மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -25

யுதிஷ்டிரன் தன்னுடைய தெய்வீக தந்தையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். பன்னிரண்டு வருஷகாலம் வனவாசத்தை நாங்கள் வெற்றிகரமாக கழித்து உள்ளோம். எப்பொழுதும் யாரிடத்திலும் நான் எந்த வரத்தையும் கேட்பதில்லை. ஆயினும் தந்தையே நான் இப்பொழுது ஒரு நெருக்கடியில் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நாங்கள் எல்லாரும் ஓராண்டு காலம் அக்ஞாத வாசம் பண்ணியாக வேண்டும். அதை வெற்றிகரமாக முடிக்க எங்களை ஆசீர்வதிக்கும்படி பிரார்த்திக்கிறேன் என்றான். அதற்கு தர்ம தேவதை உன்னை நீ வனத்திலோ மலைக்குகையிலோ உன்னை மறைத்துக் கொள்ள மாட்டாய். மறைந்திருத்தல் பொருட்டு விண்ணுலகிற்கு ஓடிப் போக மாட்டாய். சமுதாயத்திலேயே வசித்திருந்து பயன்படுகின்ற பணிவிடைகளை புரிந்து கொண்டு இருப்பாய். அப்படியிருந்தும் ஒரு வருடத்திற்கு உன்னை யார் என்று கண்டுபிடிக்க யாருக்கும் இயலாது. நான் உன்னை முழுமனதோடு உன்னை ஆசீர்வதிக்கிறேன் என்று தர்மதேவதை சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

அந்தணருக்கு அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருடம் அக்ஞாத வாசத்துக்குத் தயாரானார்கள். பாண்டவர்கள் 12 வாருட வனவாசத்தை நல்லமுறையில் பயன்படுத்தினார்கள். மாமுனிவர்கள் அந்தணர்கள் தவசிகள் என பல நல்லோர்களின் இணக்கம் அவர்களுக்கு அமைந்ததே இதற்கு முதல் காரணமாக இருந்தது. 12 வருட காலமும் அருள் நாட்டத்திலேயே அவர்கள் மூழ்கியிருந்தனர். சான்றோர்களுடைய வரலாற்று ஆராய்ச்சிலேயே அவர்கள் ஈடுபட்டிருந்தனர். 12 வாருட வனவாசம் முடிவுக்கு வந்தது.

அக்ஞாத வாசத்தை பற்றி பாண்டவர்கள் திட்டமிடலாயினர். இப்பொழுது பாண்டவர்களை தவிர வேறு யாரும் அவருடன் இருக்க இயலாது முனிவர்களும் கூட அத்தீர்மானத்தில் கலந்து கொள்ளலாகாது. ஆகையால் அரை மனதுடன் யுதிஷ்டிரன் தங்களை விட்டுப் பிரிந்து போகும் படி முனிவர்களையும் மற்ற மேன்மக்களையும் பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். பாண்டவர்களை சந்திக்க வருபவர்களுக்கு ஓயாமல் உணவு வழங்கிக் கொண்டிருந்த அட்சய பாத்திரத்தின் செயலும் ஒரு மங்களகரமான முடிவுக்கு வந்தது. ரிஷிபுங்கவர்கள் மாமுனிவர்கள் அந்தணர்கள் தவசிகள் ஆகிய எல்லோரும் பாண்டவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அவரவர் போக்கில் பிரிந்து போயினர்.

வன பருவம் இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்து விராட பருவம்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -24

யுதிஷ்டிரனின் பதில்களால் மகிழ்ந்து போன அந்த குரல் இறுதியில் மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன். யாருக்கு உயிர் கொடுக்க வேண்டும் எனக் கேட்டது. நகுலனை எனக்குத் திருப்பிக் கொடுங்கள் என யுதிஷ்டிரர் வேண்டினார். யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன் அர்ஜூனன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் நகுலனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய் என அசரீரி கேட்டது.

அதற்கு யுதிஷ்டிரன் போர் புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல. அதுமட்டுமில்லாமல் என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என இரண்டு மனைவிகள். இருவரும் எனக்கு தாய்மார்கள் ஆகிறார்கள். அவர்கள் இருவருக்கும் மகப்பேறு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் என் கடமையாகும். அந்த கடமையை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்து இருக்கிறது. யுதிஷ்டிரனாகிய நான் மற்றும் பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாய்க்கு பக்திப்பூர்வமாக சேவை செய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள். அவளுக்குச் செய்ய வேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும். ஒரு தாய்க்கு மகன் இல்லாது போகும்படி நான் நடந்து கொள்வது தர்மம் இல்லை ஆகவே நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன் என்றார் யுதிஷ்டிரர்.

