ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 704

கேள்வி: இன்று மகாசிவராத்திரி. இங்கேயே (இந்த ஜீவநாடி படிக்கும் இடத்தில்) பூஜை செய்யலாமா?

இறைவனின் கருணையாலே மனதை தளர விடாமல் தாராளமாக இயன்ற தெரிந்த மந்திரங்களை இங்கு அமர்ந்து உருவேற்றலாம்.

கேள்வி: இன்று பல ஆலயங்கள் சென்று வந்தோம். இறைவனின் அருள் எங்களுக்கு கிடைத்ததா?

இறைவனின் அருள் இருந்ததால்தான் ஆலயம் செல்லவே வாய்ப்பு கிடைக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 703

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் மனமது உணர்வுகளால் ஆளப்பட்டு உணர்வுகளால் உந்தப்பட்டு அந்த உணர்வுகளுக்கு தீர்வினை தேடி அந்த வடிகால் கிட்டினால்தான் அந்த உணர்வு உடலின் எந்த உறுப்புகளோடு தொடர்பு கொண்டிருக்கிறதோ அதனால் ஏற்படக்கூடிய உளைச்சல் குறைகிறது என்பது மனித நிலையாக இருந்து வருகிறது. இதுபோல் நிலையிலே புற சமூக சூழல் இந்த சமூகத்திலே இதையிதை செய்யலாம் இதையிதை செய்யக்கூடாது என்று மனிதனாக வகுத்துக் கொண்ட வாழ்க்கை நெறி. இவைகள் இருந்தும் இதனையெல்லாம் தாண்டிதான் மனிதனை உணர்வுகள் ஆட்டிப் படைக்கின்றன. இதுபோல் நிலையிலே எந்த விதமான உணர்வுகளும் இல்லாத நிலையில் ஒரு உயிர் இயங்குமா? என்றால் அப்படி இயங்க சாத்தியம் இல்லை.

உயிர் எனப்படுவது ஒரு இயக்க நிலையை குறிக்கும் நிகழ்வாகும். இதுபோல் கல்லிற்கும் உயிர் உண்டு. மண்ணிற்கும் உயிர் உண்டு என்றால் அதை மனிதனால் சட்டென்று புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது. எனவே அதன் மாற்றங்களை மனிதனால் உணர முடிகிறது. வெளிப்படையாக மாற்றங்களை உணர முடியாத இயக்கங்கள் எதுவும் இல்லாத ஒன்றை மனிதன் உயிரற்றவை என்றுதான் குறித்து வைத்திருக்கிறான். ஆனால் மனித கண்களுக்கோ மனித புலன்களுக்கோ புரியாத தெரியாத உணர இயலாத எத்தனையோ இயக்கங்கள் இந்த உலகில் இந்த உலகை தாண்டிய நிலையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு மனிதன் கேட்பான் சதாசர்வகாலம் ஆலயம் சென்று இறைவனை வணங்குவதால் என்ன பலன்? என்று. இன்னொரு மனிதன் கேட்பான் சதாசர்வகாலம் கண்ணை மூடி அமருவதால் உலகிற்கு அதனால் என்ன பலன் கிட்டப் போகிறது? என்று. மனிதன் என்ற பிறவி எடுத்தவன் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். செயல் ஒன்றை குறித்த அறிவும் அந்த அறிவு விவேகம் சார்ந்ததாக இருக்கும் நிலையில் சரியான ஒரு குறிக்கோள். அதை நோக்கி மனதை தளரவிடாத ஒரு உறுதித் தன்மை பிற புற சூழல்களால் பாதிக்கப்படாத மனோ நிலை. பிறகு கடுமையான உழைப்பு. வெற்றி வந்து விடாமல் போய்விடுமா என்ன? என்பது பல மனிதர்களின் வாதம். இப்படி எதையும் செய்யாமல் எல்லாம் வினை என்றும் எல்லாம் விதிப்பயன் என்றும் காலம் கழிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று எண்ணுகின்ற சாராரும் உண்டு. எல்லோரும் கூறுவது உண்மையா? அல்லது உண்மையின் ஒரு பகுதியை ஒவ்வொரு மனிதனும் கூறுகிறானா?

எப்பொழுதுமே மனிதர்களின் கூற்றில் முழுக்க உண்மை இல்லாவிட்டாலும் உண்மையின் எதாவது ஒரு பகுதியை கூறிக்கொண்டுதான் இருப்பான். ஒரு விலங்கை பார்க்கும் பொழுது அந்த விலங்கு மான் என்று வைத்துக் கொண்டால் மான் என்றால் கொம்பு இருக்கும் என்பதை மட்டும் ஒரு மனிதன் கூறினால் மானிடம் கொம்பு இருக்கிறது என்பது உண்மை. ஆனால் கொம்பு இருப்பதெல்லாம் மான் என்று ஏற்றுக்கொள்ள இயலாது. இன்னொருவன் கூறுவான். மான் என்றால் வேகமாக ஓடக் கூடியது என்று. மான் வேகமாக ஓடக்கூடிய திறன் பெற்றிருக்கலாம். ஆனால் வேகமாக ஓடக் கூடிய அனைத்தும் மான் என்றால் அது இல்லை. எனவே இவன் கூறுவது உண்மைதான். ஆனால் அந்த உண்மை முழுமையான மானை வெளிப்படுத்துவதாக இல்லை. இன்னொருவன் கூறுவான். மான்கள் உடலெங்கும் புள்ளிகள் இருக்கும் என்று. இவைகள் உண்மையா? என்றால் புள்ளிகள் இருந்தால் மான். ஆனால் புள்ளிகள் இல்லாமலும் மான்கள் இருக்கலாம். அல்லது புள்ளிகள் இருந்தால் அது மான் மட்டும்தான் என்று கூற இயலாது. எனவே கூறுவது உண்மை என்றாலும் ஒரு உண்மையின் சாராம்சம் முழுக்க முழுக்க ஒரு பொருளை முழுமையாக உணர்த்தும் விதமாக இருந்தால்தான் அது உண்மை முழுமையாக வெளிப்பட்ட ஒரு தன்மையாகும்.

