்போது காயை எடுத்துவந்து அவள் காலடியில் வைக்கப் போகிறீர்களா? கூடாது. இந்த ஐந்து அடிமைகளில் ஒருவர் அதைச் செய்யட்டும் என்றான். திருதராஷ்டிரன் யுதிஷ்டிராரை பார்த்து காய்களை நீயே எடுத்துக் கொடுக்கலாமே என்றார்.

யுதிஷ்டிரர் மௌனமாய் நடந்து வந்து மன்னர் காலடியில் கிடக்கும் பகடைக்காய்களை இரு கைகளாலும் எடுத்து திரௌபதி முன்னால் காய்களை கையில் ஏந்தி நிற்கிறார். கண்களில் ஆறாய் பெருகும் கண்ணீரால் யுதிஷ்டிரர் கைகளில் உள்ள காய்கள் மீதும் அவர் கால்களிலும் இரு கைகளாலும் ஏந்தி தெளிக்கிறாள் திரௌபதி. தன் வலது காலை அவள் ஒரு அடி முன்னே எடுத்து வைக்க யுதிஷ்டிரரும் காலை மண்டியிட்டு பகடை காய்களை அவள் வலது கால் மேல் வைக்கிறார். யுதிஷ்டிரர் ஓரடி பின்னே நகர்ந்து நிற்க திரௌபதியும் தன் வலது காலை சற்று மேலே தூக்கி முன்னும் பின்னுமாக ஆட்டி காய்களை கைகளினால் உருட்டுவது போல உருட்ட ஆரம்பிக்கிறாள். சபையில் உள்ளவர்கள் யாவரும் என்ன நடக்கப் போகிறது என்று புரியாமல் இருக்கிறார்கள். திரௌபதி யுதிஷ்டிரரை அவமானப்படுத்துவது போல் அனைவருக்கும் தெரிந்தது.

சகுனி யோசித்தான். முதலில் காலால் ஆடுவேன் என்றாள். துரியோதனனும் காலென்ன கையென்ன என்று கூறிவிட்டான். தவிர காயை அவள் வைத்த பகடை காய்களை காலால் எத்தி அரசர் காலடியில் விழச் செய்து பூச்சியை இறக்க செய்து விட்டாள். என்னிடம் கேள்வி கேட்டு என்னையும் தலை குனிய செய்துவிட்டாள். இவள் காலால் எத்தியதை கர்ணனை தவிர யாரும் ஆட்சேபிக்கவில்லை. கர்ணனின் கேள்விக்கு அங்க தேசத்து முதலடிமையே அமரும் என்று கூறி அதையும் முடித்துவிட்டாள். இவள் புத்திசாலித்தனத்திற்கு முன் ஏதும் செய்ய முடியாது போல் தோன்றுகிறதே என்று எண்ணிக்கொண்டிருந்தான்.

காயை மன்னர் காலடியிலிருந்து எடுத்து வரும் சாக்கில் சிறுவண்டு உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா? இறக்காமல் இருந்தால் வண்டின் துணையோடு ஆட்டத்தை வெல்லலாம் என்று எண்ணினால் இதையும் துரியோதனன் இடத்தை விட்டு நகராதே இன்று கூறிக் கெடுத்தான். வண்டு பிழைத்திருக்க வழியில்லை. திடீரென இவள் உதைத்ததால் அவை இருக்கும் நிலையில் இறந்து போயிருக்கும். இவள் ஒரு நொடி காயை உருட்டுவதை நிறுத்தினாலும் ஏதாவது சூசகம் கிடைக்கும். ஏதாவது பேச்சுக் கொடுத்து இவள் காயை உருட்டுவதை நிறுத்த வைத்தால் காயைப் பார்த்து நிச்சயமான ஒரு முடிவிற்கு வரலாம் இவ்வாறு சிந்தித்து சகுனி மறுபடியும் எழுந்தான்.
துரியோதனன் மாமா ஆசனத்தில் அமருங்கள். இவள் முதல் ஆட்டத்தில் இவள் ஜெயித்தாலும் நமக்கு இரண்டாவது ஆட்டம் இருக்கிறது. அமர்ந்தபடியே இவளுக்கு பதில் கூறுங்கள் என்றான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -13