நீ பரந்த மனப்பான்மை படைத்தவன் உன்னை போன்றவனை காண்பது அரிதிலும் அரிது. ஆகவே 4 சகோதரர்களையும் நான் உனக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். உடனே நான்கு சகோதரர்களும் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்திருப்பது போன்று எழுந்தார்கள். அவர்களை வாட்டிய பசி தாகம் களைப்பு ஆகியவை இப்போது ஓடிப் போயின. யுதிஷ்டிரர் அசரீரியை பார்த்து என்னுடைய சகோதரர்களை தேவர்களாலும் வெல்ல முடியாது. அத்தகைய வீரர்களை மயக்கத்தில் விழவும் மறுபடியும் எழுந்திருக்கவும் செய்திருக்கிறாய். அத்தகைய நீ யார் என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். யுதிஷ்டிரர் முன்பு பிரகாசத்துடன் மூர்த்தி ஒன்று தோன்றி நான் தர்மதேவதை உனக்கு நான் தெய்வீக தந்தையாவேன். உன்னுடைய உறுதிப்பாட்டை சோதித்தல் பொருட்டு இப்பொழுது நிகழ்ந்தவை யாவற்றையும் நான் வேண்டுமென்றே செய்தேன். உன்னிடத்தில் எனக்கு பரம திருப்தி உண்டாகியது நீ வேண்டும் வரங்களைப் பெற்றுக் கொள்வாயாக என்று தர்ம தேவதை கூறினார். தந்தையை பிராமணன் மானிடம் இழந்த அரணிக்கட்டையை திருப்பித்தர கடமைப்பட்டிருக்கிறேன். இல்லையேல் தர்மத்திலிருந்து நாங்கள் பிசகியவர்கள் ஆவோம். ஆகவே அரணிக்கட்டை மீண்டும் கிடைக்க தயை கூர்ந்து அதற்கு அருள்புரிவீர்களாக என்றான். அதற்கு தர்மதேவதை தானே மான் வடிவில் வந்து அரணிக்கட்டையை தூக்கி சென்றோம் என்று கூறி திருப்பி அளித்தார். மகிழ்ச்சியுடன் அரணிக்கட்டையை பெற்றுக்கொண்டார் யுதிஷ்டிரர்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -23

தண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் யுதிஷ்டிரர். நீர் இருக்கும் தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார். இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர் உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் நீர் அருந்த முற்பட்டார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும் என்று குரல் ஒலித்தது. அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய யுதிஷ்டிரர் இந்த தண்ணீர் தடாகம் உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன் என்றார்.

கேள்வி – சூரியனை பிரகாசிக்கும் படி செய்வது எது?

யுதிஷ்டிரன் பதில் – பரப்பிரத்தின் தெய்வீக சக்தி சூரியனை பிரகாசிக்கும் படி செய்கிறது

கேள்வி – மனிதன் மேலோன் ஆவது எப்போது?

யுதிஷ்டிரன் பதில் – தவத்தின் வாயிலாக மனிதன் மேலோன் ஆகிறான்

கேள்வி – மனிதன் எப்போது புத்திமான் ஆகின்றான்?

யுதிஷ்டிரன் பதில் – ஏட்டுக்கல்வியினால் மனிதன் புத்திமான் ஆவதில்லை. சான்றோர் இணக்கத்தினாலே மனிதன் புத்திமான் ஆகின்றான்.

கேள்வி – பிராமணன் யார்?

யுதிஷ்டிரன் பதில் – எல்லோருடைய நலத்தின் பொருட்டு தன்னை ஒப்படைப்பவன் பிராமணன் ஆகிறான்.

கேள்வி – க்ஷத்திரன் யார்?

யுதிஷ்டிரன் பதில் – தர்மத்தை காக்கும் பொருட்டு தன் உயிரைக் கொடுப்பவன் க்ஷத்திரியன் ஆகின்றான்.

கேள்வி – வேகம் வாய்ந்தது எது

யுதிஷ்டிரன் பதில் – மனம்.

கேள்வி – பயணம் போகிறவர்களுக்கு மிக மேலான கூட்டாளி யார்?

யுதிஷ்டிரன் பதில் – கல்வி

கேள்வி – எதை துறப்பதால் மனிதன் பொருள் படைத்தவன் ஆகின்றான்?

யுதிஷ்டிரன் பதில் – ஆசையை துறப்பதால் மனிதன் பொருள் படைத்தவன் ஆகின்றான்.

கேள்வி – அமைதி எங்கு உள்ளது?

யுதிஷ்டிரன் பதில் – மனத்திருப்தியில்.

கேள்வி – அதிசயங்களுள் அதிசயம் எது?