இதுபோல் நிலையிலே ஒரு மனிதன் பண் பட வேண்டும். தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். வெறும் உணர்வுகளுக்கு மட்டும் ஆட்பட்டு அப்படியாகவே வாழ்ந்துவிட்டு போகக் கூடாது. இந்த உடல் என்பது வினைப் பயனால் ஆத்மாவிற்கு தரப்பட்டு இருக்கிறது. எத்தனைதான் யோகாசனம் செய்து சரி விகித உணவை ஏற்றாலும் ஒரு நாள் இந்த உடலை விட்டு இந்த ஆத்மா வெளியே செல்ல வேண்டியதுதான். அதற்காக தேகத்தை பராமரிக்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இருக்கும் வரையில் எப்படி ஒரு மனிதன் விலை உயர்ந்த துணியை பராமரிக்கிறானோ தன் தேகத்தை மறைப்பதற்கு துணி அது போனால் இன்னொரு துணியை வாங்கிக் கொள்ளலாம். அதனால் பாதகம் ஒன்றுமில்லை அவன் அறிந்தாலும் முந்தைய துணியை அவன் விடுவதாக இல்லை. இப்படி மாற்றக் கூடிய மாற்று கிட்டக் கூடிய நிலையில் இருக்கும் துணியை பராமரிக்கிறான். வாகனங்களை பராமரிக்கிறான். ஆனால் ஆத்மா குடியிருக்கும் வீடான அல்லது ஆத்மா சூடியிருக்கும் ஆடையான உடலை பராமரிக்க தவறுகிறான். எனவே உடலை பராமரித்து நன்றாக பேணி அதனோடு நாங்கள் கூறுகின்ற அற வழியும் இறை வழியும் பின்னிப் பிணைந்து செயல்பட நல்ல பலன் உண்டு.

இதுபோல் முன்னர் கூறிய விளக்கங்களை அசைபோட்டுப் பார்த்தால் உண்மையின் சாராம்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் தெள்ளத் தெளிவாக மிகவும் நுட்பமாக புரியும். இதுபோல் நிலையிலே ஒரு மனிதன் அமைதியாக இருப்பதா? ஆடி ஓடுவதா? அல்லது உலகியல் வெற்றியை தேடுவதா? அல்லது எல்லாம் இறை செயல் என்று இருப்பதா? அல்லது ஆலயம் தோறும் செல்வதா? அல்லது தர்மம் செய்வதா? என்று கேட்டால் முன்னர் கூறிய மான் உதாரணத்தைதான் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறது. எல்லா உண்மைகளையும் தொகுத்து பார்த்துதான் ஒன்றாக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த வகையிலே மனிதன் தன் மனதை பக்குவப்படுத்ததான் இறை வழியை நாடுகிறான். அல்லது ஒரு குருவை நாடுகிறான். மனம் பக்குவப்படாத நிலையில் அல்லது பக்குவப்பட மறுக்கின்ற நிலையிலே ஒரு மனிதன் செய்கின்ற செயல் வெறும் புற செயலாகத்தான் இருக்கும். ஆனால் இது நாள் வரை பூஜைகள் செய்தும் பலனில்லையே? தியானம் செய்தும் மனம் ஒடுங்கவில்லையே? என்பதற்காக அதனை விட்டு விட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. இன்னும் சரியாக ஒரு வாகனத்தை ஓட்ட கற்றுக் கொள்கின்ற மனிதன் எடுத்த எடுப்பிலேயே அதனை சிறப்பாக ஓட்டுவதில்லை. சரியாக இயக்க தெரியவில்லை என்று யாரும் அதனை விட்டு ஒதுங்குவதில்லை. பலமுறை வீழ்ந்தாலும் எழுந்து எழுந்து அந்த சிறு வாகனத்தை ஓட்ட ஒரு மனிதன் பயிற்சி பெறுகிறான்.

அதைப்போலதான். மனம் ஆங்காங்கே அலை பாயும் தன்மை கொண்டது இயல்பாக. அதனை ஒரு நிலைப்படுத்து என்று நாங்கள் கூறுவது வெறும் இறை வழி சார்ந்த ஆன்மீக விஷயங்களுக்கு மட்டுமல்ல. உலகியல் ரீதியாக ஒரு மனிதன் சாதனை செய்ய விரும்புகிறான். உலகியல் ரீதியான வெற்றியை விரும்புகிறான். அதற்கும் சேர்த்துதான். எதுவும் கையில் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று வேண்டும் என்று மனம் விரும்புகிறது. அந்த விருப்பம் ஒரு ஞானியின் பார்வையில் தேவையற்றதாக இருக்கலாம். ஆனாலும் கூட ஒரு மனிதனுக்கு மனோ வலிமை இருந்தால் அந்த விருப்பத்தை அவன் தன் மனோ வலிமையாலேயே சாதித்துக் கொள்ளலாம். அந்தளவிற்கு மனோ வலிமை பெற்ற மனிதன் எதையும் விரும்ப மாட்டான் என்பது வேறு விஷயம். இதுபோல் நிலையிலே மனதை திடமாக உறுதியாக பதட்டமின்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஆதி நிலை பயிற்சியாளர்கள் புறத்தே இருந்து வரும் நிகழ்வுகளுக்கு ஏற்பவும் கான பிம்பப் பேழையிலே சலன காட்சிகளை பார்க்கும்பொழுது அந்த காட்சிகளால் மனம் சிதிலமடைந்து பதட்டம் அடைந்து அச்சத்தில் ஆழ்ந்து சோர்ந்து போகும் நிலையிலே இருக்கும் என்பதால் கூடுமானவரை மனதிற்கு நல்ல ஆக்கத்தை தரும் செய்திகளை கேட்கவும் அதுபோல் பிம்பங்களை பார்க்கவும் மட்டும் மனிதன் ஆதி நிலையில் முயற்சி எடுக்க வேண்டும். மனதை பாதிக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் பார்ப்பது என்பது ஏற்புடையது அல்ல. ஆனாலும் கூட அப்படி பாதிப்பே இல்லாத ஒரு நிலையில் ஒரு மனிதன் வாழ வேண்டும் என்பதையும் நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை.

