சக்தி பீடம் 20. அபிராமி திருக்கடையூர்

சக்தி பீடத்தில் 20 ஆவது கோயில் திருக்கடையூர் அபிராமி கோயிலாகும். இவ்வூரின் புராண பெயர்கள் திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம். திருமால் முதலிய தேவர்கள் தூய்மையான இடத்தில் அமிர்தத்தை உண்ண வேண்டுமென்று அமிர்த குடத்தை இங்குக் கொண்டு வந்து வைத்தமையால் இத்தலம் கடபுரி அல்லது கடவூர் என்று பெயர் பெற்றது. இக்கோயில் கால சக்தி பீடமாகும். இக்கோயில் தமிழ் நாட்டில் திருக்கடையூரில் அமைந்துள்ளது. இங்கு மூல தெய்வமாக அபிராமியம்மன் அருளுகின்றாள். இவளுக்கு அபிராமி தேவி, அபிராமசுந்தாி, அபிராமநாயகி, அபிராமவல்லி, அபிநயசரசநாயகி, அபிநயசுந்தாி, அமுதகடேஸ்வாி, அமுதநாயகி, அமுதாதேவி, அழகியமுலைநாயகி இடையழகுசுந்தாி, அஞ்சுகமொழியாள், ரத்னதொடுடையாள், ரத்னாம்பிகை, சுகுந்தகுளாம்பிகை, சுகந்தினாவதி, சுகம்தந்தநாயகி, சுகுணாம்பிகை, சந்திரஜோதி, சந்திரஆா்த்தி, சந்திரசேகாி, ஞானசோரூபினி, கனிமொழியாள் என பல பெயர்கள் உள்ளது. தல விருட்சம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் என்ற ஜாதிமுல்லை. தீர்த்தம் அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை, மார்க்கண்டேய தீர்த்தம், கால தீர்த்தம். பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் குகாம்பிகையாக அருள் பாலிக்கிறாள்.

இந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும் குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்கம். இளமை முதல் அபிராமி அம்பாளின் மேல் தனிப்பற்றும் பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தம் உள்ளத்தில் அன்னையிடம் தோன்றும் அன்பின் விளைவாக பல பாடல்களைத் தாமே இயற்றிப் பாடி வந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை கிரியை என்பவற்றைக் கடந்து யோக நிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று சஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளி மயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும் அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் பைத்தியமாய் ஆகி போய்விட்டார் என்று சொல்லித் திட்ட ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமல் அபிராமியைத் துதிப்பதும் பாடல்கள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர்.

தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வது அவரது தந்தையான அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும். அக்காலத்தில் தஞ்சையைத் தலை நகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக் கடனை நிறைவு செய்தபின் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்ய என்று திருக்கடவூரை அடைந்தார். திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சன்னதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும் தொழுவதும் கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேரானந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு ஆனந்தத்தில் இருந்தார். மன்னர் வந்திருப்பதும் அறியாமல் மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும் சிரித்துக் கொள்ளுவதும் அழுவதுமாய் இருக்கிறாரே என எண்ணி மன்னர் இவர் யாரெனக் கேட்டதும் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம் இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது? என்று கேட்டார். அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் சஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ ஆஹா இன்று பெளர்ணமி அல்லவோ? என்று சொல்லிவிட்டார்.

அபிராமி பட்டரைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். மன்னர் சரியாக கூறாத பட்டருக்கு அன்றிரவு பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும் இல்லாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னார். அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும் உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அபிராமி சன்னதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீ மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன் என்று சபதம் செய்து விட்டு அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உதிக்கின்ற செங்கதிர் என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே
.

என்ற பாடலை பாடிய உடன் ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வான வீதியில் விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள். அம்பிகை அருள் பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு தம் அனுபூதி நிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970 களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அனுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை. இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அபிராமி அந்தாதி என்றப்பெயரில் வந்தன. அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு. ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப் பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப் பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் முதல் வரி உதிக்கின்ற என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது. அபிராமி பட்டர் இயற்றிய வேறு நூல் அபிராமி அம்மைப் பதிகம்.

அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும் போது வெளியில் மின் விளக்கினை எரியச் செய்கிறார்கள்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 47 வது தேவாரத்தலம் இத்தலம் ஆகும். மூலவர் அமிர்தகடேஸ்வரர் வேறு பெயர் அமிர்தலிங்கேசுவரர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். உற்சவர் காலசம்காரமூா்த்தி.

ஒருசமயம் பிரம்மதேவர் ஞான உபதேசம் பெறும் எண்ணத்தோடு கயிலாய மலை சென்றார். சிவபெருமானும் பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி அவரிடம் வில்வ விதைகளை அளித்தார். பூவுலகில் எந்த இடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) வில்வ மரம் வளர்கிறதோ அந்த இடத்தில் ஞான உபதேசம் அளிப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி பிரம்ம தேவர் விதைத்த வில்வ விதை இத்தலத்தில் 24 நிமிடத்தில் மரமாக வளர்ந்தது. இங்கு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமானும் அவருக்கு அருட்காட்சி அளித்து ஞான உபதேசம் செய்து வைத்தார். கோயிலில் மூல மூர்த்தியாக சிவனே ஆதி வில்வநாதராக தனிசன்னநிதியில் அருள்பாலிக்கிறார். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் கிடைக்கப் பெற்ற தேவர்கள் மகிழ்ச்சியில் விநாயகப் பெருமானை தரிசிக்காமல் சென்றனர். இதில் கோபமடைந்த விநாயகர் அந்த அமிர்தக் கலசத்தை மறைத்து வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அவரிடம் இருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்று சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்தக் கலசம் இருந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. அப்படி அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த அமிர்தத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும் முன் சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.

திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள் அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின் புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். அட்டவீரட்ட தலங்களில் இத்தலம் எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். முருகப் பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப் பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும். இந்த வினாயகர் துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார். இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம் கம்பீரம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரக பூஜைகள் இங்கு கால சம்கார மூர்த்திக்கே செய்யப்படுகிறது.

திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது 50 ஆம் திருமண விழா பூஜையும் 59 வயது பூர்த்தியாகி 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும் 60 வயது பூர்த்தியாகி 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜையும் 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜையும் 80 வயது பூர்த்தியாகி 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் 90 வயது பூர்த்தியாகி 91 வயது தொடங்குகிறவர்கள் கனகாபிஷேகம் பூஜையும் 100 வயது தொடங்குகிறவர்கள் பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் இக்கோயிலில் செய்யப்படுகிறது. இந்த பூஜைகள் செய்பவர்கள் திதி நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. இந்த பூஜைகளை செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு வருகிறார்கள். மேலும் ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பூஜைகள் செய்யப்படுகிறது.

கௌசிக முனிவரின் மகனான மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது.

மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்ன காரணம் என்றுக் கேட்டான். பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாக கூறி காசி சென்றார். அங்கு மணிகர்ணிகை அருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்க வரமளித்தார். பின் ஊர் திரும்பிய மார்க்கண்டேயன் அங்கும் தனது வழிபாட்டைத் தொடர்ந்து மகாமிருத்யுஞ்சய மந்திரத்தையும் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது 16 வது வயது ஆயுள் முடிவடையும் சமயத்தில் மார்க்கண்டேயன் திருக்கடவூர் சிவன் கோயிலுக்கு வந்து அங்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்தான் எமதூதன். மார்க்கண்டேயரின் பூஜை பலனால் எமதூதனால் அருகே நெருங்கக் கூட முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும் எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான். ஆனால் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை. முடிவாக எமனே வந்தார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை உறுதியுடன் தழுவிக் கொண்டான். ஆனாலும் எமன் மார்க்கண்டேயனை இழுக்க மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. உடனே சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார். மார்க்கண்டேயனை நித்ய சிரஞ்சீவியார்க்கி என்றும் பதினாறு என்று வரமளித்தார்.

எமன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை. தேவி ஈசனிடம் முறையிட கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும் திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன் ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும் மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். காலசம்ஹார மூர்த்தியை தரிசிக்கும் போது எமனை பார்க்க முடியாது. பூஜை செய்யும் போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி கையில் சூலத்துடன் காட்சி தருவதை சம்ஹார கோலம் ஆகும். எமனுடன் இருப்பது உயிர்ப்பித்த அனுக்கிர மூர்த்தி கோலம் ஆகும். ஆக பீடம் திறக்கும் போது ஒரே சமயத்தில் சம்ஹார மற்றும் அனுக்கிர மூர்த்தியை தரிசிக்கலாம். இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை சிறுமி வடிவில் இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.

மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக தினமும் காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன் திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்த போது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்தது. பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக் கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது. இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.
அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் தற்போதும் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும் போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின் போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச் சென்ற பாதாள குகை இருக்கிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வது தலமாகும்.

திருக்கடையூரில் இருந்து தென்மேற்கே சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள திருமணல்மேட்டில் மார்க்கண்டேயருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு மூல சன்னதியில் மார்க்கண்டேயர் சிலை உள்ளது. அந்த இடத்தில் மார்க்கண்டேயரின் பெற்றோர் மகன் பிறக்க வேண்டி கடவுளை வழிபட்ட கோவிலும் உள்ளது.

கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ மன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜதேவன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும் பாண்டிய மன்னர்களில் மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி, எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவன், கோனேரின்மை கொண்டான், பெருமாள் சுந்தரபாண்டியன் என்போர் காலங்களிலும்; விஜயநகரவேந்தர்களில் கிருஷ்ணதேவமகாராயர், வீரவிருப்பண்ண உடையார் என்போர் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கல்வெட்டுக்களில் இறைவனது பெயர்கள் திருவீரட்டானத்துப் பெருமானடிகள், திருவீரட்டானமுடைய பரமசுவாமி, காலகாலதேவர் என்னும் பெயர்கள் கூறப்பட்டுள்ளது. இந்த மன்னர்கள் கோயிலுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதற்கு திருக்கடையூர் ரகசியம் என்று பெயர். இக்கோயிலை தற்போது தரும்புரம் ஆதினம் நிர்வாகித்து வருகிறார்கள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும் குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டரும் இங்குதான் அவதரித்தார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார். பிரம்மன் அகத்தியர் புலஸ்தியர் வாசுகி துர்க்கை பூமாதேவி முதலியோர் வழிபட்ட தலம் இது. இத்தலத்து முருகனை அருணகிரியார் தனது திருப்புகழ் பாடியிருக்கிறார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

சக்தி பீடம் 18. காமாக்யா – கவுகாத்தி

சக்தி பீடத்தில் 18 ஆவது கோயில் கவுகாத்தி நகரில் உள்ள காமாக்யா கோயிலாகும். இக்கோயில் இந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மன்மதனை (காமன்) சிவபெருமான் எரித்த இடமாதலாலும் காமன் தனது சுயரூபம் பெற்ற பிறகு விஸ்வகர்மாவைக் கொண்டு கட்டிய கோயில் என்பதாலும் இந்த இடம் காமரூப் எனவும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யா தேவியின் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூல தெய்வமாக காமாக்யா அருள் பாலிக்கிறாள். இவ்வாலயத்தில் சுயம்புவாக அமைந்த யோனி வடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது. காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இக்கோயில் காமகிரி சக்தி பீடமாகும். 51 சக்தி பீடங்களில் சதிதேவியின் யோனி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த கோவிலில் தேவியின் சிலை இல்லை. இங்கே மூலஸ்தானத்தில் ஒரு யோனி வடிவத்தில் உருவான ஒரு தட்டையான பாறை மட்டுமே வணங்கப்படுகிறது. மிகவும் இருண்ட கர்ப்பகிரஹத்தில் தானாக மேலெழும்பும் நீரூற்று வடிவத்தில் அம்பாள் உக்ர தேவதையாக அருள் பாலிக்கிறாள். வருடத்தில் ஒரு முறை நடைபெறும் அம்புபச்சி மேளா திருவிழாவின் போது மட்டும் இந்த நீருற்று சிவப்பு நிறத்தில் வெளியேறுகிறது. கோயில் தீர்த்தம் பிரம்மபுத்திரா.

கோயில் அமைப்பு வித்தியாசமான கூம்பு கோபுர அமைப்பும் கலசமும் வெளிர் மஞ்சள் வண்ணத்தில் உள்ளது. கோவிலின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால் மட்டுமே கோயில் போல தோன்றும். உள்ளே சென்றால் பத்து படிக்கட்டுகள் கீழே இறங்க வேண்டும். உள்ளே இருண்ட பாதாள குகை போன்று இருக்கும். உள்ளே சென்றால் கருவறையில் சிறிய மலைப்பாறை போன்று ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேரு என்று பெயர். மேடையைச் சுற்றிலும் தண்ணீர் வலமாக போய்க் கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில் யோனிபீடம் அமைந்துள்ளது. காமாக்யாவின் யோனி பீடத்தின் அருகே ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டும் சிறு வெளிச்சத்தில் எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் காமாக்யாவுக்கு பூஜை நடத்தப்படுகிறது. அந்த விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவை தரிசிக்கலாம். அங்கிருந்து வரும் நீரூற்றின் நீர் பக்தர்களுக்கு தீர்த்தமாகப் வழங்கப்படுகிறது. அங்குள்ள பூஜாரி பக்தர்களின் கையைப் பிடித்து பீடத்தின் மீது வைத்து தேவியை வணங்கச் சொல்கிறார். தலை மேடைமீது படும்படி பக்தர்கள் வணங்குகின்றனர். மேடையின் கீழ் ஓடும் தண்ணீரை சவுபாக்யகுண்ட் என்று அழைக்கிறார்கள். குகையிலிருந்து வெளியேறும் போது உலோகத்தால் செய்யப்பட்ட காமேஸ்வர காமேஸ்வரி சிலைகள் எட்டுவித அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.

தச மஹா வித்யாக்கள் எனப்படும் பத்து தேவியரான திரிபுரசுந்தரி மாதங்கி மற்றும் கமலா ஆகிய மூன்று தெய்வங்களின் சிலைகள் கோயிலின் உள்ளே தனி சன்னதியிலும் மீதி ஏழு தெய்வங்களான காளி, தாரா, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி ஆகியோருக்கு கோயிலுக்கு வெளியே தனித்தனி கோயில்களில் சிலைகள் உள்ளது. கோயில் வளாகத்தில் காமேஸ்வரர் (உமானந்தா), சித்தேஸ்வரர், அம்ரடோகேஸ்வரர் (ஹெருகா), அக்ப்ரா மற்றும் கோட்டிலிங்கம் (தத்புருஷா) என்ற பெயருடைய ஐந்து சிவன் கோவில்கள் உள்ளன. கோயிலின் அருகே மூன்று விஷ்ணுவின் கோவில்களும் உள்ளன. அருகிலுள்ள ஹஸ்தகிரி என்ற இடத்தில் சுக்ராச்சாரியார் வழிபட்ட சுக்ரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நரகாசுரனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனுக்கு அஷ்வகிரந்தா என்ற இடத்தில் கோயில் இருக்கிறது. மேலும் நவக்கிரகங்களுக்கென தனி ஆலயமும் சூரியனுக்கு மட்டும் தனியாக ஒரு கோயிலும் உள்ளன. இத்தலத்தின் மறுகரையில் மயில் மலை அல்லது பஸ்மாசல மலை எனப்படும் சிறிய குன்று இருக்கிறது. இங்கு தான் சிவனின் தவத்தைக் கலைத்த மன்மதனை எரித்த காமதகனம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் உமானந்த சிவா கோயில் ஒன்றும் இருக்கிறது. அருகில் அனுமன் கோயில் இருக்கிறது. பைரவருக்கும் சனி சன்னதி இருக்கிறது. புராணங்களில் இந்த இடம் நரகாசுரனால் ஆளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலிவாயில், சிங்கவாயில் என்ற நான்கு நுழைவு வாயில்களை நரகாசுரன் அமைத்திருந்தான் என்ற வரலாறு உள்ளது.

