சக்தி பீடம் 15. பிரம்மராம்பாள் – ஸ்ரீ சைலம்

ஸ்ரீ சைலம் சக்தி பீடத்தில் 15 ஆவது கோயில் பிரம்மராம்பாள் கோயிலாகும். இக்கோயில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சைலத்தில் அமைந்துள்ளது. புராண பெயர் திருப்பருப்பதம் ஸ்ரீபர்வதம் ஆகும். இக்கோயில் சைல சக்தி பீடமாகும். 51 சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த சக்தி பீடமாகும். வேறு நூல்களின் கருத்துப்படி மேல் உதடு விழுந்ததாக சொல்லப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் 18 மகா சக்தி பீடங்கள் உள்ளது. இக்கோயில் 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இக்கோயில் உள்ளது. அம்பாள் பிரம்மராம்பாள். இவளுக்கு பிரம்மராம்பிகை தேவி பருப்பநாயகி பிரமரம்பா என்ற வேறு பெயர்களும் உள்ளது. மூலவர் இறைவன் மல்லிகார்ஜூனர். இவரது சன்னதி கீழே இருக்க பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது. தீர்த்தம் பாலாநதி மற்றும் பாதாள கங்கை. தலமரம் மருத மரம் மற்றும் திரிபலா மரம். ஸ்ரீசைல மலையை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை என்கிறது தலபுராணம். இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என தல வரலாறு உள்ளது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் இத்தலமும் ஒன்றாகும். ஜோதிர்லிங்கமும் சக்தி பீடமும் ஒரே ஆலயத்தில் அமைந்திருப்பது போன்ற அமைப்பு இந்தியாவில் மூன்று கோயில்களில் மட்டுமே உள்ளது. அந்த மூன்று கோயிலில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் இறைவனை கிருதாயுகத்தில் இரணியனும் திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும் ஆதிசங்கரரும் பூஜைகள் செய்துள்ளனர்.

ஸ்ரீபர்வதம் ஸ்ரீநகரம் ஸ்ரீகிரி ஸ்ரீசைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த கோவில் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் ஆந்திரா கிருஷ்ண நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் இக்கோயில் மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலுக்குள் மல்லிகார்ஜுனன் சன்னதி பிரம்மராம்பாள் சன்னதி கிழக்கிலிருந்து மேற்கு பார்த்தபடி உள்ளது. விருத்த மல்லிகார்ஜுனர் சஹஸ்ர லிங்கேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர் வீரபத்ரர் உமா மகேஸ்வரர் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த ஐந்து லிங்கங்கள் நவபிரம்ம கோயில்கள் உள்ளது. நந்திமண்டபம் வீரசிரோமண்டபம் என்ற இரண்டு மண்டபங்கள் உள்ளது. இக்கோயிலானது 20 அடி உயரமும் 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதில் சுவரின் வெளிப்புறத்தில் நான்கு புறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்ஜூனனின் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விசுவரூபம், மகிஷாசுரமர்த்தினி போன்ற பல புடைப்புச் சிற்பங்களாக உள்ளது. கோயிலுக்கு நான்கு பக்கமும் கோபுரத்துடன் வாசல்கள் உள்ளது. பிரதான வாசல் கிழக்கு கோபுரம் ஆகும். ராமாயண காலத்தில் ராமர் இக்கோயிலில் சஹஸ்ர லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். மகாபாரத காலத்தில் பாண்டவ சகோதரர்கள் ஐந்து பேரும் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

ஸ்ரீசைலம் மலையில் மகாகாளர்கள் குகையும் அக்குகையில் அவர்கள் வணங்கிய காளியும் ஆதிசங்கரர் சிலையும் உள்ளன. ஸ்ரீசைலம் மலையிலிருந்து 2 கிமீ தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயில் உள்ளது. மஹாவிஷ்ணு விநாயகரின் உருவத்தில் அமர்ந்திருந்திருக்கிறார். இந்த கணபதி தன்னை காண வரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள் யார் இல்லாதவர்கள் என ஸ்ரீ சைலத்தில் உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால் இவருக்கு சாட்சி கணபதி என பெயர். புனித அதிர்வுகள் இந்த வினாயகர் சன்னதியில் இருக்கிறது. அதன் காரணமாக இந்த விநாயகர் இச்சா சித்தி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டு அந்த புனித அதிர்வுகளை உணர்ந்தால் விநாயகரிடம் பிரார்த்தனையில் கேட்ட அனைத்தும் நிறைவேறும்.

