மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -4

விதுரர் மற்றும் சஞ்சயனுடைய மேற்பார்வையில் மடித்து போனவர்களுடைய சடலங்கள் அனைத்தும் ஊழித்தீயில் தகனம் செய்யப்பட்டன. யுதிஷ்டிரரும் அவருடைய சகோதரர்களும் திருதராஷ்டிரனும் ஏனைய பிரமுகர்கள் அனைவரும் கங்கை தீர்த்தத்துக்கு போய் சேர்ந்தார்கள். காந்தாரியும் குந்தியும் திரௌபதியும் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அனைவரும் கங்கை நதியில் நீராடி மடிந்து போனவர்களுக்கு இறுதிக்கடன் முறையாக நிறைவேற்றினார்கள்.

இப்பொழுது உயிரை கொடுப்பதற்கு நிகரான கடமை ஒன்று குந்திக்கு வந்தது. துயரத்தில் இருந்த குந்திதேவி கர்ணன் தனக்கு பிறந்த முதல் செல்வன் என்பதையும் யுதிஷ்டிரனுக்கு மூத்தவன் என்பதையும் கர்ணனின் வரலாறு முழுவதையும் அனைவரிடம் கூறினாள். இச்செய்தி துயரத்தில் மூழ்கியிருந்த அனைவருக்கிடையில் சலசலப்பை உண்டு பண்ணியது. பாண்டவ சகோதரர்கள் கர்ணனை பலவிதங்களில் அவமானப்படுத்தி இருந்தனர். ஆனால் அதை அலட்சியம் செய்து பாண்டவர்கள் பேசியதை பொருட்படுத்தவில்லை. தன்னுடைய உண்மை வரலாற்றை வாழ்க்கையின் பிற்பகுதியில் கர்ணன் அறிந்தான். உயிர் இருக்கும் வரையில் துரியோதனனுக்கு சேவை செய்யும் பொருட்டு அந்த ரகசியத்தை மறைத்து வைத்திருந்தான். இத்தனை காலம் கர்ணனை யார் என்று அறிந்து கொள்ளாது அவனை அலட்சியப்படுத்திய பாண்டவர்கள் ஐவரும் கர்ணனின் மேல் இருந்த வெறுப்பு மாறி அவனிடம் மரியாதை கொண்டனர். உயிரோடு இருந்த காலமெல்லாம் சூழ்நிலையால் கர்ணனை வேற்றான் என்று எண்ணிய பாண்டவர்கள் இப்போது கர்ணனுக்கு சிரத்தையுடன் ஈமசடங்கை செய்து முடித்தனர்.

ஸ்திரீ பருவம் முடிந்தது அடுத்தது சாந்தி பருவம்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -3

பாண்டவ சகோதரர்கள் 13 வருடங்களுக்கு பிறகு தங்களிடமிருந்து தாய் குந்தியை சந்தித்தனர். அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். காந்தாரியின் மருமகள்களும் அருகில் தனது கணவர்களை இழந்து நின்றனர். சோகம் ததும்பிய சந்திப்பாக அது காட்சி கொடுத்தது. காந்தாரியை பார்த்து திரௌபதி தாயே உங்களுடைய பேரர்கள் அனைவரும் நடந்த போரில் அழிந்துவிட்டனர் என்று தேம்பி அழுதாள். பெரும் துயரத்தில் மூழ்கி இருந்தவர்கள் தங்களது பரிதாபகரமான நிலையை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்