திரௌபதியைப் பார்த்து கர்ணன் ஐந்து அடிமைகளின் மனைவியே என் நண்பன் துரியோதனனுக்கு அடிமையாவதில் உனக்கு அவ்வளவு அவசரமா? இந்த ஆட்டத்தில் உன் கைவளை குலுங்கும் ஓசையைக் கேட்க நான் ஆவலாய் இருக்கிறேன். கண்களில் கோபத்துடன் திரௌபதி கர்ணனை முகத்துக்கு நேரே பார்த்து அங்க நாட்டு முதல் அடிமையே ஐவருக்கு நான் அடிமையா இல்லை அவர்களுடன் நானும் அடிமையா என சூதாடித் தீர்மானிக்கப்படவில்லை. திரியோதனனின் மனைவி பானுமதியுடன் சூதாடி கைவளையோசை கேட்டு அடிமையான உன் புத்தி அப்படித்தான் பேசும் என்றாள். தன்னை அடிமை என்று அவள் கூறியதே கேட்டு துரியோதனன் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டானே? உண்மையில் தான் துரியோதனனின் அடிமையா? தான் எந்த மூதாதையர் விட்டுச் சென்ற இராஜ்யத்தையும் ஆளவில்லை. எந்த மன்னனுடன் போர் புரிந்து வென்ற தேசத்தையும் ஆளவில்லை. துரியோதனன் கொடுத்த அரசு அங்க தேசத்து அரசன் என்ற அடிமைப் பட்டயம். திரௌபதி பார்வையில் நான் அடிமைதான். அவள் பார்வை தவறா? மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?’ கர்ணன் சுய சிந்தனையில் ஆழ்ந்தான்.

திரௌபதி இங்கு அமர்ந்து சூதாட மாட்டாள். கைகளாலும் பகடை உருட்டமாட்டாள். கால்களால் தான் உருட்டுவாள். நான் கைகளால் பகடையை தொடுவதில்லை என சத்தியம் செய்திருக்கிறேன் என்றாள். துரியோதனன் நீ காலால் ஆடினால் என்ன? கையினால் ஆடினால் என்ன? மாமா என் சார்பில் ஆடுவார். அதிகம் பேசாதே. ஆட்டத்தைத் துவக்கு என்றான் துரியோதனன். தன் கைவளை ஓசை ஏதும் எழக்கூடாது என்று கிருஷ்ணனால் வளர்ந்த வஸ்திரத்தினால் உடலோடு கைகளையும் சேர்த்து மூடிய நிலையில் நடந்து வருகிறாள். சட்டென தனது வலது காலை தூக்கி சூதாட்ட மேடையில் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த காய்களை வேகமாய் தட்டி விடுகிறாள். அது மன்னர் திருதராஷ்டிரர் வீற்றிருந்த சிம்மாசனத்தின் முதல் படியில் வேகமாய் மோதி கீழே விழுகிறது. திரௌபதியின் இச்செயல் பலரையும் துணுக்குறச் செய்கிறது. கர்ணன் இதை ஆட்சேபிக்கிறான். அடிமை மன்னரே சற்று அமருங்கள். இது எனக்கும் மாமா சகுனிக்கும் இடைப்பட்டது. நான் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் கூறட்டும். பிறகு அரசர் நீதி வழங்கட்டும். நான் செய்தது சரியென்றால் ஆமாம் அல்லது தவறென்றால் இல்லை என்று இரண்டில் ஒன்றாய் சகுனி அவர்கள் பதில் கூறட்டும். என் கேள்வி நான் ஒரு சிறுவண்டுக்கு மோட்சத்திற்க்கான பாதை காட்டினேன். இது உண்மைதானா? இல்லையா? பதில் கூறும் சகுனி அவர்களே என்றாள்.