அருணாசுரன் என்ற ராட்சசன் காயத்ரி தேவியின் பெயரில் உபாசனை செய்தான். அவன் தவத்தில் மகிழ்ந்த காயத்ரி தேவி அவனுக்கு தரிசனம் கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டாள். காயத்திரியிடம் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற வரத்தை கேட்டான். அதற்கு காயத்ரி தேவி தன்னால் அத்தகைய வரத்தை கொடுக்க முடியாது என்றும் பிரம்ம தேவன் மட்டுமே அப்படிப்பட்ட வரத்தை கொடுக்க முடியும் என்றும் கூறினாள். ராட்சசன் உடனே பிரம்மனை நோக்கி கடும் தவம் இயற்ற தொடங்கினான். அவனின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மா அருணாசுரன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். யாராலும் தன்னை அழிக்க முடியாத வரத்தை கேட்டான். அதற்கு பிரம்மா இந்த வரமானது பிரபஞ்சத்தின் கொள்கைகளுக்கு எதிரானது அதனை கொடுக்க இயலாது. ஆகையால் அதற்குப் பதிலாக வேறொரு வரத்தை கேட்டுமாறு கூறினார். அருணாசுரன் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு 2 கால்கள் மற்றும் 4 கால்கள் கொண்ட உயிரினங்கள் எதனாலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்ற வரத்தை கேட்டான். பிரம்மா அவன் விரும்பிய வரத்தை கொடுத்தார். தன்னை அழியாதவனாகவும் யாராலும் தோற்கடிக்க முடியாதவனாகவும் கருதிய அருணாசுரன் தேவர்களையும் மக்களையும் துன்புறுத்த தொடங்கினான். தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சரணடைந்தார்கள். சிவன் பார்வதியை பார்க்க பார்வதி 6 கால்கள் கொண்ட ஆயிரம் தேனீக்களாக பிரமரம்பா சக்தி ரூபத்தில் பல தேனிக்களை வெளிப்படுத்தி (பிராமரி என்றால் தேனீக்களின் தாய் என்று பொருள்) அவதாரம் எடுத்து கொடூரமான அருணாசுரனைக் கொன்றாள். மகிழ்ச்சியான தேவர்கள் தேவியை பிரமராம்பாவின் வடிவத்தோடு இந்த உலகத்தில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீசைலம் சிவபெருமானுக்கு பிரியமானது என்பதால் பார்வதி தேவி ஸ்ரீசைலத்தை பிரமராம்பா தேவியாக இருந்து அனைவருக்கும் அருள் பாலிக்கிறாள்.

பிரமராம்பா தேவியின் தோற்றம் மற்றும் தெய்வீக வடிவத்தை ஸ்கந்த புராணமும் ஸ்ரீசைல காண்டமும் விவரிக்கின்றன. மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு பின்புறம் பிரமரம்பா தேவியின் வடிவம் உள்ளது. இந்த வடிவத்தில் எட்டு கரங்கள் உள்ளது. பிரமரம்பா கோவிலில் தற்போதும் உள்ள ஒரு சிறு துளை வழியாக தேனீயின் ரீங்கார சத்தம் கேட்கிறது. இக்கோயிலில் உள்ள தேனீக்கள் பக்தர்களை ஒருபோதும் துன்புறுத்தியதில்லை.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 268 வது தேவாரத்தலம் இக்கோயிலாகும். மூலவர் மல்லிகார்ச்சுனர் வேறு பெயர்கள் ஸ்ரீசைலநாதர் ஸ்ரீபர்ப்பதநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள் சந்திரரேகா என்ற இளவரசி. ஒரு நாள் அவள் கனவில் சிவன் தோன்றி தேனீயைத் பின் தொடர்ந்து செல்லவும் என்றார். அவள் கண் விழித்த போது ​​அவள் முன் ஒரு தேனீ இருந்தது. இளவரசி தேனீயைப் பின் தொடர்ந்து சென்றாள். தேனி அவளை ஸ்ரீசைலம் மலைக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த ஒரு மல்லிகைப் பூவில் குடியேறியது. அங்குள்ள இயற்கையில் லயித்த அவள் தன் தந்தையை விட்டு பிரிந்து இம்மலையில் வாழ ஆரம்பித்தாள். ஒரு நாள் மலைப் பகுதியில் இருக்கும் சிவலிங்கத்தைப் போன்ற பாறைகளின் மேல் ஒரு பசு தானாகவே பால் சொரிவதை கண்டாள். அன்று முதல் அந்த பாறைகள் அனைத்தும் சிவபெருமானே என்று அதனை வணங்கத் தொடங்கினாள். மலையில் உள்ள மல்லே என்றும் அழைக்கப்படும் மல்லிகை மலர்களாலும் அர்ஜுனா மலர்களாலும் தினமும் மாலை செய்து அணிவித்து இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இறைவனுக்கு மல்லிகார்ஜுனா என்ற பெயர் வந்தது. சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் இத்தலமும் ஒன்று.

