மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -6

அஸ்தினாபுரத்திற்கு கௌரவர்கள் திரும்பிப் போய்க் கொண்டிருந்த பொழுது பாண்டவர்கள் படைத்திருந்த சௌபாக்கியங்களைப் பார்த்து தனக்கு வந்துள்ள பொறாமை குறித்து துரியோதனன் கர்ணனிடமும் சகுனியிடமும் விவாதித்தான். பாண்டவர்களின் நிறைந்த செல்வத்தையும் பரந்த சாம்ராஜ்யத்தையும் தங்களது சுய முயற்சியினால் தானே பெற்றுள்ளார்கள் என்று சகுனி துரியோதனனுக்கு சமாதானம் சொன்னான். துரியோதனன் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பாண்டவர்கள் அடைந்த முன்னேற்றத்தையும் செல்வப் பெருக்கையும் தன்னால் பார்த்து சகித்துக்கொள்ள முடியவில்லை. எதிரிகளின் ஆக்கத்தை பார்த்துக் கொண்டு இருப்பதை விட மாய்ந்து போவதே மேல் என்று வெளிப்படையாக துரியோதனன் சகுனியிடம் சொன்னான். இப்பொழுது சகுனியின் துர்புத்தி வெளியாயிற்று. பாண்டவர்களை வெல்ல நம்மால் இயலாது. ஆக சூதாடுவது ஒன்றே சரியான உபாயமாக இருக்கும். யுதிஷ்டிரனுக்கு சூதாட்டத்தில் பயிற்சி போதாது. ஆயினும் அவன் அதை ஓரளவு சூதாட விரும்புகின்றான். சூதாட்டத்தில் எனக்கு வேண்டியவாறு திறமை உள்ளது. ஆகையால் சூதாடி பாண்டவர்களை ஏமாற்றி நாடு நகரம் அவர்களது செல்வம் அனைத்தையும் வாங்கிவிடலாம் என்று சகுனி துரியோதனனிடம் கூறினான். துரியோதனனும் இதனை ஆமோதித்தான்.

அஸ்தினாபுரம் திரும்பிய பிறகு துரியோதனன் விரைந்து தனது தந்தையிடம் சென்றான். பாண்டவர்களின் செல்வம் தம்முடைய செல்வம் மற்றும் இரு தரப்பினரிடமும் படைத்திருந்த ராஜ்யங்களில் உள்ள பாகுபாடுகளை தந்தையிடம் அவன் விளக்கிக் கூறினான். நம்மை விட பலமடங்கு இந்திரப்பிரஸ்தம் மேலோங்கி மிளிர்ந்து இருக்கின்றது. அவர்களை போரில் வெற்றி பெற்று இந்திரப்பிரஸ்தத்தை நம்மால் பெற இயலாது. ஆகவே இந்த இந்திரப்பிரஸ்தத்தை சூதாடி அதிகரித்துக் கொள்ள அனுமதி தாருங்கள் என்று தந்தையின் அனுமதியை துரியோதனன் வேண்டி நின்றான்.

திருதராஷ்டிரன் இதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. துரியோதனன் கூறிய அனைத்திற்கும் தடை போட்டார். ஆனால் துரியோதனின் பிடிவாதத்திற்கும் சினத்திற்கும் சூழ்ச்சிக்கும் இறுதியில் திருதராஷ்டிரன் சம்மதித்தார். சூதாடுவதற்க்காக மாளிகை ஒன்றை விரைவில் கட்டுவதற்கு ஏற்பாடு ஆயிற்று. அத்திட்டம் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டது. திருதராஷ்டிரன் பாண்டவர்களை அழைத்து வரும்படி விதுரருக்கு உத்தரவிட்டார். புதிதாக கட்டியுள்ள மண்டபத்தில் உற்றார் உறவினர்களோடு அளவளாவி விளையாடுவது அந்த அழைப்பின் நோக்கம் என்றான். ஆனால் இந்த ஏற்பாடு விதுரருக்கு பிடிக்கவில்லை. பாண்டவர்களும் கௌரவர்களும் அவரவர்களுடைய ராஜ்யத்தில் மகிழ்வுடன் வாழ்ந்து இருக்கின்றனர். பகடை விளையாட பாண்டவர்களை கூப்பிடுவlன் வாயிலாக பகையும் வேற்றுமையும் வளரும். இந்த விளையாட்டு வினையாக முடியும் என்று விதுரர் எச்சரிக்கை செய்தார். ஆனால் திருதராஷ்டிரன் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை. அரசகுமாரர்கள் ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்காக பகடை விளையாடுவது பழக்கம் என்றும் புதிதாக கட்டப்பட்டு இருக்கின்ற மண்டபத்தை பார்க்க பாண்டவர்களை அழைத்து வர வேண்டும் என்று விதுரருக்கு திருதராஷ்டிரன் உத்தரவிட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.