சுலோகம் -119

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-72

அர்ஜூனா இது தான் பிரம்மத்தை அடைந்தவனின் நிலை. இதை அடைந்த பின் யோகி ஒரு போதும் மோகமடைவதில்லை. மேலும் உயிர் பிரியும் நேரத்திலும் இந்த பிரம்ம நிலையிலேயே நிலை பெற்று பிரம்மானந்ததை அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மன உறுதியுடையவன் எப்படி இருப்பான் என்று மேலே சொல்லப்பட்ட சுலோகங்களின் படி இருப்பவன் தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து பிரம்ம நிலையை அடைந்து விடுவான். இந்த நிலையை அடைந்தபின் அவனது மனம் ஒரு போதும் கலக்கமடையாமல் எதன் மீதும் ஈர்ப்பு ஏற்படாமல் உறுதியுடனே இருக்கும். அவனது உயிர் பிரியும் நேரத்தில் கூட இந்த உலகத்தை விட்டு செல்கிறோமே என்ற எண்ணமோ எங்கு செல்வோம் என்ற பயமோ இல்லாமல் தனது உடலின் மீதும் பற்று இல்லாமல் பரமானந்தத்தில் இருக்கும் நிலையை அடைகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -118

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-71

எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்து விட்டு மமதை இல்லாதவனாக அகங்காரமற்றவனாக சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக இருக்கிறானோ அவனே அமைதியை அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் உள்ள அனைத்து போகங்களையும் துறந்து விட்டு நான் எனது என்ற அகங்காரம் ஆணவம் இல்லாமல் சிறிதளவும் ஆசை இல்லாமல் இருக்கும் மனிதன் அமைதியை அடைகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -117

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-70

பல நதிகள் கடலில் வந்து கலந்த போதிலும் அந்த கடல் நீரானது எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது. அது போல உலகத்திலுள்ள போகங்கள் அனைத்தும் தன்னுடைய தன்மைக்கு ஏற்றார் போல புலன்களைத் தன் வசப்படுத்தியவனின் மனதில் வந்து சேர்ந்தாலும் அவனது மனமானது அமைதியுடன் இருக்கிறது. ஆனால் போகங்களை விரும்புபவனின் மனமானது அமைதியுடன் இருப்பதில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒவ்வொரு நதியும் அது ஓடி வரும் வழியில் இருக்கும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாசு அடைந்து நிறம் மாறி கடலில் கலக்கிறது. ஆனாலும் கடல் நீரானது தனது தன்மையை மாற்றிக் கொள்ளாமல் தனது தன்மையிலேயே இருக்கிறது. அது போல உலகத்தில் உள்ள போகங்கள் அனைத்தும் அதனுடைய தன்மைக்கு ஏற்ப ஆசைகளை கொடுத்து மாயை ஏற்படுத்தி புலன்களைத் தன் வசப்படுத்தியவனின் மனதில் வந்து சேர்ந்தாலும் அவனது மனமானது அமைதி என்ற தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் அமைதியுடன் இருக்கிறது. ஆனால் போகங்களை விரும்புபவனது மனமானது ஆசைகளின் வழியே சென்று அமைதி இல்லாமல் இருக்கிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -116

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-69

அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவு போல இருக்கிறதோ அப்போது மன உறுதியுடையவன் விழித்துக் கொண்டிருக்கிறான். போகங்களை அனுபவிக்க பகலில் எப்போது உயிரினங்கள் விழித்திருக்கின்றனவோ அப்போது மன உறுதியுடையவன் அந்த நேரத்தை இரவு நேரமாக எடுத்துக் கொள்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த சுலோகத்தில் இரவு பகல் என்று குறிப்பிடுவது சூரியன் இருக்கும் பகலையும் சூரியன் மறைந்தவுடன் வரும் இருட்டையோ அல்ல. ஐம்புலன்கள் மனிதனை ஆசையின் பக்கம் இழுத்துச் செல்லும் போது அவன் மாயை என்னும் இருட்டில் மயங்கி அதன் பின் செல்கிறான். ஆனால் மன உறுதியுடையவன் மாயை என்னும் இருட்டில் மயங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றான். அனைத்து உயிரினங்களும் தனது கர்மாக்களை அனுபவிக்கும் போது மகிழ்ச்சி வந்தால் மகிழ்ச்சி அடைந்து கொண்டும் துன்பம் வந்தால் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் மன உறுதியுடையவன் மகிழ்ச்சி துன்பம் எது வந்தாலும் இரவு நேரத்தில் தூங்கும் போது அமைதியாக இருப்பது போல் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கின்றான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -115

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-68

நீண்ட புஜங்கள் உடையவனே எந்த மனிதனுடைய புலன்கள் புலனுக்குரிய போகப் பொருட்களில் இருந்து எல்லா விதங்களிலும் மீட்கப்பட்டு விட்டானோ அவனுடைய புத்தி உறுதியானது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனிதன் தன்னுடைய பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் உணர்தல் ஆகிய ஐந்து புலன்களுக்குரிய போகப் பொருட்களில் இருந்து எல்லா வகைகளில் இருந்தும் ஆசைகளை விட்டு விட வேண்டும். உதாரணமாக கண்ணால் பலவற்றை காணாலாம். ஆனால் எதனைக் கண்டாலும் அதன் மீது பற்று ஆசை மற்றும் எந்த விதமான சலனமும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இது போல் ஐந்து புலன்களினாலும் பற்று ஆசை மற்றும் எந்த விதமான சலனமும் ஏற்படாமல் இருந்தால் அவனுடைய புத்தி உறுதியானது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -114