நந்திதேவர் அவதரித்த தலம். நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம். சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால் மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது. கோயில் வாசலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக் குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள் நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி தந்தையே கலங்காதீர்கள் நான் சிவனைக் குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன் என்று தவம் இருந்தார். தவத்தில் மகிழ்ந்த சிவன் நந்தியை தன் வாகனமாக்கியதுடன் அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த நந்தியால் என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். அதன்படி பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்று பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். பர்வதமலை ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால் நந்தி அவதரித்த இந்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது.

கோயிலின் கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபம் உள்ளது. தெற்கு வாயில் கோபுரம் ரங்க மண்டபம் என அழைக்கப்படுகிறது. கிழக்குப் புறமுள்ள கோபுரம் கிருஷ்ண தேவராயராயரால் கட்டப்பட்டதால் அவர் பெயராலேயே கிருஷ்ணதேவராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. வடக்குப் புற கோபுரமானது சத்ரபதி சிவாஜியால் 1677 ல் கட்டப்பட்டதால் சிவாஜி கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேற்குப் புற கோபுரம் கோயில் நிர்வாகத்தால் 1966 இல் கட்டப்பட்டு பிரம்மானந்தராயா கோபுரம் என பெயரிடப்பட்டது. இவற்றின் மையத்தில் மல்லிகார்சுனர் கருவறை உள்ளது. கருவறை மீது உள்ள விமானமானது காக்கத்திய மன்னரான கணபதியின் சகோதரியான மைலம்மா தேவியால் கட்டப்பட்டது. கோயில் முகப்பில் சித்தி விநாயகர் உள்ளார். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில் ராஜராஜேஸ்வரி கோயில் அன்னபூரணி ஆலயம் சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில் பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் உள்ளது. அகஸ்தியரின் மனைவியான லோபாமுத்ராவின் சிலை தனிச்சன்னதியில் உள்ளது. இந்த சிலை முன்பாக ஒரு ஸ்ரீ யந்திரம் உள்ளது. இந்த சன்னதிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக் கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினார். மல்லிகார்ஜுனரையும் அன்னை பிரம்மராம்பாளையும் தரிசித்து 10 நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டான். தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்து விட எண்ணினான். அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் பிரம்மராம்பாதேவி சிவாஜிக்கு காட்சி தந்தருளி பெரிய வாள் அளித்து கடமை உணர்வை போதித்து பகைவரை அழித்து வெற்றி பெற வாழ்த்தினாள். வீர சிவாஜிக்கு பிரம்மராம்பிகை அளித்த வாள் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும் தியான மண்டபத்தையும் உருவாக்கினார். இந்த கோபுரம் சிவாஜி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்படுகிறார். சிவாஜியால் இத்தலம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது இங்குள்ள கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும் கங்கையில் 2000 முறை குளிப்பதாலும் நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும் காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சி புரிகிறார். வேதாந்திகள் பரமயோகிகள் சித்தர்கள் மகாதவசிகள் இருக்கும் இக்கோவிலுக்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள காடுகளில் ஹனுமந்தபீரம் என்ற வகை மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் இலையின் இரு பகுதிகளிலும் ஆஞ்சநேயர் உருவம் காணப்படுகிறது. பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப் பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குல குருவான ரேவணசித்தர் ஒரு நாரத்தம் பழத்தைக் கொடுத்து சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா எனப் பெயரிட்டனர். அச்சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றி தன் பெயர் மல்லையா என்றும் தான் மிகவும் பசியோடு இருப்பதாக கூறவே ஸித்தப்பா ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும் பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்ட போது அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி இவரே மல்லையா என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்த போது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது. பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினார். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தார். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் தான் வெட்டிய குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டது.