பூமியை இரண்யாட்சகன் அபகரித்துச் சென்று பாதாளத்தில் ஒளித்து வைத்த போது மகாவிஷ்ணு ஸ்வேத வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை மீட்டு வந்தார். அந்த வராக வடிவத்திலேயே பூதேவியை மணந்து இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது அவர்களுக்குப் பிறந்த மகனே நரகாசுரன். மகாவிஷ்ணு நரகாசுரனை பிரக்ஜோதிஷபுரத்துக்கு அரசனாக்கி வைகுந்தம் புறப்பட்டார். அப்போது அவர் பூமாதேவியிடம் இவன் உலகத்துக்கு மிகவும் கெடுதல்கள் புரிவான். அதனால் கொல்லவும் படுவான் என்று எச்சரித்தார். அப்போது நரகாசுரன் தன் தாயின் கைகளால்தான் தனக்கு மரணம் என்னும் வரத்தை கேட்டு பெற்றான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்து வைகுந்தம் சேர்ந்தார். பல வரங்களைப் பெற்று வலிமையுடன் இருந்த நரகாசுரன் அனைத்துலகையும் அடிமைப்படுத்தி பல்வேறு கொடுமைகள் புரிந்து வந்தான். சக்தி தேவியின் மாயா வடிவமான காமாக்யா தேவியை வழிபட்டு மேலும் பல வரங்களைப் பெற்றான் நரகாசுரன். இந்த நிலையில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதாரம் எடுத்திருந்தார். அப்போது தேவர்கள் நரகாசுரனை அழிக்குமாறு கிருஷ்ணரை வேண்ட அவரும் மனைவி சத்யபாமாவுடன் போருக்குப் புறப்பட்டார். கடும் போர் நடந்த நிலையில் வரத்தின் காரணமாக கிருஷ்ண பகவானால் கொல்ல முடியவில்லை. அப்போது நரகாசுரன் கிருஷ்ணரை கண்டு சிரிக்க கோபம் கொண்ட சத்யபாமா வில்லை தன் கையில் எடுத்தாள். கிருஷ்ணர் அஸ்திரத்தைத் தர நரகாசுரன் தன் மகன்தான் என்பதை அறியாத பூமாதேவியின் அம்சமான சத்யபாமா அம்பை எய்தாள். நரகாசுரன் மடிந்தான். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்த பகுதி இதுதான் என்று சொல்லப்படுகிறது.

தந்திர சூடாமணி போன்ற பல தந்திர நூல்களும் இக்கோவிலை சக்தி பீடங்களில் மிக உயர்ந்த பீடமாகச் சொல்கின்றன. மேலும் காளிகா புராணம் கூறும் மிக முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோவில் பற்றிய தகவல்கள் வேத வியாசரின் தேவி பாகவத புராணத்திலும் உள்ளது. அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரத்தில் தேவிக்கு 18 மகா சக்தி பீடங்கள் உள்ளதாகக் கூறுகிறது. அதிலும் காமாக்யா கோவில் இடம் பெறுகிறது. இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில் சக்தி வழிபாட்டு முறையில்தான் அதிக அளவில் மந்திர தந்திரங்கள் கையாளப் படுகின்றன. அவ்வகை வழிபாட்டுக்கு என்று சிறப்பான ஆலயங்களும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது காமாக்யா தேவி கோவில் ஆகும்.

அம்புபச்சி மேளா என்ற பண்டிகை கோயிலின் புனித பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. அம்பு என்றால் தண்ணீர் பச்சி என்றால் மலர்ச்சி என்று பொருள். ஜூன் மாதத்தில் இத்திருவிழா ஆஷாத் என்று வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். காமாக்யா கோயிலின் கதவுகள் இந்த மூன்று நாட்களிலும் மூடப்படும். மேலும் நீலாஞ்சல் மலைப் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களும் மூன்று நாட்களும் மூடப்படுகின்றன. இந்த மூன்று நாளும் பக்தர்கள் கோயிலை சுற்றி தங்கி வழிபாடு நடத்துகிறார்கள். இந்த நேரத்தில் கோயிலின் தீர்த்தமான பிரம்மபுத்திரா சிவப்பு நிறமாக மாறுகிறது. காமாக்யா கோவிலுக்குள் மூலஸ்தானத்தில் உள்ள இடத்தை தினமும் குளிப்பாட்டி கோவிலின் பூசாரிகளால் சிகப்பு நிற துணிகள் ஆடைகள்ளாக அணிவிக்கப்படும். இந்த துணிகள் நான்காம் நாள் கோயில் திறக்கப்படும் போது அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கப்படும். இந்த நிகழ்வு 5000 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு தாந்திரீக முறையில் செய்யப்படுகிறது. இந்த திருவிழாவின் போது தற்போது 1 லட்சம் பக்தர்கள் வரை வந்து வழிபட்டு செல்கிறார்கள். இந்த திருவிழா சமயத்தில் இரண்டு வாரங்கள் இந்த மலைகள் உயிர் பெற்று விழித்திருந்து இறைவியிடமிருந்து சக்தியை பெற்று அனைவருக்கும் சக்தியை கொடுக்கின்றன. ஆகவை இந்த மூன்று நாட்களும் இறைவனை அடைய தாந்திரீக முறையில் பூஜை செய்பவர்கள் இங்கு வந்து தங்கி வழிபட்டு செல்வார்கள். துர்க்கா பூஜை மற்றும் மானஷா பூஜை ஆகிய திருவிழாக்களும் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப் படுகின்றன.

பத்தாம் நூற்றாண்டில் அஸ்ஸாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்ட காமாக்யா கோவில் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. தற்போதுள்ள கோயிலை கூச் பீகாரின் அரசர் நர நாராயணா என்பவர் கிபி1565 இல் மீண்டும் கட்டினார். 1665 இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயில் உள்ள மலை மீது செல்ல 600 படிகள் உள்ளது. சாலை வழியாக செல்ல மலைப்பாதையில் உள்ள சாலையில் 3 கிமீ பயணித்து கோவிலை அடையலாம். மகாபாரதத்தின் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வத்தில் இங்கு பாண்டவர்கள் தேவியை வழிபட்டிருக்கிறார்கள் என்ற குறிப்பு உள்ளது. காமாக்யாவை அர்ஜுனனும் யுதிஷ்ட்ரரும் பிரார்த்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆமைகள் குரங்குகள் மற்றும் ஏராளமான புறாக்கள் கோயிலைச் சுற்றி வசிக்கின்றன. இவற்றிற்கு பக்தர்கள் உதவியுடன் கோயில் சார்பில் உணவுகள் வழங்கப்படுகிறது.

சக்தி பீடம் 17. ஞானாம்பிகை – காளஹஸ்தி

சக்தி பீடம் 17. ஞானாம்பிகை – காளஹஸ்தி

சக்தி பீடத்தில் 17 ஆவது கோயில் காளஹஸ்தி ஞானாம்பிகை கோயிலாகும். இக்கோயில் ஆந்திராவில் அமைந்துள்ளது. புராண பெயர் சீகாளத்தி ஆகும். இக்கோயில் ஞான சக்தி பீடமாகும். 51 சக்தி பீடங்களில் எந்த உடல் பகுதி விழுந்தது என அறியப்படவில்லை. இங்கு மூல தெய்வமாக ஞானாம்பிகை அருள் பாலிக்கிறாள். இவள் ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறாள். அம்பாளின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது. அம்பாளின் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மேரு உள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சக்தி வாய்ந்த எந்திரம் இருக்கிறது. தலவிருட்சம் அலரி. தீர்த்தம் பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு. தலமரம் மகிழம். இக்கோயில் கயிலாய மலையின் ஒரு பகுதியாக இக்கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை. காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது. நாள்தோறும் நான்கு கால பூஜைகளே நடக்கின்றன. அர்த்தசாமப் பூஜை இல்லை. ஆகையால் சாயரட்சை பூஜையுடன் முடித்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாளை பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து விடுகிறார்கள்.

இறைவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள் தண்ணீர் வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது. தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது. இதே போன்று சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம் பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது. ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான் அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன். புராண பெயரான சீகாளத்தில் என்ற சொல்லில் சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம் அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும் அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப்பெயர் பெற்றது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இத்தலம் 252 வது தலம் ஆகும். மூலவர் காளத்தீசுவரர், காளத்தியப்பர், காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வாயு (காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக் கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும் நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும் மேற்புறத்தின் உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். மூலவர் தீண்டாத் சிவலிங்கத் திருமேனி ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மீது உள்ள தங்கக் கவசம் பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது சார்த்தும் போதும் எடுக்கும் போதும் கூட சுவாமியை இங்கு உள்ள குருக்கள் தீண்டுவது இல்லை. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகிறது. இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர்.

கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளையில் நந்தியுமாக இரு நந்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும் 60 அடி உயரமுடைய ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கிருஷ்ணதேவராயர் அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் ஆகியோர் பிரதிஷ்டை செய்த பல சிவலிங்கங்களும் ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பெரிய ஸ்படிகலிங்கமும் உள்ளது.

கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர். இங்கு பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளியுள்ளார். சிவபெருமான் மீது பெரும்பிரியம் கொண்டிருந்த வேடனான கண்ணப்பன் என்பவர் தினமும் தான் வேட்டையாடிய விலங்குகளையே இங்கே காளத்தீசுவரருக்கு படைத்து வழிபட்டு வந்திருக்கிறார். எம்பெருமானுக்கு புலால் படைக்கப்படுவது கண்டு கோபம் கொண்ட காளஹச்தீஸ்வரருக்கு பூசை செய்து வழிபடும் சிவ கோசரியார் என்ற அந்தணர் சிவபெருமானிடம் வேண்டி முறையிடுகிறார். சிவ கோசரியார் கனவில் தோன்றிய சிவபெருமான் கண்ணப்பன் என்மீது கொண்ட அதீத பக்தியின் வெளிப்பாடாகவே தனக்குத் தெரிந்த வகையில் எனக்கு சேவை செய்கிறான். என் மீது கொண்ட அவனது பக்தியை உமக்கு உணர்த்துகிறேன் என்று சொல்லி மறைகிறார். அடுத்த நாள் கண்ணப்பன் சிவனுக்கு பூசை செய்வதை சிவ கோசரியார் மறைந்திருந்து காண்கிறார். அப்போது லிங்கத்தின் கண்ணில் இருந்து ரத்தம் வடிகிறது சற்றும் யோசிக்காத கண்ணப்பன் அம்பு கொண்டு தன்னுடைய ஒரு கண்ணை தோண்டியெடுத்து லிங்கத்தின் கண் மேல் வைக்கிறார். ஒரு கண்ணில் ரத்தம் நின்று கொஞ்ச நேரத்தில் லிங்கத்தின் மறு கண்ணிலும் ரத்தம் வரவே சற்றும் யோசிக்காத கண்ணப்பன் ரத்தம் வரும் இடத்தை அடையாளம் காண தன் ஒரு காலை லிங்கத்தில் ரத்தம் வரும் இடத்தில் வைத்தபடியே அம்பினால் தன்னுடைய மற்றொரு கண்ணையும் எடுக்க எத்தனித்த நேரத்தில் சிவபெருமான் தோன்றி நில் கண்ணப்பா என்று கூறி தடுத்தி நிறுத்தி அவருக்கு முக்தி வழங்கினார். இந்த நிகழ்வு நடந்த இடம் தான் இப்போதிருக்கும் காளத்தீசுவரர் கோயில்.

திருமஞ்சனக் கோபுரம் எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால் நேரே பொன்முகலி ஆறு தெரியும். ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியே தான் திண்ணனார் என்ற கண்ணப்பர் நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார். கண்ணப்பரின் பக்தியை ஆதிசங்கரர் தனது சிவானந்தலஹரியில் பாடியுள்ளார். கண்ணப்பர் தனது வாயில் நீர் கொண்டு வந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு விபூதி வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன.

சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார். இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது. அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார். இன்றும் பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. பாதாள விநாயகர் சந்நிதி விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார். விநாயகர் அமர்ந்துள்ள இடம் பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளது.  இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம்.

முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான் வாயுதேவனே நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன். போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும் அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்று தான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.

சண்டேசுவரர் சந்நிதியில் மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது. முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர். அவ்வாறு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் ஓரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வைத்து அவ்விடத்தை மூடிவிட வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி உடைத்துப் பார்த்து ஒன்றும் கிடைக்காமையால் திரும்பி விட பின்பு சில காலம் கழித்து மூலவர் சன்னதி திறக்கப்பட்டது. நக்கீரர் இம்மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றார். நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி என்ற பாடல் பாடியுள்ளார்.

அர்ஜூனன் தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டு பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கி சென்றிருக்கிறார். தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் பிரவேசித்தால் முக்தி என தலபுராணம் கூறுகிறது. வீரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும், கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உள்ளது. வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.

ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் திகழும் காளிகோபுரம், நூற்றுக்கால் மண்டபம் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கிபி 1516 இல் கட்டப்பட்டது. கோயிலின் பிரதான வாயிலில் உள்ள பிக்ஷசாலா கோபுரமும் ஏனைய கோபுரங்களும் 12 ஆம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும். பிரதான தக்ஷிண கோபுரம் 11 ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டது. கண்ணப்பர் கோயிலும் கோவிலைச் சுற்றியுள்ள மண்டபமும், தாழ்வாரமும் ஆடல்வல்லான் கங்கைகொண்டானாகிய இருங்கோளன் புத்தங்கையாரால் கட்டப்பட்டது. உட்பிரகாரம் 5ஆம் நூற்றாண்டிலும் வெளிப்பிரகாரம் 12ஆம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டது. பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். சோழ விஜயநகர காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் தென்கயிலாயமுடையார் என்றும் திருக்காளத்தி உடைய நாயனார் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார். முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில் காளத்தி உடையான் மரக்கால் என்ற அளவு கருவி இருந்ததாக குறிப்பிடுகிறது. காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னரான இராஜராஜ சோழனின் மகன் இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் வழிபட்டுள்ளனர். இங்கு வந்து பாடிய திருஞானசம்பந்தர் இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் தலங்களைப் பாடி வழிபட்டார். திருநாவுக்கரசர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர் ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிட்டு பாடுகிறார். திருநாவுக்கரசர் காளத்தி வந்து வழிபட்டபோது வடகயிலை நினைவு வர கயிலைக் கோலம் காண எண்ணி யாத்திரையைத் தொடங்கினார். சுந்தரர் இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் தலங்களைப் பாடி வழிபட்டார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

சக்தி பீடம் 15. பிரம்மராம்பாள் – ஸ்ரீ சைலம்

ஸ்ரீ சைலம் சக்தி பீடத்தில் 15 ஆவது கோயில் பிரம்மராம்பாள் கோயிலாகும். இக்கோயில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சைலத்தில் அமைந்துள்ளது. புராண பெயர் திருப்பருப்பதம் ஸ்ரீபர்வதம் ஆகும். இக்கோயில் சைல சக்தி பீடமாகும். 51 சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த சக்தி பீடமாகும். வேறு நூல்களின் கருத்துப்படி மேல் உதடு விழுந்ததாக சொல்லப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் 18 மகா சக்தி பீடங்கள் உள்ளது. இக்கோயில் 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இக்கோயில் உள்ளது. அம்பாள் பிரம்மராம்பாள். இவளுக்கு பிரம்மராம்பிகை தேவி பருப்பநாயகி பிரமரம்பா என்ற வேறு பெயர்களும் உள்ளது. மூலவர் இறைவன் மல்லிகார்ஜூனர். இவரது சன்னதி கீழே இருக்க பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது. தீர்த்தம் பாலாநதி மற்றும் பாதாள கங்கை. தலமரம் மருத மரம் மற்றும் திரிபலா மரம். ஸ்ரீசைல மலையை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை என்கிறது தலபுராணம். இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என தல வரலாறு உள்ளது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் இத்தலமும் ஒன்றாகும். ஜோதிர்லிங்கமும் சக்தி பீடமும் ஒரே ஆலயத்தில் அமைந்திருப்பது போன்ற அமைப்பு இந்தியாவில் மூன்று கோயில்களில் மட்டுமே உள்ளது. அந்த மூன்று கோயிலில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் இறைவனை கிருதாயுகத்தில் இரணியனும் திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும் ஆதிசங்கரரும் பூஜைகள் செய்துள்ளனர்.