யுதிஷ்டிரன் பதில் – கணக்கற்ற பேர் இடைவிடாமல் இறந்து கொண்டே இருக்கின்றனர். அப்படி இருந்தும் உயிர்வாழ்ந்து இருப்பவன் தான் மரணம் அடையாமல் இருக்க போவதாக எண்ணிக் கொள்கிறான். இதுவே அதிசயங்களுள் அதிசயம்

இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் யுதிஷ்டிரர்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -22

மானை பிடிக்க முடியாமல் போனதால் தர்மத்திலிருந்து பிசகி விட்டோமே என்று வருத்தத்தில் பாண்டவ சகோதரர்கள் இருந்தனர். அப்போது பீமன் துச்சாதனன் சபையின் நடுவே திரௌபதியை இழுத்து வந்த போது நாம் அவனை கொன்றிருக்கவேண்டும் அந்த கடமையிலிருந்து நாம் நழுவியதே இந்த இந்த தர்மத்திலிருந்து பிசகியதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றான். அப்போது அர்ஜூனன் சபையில் கர்ணன் திரௌபதியை அவமானப்படுத்திய போது நான் செயலற்று இருந்தேன் அப்போதே அங்கு அவனை நான் கொன்று இருந்தால் இப்படி ஒரு சூழ்நிலை வந்து இருக்காது என்றான். சகாதேவன் சகுனி பகடை விளையாட்டில் வெற்றி பெற்றிருந்த பொழுது நான் அவனை கொன்றிருக்க வேண்டும் அப்படி செய்யாமல் போனது தான் காரணமாக இருக்கும் என்றான். சகோதரர்கள் கூறிய அனைத்தையும் யுதிஷ்டிரன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான். அனைவருக்கும் தாகம் ஏற்பட்டது. தங்கள் தாகத்தை தணிக்கும் பொருட்டு அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்து தண்ணீர் கொஞ்சம் கொண்டு வரும்படி நகுலனிடம் அவன் கூறினார்

தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான். அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக ஆரம்பித்தபோது அசரீரி ஒன்று ஒலித்தது. இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன் பிறகு நீர் பருகலாம் என்றது அசரீரி. சுற்றும் முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்தி விட்டு தண்ணீர் குடித்தான். சிறிது தண்ணீர் குடித்த உடனேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.

வெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன் அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை. மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான். உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன். அப்போதும் அதே குரல் ஒலித்தது உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல் என்றது. முதலில் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு உன்கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன் என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் கீழே வீழ்ந்தான்.

மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் யுதிஷ்டிரன் மனக்கவலை அடைந்தான். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான். தம்பிகளுக்கு என்ன ஆனது என்று பார்த்து விட்டு எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்று பீமனிடம் யுதிஷ்டிரன் கூறினார். தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான். இது ராட்சசர்களின் வேலையாகத்தான் இருக்கும். முதலில் தாகத்தை தணித்துக்கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான். மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார் என அலட்சியமாக நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே கீழே விழுந்தான்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -21

பாண்டவ சகோதரர்கள் ஜயத்ரதனை கைது செய்து யுதிஷ்டிரனுடைய முன்னிலைக்கு அழைத்துச் சென்று என்ன தண்டனை அளிக்கலாம் என்று யுதிஷ்டிரனுடைய அனுமதியை நாடி நின்றனர். பீமன் ஜயத்ரதனை கொல்வதற்கு யுதிஷ்டிரன் அனுமதி கொடுக்குமாறு கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் குற்றங்கள் பல ஜயத்ரதன் செய்திருக்கின்றான். எனினும் இவன் நமக்கு மைத்துனன் ஆகிறான். காந்தாரியின் கடைசி குழந்தையாகிய துஸ்ஸாலாவுக்கு இவன் கணவன். அந்த முறையை முன்னிட்டு இவனை மன்னித்து இவன் உயிரை காப்பாற்ற நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறி அவனை விடுதலை செய்தான்.

ஜயத்ரதன் அவமானத்தால் தலையை தொங்க போட்டுக்கொண்டு தன்போக்கில் போனான். அவன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போகாமல் கங்கைக் கரையோரம் சென்று சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். நாட்கள் பல கழிந்து போயின. சிவபெருமானும் அவன் தவத்திற்கு இணங்கி காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு ஜயத்ரதன் வரும் காலத்தில் வரும் யுத்தத்தில் பாண்டவர்களை கொல்வதற்கு ஏற்ற வல்லமையை தனக்கு தர வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் கேட்டான். அதற்கு சிவனார் பாண்டவர்களை கிருஷ்ணன் காப்பாற்றுகிறான் ஆகையால் அவர்களை வெல்ல யாராலும் முடியாது. உனக்கு நாம் ஒரு சிறிய உபகாரம் செய்ய முடியும். சிறிது நேரத்திற்கு அவர்களை சமாளிக்கும் திறமை உனக்கு வந்தமையும். அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிட்டார். சிறிதளவேனும் சிவபெருமான் தனது பிரார்த்தனைக்கு செவி சாய்த்தது குறித்து ஜயத்ரதன் மகிழ்ச்சி அடைந்தவனாய் கங்கை கரையில் இருந்து தனது நாட்டுக்கு புறப்பட்டு போனான்.

