பேரங்கியூர் மகிஷாசுரமர்த்தினி

துர்க்கையின் இந்த மகிஷாசுரமர்த்தினி சிலை ராஷ்டிரகூட கலைப்பாணி எனப்படுகிறது. துர்க்கை எருமை உருவ மகிஷனை வதம் செய்யும் காட்சி. அருகில் துர்க்கையின் வாகனமான சிங்கம். துர்க்கை வலது காலை நிலத்தில் மடிந்துள்ள மகிஷனின் வலதுகால் மீது ஊன்றி இடது காலை அவன் தோள் மீது வைத்து அழுத்தி இடது கீழ்க்கையால் அவன் நாக்கைப் பற்றி வெளியிழுத்து தலையை மேல் நோக்கித் திருப்பி இடது கையில் ஏந்திய சூலத்தால் அவன் முதுகில் குத்துகிறாள். வலது மூன்றாம் கையில் வாள் அசுரன் தலையைத் துண்டிக்க ஓங்கியுள்ளது. எதிர் இடது கையில் கேடயம். வலது இரண்டாம் கையில் ஆழி வீசப்படும் நிலையில் பிரயோக சக்கரம் உள்ளது. எதிர் இடது கையில் ஓங்கிய வில். மேல் வலது கை வில்லில் பொறுத்திச் செலுத்த அம்பறாத்தூணியில் இருந்து அம்பு ஒன்றை உருவுகிறது. எதிர் இடது மேல் கை வெற்றி முழக்கமிட சங்கு ஓங்கி உள்ளது. இருகைகளில் வாளும் கேடயமும் ஏந்திய அவுணன் ஆற்றலிழந்து மரணத்தின் விளிம்பில் தவிக்கிறான். மகிஷாசுரமர்த்தினியின் முகம் கம்பீரமும் கடுமையும் காட்டுகிறது. இடம்: அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புநாதஈஸ்வரர் திருக்கோவில், பேரங்கியூர் விழுப்புரம் மாவட்டம்.

திரிபுரைசக்தி

சிவபெருமான் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர். சிவ அர்ச்சனை விதிகளையும் தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும்படி பைரவர்களைப் பணித்தார் சிவனார். இந்த பணிக்கு அவர்களுக்கு வேண்டிய சக்தியைப் பெற்றிட எல்லாம் வல்ல சக்தியை பைரவி உருவில் தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார். அனைத்து பைரவ பைரவி சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே திரிபுர பைரவி எனப் போற்றப்படுகிறாள். சரஸ்வதி, லட்சுமி, காளி ஆகிய முப்பெரும் தேவியரும் இவளின் அங்கமாக விளங்குகிறார்கள். ஸ்தூல சூட்சும காரண சரீரங்களில் உள்ளவள் என்பதாலும் இந்த சக்தியை திரிபுரை அல்லது திரிபுர பைரவி என்று போற்றுகின்றனர்.

திரிபுரைசக்தி மற்றும் பைரவர் பைரவி பற்றிய முழுமையான கருத்துக்கள் அனைத்தும் திருமந்திரத்தில் உள்ளது. இந்த பைரவி அருள்பாலிக்கும் இடம் கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.

பத்ரகாளி அம்மன்

திரிசூலத்துடன் கூடிய பத்ரகாளி அம்மன் சிற்பமானது தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலைச் சேர்ந்தது. இக்கோயில் கிபி 13 முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் (பிற்காலச் சோழர் காலம் முதல் விஜயநகரநாயக்கர் காலம் வரையிலான இடைப்பட்ட காலத்தில்) கட்டப்பட்டது. சக்தியின் உக்கிர வடிவமான பத்ரகாளி அம்மன் உருவம் கொண்ட திரிசூலம் உலோகத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

ஶ்ரீ மீனாட்சி அம்மன்

காமதேனுவின் மீது அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் அன்னை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோலம். இடம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரில் உள்ள பழைமையான மரச்சிற்பம்.

பார்வதிதேவி

பஞ்சாக்கினி தபசு என்பது ஐந்து பூதங்களிலும் உள்ள ஐந்து அக்னிக்களின் மத்தியில் தவம் செய்யும் ஒரு கடுமையான தவம் ஆகும். பார்வதி மலைகளின் மகள் என்பதால் இமவானின் மகளாகப் பிறந்தார். சிவனின் அருளைப்பெற இந்த அக்னி மீது பார்வதி தேவி ஒற்றைக் காலில் நின்று கடுமையான தவம் செய்து சிவபெருமானின் அருளைப் பெற்று இறுதியில் சிவனின் உடலில் பாதியைப் பெற்றார். பஞ்ச அக்னி தவம் செய்யும் பார்வதி தேவியின் செதுக்கல் உள்ள இந்தத் தூண் திருக்கழுகுன்றம் கோயிலில் உள்ளது.