சகுனி மிகவும் கலங்கிவிட்டான். ஆமாம் அல்லது இல்லை என்று கூற வேண்டிய கட்டாயம். ஒரு சிறுவண்டை அகஜ்ஜுவாலா என்னும் மரத்தில் செய்த பகடைக்காயில் வைத்திருப்பதை தெரிந்தே சொல்கிறாளா? தான் துரியோதனனுக்கும் கூட சொல்லாத இந்த ரகசியத்தை இவள் எப்படி அறிந்தாள்? இவள் பகடையை உதைத்த வேகத்தில் காயில் இருந்த சிறுவண்டு நிச்சம் இறந்து போயிருக்கும். அதைத்தான் இவள் மோட்சத்திற்கு வழி என்கிறாள். ஆமாம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இல்லை என்று சொன்னால் பகடைக்காயை உடைத்து சிறுவண்டை இந்த சபையில் காட்டுவாள். தான் சங்கேதமாய் எண்களை சொல்லும் போது சங்கேத சொல்லுக்கு ஏற்ப அந்த வண்டு குதித்து விழும். அதனை கணக்கிட்டு தான் சொல்லும் எண்ணிக்கையை விழும்படி இதுவரை தான் செய்தது எல்லோருக்கும் தெரிந்துவிடும். இதில் தோற்றுவிட்டோம். இனி என்ன செய்வது? நொடியில் தீர்மானித்து சகுனி எழுந்து நின்று ஆமாம் என்று தலை கவிழ்ந்து குற்றவாளி போல் நின்றான்.

தொடரும்……………..

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -12

கர்ணன் துச்சாதனனிடம் கூறியதைக் கேட்ட அர்ஜுனன் கர்ணன் மேல் கோபம் கொண்டு தக்க நேரம் வருகின்ற பொழுது உன்னை கொள்வேன் என்று விரதம் எடுக்கின்றேன் என்றான். அதேசமயத்தில் சகாதேவன் சகுனியை கொள்வேன் என்று விரதம் கொள்கிறேன் என்றான். யுதிஷ்டிரன் அர்ஜுனனையும் சகாதேவனையும் சமாதானப்படுத்தினான். கௌரவர்கள் போட்டிருந்த கேடு நிறைந்த திட்டங்களில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று திரௌபதி திருதராஷ்டிரனிடம் வேண்டினாள். துரோணரும் விதுரரும் மற்றும் சிலரும் அவருடைய பரிதாபகரமான வேண்டுதலுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இதைக் கேட்ட திருதராஷ்டிரர் மகளை என்று திரௌபதி பார்த்து அழைத்து தன்னுடைய புதல்வர்களாகிய துரியோதனனும் துச்சாதனனும் வரம்பு மீறி நடந்து கொண்டதை குறித்து நான் ஆட்சேபம் தெரிவிக்கின்றேன் என்று கூறினார்.

அதைக்கேட்ட திரௌபதி தன் தம்பி மகன்களையே இந்த அவையில் அடிமைகளாய் நிற்கச் செய்துவிட்டு அவர்கள் மனைவியை மட்டும் மகளே என அழைப்பது முரணாய் இல்லையா தங்களுக்கு? கணவரின் பெரியப்பாவை நான் மன்னிக்கலாம். ஆனால் பெண்மையை அவமதித்த இந்த அவையின் மன்னவரை பெண்மையின் சார்பில் நான் மன்னிக்க முடியுமா? இந்த அஸ்தினாபுரத்தின் ஒவ்வொரு பெண்ணும் மன்னித்தாலும் இந்த பரந்த பூமியில் இருக்கும் மற்ற பெண்கள் அவர்களால் உருவாக்கப்படும் சந்ததிகளும் மன்னிக்குமா? என்று கேட்டாள். மன்னர் திருதராஷ்டிரும் மற்றவர்களும் வாய்மூடி மௌனமாய் இருந்தார்கள். முதலில் யுதிஷ்டிரர் மனைவியை இழந்து ஆதன் பிறகு தன்னை இழந்தாரா? இல்லை. ஆகவே என்மீது அவருக்கு என்ன உரிமை இருக்க முடியும்? ஆக நான் சுதந்திரமானவள் என்பதை அரசர் அறிவிக்கட்டும் என்றாள்.