12 வருட வனவாசம் முடிவுறும் தருவாயில் இருந்தது. இன்னும் சில நாட்களில் அது முற்றுப் பெற்றுவிடும். அப்போது ஒருநாள் காம்யக வனத்தில் சென்று கொண்டிருந்த பிராமணன் வருவன் தன்னுடைய அரணிக்கட்டையை மானிடம் இழந்துவிட்டான். அரணிக்கட்டை மான் ஒன்றின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது. பயந்து போன மான் ஓட்டம் பிடித்து வனத்திற்குள் சென்றது. ஏமாற்றமடைந்த பிராமணன் பாண்டவர்களிடம் ஓடி வந்து அந்த மானிடம் இருந்து அரணிக்கட்டையை மீட்டெடுத்து தரும்படி கேட்டுக்கொண்டார். அக்கணமே பாண்டவ சகோதரர்களும் அந்த மானை பின்தொடர்ந்து ஓடினர். அது அவர்களை வனத்திற்குள் நெடுந்தூரம் ஓடும்படி செய்து மாயமாய் மறைந்து போயிற்று. பசியாலும் தாகத்தாலும் சகோதரர்கள் வாடி போயினர். அனைவரும் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தனர். பிராமணன் ஒருவனுக்கு நாம் உதவி பண்ண முடியாது போய்விட்டது. நாம் தர்மத்திலிருந்து பிசகியுள்ளோம் என்றான் சகோதரர்களில் ஒருவன்.

குறிப்பு – ஆதிகாலத்தில் யாகம் செய்யும் வேதப் பிராமணர்கள் அரணிக்கட்டை வைத்திருப்பார்கள். அரணிக்கட்டை என்பது இரண்டு கட்டைகள் இருக்கும். அதில் ஒரு கட்டையின் குழியில் இன்னொரு கட்டையை வைத்து தயிர் கடைவது போல கடைவார்கள். தீப்பொறி எழும். அந்த தீயை யாகத்திற்கு பயன்படுத்துவார்கள்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -20

யுதிஷ்டிரனுடைய இருப்பிடத்திற்கு சென்றால் தங்களுக்கு மேலும் உணவு அளிப்பார்கள். அதிகமான உணவு சாப்பிட்ட அனுபவத்தைப் பெற்றபடியால் அங்கு உணவு அருந்த இயலாது. ஆகவே அனைவரும் ஆலோசனை செய்தார்கள். பிறகு பாண்டவர்களின் கண்ணுக்குத் தென்படாது அங்கிருந்து சென்று விடலாம் என்று துர்வாச மகரிஷியும் அவரது சீடர்களும் ஏகமனதாக முடிவு செய்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். துர்வாச மகரிஷி திரும்பி வராததைக் கண்ட யுதிஷ்டிரன் துர்வாச மகரிஷியை அழைத்து வருமாறு பீமனை அனுப்பி வைத்தான். பீமன் நதிக்கரையில் யாரும் இல்லாததை கண்டு யுதிஷ்டிரனிடம் கூறினான்.

கிருஷ்ணனுடைய கருணையால் திரௌபதி பெரும் சோதனையிலிருந்து விடுதலை பெற்றாள். பூரண யோகி ஒருவன் தன் பசியை போக்கிக் கொண்டால் அக்கம்பக்கத்தில் உள்ள அனைவருடைய பசியையும் போக்க வல்லவனாகிறான் என்பது யோகசாத்திர தர்மத்தின் கோட்பாடாகும். அந்த கோட்பாட்டை கிருஷ்ணன் இங்கு கையாண்டான். துர்வாச மகரிஷியும் அவருடைய சிஷ்யர்களும் உணவு உண்ட அனுபவத்தை பெற்றனர். பாண்டவர்களும் துர்வாச மகரிஷியின் சாபத்தில் இருந்து தப்பித்துக் கொண்டனர்.

பாண்டவர்கள் தங்கியிருக்கும் வனத்தில் தங்கியிருக்கும் சில பெண்கள் இருந்தபடியால் திரௌபதிக்கு துணையாக அவர்களை வைத்து விட்டு பாண்டவர்கள் ஐவரும் வேட்டையாட வனத்திற்குள் சென்றிருந்தனர். அப்பொழுது சிந்து நாட்டு மன்னனாகிய ஜயத்ரதன் காம்யக வனத்தை தாண்டி தன் போக்கில் சென்று கொண்டிருந்தான். அப்போது திரௌபதியை பார்த்ததும் அவன் சிறிதும் நாணமின்றி அவளிடம் தனது காதலை தெரிவித்தான். ஆனால் திரௌபதி தன்னை இன்னார் என்று அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். அவனுடைய செயல் முற்றிலும் சரியானது இல்லை என்று திரௌபதி தெரிவித்தாள். ஆனால் அவள் கொடுத்த விளக்கத்திற்கு ஜயத்ரதன் செவிசாய்க்கவில்லை. நாடோடிகளாகிய பாண்டவர்கள் அவளை மனைவியாக வைத்திருக்க தகுதியற்றவர்கள் என்றும் நாடாளும் வேந்தன் என்னும் முறையில் எந்த பெண்ணை வேண்டுமானாலும் தனக்கு மனைவியாக எடுத்துக் கொள்ளும் உரிமை தனக்கு உண்டு என்றும் பேசினான். அதைத்தொடர்ந்து இருவருக்குமிடையில் கைசண்டை நிகழ்ந்தது. திரௌபதி ஜயத்ரதனை கீழே தள்ளினாள். ஆயினும் அவனுடைய வலிமையினால் திரௌபதியுடைய கைகளையும் கால்களையும் கட்டி தன் ரதத்தில் பலவந்தமாகத் தூக்கிச் சென்றான்.