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-67

நீரில் போய்க் கொண்டிருக்கும் ஓடத்தைக் காற்று அடித்துக் கொண்டு போவது போல போகங்களில் சஞ்சரிக்கின்ற புலன்களில் எந்த ஒரு புலனும் மனம் ஒட்டி இருக்கின்றதோ அந்த ஒரு புலன் மனம் வசப்படாத இந்த மனிதனின் புத்தியைக் கவர்ந்து சொல்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உயிர்கள் இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிறவி என்னும் ஓடத்தில் பயணம் செய்யும் போது மனமான காற்றானது தனியாக அமைதியாக பயணிக்கும் போது இறைவனை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் மனமான காற்றானது புத்தியுடன் இணைந்தவுடன் ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலன்களுடன் இணைந்தாலும் அது ஆசைகளின் வழி செல்லும் போது புலன்களுடன் இணைந்த மனமானது பெருங்காற்று தன் செல்லும் வழியில் ஓடத்தை இழுத்துச் செல்வது போல் மனிதனின் புத்தியை கவர்ந்து இழுத்துச் செல்கிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -113

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-6

மனதையும் புலன்களையும் வெற்றி கொள்ளாதவனுக்கு நிச்சயமான புத்தி இருக்காது. உறுதியான புத்தி இல்லாதவனுக்கு மனதில் பாவனையும் தோன்றாது. அவ்வாறே பாவனை இல்லாதவனுக்கு அமைதியும் கிடைக்காது. அமைதி இல்லாதவனுக்கு சுகம் ஏது?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனதையும் ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கொள்ளாதவனுக்கு நிலையான புத்தி இருக்காது. எந்த செயலை செய்தாலும் நிலையில்லாத புத்தியானது அதனை முதலில் சரி என்று சொல்லும் சிறிது நேரத்தில் இது சரியில்லை என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டு புத்தியானது தடுமாறிக் கொண்டே இருக்கும். இப்படிப் பட்டவர்களது மனதில் இறைவனைப் பற்றிய சிந்தனையும் தியானமும் வராது. இதனால் இவர்களது மனதில் அமைதி என்றும் இருக்காது. அமைதி இல்லாதவனுக்கு வாழ்க்கையில் இன்பம் என்பது இருக்காது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -112

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-65

உள்ளத் தெளிவு ஏற்பட்டு விட்டால் இவனுடைய எல்லா துக்கங்களுக்கும் அழிவு ஏற்பட்டுவிடும். தெளிவடைந்த மனமுடைய கர்ம யோகியின் புத்தி விரைவிலேயே ஏல்லா விஷசங்களில் இருந்தும் விலகிப் பரமாத்மா ஒன்றிலேயே நன்கு நிலை பெற்று விடுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஐந்து புலன்களையும் அடக்கி தன் வசப்படுத்தி இறைவன் மீது எண்ணத்தை வைத்து தியானம் செய்கின்ற சாதகன் உள்ளத்தில் தெளிவு ஏற்பட்டு விட்டால் அவனது மனமானது அமைதி அடைந்து இறைவனின் மீது லயித்து கிடக்கும். சதா சர்வ காலமும் இறைவனின் மீது லயித்து இருப்பவனுக்கு உலக ரீதியாகவும் பந்த பாச ரீதியாகவும் ஏற்படும் அனைத்து துக்கங்களும் எரித்து அழிந்து விடுகிறது. அதன் பிறகு அவனுடைய மனமானது உலக விஷசயங்களில் இருந்து விலகி இறைவனிடம் மட்டுமே நிலையாக நின்று விடுகிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -111

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-64

தன்வசப்பட்ட மனதுடைய சாதகன் விருப்பு வெறுப்பின்றி தன்னால் வசப்பட்ட புலன்கள் மூலம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு அவற்றின் மூலம் பாதிக்கப்படாமல் உள்ளத் தெளிவை அடைவான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஐந்து புலன்களையும் அடக்கி தன் வசப்படுத்தி இறைவன் மீது எண்ணத்தை வைத்து தியானம் செய்கின்ற சாதகன் உலகத்தில் அவனைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் தன் புலன்களால் பார்க்கும் போது துன்பம் வந்தால் அதனை வெறுக்காமலும் இன்பம் வந்தால் அதனால் மகிழ்ச்சி அடையாமலும் அனைத்தையும் ஒரே மாதிரி எண்ணத்தில் பார்க்கும் போது அவன் உள்ளத் தெளிவை அடைகிறான்.

சுலோகம் -110

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-63

கோபத்தினால் அறிவின்மை ஏற்படும். அறிவின்மையால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாற்றத்தினால் புத்தி அழிவு ஏற்படுகிறது. புத்தி அழிவதினால் மனிதன் தன் நிலையில் இருந்து வீழ்ச்சி அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனிதனின் ஆசை மற்றும் அவனது எண்ணங்கள் நிறைவேறாத போது ஏற்படும் கோபத்தினால் அவனுக்கு அறிவு மயக்கம் ஏற்படுகிறது. இதனால் அவனது அறிவு தான் செய்வது மட்டுமே சரியானது என்று எண்ணி மனதில் தோன்றியதெல்லாம் செய்து கொண்டு சரியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இந்த தடுமாற்றத்தினால் அவனது புத்தி கீழ் நிலைக்கு சென்று அழிய ஆரம்பிக்கின்றது. புத்தி அழிவதினால் மனிதன் தன் நிலையில் இருந்து கீழான நிலைக்கு செல்கிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.