திரௌபதி சுதந்திரமானவள் என்று திருதராஷ்டிரன் அறிவித்தார். அதற்கு திரௌபதி பாண்டவர்கள் ஐவர் அன்புக்கு மட்டுமே நான் அடிமை. மற்றபடி நான் சுதந்திரமானவள் என்பதை இந்த சபையில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் என்றாள். பிறகு மன்னரே நான் அடிமை அல்ல. என்னை அடிமைப்படுத்த நினைக்கும் கௌரவர்களுடன் ஒரு முறையல்ல இரு முறை பணயம் வைத்தாட அனுமதி தாருங்கள் என்றாள். அதற்கு திருதராஷ்டிரரின் மனைவி காந்தாரி மகளே நீயும் தவறு செய்யப் போகிறாயா? சூதை சூதால் வெல்ல முடியுமா? அரசவையை சூதாட்ட களமாக்க பெண்ணான நீயும் ஆக்க முடியலாமா? உன்னைத் தடுக்க வேண்டும் என எனக்கு தோன்றவில்லை. ஆனால் இதை தவிர்க்கலாமே என்று எண்ணுகிறேன். கொஞ்சம் யோசி மகளே என்றாள். அதற்கு திரௌபதி சூதை இந்த மாதால் வெல்ல முடியும் என்று அனைவருக்கும் நிச்சயம் உணர்த்துவேன் என்றாள்.

திருதராஷ்டிரர் திரௌபதிக்கு அனுமதி கொடுத்தார். கர்ணன் துரியோதனனிடம் நண்பா மாமா பக்கத்தில் இருக்க ஜெயம் நமக்குத்தான். அடிமை இல்லை என இவள் வாக்கு சாதுரியத்தால் மன்னரை சொல்ல வைத்துவிட்டாள். நாமும் ஒருமுறைக்கு இரு முறை ஆடி இவள் அடிமை என்று ஊரறியச் செய்யலாம் என்றான். சகுனி துரியோதனன் துச்சாதனன் எல்லோரும் கோஷமாய் ஆட்டத்திற்கு நாங்கள் தயார் என்று கூறினார்கள்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -11

சபையில் இருந்த அமைதியான சூழ்நிலையில் ஒருவன் அடிமைகளுக்கு அரச ரீதியில் உடையணிந்து இருப்பதற்கு உரிமை இல்லை என்றான். ஆகையால் அவர்கள் அணிந்திருந்த ராஜ உடைகள் அனைத்தும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அப்படி பறிமுதல் செய்த பொழுது பாண்டவர்கள் தாங்களே தங்கள் அணிந்திருந்த அரச உடைகளை கழற்றி கொடுத்து விட்டனர். அடிமைகளான பாண்டவர்கள் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு நின்றனர். இக்காட்சியை கண்ட துரியோதனனுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூய யாக்ஞத்தில் யுதிஷ்டிரனின் ஆடம்பரத்தை பார்த்த பொழுது அவனுடைய உள்ளம் பொறாமையால் வெந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது பாராளும் வேந்தனை இப்போது அடிமை நிலைக்கு இறக்கி வைத்து விட்டோம் என்று துரியோதனன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. பாஞ்சாலத்தில் நிகழ்ந்த திரௌபதிக்கான சுயம்வரத்தில் வெல்ல துரியோதனனுக்கு இயலவில்லையே என்ற வருத்தம் அவருடைய உள்ளத்தை உறுத்திக்கொண்டே இருந்தது.

