குருநாதர் கருத்துக்கள் #1.3

இக்காலம் வரை ஜபம் தியானம் நற்பணிகள் திருப்பணிகள் அனைத்தும் செய்தும் யாம் இருக்கும் இடத்தில் இருக்கின்றோம் என்று சிலர் எண்ணுகின்றனர் இவர்களுக்கு யாம் ஒன்று செப்புவோம்.

அன்பர்களே யாமும் நீங்களும் ஓர் பாதையில் செல்கின்றோம். சிறிது முன் யாமும் பின்பு நீங்களும் என்பதே வித்தியாசம் என்றும் செப்பிட்டோமே. இறை பாதை நாடுவோர்கள் அனைவருக்கும் நல்முக்தி உண்டு என்றும் செப்பிட்டோமே. எப்பொழுது என்பதுதான் விதி. உதாரணமாக பயிரிட்டு செடி வளர அதனை இழுப்பதால் மேலும் வளர்வதில்லை அழிந்து போகும். இதை மனதில் நிறுத்தி காலங்கள் இதற்கு ஒதுக்கிட்டு தியான முறைகள் கர்ம யோக முறைகள் என்பதெல்லாம் செய்து வர அனைத்தும் கைகூடும் என்றும் செப்பிட்டோமே.

அவசரம் ஆன்மிகத்திற்கு ஆகாத ஓர் அவஸ்தை என்றும் இங்கு உங்களுக்கு எடுத்துரைத்தோம். ரோமாபுரி ஓர் நாளில் கட்டவில்லை என்று முன் செப்பியுள்ளோம். ஓர் கட்டிடத்திற்கு இந்நிலை என்றால் ஆன்மாவின் வளர்ச்சி, ஆன்மாவை முழுமையாக இறைவனிடம் சேர்க்க, எத்தனை காலங்கள், ஜன்மங்கள் எடுத்தல் வேண்டும் என்று சிந்தித்தால் போதும். நல் கர்மாக்கள் பலனால் இன்று நீங்கள் அனைவரும் இறை பாதையை நோக்கி அதில் ஏறி நடந்து கொண்டு இருக்கின்றீர்கள், இதுவே ஒரு பெரிய சாதனையாகும் என்று எடுத்துரைத்தோமே.

அச்சப்படுவதற்கோ, வேதனைப்படுவதற்கோ இங்கு எந்நிலையும் இல்லை. ரோகங்களும் கர்ம நிலைகள் மாறிட முழுமையாக நீங்கும் என்று எடுத்துரைத்தோமே. சிறு வேதனைகள் உண்டாகுதல் வேண்டும் என்கின்ற விதி உண்டு. அவ்விதம் இல்லையேல், கர்ம கழிப்புகள் இல்லை என்பதையும் உணர்தல் வேண்டும். ஏனெனில், உடலால் செய்த கர்ம வினைகள் உடலால் அநுபவித்து தீர்த்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு. இதுவே நடைபெறுகின்றது. இருப்பினும், அனைத்தும் எம்பிரான் திருவடியில் சமர்ப்பித்து செயல்பட முடிவு நன்மையே என்று செப்புகின்றோம்.

குருநாதர் கருத்துக்கள் #1.2

கேள்வி: பலருக்கு இக்காலத்தில் ஓர் பெரும் குழப்பம் உள்ளது. இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்கின்ற போது ஆலயத்திற்கு ஏன் செல்லுதல் வேண்டும்? அகம் தனிலோ எங்குமிருந்தோ அவனை வணங்க இயலுமே என்பது தான் அது. இதற்கு யாம் இங்கு விளக்கம் அளிக்க சித்தம் கண்டோம்.

முறையாக ஆலயம் அமைக்கக் கண்டால் அது ஆகம வாஸ்து சாஸ்திரங்கள் தொட்டே அமைக்கப்படுகிறது. இதன் விளைவால் பல வடிவ கோபுரங்களைக் காண்கின்றோம். முக்கியமாக அனைத்தும் ஓர் முக்கோண வடிவில் காண்பது சகஜமாகின்றது. ஆங்கிலமதில் இதை இக்காலத்தில் ஒரு பெரிய விஞ்ஞானமாக மாற்றிக் கொண்டனர். பிரமிட் என இக்காலத்தில் அழைக்கப்படுவதும் அதன் குணாதிசயங்களும் இக்காலத்தில் பலர் செப்புகின்றனர் எழுதுகின்றனர். இருப்பினும் இது அக்காலம் தொட்டே நமது பரதமதில் உண்டு என்றும் இங்கு எடுத்துரைக்கத் தக்கதாம்.