ஸ்ரீபர்வதம் ஸ்ரீநகரம் ஸ்ரீகிரி ஸ்ரீசைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த கோவில் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் ஆந்திரா கிருஷ்ண நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் இக்கோயில் மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலுக்குள் மல்லிகார்ஜுனன் சன்னதி பிரம்மராம்பாள் சன்னதி கிழக்கிலிருந்து மேற்கு பார்த்தபடி உள்ளது. விருத்த மல்லிகார்ஜுனர் சஹஸ்ர லிங்கேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர் வீரபத்ரர் உமா மகேஸ்வரர் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த ஐந்து லிங்கங்கள் நவபிரம்ம கோயில்கள் உள்ளது. நந்திமண்டபம் வீரசிரோமண்டபம் என்ற இரண்டு மண்டபங்கள் உள்ளது. இக்கோயிலானது 20 அடி உயரமும் 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதில் சுவரின் வெளிப்புறத்தில் நான்கு புறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்ஜூனனின் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விசுவரூபம், மகிஷாசுரமர்த்தினி போன்ற பல புடைப்புச் சிற்பங்களாக உள்ளது. கோயிலுக்கு நான்கு பக்கமும் கோபுரத்துடன் வாசல்கள் உள்ளது. பிரதான வாசல் கிழக்கு கோபுரம் ஆகும். ராமாயண காலத்தில் ராமர் இக்கோயிலில் சஹஸ்ர லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். மகாபாரத காலத்தில் பாண்டவ சகோதரர்கள் ஐந்து பேரும் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

ஸ்ரீசைலம் மலையில் மகாகாளர்கள் குகையும் அக்குகையில் அவர்கள் வணங்கிய காளியும் ஆதிசங்கரர் சிலையும் உள்ளன. ஸ்ரீசைலம் மலையிலிருந்து 2 கிமீ தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயில் உள்ளது. மஹாவிஷ்ணு விநாயகரின் உருவத்தில் அமர்ந்திருந்திருக்கிறார். இந்த கணபதி தன்னை காண வரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள் யார் இல்லாதவர்கள் என ஸ்ரீ சைலத்தில் உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால் இவருக்கு சாட்சி கணபதி என பெயர். புனித அதிர்வுகள் இந்த வினாயகர் சன்னதியில் இருக்கிறது. அதன் காரணமாக இந்த விநாயகர் இச்சா சித்தி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டு அந்த புனித அதிர்வுகளை உணர்ந்தால் விநாயகரிடம் பிரார்த்தனையில் கேட்ட அனைத்தும் நிறைவேறும்.

அருணாசுரன் என்ற ராட்சசன் காயத்ரி தேவியின் பெயரில் உபாசனை செய்தான். அவன் தவத்தில் மகிழ்ந்த காயத்ரி தேவி அவனுக்கு தரிசனம் கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டாள். காயத்திரியிடம் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற வரத்தை கேட்டான். அதற்கு காயத்ரி தேவி தன்னால் அத்தகைய வரத்தை கொடுக்க முடியாது என்றும் பிரம்ம தேவன் மட்டுமே அப்படிப்பட்ட வரத்தை கொடுக்க முடியும் என்றும் கூறினாள். ராட்சசன் உடனே பிரம்மனை நோக்கி கடும் தவம் இயற்ற தொடங்கினான். அவனின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மா அருணாசுரன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். யாராலும் தன்னை அழிக்க முடியாத வரத்தை கேட்டான். அதற்கு பிரம்மா இந்த வரமானது பிரபஞ்சத்தின் கொள்கைகளுக்கு எதிரானது அதனை கொடுக்க இயலாது. ஆகையால் அதற்குப் பதிலாக வேறொரு வரத்தை கேட்டுமாறு கூறினார். அருணாசுரன் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு 2 கால்கள் மற்றும் 4 கால்கள் கொண்ட உயிரினங்கள் எதனாலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்ற வரத்தை கேட்டான். பிரம்மா அவன் விரும்பிய வரத்தை கொடுத்தார். தன்னை அழியாதவனாகவும் யாராலும் தோற்கடிக்க முடியாதவனாகவும் கருதிய அருணாசுரன் தேவர்களையும் மக்களையும் துன்புறுத்த தொடங்கினான். தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சரணடைந்தார்கள். சிவன் பார்வதியை பார்க்க பார்வதி 6 கால்கள் கொண்ட ஆயிரம் தேனீக்களாக பிரமரம்பா சக்தி ரூபத்தில் பல தேனிக்களை வெளிப்படுத்தி (பிராமரி என்றால் தேனீக்களின் தாய் என்று பொருள்) அவதாரம் எடுத்து கொடூரமான அருணாசுரனைக் கொன்றாள். மகிழ்ச்சியான தேவர்கள் தேவியை பிரமராம்பாவின் வடிவத்தோடு இந்த உலகத்தில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீசைலம் சிவபெருமானுக்கு பிரியமானது என்பதால் பார்வதி தேவி ஸ்ரீசைலத்தை பிரமராம்பா தேவியாக இருந்து அனைவருக்கும் அருள் பாலிக்கிறாள்.

பிரமராம்பா தேவியின் தோற்றம் மற்றும் தெய்வீக வடிவத்தை ஸ்கந்த புராணமும் ஸ்ரீசைல காண்டமும் விவரிக்கின்றன. மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு பின்புறம் பிரமரம்பா தேவியின் வடிவம் உள்ளது. இந்த வடிவத்தில் எட்டு கரங்கள் உள்ளது. பிரமரம்பா கோவிலில் தற்போதும் உள்ள ஒரு சிறு துளை வழியாக தேனீயின் ரீங்கார சத்தம் கேட்கிறது. இக்கோயிலில் உள்ள தேனீக்கள் பக்தர்களை ஒருபோதும் துன்புறுத்தியதில்லை.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 268 வது தேவாரத்தலம் இக்கோயிலாகும். மூலவர் மல்லிகார்ச்சுனர் வேறு பெயர்கள் ஸ்ரீசைலநாதர் ஸ்ரீபர்ப்பதநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள் சந்திரரேகா என்ற இளவரசி. ஒரு நாள் அவள் கனவில் சிவன் தோன்றி தேனீயைத் பின் தொடர்ந்து செல்லவும் என்றார். அவள் கண் விழித்த போது ​​அவள் முன் ஒரு தேனீ இருந்தது. இளவரசி தேனீயைப் பின் தொடர்ந்து சென்றாள். தேனி அவளை ஸ்ரீசைலம் மலைக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த ஒரு மல்லிகைப் பூவில் குடியேறியது. அங்குள்ள இயற்கையில் லயித்த அவள் தன் தந்தையை விட்டு பிரிந்து இம்மலையில் வாழ ஆரம்பித்தாள். ஒரு நாள் மலைப் பகுதியில் இருக்கும் சிவலிங்கத்தைப் போன்ற பாறைகளின் மேல் ஒரு பசு தானாகவே பால் சொரிவதை கண்டாள். அன்று முதல் அந்த பாறைகள் அனைத்தும் சிவபெருமானே என்று அதனை வணங்கத் தொடங்கினாள். மலையில் உள்ள மல்லே என்றும் அழைக்கப்படும் மல்லிகை மலர்களாலும் அர்ஜுனா மலர்களாலும் தினமும் மாலை செய்து அணிவித்து இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இறைவனுக்கு மல்லிகார்ஜுனா என்ற பெயர் வந்தது. சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் இத்தலமும் ஒன்று.

நந்திதேவர் அவதரித்த தலம். நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம். சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால் மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது. கோயில் வாசலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக் குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள் நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி தந்தையே கலங்காதீர்கள் நான் சிவனைக் குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன் என்று தவம் இருந்தார். தவத்தில் மகிழ்ந்த சிவன் நந்தியை தன் வாகனமாக்கியதுடன் அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த நந்தியால் என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். அதன்படி பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்று பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். பர்வதமலை ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால் நந்தி அவதரித்த இந்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது.

கோயிலின் கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபம் உள்ளது. தெற்கு வாயில் கோபுரம் ரங்க மண்டபம் என அழைக்கப்படுகிறது. கிழக்குப் புறமுள்ள கோபுரம் கிருஷ்ண தேவராயராயரால் கட்டப்பட்டதால் அவர் பெயராலேயே கிருஷ்ணதேவராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. வடக்குப் புற கோபுரமானது சத்ரபதி சிவாஜியால் 1677 ல் கட்டப்பட்டதால் சிவாஜி கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேற்குப் புற கோபுரம் கோயில் நிர்வாகத்தால் 1966 இல் கட்டப்பட்டு பிரம்மானந்தராயா கோபுரம் என பெயரிடப்பட்டது. இவற்றின் மையத்தில் மல்லிகார்சுனர் கருவறை உள்ளது. கருவறை மீது உள்ள விமானமானது காக்கத்திய மன்னரான கணபதியின் சகோதரியான மைலம்மா தேவியால் கட்டப்பட்டது. கோயில் முகப்பில் சித்தி விநாயகர் உள்ளார். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில் ராஜராஜேஸ்வரி கோயில் அன்னபூரணி ஆலயம் சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில் பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் உள்ளது. அகஸ்தியரின் மனைவியான லோபாமுத்ராவின் சிலை தனிச்சன்னதியில் உள்ளது. இந்த சிலை முன்பாக ஒரு ஸ்ரீ யந்திரம் உள்ளது. இந்த சன்னதிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக் கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினார். மல்லிகார்ஜுனரையும் அன்னை பிரம்மராம்பாளையும் தரிசித்து 10 நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டான். தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்து விட எண்ணினான். அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் பிரம்மராம்பாதேவி சிவாஜிக்கு காட்சி தந்தருளி பெரிய வாள் அளித்து கடமை உணர்வை போதித்து பகைவரை அழித்து வெற்றி பெற வாழ்த்தினாள். வீர சிவாஜிக்கு பிரம்மராம்பிகை அளித்த வாள் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும் தியான மண்டபத்தையும் உருவாக்கினார். இந்த கோபுரம் சிவாஜி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்படுகிறார். சிவாஜியால் இத்தலம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது இங்குள்ள கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும் கங்கையில் 2000 முறை குளிப்பதாலும் நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும் காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சி புரிகிறார். வேதாந்திகள் பரமயோகிகள் சித்தர்கள் மகாதவசிகள் இருக்கும் இக்கோவிலுக்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள காடுகளில் ஹனுமந்தபீரம் என்ற வகை மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் இலையின் இரு பகுதிகளிலும் ஆஞ்சநேயர் உருவம் காணப்படுகிறது. பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப் பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குல குருவான ரேவணசித்தர் ஒரு நாரத்தம் பழத்தைக் கொடுத்து சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா எனப் பெயரிட்டனர். அச்சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றி தன் பெயர் மல்லையா என்றும் தான் மிகவும் பசியோடு இருப்பதாக கூறவே ஸித்தப்பா ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும் பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்ட போது அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி இவரே மல்லையா என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்த போது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது. பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினார். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தார். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் தான் வெட்டிய குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டது.

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம் அளித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு அவனது மண் பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விட்டார்கள். சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்க லிங்க மயமாகப் காட்சி கொடுத்து அஞ்சாதே உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக என்று அருளினார். வீட்டிற்குள் சென்ற கேசப்பா பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு இறைவனின் திருவருளை வியந்தவனாக அடியார்களுக்கு அன்னம் அளித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம் அடிகேச்வரம் என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன் ஒரு கயிற்றைக் கொடுத்து அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் அருகில் கயிற்றைக் கண்ட சிற்பி அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும் போது ஒரு நந்தி பாறைகளிடையே சிக்கவே திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம் அணைக்கட்டில் நீரின் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.

கிருஷ்ணர் அர்ஜூனனிடம் துரியோதனனின் சூழ்ச்சியைக் கூறி அவனுடன் போர் செய்ய வேண்டிய நிலை வரும். அவனை வெல்ல பாசுபதாஸ்திரம் வேண்டும் எனவே சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவரிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்று வரும்படியான அறிவுரையை கூறினார். கிருஷ்ணர் ஆலோசனைப்படி அர்ஜூனன் ஸ்ரீசைலம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் அர்ஜூனன் தபம் செய்யும் இடத்திற்கு வந்தார். அப்போது ஒரு அசுரன் பன்றி வடிவில் அர்ஜூனனைக் கொல்ல பயங்கரமாக உறுமிக் கொண்டு பாய்ந்து வந்தான். அர்ஜூனன் கண் விழித்து பன்றி மீது அம்பு விடவும் சிவபெருமானும் அதே சமயம் பன்றி மீது அம்பு விட்டார். இருவரும் பன்றியைக் கொன்றது யார் என்பது பற்றி சண்டை வந்து விட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டார். சிவபெருமானை வில்லால் அடிக்க அர்ஜூனன் வில் ஒடிந்தது. பின்பு சிவபெருமான் அர்ஜூனனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் எனக்கேட்டார். அர்ஜூனன் தான் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என சிவபெருமானைக் கேட்டுக் கொண்டு தமக்கு பாசுபதாஸ்திரம் வேண்டும் எனக் கேட்டான். அர்ஜூனன் தம்முடன் போர் செய்து வில்லாற்றில் மேன்மை பெறுவதற்காகவும் தனுர் வேதத்தை அர்ஜூனனுக்கு போதிப்பதற்காகவும் வேடனாக வந்ததாக சிவபெருமான் கூறினார். பின்பு பாசுபதாஸ்திரப் பயிற்சியையும் மந்திரத்தையும் உபதேசம் செய்து அருள் புரிந்தார். அர்ஜூனன் தவம் செய்த இடம் இங்கே உள்ளது. மலையில் படிக்கட்டுப்பக்கம் என்ற இடத்தில் வீரசங்கரர் ஆலயம் உள்ளது. அந்த வீரசங்கரர் தான் அர்ஜூனனுடன் வேடன் வடிவில் போர் செய்தவர்.

ஸ்ரீசைலத்தைப் பல நூல்கள் புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம் இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி ஆகியவை இத்தலத்தின் மகிமையைக் கூறும் நூல்களாகும். ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான சிகரத்தைத் தரிசித்தபடியே மல்லிகார்ஜுனரைத் தியானிப்பார்கள். தான் இருந்த இடத்திலிருந்தே ராமபிரான் மல்லிகார்ஜுனரைத் தரிசித்துள்ளார்.