எல்லாவகையான ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்ற நிலையில் ஒரு மனிதன் திடமாக உயர்வாக பண்பாடோடு வாழ நாகரீகமாக வாழ எல்லா பெருந்தன்மை குணங்களோடும் வாழ இச்சைகளை கட்டுப்படுத்தி நெறிப்படுத்தி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது உணவிற்கே வழியில்லாதவன் விரதம் இருக்கிறான் என்பதல்ல. உண்ணா விரதத்தை கூறுகிறோம். உணவை உண்ணக் கூடிய வாய்ப்புகள் இருந்தும் உடல் நலம் கருதி அல்லது பக்தி நெறிக்காகவாவது ஒருவன் உண்ணா விரதம் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு ஊமை மௌன விரதம் இருப்பதுபோல் ஆகிவிடும். எனவே இதுபோல் கருத்துக்களை மனதிலே அசைபோட்டு வாழ இறையருள் எல்லோருக்கும் கிட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 702

கேள்வி: இறைவனை நம்புகின்ற புண்ணிய ஆத்மா ஒன்று சில நேரங்களில் இறைவனுக்கு எதிரான பாவ காரியத்தில் பங்கேற்க வேண்டிய விதி அமையும் போது அந்த பாவம் அந்த ஆத்மாவை சேருமா?

இறைவன் கருணையால் ஒருவன் இறைவனை பூஜிக்கிறான் அல்லது இறைவனை எதாவது அபவாதமாக பேசுகிறான். இறைவன் இருப்பதை ஒத்துகொள்கிறான். ஆனால் ஏதோ ஒரு சினத்திலே இறைவனை அப்படி தூஷிக்கிறான். அதை சராசரி மனிதன் செய்தால் இறைவனோ மகான்களோ மற்றவர்களோ அவன் அறியாமையில் இருக்கிறான் என்று பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பல கோடி தவங்கள் செய்து மனிதனை விட பல மடங்கு உயர்ந்த நிலையில் தேவனாகவோ யக்ஷனாகவோ இருக்கக் கூடிய ஒருவன் எதாவது ஒரு சிறிய வருத்தத்தால் இறைவனை தூஷித்து ஆனால் மற்ற தேவதைகளை மகிழ்விப்பதற்காக யாகங்கள் செய்தால் இறைவனை தூஷிக்கிறானே நாமெல்லாம் யாகத்திற்கு செல்லக்கூடாது என்ற சிறிய சிந்தனைகூட யாருக்கும் இராதா?

எதற்காக தக்ஷன் (செய்த) யாகத்தில் எல்லோரும் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? விதி. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறைவனுக்கு அருகில் இருந்தாலும் இறைத் தன்மையை எந்த ஆத்மா பரிபூரணமாக புரிந்து கொள்கிறதோ அது வெறும் பார்வையாளனாகத்தான் இருக்கும். அது எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது. எதாவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றால் தாமரை இலை தண்ணீர் போல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நீ கூறியது போல் பாவம் என்பது வராமல் இருக்கும். ஆனால் அதிலேயே மூழ்கி விட வேண்டிய நிலையில் மனிதனோ தேவர்களோ மற்ற தேவதைகளோ ஈடுபடுவதால்தான் இதுபோல் நிலை உருவாகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 701

கேள்வி: பிறவி எடுக்கும் போதே இன்னவிதமான பாவ காரியங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கப் படுகின்றதா? ஆம் எனில் அப்படி ஏற்கனவே விதிக்கப் பட்ட பாவ காரியங்கள் செய்யும் போது அந்த பாவத்திலிருந்து விலக்கு உண்டா?

இறைவன் அருளால் நீ கூறுவதை உண்மை என்று வைத்துக்கொண்டு பார்ப்போம். விதிக்கப்பட்டது அல்லது விலக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுதே ஒருவன் உடல் பலம் எதற்கு பெற வேண்டும்? பிறரோடு போரிட வேண்டும் என்றால் உடல் பலம் வேண்டும். பிறரோடு போரிடுவதையே முட்டாள்தனம் என்று நாங்கள் கூறும் பொழுது போர் என்பது அடிப்படையில் மனிதனுக்கு தேவையில்லாத விஷயம். அடுத்த நிலையிலே அப்படி ஒருவன் வாழ வேண்டும் என்ற குடும்பத்திலோ அல்லது ஒரு சூழலிலே பிறப்பு எடுக்கிறான் என்றாலே என்ன பொருள்? அந்த பாவத்தை செய்துதான் ஆகவேண்டும் என்கிற ஒரு பிறப்பு எடுக்க வேண்டுமானால் அவன் என்ன பாவத்தை ஏற்கனவே செய்திருப்பான்? எனவே பாவத்தை செய்யாமல் இருந்தால் தவிர்க்க முடியாமல் பாவத்தை செய்ய வேண்டிய அல்லது ஒரு பாவத்தை செய்து கொண்டே அதற்கு ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய நிலைமை ஒரு மனிதனுக்கு வராது. வேதங்களிலோ அல்லது எம்போன்ற மகான்களோ இதுபோல் விலங்குகளைக் கொன்று இவர்கள் இவர்கள் உண்ணலாம். இவர்கள் இவர்கள் உண்ணத் தேவையில்லை என்று கூறவில்லை. இவைகள் அனைத்துமே இடைசெருகல்களே எந்த இடத்திலும் இறைவனோ ஞானியர்களோ இதுபோன்ற விஷயங்களைக் கூறவில்லை. போதிக்கவில்லை. மனிதன் தன் சுயநலத்திற்கேற்ப இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 700