கொடிய யுத்தத்தின் முடிவை அறிந்து கண்டு கொள்வதற்காக காந்தாரிக்கு ஞானக்கண்ணை கொடுத்தருளினார் வியாசர். சிறிது நேரம் இதை பார்த்து திகைத்து போன காந்தாரி யுத்தத்தை உள்ளபடி கிருஷ்ணரிடம் விவாதித்தாள். இறுதியில் பார்த்த நிகழ்ச்சிகள் யாவும் மனைவிமார்கள் தங்களுடைய கணவன்மார்களை இழந்து விட்டதை குறித்து அழுகையின் குரலாகவே இருந்தன. இதற்கெல்லாம் காரணம் கிருஷ்ணனுடைய பாராமுகம் என்று காந்தாரி கிருஷ்ணரிடம் குற்றம் சாட்டினாள். கிருஷ்ணன் நினைத்திருந்தால் இந்த பெரும்போரை ஆரம்பத்திலேயே தடுத்து இருக்கலாம் என்பது காந்தியின் கருத்து. எண்ணிக்கையில் அடங்காத சேனைகள் சேனைத் தலைவர்கள் அரசர்கள் அழிந்து போனதற்கு காரணமாக இருந்தவன் கிருஷ்ணன் என்று காந்தாரி எண்ணினாள்.

குரு வம்சம் முழுவதும் அழிந்து போனதற்கு நிகராக 36 வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணரின் விருஷ்ணி வம்சம் தங்களுக்குள்ளேயே கலவரம் மூண்டு அழிந்துபோகும் என்று கிருஷ்ணன் மீது அவள் சாபத்தை சுமத்தினார். அதற்கு கிருஷ்ணன் தாயே நீ உள்ளன்போடு உனது கணவருக்கு நீ செய்திருந்த பணிவிடைகளின் விளைவாக ஓரளவு புண்ணியத்தை நீ பெற்றிருக்கிறாய். விருஷ்ணி வம்சத்தின் மீது சாபம் கொடுத்ததன் விளைவாக சேர்த்து வைத்த புண்ணியத்தை நீ இழந்து விட்டாய். விருஷ்ணிகள் யாராலும் வெல்லப்பட மாட்டார்கள் என்பது உண்மையே. ஆயினும் ஏதேனும் ஒரு விதத்தில் அவர்கள் இவ்வுலகை காலி பண்ணி ஆக வேண்டும். ஆகையால் உன்னுடைய சாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த யுத்தத்தில் நான் பாராமுகமாக இருந்து விட்டேன் என்று நீ குற்றம் சாட்டுவதில் உண்மை இல்லை. குரு வம்சத்தவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்துக் கொண்டேன். உண்மையில் உங்கள் குடும்பத்தின் அழிவுக்கு காரணம் உங்களுடைய பாராமுகமும் உங்களுடைய கணவரின் பாராமுகம் மட்டுமே. உங்களுடைய புதல்வர்களின் கொடுரம் நிறைந்த அதர்மங்களே இந்த யுத்தத்திற்கு காரணம். இந்த அதர்மங்களுக்கு துணை நின்ற இனைத்து அரசர்களும் தடுக்க முடியாதபடி அழித்துவிட்டனர். அது குறித்து இனி ஆவது ஒன்றுமில்லை. ஆகையால் துயரத்திலிருந்து விடுபட்டு தெளிவடைந்து இருப்பாயாக என்று கிருஷ்ணன் கூறினார்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -2

பாண்டவர்கள் தங்களது பெரியம்மாவாகிய காந்தாரியை சமரசம் செய்து கொள்ள கடமைப்பட்டிருந்தார்கள். அது மிக கடினமான காரியம் ஏனென்றால் இந்த யுத்தத்தில் அவனுடைய நூறு புதல்வர்களையும் பாண்டவர்களால் இழந்து விட்டாள். பிரத்யேகமாக பீமன் மீது அவள் அதிகமாக கோபம் கொண்டிருந்தாள். பீமன் ஒருவனே அனைவரையும் அழித்தவன். அதை முன்னிட்டு பீமன் மீது காந்தாரி சாபமிடுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது. காந்தாரியின் சாபத்தை தடுத்தல் பொருட்டு வியாசர் முதலில் காந்தாரியிடம் சென்று அவளை சமாதானப்படுத்தினார். நிகழ்ந்த யுத்ததிற்கு காரணம் துரியோதனனும் அவனது சகோதரர்களும் என்பதை அவள் ஒத்துக்கொண்டாள். யுத்தத்தை கிளம்பியவர்கள் அந்த யுத்தத்தில் மடிந்து போனது முறையே என்று வியாசர் ஆறுதல் கூறி அங்கிருந்து கிளம்பினார்.

