பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-61
அனைத்து புலன்களையும் தன் வசப்படுத்தி ஒரு முகப்படுத்திய சித்தமுடையவன் என்னையே பரகதியாகக் கொண்டு தியானத்தில் அமர வேண்டும். ஏனெனில் எவனுடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ அவனுடைய புத்தி உறுதியானதாகிறது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
தன் அனைத்து புலன்களையும் தனக்குள் உள்ளிழுத்து தன் வசப்படுத்தியவனின் புத்தியானது உறுதியான வைராக்கியத்துடன் இருக்கும். அந்த உறுதியான வைராக்கியத்துடன் தன் மனதை ஒரு முகப்படுத்தி தனக்குள் இருக்கும் இறைவனை காண வேண்டும் என்று தியானத்தில் அமர்ந்தால் தனக்குள் இருக்கும் இறைவனை கண்டு உணரலாம். அப்போது அவனுடைய மனதில் இருக்கும் ஆசைகள் அனைத்தும் அழிந்துவிடும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
புத்தி உறுதியாகி தியானத்தில் அமர்பவனுடைய மனம் இறைவனிடம் ஒன்று சேர்கிறது. அப்படி மனதை இறைவனிடம் ஒன்று சேர்த்த சாதகனின் மனமாகிய காற்றும் நெருப்பாகிய இறைவனும் ஒன்று சேர்வதினால் காற்றும் நெருப்பும் சேர்ந்து வைக்கோலை எரிப்பது போல் சாதகனின் மும்மலங்களும் கர்மாக்களும் எரிந்து சாதகன் முக்தி பெறுகிறான்.