கேள்வி: ஞானம் பற்றி:

இறையருளால் இயம்பிடுவோம் இத்தருணம். இறை வணங்கி அறம் புரிய என்றென்றும் நலமாம். இடைவிடாத பிரார்த்தனைகள் நலத்தை சேர்க்கும். அறிவு என்றால் என்ன? பலவற்றை அறிந்து கொள்வது அறிவு. புத்திசாலிதனம் என்றால் என்ன? நீ அறிந்து கொண்ட அறிவை நடைமுறையில் பயன்படுத்த தெரிந்து கொண்டல் நீ புத்திசாலி. அதாவது மின்சக்தி எனப்படுவது மிகவும் அதிர்சியைத் தரக்கூடியது. அதை தீண்டினால் உயிருக்கே ஆபத்தாகும் என்பது ஒருவன் அறிந்த அறிவு. ஆனால் அதை தீண்டக்கூடாது என்ற உணர்வோடு அதனோடு அவன் ஒரு செயல்பாட்டை வைத்துக் கொண்டால் அது புத்திசாலித்தனம். எனவே இந்த அறிவும் புத்திசாலிதனமும் எங்கு தோற்கிறதொ அங்கு ஞானம் பிறக்கிறது. எனவே இந்த உலகிலே பார்க்கின்ற நிகழ்ச்சிகள் பொருள்கள் அனைத்தும் மனிதப் புலன்களுக்கு உட்பட்டெ இருக்கிறது. மனிதப் புலன்களுக்கு உட்படாத எத்தனையோ விசயங்கள் இருக்கிறது. மனிதனால் பார்த்து உணர முடியாத கேட்டு உணர முடியாத நுகர்ந்து உணர முடியாத தொட்டு உணர முடியத எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. அதை புரிந்து கொள்ளுதல் அதை அறிந்து கொள்ளுதல் அதை நோக்கி செல்லுதல் இது ஒருவகையான ஞானம் தெய்வீக ஞானம்.

அடுத்தது மனத உடலோடு இருந்தாலும் உடல் சார்ந்த இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உள்ளத்தை இறையை நோக்கி வைத்து பற்றற்று தெய்வீக விழிப்புணர்வோடு வாழ்ந்து இந்த உடல் கூட ஒரு பாரம் போல் எண்ணி தன்னையே மூன்றம் மனிதனைப் போல் பார்த்து நல்லதை மட்டும் எண்ணி நல்லதே செய்து நல்லதையே உரைத்து வாழ்வதே உண்மையான தெய்வீக ஞானம். அதை நோக்கி செல்ல நீ முயற்சி செய்யலாம். ஆனால் இந்த பிறவியிலே வெற்றி அடைவாய் என்று உறுதியாக கூற இயலாது. வெற்றி அடையவேண்டும் என்று உறுதியோடு இருந்தால் பல்வேறு சோதனைகளைத் தாண்டி நீ வரவேண்டும். அதற்கு உன் உள்ளம் தயாராக இருக்க வேண்டும். பற்று விடுதலே ஞானமாகும்.

இதுபோல் முழுக்க முழுக்க லோகாய விஷயங்களுக்காகவும் புலன் ஆசைகளுக்காகவும் மட்டும் வாழக்கூடிய மனிதர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். இது ஒரு வகையில் அவனவன் கர்ம வினை என்றாலும் கூட இதனையும் மீறி போராடித்தான் வர வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ யோக நிலையை நோக்கி ஞான மார்கத்தை நோக்கி நிஜமாகவே செல்லக் கூடிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த உலகிலே சராசரி விஷயங்களும் சாமான்ய விஷயங்களும்தான் சாமான்ய மனிதர்களால் எப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. இதுபோல் சித்தர்களின் நாமத்தை உச்சரிப்பதாலோ சதாசர்வகாலம் சித்தர்களைப்பற்றி விவாதம் செய்வதாலோ மட்டும் ஒருவருக்கு ஞானம் வந்து விடுவதில்லை. இதுபோல் சித்தர்களைப் பற்றி பேசுவதாலும் இறைவனைப் பற்றி பேசுவதாலும் சில மந்திரங்களை உச்சரிப்பதாலும் ஏதாவது நன்மை கிட்டாதா? அல்லது லோகாயதத்தில் உள்ள கஷ்டங்கள் விலகாதா? என்றுதான் பல மனிதர்கள் வருகிறார்கள். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அதுவும் குற்றமில்லை என்று தோன்றினாலும் கூட அதனையும் தாண்டி மெய்யான ஞானத் தேடலான மனிதக் கூட்டம் ஒன்று இருந்தால்தான் அந்த மனிதக் கூட்டத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு எதனையும் செய்தால்தான் கூடுமானவரை பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும். மற்றபடி எமது வழியில் வருகின்ற பல்வேறுபட்ட மனிதர்களாக இருந்தாலும் ஆன்ம நேய மனிதர்களாக இருந்தாலும் உள்ளே உள்முகமாக அகத்திலே பெருந்தன்மை இல்லாததால் உள்ளே வளராமல் இருப்பதால் இதுபோல் மாந்தர்களோடு உறவு வைத்துக் கொண்டால் பெயரளவிற்கு ஆன்மீகம் இருக்குமே தவிர உண்மையான ஆன்மீகமாக இராது. செம்பிலே உள்ள களிம்பை நீக்கிவிட்டால் செம்பு தன்னால் ஒளிர்வது போல ஒவ்வொரு ஆத்மாவிற்கும் பூர்வீகத்தில் அது எந்த பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்ததோ அந்த ஆத்மாவின் சாயல் இருக்கும். ஆனால் ஆசா பாசங்களும் கர்மங்களும் மாயைகளும் மூடியிருப்பதால் அது உணர்வது இல்லை. இவற்றை உணரத் தொடங்கும்போது உலகியல் அதை உணர விடாது செய்யும். அதை மீறிச் செல்வதற்கு மனத்துணிவு வேண்டும். மன ஆற்றலை திடத்தை தைரியத்தை அதிகரித்துக் கொண்டால் ஆன்ம ஞானத் தேடலில் வெற்றி பெறலாம்.

