மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -12

யுதிஷ்டிரனிடம் பாம்பு கேள்வி கேட்க ஆரம்பித்தது. பிராமணன் என்பவன் யார்? அவனுடைய இலட்சணம் என்ன?

உண்மை, கொடை, பொறுமை, நல்லொழுக்கம், இரக்கம், தவம், கருணை ஆகிய குணங்களுடன் தவமும் தெய்வ சம்பத்தும் வாய்க்கப்பெற்று இருப்பவனே பிராமணன். பொறி புலன்களை அவன் வென்றவன். சத்திய விரதத்திலிருந்து அவன் மாறுவதில்லை. பரஞானத்தை நாடியிருப்பதும் அந்த பரஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் அவனுடைய தர்மமாகும். இதுவே பிராமணனுக்குரிய இலட்சணமாகும் என்று யுதிஷ்டிரர் சொல்லி முடித்தார்.

பாம்பு – எதை அறிந்தால் மனிதன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்?

யுதிஷ்டிரன் – மாய பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருப்பது பிரம்மம். அந்த பிரம்மத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான்.

பாம்பு – அறியத்தக்கது எது?

யுதிஷ்டிரன் – தேசம் காலம் வஸ்து ஆகிய எவற்றாலும் அளவிடமுடியாத எந்த இறைவனிடம் சென்று அடைந்து உயிர்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லையோ அந்த இறைவனே அறியத்தக்கவன்.

பாம்பு – சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதா?

யுதிஷ்டிரன் – பிறப்பில் சாதி அடிப்படையாக கொண்டது இல்லை. அனைவரும் மனிதர்களாகவே பிறக்கின்றார்கள். பிறகு அவர்கள் அடைந்து வருகின்ற மனப்பரிபாகத்தை முன்னிட்டு மானுடன் ஒருவன் சாதியில் மேலோங்குகின்றான். இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் அறவே துறந்து இறைவன் எண்ணத்திலேயே நிலைத்திருந்து மக்கள் எல்லோரையும் உயர்நிலைக்கு அழைத்துச் செல்பவன் பிராமணன் ஆகிறான். சமுதாய ஒழுக்க கட்டுப்பாட்டை முறையாக காப்பாற்றி வருபவன் க்ஷத்திரன் ஆகின்றான். சமுதாயத்தின் செல்வத்தை வளர்ப்பவன் வைசியனாகின்றான். தன்னுடைய சுயநலத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பவன் சூத்திரன் ஆகின்றான்.

பாம்பு – பிரம்மஞானி யார்? பிரம்ம ஞானத்தின் பயன் என்ன?

யுதிஷ்டிரன் – ஞானத்தின் சிகரமாகிய பிரம்மஞானத்தை பெறுவது வாழ்வின் முடிவான குறிக்கோள் ஆகும். பிரம்மஞானி ஒருவன் நான் உடல் அல்ல தான் ஆத்ம சொரூபம் என்பதை அனுபூதியில் அறிய வருகின்றான். அவன் இறப்பிற்கும் பிறப்பிற்கும் அப்பாற்பட்டவன். இவ்வுலகத்தின் இன்ப துன்பங்கள் அவனை தாக்காது. அவனே பிரம்மஞானி. பிரம்மஞானிகளிடம் தொடர்பு கொள்கின்ற மக்கள் அனைவரும் ஒழுக்கத்திலும் பரஞானவளர்ச்சியிலும் முன்னேற்றமும் அடைகின்றனர்.

பாம்பு கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் யுதிஷ்டிரன் சரியான பதில் கூறியதும் அகத்தியர் இட்ட சாபம் முடிவுற்றது. மலைப்பாம்பு உயிர் அற்றதாக நழுவி கீழே விழுந்தது. பாம்பின் உடலில் இருந்த நகுஷன் ஜோதிமயமாக கிளம்பினான். சொர்க்கத்திலிருந்து ரதம் கீழே இறங்கி வந்து அவனை விண்ணுலகு அழைத்துச் சென்றாது. ரதம் மேல் நோக்கி செல்வதற்கு முன் யுதிஷ்டிரனை நகுஷன் ஆசிர்வதித்தான். பீமன் பழையபடி வலிமையான மனிதன் ஆனான். மானுட வாழ்க்கையில் அமையக்கூடிய அதிசயங்களையெல்லாம் வியந்து கொண்டே அண்ணனும் தம்பியும் தங்களுடைய காம்யக வனத்திற்கு திரும்பிச் சென்றனர்.

One thought on “மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -12

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.