இந்த கோயிலில் பூஜைகள் வீரசைவ காரணாகம விதிமுறைப்படி நட்சந்து வருகின்றது. தினமும் நடக்கும் நித்ய நைவேத்ய பூஜையின் போது விருத கக்பத்தின் அடிப்படையில் இங்கு அமைந்துள்ள மகா நந்திக்கு நைவேத்யம் கிடையாது. செவ்வாய் கிழமைகளிலும் பிரதோஷம் சிவராத்திரி தினத்தில் மட்டும் தான் இந்த மகா நந்திக்கு நீரில் ஊர வைத்த முக்கடலையை ஒரு மஞ்சள் துணியில் வைத்து அதை நந்தியின் வாயோடு கட்டி வைப்பது காலம் காலமாக நடந்து வருகின்ற முறையாகும். இதை அறியாத பலர் இந்த முக கவசம் அணிந்தது போன்ற படத்தை அறியாமையாலும் மூடத்தனத்தினாலும் பரப்பி கடவுளுக்கே கொரோனா வைரஸ் பிடிக்கிறதா என கேளி செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

வரலாற்று ஆய்வுகளின்படி ஸ்ரீசைலத்தின் வாழ்விட வரலாறு சுமார் 30000 முதல் 40000 ஆண்டுகளுக்கு முந்தையது. ஸ்ரீசைலத்தின் பல்வேறு இடங்களில் அந்தக் காலக் கற்காலக் கருவிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஸ்ரீசைலத்தின் வரலாறு தென்னிந்தியாவின் முதல் பேரரசைக் கட்டியவர் மற்றும் ஆந்திரதேசத்தின் ஆரம்பகால ஆட்சியாளர்களான சாதவாகனர்களுடன் தொடங்குகிறது என்பதை கல்வெட்டுச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. ஸ்ரீசைலம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலுமாவியின் நாசிக் கல்வெட்டில் காணலாம். தத்தாத்ரேயர் இங்கு தவம் செய்திருக்கிறார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது தத்தாத்ரேய விருட்சம் என்றழைக்கப்படும் மரம் உள்ளது. ஆதிசங்கரர் இங்கு தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை இங்கு எழுதினார். இந்த மலையில் தவம் புரிந்த ரிஷ்யசிருங்க முனிவர் முன் சிவபெருமானும் பார்வதி தேவியும் தோன்றி அவருக்கு அருள்புரிந்தார்கள்.

சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பிய போது அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி கௌசிக அரசனை வீர சைவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு அவனை சந்திக்கச் சென்றாள். அரசனின் தவறான செய்கையால் மனம் நொந்து தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள் அக்கமஹா தேவி. ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்கமஹா தேவியின் திருவுருவச் சிலை உள்ளது.

3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதகர்ணியின் பண்டைய நூல்களில் ஸ்ரீசைலம் பற்றிய குறிப்பு உள்ளது. அந்த அரசரின் ஆட்சியின் கீழ் உள்ள நிலங்களை விவரிக்கும் நூல்களில் ஸ்ரீசைலம் சகோர ஷேதகிரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுனர் கோயிலை முதன் முதலில் கட்டமைத்தவர்கள் சத்வஹன்சர்கள் என்று வரலாற்றுக்கு முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவில் பல காலங்களில் பல ஆட்சியாளர்கள் மற்றும் வம்சங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.

இக்ஷவாகுக்கள் கிபி 200-300 ஆம் ஆண்டில் ஸ்ரீசைலத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள விஜயபுரியில் இருந்து ஆட்சி செய்தனர்.

பல்லவ ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் கிபி 340-575 ஆம் ஆண்டில் இந்த பகுதியும் சேர்க்கப்பட்டது. கிபி 340-450 ஆம் ஆண்டு வரை சுதந்திர சமஸ்தானமாகவும் இருந்துள்ளது. கடம்ப சாந்தி வர்மாவின் தெலகுண்டா கல்வெட்டில் இந்த தகவல் உள்ளது.

கிபி 6 ஆம் நூற்றாண்டில் கடம்ப மன்னன் மயூர சர்மா ஸ்ரீசைலத்தை ஸ்ரீபர்வதம் என்று அழைத்தார். பிருஹதனா என்று அழைக்கப்படும் ஒரு வகை கடம்பர்களின் உதவியுடன் பல்லவ வம்சத்தை கைப்பற்றி நிலத்தை கைப்பற்றினார். தாங்கள் வென்ற நிலத்தோடு ஸ்ரீபர்வதத்தை ஒருங்கிணைத்தனர்.

கிபி 735 – 755 இல் ராஷ்டிரகூடப் பேரரசின் ஆட்சியாளரான தந்திதுர்கா ஸ்ரீபர்வதம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலங்களை ஆட்சி செய்தார்.

கல்யாண சாளுக்கியராஜு 980-1058 ஆம் ஆண்டு ஒரு கோபுரத்தை நிறுவினார். அவரது பேரன் கிபி 1069 இல் சத்திரம் மற்றும் தர்மசாலாவுக்காக ஸ்ரீசைலத்திற்கு ஒரு கிராமத்தை நன்கொடையாக வழங்கினார். 

ஸ்ரீசைலம் மகா சிவன் கோயில் என்றும் வேதங்களின் தாயகம் என்றும் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகழ் பெற்றது. ஹொய்சாள வம்சத்தின் ஆட்சியாளர்கள் காலத்தில் ஸ்ரீசைலத்தில் கிருஷ்ணா நதியில் உள்ள பாடலகங்கையில் இருந்து ஸ்படிக சிவலிங்கங்களை சேகரித்து அவற்றைப் பயன்படுத்தி ஏராளமான கோயில்களைக் கட்டினார்கள். அன்றிலிருந்து மகாராஷ்டிரர்கள் ஸ்ரீசைலத்தை தெற்கு காசி என்று அழைக்கின்றனர். 

ரெட்டி மன்னர்களின் காலம் கிபி 1325-1448 ஆம் ஆண்டு வரை ஸ்ரீசைலத்தின் பொற்காலம் ஆகும். இந்த வம்சத்தின் அனைத்து ஆட்சியாளர்களும் கோயிலுக்கு சேவைகள் செய்து கொண்டாடினர். பிரோலயவேமா என்ற ரெட்டி மன்னன் ஸ்ரீசைலம் மற்றும் பாதாளகங்கைக்கு படிக்கட்டுப் பாதையை அமைத்தார். அனவெமரெட்டி வீரசிரோ மண்டபம் கட்டினார்.

விஜய நகர சாம்ராஜ்யத்தில் கிபி 1336-1678 ஸ்ரீசைலத்தில் கட்டுமானப் பணிகள் பல நடைபெற்றிருக்கிறது. அப்போது ஸ்ரீசைலத்திற்கு பல கிராமங்களை தானமாக வழங்கினார்கள்.  விஜயநகரப் பேரரசின் இரண்டாம் ஹரிஹரராயர் மல்லிகார்ஜுனா கோயிலின் முகமண்டபத்தைக் கட்டினார். மேலும் கோயில் வளாகத்தின் தெற்குப் பகுதியில் ஒரு கோபுரத்தையும் எழுப்பினார்.

கத்யவேமா ரெட்டி கிபி 1405 இல் ஸ்ரீசைலத்திற்கும் பெடகோமதி வேமா ரெட்டி பாதலகங்காவிற்கும் படிகளை அமைத்தார்.

கிருஷ்ணதேவராயர் கிபி 1516 இல் போருக்கு சென்று வெற்றியுடன் திரும்பும் போது இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு சாலு மண்டபங்களைக் கட்டினார். கோவிலின் ராஜகோபுரத்தையும் கட்டினார்.

பின்னர் முகலாயப் பேரரசர்கள் இந்தப் பகுதியைக் கைப்பற்றினர். மேலும் இந்த இடம் கர்னூல் நவாபுகளுக்கு ஜாகிர் என்று வழங்கப்பட்டது. முகலாய பேரரசர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த இடம் ஹைதராபாத் நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கிபி 1800ல் நிஜாம் கர்னூல் மாவட்டத்தை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்த போது மேஜர் மன்றோ மாவட்டத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நிர்வாகத்தை மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 1929 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் நிர்வாகத்திற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.1949 ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த இக்கோயில் 1956 ஆம் ஆண்டு முதல் அதன் பழைய பெருமையைப் பெற்றது.

சாதவாகனர்கள் இக்ஷவாகுகள் பல்லவர்கள் விஷ்ணுகுண்டிகள் சாளுக்கியர்கள் காகத்தியர்கள் ரெட்டி மன்னர்கள் விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் சத்ரபதி சிவாஜி போன்ற புகழ்பெற்ற பேரரசர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். கோயிலிலும் அதைச் சுற்றிலும் சுமார் 116 கல்வெட்டுகள் உள்ளன திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் திருப்பதிகங்களில் இத்தலம் திருப்பருப்பதம் என்றும் சுந்தரர் திருப்பதிகத்தில் சீபர்ப்பதம் என்றும் குறிக்கப்படுகிறது. தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர் லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

சக்திபீடம் 14. நந்தாதேவி – மிர்ஜாப்பூர்

சக்தி பீடத்தில் 14 ஆவது கோயில் நந்தாதேவி கோயிலாகும். இக்கோயில் விந்தியா சக்தி பீடமாகும். இக்கோயில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் புனித கங்கை நதிக்கரையில் விந்தியாசலம் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி சித்தர் பீடம் என்றும் புகழ் பெற்றது. இங்கு மூல தெய்வமாக விந்தியவாசினி அருளுகின்றாள். இவள் நந்தா தேவி என்றும் கஜலா தேவி என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த பெயரை கொண்டு நந்தா தேவி கோயில் என்று அழைக்கப்படுகிறது. கோயிலில் சிவன் காளி சரஸ்வதி கிருஷ்ணர் ராதையுடனும் அனுமான் மற்றும் பைரவர் அருள் பாலிக்கிறார்கள். இக்கோயிலில் விந்தியவாசினி சிலை உட்பட பெரும்பாலான சிலைகள் கருங்கல்லால் ஆனவை. விந்தியவாசினி தேவி சிங்கத்தின் மீது அமர்ந்தபடி காட்சி கொடுக்கிறார். விந்திய மலையிலிருந்து இவள் அருள் புரிவதால் இவளுக்கு விந்தியவாசினி என்ற பெயர் ஏற்பட்டது. ஆதி சக்தியின் உடல் பாகங்கள் பூமியில் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஆதி சக்தியின் பாகங்கள் ஏதும் விழவில்லை. ஆதி சக்தியின் உடல் பகுதிகள் அனைத்தும் ஒவ்வொரு இடத்தில் விழுந்த பின் ஆதிசக்தி இந்த இடத்தில் தனது முழு சக்தியுடன் வசிக்க தொடங்கியதால் இந்த இடம் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. விந்தியவாசினி தேவியே சரஸ்வதி லட்சுமி காளி ஆகிய மூன்று தெய்வங்களாக ரூபமெடுத்து அருள்பாலிக்கிறாள். கோயில் காலை 5:30 மணிக்கு காலை ஆரத்தியுடன் திறக்கப் படுகிறது. தினமும் பூஜையில் நடத்தப்படும் 4 ஆரத்திகளின் போதும் தேவியின் சன்னதி மூடுப்படுகிறது. கோயிலில் ஒரு மரக் கூரையால் சூழப்பட்ட கல் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சின்னம் உள்ளது.

தேவகி வசுதேவரின் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்த அதே நேரத்தில் தேவி நந்தகோபன் யசோதாவிற்கு மகளாகப் பிறந்தார். விஷ்ணுவின் அறிவுறுத்தலின் படி வசுதேவர் கிருஷ்ணருக்கு பதிலாக யசோதாவிற்குப் பிறந்த பெண் குழந்தையை இடம் மாற்றி வைத்தார். கம்சன் இந்த பெண் குழந்தையை கொல்ல முயன்ற போது கம்சனின் கையில் இருந்து தேவி ரூபமெடுத்து கம்சனிடம் உன்னைக் கொல்பவன் ஏற்கனவே பிறந்து பாதுகாப்பாக இருக்கிறான் என்று கூறிவிட்டு மதுராவின் சிறையிலிருந்து மறைந்து போனார். அதன்பிறகு இவர் விந்திய மலைகளைத் தனது இருப்பிடமாகத் தேர்வு செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் பத்ம புராணத்திலும் தேவி மஹாத்மியத்திலும் மார்க்கண்டேய புராணத்தின் துர்கா சப்தசதி அத்தியாயத்திலும் இந்த தேவி பற்றிய குறிப்புகள் உள்ளது. சர்வ சிருஷ்டியின் போது பிரம்மா விஷ்ணு மற்றும் மகேஷ்வரர் இந்த இறைவியை வழிபட்டு பின் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினார்கள் என்று புராண வரலாறு உள்ளது. மார்கண்டேய புராணம் ஸ்ரீ துர்கா சப்த சதியின் வரலாற்றில் இதற்கான குறிப்புகள் உள்ளது. அந்த குறிப்பின்படி சர்வ சிருஷ்டி படைப்பின் ஆரம்ப கட்டத்தில் விஷ்ணு தூக்கத்தில் மூழ்கினார். பிரம்மா விஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்து வந்த தாமரையின் மீது சுய சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அந்த நேரத்தில் விஷ்ணுவின் உடல் பாகத்திலிருந்து இரண்டு தீவிர அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் விந்திய மலைத் தொடரில் வந்து பலருக்கு துன்பத்தை கொடுக்கத் துவங்கினார்கள். விஷ்ணு மட்டுமே இந்த அசுரர்களை அழிக்க முடியும். அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அத்தகைய சூழ்நிலையில் பிரம்மா அசுரர்களைக் கொல்ல விந்தியாசல தேவியை அழைத்தார். விந்தியாசல தேவி வந்து அந்த இரண்டு அசுரர்களையும் அழித்தார்.

அயோத்தி மன்னர் திரிசந்தியின் மகன் துருவன் சந்தி. அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் சுதர்சனா. இளைய மனைவியின் மகன் சத்ரஜித். இவர்களில் சத்ரஜித்தையே மன்னராக்க அனைவரும் முடிவு செய்தார்கள். இதைத் தொடர்ந்து சுதர்சனா அம்பிகையை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான். அம்பிகையும் அவனது தவத்தின் பலனால் ஆயுதங்களைக் கொடுத்து யாரும் வெல்ல முடியாது என்ற வரத்தை அவனுக்கு அளித்தார். இதற்கிடையே காசி மன்னரின் மகள் சசிகலாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்காக சுயம்வரத்தை நடத்த காசி மன்னர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சுதர்சனா கலந்து கொண்டால் சசிகலாவை மணந்து விடுவான் என்று நினைத்து அவனை சத்ரஜித் கொல்ல திட்டம் திட்டினான். இதை உணர்ந்த சுதர்சனா அம்பிகை அருளிய ஆயுதங்களால் அவனை வீழ்த்தினான். பின் சுயம்வரத்தில் பங்கேற்று சசிகலாவை மணந்து சுதர்சனா மன்னராகப் பதவி ஏற்றான். தனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அம்பிகைக்கு நன்றி தெரிவிக்க நினைத்த சுதர்சனா அவருக்கு விந்தியாவாசினி என்ற பெயரில் கோயில் எழுப்பி வழிபட்டான். பின்னாட்களில் மேற்கு வங்க நடோர் பகுதியை ஆட்சிபுரிந்த ராணி பவானி இக்கோயிலைப் புதுப்பித்தார்.