அனைத்து பற்றியும் அதைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது உறவு பற்றியும் கவலை கொள்ளாது கவலை பற்றியும் கவலை கொள்ளாது பிரிவு பற்றியும் கவலை கொள்ளாது பிறர் பரிவு பற்றியும் கவலை கொள்ளாது தெளிவு பற்றியும் கவலை கொள்ளாது குழப்பம் பற்றியும் கவலை கொள்ளாது தனம் பற்றியும் கவலை கொள்ளாது குணம் பற்றியும் கவலை கொள்ளாது பிறர் சினம் பற்றியும் கவலை கொள்ளாது தினம் தினம் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது பற்றி பற்றி வாழாது பற்றா பற்றி வாழ இறை அருளுமப்பா.

கடமை ஆற்றுவது என்பது வேறு. கவலை கொள்ளுவது என்பது வேறு. இல்லிற்க்கும் (இல்லம்) ஏனையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டும். கடமைகளை தட்டிக் கழிக்க யாங்கள் சொல்லவில்லை. கடமைகளை சுமைகளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்றுதான் கூறுகிறோம். வாழ்வை எளிமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அண்ட (உலக) லட்சியத்திற்க்காக ஏங்குவதைவிட அகண்ட லட்சியத்திற்காக ஏங்கி உழைக்க வேண்டும். இன்பம் துன்பம் என்ற நிலைதாண்டி வாழ முயல்வதே மெய் ஞானமாகும்.

ஞானம் அடைய வேண்டும். ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே தாய் தந்தை உற்றார் உறவினர் சூழல் எதுவாக இருந்தாலும் கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய் கஷ்டப்படுகிறார் தந்தை சிரமப்படுகிறார் என்று எண்ணும்பொழுதே மீண்டும் மனிதன் மாய வலைக்குள் சிக்கிவிடுகிறான். எனவே ஒவ்வொரு உடலும் தோற்றமும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெற்று வந்த கர்மங்களின்படி அதன் வாழ்வின் போக்கும் சிந்தனைகளும் சந்திக்கின்ற அனுபவங்களும் அமைகின்றன. இருந்த போதிலும் துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாத உயிரினம் இல்லை. இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்த ஒரே வழி பிரார்த்தனை. (பித்ரு தோஷங்களும் தந்தை வழி தாய் வழி முன்னோர் வழி பெற்ற சாபங்களும் தொடர்வதால் இந்த நிலை). பசு மாடுகளுக்கு உணவு ஆலயத்தில் மீன்களுக்கு உணவு இராமேஸ்வரத்தில் தில யாகம் செய்து குறைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு மனிதனுக்கும் துன்பங்கள் இருக்கிறதென்றால் முன்வினை இருக்கிறது. என்று பொருள். முன்வினை குறையக் குறைய துன்பங்கள் குறைந்து கொண்டே வரும். இந்த வினைப்பயனை பெரும்பாலும் அனுபவித்து தீர்ப்பது ஒரு வகை. தர்மத்தால் தீர்ப்பது ஒரு வகை. இறை வழிபாட்டால் தீர்ப்பது ஒரு வகை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 699

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

எப்பொழுதுமே புராண கதைகளை நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் கூடாது. சூரிய பகவான் ஆத்மகாரகன் என்று ஜாதகத்திலே கூறப்படுகின்ற ஒரு கிரகம் அதே சமயம் ஆத்மம் எனப்படும் ஞானத்தையும் தெய்வீக விஷயத்தையும் கூட அது மறைமுகமாக குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த இடத்திலே மனம் ஓரிடத்தில் அடங்கினால்தான் எதையும் கற்க இயலும். அதே சமயம் மெய்ஞானம் ஆன்மீகம் போன்ற விஷயங்கள் எல்லாம் உலகியல் விஷயங்கள் போல உடனடியான நன்மைகளையும் சுகத்தையும் மனிதனுக்கு வெளிப்படையாக புரிவதுபோல் தராததால் அதை ஆர்வம் கொண்டு கற்க ஒரு மனிதன் முயன்றாலும் அவன் மனம் ஓரிடத்தில் அடங்காததால் அங்கும் இங்கும் அலையும். அல்லது அந்த ஆன்மீக விஷயங்கள் அவனை அலைக் கழிக்கும். அந்த அலைக் கழிக்கின்ற விஷயங்களுக்கு இடையே அலைகள் மேலே ஏறி கீழே விழுந்து என்னதான் நாவாயை தூக்கிவிட்டாலும் அந்த நாவாயானது திடமாக ஆழியில் செல்வதுபோல ஒரு ஆத்மஞான தத்துவத்தையும் மெய்யான வேதங்களையும் கற்க வேண்டுமென்றால் பல்வேறு விதமான நிலைக்கு தன்னை ஒரு மனிதன் ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வழியில் சிந்தித்துப் பார்த்தால் குருவானவர் எதாவது கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் அந்த விஷயம் பின்னர். ஆனால் கற்றுக் கொள்வதற்கு உண்டான தளத்தை அவர் முதலில் எதிர்பார்ப்பார்.