திரௌபதிக்கு துணையிருந்த பெண்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதாக பாண்டவர்கள் உணர்ந்தனர் எனவே அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து திரும்பினர். திரௌபதியை காணவில்லை நடந்தவற்றை விளக்கமாக அங்கிருந்த பெண்கள் எடுத்துக் கூறினார். அக்கணமே சகோதரர்கள் ரதம் போன வழியில் விரைந்து ஓடினார். ஜயத்ரதனை பிடித்து நிறுத்தினர். அவனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. சிறிது நேரத்தில் ஜயத்ரதனை தோற்கடிக்கப்பட்டான். பீமன் அவனை கீழே போட்டு மிதித்தான். ஜயத்ரதனுக்க மயக்கம் உண்டாயிற்று. அவன் மயங்கி கிடந்த பொழுது ஐந்து சிறு குடுமி வைத்து அவனுடைய தலை முடி வெட்டப்பட்டது. அதன் விளைவாக அவனுடைய தோற்றம் பரிதாபத்துக்கு உரியதாயிற்று. சிறிது நேரத்திற்கு பிறகு அவனுக்கு மயக்கம் தெளிந்தது. அப்பொழுது அவன் ஒரு கால்நடை போன்று கயிற்றால் கட்டப்பட்டு இருப்பதை அறிந்தான்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -19

துர்வாச மகரிஷி துரியோதனின் வேண்டுகோளுக்கிணங்கி பாண்டவர்கள் இருக்கும் காம்யக வனத்திற்கு தனது சீடர்களுடன் புறப்பட்டார். இப்பொழுது துரியோதனனும் கர்ணனும் சகுனியும் பரமானந்தத்துடன் இருந்தனர். தெய்வாதீனமாக தங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது என அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் திரௌபதி பகல் உணவு அருந்திய பிறகு அன்றைக்கு வேறு யாருக்கும் ஒரு கவளம் அண்ணம் கூட அவளால் அளிக்க இயலாது. உணவிற்க்காக விருந்தினர்கள் அடுத்த நாள் வரையில் காத்திருக்க வேண்டும் அத்தகைய நெருக்கடி அமையும்போது துர்வாச மகரிஷிக்கு கோபம் வந்துவிடும். அவர் இடும் சாபம் பாண்டவர்களை சாம்பலாக்கி விடும் இத்தகைய சூழ்நிலை தற்செயலாக அமைந்தது. அதன் விளைவுக்கு கௌரவர்கள் பொறுப்பாளிகள் ஆகமாட்டார்கள். எனவே பாண்டவர்களின் அழிவை அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

துர்வாச மகரிஷியும் அவருடைய சீடர்கள்களும் பெரும் கூட்டமாக பாண்டவர்கள் இருக்கும் காம்யக வனத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்களை பாண்டவ சகோதரர்கள் முறைப்படி தக்க மரியாதையுடன் வரவேற்று மரியாதை செலுத்தினார்கள். துர்வாச மகரிஷியும் அவருடைய சீடர்களும் நதியில் நீராடிவிட்டு வந்து போஜனம் பண்ண வேண்டும் என்று வேண்டிக் கொள்ளப்பட்டனர். அவர்களும் வரவேற்பை எற்றுக்கொண்டு நதிக்கரைக்கு சென்றனர். துர்வாச மகரிஷியும் அவருடைய சீடர்களும் வனத்திற்கு வந்து கொண்டிருந்த வேளையில் திரௌபதி தன்னுடைய மதிய உணவை முடித்திருந்தாள். அட்சய பாத்திரம் அன்றைக்கு மேலும் உணவு தராது.

துர்வாச மகரிஷியும் அவரை சார்ந்திருந்த சீடர்களின் பெருங்கூட்டமும் உணவு உண்ண அழைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று கேள்வியுற்ற திரௌபதி பயம் அடைந்தாள். தற்செயலாக தனக்கு வந்து வாய்ந்த நெருக்கடியிலிருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அவள் உள்ளக்கசிவுடன் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தனை பண்ணினாள். கிருஷ்ணன் திடீரென்று அங்கு பிரசன்னமாகி தனக்கு கடுமையாக பசிக்கிறது தன்னுடைய பசியை போக்க உணவு வேண்டும் என்று திரௌபதியிடம் கேட்டான். திரௌபதிக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி வந்து ஆறாத் துயரத்தில் ஆழ்த்தியது. அவள் கதறினாள் கிருஷ்ணனும் அவளுடைய வேதனையை அறிந்து கொண்டான். அவளிடமிருந்த அட்சய பாத்திரத்தை கொண்டுவரும்படி அவன் அவளிடம் கேட்டான்.