இக்கோயிலில் துர்கா பூஜை நவராத்திரி மகா சிவராத்திரி திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது ​லட்சுமி காளி சரஸ்வதி ஆகிய மூத்தேவியருக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை சனிக்கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெறுகிறது. ஸ்ரீராம நவமி கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினங்களிலும் விந்தியவாசினிக்கு விழா எடுக்கப்படுகிறது. ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் தேவி மஹாத்மியத்திலும் மார்க்கண்டேய புராணத்தின் துர்கா சப்தசதி அத்தியாயத்திலும் இந்த தேவி பற்றிய குறிப்புகள் உள்ளது. ராமர் வனவாச காலத்தில் மனைவி சீதா மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் இந்த இடத்திற்கு வந்து வழிப்பட்டுள்ளார். மகாபார காலத்தில் நடைபெற்ற விராட் திருவிழாவில் யுதிஷ்டிரர் கலந்து கொண்டு தேவியை வழிபட்டு அவளின் புகழைப்பாடி அருளைப் பெற்றிருக்கிறார். விந்தியவாசினி தேவியை குல தெய்வமாகவும் காக்கும் தெய்வமாகவும் சேத்ரா தேவியாகவும் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள மக்கள் வணங்குகிறார்கள்.

சக்திபீடம் 13. வைஷ்ணவி – ஜம்மு காஷ்மீர்

சக்தி பீடத்தில் 13 ஆவது கோயில் வைஷ்ணவி கோயிலாகும். இக்கோயில் மூலஸ்தானத்தில் இருக்கும் இறைவியை அன்னை ராணி என்றும் வைஷ்ணவி தேவி என்றும் வைஷ்ணோ தேவி என்று அழைக்கப்படுகிறாள். இக்கோயில் வைஷ்ணவி சக்தி பீடமாகும். இங்கு அம்மன் சிலை வடிவில் இல்லாமல் அரூபமாக அருள்பாலிக்கிறாள். தேவியின் மண்டை ஓடு விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. ஞானபாகமான தலை மண்டை ஓடு விழுந்தபடியால் இந்த சக்தி பீடம் அனைத்து சக்தி பீடங்களிலும் நித்திய ஆற்றல் பெற்றதாகவும் தாய் தெய்வமாகவும் போற்றப்படுகிறது. வரங்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கும் கை போன்ற அமைப்பு இங்கு உள்ளது. இதனை சுட்டிக் காட்டி வேறு சில புராண நூல்களில் வலது கை இங்கே விழுந்ததாக உள்ளது. இக்கோயில் அன்னை வைஷ்ணோ தேவி கோயில் என்றும் வைஷ்ணவி தேவி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். வைஷ்ணோ தேவி மலைக் கோயில் ஜம்மு நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கத்ரா எனும் நகரத்தில் இருந்து 13 கிமீ தொலைவில் இமய மலையில் அமைந்துள்ளது. இக்கோயில் இமய மலையில் 5200 அடி உயரமுள்ள திரிகூட மலையின் உச்சியில் இந்த குகையில் இருக்கிறது. மூன்று சிகரங்களைக் கொண்ட மலை ஆகையால் திரிகூட மலை என்ற பெயர் ஏற்பட்டது. இந்த குகை 30 மீட்டர் நீளத்தையும் 1.5 மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த குகையின் முடிவில் சூலத்தின் மூன்று முனைகள் போல மூன்று பாறைகள் சுயம்புவாக உள்ளது. இந்த பாறைகள் முப்பெரும் தேவியர்களான லட்சுமி சரஸ்வதி பார்வதி ஆகியோரின் அருவ வடிவமாகும். இந்தியாவில் மிகவும் அதிகமான பக்தர்கள் வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுனரின் தலைமையில் அமைந்துள்ள வைஷ்ணோ தேவி கோயில் நிர்வாகக் குழு இக்கோயிலின் நிர்வாகத்தை கண்காணிக்கிறது. இந்த நிர்வாக குழுவிற்கு திண்ணை வாரியம் என்று பெயர்.

லட்சுமி சரஸ்வதி பார்வதி மூவரும் இந்த உலகில் அதர்மத்தை ஒழித்து உலகை நல் வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் தமது சக்திகளில் சிலவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஹோம குண்டத்தில் வைத்தார்கள். அந்த சக்திகள் ஒன்றிணைந்து பெரிய ஒளிப்பிழம்பாக மாறியது. அந்த ஒளிப்பிழம்பின் வெள்ளத்தில் இருந்து அழகிய  பெண் ஒருவள் தோன்றினாள். அவள் அந்த மூன்று தேவிகளின் முன்னிலையில் சென்று என்னை எதற்காகப் படைத்தீர்கள். நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டாள். நீ தென் இந்தியப் பகுதியில் இருந்த ரத்னாகர் என்ற தேவி உபாசகருக்கு மகளாகப் பிறந்து அந்த மனிதப் பிறப்பில் அனைவரும் ஏற்கும் பெண்ணாக இருந்து கொண்டு மக்களை நல்வழிப் படுத்தி உலகில் ஆன்மீக எண்ணத்தை மக்களிடையே வலுப்படுத்த வேண்டும் என்றும் அதன் பின் அவள் விஷ்ணுவை கண்டு அவருடன் அவள் கலந்து விடுவாள் என்றும் கூறினார்கள். அடுத்த நிமிடமே பூமியில் அவர்கள் குறிப்பிட்ட ரத்னாகரின் மனைவி கர்ப்பம் அடைந்தாள். அந்த கர்பத்தில் இருந்த அணுவில் வைஷ்ணவி கலந்து விட அவளே பத்து மாதத்திற்குப் பின்னர் அவர்களுக்குப் பெண்ணாகப் பிறந்தாள். குழந்தை திரிகுடா என்ற பெயரால் அழைக்கப் பட்டாள். சிறு வயது முதலேயே ஒரு வித்யாசமானப் பெண்ணாகவே வளர்ந்து வந்தவள் ஆன்மீக விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தாள். ஒரு கட்டத்தில் தனியே அமர்ந்து வீட்டின் ஒரு மூலையில் தியானம் செய்யத் துவங்கினாள். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும் தன் தந்தையிடம் அனுமதி வாங்கி ஆற்றங்கரை அருகே கடுமையான தவம் மேற்கொண்டாள்.

திரிகுடாவின் பிறப்பின் ரகசியத்தை அறியாத அவளுடையப் பெற்றோர்கள் அவள் செயலைக் கண்டு மனம் கலங்கினார்கள். எவ்வளவோ முயன்றும் அவர்களால் அவளை குடும்ப வாழ்க்கைக்கு திரும்ப கொண்டு வர இயலவில்லை. பண்டிதர்கள் சிலரிடம் அது பற்றிக் கேட்ட போது அவர்கள் ஜாதகங்கள் மற்றும் தாந்த்ரீக மந்திர முறைகளில் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து விட்டு இவள் ஒரு தெய்வப் பிறவியாகவே இருக்க வேண்டும். ஆகவே அவள் செல்லும் வழியிலேயே விட்டு விடுங்கள். அவளது செய்கைகளை தடுக்க வேண்டாம் என்று அறிவுரைக் கூறினார்கள். அதன் பின் கானகத்திற்குச் சென்ற வைஷ்ணவி வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை. அங்கேயே தங்கி விட்டாள். பெற்றோர்களால் அவளைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை.

ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக் கொண்டு திரிகுடா தவம் செய்த கடற்கரைப் பக்கம் வந்தார். ஆழ்ந்த தியானத்தில் இருந்த திரிகுடா ராமரைக் கண்டாள். ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்றும் உணர்ந்தாள். தான் விஷ்ணுவை கண்டதும் அவருடன் கலந்து விடுவோம் என்று முன்பே மூன்று தேவியர்களும் சொன்னது நினைவுக்கு வந்தபடியால் ராமரிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டாள். ராமர் தனது யுக காரியம் முடியவில்லை என்றும் நீ உலக நன்மைக்காக வந்த காரியத்தையும் நீ முடிக்க வேண்டும். உனது காரியம் அனைத்தும் முடிந்த பின் கலியுகத்தின் பின்னால் என்னை வந்து சரணடைவாய் என்றும் கூறினார். மேலும் அவளிடம் வட இந்தியாவில் உள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத் தொடரில் உள்ள குகையில் சென்று தவம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ராமரின் கட்டளைப்படி தவத்தை மேற்கொண்டாள். மேலும் ராமர் ராவணனை வெற்றி கொள்ள வேண்டும் என்று நவராத்திரி அன்று ஒன்பது நாளும் திரிகுடா விரதம் இருந்தாள். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே வட இந்தியாவில் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மக்கள் ராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை தற்போதும் வைத்திருக்கிறார்கள். ராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக் கொண்ட ராமர் திரிகுடா தேவி முன் தோன்றி கலியுகத்தில் தான் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப் போவதாகவும் அது வரை இந்த உலகில் இருந்து தீமையை அழித்து நன்மையை செய்வாய் என்றும் திரிகுடா என்ற பெயரை அவளின் தவத்தின் பலனால் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பாய் அனைத்து உலகமும் உன்னை அன்னை வைஷ்ணவி தேவி என்று உனது புகழைப் பாடும் எனவும் வரமளித்தார். அதன் படி திரிமுடா வைஷ்ணவி தேவி என்ற பெயரைப் பெற்றாள்.

வைஷ்ணவி தேவி குகைக்கு சென்று தவத்தில் ஈடுபட்ட பின்பு நடந்தவைகாக இரண்டு புராண கதைகள் சொல்லப் படுகிறது. முதல் புராண வரலாறு

பண்டிதர் ஸ்ரீதர் என்பவர் தற்போதைய கத்ராவில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹன்சாலி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தார். வைஷ்ணவி தேவியின் தீவிர பக்தராக இருந்தார். ஒரு முறை அன்னை வைஷ்ணோ தேவி அவர் கனவில் தோன்றி பண்டாரா என்ற விருந்தைப் படைக்குமாறு கேட்டுக் கொண்டார். (பண்டாரா விருந்து என்பது ஆண்டிகள் மற்றும் பக்தர்களுக்கு உணவளிக்கும் விருந்து) பண்டிதரும் நல்ல செயல்தானே செய்வோம் என்று எண்ணி அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் மக்களையும் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மக்களையும் விருந்துக்கு அழைக்கப் புறப்பட்டார். செல்லும் வழியில் பைரவ் நாத் என்ற பெயர் கொண்டவரை விருந்திற்கு அழைத்தார். பைரவ் நாத் ஸ்ரீதரிடம் எவ்வாறு அனைவருக்கும் உணவு கொடுத்து இந்த விருந்தை நிறைவு செய்வாய். இதில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதனால் ஏற்படக் கூடிய பாவங்களையும் விளைவுகளையும் சுட்டிக் காட்டி அந்த விருந்து நிகழாதபடி ஸ்ரீதரின் தன்னம்பிகையை குலைத்தான். ஸ்ரீதரின் குடிசை சிறியது. மக்கள் கூட்டம் அதிகமாக வந்தால் அமரக் கூட இடம் இருக்காது. மேலும் அத்தனை பேருக்கும் உணவு கொடுக்க முடியுமா என்ற கவலையும் சேர்ந்தது. இதனால் கவலையுடன் சோர்ந்து அமர்ந்தார் ஸ்ரீதர். அப்போது மீண்டும் அவர் கனவில் தோன்றிய அன்னை வைஷ்ணோ தேவி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடக்கும் கவலை வேண்டாம் என்று கூறினாள்.

பண்டார விருந்து நாளுக்கு முந்தைய இரவில் ஸ்ரீதருக்கு தூக்கம் வரவில்லை. அவர் தனது விருந்தாளிகளுக்கு குறைந்த வசதிகளுடன் எப்படி உணவளிப்பது மற்றும் தனக்கு இருந்த போதிய இட வசதியில் அவர்களுக்கு எப்படி உணவளிப்பது என்ற சிந்தனையில் இரவு முழுவதும் தூங்காமல் போராடிக் கொண்டிருந்தார். காலை வரை தனது பிரச்சினைகளுக்குத் திருப்திகரமான தீர்வைக் கொண்டு வர முடியாமல் தவித்தார். நிகழ்வை நடத்தாமல் தவிர்த்து விடலாமா என்றெல்லாம் யோசித்தார். அடுத்த நாள் தன் குடிலுக்கு வெளியே பூஜை செய்ய ஆரம்பித்தார். மதியம் வந்ததும் உணவருந்த விருந்தினர்கள் வரத் தொடங்கினர். அவர் பூஜையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதைக் கண்டு வந்தவர்கள் எங்கு இடம் கிடைக்குமோ அங்கெல்லாம் வசதியாக அமரத் தொடங்கினார்கள். விநோதமாக ஸ்ரீதரின் சிறிய குடிசைக்குள் மிகப் பெரிய எண்ணிக்கையிலான விருந்தினர்கள் தங்கள் இடத்தில் வசதியாக அமர்ந்தார்கள். இன்னும் நிறைய இடம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. பூஜை முடிந்ததும் ஸ்ரீதர் தனது குடியைசை சுற்றிப் பார்த்தார் ஏராளமான விருந்தினர்கள் வந்திருந்ததைக் கண்டார். விருந்தாளிகளுக்கு உணவளிக்க முடியாது என்று எப்படிச் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது ​​வைஷ்ணவி தேவி இளம்பெண் வடிவில் தன் குடிசைக்குள் இருப்பதைக் கண்டார். ​​வைஷ்ணவி தேவி அனைத்து விருந்தினர்களுக்கும் அவரவர் விருப்பப்படி உணவு பரிமாறினாள். பண்டார விருந்து சிறப்பாக நடைபெற்றது. அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க வைஷ்ணவி தேவி அருகில் உள்ள பூமியில் ஒரு பாணத்தை விட்டாள். உடனே அந்த இடத்தில் இருந்து நீரூற்று பெருகியது. இவ்வாறு தோன்றிய நீருற்று ஆறாக பெருகியது. இந்த ஆற்றின் பெயரே பாண கங்கை ஆகும். பாண கங்கை ஆற்றின் கரைகளில் தேவியின் காலடிச் சுவட்டுகள் பதிந்துள்ளது. இப்போதும் அச்சுவடுகள் இருப்பதை காணலாம்.

நடைபெற்ற விருந்தில் அதிசய நிகழ்வுகள் எப்படி நடைபெற்றது என்று கேட்டு அறிந்து கொள்ள இளம்பெண் வடிவில் இருந்த வைஷ்ணவி தேவியை தேடினான். ஆனால் அவள் அங்கு இல்லை தேடினார். வைஷ்ணவி தேவியை எங்கும் காணவில்லை. ஒரு வெறுமை உணர்வு ஸ்ரீதரை ஆட்கொண்டது. மீண்டும் அவளைக் காண வேண்டும் என்று உணவு தண்ணீரைக் கூட உட்கொள்வதை விட்டுவிட்டு விரதம் இருந்தார். வைஷ்ணவி தேவி மீண்டும் தோன்ற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு தனது வீட்டின் ஒரு அறையில் தன்னை மூடிக்கொண்டார். அப்போது வைஷ்ணவி தேவி அவரது கனவில் தோன்றி திரிகூட மலையின் மடிப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள புனித குகையில் தன்னைத் தேடுமாறு கூறினார். புனித குகைக்குச் செல்லும் வழியைக் காட்டி உணவு சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள் என்று வற்புறுத்தினாள். பண்டிட் ஸ்ரீதர் தனது விரதத்தை முடித்துக் கொண்ட பின்னர் மலைகளில் உள்ள புனித குகையை கண்டுபிடிக்க சென்றார். ஒவ்வொரு முறையும் அவர் வழி தவறுவது போல் தோன்றிய போது ​​​​அவரது கனவில் தோன்றி வழிகாட்டினாள். இறுதியில் அத்கவரி என்ற இடத்தின் அருகில் உள்ள கர்ப் ஜூன் எனப்படும் குகையில் தனது இலக்கை அடைந்து வைஷ்ணவி தேவியின் தரிசனத்தை கண்டார். இங்கேயே இருந்து உலக மக்களுக்கு அருள் புரிந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஸ்ரீதரின் வேண்டுகோளுக்கு இணங்க வைஷ்ணொ தேவி தன்னை மூன்று சூலங்களுடைய (தலைகள்) கல்லாக உருமாற்றம் செய்து கொண்டு அங்கேயே இருந்து அருள் பாலித்தாள். அங்கேயே ஒன்பது மாதங்கள் தங்கி அவளை வழிபட்டார்.