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம் அளித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு அவனது மண் பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விட்டார்கள். சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்க லிங்க மயமாகப் காட்சி கொடுத்து அஞ்சாதே உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக என்று அருளினார். வீட்டிற்குள் சென்ற கேசப்பா பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு இறைவனின் திருவருளை வியந்தவனாக அடியார்களுக்கு அன்னம் அளித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம் அடிகேச்வரம் என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன் ஒரு கயிற்றைக் கொடுத்து அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் அருகில் கயிற்றைக் கண்ட சிற்பி அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும் போது ஒரு நந்தி பாறைகளிடையே சிக்கவே திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம் அணைக்கட்டில் நீரின் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.

கிருஷ்ணர் அர்ஜூனனிடம் துரியோதனனின் சூழ்ச்சியைக் கூறி அவனுடன் போர் செய்ய வேண்டிய நிலை வரும். அவனை வெல்ல பாசுபதாஸ்திரம் வேண்டும் எனவே சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவரிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்று வரும்படியான அறிவுரையை கூறினார். கிருஷ்ணர் ஆலோசனைப்படி அர்ஜூனன் ஸ்ரீசைலம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் அர்ஜூனன் தபம் செய்யும் இடத்திற்கு வந்தார். அப்போது ஒரு அசுரன் பன்றி வடிவில் அர்ஜூனனைக் கொல்ல பயங்கரமாக உறுமிக் கொண்டு பாய்ந்து வந்தான். அர்ஜூனன் கண் விழித்து பன்றி மீது அம்பு விடவும் சிவபெருமானும் அதே சமயம் பன்றி மீது அம்பு விட்டார். இருவரும் பன்றியைக் கொன்றது யார் என்பது பற்றி சண்டை வந்து விட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டார். சிவபெருமானை வில்லால் அடிக்க அர்ஜூனன் வில் ஒடிந்தது. பின்பு சிவபெருமான் அர்ஜூனனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் எனக்கேட்டார். அர்ஜூனன் தான் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என சிவபெருமானைக் கேட்டுக் கொண்டு தமக்கு பாசுபதாஸ்திரம் வேண்டும் எனக் கேட்டான். அர்ஜூனன் தம்முடன் போர் செய்து வில்லாற்றில் மேன்மை பெறுவதற்காகவும் தனுர் வேதத்தை அர்ஜூனனுக்கு போதிப்பதற்காகவும் வேடனாக வந்ததாக சிவபெருமான் கூறினார். பின்பு பாசுபதாஸ்திரப் பயிற்சியையும் மந்திரத்தையும் உபதேசம் செய்து அருள் புரிந்தார். அர்ஜூனன் தவம் செய்த இடம் இங்கே உள்ளது. மலையில் படிக்கட்டுப்பக்கம் என்ற இடத்தில் வீரசங்கரர் ஆலயம் உள்ளது. அந்த வீரசங்கரர் தான் அர்ஜூனனுடன் வேடன் வடிவில் போர் செய்தவர்.

ஸ்ரீசைலத்தைப் பல நூல்கள் புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம் இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி ஆகியவை இத்தலத்தின் மகிமையைக் கூறும் நூல்களாகும். ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான சிகரத்தைத் தரிசித்தபடியே மல்லிகார்ஜுனரைத் தியானிப்பார்கள். தான் இருந்த இடத்திலிருந்தே ராமபிரான் மல்லிகார்ஜுனரைத் தரிசித்துள்ளார்.