முற்காலத்தில் குருவானவர் வேதங்கள் கற்க வருகின்ற மாணாக்கனிடம் விதவிதமான சோதனைகளையெல்லாம் தந்து அவற்றில் அவன் தேர்ந்த பிறகுதான் வேதம் கற்றுக் கொள்ளவோ அல்லது அவன் எந்த வித்தைக்காக வந்தானோ அந்த வித்தையை போதிக்க அனுமதிப்பார். அப்படியொரு சோதனைதான் ஒரு மாணாக்கனை அலைக்கழித்தல் என்பது. அப்படி அலைந்து திரிந்து சோர்ந்து போகாமல் எந்த நிலையிலும் விடாப்பிடியாக நான் வேதங்களை வேத சூத்திரங்களை அந்த நுட்பமான விஷயங்களை கற்றுக் கொண்டே தீருவேன் என்றால் நீ இங்கு வா நீ அங்கு வா நீ இந்த சூழலில் இன்று வராதே. நீ நாளை வா என்று கூறும்பொழுது அந்த அலைக்கழித்தலிலே மனம் சோர்ந்து போகாமல் மேலும் மேலும் ஆர்வம் அதிகரிக்கிறதா? என்று பார்த்து கற்றுக் கொடுப்பார். அப்படியொரு சோதனைதான் நான் ஓடிக்கொண்டே இருப்பேன். என் பின்னால் என் வேகத்திற்கு ஈடுகொடுத்து நீ வருவாயா? என்று ஒரு பொருள். அதற்காக இந்த சூரியன் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்த சூரியன் பின்னால் வா என்று நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் கூடாது. அப்படிப் பார்த்தாலும் சூரியன் இருக்கும் இடத்தில்தானே இருக்கிறது. பூமிதானே சுற்றுகிறது என்று மனித விஞ்ஞானம் கூறுகிறது. எனவே இதை நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் ஏற்புடையது அல்ல.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 698

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையை பெறாத வரையில் ஒரு மனிதனால் மெய்யான மெய் இன்பத்தை பெற இயலாது. எமக்கு இறைவனின் கருணை தேவையில்லை. இந்த உலகில் வாழ வேண்டிய சகல வசதிகளும் இருந்தால் போதும் என்றுதான் பல மனிதர்கள் வாழ்கிறார்கள். இல்லையென்றால் இறைவனுக்கு பிடிக்காத அனைத்து குறுக்கு வழிகளையும் ஒரு மனிதன் கையாளுவானா? ஆலயம் செல்வதும் பாசுரங்களை ஓதுவதும் பக்திப் பழமாக தன்னைக் காட்டிக் கொள்வதும் மட்டும் இறைவனுக்கு பிடித்த விஷயமா? உண்மையான மனித நேயத்தை மறந்துவிட்ட பக்திக்கு என்றும் இறைவன் செவி சாய்க்க மாட்டான். பரோபகார சிந்தனை இல்லாத பக்தியை இறைவனோ மகான்களோ ஏற்றுக் கொள்வதில்லை. மெய்யான மெய் உணர்வு பாவங்கள் செய்யாத மன நிலை இவைகளை வளர்த்துக் கொள்ளாதவரை ஒரு மனிதனால் மெய்யான மெய் ஞானத்தை நோக்கி மெய்யாகவே நடைபோட இயலாது. எனவே விளக்கங்களை எத்தனை விதமான கோணங்களில் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் இல்லை.

இன்னும் கூறப்போனால் சித்தர்களை நாடுவதும் சித்தர்களிடம் வாக்குகளைக் கேட்பதும் கூட பெரும்பாலான மனிதர்கள் எப்படிப்பட்ட மன நிலையில் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் தன்னைப் புகழ வேண்டும் அல்லது தன் பெயரை நியாயப்படுத்தி தனக்கு ஆதரவாக சித்தர்கள் இருக்க வேண்டும். இன்னொன்று மனிதனிடம் இருக்கக் கூடிய உடனடியாக விலக்கப்பட வேண்டிய குணம் என்னவென்றால் உண்மையான ஒரு நல்ல செயலை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தே ஒவ்வொன்றையும் செய்யப் பழகுகிறான். இதை ஆரம்ப நிலையில் தவறு என்று கூற இயலாது. ஒரு குழந்தைத்தனமான ஆசை. எனவே அதை மன்னிக்கலாம். ஆனால் வளர வளர மற்றவர்கள் அங்கீகாரத்திற்காகவா ஒரு நல்ல செயலை செய்ய வேண்டும்? உண்மையாகவே வாஸ்தவமாகவே நல்ல செயலை செய்யக்கூடாதா?

இதுபோல் நிலையிலே தான் இறைவனை பார்த்திருக்கிறேன் தரிசித்திருக்கிறேன் என்பதல்ல பெருமை. மனிதனுக்கு தான் இறையை உணர்ந்ததையோ இறையை பார்த்ததையோ மற்றவர்கள் புரிந்துகொண்டு தன்னை மதிக்க வேண்டும் என்ற நிலையில்தான் மனிதனுக்கு குழப்பமே ஏற்படுகிறது. தனக்கு இறைவனின் பரிபூரண கருணை கடாட்சம் உண்டு என்பதை தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் உணர்ந்து தன்னை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பொழுது அல்லது அப்படி மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தன்னுடைய செயல் தன்னுடைய வாழ்க்கை நிலை இருக்க வேண்டும் என்றுதான் இறைவனிடம் மனிதன் எப்பொழுதுமே எதிர்பார்ப்பை வைத்திருக்கிறான். அப்படியில்லாத எந்தவொரு இறை தத்துவத்தையும் எந்த மெய்ஞான விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள மனிதன் தயாராக இல்லை.