வைஷ்ணவி தேவியின் கையால் மரணமடைந்தால் முக்தி என்று நம்பினார் ஸ்ரீதர். அதற்காக அவளை கோபமுட்டுவதற்கான செயலை செய்ய ஆரம்பித்து அவளை கோபமுட்டினார். ஸ்ரீதரின் எண்ணத்தை அறிந்த வைஷ்ணொ தேவி தனது மகா காளி உருவத்தை ஸ்ரீதருக்கு தரிசனம் கொடுத்து மிகவும் ஆக்ரோஷத்துடன் ஸ்ரீதரின் தலையைத் துண்டித்தாள். துண்டித்த மண்டை ஓடானது பைரவ் காடி என்று அழைக்கப்படும் குகையில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் சென்று விழுந்தது. இந்த நிகழ்வு தர்பார் என்ற இடத்திலுள்ள குகை வாயில் அருகே நிகழ்ந்தது. இறக்கும் தருவாயில் ஸ்ரீதர் தன்னை மன்னிக்கும் படி வைஷ்ணவி தேவியிடம் வேண்டிக் கொண்டார். ஸ்ரீதரின் எண்ணப்படி அவருக்கு முக்தி அளித்தாள் வைஷ்ணவி தேவி. மேலும் வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்த பின் அருகிலிருக்கும் இவரின் கோவிலுக்கும் செல்பவர்கள் மட்டுமே தங்களின் புனித யாத்திரையின் பலனைப் பெறுவார்கள் என்ற வரத்தையும் கொடுத்தாள். ஸ்ரீதரின் தலை விழுந்த இடம் பைரவ்நாத் என்று அழைக்கப்படும் காலபைரவர் கோயில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு மேல் உள்ளது. பண்டிதர் ஸ்ரீதர் தனது இறுதிக்காலம் வரையில் இந்த மலை குகையில் வைஷ்ணவி தேவியை பூஜீத்து தவம் செய்து வாழ்ந்தார் என்ற கருத்தும் உள்ளது.

இரண்டாவதாக ஒரு புராண கதை சொல்லப்படுகிறது. குடா இளம் பெண்ணாக காட்டில் தவம் செய்து கொண்டிருந்த போது அந்த காட்டுப் பகுதியில் இருந்த தாந்திரிகரான பைரோன் நாத் இளம் பெண்ணான குடா வைஷ்ணோ தேவியை கண்டதும் அவளை தன்னுடைய மனைவியாக அடைய வேண்டும் என்று வெறித்தனமாக அவளை கட்டாயப் படுத்தினான். அதற்காக தன்னுடைய மந்திர தந்திர தாந்திரிகம் அனைத்தையும் பயன்படுத்தினான். அப்போது ராமரைக் கண்ட குடா அவரின் வழிகாட்டுதலின் படி இந்த இமயமலையில் உள்ள இந்த குகையில் வந்து தவம் செய்ய ஆரம்பித்தாள். அவள் இருப்பிடத்தை கண்டு பிடித்து அங்கும் தொல்லைகள் கொடுக்க துவங்கினான் பைரோன் நாத். ஒருநாள் தனது வைஷ்ணவி தேவி உருவத்தை எடுத்த குடா பைரோன் நாத்தின் தலையை துண்டித்து சம்ஹாரம் செய்தாள். அவனுடைய உடல் குகை வாயிலிலும் தலை பைரவகாடி என்ற அருகில் உள்ள மலையில் போய் விழுந்தது. தேவியிடம் இறக்கும் தருவாயில் மன்னிப்பு கேட்ட பைரவ்நாத் தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் கொடுக்குமாறு வேண்டி கேட்டுக் கொண்டான். அதன்படி அவனுக்கு அருள நினைத்த வைஷ்ணவி தேவி நீ இந்த குகை வாசலிலேயே கிடப்பாய் என்றும் தனது குகைக் கோவிலை நாடிவரும் பக்தர்களின் பாதம் உன் மீது படும். உனது பாவம் தீரும் போது நீ முக்தி அடைவாய் என்று வரம் அருளினாள். அதன்படியே இன்றும் பக்தர்கள் அந்த குகை வாயிலை மிதித்து உள்ளே செல்கின்றனர். திரும்பி செல்லும்போது பைரவ் காடிக்கு போய் அவள் தலை விழுந்த இடத்தில் உள்ள கோயிலையும் வழிபட்டு செல்கின்றனர். அன்று அப்படி வைஷ்ணோ தேவி இருந்த குகை இன்று வைஷ்ணோதேவியின் ஆலயமாக சிறந்து விளங்குகிறது.

இக்கோயில் துவாபர யுகத்திற்கு முற்பட்டதாகும். மகாபாரதத்தில் குருசேத்திரப் போர் ஆரம்பிக்கும் முன்பாக கிருஷ்ணர் அர்ஜூனிடம் வைஷ்ணவி தேவியை வணங்கி தவம் செய்து அருள் பெற்று வருமாறு கூறினார். அதன்படி அர்ஜூனன் கிருஷ்ணனின் வழிகாட்டுதலின் படி இந்த மலை குகையை கண்டு பிடித்து இங்கு தவம் செய்து வழிபட்டான். அவன் தவத்தில் மகிழ்ந்த அன்னை தேவி வைஷ்ணவி தேவி அவன் முன் தோன்றி போரில் வெற்றி பெற வரங்களைக் கொடுத்து ஆசி கூறினாள். பாண்டவர்களே முதன் முதலில் கோல் கண்டோலி மற்றும் பவன் ஆகிய இடங்களில் அன்னை வைஷ்ணவி தேவிக்கு கோவில்களை கட்டிதாக வரலாறு உள்ளது. திரிகூட மலையை ஒட்டிய ஒரு குகையில் ஐந்து கல் கட்டமைப்புகள் உள்ளன. இவை ஐந்து பாண்டவர்களின் பாறை சின்னங்கள் என்று கருதப்படுகிறது. சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங் இக்கோயிலில் வழிபட்டதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளது.

சக்தி பீடம் 12. மங்களாம்பிகை – கும்பகோணம்

சக்தி பீடத்தில் 12 ஆவது கோயில் மங்களாம்பிகை கோயிலாகும். இக்கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மந்திரிணி சக்தி பீடமாகும். அம்பாளின் உடற்பாகம் 51 சக்தி வடிவ பாகங்களாக 51 தலங்களில் காட்சியளிக்கின்றன. இதில 50 தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள் 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள். கோயில் விமானம் மங்கள விமானம். இறைவி மங்களாம்பிகை. வினாயகர் மங்கள விநாயகர். தீர்த்தம் மங்கள தீர்த்தம். புராணபெயர் திருமங்களக்குடி என அனைத்தும் மங்களம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. ஆகவே இத்தலம் பஞ்ச மங்கள சேத்ரம் எனப்படுகிறது.

இறைவியின் பெயர் மங்களாம்பிகை ஆகும். மந்திரபீட நலத்தாள் என்ற பெயரும் உள்ளது. தேவி விஷ்ணுவைப் போல ஒரு கையை தொடையில் வைத்து மங்களத்தை பொழிகிறாள். மங்களாம்பிகை மந்திர சக்தி நிரம்பியவள். தம்மை அன்போடு வணங்குபவர்களுக்கு மங்களத்தை அருளுகின்றாள் ஆகையால் மங்களநாயகி என்றும் சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும் தம் திருவடிகளை சரணடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தள் என்றும் பெயர் பெற்றாள். திருஞானசம்பந்தர் இவளை வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப் போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால் மொத்தம் 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபீடேஸ்வரி என்ற திருநாமமும் பெறுகிறாள். மங்காளாம்பிகை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள். அம்பாளின் வலது கையில் சாத்திய தாலிக் கயிறுகளை பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ஊர் கும்பகோணம். புராண பெயர் திருக்குடமூக்கு திருமங்களக்குடி. தலவிருட்சம் வன்னி.

தீர்த்தம் மகாமகம் குளம் பொற்றாமரை தீர்த்தம் வருண தீர்த்தம் காஸ்யப தீர்த்தம் சக்கர தீர்த்தம் மாதங்க தீர்த்தம் மற்றும் பகவத் தீர்த்தம் (காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்நானத் தலங்கள்) என கோயிலுக்கு வெளியே ஏழு தீர்த்தங்கள் உள்ளது. மங்கள குள தீர்த்தம் நாக தீர்த்தம் குர தீர்த்தம் ஆகிய மூன்று கிணறுகள் மற்றும் சந்திர தீர்த்தம் சூரிய தீர்த்தம் கௌதம தீர்த்தம் மற்றும் வராக தீர்த்தம் ஆகிய நான்கு குளங்களும் கோயிலுக்குள் அமைந்துள்ளன. பொற்றாமரை குளம் கும்பேஸ்வரர் கோவிலுக்கும் சாரங்கபாணி கோவிலுக்கும் நடுவில் உள்ளது.

கும்பகோணம் ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை பூமி குழிந்து தாங்குக என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது. இத்திருவிழாவின் போது கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி காவிரி குமரி பயோடினி சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுகின்றனர். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும் அவரைச் சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத் திருவிழாவும் சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கிமீ தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம் ஆனியில் திருமஞ்சனம் ஆடியில் பதினெட்டாம் பெருக்கு ஆடிப்பூரம் பங்குனித் திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. திருவிழாக் காலங்களில் கோயில் தெய்வங்களை ஏற்றிச் செல்வதற்காக வெள்ளி முலாம் பூசப்பட்ட ஐந்து தேர்கள் கோயிலில் உள்ளன.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 89 வது தேவாரத்தலம் இக்கோயில் ஆகும். மூலவர் சிவலிங்க வடிவில் ஆதிகும்பேசுவரர் அமுதேசுவரர் குழகர் கற்பகநாதேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கம் கீழே பருத்தும் மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். இங்கு மூலவருக்கு அபிசேகம் கிடையாது. பௌர்ணமி நாட்களில் மட்டும் புனுகு சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. உலகம் பிரளய காலத்தில் அழிந்த போது உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான் பிரம்மா மூலம் படைப்புக் கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். அந்த கும்பமானது பிரளய காலம் முடிந்ததும் உலகம் முழுவதும் நீரால் சூழ்ந்திருந்த போது கும்பமானது இத்தலத்தில் ஒதுங்கியதால் இந்த ஊருக்கு கும்பகோணம் என்று பெயர் ஏற்பட்டது. இறைவன் கும்பேஸ்வரர் என்று பெயர் பெற்றார். நவக்கிரகங்கள் எருக்க இலையில் தயிர்சாதம் படைத்து சிவபெருமானை வழிபட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஞாயிறு தோறும் உச்சிகால பூஜையின் போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு படைக்கின்றனர்.

இராஜகோபுரம் வழியாக நுழைந்து நீண்ட மண்டபத்தை கடந்தால் பலி பீடம் கொடி மரம் தொடர்ந்து நந்தி தேவர் உள்ளார். முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள் சப்த மாதர்கள் காமதேனு பவலிங்கம் சர்வ லிங்கம் ஈசான லிங்கம் பசுபதி லிங்கம் ருத்ர லிங்கம் உக்ர லிங்கம் பீம லிங்கம் மகாலிங்கம் தட்சிணாமூர்த்தி சற்று தள்ளி வலஞ்சுழி விநாயகர் பிட்சாடனர் முருகன் அட்சயலிங்கம் சகஸ்ரலிங்கம் அன்னபூரணி கஜலட்சுமி மகாலட்சுமி கோஷ்டத்திலுள்ள பிரம்மா சரஸ்வதி அஷ்ட புஜ துர்கை நவநீத விநாயகர் கிராத மூர்த்தி பைரவர் கால பைரவர் ஜுரகேஸ்வரர் சாஸ்தா மகான் கோவிந்த தீட்சிதர் நாகாம்பாள் ஆகியோர் உள்ளனர். நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் ஆதி விநாயகர் எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திரபீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறு முகத்துடன் ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் சன்னதியிலுள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் பூஜை நடைபெறுகிறது. இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.

கோயிலில் வேடமூர்த்திக்கு சன்னதி உள்ளது. சிவபெருமான் வேடர் வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இந்த சன்னதி உள்ளது. முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது பிரம்மா தனது படைப்புத் தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில் மிதக்க விடு எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் இந்த இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது. கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே கும்பேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாஇலை தர்ப்பை உறி வில்வம் தேங்காய் பூணூல் முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக் கோயில்களாக விளங்குகின்றன. மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய கோயில் அமைப்பு 9 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டின் தஞ்சாவூர் நாயக்கர்களின் விஜயநகர ஆட்சியாளர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட பதினாறு தூண்கள் கொண்ட மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்தக் கோயில் பற்றிய புராண கதைச் செய்திகளை காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். இந்திரன் அஷ்டதிக்கு பாலகர்கள் காமதேனு கார்த்தவீரியன் சுவர்ணரோமன் காசிபர் உள்ளிட்ட பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்று பாடுகிறார். ஏழாம் நூற்றண்டில் வாழ்ந்த நாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. புரந்தர தாசர் தனது சந்திரசூடா சிவசங்கர பார்வதி ரமணா பாடலில் கும்பேஸ்வரரைப் போற்றி ஒரு பாடலை இயற்றினார். அப்பாடலில் கும்பபுர வசனு நீனே என்று குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

சக்தி பீடம் 11. மகாகாளி-உஜ்ஜையினி

சக்தி பீடத்தில் 11 ஆவது கோயில் மகாகாளி உஜ்ஜையினி கோயிலாகும். இக்கோயில் இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ருத்ராணி சக்தி பீடமாகும். தேவியின் உதடு விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. சிவபெருமான் திரிபுரங்களை எரித்து அசுரர்களை வெற்றி கொண்ட இடம் என்பதால் உஜ்ஜையினி (வெற்றித்தலம் என்று பொருள்) என்று பெயர் பெற்றது. மேலும் சமண மதத்தை சார்ந்த சுதன்வா என்ற மன்னன் இந்த நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஜைன மதம் அவ்வூரில் எங்கும் வியாபித்திருப்பதைக் கண்டு உஜ்+ஜைன் – உச்சத்தில் இருக்கும் ஜைனம் என்று பொருள் பட உஜ்ஜைய்ன் என்று பெயர் சூட்டினான் எனவும் வரலாறு உள்ளது. புராண பெயர்கள் அவந்திகா அவந்தி அவந்திபூர் அவந்திபுரம் என பல கால கட்டத்தில் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மகாகாளி மங்கள சண்டி என்ற பெயரில் அன்னை எழுந்தருளி இருக்கிறாள். சுடரும் ஜ்வாலையை மகுடமாய் தாங்கி பூத வேதாள கனங்களின் அதிகாரியாக உடுக்கை நாகம் கபாலம் வீரவாள் சூலம் ஏந்தி வீராசனமாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்வாள். தலமரம் ஆலமரம். இதற்கு சித்திவடம் என்று பெயர். இம்மரம் பல நூறு வருடங்களாகச் சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. தீர்த்தம் சிப்ராநதித் தீர்த்தம் சூரிய குண்டம் நித்திய புஷ்கரணி கோடிதீர்த்தம். இந்த சிப்ரா நதிக்கரையில் பார்வதி தேவியால் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஆலமரத்தின் கீழ்தான் குழந்தையாக இருந்த முருகப் பெருமான் வளர்ந்தார். இந்த நதிக்கரையின் அருகில்தான் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது இந்த தீர்த்தம் என்று அக்கினி புராணம் குறிக்கிறது.