இந்த கோயிலில் பூஜைகள் வீரசைவ காரணாகம விதிமுறைப்படி நட்சந்து வருகின்றது. தினமும் நடக்கும் நித்ய நைவேத்ய பூஜையின் போது விருத கக்பத்தின் அடிப்படையில் இங்கு அமைந்துள்ள மகா நந்திக்கு நைவேத்யம் கிடையாது. செவ்வாய் கிழமைகளிலும் பிரதோஷம் சிவராத்திரி தினத்தில் மட்டும் தான் இந்த மகா நந்திக்கு நீரில் ஊர வைத்த முக்கடலையை ஒரு மஞ்சள் துணியில் வைத்து அதை நந்தியின் வாயோடு கட்டி வைப்பது காலம் காலமாக நடந்து வருகின்ற முறையாகும். இதை அறியாத பலர் இந்த முக கவசம் அணிந்தது போன்ற படத்தை அறியாமையாலும் மூடத்தனத்தினாலும் பரப்பி கடவுளுக்கே கொரோனா வைரஸ் பிடிக்கிறதா என கேளி செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

வரலாற்று ஆய்வுகளின்படி ஸ்ரீசைலத்தின் வாழ்விட வரலாறு சுமார் 30000 முதல் 40000 ஆண்டுகளுக்கு முந்தையது. ஸ்ரீசைலத்தின் பல்வேறு இடங்களில் அந்தக் காலக் கற்காலக் கருவிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஸ்ரீசைலத்தின் வரலாறு தென்னிந்தியாவின் முதல் பேரரசைக் கட்டியவர் மற்றும் ஆந்திரதேசத்தின் ஆரம்பகால ஆட்சியாளர்களான சாதவாகனர்களுடன் தொடங்குகிறது என்பதை கல்வெட்டுச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. ஸ்ரீசைலம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலுமாவியின் நாசிக் கல்வெட்டில் காணலாம். தத்தாத்ரேயர் இங்கு தவம் செய்திருக்கிறார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது தத்தாத்ரேய விருட்சம் என்றழைக்கப்படும் மரம் உள்ளது. ஆதிசங்கரர் இங்கு தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை இங்கு எழுதினார். இந்த மலையில் தவம் புரிந்த ரிஷ்யசிருங்க முனிவர் முன் சிவபெருமானும் பார்வதி தேவியும் தோன்றி அவருக்கு அருள்புரிந்தார்கள்.

சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பிய போது அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி கௌசிக அரசனை வீர சைவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு அவனை சந்திக்கச் சென்றாள். அரசனின் தவறான செய்கையால் மனம் நொந்து தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள் அக்கமஹா தேவி. ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்கமஹா தேவியின் திருவுருவச் சிலை உள்ளது.

3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதகர்ணியின் பண்டைய நூல்களில் ஸ்ரீசைலம் பற்றிய குறிப்பு உள்ளது. அந்த அரசரின் ஆட்சியின் கீழ் உள்ள நிலங்களை விவரிக்கும் நூல்களில் ஸ்ரீசைலம் சகோர ஷேதகிரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுனர் கோயிலை முதன் முதலில் கட்டமைத்தவர்கள் சத்வஹன்சர்கள் என்று வரலாற்றுக்கு முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவில் பல காலங்களில் பல ஆட்சியாளர்கள் மற்றும் வம்சங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.

இக்ஷவாகுக்கள் கிபி 200-300 ஆம் ஆண்டில் ஸ்ரீசைலத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள விஜயபுரியில் இருந்து ஆட்சி செய்தனர்.

பல்லவ ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் கிபி 340-575 ஆம் ஆண்டில் இந்த பகுதியும் சேர்க்கப்பட்டது. கிபி 340-450 ஆம் ஆண்டு வரை சுதந்திர சமஸ்தானமாகவும் இருந்துள்ளது. கடம்ப சாந்தி வர்மாவின் தெலகுண்டா கல்வெட்டில் இந்த தகவல் உள்ளது.

கிபி 6 ஆம் நூற்றாண்டில் கடம்ப மன்னன் மயூர சர்மா ஸ்ரீசைலத்தை ஸ்ரீபர்வதம் என்று அழைத்தார். பிருஹதனா என்று அழைக்கப்படும் ஒரு வகை கடம்பர்களின் உதவியுடன் பல்லவ வம்சத்தை கைப்பற்றி நிலத்தை கைப்பற்றினார். தாங்கள் வென்ற நிலத்தோடு ஸ்ரீபர்வதத்தை ஒருங்கிணைத்தனர்.

கிபி 735 – 755 இல் ராஷ்டிரகூடப் பேரரசின் ஆட்சியாளரான தந்திதுர்கா ஸ்ரீபர்வதம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலங்களை ஆட்சி செய்தார்.

