சக்தி பீடம் 5. சங்கரி – மகாகாளம்

சக்தி பீடத்தில் 5 ஆவது கோயில் மகாகாளம் சங்கரி கோயிலாகும். அம்பாளின் பெயர் சங்கரி. ஹரசித்திதேவி என்ற வேறு பெயரும் உள்ளது. இக்கோயில் இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் உஜ்ஜைனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. புராண பெயர் அவந்திகா அவந்திபுரம் அவந்திபூர் அவந்தி ஆகும். இக்கோயில் மகோத்பலா சக்தி பீடமாகும். தேவியின் முழங்கை விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை கடைந்த பொழுது அசுரர்களுக்கு பங்கு தராமல் தேவகுரு அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டு ஓடும் பொழுது தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு புனித தலமாகும். தலமரம் ஆலமரம். இந்த மரத்தின் விதை பார்வதி தேவியால் போடப்பட்டது. பல நூறு வருடங்களாக இந்த மரம் சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. இந்த மரத்திற்கு சித்திவடம் என்று பெயர். தீர்த்தம் சிப்ராநதி தீர்த்தம் சூரிய குண்டம் நித்திய புஷ்கரணி கோடிதீர்த்தம்.

இக்கோயில் சிப்ர நதிக்கரையில் உள்ளது. இந்த ஆலயம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. அதில் ஒரு தளம் பூமி மட்டத்துக்குக் கீழே இருக்கிறது. இத்தலத்தில் விநாயகர் ஓங்காரேசுவரர் தாரகேசுவரர் பார்வதி தேவி சுப்ரமணியர் நந்தி ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். கருட புராணத்தில் சொல்லப்பட்டபடி ஏழு மோட்ச நகரங்களில் உஜ்ஜைனியும் ஒன்று. அயோத்தி மதுரா ஹரித்துவார் காசி காஞ்சி அவந்திகை (உஜ்ஜைனி) துவாரகை ஆகும். ஒரு தடவை பூஜித்த பொருள்களுக்கு நிர்மால்யம் என்று பெயர். ஒரு முறை பூஜை செய்த பொருட்களை வைத்து இன்னொரு முறை பூஜை செய்வதில்லை. இக்கோயிலில் இந்த வழக்கத்தை பின்பற்றுவதில்லை. பிரசாதத்தையும் வில்வம் போன்ற தளிர்களையும் இறைவனுக்கு மீண்டும் பூஜை செய்யப் படுகிறது.

ஹரசித்திதேவி என்ற இப்பெயருக்கு ஒரு புராணக் கதை உள்ளது. ஒரு சமயம் கயிலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது சண்டன் பிரசண்டன் என்ற இரண்டு அசுரர்கள் அங்கே வந்தனர். அவர்களிருவரும் தவமிருந்து மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத வரம் பெற்றிருந்தனர். வரத்தின் பலத்தினால் ஆணவம் கொண்ட அவ்விரு அரக்கர்களும் தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களை அடிமை ஆக்கினர். தேவர் முனிவர் மக்கள் யாவரையும் துன்பப்படுத்தினர். கயிலாயம் வந்து அங்கும் அமைதியைக் குலைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் புரிந்து வந்த நந்தி தேவரை அடித்து இம்சை செய்தனர். சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆடும் சொக்கட்டான் ஆட்டத்திற்கு இடையூறு செய்தனர். சிவபெருமானைப் போருக்கும் அழைத்தனர். சிவபெருமான் பார்வதி தேவியிடம் சண்டன் பிரசண்டன் பெற்ற வரம் பற்றிக் கூறினார். அவர்களை அழைக்கும் வல்லமை பார்வதி தேவிக்கே உள்ளது என்றும் கூறினார். எனவே அசுரர்கள் இருவரையும் அழித்து விடக் கூறினார். பார்வதி தேவி அசுரர்கள் அழிக்க மகாகாளியாக மாறினார். நவசக்தி தேவிமார்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு மிகுந்த கோபத்துடன் அசுரர்களுடன் போருக்குச் சென்றார். மகாகாளியின் உருவத்தைக் கண்ட அசுரர்கள் இருவரும் பயந்து போய் உஜ்ஜயினி காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர். மகாகாளி அவர்களை விடாமல் பின் தொடர்ந்து வந்து போரிட்டாள். அரக்கர் இருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்க வாகனம் எடுத்து அரக்கர்களை வதம் செய்தார். அரன் என்னும் சிவபெருமான் கட்டளையை பூர்த்தி செய்தமையால் அரசித்தி தேவி எனப்பெயர் பெற்றாள். அரசித்தி தேவியாக மகாகாளி தோன்றிய இடத்தில் ஒரு கோயில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

மகாகாளர் என்ற ஜோதிர்லிங்கத்தைப் பற்றிச் சிவபுராணத்தில் கதை ஒன்று உள்ளது. அவந்தி மாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான். சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன் இந்த நகரைச் சூறையாடி மக்களைத் துன்புறுத்தினான். மக்கள் விலாசனை அணுகி தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது அந்த அரக்கன் வந்து பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து சிவலிங்கத்தையும் அழித்தான். அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர். அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள் மகாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாகாளர் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார்.