இப்பொழுது சபை நடுவே வைத்து அவளை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அவள் அணிந்திருந்த ஆடையை எடுக்கும் படி தன் தம்பி துச்சாதனனை ஏவினான். துச்சாதனனும் அடாத செயலில் ஈடுபட மகிழ்வுடன் திரௌபதி அருகில் வந்தான். இதற்கு தடை சொல்ல கணவன்மார்களுக்கு உரிமை இல்லை. மற்றவர்களோ வெறுமனே அமைதியாக இருந்து விட்டார்கள். திரௌபதி கிருஷ்ணனிடம் தனக்கு கிருபை புரிய வேண்டும் என்று வேண்டி அவனிடம் அடைக்கலமானாள். கிருஷ்ணனிடம் அடைக்கலம் வருகின்றவர்களுக்கு ஆபத்பாந்தவன் எப்பொழுதும் துணை நிற்பான். இப்பொழுது அதிசய செயல் ஒன்று நிகழ்ந்தது. துச்சாதனன் திரௌபதியின் புடவை ஒன்றன் பின் ஒன்றாக உருவிக்கொண்டே இருந்தான். புதிய புடைவைகள் அவளிடம் ஒன்றன் பின் ஒன்றாக வடிவெடுத்து வந்து கொண்டே இருந்தன. துச்சாதனன் உருவிய புடவைகள் திரௌபதியின் உயரத்திற்கு ஒரு பெரிய குவியல் ஆகிவிட்டது.

திரௌபதி புதிய ஆடைகளுடன் மிளிர்ந்து கொண்டே இருந்தாள். ஆடைகளை வுருவி சலித்துப்போன பொல்லாத முர்கன் பெருமூச்சு வாங்கி உட்கார்ந்துவிட்டான். துச்சாதனன் இச்செயலில் திரௌபதியிடம் மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டான். ஆனாலும் அவன் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அடுத்தபடியாக துரியோதனன் வேண்டுமென்றே திரௌபதியை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணி தன்னுடைய இடது தொடையை காட்டினான். இதை கண்ட பீமன் மிகவும் கோபம் கொண்டு நீ காட்டுகின்ற உனது தொடையை யுத்தத்திலே நான் உடைத்து உன்னை கொல்வேன். இல்லாவிட்டால் பராக்கிரமே வடிவெடுத்து இருக்கின்ற என்னுடைய முன்னோர்கள் சென்று இருக்கின்ற சொர்க்கத்தில் நுழைய மாட்டேன் என்று சத்தியம் செய்தான். பின்பு அவன் துச்சாதனனை பார்த்து யுத்தத்திலே உன்னுடைய நெஞ்சைப் பிளந்து அதில் பீறிக்கொண்டு வருகின்ற ரத்தத்தை குடிப்பேன். இல்லாவிட்டால் பராக்கிரமமே வடிவேடுத்திருக்கின்ற என்னுடைய முன்னோர்கள் சென்று இருக்கின்ற சொர்க்கத்தில் நான் நுழைய மாட்டேன் என்று சத்தியம் செய்தான். அப்பொழுது கர்ணன் திரௌபதியை அந்தப்புரத்திற்கு இழுத்துச் சென்று அடிமைப் பெண் ஒருத்திக்கு பொருத்தமான உடைகளை கொடுத்து பணிவிடை பண்ண அவளை நியமிப்பாயாக என்று துச்சாதனை தூண்டினான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -10

ஒரு நாட்டின் மன்னனை சூதாட்டத்திற்கு அழைத்து சூதாடி ராஜ்ஜியம் ஒன்றை அபகரிப்பது ராஜ தர்மம் ஆகாது. எப்பொழுது வேண்டுமானாலும் ஒரு அரசனை எதிர்த்து மற்றொரு அரசன் போர் புரிந்து ராஜ்யத்தை வெல்லலாம். சூதாட்டத்தில் இழந்த ராஜ்யத்தை நாங்கள் போர் புரிந்து வெல்லப் போகிறோம். எங்களுடன் யுத்தத்திற்கு வாருங்கள் என்று யுதிஷ்டிரன் கூறி இருக்கலாம். ஆனால் சூதாட்டம் ஆடியதன் விளைவாக அவன் விவேகத்தை முழுவதுமாக இழந்து விட்டான்.

