திருவாசகம் முன்னுரை

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்றொரு வாசகம் தமிழில் உள்ளது. இந்த வாசகத்தின் மூலம் திருவாசகத்தின் பெருமையினை உணர்ந்து கொள்ளலாம். மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம். தெய்வம் மனிதனுக்கு கூறியது கீதை. மனிதன் மனிதனுக்கு கூறியது திருக்குறள். என்றொரு வாசகமும் தமிழில் உள்ளது. திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் திருவாதவூரார் என்கின்ற மாணிக்கவாசகர். இவர் 9 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார். சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர். இவர் பாடிய பாடல்கள் திருக்கோவை மற்றும் திருவாசகம் என அழைக்கப்படுகின்றன. ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் நடராஜருடன் கலந்தார். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன், பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

இந்நூல் மனிதனின் உள்ளத்தில் உள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களைய வேண்டிய வழிமுறைகள், இறைவனை தேடுகின்றவர்கள் பெற வேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், இறைவனின் அருள் பெற வேட்கை கொள்ளல், பக்தியைப் பெருக்குதல், அருளைப் பெறுதல், அதிலேயே ஆழ்ந்து இருத்தல், இறைவனைக் காணல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது. பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகம் 51 பதிகங்களையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. பன்னிரு திருமுறைகளில் 10ம் திருமுறையான திருமந்திரம் சிறப்புடையது. ஆனால் அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே என திருமுருக கிருபானந்த வாரியார் கூறியிருக்கிறார்.

கிருஸ்துவ மதப் பாதிரியாரான ஜி.யூ.போப் என்பவர் தமிழ் நாட்டிற்கு வந்து தனது கிருஸ்துவ மதத்தை பரப்ப தமிழ் கற்றார். தமிழ் கற்கும் போது திருவாசகம் நூலை படித்து பின்பு சிவனடியாரானார். அதற்குப் பின்பு திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவர் மாணிக்கவாசகரைப் பற்றி குறிப்பிடுகையில் உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறாமல் நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை என்று குறிப்பிடுகின்றார். மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கி.பி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன. பன்னிரு திருமுறைகளில் முதன் முதலில் அச்சில் வந்த திருமுறை திருவாசகமே. அதை அடுத்து வந்த நூல் திருச்சிற்றம்பலக் கோவையாரே. திருவாசகம் 1835 லும், திருக்கோவையார் 1841 லும் வெளிவந்தன. கோவையாரின் மூலம் பிலவ வருடம் ஆடி மாதம் வெளிவந்தது. இதன் பதிப்பாசிரியர் புதுவை நயநப்ப முதலியார். இந்நூலில் மாணிக்கவாசகரை வெள்ளியம்பலத் தம்பிரான் அரதனவாக்கிய அடிகள் என்று உள்ளது.

முதன் முதலில் திருக்கோவையாரை உரையோடு பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர். இப்பதிப்பு வெளிவந்த ஆண்டு 1860 ஆகும். நூல் முகப்பில் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினிய உரையோடு இராமநாதபுர ஜமீந்தாரவர்களின் மேனேஜராகிய மஹராஜ ராஜஶ்ரீ பொன்னுச்சாமி தேவர் அவர்கள் கேட்டுக் கொண்டபடி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரால் பலபிரதி பேதங்களைக் கொண்டு பரிசோதித்து சென்னப் பட்டணம் முத்தமிழ் விளக்க அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது என்று அச்சிடப்பட்டிருக்கிறது. வெளிவந்த ஆண்டு ரௌத்திரி என்றும் மாதம் ஐப்பசி என்றும் முகப்பில் குறிக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாகப் பேரின்பக் கிளவி என்றும் சிற்றின்பக் கிளவி என்றும் சிறு விளக்கம் தரப்பட்டுள்ளன. நூலை இங்ஙனம் சுவடியில் அமைத்து வைத்தவர் யார் என்பது தெரியவில்லை என்று ஒரு குறிப்பும் இந்நூலில் உள்ளது. 2 ஆவதாக 1897இல் பேராசிரியர் உரையோடும் விசாகப் பெருமாள் ஐயர் எழுதிய விளக்கத்தோடும் திருக்கோவையார் சென்னையில் வெளிவந்ததை பிரிட்டிஷ் நூலகத் தமிழ்நூல் அட்டவணை அறிவிக்கின்றது. அபிதான சிந்தாமணி என்ற நூலின் மூலமாகவும் சேக்கிழாரின் பெரிய புராணம் மூலமாகவும் இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தான். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான்.

மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும் ஞானம் என்பதும், போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர். பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.

மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

அன்றிரவு குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது மன்னவா வாதவூரரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான். அவர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திரு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன் பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் திருவெம்பாவை திருவம்மானை ஆகியவற்றைப் பாடினார். மேலும் பல சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்து கொண்டிருந்தார். அந்த பாடல்கள் அனைத்தும் திருக்கோவையார் என்ற பெயருடன் இருக்கிறது.

பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அப்போது இலங்கையில் புத்த மதம் மேலோங்கி இருந்தது. தில்லையம்பலத்தைப் பற்றி கேள்விப்பட்டு மன்னனும் புத்தபிட்சுக்களும் தில்லையில் தங்கள் மதத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தில்லைக்கு வந்தனர். அப்போது மன்னன் தனது ஊமை மகளையும் அழைத்து வந்தான். வந்தவர்கள் தில்லையில் தங்கி நாங்கள் சைவர்களோடு வாதம் செய்து புத்த மதத்தை நிலைநாட்ட வந்தோம் என்று தில்லை அந்தணர்களிடம் கூறினார்கள். அந்தணர்கள் கலக்கமுற்றார்கள். அன்று இரவு தில்லை நடராஜர் அந்தணர்கள் கனவில் வந்து தில்லைக்கு தற்போது வந்திருக்கும் திருவாதவூரனை அழைத்து வாதம் செய்ய சொல்லுங்கள் அவன் வெல்வான் என்று கூறினார். அந்தணர்கள் திருவாதவூரரிடம் சென்று இறைவன் கூறியதைக் கூறி வாதம் புரிய அழைத்து வந்தனர். வாதம் நடந்தது. புத்தபிட்சுக்கள் தோற்றனர். இதனைப் பொறுக்காத புத்தபிட்சுக்கள் திருவாதவூரரைத் திட்ட ஆரம்பித்தார்கள். இதனை கேட்ட திருவாதவூரர் சரஸ்வதியை வேண்ட புத்தபிட்சுக்கள் அனைவரும் ஊமைகளாயினர். அதனைக் கண்ட இலங்கை மன்னன் பேசுவோரை ஊமை ஆக்கும் ஆற்றல் இருந்தால் ஊமையைப் பேச வைக்கும் ஆற்றல் இருக்குமல்லவா என்று கூறித் தனது மகளை பேச வைக்கும் படி கூறினார். திருவாதவூரரும் இறைவனை வேண்ட மன்னனின் மகள் பேச ஆரம்பித்தாள். இதனைக்கண்ட அனைவரும் திருவாதவூரரிடம் பணிந்து சைவ மதத்திற்கு மாறினர். பின்பு அனைவருக்கும் பேசும் ஆற்றல் வந்தது. மதம் மாறிய புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விக்கு மன்னனின் மகளையே பதில் சொல்ல வைத்தார். புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்னனின் மகள் கூறிய விடைகளே திருச்சாழல் என்னும் பதிகமாக அமைந்தன.

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன், நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் “மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது” என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் “இந்தப் பாடல்களின் பொருள் இவரே” என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார்.


தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 232 திருவாமாத்தூர்

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 232 திருவாமாத்தூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 232 வது தேவாரத்தலம் திருவாமாத்தூர். புராணபெயர் கோமாதுபுரம், திருஆமத்தூர். மூலவர் அபிராமேஸ்வரர், அழகியநாதர்.. இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இறைவனின் கருவறை அகழி அமைப்பில் உள்ளது. அம்பாள் முத்தாம்பிகை, அழகிய நாயகி. அம்பாள் முத்தாம்பிகையை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். தலமரம் வன்னி, கொன்றை. ஈசனை மட்டுமே வழிபட்டு வந்த பிருங்கி முனிவர் பார்வதி தேவியின் சாபத்தால் வன்னி மரமாக மாறிவிட்டார். அவரே இத்தலத்தின் தல விருட்சமாக சுவாமி, அம்மன் சன்னதிக்கு இடையே அருள்பாலிக்கிறார். தீர்த்தம் ஆம்பலம்பூம்பொய்கை (குளம்), தண்ட தீர்த்தம் (கிணறு), பம்பை (ஆறு), சக்கர தீர்த்தம். பொதுவாக சிவாலயங்களில் ஒரே கோயிலுக்குள் சிவனும் அம்மனும் அருள்பாலிப்பார்கள். ஆனால் இங்கு சிவன் தனிக்கோயிலில் கிழக்கு பார்த்தும் எதிரே அம்மன் தனிக்கோயிலில் மேற்கு பார்த்தும் அருள்புரிகின்றனர். அம்பாளின் திருமேனியில் நாகப்பாம்பின் வால் பகுதி அமைந்துள்ளது. சிவன் கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் துளை ஒன்று உள்ளது. இதன் வழியாக அம்மனும் சிவனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர்.

பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். இறைவன் கோவில் கோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி சுற்று மதிலுடன் உள்ளது. அம்பாள் கோவில் கோபுரம் 5 நிலைகளுடன் மேற்கு நோக்கி உள்ளது. சுவாமி கோவில் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் எதிரே பெரிய சுதை நந்தி உள்ளார். இறைவன் ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது. அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின் சிலை வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. மேலும் வெளிப் பிராகாரத்தில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதியும் தனிக் கோயிலாகவுள்ள சண்முகர் சந்நிதியும் ஈசான்ய லிங்கேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. வெளிப் பிரகார வலம் முடித்து சித்தி விநாயகர் சந்நிதி அருகே உள்ள படிகளேறி உள்பிரகாரத்தை அடையலாம். நேரே தெற்கு நோக்கிய நடராச சபை உள்ளது. உள்பிரகார சுற்றில் 63 மூவர், காலபைரவர், தேவ கோஷ்டத்தில் சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், சிவபூஜை விநாயகர் ஆகியோரைக் காணலாம். இரண்டாம் பிரகாரத்தில் இராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன.

தென் மேற்கு மூலையில் வட்டப்பலகை என்னும் சத்திய மண்டபம் உள்ளது. மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இதில் நீராடாமல், நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்கிறது தலபுராணம். திருவட்டப்பாறை என்ற சிவலிங்க மூர்த்தி உள்ளார். இவர் முன் அமர்ந்து ராமனும், சுக்ரீவனும் ராவணனை வதம் செய்வதற்கு அனுமனின் சான்றுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டதாக புராணவரலாறு உள்ளது. சாலையில் எதிரே உள்ள அம்பாள் கோபுர வாயில் வழியாக உள்ள நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், சிம்மம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலின் இருபுறமும் வண்ணச் சுதையால் அமைந்த துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் முத்தாம்பிகை மேற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். இந்த அம்பாள் ஒரு வரப்பிரசாதி. அம்பாள் சந்நிதிக்கு நுழையும் போதே வலதுபுறம் மூலையில் வட்டப்பாறை அம்பாளின் சாந்நித்யரூபம் உள்ளது. தற்போது இச்சந்நிதியில் சிவலிங்கமே உள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். பசுவின் உடலில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கின்றனர். பசுவே வந்து இங்குள்ள இறைவனை பூஜித்ததால் இத்தலம் மிகவும் பெருமை பெற்றது.

ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. இந்த திருஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புடையது.

வட்டப்பாறை அம்மனைப்பற்றிய ஒரு புராணவரலாறு உள்ளது. அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த தம்பி அண்ணனிடம் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான். அண்ணன் மறுக்க தம்பி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்தார் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் அண்ணனை சத்தியம் செய்து தருமாறு கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்தால் பெற்ற மதிப்பைத் திரட்டிப் பொன் வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்துக் கொண்டான். அத்தடியுடன் பஞ்சாயத்து நடக்கும் அவைக்கு வந்து தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும் தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை எல்லாம் அவனிடமே உள்ளது என்று சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத் தம்பியுடன் அனுப்பி விட்டனர். தம்பியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட கைத்தடியுடன் சென்ற அண்ணன் இத்தலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது அம்பாளின் தெய்வ சக்தி தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று இறுமாப்புக் கொண்டு அம்பாளையும் சேர்த்துத் திட்டினான். அப்போது கரும்பாம்பு ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது. அவ்வாறு கடித்துச் சாகடித்த இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது. இந்நிகழ்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம் உள்ளது. தரிசிப்போர் சிவாச்சாரியாரிடம் கேட்டு நேரில் காணலாம். அம்பாளுக்குச் செய்த அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளிக் கவசத்திலும் சர்ப்பத்தின் வால் செதுக்கப்பட்டுள்ளது.

ராவணனை வதம் செய்த ராமன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு சிவனுக்கு தண்ட தீர்த்தத்தால் அபிஷேகம் செய்துள்ளார். சூரபத்மனை அழிப்பதற்காக முருகன் இங்குள்ள சிவனையும் பார்வதியையும் வணங்கியுள்ளார். பார்வதி தனது சக்தி வேலை முருகனுக்கு கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் கோப்பரகேசரி வர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது காலத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தல இறைவனை விநாயகர், முருகன், பார்வதி, ராமர், சீதை, லட்சுமணன், நாரதர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருகு முனிவர், பராசரர், விஸ்வாமித்திரர், வியாசர், உரோமசர், மதங்க முனி, அஷ்ட வசுக்கள் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 231 பனையபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 231 வது தேவாரத்தலம் பனையபுரம். புராணபெயர் திருப்புறவார் பனங்காட்டூர். மூலவர் பனங்காட்டீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சத்யாம்பிகை, புறவம்மை, மெய்யாம்பாள். அம்பாள் சந்நிதி நுழைவாயிலில் துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். தலமரம் பனை. பனை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட 5 தலங்களில் இத்தலமும் ஒன்று. தீர்த்தம் பத்ம தீர்த்தம். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும் பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன. நான்கு நிலைகளையுடைய ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் உள்ளது. கோபுர வாயில் நுழைந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனை மரங்கள் மூன்று உள்ளன. நவக்கிரக சந்நிதி வெளிப் பிரகாரத்திலுள்ளது. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் சிலா ரூபங்கள் உள்ளன. சப்தமாதர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, கஜலஷ்மி, நால்வர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் சன்னிதிகள் உள்ளன. திருநீலகண்டர் தம் மனைவியுடன் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கின்றார்.