திரௌபதி கொண்டு வந்து நீட்டிய பாத்திரத்தை கிருஷ்ணன் கூர்ந்து பார்த்தான். அதனுள் ஒரு பருக்கை அன்னம் ஓட்டிக்கொண்டிருந்தது. மகிழ்வுடன் அந்த அன்னத்தை சுரண்டி எடுத்தான் தன் வாய்க்குள் போடும் பொழுது என் பசியை முற்றிலும் அகன்று போயிற்று. வயிறு முழுக்க உணவு உண்டவன் ஆகிவிட்டேன். மேற்கொண்டு ஒரு கவளம் உணவு கூட என்னால் சாப்பிட இயலாது என்று கிருஷ்ணன் கூறியதும் துர்வாச மகரிஷிக்கும் பெரும் கூட்டமாக வந்த அவரது சீடர்களுக்கும் நூதனமான அனுபவம் ஒன்றே பெற்றனர். அவர்கள் எல்லோருக்கும் பசி பறந்தோடி விட்டது மேற்கொண்டு சாப்பிடுவது அவர்களுக்கு சாத்தியப்படாது.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -18

வைஷ்ணவ யக்ஞம் இனிதாக அஸ்தினாபுரத்தில் நிறைவேறியது. யாகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அரசர்கள் அனைவரும் பரம திருப்தி அடைந்தனர். ஆயினும் இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்திற்கு இணையாகது என்பது வந்திருந்த அறிஞர்கள் கருந்தாக இருந்தது. வந்திருந்த மன்னர்கள் அனைவரும் முறைப்படி கௌரவிக்கப்பட்டு திருப்தியாக திருப்பி அனுப்பப்பட்டனர். யக்ஞம் சிறப்பாக நிறைவேறுவதற்கு கர்ணன் எடுத்துக் கொண்ட முயற்சி காரணமாக இருந்த படியால் துரியோதனன் கர்ணனை மனமாற பாராட்டி தனது நன்றியை கூறினான். அப்போது கர்ணன் தன் உயிர் வாழ்ந்திருக்கும் காலம் எல்லாம் துரியோதனனுக்கு பணிவிடை செய்வேன் என்றும் அர்ஜுனனைக் கொல்லும் வரையில் தான் மது மாமிசம் அருந்த போவதில்லை என்று கர்ணன் விரதம் பூண்டான். இத்தீர்மானம் தக்க வேவுக்காரர்கள் மூலம் பாண்டவர்களுடைய காதுக்கு இச்செய்தி எட்டியது.

கர்ணன் மற்றுமொரு பாராட்டுதலுக்குரிய விரதம் எடுத்துக் கொண்டான். தன்னிடத்தில் இருப்பவற்றை யார் தானமாக கேட்டாலும் அதை அவர்களுக்கு அக்கணமே எடுத்துக் கொடுத்து விடுவேன் என்பது அப்பொழுது அவன் எடுத்துக்கொண்ட விரதம் ஆகும். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் அவன் கொண்டிருந்த இந்த விரதமே கர்ணன் சிரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாகும்.

துர்வாச மகரிஷி அஸ்தினாபுரத்தில் துரியோதனனை வந்து சந்தித்தார். இந்த மகரிஷி பல ஆண்டுகளுக்கு முன்பு பாண்டவர்களின் தாயாகிய குந்திதேவி சிறுமியாய் இருந்த பொழுது நாம் விரும்பிய தேவதையை தன்னிடத்தில் ஆவாஹனம் பண்ணி கொள்ளும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்திருந்தார். இம்மகரிஷி 10000 சிஷ்யர்களுடன் அஸ்தினாபுரத்தில் துரியோதனனிடம் விருந்தோம்பலை எதிர்பார்த்து நின்றார். முன்கோபமே வடிவெடுத்த முனிவரை திருப்திபடுத்த துரியோதனன் விரும்பினான். அவரை திருப்திப்படுத்தவில்லை என்றால் அவர் கோபித்துகொண்டு யாரையும் சாபம் அளிக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. அவரிடம் இருக்கும் தெய்வீகத்தன்மையை துரியோதனன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக பக்தி பூர்வமாக துரியோதனன் அவருக்கு பணிவிடை பண்ணினான். துரியோதனன் புரிந்த பணிவிடைக்கு துர்வாச மகரிஷி பரம திருப்தி அடைந்தார். அவனுக்கு வேண்டிய வரத்தை கேட்கலாம் என்று துரியோதனனிடம் அவர் மகிழ்வுடன் கேட்டார். தனக்கு வாய்ந்த இந்த சந்தர்ப்பத்தை துரியோதனன் நன்கு பயன்படுத்திக் கொண்டான்.