பீமன் கௌரவ சகோதரர்களை கொல்ல கையாண்ட முறையை ஆமோதிக்க அவளால் இயலவில்லை. துச்சாதனனுடைய ரத்தத்தை குடித்தான். கதையுத்தத்தில் முறையற்ற பாங்கில் துரியோதனனின் தொடையில் அடித்து அவனை வீழ்த்தினான். எனவே பீமன் மீது கோபம் மிகவும் கொண்டிருந்தாள். பெரியம்மாவாகிய காந்தாரியின் காலில் விழுந்து பீமன் வணங்கினான். தாயே தாங்கள் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் குற்றமாகவே நான் ஏற்றுக் கொள்கின்றேன். நான் செய்துள்ள குற்றங்களுக்கு என்னை மன்னிப்பார்களாக. மற்றும் ஒரு விஷயத்தை நான் உங்களிடம் கூறுகின்றேன். 13 வருடங்களுக்கு முன்பு இச்செயலை சபை நடுவே நான் செய்திருந்தால் அப்போது தாங்கள் ஆமோதித்து இருப்பீர்கள். அப்போது என் தமையன் யுதிஷ்டிரன் செய்த தடையால் நான் இத்தனை காலம் காத்திருந்தேன். அன்று அவமானப்படுத்தப்பட்ட திரௌபதிக்கு ஆறுதல் தரும் பொருட்டு நான் செய்திருந்த சபதத்தின்படி துச்சாதனனின் ரத்தத்தை குடித்துவிட்டு யாருக்கும் தெரியாத வண்ணம் துப்பிவிட்டேன்.

திரௌபதிக்கு துரியோதனன் தன் தொடையை காட்டி அவமானப்படுத்தினான். அப்போழுதே துரியோதனனின் தொடையை துண்டிப்பேன் என்று நான் தீர்மானம் பண்ணினேன். அத்தீர்மானத்தையும் அன்றே துரியோதனனிடம் அனைவர் முன்னிலையிலும் தெரிவித்துவிட்டேன். கதையுத்த போராட்டத்தில் துரியோதனனை யாரும் நேர்மையான முறையில் தோற்கடிக்க இயலாது. கதையுத்தத்தில் அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. நான் கொண்டிருந்த தீர்மானத்தை நிறைவேற்றுதல் பொருட்டு முறை தவறி துரியோதனனின் தொடையில் அடித்தேன். அந்த குற்றத்திற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்வீர்களாக என்று பீமன் கூறினான். பீமனின் பேச்சை கேட்டதும் காந்தாரியின் கோபம் பெரிதும் அடங்கியது. பீமனுடைய அறிவு திறமையை கிருஷ்ணர் பாராட்டினார். பாண்டவ சகோதரர்கள் தங்கள் பெரியம்மா காந்தாரியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -1