ஆலயங்களில் சென்று வழிபட வேண்டாம் என எண்ணுகின்றவர்க்கு ஒன்று இங்கு நினைவூட்டுகின்றோம். அக்கால சம்பிரதாயங்களில் காலையில் எழுந்தபின் குளித்தபின் ஆலயத்திற்க்குச் சென்ற பின்பே மற்ற வேலைகள் தொடரும் என்பது ஒரு சகஜ வழி ஆனது. இதற்குக் காரணம் உண்டு. இத்தகைய வாஸ்து சாஸ்திரமதில் கட்டப்பட்ட ஆலயங்களில் சிறிது நேரம் சென்று அமர்ந்து விட்டாலே போதும் அங்கு அத்தகைய முக்கோண வடிவங்களிலிருந்தும் ஸ்தாபித்த சக்கரங்களில் இருந்தும் புறப்படும் மின் கதிர்கள் உடலிலுள்ள தீயவையை நீக்கிவிடுகின்றது. இதனால் ஆரோக்கியம் பல மடங்காக உயர்கின்றது என்றும் இங்கு எடுத்துரைக்கத் தக்கதாம். பிரதானமாக ஒவ்வொரு கிராமங்களிலும் ஓர் பழைய ஆலயம் காணக் கூடும்.

இக்காலத்தில் நவீன வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வடிவம் அமைத்த ஆலயங்களை விட புரதான பழைமை வாய்ந்த வடிவமே மனிதனுக்கு நலம் தருகின்றது என்பதே எமது கருத்தாகின்றது. ஏனெனில் ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு அமைப்பும் பொதுவாக மனித நலம் நோக்கியே அமைக்கப் பட்டுள்ளது என்று எடுத்துரைப்போமே. இதனால் நாஸ்திகன் என்று கண்டு கொண்டாலும் ஆலயங்களில் வெளிப் பிரகாரமதில் சிறிது நேரம் அமர்ந்து வந்தாலே நற்பயன்கள் கிட்டக்கூடும் என்றும் எடுத்துரைத்தோமே.

சரணடைதல்

ஒரு சமயம் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு காட்சியில் கிருஷ்ணன் தனது துணிகளை சலவைத் தொழிலாளி ஒருவனிடம் கொடுத்து சுத்தம் செய்து கொடுக்கும் படி கேட்டிருந்தார். அடுத்த நாள் தமது துணிகளை அந்த சலவை தொழிலாளியிடம் கேட்ட போது கிருஷ்ணரிடம் அவரது துணிகளையே அவரிடம் தர மறுத்தான். இதனை தொடர்ந்து உபன்யாசம் சென்றது. உபன்யாசம் முழுவதையும் அந்த கூட்டத்தில் கேட்ட ஒரு சலவை தொழிலாளி ராமானுஜரிடம் வந்து கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று மிகத் தூய்மையாக புதியது போல் துவைத்து ராமானுஜரிடம் காட்டி பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாரப் பாராட்டுவார்.

ஒரு நாள் சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் நீங்கள்தான் என்னைப் பாராட்டுகிறீர்கள். ஆனால் ரங்கநாதர் பாராட்ட வில்லையே என்றான். அதனை கேட்ட ராமானுஜர் சலவைத் தொழிலாளியை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக துணிகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வந்து கொடுக்கிறான். ஒருநாள் அவனிடம் பேசுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். ரங்கநாதர் சலவைத் தொழிலாளியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்றார். அதற்கு சலவைத் தொழிலாளி கிருஷ்ணாவதாரத்திலே உங்களுக்கு துவைத்த உங்களுடைய துணிகளைத் தர மாட்டேன்னு சொன்ன அந்த சலவைத் தொழிலாளியை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க வேண்டும் என்றான். அதற்கு ரங்கநாதர் அவனை மன்னித்து அப்பொழுதே அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன் என்றார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராமானுஜர் கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டாய். உனக்காக நீ ஏன் ஒன்றும் கேட்க வில்லை எனக் கேட்டார். அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி உங்களை குருவாக நான் ஏற்றுக் கொண்டேன். முக்திக்கு வழிகாட்டி என்னை இறைவனிடம் அழைத்துச் சென்று விடுவீர்கள் என்று நம்புகிறேன். இதனைக் கேட்ட ராமானுஜர் மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார்.

உண்மையான பக்தர்கள் குருவிடம் முழுமையாக சரணடைந்து விடுவார்கள்.

குருநாதர் கருத்துக்கள் #1.1

ஆதித்தனின் சூடும் வெகுவாகக் கூடும் காலத்தில் நன்றென வியர்வை சிந்தும் காலமாக இருக்கும். இவ்விதம் வியர்க்கும் காலத்தில் ஜில்லென்று காற்று வேண்டும் என ஆர்வம் மனதில் தோன்றுகிறது. இத்தகைய ஆர்வம் இறைவனைக் காணவேண்டும் என்கின்ற எண்ணத்திலும் உயர தானாக இறைவன் முன் வந்து நிற்பான் என்பது எமது கருத்தாகின்றது.