தாங்கள் குருவம்சத்தின் ஒரு பகுதியாகிய கௌரவர்களிடம் தங்களின் விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டீர்கள். அதுபோல் காம்யக வனத்தில் இருக்கும் குரு வம்சத்தின் இன்னொரு பகுதியாக இருக்கும் பாண்டவர்களின் இருப்பிடம் செல்ல வேண்டும். அங்கு திரௌபதி எவ்வளவு பேர் வந்தாலும் அனைவருக்கும் உணவு கொடுத்து விருந்தோம்பல் செய்யும் சக்தியை பெற்றிருக்கின்றாள். பாண்டவர்கள் அனைவரும் நண்பகல் உணவு சாப்பிட்ட பின்பு அவர்களிடம் நீங்கள் உங்கள் விருந்தோம்பலை கேட்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -17

வனத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்தது. பீஷ்மர் துரியோதனனை சபா மண்டபத்திற்கு வரவழைத்து அறநெறி பிறழாத பாண்டவர்களிடம் துரியோதனன் செய்த செயலை கண்டித்தார். துரியோதனன் பீஷ்மர் கொடுத்த புத்திமதியை பொருட்படுத்தவில்லை. பீஷ்மர் பாண்டவர்களை எப்பொழுதும் புகழ்வதாகவும் தன்னை இகழவும் செய்கின்றார். ஆனாலும் எனக்கு தீங்கு ஏதும் வரவில்லை. நான் நன்கு வாழ்ந்து வருகின்றேன் என்று தன் தொடையை தட்டி பலத்த ஓசை பண்ணிவிட்டு அங்கு பீஷ்மரை அவமதிக்கும் பாங்கில் அங்கிருந்து வெளியேறினான்.

துரியோதனன் கர்ணனிடம் யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யக்ஞத்தை பார்த்த நாள் முதல் அத்தகைய வேள்வி ஒன்றை தானும் நடத்தி மாமன்னன் என்ற உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்று ஆசை இருக்கின்றது என்று தன்னுடைய எண்ணத்தை தெரிவித்தான். அதற்கு கர்ணன் அவனுடைய ஆசையை முற்றிலும் ஆமோதித்து ராஜசூய யக்ஞம் நடத்துவதற்கு முதலில் இவ்வுலகில் இருக்கும் மன்னர்கள் அனைவருடைய அனுமதியையும் பெறவேண்டும். தான் இந்த நிலவுலகை சுற்றிவந்து அனைத்து மன்னர்களின் அனுமதியையும் பெற்று யக்ஞம் நடத்தி உனக்குரிய உயர்ந்த அந்த பதவியை பெற்று தருகின்றேன். நான் இந்த நிலவுலகை சுற்றி வருவதற்குள் நீ யக்ஞம் நடத்த ஏற்படு செய்வாயாக என்று கூறினான்.

ராஐசூய யக்ஞம் நடத்துவதற்கு புரோகிதர்களிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. புரோகிதர்கள் இதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. ஏற்கனவே ராஐசூய யக்ஞம் நடத்திய யுதிஷ்டிரன் வாழ்ந்திருக்கும் போது துரியோதனன் மற்றொரு ராஐசூய யாக்ஞம் நடத்துவது பொருந்தாது மற்றும் மன்னராகிய திருதரஷ்டிரர் இருக்கும் போது அவருடைய மகன் யக்ஞம் நடத்துவது பொருந்த செயல் என்று தங்களுடைய அபிப்பிராயத்தை தெரிவித்தார்கள். இப்போது துரியோதனன் தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு வேறு ஒரு உபாயத்தை எடுத்துரைத்தான். வைஷ்ணவ யக்ஞம் சீரிலும் சிறப்பிலும் ராஜசூய யக்ஞத்துக்கு நிகரானது. ஆகவே வைஷ்ணவ யக்ஞம் செய்வதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டான். அனைவரும் சம்மதம் கொடுத்தார்கள். யக்ஞத்திற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தார்கள். அக்கம் பக்கம் இருக்கும் அனைத்து மன்னர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன.

காம்யக வனத்தில் இருக்கும் பாண்டவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அழைப்புகள் எடுத்துச்சென்றவர்கள் முறையாக அனைத்து விஷயங்களையும் பாண்டவர்களிடம் எடுத்துரைத்தனர். அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட யுதிஷ்டிரன் யக்ஞம் இனிது நிறைவேற வேண்டும் என்று ஆசிகள் கூறி பதிமூன்று வருடங்கள் வன வாசத்தில் இருக்கும் காரணத்தால் தங்களால் வரஇயலாது என்று கூறினான். அப்போது பீமன் அழைக்க வந்தவர்களிடம் எங்களுடைய பதிமூன்று வருட வனவாசத்திற்கு பிறகு நாங்கள் ஒரு யக்ஞம் செய்வோம். அந்த யக்ஞத்திற்கு திருதராஷ்டிரரின் மைந்தர்கள் அனைவரும் ஆஹீதியாக்க படைக்கப்படுவார்கள் இந்த செய்தியை துரியோதனனிடம் தெரிவிக்கவும் என்று கூறினான். அழைக்கவந்தவர்களும் நடந்தவைகள் அனைத்தையும் அரண்மனையில் தெரிவித்தார்கள்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -16

