பகவத் கீதை முன்னுரை

பகவத் கீதை என்னும் ஞான அமுதத்தை தேரோட்டும் சாரதியாக வந்த கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசித்ததின் வழியாக இந்த உலகத்திற்கு வழங்கினார். மகாபாரதம் என்னும் இதிகாசத்தின் ஒரு பகுதி பகவத் கீதையாகும். கீதையை படிப்பவர்களும் அதன் உபதேசங்களைக் கேட்பவர்களும் தன்னை அர்ஜுனனாகவே உணர்ந்து கிருஷ்ணரை சரணடைந்து படிக்கும் போதும் கேட்கும் போதும் கீதையில் வரும் செய்திகள் புரிந்து கொள்ள முடியாத வார்த்தைகளாகவும் பொருளாகவும் இருந்தால் கிருஷ்ணரே அர்ஜூனனுக்கு உபதேசம் செய்து அவனுக்கு ஞானத்தை அருளி புரிய வைத்தது போல் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் கிருஷ்ணரே கற்பக விருட்சமாக வந்து ஞானத்தை அருளி அதனுடைய பொருளை புரிந்துகொள்ள வைப்பார்.

மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் யாருடன் சண்டையிடப் போகிறோம் என்பதை தெரிந்தகொள்ள விரும்பிய அர்ஜூனன் எதிரணியை சென்று பார்வையிட்டான். எதிரணியில் இருப்பவர்கள் அனைவரும் தன்னுடைய குரு ஆசிரியர் உறவினர்கள் நண்பர்கள் இருந்தார்கள். இதனால் பாசத்திற்கு கட்டுப்பட்ட அர்ஜூனன் போரிட மறுத்தார். இதைக் கண்ட கிருஷ்ணர் தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவு முறைகளை பார்த்து பாசத்திற்கு கட்டுப்படக்கூடாது என்று விளக்கினார். அவரது விளக்கத்தில் தத்துவங்கள் யோகங்கள் போன்ற பலவற்றை பற்றியும் விளக்கியுள்ளார். பாசத்திற்கு கட்டுப்பட்ட அர்ஜுனன் கேட்ட கேள்வியும் அதற்கு கிருஷ்ணர் கொடுத்த பதில்களும் பகவத் கீதையாகும். இதில் கர்மயோகம் பக்தியோகம் ஞானயோகம் என மூன்று விதமான யோகத்தை அர்ஜூனனுக்கு விவரித்து அருளியிருக்கிறார். யுத்தம் ஆரம்பிக்க இரண்டு தரப்புகளில் இருந்தும் சங்கு நாதம் செய்தால் மட்டுமே யுத்தம் ஆரம்பிக்கும் என்ற யுத்த தர்மப்படி பாண்டவர்களின் பக்கம் இருந்து சங்கு நாதம் செய்வதற்கு முன்பாக இந்த பகவத் கீதை அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்தார். கிருஷ்ணரின் உபதேசத்தைக் கேட்ட பின் அர்ஜூனன் யுத்தத்திற்கு தாயாரானான். அதன் பின்பாகவே பாண்டவர்களின் பக்கம் இருந்து சங்கு நாதம் செய்து நாங்களும் யுத்தத்திற்கு தயார் என்று அறிவிக்கப்பட்ட பின்பு யுத்தம் துவக்கப்பட்டது.

பகவத் கீதை18 அத்தியாயங்கள் கொண்டதாக உள்ளது. பகவத்கீதையில் புரிந்து கொள்ளக் கடினமான பகுதிகளும் உண்டு. மிக எளிதாக உதாரணங்களுடன் விளக்கப்படும் பகுதிகளும் உண்டு. பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் ராமானுஜர் மத்வர் போன்ற மகான்கள் வடமொழியில் உரை எழுதியுள்ளனர். இவர்களின் பின்னால் வந்த நிம்பர்க்கர் வல்லபர் ஞானேசுவரர் போன்றவர்கள் விளக்கங்கள் எழுதியுள்ளனர். இவர்களின் பின்னால் வந்த இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவாமி சின்மயானந்தா பக்திவேதாந்த சுவாமி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சுவாமி சிவானந்தர் சுவாமி அரவிந்தர் மகாத்மா காந்தி வினோபா பாவே அன்னி பெசண்ட் அம்மையார் சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களும் மேலும் சிலரும் உரைகளை எழுதியிருக்கின்றனர். பாரதியார் சமஸ்க்ருதத்தில் புலமை மிக்கவர். பகவத்கீதையின் சுலோகங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை சுருக்கமாக விளக்க உரை எழுதி உள்ளார்.

உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பகவத்கீதை ஆங்கிலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. அம்மொழி பெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்தார். அதில் அவர் இங்கிலாந்து பின் வரும் காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டு வந்தால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும் என்று குறிப்பிட்டிருந்தார். பகவத் கீதையின் ரஷ்ய மொழி பெயர்ப்பு 1788 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் வெளியிடப்பட்டது.

பகவத்கீதையை முழுவதும் படித்து உணர்ந்து அதில் சொல்லும் தர்மத்தை கடைபிடிப்பவன் தனது பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று பிறவி இல்லாத நிலையை அடைவான்.