நாம் ஏதேனும் சுகத்தை எந்த அளவிற்கு விரும்புகின்றோமோ அந்த அளவிற்கு இறை நாட்டம் இருந்தால் இறைவன் வராது இருக்க இயலாது என்பது எமது கருத்தாம்.

சிவநாமம் எங்கும் பரவ வேண்டும் என்கின்ற கருத்து எமக்கு என்றும் உண்டு. இதற்குத் திருமந்திரம் ஒரு கருவியாக நிலைத்தால் ஆனந்தமே இதை மக்கள் பின்பற்றி வந்தால் பேரானந்தமே இதுவே எமது கருத்தாகும்.

ஒன்று செய் அதை நன்று செய் என்று சொன்னாற் போல் நமது எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி இறைவனைக் காணுதல் வேண்டும் என்ற எண்ணத்தைப் பெருக்குவீர்களாக. தானாக கோடைக் காலங்களில் தாகத்தை தீர்த்திட நீர் தேடுவது போல இறைவனை நாட அவன் உங்கள் முன் காட்சி அளிப்பதோடு மட்டுமின்றி முழுமையாக அருள்புரிவான்.

குருநாதர் கருத்துக்கள் #1.83

சிறியவன் சிறியவனாக இருக்க பெரும் அருள் உண்டு. சிறியது பின்பு பெரியதாகும் திறன் உண்டு. நாம் சின்னவன் (நாம் கீழான இடத்தில் இருக்கின்றோம் மற்றவர்கள் மேலான இடத்தில் இருக்கின்றார்கள்) என்ற எண்ணத்தை தவிர்ப்பீர்களாக. இன்று சின்னது என்பது நாளை பெரிதாகும். குறுகிய மனப்பான்மை இங்கு பலருக்கும் உண்டு. பயத்தை மனதிலிருந்து நீக்கி விடுங்கள். பின்பு அனைத்தும் சீராகும். பூஜைகளில் இறைவனிடம் மனம் விட்டு கூறியும் மனம் விட்டு கேட்கவும் வேண்டும் இவ்விதம் செய்திட நல்முடிவுகள் உண்டு.

குருநாதர் கருத்துக்கள் #82

அனைத்தையும் இறைவன் திருவடியில் வைத்து சரணடைந்தால் எவ்வித அச்சமும் வேண்டாம் என்றும் தியானம் சிறப்பாக நிலைத்தால் கிரகங்களுக்கும் மேலான நிலைக்கும் செல்ல கிரகங்கள் நம்மை பாதிக்காது என்கின்ற அறிவுரையும் இங்கும் கூறுகின்றோம்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

ஒரு யானைப் பாகன் தனக்கு 100 ஏக்கர் நிலம் வேண்டும். 50 யானைகளுக்கு சொந்தக்காரனாக வேண்டும். சுற்று வட்டாரத்தில் இல்லாத அளவுக்கு பெரிய வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காக இறைவனுக்கு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பித்தான். பல நாட்கள் செய்த கடுமையான பூஜைகளின் பலனாக இறைவன் அவனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். அவன் தன்னுடைய நீண்ட நாள் ஆசைகளை வரிசைப்படுத்தி அனைத்தும் வேண்டும் என கேட்டான். இறைவனும் சிரித்தபடி 50 யானைகளை காட்டி இது போதுமா? என்றார். அவன் மகிழ்ச்சியாக தலையாட்டினான். 100 ஏக்கர் நிலத்தை காட்டி இது போதுமா? என்றார். அதற்கு அவன் நிலத்தில் இன்னும் நான்கு கிணறுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றான். பெரிய மாளிகையை காட்டினார். வீடு முழுவதும் தங்கம் மற்றும் நவரத்தினங்களால் அலங்கரித்து வேண்டும் என்றான். அவன் கேட்ட அனைத்தையும் கொடுத்த இறைவன் நீ எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும் என கேட்டார்.

நீங்கள் கொடுத்த அளவுக்கதிகமான செல்வம் என்னிடம் இருக்கிறது. என்னால் செய்ய முடியாதது இப்போது எதுவும் இல்லை. என்ன உதவி வேண்டும் நீங்கள் சொல்வதை செய்து முடிக்கிறேன் என்றான். நீ இறந்த பின் மேலே வரும்போது உன்னிடம் இருக்கும் யானையின் வாலின் முடியில் ஒன்றை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் தர வேண்டும் என்றார். இதற்கு ஏன் சாகும்வரை காத்திருக்க வேண்டும் இப்போதே பிடுங்கித் தருகிறேன் என்றான். இல்லை இப்போது எனக்கு தேவையில்லை என்றார் இறைவன். அதற்கு அவன் இறந்த பின் ஒரு துரும்பை கூட எங்கும் கொண்டு போக முடியாதல்லவா என்றான். பிறகு ஏன் உனக்கு இவ்வளவு பேராசை? என்று இறைவன் கேட்க அவர் கொடுத்த அத்தனை சொத்துக்களையும் திருப்பி கடவுளிடமே கொடுத்துவிட்டு என்றும் அழியாத எங்கு சென்றாலும் தன்னுடன் வரக்கூடிய இறை அருளை சேர்க்க பூஜைகள் தானங்கள் தர்மங்கள் செய்வது எப்படி என்ற சிந்தனையுடன் நடக்க ஆரம்பித்தான் யானைப் பாகன்.