ஒன்று ஆன்மீகமோ இறை வழிபாடோ உலகியல் ரீதியான வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும் அல்லது இந்த மனிதன் இறையருளைப் பெற்றிருக்கிறான் என்று ஒரு குறிப்பிட்ட இனமோ சமுதாயமோ பல மனிதர்களோ அதற்கு பொறுப்பேற்று முன்னுரிமை தரவேண்டும். இப்படியில்லாத நிலையில் ஒருவன் இறை வழிபாட்டையோ வழிமுறைகளையோ விரும்புவதில்லை. உண்மையில் இறைவன் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் ஞானியர்கள் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் மனிதர்கள் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் நான் சத்தியத்தைதான் பேசுவேன். நான் என்னால் முடிந்த தர்மத்தை செய்து கொண்டேயிருப்பேன். நான் சுயநலம் இல்லாமல் வாழ்வேன். நான் யார் மனதையும் புண்படுத்த மாட்டேன். என் வரையில் என் கடமைகளை ஒழுங்காக செய்வேன் என் கஷ்டங்களுக்கு யாரையும் குறை கூறமாட்டேன். என்னுடைய இயலாமைக்கு என் வினைப்பயன் காரணம் அல்லது என்னிடம் இருக்கக்கூடிய குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் நானே பொறுப்பு என்று பலர் முன்னால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கக் கூடிய மன நிலை வராதவரை மனிதனுக்கு மெய் ஞானம் என்பது சித்திப்பது கடினம்.

எனவே உயர்ந்த கருத்துக்களையும் உயர்ந்த ஞான விஷயங்களையும் புரிந்து கொள்ள மனிதனுக்கு முதலில் பாவங்கள் குறைந்திருக்க வேண்டும். பாவங்கள் குறையாத நிலையில் ஒருவன் ஆன்மீகத்தில் இருக்கலாம். ஆனால் அது மூடத்தனமான ஆன்மீகமாகத்தான் இருக்குமே தவிர அறிவில் சிறந்த ஆன்மீகமாக இருக்க வாய்ப்பில்லை. அப்பேற்பட்ட மனிதனுக்கு போதனை என்பதைவிட முதலில் பாவத்தைக் குறைப்பதற்குண்டான பக்தி வழியையும் சத்திய வழியையும் தர்ம வழியையும்தான் காட்ட வேண்டும். தர்மத்தால் தல யாத்திரையால் அன்றாடம் செய்யும் பிரார்த்தனையால் ஒரு மனிதன்தான் பிறவிகள் தோறும் சேர்த்த பாவங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எங்கே பாவங்கள் குறைகிறதோ அங்குதான் மெய்யான மெய்யறிவு துளிர்விடும். இல்லையென்றால் அறியாமை தொடர்ந்து கொண்டே இருக்கும். அறியாமை மூடத்தனம் நிறைந்த ஆனால் இறைவனை வணங்கக் கூடிய மனிதனிடம் தொடர்பு வைத்துக் கொள்வதும் விவாதம் செய்வதும் அப்படி செய்கின்ற மனிதர்களுக்குதான் துன்பத்தைத் தருமேயன்றி வேறு எந்த நற்பலனையும் தராது. இது போன்ற மனிதர்களிடமிருந்து உண்மையாக மெய் ஞானத்தை தேடுகின்ற மற்ற மனிதர்கள் சற்றே விலகியிருக்க பழக வேண்டும். எதிர்வாதம் செய்யாமல் மௌனம் காக்க பழக வேண்டும். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் ஆன்மீகமும் புரியும். இதுபோல் உலகியலும் புரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 697

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் எத்தனைதான் விளக்கங்களை மனித மன நிலைக்கு ஏற்றாற்போல் நாங்கள் இறைவனின் அருளைக் கொண்டு இயம்பினாலும் இதுபோல் மனித மனம் பக்குவம் பெருந்தன்மை அடையாத வரையில் மனித மனம் சுயநலத்தை விடாத வரையில் மனித மனம் பிற மனிதர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத வரையில் நாங்கள் எத்தனை நுணுக்கமாக விளக்கங்களை எது குறித்து கூறினாலும் மனிதன் ஏற்றுக் கொள்ள மாட்டான் அல்லது ஏற்றுக் கொண்டாலும் அதனை புரிந்து கொள்ள மாட்டான். புரிந்து கொண்டாலும் அதை காட்டிக் கொள்ள மாட்டான். ஏன்? நல்லதை நல்ல செயல்களை நல்ல குணங்களை புரிந்து கொண்டதை போல் காட்டிக் கொண்டாலே அதற்கேற்றாற்போல் நல்லவனாக வாழ வேண்டும். நல்லவனாக வாழ்ந்தால் உடனடியாக நன்மை ஏதும் கிடையாது. நிறைய மன வேதனைகளை சந்திக்க வேண்டும். எனவே எதற்கும் குதர்க்கமாகவே எடுத்துக் கொண்டு பிறரை குற்றம் சாட்டியே பழகி விட்ட மனிதனுக்கு தன்னை போல் பிறர் தன் உணர்வு போல்தான் பிறருக்கும் என்ற பரந்த பெருநோக்கு என்று வருகிறதோ அன்றுதான் இறைவனின் அருள் கடாட்சமே கிட்டும் என்பது மறந்து போய் விடுகிறது. எனவே தான் என்கிற தன் உணர்வு தன்முனைப்பு ஆதிக்க உணர்வு இவையெல்லாம் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் வரையிலும் இறைவனின் பரிபூரண கடாட்சத்தை பெறுவது என்பது கடினம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 696