கருட புராணத்தில் முக்தி தலங்களாக போற்றப்படுபவை ஏழு. அவை துவாரகா அயோத்யா வாரணாசி ஹரித்துவார் மதுரா காஞ்சி மற்றும் அத்தலமான உஜ்ஜையினி கோயிலும் ஒன்றாகும். 12 ஜோதிர் லிங்கத்தலங்களுள் இத்தலமும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவ வைணவ புத்த மற்றும் சமண மதத்தினருக்கு மிக முக்கியமான யாத்திரை தலம். இத்தலத்தில் விநாயகர் ஓங்காரேசுவரர் தாரகேசுவரர் பார்வதி தேவி சுப்ரமணியர் நந்தி ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். அனைத்து கோயில்களிலும் ஒரு தடவை பூஜித்த பொருள்களை மீண்டும் பயன்படுத்தி பூஜிப்பதில்லை. ஆனால் இந்த கோயிலில் பூஜித்த பிரசாதத்தையும் வில்வம் போன்ற தளிர்களையும் மீண்டும் உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை கடைந்த பொழுது அசுரர்களுக்கு பங்கு தராமல் தேவகுரு கலசத்தை தூக்கிக் கொண்டு ஓடும் பொழுது அமிர்தம் சிந்திய இடங்களுள் இத்தலமும் ஒன்று. துவாபர யுகத்தில் சாந்தீப முனிவரிடம் பகவான் கிருஷ்ணர் பலராமர் சுதாமர் குசேலன் ஆகியோர் இத்தலம் இருந்த இடத்தில்தான் கல்வி பயின்றார்கள். மகாபாரத காலத்தில் இந்நாட்டை ஆண்ட இளவரசர்கள் கௌரவர்கள் பக்கம் நின்று மகாபாரதப் போரில் யுத்தம் புரிந்தனர். இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியுள்ளார். அந்த இடத்தில் இப்போது ராமர் காட் என்னும் குளியல் கட்டம் உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர்.

காளி கோயில்களில் ஆத்யகாளி மகாகாளி மகாகாளி தசமுகி பத்ரகாளி மங்கலகாளி உச்சினி மாகாளி உச்சிமாகாளி என்று பல பெயர்களில் காளிதேவி அழைக்கப்படுகிறாள். காளிகளில் மிகவும் புராதனமாக விளங்குபவள் உஜ்ஜைனி நகரில் இருக்கும் உஜ்ஜைனி மாகாளி ஆவாள். ருத்ரம் என்றால் ஆவேசம் என்று பொருள். உக்கிர சக்தியைக் கொண்டு ஆவேசமாக இருப்பாள் இந்த அம்பிகை. அம்பிகையின் ஆவேசத்தை மாற்றி அம்பிகையின் அருகில் ஆதிசங்கரர் யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்த சொரூபியாக மாற்றினார். அன்னை அசுரர்களை அழிக்கும் ஹரசித்தி தேவியாகவும் மகாகாளியாகவும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அசுர குணங்களை அழித்து மங்களம் அருளும் மங்கள சண்டியாகவும் பத்ர என்றாலே சாந்தம் அமைதி சாந்தத்தையும் அமைதியையும் கொடுக்கும் பத்ர காளியாகவும் விளங்குகிறாள். மகாகாளியின் அருளைப் பெற்றவர்களை எவராலும் வெல்ல முடியாது. கவிஞர்கள் புலவர்கள் உபாசகர்கள் சக்கரவர்த்திகள் மந்திரவாதிகள் போன்றவர்கள் விரும்பி வழிபட்ட தெய்வம் மகாகாளி. அவர்களுக்கு அவள் கவித்துவம் புலமை ஏகச்சக்ராதிபத்தியம் மந்திர ஆற்றல் போன்றவற்றை அளித்திருக்கிறாள்.

கோயில் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் ஓங்காரேஸ்வரரும் இரண்டாம் அடுக்கில் தாரகாஸ்வரரும் அமையப் பெற்றுள்ளனர். மூன்றாம் அடுக்கு பூமிக்கு கீழே அமைந்துள்ளது. மூலவர் சிவபெருமான் மகா காளேஷ்வர் பெரிய அளவு லிங்க ரூபமாக காட்சியளிக்கிறார். முகலாயரின் படையெடுப்பின் போது அல்டுமிஷ் என்பவன் இக்கோயிலை இடித்து விட்டு அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்து சென்று விட்டான். அதன் பிறகு ராமச்சந்திரன் என்பவர் புதிய லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து புதிய கோவிலை உருவாக்கினார். பின்னர் பல மன்னர்களின் கைங்கரியத்தினாலும் பொது மக்களின் திருப்பணிகளாலும் இன்று இத்திருக்கோயில் ஐந்து அடுக்குடன் மிகச்சிறப்புடன் விளங்குகிறது. ஒரு காலத்தில் நள்ளிரவு இரண்டு மணியளவில் சுடுகாட்டு சாம்பலை கொண்டு வந்து மகாகாளேஷ்வரருக்கு பஸ்மார்த்தி என்று சொல்லப்படும் சாம்பல் அபிஷேகம் செய்து வந்தார்கள். இப்பொழுது அந்த அளவிற்கு இல்லாமல் சம்பிரதாயத்திற்கு சிறிதளவு சாம்பலால் அபிஷேகம் செய்கிறார்கள்.

இந்தத் தலத்தில் உள்ள காளிதேவி புராணப் பெருமையும் புகழும் பெற்றவள். காளிதாசனுக்கு அன்னை அருள்புரிந்த வரலாறு ஒரு சான்று. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூடன் ஒருவன் அமைச்சனின் சூழ்ச்சியால் மன்னன் மகளை திருமணம் முடிக்க நேர்கிறது. தன் கணவன் சகல கலைகளிலும் வல்லமை பெற்றவனாக இருப்பான் என்று எண்ணி அகம் மகிழ்ந்தாள் அரச குமாரி. ஆனால் சில நாட்களில் அவனுடைய உண்மையான ரூபம் வெளிப்பட்டு தனக்கு கணவனாக வந்தவன் மூடன் என்று அரச குமாரிக்குத் தெரிகிறது. தன் கணவன் படிப்பறிவு இல்லாதவன் என்பதை உணர்ந்த ராஜகுமாரி பெரும் துயரில் ஆழ்ந்தாள். நாட்டை ஆளும் தனக்கு நாயகனாக வந்தவன் எழுத்தறிவில்லாதவனாக இருந்தால் எல்லோரும் ஏளனம் செய்வார்களே என்று வேதனை அடைந்தாள். இதற்கு ஒரு வழி தேடினாள்.

மகாகாளி அன்னை தனக்கு விருப்ப தெய்வம் என்றும் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்றும் அவள் ஊர் எல்லையில் இருக்கிறாள் அவளிடம் சென்று அம்பிகையின் அருள் பெற்று வாருங்கள் எனக் கூறி அனுப்பினாள். அரசியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மகாகாளி அன்னையை நோக்கி கடும் தவத்தை மேற்கொண்டான் அவன். களங்கமில்லாத அவனுடைய வேண்டுதலைக் ஏற்ற காளி அவன் முன்னே தோன்றி அவன் நாவில் தன் சூலத்தினால் எழுதி ஈடு இணையற்ற கவித்துவத்தை அளித்தாள். அவன் கேட்டதற்கிணங்க தன் வாய் தாம்புலத்தை வாயில் உமிழ்ந்து அவனை உலக மகாகவியாக்கினாள். சரஸ்வதி தேவியும் மகிழ்ந்து அவனுக்கு அளப்பரிய ஞானத்தை வழங்கினாள். மாகாளி அவனுக்கு சியாமளாவாகவும் ராஜராஜேஸ்வரியாகவும் காட்சியளித்து அருள்புரிந்தாள். காளிதாசன் எழுதிய வடமொழி நூலான சியாமளா தண்டகத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் மாகாளியின் தலைமுதல் பாதம் வரையிலான கேசாதி பாத வர்ணனை இடம் பெற்றுள்ளது. மாகாளியின் அருளால் மூடனாக இருந்தவன் பின்னாளில் கவிச் சக்கரவர்த்தியாக மாறி காளிதாசன் என்கிற அழியாப் புகழினைப் பெற்றான்.

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம். நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் விலிமை இழந்து நின்றார்கள். தேவர்கள் ஏராளமானோர் இறந்த போது கவலை கொண்ட இந்திரன் விஷ்ணுவை அணுகி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். அதற்கு விஷ்ணு பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதனை சாப்பிட்டால் இழந்த வலிமை அனைத்தையும் பெறலாம். ஆனால் அந்த பாற்கடலை கடையக்கூட தற்போது தேவர்களுக்கு வலிமை இல்லை. ஆகவே அசுரர்களோடு சேர்ந்து பாற்கடலை கடையுங்கள் என்று அறிவுறுத்தினார். இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். அசுரர்கள் ஒப்புக் கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள். மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைய ஆரம்பித்தார்கள். அப்போது கடலிலிருந்து பல வகையான பொருட்கள் வெளிவந்தன. காமதேனு வச்சிராயுதம் கற்பக விருட்சம் என்று பல பொருட்கள் கிடைத்தது. அப்போது ஆலகால விஷம் வந்தது. அவ்விஷம் மூவுலகையும் அழிக்கும் தன்மை கொண்டது. ஆகவே விஷத்தைப் பார்த்து எல்லோரும் பயந்தார்கள். அது நிலத்தில் விழக்கூடாது என்று தேவர்கள் பயந்தனர். அப்போது சிவன் உலக நன்மைக்காக அந்த விஷத்தைக் கையிலே எடுத்து வாயிலே போட்டு விழுங்கி விட்டார். அதைக் கண்ட பார்வதி சிவனைத் தடுத்தாள். சிவன் பார்வதியின் செய்கையைப் பொருட்படுத்தவில்லை. பார்வதியோ கோபப்பட்டு சிவனின் உச்சியில் அடித்தாள். உடனே சிவன் தலையிலிருந்து மாகாளி பிறந்தாள்.

சிவனின் உச்சியில் இருந்து பிறந்ததால் இவளை உச்சினி மாகாளி என அழைத்தனர். பார்வதி அவளுக்கு வாந்திபேதி பெரியம்மை சின்னம்மை வலிப்பு ஆகிய வியாதிகளை போக்கும் சக்தியைக் கொடுத்தாள். அவளுக்கு நிறைய வரமும் கொடுத்தாள். உன்னை வணங்குபவர்களுக்கு வெப்பத்தினால் வரும் வெப்ப நோய்கள் வராது. உன்னை நினைத்தால் நோய் குணமாகும் என வரம் கொடுத்தாள். உச்சினிக்குத் துணையாக பச்சைவேதாளம் கறுப்பன் மோகினி ஆகியோரையும் படைத்தாள். உச்சினிமாகாளி பார்வதியிடம் வேறு சில வரங்களும் வாங்கினாள். பின் கயிலையை விட்டுப் புறப்பட்டு விக்கிரமாதித்தனின் நாட்டுக்கு வந்தாள். அங்குள்ள ஒரு பெரிய மலையின் உச்சியில் தங்கினாள்.

இங்கு சிவபெருமான் மகாகாளிக்கு 32 வேதாந்த ரகசியங்களை கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அதனை அர்ச்சகர் ஒருவர் மறைவாக இருந்து அதனை கேட்டார். அதனால் அவருக்கு சிவபெருமான் அங்கிருந்த முருங்கை மரத்தில் வேதாளமாகத் தொங்கும்படி சாபம் கொடுத்தார். பின் சாப விமோசனமாக விக்கிரமாதித்தன் என்ற மன்னன் இங்கு வருவான். அவனால் சாபம் நீங்கும் எனவும் கூறி அருளினார்.

விக்ரமாதித்யன் ஆண்ட இந்த உஜ்ஜயினி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த போபால் இந்தோர் அருகில் உள்ள அழகான சிறிய ஊர். உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தனுக்கு பட்டி என்ற மந்திரி. இருவரும் இணைபிரியாத நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் அந்த மலைக்கு விக்கிரமாதித்தனும் தனது நண்பனும் மந்திரியுமான பட்டியும் வேட்டையாட வந்தார்கள். அவர்கள் அங்கு விலங்குகளை வேட்டையாடினர். விக்கிரமாதித்தன் களைத்துப் போனான். ஒரு மரத்தடியில் அமர்ந்தான். பட்டியிடம் தாகமாயிருக்கிறது தண்ணீர் வேண்டும் எப்படியாவது கொண்டு வா என்றான். பட்டி காட்டுக்குள் சென்றான் பல இடங்களில் அலைந்தான். கடைசியில் ஒரு சுனையைக் கண்டான். பட்டி சுனையில் தண்ணீர் எடுத்த போது அந்தப் பகுதியில் தெய்வீக மணம் கமழுவதைக் கண்டான். ஆனால் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அந்தச் சுனையின் கரையில் உச்சினிமாகாளி வீற்றிருந்தது அவனுக்குத் தெரியவில்லை. சுனையிலிருந்து எடுத்து வந்த தண்ணீரைக் விக்கிரமாதித்தனிடம் கொடுத்தான். அந்த நீரைக் குடித்ததும் விக்கிரமாதித்தன் உடம்பு புத்துணர்ச்சி அடைந்தது. அப்போது உலகத்தையே மறந்து தூங்கினான். தூக்கத்தில் ஒரு கனவு கண்டான்.

உச்சினிமாகாளி கனவில் வந்தாள். அந்தச் சுனையின் அருகே தான் இருப்பதாகவும் தனக்கு இங்கு ஒரு கோவில் கட்டு என்றும் அருளினாள். விக்ரமாதித்ய மன்னன் விழித்தான். தான் கண்ட அற்புதக் கனவைப் பற்றி பட்டியிடம் கூறினான். பட்டி அரசே அந்தச் சுனையில்தான் தெய்வீக மணம் கமழுகிறது. அங்கேயே கோவில் கட்டுவோம் என்றான். மன்னனின் ஆசைப்படியே அந்த இடத்தில் பெரிய கோவிலைக் கட்டி உச்சினிமாகாளியை அங்கு பிரதிஷ்டை செய்தான் பட்டி. கோவிலுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்தான் விக்ரமாதித்யன். தங்கக் கட்டிகளையும் ஆபரணங்களையும் அளித்தான். அவையெல்லாம் அக்கோவிலிலேயே பல இடங்களில் புதைத்து பாதுகாத்து வைக்கப்பட்டன. தனது விருப்ப தெய்வமாக உஜ்ஜயினி மகாகாளியை வழிபட்டு வந்தான். அவனுக்கு போரில் வெற்றி பெற தேவையான அனைத்தையும் உஜ்ஜயினி மகாகாளி அவனுக்கு அருள் புரிந்தாள்.