சிவபெருமானை நிந்தித்து தக்கன் செய்த வேள்விக்கு சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன் வீரபத்திரரால் தாக்கப்பட்டு ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற இத்தலமும் ஒன்றாகும். இதற்குச் சான்றாக ராஜகோபுரம் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. சிபிச்சக்ரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பதற்காக தன் கண்களை அளித்தான். இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து காட்சி தந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கண்பறித்து அருளிய கடவுள் என பெயர் ஏற்பட்டது.

இந்த ஆலயத்தின் கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தவை இதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. இவரது பெயராலேயே பரவைபுரம் என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது. இத்தலத்தில் முதலாம் குலோத்துங்க சோழன், கோனேரின்மை கொண்டான், பரகேசரி ஆதிராஜேந்திர தேவன் முதலிய அரசர்களின் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. ராஜேந்திர சோழன் கடாரம் (இன்றைய மலேசியா) வென்றதை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களில் இக்கோவில் திருப்புறவார் பனங்காடுடையார் கோவில் எனவும் இறைவன் பெயர் திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இறைவனை திருஞான சம்பந்தர் புறவார் பனங்காட்டீசன் என்று அழைக்கிறார். இருப்பினும் இங்குள்ள கல்வெட்டு களில் இறைவனின் திருநாமம் கண்ணமர்ந்த நாயனார், பரவை ஈஸ்வரமுடைய மகாதேவன், திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 230 கிராமம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 230 வது தேவாரத்தலம் கிராமம். புராணபெயர் திருமுண்டீச்சரம், திருக்கண்டீச்சரம். மூலவர் சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை. தலமரம் வன்னிமரம். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், முண்டக தீர்த்தம். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடம் முதலில் மகாமண்டபம், பின் அர்த்த மண்டபம் உள்ளது. நுழைவு வாசலில் விநாயகரும் முருகனும் இடம் மாறியுள்ளனர். முருகனின் இடது கை நாரச முத்திரையுடன் உள்ளது. ஆலயத்தின் வெளியே பிரம்ம தீர்த்தம் எனப்படும் முண்டக தீர்த்தம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு பின்பக்கம் கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் கிழக்குச் சுற்றில் பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரும் வீற்றுள்ளனர். தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்த வண்ணம் வித்தியாசமான கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். கோயிலின் அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளது. சிவன் சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. வீரபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவன் திருநீற்றுப்பை (பொக்களம்) அளித்துள்ளார். இதனால் சிவனுக்கு பொக்களம் கொடுத்த நாயனார் என்ற பெயரும் ஆற்றின் கரையில் கோயில் இருப்பதால் ஆற்றுத்தளி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. திண்டி, முண்டி என்கிற இறைவனின் காவலர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி உள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம் முண்டீச்சரம் எனப்பட்டது. துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்கிற மன்னன் வேட்டைக்கு இங்கு வந்த போது இங்கிருந்த குளத்தில் ஓர் அழகிய தாமரை மலரைக் கண்டான். அதை தனது சேவகர்கள் மூலம் பறித்து வரச் சொன்னான். அவர்களால் அதைப் பறிக்க முடியாமல் போகவே, தானே சென்று அம்மலரைப் பறிக்க முயன்றான். தாமரை மலர் அவன் கைக்கு அகப்படாமல் குளத்தில் சுற்றி வர, கோபம் கொண்ட மன்னன் அம்மலர் மீது குறி வைத்து அம்பு விட்டான். மலர் மீது அம்பு பட்டவுடன் குளத்து நீர் முழுவதும் செந்நீராயிற்று. அதைக் கண்டு பயந்த மன்னன் அருகில் சென்று பார்த்த போது தாமரை மலரில் ஒரு லிங்கம் இருக்கக் கண்டான். அந்த லிங்கத்தை எடுத்து குளக்கரையில் அதை ஸ்தாபித்து ஒரு கோவிலும் கட்டினான். லிங்கத்தின் மீது அம்பு தைத்த தழும்பு இன்றும் இத்தல மூலவரின் முடியில் காணலாம். இதனால் சுவாமி முடீசுவரர் என்றும் முண்டி பூஜித்தமையால் முண்டீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கல்வெட்டில் மவுலி கிராமம் என அழைக்கப்படுகிறது. மவுலி என்றால் கிரீடம் என்று பொருள். காலப்போக்கில் மக்கள் மவுலியை விட்டு கிராமம் என அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். இக்கோயில் கி.பி.943-ல் கேரள மன்னனான வெள்ளாங்குமரன் என்பவனால் (முதற்பராந்தகன் காலத்தில்) கருங்கல்லால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இத்திருக்கோயி­ல் சோழ மன்னர்களில் முதற்பராந்தக சோழன், இரண்டாம் ஆதித்தகரிகாலன், முதலாம் இராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலானோர் காலங்களிலும், பாண்டியர்களில் கோனேரின்மை கொண்டானாகிய சுந்தரபாண்டிய தேவன், வீரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும், இராஷ்டிரகூட மன்னரில் கன்னர தேவர் காலத்திலும், விஜயநகர மன்னரில், காலத்திலும் செதுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. பிரமன், இந்திரன் ஆகியோரும் இத்தலத்தில் சிவலோகநாதரை வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசரால் உழவாரப் பணி செய்யப்பட்ட ஆலயங்களில் இக்கோவிலும் ஒன்று. திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 229 திருப்பாதிரிபுலியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 229 வது தேவாரத்தலம் திருப்பாதிரிபுலியூர். புராணபெயர் கடைஞாழல், கூடலூர் புதுநகரம். மூலவர் பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன், கறையேற்றும்பிரான, பாடலேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி. தலமரம் பாதிரிமரம். தீர்த்தம் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு. இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரைதீர்த்தம் படித்துறைகளுடன் உள்ளது. முன் மண்டபமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், நந்தியை தரிசிக்கலாம். உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தியும் அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் திருநாவுக்கரசர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கன்னி விநாயகர் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல் பாடியுள்ளார். தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. இறைவி அரூபமாக (உருவமில்லாமல்) இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன் (கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயமாக பார்த்து அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.

சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருக்கின்றது. மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மீது மேலே ஏறுவதற்கு வசதியாக இருக்க தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம். புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. மாணிக்கவாசகர் திருப்பாதிரிபுலியூர் பெருமானை தரிசிக்கச் சென்றார். அப்போது கெடிலநதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் அங்கேயே மூன்று நாட்கள் காத்திருந்தார். வெள்ளம் வடியவில்லை. தன் நிலையைக் கூறி பெருமானை வழிபட சித்தராகத் தோன்றிய சிவன் மாணிக்கவாசகரை நீர் மேல் நடந்துவருமாறு பணித்தார். ஆனால் பயத்தால் மாணிக்கவாசகர் அப்படியே நின்றார். உடனே சிவன் மாணிக்கவாசகரை கண்களை மூடும்படி கூறிவிட்டு பிரம்பு ஒன்றை ஏவி அந்த நதியை திசை திருப்பி ஓடச் செய்தார். கண் விழித்த மாணிக்கவாசகர் இறைவனின் கருணையை நினைத்த படியே திருத்தலம் வந்து வழிபட்டார்.

பதினாறு வயதினராய் சித்தர் வடிவில் வந்த ஈசன் கை வைத்ததால் சிவகரை தீர்த்தம் உருவானது. சித்தர் வடிவில் வந்த சிவனின் திருவடிகளில் வேதங்களும் பாதுகைகளாக ஆகமங்களும் இருந்தன. உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்து விட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும் இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி பாதங்கள் நிலத்தில் பதியாமல் அரூபமாக (உருவமில்லாமல்) தவமிருந்து இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம். துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது. இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம். அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர், உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம். மங்கண முனிவர் பூசித்து தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம்.