விதுரரும் சஞ்சயனும் திருதராஷ்டிரனை சமாதானப்படுத்த பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். அஸ்தினாபுரம் துக்கத்தில் மூழ்கி இருந்தது. உற்றார் உறவினர் என அனைவரையும் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மடிந்து போனதை குறித்து பெண்கள் அழுது கொண்டிருந்தனர். போரில் எண்ணிக்கையில் அடங்காத வீரர்கள் அழிந்து போனதற்கு திருதராஷ்டிரன் தான் காரணம் என்று சஞ்சயன் எடுத்துரைத்தான் இதைக் குறித்து பெரியோர்கள் எச்சரிக்கை செய்தபொழுது திருதராஷ்டிரன் அதை ஏற்கவில்லை. பின்பு அதன் விளைவை அனுபவித்தே ஆகவேண்டும் என்று விதுரர் கூறினார். அப்போது வியாச பகவான் அங்கு பிரசன்னமாகி திருதராஷ்டிரருக்கு ஓரளவு ஆறுதலும் உறுதிப்பாடும் கூறினார். அம்மன்னன் போர்க்களத்திற்குச் சென்று தன்னுடைய புதல்வர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்றும் அழிந்து போனவர்களுக்கு ஈமக் கடன்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றும் வியாசர் புத்திமதி புகட்டினார். திருதராஷ்டிரன் தன் தம்பியின் பிள்ளைகளாகிய பாண்டவர்களை தன் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார் வியாசர்.

அஸ்தினாபுரத்தில் இருந்தவர்கள் கும்பல் கும்பலாக புறப்பட்டு போர்க்களம் நடந்த இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் நடந்து போன அதே பாதையில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரௌபதி அழுது கொண்டு வனத்திற்குச் சென்றான். தமக்கு வந்த துயரம் நாளடைவில் அஸ்தினாபுரத்து மகளிருக்கு வந்தமையும் என்று கூறி இருந்தாள். திரௌபதி அப்பொழுது கூறியது இப்போது நடந்தது.

பதிமூன்று வருடத்திற்கு முன்பு வனவாசம் போன பாண்டவர்கள் இப்போது தங்களுக்கூறிய ராஜ்யத்தை மீட்டெடுத்து வெற்றி வீரர்களாக அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்தார்கள். அஸ்தினாபுரம் நுழைந்த உடனேயே பெரியப்பா திருதராஷ்டிரரோடு இணைந்து இருக்க பாண்டவர்கள் முயன்றனர். பாண்டவர்கள் மீது கோபத்திலும் சோகத்திலும் மூழ்கிக் கிடந்தான் திருதராஷ்டிரன்.

அரண்மனைக்கு வந்த பாண்டவர்களில் யுதிஷ்டிரனை கிருஷ்ணன் முதலில் திருதராஷ்டிரருக்கு அறிமுகப்படுத்தினார். அவனை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார். இரண்டாவது பீமனை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. பீமன் பெயரை கேட்டதும் திருதராஷ்டிரனுக்கு கோபம் அதிகமாக வரும் என்று கிருஷ்ணர் எதிர்பார்த்தார். அதை சமாளிக்க பீமனுக்கு பதிலாக அவனைப் போன்றே செய்யப்பட்ட பொம்மை ஒன்றை திருதராஷ்டிரன் முன் நிறுத்தி பீமன் என்று அறிமுகப்படுத்தினான். துரியோதனனையும் ஏனேய அனைத்து புதல்வர்களையும் கொன்றதை எண்ணிய திருதராஷ்டிரர் சினத்தை வளர்த்து அதை வெளிப்படுத்தும் வழியாக வெறுப்புடன் இறுகத் தழுவினான். அதன் விளைவாக அந்த பொம்மை நொறுங்கிப்போனது. திருதராஷ்டிரனும் மயங்கி தரையில் விழுந்தான். திருதராஷ்டிரனை சஞ்சயன் தேற்றுவித்தார். தெளிந்து எழுந்த மன்னன் தன் செயலை குறித்து வருந்தினார். பீமனை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய முறையை கிருஷ்ணன் எடுத்துரைத்தார். பீமன் மீது இருந்த வெறுப்பு தற்பொழுது திருதராஷ்டிரருக்கு விறுப்பாக மாறி அமைந்தது. அன்பு படைத்தவனாக திருந்தி தன் தம்பியின் பிள்ளைகள் ஐவரையும் தனக்கு உரியவர்கள் என அன்புடன் ஏற்றுக்கொண்டான்.