விக்கிரமாதித்தனுக்குப் பல ஆற்றல்களைக் கொடுத்தவள் காளி. காளிதேவியின் அருளை தனது குருவின் மூலம் கேட்டு அறிந்த விக்கிரமாதித்தன் சர்வ வல்லமையும் பெற நினைத்து தன்னையே பலி கொடுக்க தீர்மானித்தான். அவன் தலை ஈட்டி முனையில் படும்போது மாகாளி தோன்றினாள். விக்கிரமாதித்தனிடம் இங்கிருந்து 2 கல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோயிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு 32 கதைகளைச் சொல்லி கேள்வி கேட்கும். அந்த கேள்விக்கு பதில் சொல்லி அதை வென்று அடிமைப்படுத்தினால் உனக்கு எல்லா உதவிகளையும் செய்யும். அதன்படி நீ நடந்தால் உனக்கு உன்னத பதவி கிடைக்கும் எனக் கூறி அருளினாள். அதன்படி விக்கிரமாதித்தனும் காட்டில் வாழ்ந்த ஆறு மாத காலத்தை சரியாக பயன்படுத்தி அந்த வேதாளத்தின் கதைகளை கேட்டு பதிலை சொல்லி அதனை வென்று பல உதவிகளைப் பெற்று நாட்டை வளப்படுத்தினான். இவ்வாறே வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு கதை சொன்ன வரலாறு நடந்தது. சிவனருளால் காளியின் வழி காட்டலில் அர்ச்சகருக்கு விக்கிரமாதித்தன் மூலமாக சாப விமோசனம் கிடைத்தது.

ஒருமுறை தேவலோகத்தில் நாட்டியத்தில் சிறந்தவள் ரம்பையா ஊர்வசியா என்ற சர்ச்சை எழுந்தது. யாராலும் தீர்ப்பை சொல்ல முடியவில்லை. நாரதரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சிறந்து விளங்கும் விக்கிரமாதித்தன் தேவலோகம் அழைத்து வரப்படுகிறான். மகாகாளியின் அருளால் சரியான தீர்ப்பைச் சொன்ன விக்கிரமாதித்தனுக்கு பல பரிசுப் பொருட்களோடு முப்பத்திரண்டு பதுமைகள் உள்ள சிம்மாசனம் ஒன்றையும் தந்து  ஏறிய சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்க என்று வரம் தந்து அனுப்பி வைக்கிறான். பூலோகம் வந்து நடந்தவற்றை பட்டிக்கும் மற்றவர்களுக்கும் சொல்கிறான். இதைக் கேட்ட பட்டி நீ 1000 ஆண்டுகள் அரசனாக வாழ வரம் வாங்கிவிட்டாய். விக்கிரமாதித்தனுடன் 1000 ஆண்டுகள் வழவேண்டும் என்று ஆசைப்பட்ட பட்டி மாகாகாளியை சரணடைந்து தனது பக்தியினால் 2000 ஆண்டுகள் வாழும் வரம் வாங்கினான். இதனால் மந்திரி பட்டிக்கு முன்பே விக்கிரமாதித்தன் இறந்து போகும்படி வரங்கள் அமைந்தது. இதனால் இருவரும் கவலை அடைந்தார்கள். இருவரும் தீவிர யோசனைக்குப் பின் மந்திரி பட்டி ஒரு யோசனை கூறினார். ஆறு மாதம் சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆள்வது. பின்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி ஆறு மாதம் காட்டிற்குள் சென்று வாழ்வது என்ற யோசனை சொன்னான். இதனால் வரத்தின்படி 1000 வருடங்கள் அரசனாக வாழ்வான். 1000 வருடங்கள் காட்டில் வாழ்வான். ஆக மொத்தம் இரண்டாயிரம் வருடங்கள் விக்கிரமாதித்தனும் வாழ்வான்.

விக்கிரமாதித்தன் இந்த யோசனையின் படி காடாறு மாதம் நாடாறு மாதம் என்ற முறைப்படி வாழ்ந்து வந்தான். அப்போது காட்டிற்கு செல்லும் போதெல்லலாம் மாகாகாளியும் அவனுடன் செல்வாள். விக்கிரமாதித்தன் வாழ்ந்து வந்த இடம் மற்றும் அவன் தங்கிய இடத்திலெல்லாம் மாகாளியும் தங்கியபடியால் அங்கெல்லாம் மகாகாளியின் கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டது. இப்படித்தான் இந்தியா இலங்கையில் மகாகாளிக்கு பல கோயில்கள் வந்தது. இவளைத்தான் தமிழகத்தில் உச்சினி மாகாளி உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

விக்கிரமாதித்தன் தனது இறுதிக் காலம் முடிந்த பிறகு உஜ்ஜயினி மகாகாளி அவளுக்கு பிடித்த இடத்தில் சென்று இருக்க வேண்டும் என்று எண்ணினான். எனவே முறையாக பிரசன்னம் பார்த்தான். அதன் வழிகாட்டுதலின்படி வேதவிற்பனர்கள் பூஜகர்கள் பூஜைகள் செய்து மூலப்பொருட்கள் வைத்து பச்சை கலசத்தை உருவாக்கி அம்மனை ஆவாகனம் செய்து அருகில் இருந்த கடலில் விட்டனர்.

சமுத்திரத்தில் விடப்பட்ட கலசமானது பல இடங்களை சுற்றி இறுதியாக ராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் ராமேஸ்வரத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள ஆற்றாங்கரை என்னும் பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு ஆலயம் எழுப்பி வழிபட்டு வந்தனர். இதை அறிந்த சேதுபதி சமஸ்தான சிப்பாய்கள் சமஸ்தானத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற சேதுபதி மன்னர் அந்த கலசத்தை மீட்டு ராமநாதசுவாமி திருக்கோவிலில் வைக்குமாறு ஆணையிட்டார். ராமநாதசுவாமி திருக்கோவில் வைத்த பிறகு கோவிலுக்குள் அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெற தொடங்கியது. மேளதாளங்கள் ஓசை கேட்பது சலங்கை கட்டி ஆடுவது போல் ஓசைகளும் கேட்பது போன்று தொடர்ந்து நடைபெற தொடங்கியது. கோவிலில் பணிபுரிந்தவர்கள் மன்னரிடம் நடப்பதைப் பற்றி கூறி கலசம்‌ வந்ததில் இருந்து இப்படி நடைபெறுவதாக தெரிவித்தனர். உடனடியாக மன்னர் கோவில் வேதவிற்பனர்கள் ராஜகுருமார்களை வைத்து பூஜை செய்து அந்த கலசத்தை பற்றிய பிரசனம் பார்த்தான். பெரும் தேசத்தினை ஆண்ட விக்ரமாதித்தன் மன்னன் வழிபட்ட தெய்வமான உஜ்ஜயினி மகாகாளி என்று தெரிய வந்தது.

இந்த உக்கிரமான மகாகாளியை சாந்தப்படுத்தி அமைதி வாய்ந்த அம்மனாக இருக்க என்ன செய்யலாம் என ராஜகுருமார்களிடம் கேட்டார்கள். அதற்கு ராஜகுருமார்கள் ராமநாதர் சன்னதிக்கு எதிரே ஆலயத்தினனை உருவாக்கி அங்கே மகாகாளியை பிரதிஷ்டை செய்தால் சாந்தமாக இருப்பாள் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமிக்கு எதிரே அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு பின் இருந்த பிள்ளையார் கோவில் அருகில் மகாகாளிக்கு கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர். இங்கு இருந்து ஒரே நேரத்தில் உஜ்ஜயினி மாகாகளியையும் ராமநாத சுவாமியையும் வழிபட முடியும். ராமநாதசுவாமி மற்றும் உச்சயினி மகாகாளி கருவறையும் பூமியில் இருந்து ஒரே நேர்கோட்டில் சரிசமமாக அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதசுவாமி சன்னதியின் எதிரே உள்ள நந்தி சிலையானது சற்று கழுத்து பகுதி மட்டும் வலதுபக்கமாக வளைந்து காணப்படும் அது ஏனென்றால் உச்சியினை காளியம்மன் ராமநாதசுவாமியை பார்க்கும் படியும் இருந்தால் சாந்தமாக இருக்கும் என்பதால் அவ்வாறு இருக்கும். மேலும் நான்கு திசைகளிலும் ராமநாதசுவாமி கோவிலை காக்கும் தெய்வங்கலாக கிழக்கு பகுதியில் உஜ்ஜயினி மாகாளி அம்மனும் தெற்குப் பகுதியில் நம்பு நாயகி அம்மனும் மேற்கில் துர்க்கை அம்மனும் வடக்கு பத்திரகாளி அம்மனும் உள்ளனர்.

விக்ரமாதித்யன் காலத்திற்கு பிறகு பூஜைகள் சரியாக இல்லாமல் உச்சினி மாகாளி கோவில் பாழடைந்து சிதைந்து கிடந்தது. அங்கு பூசை செய்ய ஆளில்லை. அப்போது ஒருநாள் அந்தக் கோவிலுக்கு அயோத்திப் பட்டிணத்திலிருந்து நம்பியான் என்ற பிராமணன் வந்தார். அவர் அயோத்திக் கோவிலில் பூசை செய்து வந்தவர். அயோத்தியில் பஞ்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து குடிபெயர விரும்பினார். அப்போது அவர் கனவில் உச்சினிமாகாளி வந்தாள். என் கோவிலுக்கு வா என அழைத்தாள். அதனால் அவரும் இங்கு வந்தார். உச்சினி கோவிலின் தர்மகர்த்தாக்கள் அயோத்தி பிராமணனை அக்கோவிலின் பூசாரியாக நியமித்தனர். கோவிலையும் சரி செய்தார்கள். அவரும் மூன்று வேளைப் பூஜையைப் பக்தியோடு செய்து வந்தார்.

நம்பியானுக்கு ஏழு பெண் மக்கள் இருந்தனர். ஏழு பேருமே திருமணத்திற்குரிய வயதை எட்டியிருந்தனர். அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க நம்பியானுக்கு வசதியில்லை. அவருடைய ஏழ்மை அவரை வதைத்தது. அவர் தினமும் பூஜையின் போது உச்சினி தேவியிடம் அம்மா என் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய உதவி செய் என உருகி வேண்டினார். ஒருநாள் காளி அவர் கனவில் தோன்றி கோவிலின் ஒரு இடத்தில் தங்கக் கட்டி இருக்கிறது எடுத்துக்கொள். உன் புதல்விகளுக்குத் திருமணம் செய்து வை என்றாள். நம்பியான் கனவில் கண்ட இடத்திற்குச் சென்றார். அந்த இடத்தில் மண்ணைத் தோண்டினார். தங்கக் கட்டி கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு பக்கத்து நகரத்துக்குச் சென்றார். தங்கத்தை விற்று பணத்தை வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும். பின் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டும் என்பது நம்பியானின் ஆசை. ஆனால் அவருக்கு அவ்வளவு பொன்னை எங்கு எப்படி விற்பதென்று தெரியவில்லை. ஆகவே அவர் அந்த நகரத்து வீதியில் தங்கக் கட்டியை விற்பதற்கு அலைந்தார். அவ்வளவு பெரிய கட்டியை விலை கொடுத்து வாங்க அங்கே யாருமில்லை. அப்போது அந்த வீதி வழியாக அதிகாரி ஒருவன் குதிரையில் வந்தான். அவன் பிராமணனைப் பார்த்து உன் பையைக் காட்டு என்று நம்பியானைச் சோதனை செய்தான். பிராமணனின் கையில் இருந்த பையில் நிறைய தங்கக் கட்டிகள் இருப்பதைப் பார்த்தான். அவன் திருடனோ என்ற ஐயம் அதிகாரிக்கு ஏற்பட்டது. அதிகாரி பிராமணனைத் தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். பிராமணனை அடித்துத் துன்புறுத்தி தங்கம் அவனுக்கு வந்த வரலாற்றைக் கேட்டான். நம்பியான் நடந்ததை அப்படியே கூறினார்.

நம்பியான் கூறியதை சோதனை செய்ய அவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே தோண்டத் தோண்ட ஏராளமான தங்கம் வந்தது. அங்கே இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்துக் கொள்ள அதிகாரி ஆசைப்பட்டான். தன் கீழே உள்ள வீரர்களைக் கோவிலை இடித்துத் தோண்டி சோதனை செய்யுமாறு ஆணை இட்டான். வீரர்கள் கோவிலை இடிக்க சுற்றி வளைத்தனர். அப்போது காளியின் படைகள் பயங்கரத் தோற்றத்துடன் கூச்சலிட்டபடி அதிகாரியின் வீரர்களை வளைத்து அவர்கள் மீது கற்களை வீசி எறிந்தன. அதிகாரியும் அவரது படைகளும் பயந்து அலறி கோவிலை விட்டு ஓடினார்கள். நம்பியான் காளியை வணங்கினான். அவன் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது. கோவிலை புதுப்பித்து பூஜை செய்தார்கள்.

ஒரு நாள் சிவபெருமான் காளிதேவியும் அமர்ந்திருந்த போது சண்டன் பிரசண்டன் என்ற அசுரர்கள் அங்கே வந்து நந்தியைத் தாக்க முற்பட்டனர். சிவபெருமானைப் போருக்கும் அழைத்தனர். சிவபெருமான் காளிதேவியிடம் சண்டன் பிரசண்டன் பெற்ற வரம் பற்றிக் கூறினார். அவர்களை அழைக்கும் வல்லமை காளிதேவிக்கே உள்ளது என்றும் அவ்விரு அசுரர்களையும் அழித்து விடக் கட்டளையிட்டார். நவசக்தி தேவிமார்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு மிகுந்த கோபத்துடன் அசுரர்களுடன் போருக்குச் சென்றாள் காளி. மகாகாளியின் உருவத்தைக் கண்ட அசுரர்கள் இருவரும் பயந்து போய் மகாகாளி கோயில் தற்போது இடத்தில் ஓடி ஒளிந்தனர். மகாகாளி அவர்களை விடாமல் பின்தொடர்ந்து வந்து போரிட்டார். அரக்கர்கள் இருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்க வாகனம் ஏறி வந்து அவ்வரக்கர்களை வதம் செய்தார். அரன் என்னும் சிவபெருமான் சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால் மகாகாளிக்கு அரசித்தி தேவி எனப்பெயர் பெற்றாள். சிப்ரா நதிக்கரையில் அரசித்திதேவிக்கு தனியாக கோயில் இன்றும் உள்ளது. இக்கோயில் 51 சக்தி பீடக் கோயில்களில் 5 ஆவதாகவும் உள்ளது.

அவந்தி மாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான். சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன் இந்த நகரைச் சூறையாடி மக்களைத் துன்புறுத்தினான். குடிகள் விலாசனை அணுகி தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது அந்த அரக்கன் வந்து பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து சிவலிங்கத்தையும் அழித்தான். அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர். அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள் மகாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாகாளர் லிங்க உருவில் அருளத் தொடங்கினார்.

மகாபாரதத்தில் தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்டில் விட்டு அங்கே பிறந்திருந்த பெண் குழந்தையை வசுதேவர் தூக்கி வந்தார். மாகாகாளியே அந்தப் பெண் குழந்தையாக பிறந்திருந்தார். அந்தப் பெண் குழந்தையைைக் கம்சன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான். ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு மாகாளியாக மாறி உன்னை அழிக்க வந்த குழந்தை வேறு இடத்தில் பிறந்து விட்டது என்று சொல்லி மறைந்தாள்.

அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். மவுரியப் பேரரசின் கிளைத் தலைமைப் பீடம் இங்கே இருந்திருக்கிறது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பற்றிய தகவல்கள் இருக்கிறது. பாணினி பெரிபுளூசு ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். பதஞ்சலி காளிதாசன் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள். தமிழ் இலக்கிய நூல் பெருங்கதை என்பதில் வரும் உதயணன் கதை நிகழ்ச்சிகள் நடந்த தலம் உஜ்ஜயினி ஆகும்.