திருநாவுக்கரசை முதன்முதலில் அப்பர் என்று திருஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான். காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவதும் சமமானது என்றும் திருவண்ணாமலையில் 8 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 3 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமமானது என்றும் தல வரலாறு கூறிப்பிடுகின்றது. எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை அம்பாளின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். இங்கு இறைவனின் சன்னதியில் பள்ளியறை உள்ளது. திருப்பாதிரிப்புலியூரின் பெருமைகளை தேவி மூலமாக உலகம் அறிய வேண்டும் என்பதற்காக இறைவன் தூர்ச்சடி, பிரமசன்மன் என்ற சிவகணத்தவரை அனுப்பி வைத்தார். அவர்கள் மனித உருவில் குருவாகவும் சீடனாகவும் வந்து திருப்பாதிரிப்புலியூர் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு வாய்ந்த சிவதலம் என்பதை மக்களிடையே எடுத்துரைத்தனர். சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன. சோழர் காலக் கல்வெட்டுகள் 19ம் வேறு இரு கல்வெட்டுக்களும் உள்ளது. இத்தலத்தில், திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது. பிற்காலத்தில் இந்த கோவில் பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டிய வம்சத்தினரால் புணரமைக்கப்பட்டது. இக்கோயில் சுற்றுச்சுவர் கல்வெட்டுகள் மூலம் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கோயில் என்பது தெரியவருகிறது. இந்த கோவிலின் நான்கு சுவர்களிலும் திருநாவுக்கரசரின் கருத்துக்கள் உள்ளது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 228 திருமாணிகுழி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 228 வது தேவாரத்தலம் திருமாணிகுழி. மூலவர் வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி, உதவிநாயகி. தலமரம் கொன்றை. தீர்த்தம் சுவேத, கெடில நதி. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் உள்ளனர். இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக தலவரலாறு உள்ளது. கோயில் கெடில நதியின் தென் கரையில் ஓர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன. இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் வடக்கு நோக்கி உள்ளது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். உள் பிரகாரத்தில் விநாயகர், 63 மூவர், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், பஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தில் மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும் அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால் இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது. இறைவனும் இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால் இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார். தீபாராதனையின் போது மட்டும் 3 வினாடிகள் திரையை விலக்குவார்கள் சற்று நேரம் மட்டும் சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கலாம் இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் 11 ருத்திரர்களில் ஒருவரான பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை பூஜைகள் அனைத்தும் முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.

இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கரக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்களும் உள்ளது. சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந்துள்ளன. திரைக்கு பின் சுவாமியும் அம்பாளும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்திதேவர் வழக்கமான தலை சாய்த்த நிலையில் இல்லாமல் நேர் திசையில் உள்ளார். மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்பாளின் அம்புஜாட்சியில் ஆட்சி நடக்கிறது. அம்பாளிடம் இரண்டு கைகளிலும் ஒன்றில் தாமரை மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும் அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார்.

மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள் என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக்கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் திருமாணிக்குழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் உதவி என்றே குறிக்கப் பெறுகின்றது. பெரிய புராணத்தில் சுந்தரர் கெடில நதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை. திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன் என்றும் உதவிமாணிகுழி என்றும் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். எனவே இறைவனுக்கு உதவிநாயகன் அம்மனுக்கு உதவி நாயகி என்ற பெயரும் உண்டு. சோழ பாண்டிய விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் உதவிநாயகர், உதவி மாணிகுழி மகாதேவர் என்று குறிக்கப்படுகிறது. சோழர்காலக் கட்டமைப்புடையது இக்கோயில். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 227 திருவாண்டார் கோவில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 227 வது தேவாரத்தலம் திருவாண்டார் கோவில். புராணபெயர் திருத்துறையூர். மூலவர் வடுகீஸ்வரர், பஞ்சநாதீஸ்வரர், வடுகூர்நாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக இடது பக்கம் சற்றே சாய்ந்தவாறு தலையில் தலைப்பாகையுடன் அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கன்னி அம்மை. அம்பாள் 4 கரங்களுடன் எழிலாகக் காட்சி தருகிறாள். தலமரம் வன்னி. தீர்த்தம் வாமதேவ தீர்த்தம். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. அழகிய சுற்று மதில்களுடன் கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. முகப்பு வாயிலைக் கடந்ததும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தைக் கடந்தவுடன் அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. வெளிப் பிரகாரத்தில் தென் திசையில் தனி விமானத்துடன் உள்ள நால்வர் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி உள்ளது.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் 12 திருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்த கோலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். தெற்கு நோக்கிய பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. பிரம்மா, சிவனை வழிபட்ட சிற்பம் தட்சிணாமூர்த்திக்கு அருகில் இருக்கிறது. பிரம்மாவுக்கு அருகில் ஆஞ்சநேயர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன் போர்க்கோலத்தில் இருக்கிறாள். முண்டாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும் பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள் பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா, தேவர்கள் சிவனிடம் சரணடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும் வடுகபைரவர் அசுரனைக் கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது.

ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று. படைப்புத்தொழிலுக்கு அதிபதியான பிரம்மா சிவனை போலவே ஐந்து தலைகளை கொண்டவராக இருந்தார். இதனால் அவருக்கு மனதில் அகம்பாவம் உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார் சிவன். ஒருசமயம் பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை சிவன் என நினைத்து மரியாதைகளைச் செய்தார். பிரம்மா மறுக்காமல் இருந்து விட்டார். இதைக்கண்டு கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து விட்டார். ஆணவம் அழியப்பெற்ற பிரம்மா சிவனை வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவன் அவருக்கு மன்னித்து அருள் செய்தார். இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக தலபுராணத்தில் மூலமாக அறிந்து கொள்ளலாம். அர்த்த மண்டபத்தையும் கருவறையையும் உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் கலத்து கல்வெட்டுகளும் கணப்படுகின்றன. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 226 திருத்தளூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 226 வது தேவாரத்தலம் திருத்தளூர். புராணபெயர் திருத்துறையூர். மூலவர் சிஷ்டகுருநாதேஸ்வரர், சிஷ்டகுருநாதர், பசுபதீஸ்வரர், தவநெறியப்பர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவன் பெரிய லிங்க வடிவில் இருக்கிறார். ஆவுடை வலது பக்கம் இருக்கிறது. சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் பூங்கோதை நாயகி, சிவலோக நாயகி. தலமரம் கொன்றை. தீர்த்தம் சூர்யபுஷ்கரிணி. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். உட்பிரகாரத்தில் நர்த்தன கணபதி, பாலசுப்பிரமணியர், நடராஜர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டேச்வரர், வரதராஜப் பெருமாள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இதில் தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமா மகேஸ்வரர் சுந்தரருக்குத் தவநெறி தந்த காட்சி சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலமரம் கொன்றை உள்ளது. பக்கத்தில் உள்ளது. அகத்தியர் வழிபட்ட லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சூரியபுஷ்கரணி கோவிலுக்கு வெளியே உள்ளது.

இத்தல முருகப் பெருமான் இரு தேவியருடன் கிழக்கு நோக்கியவாறு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்பகழில் பாடியுள்ளார். கயிலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்து சிவன் திருமணத்தை கண்டார். அவர் இத்தலம் வந்தபோது சிவனின் திருமணத்தை காண விரும்பி லிங்கம் அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தனர். இத்தலத்தில் அகத்தியர் சிவனை மேற்கு நோக்கியும் அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டார். அவரது திருமணம் வட திசையில் உள்ள கயிலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தார். இதன் அடிப்படையில் அம்பாள் வடக்கு பார்த்து தனிச்சன்னதியில் இருக்கிறாள்.

திருவெண்ணெய் நல்லூரில் சிவனை பித்தா என்று பாடி வணங்கிய சுந்தரர் திருவெண்ணெய் நல்லூரில் இருந்து இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும் பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும் வயதான் தம்பதியைக் காணவில்லை. அப்போது நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார் என்று அசரீரி வாக்கு கேட்க சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். சுந்தரர் இறைவனை வணங்கி தனக்கு குருவாக இருந்து உபதேசம் செய்யும்படி கூறினார். சிவபெருமானும் சுந்தரருக்கு குருவாக இருந்து தவநெறி உபதேசம் செய்தார். எனவே தான் இறைவனுக்கு தவநெறி ஆளுடையார், சிஷ்டகுருநாதேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. இந்த ஊருக்கு அருகில் கீழப்பாக்கம் என்றொரு இடத்தில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இந்த இடத்தில் தான் இறைவன் முதியவர் உருவில் சுந்தரருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்ததாகவும் பின்பு ரிஷபாரூடராக ஆலய விமானத்தில் காட்சி கொடுத்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தின் சந்தானக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் பிறந்து வாழ்ந்தது திருத்துறையூர். இவர் முக்தி அடைந்தத் திருத்தலமும் இதுவே. இவரது ஜீவசமாதியும் திருத்துறையூரிலேயே அமைந்துள்ளது. இத்தல இறைவனை சூரியன், பிரம்மா, விஷ்ணு, இராமர், சீதா, பீமன், அகத்தியர் நாரதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 225 திருவெண்ணைநல்லூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 225 வது தேவாரத்தலம் திருவெண்ணைநல்லூர். புராணபெயர் திருவருள்துறை. மூலவர் கிருபாபுரீஸ்வரர், தடுத்து ஆட்கொண்ட நாதர், அருட்கொண்டநாதர் வேணுபுரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை. மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நீங்க அம்பாள் இங்குள்ள நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகை சந்நதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும். சங்க நிதி, பதுமநிதி, ஸ்ரீ சக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இருக்கின்றாள் தலமரம் மூங்கில்மரம். தீர்த்தம் தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த சிவபெருமான் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்றும் இத்தலத்தில் உள்ளது.

10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த வழக்கு தீர்த்த மண்டபம் உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில் மேலே சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. இறைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றது.

அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில் மீது நடனம் புரிந்ததைக் கண் குளிரக்கண்டு திருப்புகழ் ஒன்று பாடியுள்ளார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாத விநாயகர். சுயம்புவாக தானே தோன்றியவர். இவர் மெய்கண்டதேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்வர். தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் இங்கு உள்ளது. மகாவிஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் இங்கு உள்ளது. பாண்டவரில் அர்ச்சுணன் தன்மூத்தோனாகிய தருமனும் பாஞ்சாலியும் தனித்திருந்த போது சென்றதால் ஏற்பட்ட பாவத்தை இங்குள்ள இறைவனை வழிபட்டப் போக்கிக் கொண்டான். மேலும் இறைவனை வேண்டி மகப்பேறு அடையவும் வரத்தை பெற்றான். அர்ச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது. புத்தூர் சடங்கவியாருடைய மகள் சுந்தரர் திருமண நாளன்று இறைவன் முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இப்பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது.