கல்யாண சாளுக்கியராஜு 980-1058 ஆம் ஆண்டு ஒரு கோபுரத்தை நிறுவினார். அவரது பேரன் கிபி 1069 இல் சத்திரம் மற்றும் தர்மசாலாவுக்காக ஸ்ரீசைலத்திற்கு ஒரு கிராமத்தை நன்கொடையாக வழங்கினார். 

ஸ்ரீசைலம் மகா சிவன் கோயில் என்றும் வேதங்களின் தாயகம் என்றும் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகழ் பெற்றது. ஹொய்சாள வம்சத்தின் ஆட்சியாளர்கள் காலத்தில் ஸ்ரீசைலத்தில் கிருஷ்ணா நதியில் உள்ள பாடலகங்கையில் இருந்து ஸ்படிக சிவலிங்கங்களை சேகரித்து அவற்றைப் பயன்படுத்தி ஏராளமான கோயில்களைக் கட்டினார்கள். அன்றிலிருந்து மகாராஷ்டிரர்கள் ஸ்ரீசைலத்தை தெற்கு காசி என்று அழைக்கின்றனர். 

ரெட்டி மன்னர்களின் காலம் கிபி 1325-1448 ஆம் ஆண்டு வரை ஸ்ரீசைலத்தின் பொற்காலம் ஆகும். இந்த வம்சத்தின் அனைத்து ஆட்சியாளர்களும் கோயிலுக்கு சேவைகள் செய்து கொண்டாடினர். பிரோலயவேமா என்ற ரெட்டி மன்னன் ஸ்ரீசைலம் மற்றும் பாதாளகங்கைக்கு படிக்கட்டுப் பாதையை அமைத்தார். அனவெமரெட்டி வீரசிரோ மண்டபம் கட்டினார்.

விஜய நகர சாம்ராஜ்யத்தில் கிபி 1336-1678 ஸ்ரீசைலத்தில் கட்டுமானப் பணிகள் பல நடைபெற்றிருக்கிறது. அப்போது ஸ்ரீசைலத்திற்கு பல கிராமங்களை தானமாக வழங்கினார்கள்.  விஜயநகரப் பேரரசின் இரண்டாம் ஹரிஹரராயர் மல்லிகார்ஜுனா கோயிலின் முகமண்டபத்தைக் கட்டினார். மேலும் கோயில் வளாகத்தின் தெற்குப் பகுதியில் ஒரு கோபுரத்தையும் எழுப்பினார்.

கத்யவேமா ரெட்டி கிபி 1405 இல் ஸ்ரீசைலத்திற்கும் பெடகோமதி வேமா ரெட்டி பாதலகங்காவிற்கும் படிகளை அமைத்தார்.

கிருஷ்ணதேவராயர் கிபி 1516 இல் போருக்கு சென்று வெற்றியுடன் திரும்பும் போது இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு சாலு மண்டபங்களைக் கட்டினார். கோவிலின் ராஜகோபுரத்தையும் கட்டினார்.

பின்னர் முகலாயப் பேரரசர்கள் இந்தப் பகுதியைக் கைப்பற்றினர். மேலும் இந்த இடம் கர்னூல் நவாபுகளுக்கு ஜாகிர் என்று வழங்கப்பட்டது. முகலாய பேரரசர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த இடம் ஹைதராபாத் நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கிபி 1800ல் நிஜாம் கர்னூல் மாவட்டத்தை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்த போது மேஜர் மன்றோ மாவட்டத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நிர்வாகத்தை மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 1929 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் நிர்வாகத்திற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.1949 ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த இக்கோயில் 1956 ஆம் ஆண்டு முதல் அதன் பழைய பெருமையைப் பெற்றது.

சாதவாகனர்கள் இக்ஷவாகுகள் பல்லவர்கள் விஷ்ணுகுண்டிகள் சாளுக்கியர்கள் காகத்தியர்கள் ரெட்டி மன்னர்கள் விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் சத்ரபதி சிவாஜி போன்ற புகழ்பெற்ற பேரரசர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். கோயிலிலும் அதைச் சுற்றிலும் சுமார் 116 கல்வெட்டுகள் உள்ளன திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் திருப்பதிகங்களில் இத்தலம் திருப்பருப்பதம் என்றும் சுந்தரர் திருப்பதிகத்தில் சீபர்ப்பதம் என்றும் குறிக்கப்படுகிறது. தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர் லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.