கபடமே வடிவெடுத்த சகுனியை துரியோதனன் ஆர்வத்துடன் கட்டித் தழுவினான். மாமா என்னுடைய வாழ்நாளில் இன்று தான் பெரும் மகிழ்வை காண்கிறேன் என்று கூறிவிட்டு அடுத்த படியாக தன் தம்பி துச்சாதனனிடம் அந்த அடிமைப் பெண்ணாக திரௌபதியை சபைக்கு இழுத்து வரும்படி உத்தரவிட்டான். துரோபதியின் நீண்ட கூந்தலை தன் கையில் சுருட்டி பிடித்துக் கொண்டு அவளை இழுத்து வந்தான் துச்சாதனன். அவனுடைய முகத்தில் அப்போது மகிழ்ச்சி ததும்பிக் கொண்டிருந்தது. அப்படி இழுத்து வரப்பட்ட திரௌபதி மன உறுதியுடன் அந்த சபையில் பேசினாள். பெண் ஒருத்தி மீது கை வைத்து அவளை அவமானப் படுத்துவதை மாண்புமிக்க இந்த சபை ஆமோதிக்கிறதா என்று கேட்டாள். ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை. ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற குரு வம்சம் இன்றைக்கு கொடூர தன்மையில் மூழ்கிக் கிடந்தது.

என் கணவர் முதலில் சூதாட்டத்தில் தன்னை இழந்து விட்டு பிறகு என்னையும் பணயம் வைத்து தோற்று விட்டார் என்று கேள்விப்பட்டேன். தன்னை இழந்த பிறகு என்னை பணயம் வைக்க அவருக்கு உரிமை எது என்று கேட்டாள். அனைவரும் வாய்பொத்தி இருந்தனர். அங்கியிருந்த யுதிஷ்டிரனை பார்த்து நீங்கள் செய்த ராஜசூய யக்ஞத்துக்கு நிகரான செயலா இது? இச்செயல் போற்றத்தக்க செயலா என்று கேட்டாள். அவ்வேளையில் யுதிஷ்டிரனால் பேச இயலவில்லை. மௌனத்துடன் இருந்தான். பின்பு சபையில் இருந்தவர்களைப் பார்த்து பெரியப்பாவாகிய திருதராஷ்டிரன் சொல்லும் சொல்லுக்கு தன் கணவர் எப்போதும் அடிபணிந்து நடந்து கொள்கிறார். ஆனால் திருதராஷ்டிரரோ தன் தம்பியின் மைந்தர்களை அன்புடன் வரவேற்று சூதாட தூண்டினார். விளையாட்டில் அவருக்கு அனுபவம் போதாது. ஆனால் அதை ஆடுவதில் அவருக்கு விருப்பம் உண்டு. அவரிடம் இருந்த குறையை நீங்கள் பயன்படுத்தி உங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டீர்கள். இந்த சபையானது என் கணவரை ஏமாற்றி அவரிடம் இருக்கும் செல்வம் அனைத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டது. கொள்ளைக்காரர்கள் தர்மத்திலிருந்தும் சத்தியத்திலிருந்தும் பிசகுபவர்கள் ஆவார்கள். எனவே இங்கு குழுமி இருப்பவர்கள் தரத்தில் மிகவும் மட்டமானவர்கள். தான் அடிமையான பிறகு என்னை பணயம் வைக்க என் கணவனுக்கு உரிமை உண்டா?இச்சபையில் உள்ளவர்கள் யாராவது இந்த கேள்விக்கு விடை தருவீர்களா என்று கேட்டாள். சிறிது நேரம் சபையில் மௌனம் நிலவியது. பிறகு பீஷ்மர் பேசினார். இத்தகைய சூழ்நிலையில் தர்மத்தை விளக்குவது மிகக் கடினம். ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது. கணவன் ஒருவன் சுதந்திரமாக இருந்தாலும் அடிமையாக இருந்தாலும் மனைவி அவனுக்கு உரியவள் ஆகிறாள் என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார்.