சிவபெருமான் நீ எனக்கு அடிமை என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அங்கு கூடியிருந்தவர்களிடம் காட்ட அதிலுள்ள கையெழுத்து உண்மையானது தான் என்பதை அறிந்த பெரியோர்கள் சுந்தரரை கிழவருக்கு அடிமையாக போகச் சொன்னார்கள். கோபம் கொண்ட சுந்தரர் கிழவரை பித்தன் கிறுக்கன் என்றெல்லாம் திட்டினார். அதையெல்லாம் பொருட்படுத்தாத கிழவர் சுந்தரரை அழைத்துக் கொண்டு இந்த திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்தார். வந்தது இறைவன் தான் என்பதை அறிந்த சுந்தரர் சிவபெருமானை வணங்கி நிற்க என்னப் பற்றி பாடு என்று இறைவன் கேட்க எப்படிப் பாடுவது என்று சுந்தரர் கேட்க என்னை பித்தா என்று திட்டினாயே அதையே பாடு என்று அடியெடுத்துக் கொடுத்தார். அப்போது தான் சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானே என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அதிலிருந்து சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலம் தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி அற்புதங்கள் நிகழ்த்தி ஆண்டவனின் அறநெறியை பரவச் செய்தார். கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறம் வடக்கு பக்கத்தில் சுந்தரருக்கும் கிழவனாக வந்த சிவபெருமானுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது. இறைவன் நின்று சாய்ந்திருந்த தூணில் இன்றும் வெதுவெதுப்பாக உஷ்ணம் உள்ளது. மேலும் இறைவன் அடி வைத்த இம்மன்றத்திலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு.

விதகோத்திரர் என்னும் அந்தணர் கருவுற்றப் பசுவை வேள்வி செய்தார் அதனால் இத்தலத்திற்கு வந்து அருட்டுறை தீர்த்தத்தில் நீராடி பாடிப்பணிந்து தனது பாவத்தை போக்கிக் கொண்டார். சடையப்ப வள்ளல் இவ்வூரில் வாழ்ந்திருக்கிறார். தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி சிவபெருமானைக் கொல்ல ஏவினர். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுக் வைத்துக் கொண்டார். முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள். இறைவன் அவர்களது தவறை பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருள் துறை என பெயர் பெற்றது. முனிவர்களின் தவறை எண்ணி இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீசுவரர் எனப்பெயர் பெற்றார். வேதங்கள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில் இறைவன் தீயுருவாகத் தோன்றினான் வேதங்கள் கேட்டுக் கொண்டபடி இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளினான். முதலாம் ராஜராஜ உடையார் கல்வெட்டில் திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும் இரண்டாம் ராஜாதிராஜ உடையார் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் என்றும் தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் உள்ளது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயர் உடையார் இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும் பெயர் கல்வெட்டில் குறிப்படப்பட்டுள்ளது. சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 224 டி.இடையாறு

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 224 டி.இடையாறு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 224 வது தேவாரத்தலம் டி.இடையாறு. புராணபெயர் திருஇடையாறு, திருவிடையாறு. மூலவர் இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருந்தீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர். இங்கு இறைவன் மேற்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது படுகிறது. அம்பாள் ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி. தலமரம் மருதமரம். தீர்த்தம் சிற்றிடை தீர்த்தம். இது அம்மன் சன்னதியில் கிணறாக உள்ளது. மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத சண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சண்முக சுப்பிரமணியர் பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். இத்தலத்தில் சிவ பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.

அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மறைஞானசம்பந்தரின் அவதாரத்தலம் இது. இடையாறில் பிறந்த இவர் பெண்ணாடத்தில் வாழ்ந்தார். இவரை மருதமறை ஞானசம்பந்தர் என்றும் கடந்தை மறைஞான சம்பந்தர் என்றும் போற்றுவர். கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணைநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இடையாற்றில் எம்மை பூஜித்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். இக்கோவில் 8ம் நூற்றாண்டு கோவிலானாலும் கி.பி. 1471இல் ஒரிசா மன்னனால் அழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்ம அரசரால் மீண்டும் கட்டப்பட்டது என கல்வெட்டில் செய்திகள் உள்ளது. இக்கோவில் கல்வெட்டுகளில் இறைவன் உடைய நாயனார் எனவும் இவ்வூரை இராஜராஜவள நாட்டு திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இறையாறு என்று குறிக்கப்பட்டுள்ளது. சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். சுந்தரர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளார். 39 திருத்தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார். சுந்தரர், திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளார் பாடல்கள் பாடியுள்ளார்கள்.