உஜ்ஜயினி காலம் காலமாகப் பல சிறப்பம்சங்கள் கொண்ட நகரம். சமண மதத்தை சார்ந்த சுதன்வா என்ற மன்னன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஜைன மதம் அவ்வூரில் எங்கும் வியாபித்திருப்பதைக்கண்டு உஜ்+ஜைன் – உச்சத்தில் இருக்கும் ஜைனம் என்று பொருள் பட உஜ்ஜைய்ன் என்று பெயர் சூட்டினான். ஜைன சமயத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்த நகரம் என்பது பொருள். பல மன்னர்கள் இந்த நகரை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த தலம். முன்காலத்தில் மாளவதேசத்தின் தலைநகராகவும் விக்கிர மாதித்திய மகாராஜாவின் தலை நகரமாகவும் விளங்கியது. விக்கிரமாதித்திய மன்னனும் பட்டியும் இந்த மகா காளியிடம் வரம் பெற்றுத்தான் பல வருடங்கள் ஆட்சி புரிந்து பலசாகசங்கள் செய்தார்கள். விக்ரமாதித்தியன் குலதெய்வம் இந்தத் தேவியே ஆகும். விக்கிரமாதித்த ராஜாவின் தெய்வீக சிம்மாசனம் இருந்த இடம் இது.

அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். மவுரியப் பேரரசின் கிளைத் தலைமைப் பீடம் இங்கே இருந்திருக்கிறது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பற்றிய செய்திகள் உள்ளது. பாணினி பெரிபுளூசு ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். பதஞ்சலி காளிதாசன் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள். தமிழ் இலக்கிய நூல் பெருங்கதை என்ற நூலில் வரும் உதயணன் கதை நிகழ்ச்சிகள் நடந்த தலம் உஜ்ஜயினி என்ற கருத்து உள்ளது. சாலி வாகன சகாப்தம் என்ற ஒரு சகாப்தத்தையே உண்டாக்கிய திறமைமிக்க அரசர் இங்கு ஆட்சி செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த பட்டினத்து அடிகளார் துறவு பூண்டு வடதிசைக்கு சென்ற பொழுது சில காலம் இந்த ஊரில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் உள்ள வினாயகர் ஆலயத்தில் தங்கியிருந்தார். அப்போது உஜ்ஜையினியை அரசாண்டு வந்த பத்ரகிரி மகாராஜா துறவறம் பூண்டு பட்டினத்தாரை குருவாக ஏற்றுக் கொண்டு திருவிடை மருதூரில் வந்து ஞானம் பெற்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

இப்பிரதேசத்தில் முன்னொரு காலத்தில் அசுரர்களும் வேதாளங்களும் நிறைந்திருந்தமையால் பக்தர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் கயிலையை விட்டு இங்கே எழுந்தருளினார். திரிபுர அசுரர்களைச் சிவபெருமான் வெற்றி கொண்ட புனிதத் தலமாகும்.

இராமாயணம் மகாபாரதம் நடைபெற்ற கால கட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த தலம். இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியதால் ராமர் காட் என்னும் குளியல் கட்டம் ஏற்பட்டு உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர். கிருஷ்ணர் பலராமர் சுதாமர் ஆகியோர் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள். தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்டில் விட்டு அங்கே பிறந்திருந்த பெண்ணை வசுதேவர் தூக்கி வந்தார். அந்தப் பெண்ணைக் கம்சன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான் .ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு இங்கே தங்கி அருள் பாலித்தாள். காளிதாசருக்கு அருள் புரிந்த காளி மாதா இவள்தான்.

கார்த்திகை மாதப் பவுர்ணமி இங்கே சிறப்பாகப் கொண்டாடப்படுகிறது. அந்தச் சமயத்தில் கவி காளிதாசரின் நினைவு விழாவும் நடக்கிறது. இங்கு வான ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இது1693ல் நிறுவப்பட்டது. இதற்கு நட்சத்திர மண்டபம் என்று பெயர். இங்கு உள்ள கட்டிடங்களின் நிழலைக் கொண்டு மணி நிமிடம் திதி நட்சத்திரம் இவற்றை அறிய முடியும்.

முகலாயரின் படையெடுப்பின் போது அல்டுமிஷ் என்பவன் இக்கோயிலை இடித்து விட்டு அங்கிருந்த சிவலிங்கத்தைஎடுத்து சென்று விட்டான். அதன் பிறகு ராமச்சந்திரன் என்பவர் புதிய லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து புதிய கோவிலை உருவாக்கினார். பின்னர் பல மன்னர்களின் கைங்கரியத்தினாலும் பொது மக்களின் திருப்பணிகளாலும் இன்று இத்திருக்கோயில் ஐந்து அடுக்குடன் மிகச்சிறப்புடன் விளங்குகிறது. இந்தத் தலத்தைப் பற்றி கந்த புராணம் மகாகாளவனம் என்று கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது என்று அக்கினி புராணம் குறிக்கிறது. இந்த நதியில் மூழ்கி மகாகாளரை வணங்கி காளி தரிசனம் செய்தால் கல்வியும் அறிவும் பெருகும். அசுர குணம் மறையும். இந்துக்கள் பௌத்தர்கள் ஜைனர்கள் ஆகிய மதத்தினரின் முக்கிய யாத்திரை தலமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.