சிரசங்கி காளிகாம்பாள்

அன்னை சிரசங்கி காளிகாதேவி விஸ்வகர்மா சமூகத்தின் முக்கிய தெய்வமாகும். விஸ்வகர்மா சமூகத்தினர் இவரை காளம்மா என்று அன்புடன் அழைக்கின்றனர். கோவாவின் மபூசாவில் உள்ள ஸ்ரீ விஸ்வகர்மா கோவிலில் இந்த 3 அடி உயர காளி சிற்பம் உள்ளது. 10 – 11 ஆம் நூற்றாண்டு கல்யாண சாளுக்கியர்கள் காலத்தை சேர்ந்த சிறந்த சிற்பங்களில் ஒன்றான சிரசங்கி காளிகாம்பாவை பிரதியெடுத்து இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சிங்கவரத்துக் கொற்றவை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சிங்கவரம் கிராமம். அங்கு பல்லவர் கால குடைவரைக் கோயிலாக அரங்கநாதர் கோயில் உள்ளது. அரங்கநாதருக்கு அருகாமையில் தனி சன்னதியில் அரங்கநாயகி தாயார் அமர்ந்து இருக்கிறார். இவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓர் அறை இருக்கிறது. தாயாருக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் ஆரத்தித் தட்டினை சிறிது அந்தப் பக்கம் காண்பிப்பார். சிறிய சாளரத்தின் வழியே தீப வெளிச்சத்தில் அங்கு வீற்றிருக்கும் அழகிய கொற்றவை காட்சித் தருவாள். கொற்றவைக்கு வழக்கமாக உள்ள 8 கரங்கள் ஆயுதங்கள் இங்கு இல்லை. நான்கு கரங்கள் மட்டுமே உள்ளது. பின்னிரு கரங்கள் சக்கரம் சங்கினை ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்கள் இடுப்பின் மீதும் தொடையின் மீதும் வைத்த நிலையில் சற்று சாய்ந்து ஒய்யாரமாக நிற்கிறாள். வழக்கமாகக் கொற்றவையின் இரண்டு கால்களும் எருமைத் தலைமீது வைத்த நிலையில் காணப்படும். ஆனால் இங்கு வலது காலை மட்டும் மகிஷனின் தலைமீதும் இடது காலை தரையிலும் ஊன்றி நிற்கின்றாள். இரண்டு பக்கமும் இரண்டு அடியவர்கள் உள்ளார்கள். வலப்பக்கத்தில் இருப்பவர் நீண்ட தலைமுடி மீசையுடன் வீரனுக்கே உரித்தான பாணியில் இருக்கிறார். தனது வலது கையில் உள்ள கத்தியால் இடது கால் தொடையின் சதையை அரிந்துகொள்வது போல் உள்ளது. இடது பக்கத்தில் இருப்பவர் தரையில் முழங்கால் மண்டியிட்டு பூஜை செய்யும் நிலையில் அமர்ந்து இருக்கிறார். தலை மழித்து காணப்படுகிறது. மீசையும் இல்லை.

சுவேதவன மகாபத்ரகாளியம்மன்

சுவேத வனத்தில் மகாசக்தியாக மகாபத்ரகாளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்தபடி அருள்கிறாள். தனது எட்டு கரங்களில் பாசம் சக்கரம் வாள் உடுக்கை கேடயம் கபாலம் ஆகியவற்றை தாங்கி தீயவற்றை அழித்து அருள்பாலிக்கிறாள். உடல் சாய்ந்த நிலையில் வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். இடம் சுவேதாரண்யேஸ்வரர் பிரம்மவித்யாம்பிகை திருக்கோயில். திருவெண்காடு மயிலாடுதுறை மாவட்டம்.

சரஸ்வதி தேவி

பத்மாசனத்தில் தலையில் கிரீடத்துடன் காதில் வட்டமான குண்டலங்களுடன் கழுத்து மார்பு தோள்பட்டை கைகள் மற்றும் கால்களில் அலங்கார அணிகலன்களுடன் அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறாள். இடம் கங்கைகொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம்.

ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி

பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடிக்கொண்டு அவரது தவத்தை விளையாட்டாக கலைத்தார். இதனால் உலகம் முழுவதும் இருளாக மாறியது மற்றும் உலகின் அனைத்து செயல்பாடுகளும் நின்றது. மிகவும் கோபமடைந்த சிவன் பார்வதிதேவியை பூமியில் பிறந்து மீண்டும் அடையும்படி சபித்தார். வேகவதி ஆற்றின் அருகே உள்ள ஒரு பழமையான மாமரத்தடியில் மணலில் ஒரு லிங்கம் அமைத்து சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி கடும் தவம் செய்து கொண்டிருந்தாள். அருகில் உள்ள வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிவலிங்கத்தை மூழ்கடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவனிடம் பக்தி கொண்ட பார்வதி தன் உயிரை விலையாகக் கொடுத்தும் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகத் தழுவினாள். பார்வதியின் இந்த சைகை சிவபெருமானைத் தொட்டது. அவர் நேரில் வந்து அவளை மணந்தார். இடம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்.