குருநாதர் கருத்துக்கள் #81

எமக்குள் இருக்கும் இறைவா என்று கூறுவது சிலருக்கு கடினமாக இருக்கின்றது. இவ்விதமிருக்க அவரவர் தம் செளகரியத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக பெயருக்கு முன்பு ஆத்மா என சேர்த்து அழைக்கலாம். இல்லையேல் இஷ்ட தெய்வத்தை உள்ளிருப்பது போல் பாவனை செய்தும் அத்தெய்வத்தின் பெயருக்கு முன்பு ஆத்மா என்று சேர்த்து அழைக்கலாம். இல்லையேல் எமக்குள் இருக்கும் என்று கூறி தெய்வத்தின் பெயரை சேர்த்திடலாம். இவ்விதம் குழப்பமற்ற நிலையில் அனைத்து கடினங்களும் நீங்கும்.

கார்போதக கடல்

விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். பிரம்மனிடம் இருந்து வரம் பெற்ற இரண்யாட்சன் பூமியில் பல்வேறு பாவச் செயல்களைச் செய்தான். இதனால் பூமி கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதனை மீட்டு வெளிக் கொண்டு வருவதற்காக விஷ்ணு வராக அவதாரமாகத் தோன்றினார். விஷ்ணு கார்போதக கடலில் இருந்து இரண்யாட்சனுடன் பல ஆண்டுகள் போர் புரிந்து வென்றார்.

வராக அவதாரம் எடுத்த விஷ்ணுவின் கையில் தூக்கியுள்ள பூமிக்கு உள்ளேதான் கடல் உள்ளது. அப்படி என்றால் எந்த கடலில் இருந்து விஷ்ணு போர் புரிந்தார்?

அந்த கடலுக்கு கார்போதக கடல் என்று பெயர். கார்போதக என்றால் ஒளி உட்புக முடியாத என்று பொருள். கார்போதக கடல் என்பது விண்வெளியில் உள்ள கரும்பொருள் கடல். அறிவியலின் படி அதற்கு Ocean Of Dark Matter என்று சொல்வார்கள். அதாவது ஒளியை பிரதிபலிக்காத கண்களால் காணமுடியாத விண்வெளி பருப்பொருட்களின் கூட்டம் என்று பெயர்.

குருநாதர் கருத்துக்கள் #80

கேள்வி: அழிவற்ற பொருள் எது? பஞ்ச பூதங்களுக்கு அழிவில்லையா?

முதலில் பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்வோம். பஞ்ச பூதங்கள் அனைத்தும் உள்ளடங்கியிருக்கும் வரை அப்பொருள் நிலைக்கிறது. பஞ்சபூதங்கள் மனித உடலில் இருக்கும் வரை உயிர் இருக்கின்றது. இவ்வைந்தும் பிரிந்திட அங்கிருக்கும் பொருள் அழிகின்றது. இருப்பினும் பஞ்ச பூதங்கள் ஒன்றை மற்றொன்று அழிக்கும் தன்மையும் கொண்டுள்ளது. குறிப்பாக நீர் அக்னியை அழிக்கின்றது. நீரை அக்னி வற்ற வைக்கின்றது. காற்றால் அக்னி பாதிக்கப்படுகின்றது. வளர்க்கப்படவும் செய்கின்றது. இவ்விதம் ஐந்தும் ஒன்றாக இருக்கும் போது நல் உயிராகவும் பிரிந்தவுடன் அழிவாகிறது. பஞ்சபூதங்கள் ஒன்றை ஒன்று அழிக்கும் தகுதி பெற்றுள்ளது. அழியாப்பொருள் எது என்றால் சந்தேகமின்றி பரம்பொருள் மட்டுமே. பரம்பொருளில் இருந்து எவ்விதம் உயிர்கள் பிரிந்து ஜீவாத்மாக்களாக இருக்கும் பொழுதும் எவ்வித குறையும் இல்லை மேலும் உயிர்கள் அதில் சேரும் பொழுதும் எவ்வதிகரிப்பும் இல்லை. விருப்பு வெருப்பற்ற பரம்பொருளுக்கு எக்காலத்திலும் அழிவில்லை என்பதால் சதாசிவத்தை பரம்பொருள் என்று அழைக்கின்றோம்.