மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -2

விதுரர் பாண்டவர்களை பார்க்க காம்யக காட்டிற்கு சென்று அவர்களுடன் சிறிது நாட்கள் இருந்தார். சில வாரங்கள் சென்றன. திருதராஷ்டிரனுக்கு விதுரர் சொன்னதில் உண்மை இருக்கிறது என்று எண்ணி விதுரரை மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு வரவழைத்தார். விதுரர் பாண்டவர்களை பார்க்க காம்யக காட்டிற்குச் சென்று அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்ததை அறிந்த துரியோதனன் விதுரர் பாண்டவர்களை மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு வரவழைக்க சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்கிறார் என்று எண்ணினான். இந்த முயற்சி நிறைவேறினால் பாண்டவர்கள் மீண்டும் திரும்பி வந்து கௌரவர்களை தங்கள் பின்னணியில் இருக்கச் செய்வார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. ஆகையால் எதிரிகளாக இருக்கும் பாண்டவர்களை காட்டிலேயே வைத்து கொன்று விட்டால் பிறகு எதிர்ப்பு இல்லாமல் இருக்கும் என்று துரியோதனன் சதி ஆலோசனை செய்தான்.

வியாசர் துரியோதனன் முன் தோன்றி பாண்டவர்களை அழிக்க மடமே நிறைந்த முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் மீறி செய்தால் சூழ்ச்சிகள் யாவும் நிறைவேறாது என்றும் அவனுக்கு எச்சரிக்கை செய்தார். அடுத்தபடியாக வியாசர் திருதராஷ்டிரனிடம் சென்று சுய அழிவுக்கு உண்டான சூழ்ச்சிகளில் துரியோதனன் ஈடுபட வேண்டாம் என்று அவனுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் அவன் செய்யும் காரியங்களுக்கு தடைகள் போட வேண்டும் என்று திருதராஷ்டிரனுக்கு புத்தி புகட்டினார்.

மைத்ரேய மகரிஷி நாடு முழுவதும் தீர்த்தயாத்திரை சென்று கொண்டிருந்த பொழுது காம்யக வனத்தில் வசித்து வந்த யுதிஷ்டிரனைச் சந்தித்தார். அஸ்தினாபுரத்தில் நிகழ்ந்த பகடை விளையாட்டின் மூலம் நடந்த அனைத்து விளைவுகளையும் கேட்டு அறிந்தார். பீஷ்மரும் திருதராஷ்டிரர் போன்ற பெரியவர்கள் இப்பாவச்செயல் நடைபெறுவதற்கு எவ்வாறு இடம் கொடுத்தார்கள் என்று அந்த முனிவர் வியந்தார். மகரிஷி அடுத்தபடியாக துரியோதனனை சந்தித்தார். பாண்டவர்களை அழிப்பதற்கு எந்த செயலில் ஈடுபட வேண்டாம் என்று அவனுக்கு புத்தி புகட்டினார். ஆனால் தற்பெருமையே வடிவெடுத்த துரியோதனன் தன் தொடைகளை தட்டி அவரை ஏளனம் பண்ணினான். இந்த செயலைக் குறித்து கோபம் கொண்ட மைத்ரேய மகரிஷி போர்க்களத்தில் பீமனுடைய கதையினால் உன் தொடைகள் தூளாக்கப்பட்டு மாண்டு போவாய் என்று சாபமிட்டார்.

கிருஷ்ணர் திருஷ்டத்யும்னன் மற்றும் பல உறவினர்கள் காம்யக வனத்தில் இருக்கும் பாண்டவர்களை பார்க்க வந்தனர். உறவினர்கள் அனைவரும் வந்தது பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் ஓரளவு ஆறுதலை கொடுத்தது. பரிதாபகரமான பாங்கில் திரௌபதி கண்ணீர் வடித்து நடந்த அனைத்தையும் கிருஷ்ணனிடம் கூறினாள். திரௌபதி கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்ட கிருஷ்ணன் வினைப்பயனிலிருந்து பொல்லாத கவுரவர்கள் ஒருபொழுதும் தப்பித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் தக்க சமயத்தில் இந்த அடாத செயலுக்கு பழி வாங்கப்படுவார்கள் என்னும் உறுதிமொழியை திரௌபதியிடம் கொடுத்தார். தன் தங்கை சுபத்திரையையும் அவளுடைய மகன் அபிமன்யுவையும் தன்னுடைய சொந்த பாதுகாப்பில் வைத்திருக்க கிருஷ்ணன் ஏற்பாடு செய்தார். அதே விதத்தில் திருஷ்டத்யும்னன் தன் தங்கை திரௌபதியின் மகன்களாகிய உப பாண்டவர்கள் ஐவரையும் தன் பாதுகாப்பில் வைத்திருக்க ஏற்பாடு செய்தான்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.