கந்தர்வர்களின் தலைவனான சித்திரசேனனிடம் அர்ஜுனன் வேண்டுதல் ஒன்றை வைத்தான். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் யுதிஷ்டிரன் முன்பு நிறுத்தும் படியும் யுதிஷ்டிரன் கூறும் தண்டனையை இவர்களுக்கு கொடுக்கும்படியும் வேண்டுகோள் வைத்தான். இதற்கு சித்திரசேனன் முழுவதும் சம்மதம் கொடுத்தான். கௌரவர்கள் அனைவரும் யுதிஷ்டிரன் முன்பு அழைத்துச் செல்லப்பட்டனர். துரியோதனன் செய்த பிள்ளைக்காக யுதிஷ்டிரன் அவனை சிறிது கடிந்து கொண்டான். இதுபோன்ற பொருளற்ற நடவடிக்கை ஏதும் இனி செய்ய வேண்டாம் என்றும் தலைமை பட்டணத்திற்கு திரும்பிப்போய் அமைதியாக வாழவேண்டும். பகையால் பயனேதுமில்லை. இப்போது நிகழ்ந்துள்ள தௌர்பாக்கியங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு இன்புற்று வாழ்ந்து இருக்கும்படி துரியோதனனுக்கு புத்திமதி கூறி அனுப்பி வைத்தான். துரியோதனன் வெட்கத்தாலும் அவமானத்தாலும் முகம் வாடிப்போனவனாக அங்கிருந்து கிளம்பினான். உடன் வந்தவர்கள் அனைவரையும் அஸ்தினாபுரம் அனுப்பிவிட்டு அவன் தனியாக ஓரிடத்தில் தங்கினான்.

துரியோதனன் திரும்பி வந்ததை அறிந்த கர்ணன் திட்டப்படி துரியோதனன் காரியத்தை நிறைவேற்றி வந்திருக்கிறான் என கருதி துரியோதனனை கர்ணன் பாராட்டினான். ஆனால் துரியோதனனோ தனக்கு நேர்ந்த தௌர்பாக்கியத்தையும் யுதிஷ்டிரனின் மேன்மை தாங்கிய எண்ணமே தன்னை கந்தர்வர்களிடம் இருந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது என்றும் தெரிவித்தான். தான் வெறுக்கும் பாண்டவர்களால் தன்னுடைய உயிர் காப்பாற்றப்பட்டதை எண்ணி மேலும் உயிர் வாழ்ந்திருக்க துரியோதனன் விருப்பமில்லை. துச்சாதனனை சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்து விட்டு பட்டினி கிடந்து உயிர் துறக்க தீர்மானித்தான் துரியோதனன்.

அவனுடைய தம்பிமார்கள் அவனுடைய பாதங்களில் விழுந்து கும்பிட்டு அத்தகைய தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்கள். துரியோதனன் தான் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து மாறவில்லை. அனைத்தையும் கேட்ட கர்ணன் அப்படி செய்வது பயங்கர பயந்தாங்கோலித்தனம் என்றும் க்ஷத்ரியன் ஒருவனுக்கு அது சரியானது இல்லை என்றும் தங்களை ஆண்டுவந்த வேந்தனுக்கு செய்ய வேண்டிய கடமையை தானே பாண்டவர்கள் செய்தனர் என்றும் கர்ணன் நிலைமையை எடுத்துக் காட்டி துரியோதனன் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்குமாறு கூறினான். ஆனால் துரியோதனன் தான் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்காதவனாக தென்பட்டான்.

அத்தருணத்தில் தானவர்களும் தைத்யர்களும் துரியோதனன் முன்னிலையில் வந்து தேவர்களால் தங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தை எடுத்து விளக்கினார்கள். தேவர்களோடு போர் புரிய அவர்கள் தீர்மானித்து இருந்தார்கள். துரியோதனன் மடிந்து போனால் தங்களுடைய போர் வலிமை குறைந்துவிடும். பாண்டவர்களுக்கு துணை புரிய தேவர்கள் முன்வந்திருக்கிறார்கள். தேவர்களைத் தோற்கடிப்பதன் வாயிலாக பாண்டவர்களை தோற்கடிப்பது உறுதி என்று அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். அரக்கர்கள் கொடுத்த இந்த வாக்குறுதி துரியோதனனுக்கு புதிய வல்லமையை கொடுத்தது இத்தகைய புதிய நம்பிக்கை அடைய பெற்றவனாக துரியோதனன் அஸ்தினாபுரம் திரும்பி வந்தான்.