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய என்றென்றும் நலமே விளையும் என்பதனை யாம் இறைவனின் கருணையினாலே எப்பொழுதும் இயம்பிக் கொண்டே இருக்கிறோம். இதுபோல் மனிதர்களோ அறியாமையால் மாயையில் சிக்குண்டு எப்பொழுதுமே பாவங்கள் செய்தே வாழ வேண்டிய நிலையில் இருப்பதனால் பாவங்கள் குறித்து எச்சரிக்கை செய்வதும் இதுவரை எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களில் பலவற்றை நுகர்ந்தும் சிலவற்றை பக்தியினாலும் பரிகாரங்களினாலும் தீர்த்துக் கொள்வதோ குறைத்துக் கொள்வதோ மாற்றிக் கொள்வதோ இதுபோல் முந்தைய பாவங்கள் எது என்று தெரியா விட்டாலும் விளைந்து வரும் துன்பங்களினால் இது பாவங்களின் எதிரொலி என்று மனிதன் சரியாக புரிந்து கொண்டு நிகழ் பிறப்பிலே விழிப்புணர்வோடு வாழ்ந்து பாவங்களை செய்யாமல் இருக்க கடும் பிரயத்தனம் செய்துதான் ஆக வேண்டும். ஒருபுறம் ஆலயம் சென்று இறைவனை வணங்குவதோடு மறுபுறம் வாழ்வியலில் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் சில தவறுகளை செய்துதான் ஆக வேண்டும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு மனிதர்கள் தவறு மேல் தவறு செய்வதால்தான் பிராயச்சித்தங்கள் கூட பலனளிக்காமல் போய் விடுகிறது. ஒரு பாவத்தை செய்துதான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் வந்து விட்டால் அதனை விட அதனை செய்யாமல் எத்தனை இடர் வந்தாலும் மனிதன் தாங்கிக் கொள்ளலாம். இதற்கு வேண்டியது வைராக்யம். பலகீனமான மனது உடையவர்கள்தான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு தவறுகள் செய்து விடுகிறார்கள்,

நாங்கள் ஏன் ஜீவ அருள் ஓலையிலே பெரும்பாலும் மௌனத்தைக் கடைபிடிக்கிறோம்? எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் எம்முன்னே அமர்கின்ற மனிதனின் விதி இடம் தர வேண்டும். வாக்கைக் கூற இறைவன் அனுமதி தரவேண்டும். இதுபோல் சுவடியை ஓதுகின்றவன் நிகழ் பிறப்பிலே எத்தனை உலகியல் துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாடம் சுவடிக்கென்று செய்ய வேண்டிய கடமைகளை நாள் தவறாது ஆற்ற வேண்டும். எல்லாவற்றையும் விட வருகின்ற மனிதனுக்கு அவன் விதி இடம் தர வேண்டும் அல்லது மனித ரீதியாக கூற வேண்டுமென்றால் இந்த சுவடி மீது நம்பிக்கையும் ஈடுபாடும் ஈர்ப்பும் இயல்பாகவே இருக்க வேண்டும். எண்ணியது நடந்தால் நம்புவேன் என்பதும் நான் எண்ணியது போல் எதுவும் நடக்கவில்லை என்றால் நம்பமாட்டேன் என்பதும் ஒரு குழந்தைத்தனமான முடிவாகும். எம்மை அணுகினால் தர்மம் செய் ஆலயம் செல் பிரார்த்தனை செய் என்றுதான் எப்பொழுதுமே கூறுவோம். அதைவிட்டு உலகியல் ரீதியாக வெற்றிக்கு வழிகாட்டுவதோ அல்லது உலகியல் ரீதியாக சொத்துக்களை சேர்க்க வழிகாட்டுவதோ அல்லது தனத்தை எவ்வாறெல்லாம் பெருக்குவது என்று வழிகாட்டுவதோ எமது பணியல்ல.

இது பக்குவமில்லாத மனிதர்களுக்கு கயப்பாக (கசப்பாக) இருக்கும். அதனால்தான் பெரும்பாலான மனிதர்களை விதியே அழைத்து சென்றுவிடும். விதி வழி வாழ்வதே மனிதனுக்கு எளிமையாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தான் நேர்மையாக ஈட்டிய பொருளால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் செய்து கொள்ளும் செலவு அனைத்துமே புண்ணியத்தின் கழிவாகும். பொது நலத்திற்காக செலவு செய்யும் அனைத்துமே அது காலமாக இருந்தாலும் தன் உழைப்பாக இருந்தாலும் தன் அறிவாக இருந்தாலும் அறிவால் பெறப்பட்ட செல்வமாக இருந்தாலும் அனைத்தும் புண்ணிய வரவாக இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 695

கேள்வி: தற்காலத்தில் இருக்கும் அறிவியல் கருவிகளை அதிகமாக சார்ந்து இருப்பது சாதகமா? பாதகமா?

இன்னும் இன்னும் கருவிகளுக்கு மனிதன் அடிமையாகிக் கொண்டே போவான். உடல் உழைப்பு என்பது குறைந்து கொண்டே செல்லும் ஆனாலும் கூட அப்பொழுதும் வறுமை இருக்கும். அப்பொழுதும் எல்லோருக்கும் எல்லாம் என்கிற நிலை இல்லாமல் சிலருக்கு மட்டும் என்கிற நிலைதான் இருந்து கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் இறைவன் அருளால் மனிதன் இன்னும் இன்னும் புதிய உத்திகளையும் கருவிகளையும் இப்பொழுது உள்ள கருவிகள் மேம்பாடு அடைவதற்குண்டான சூழலையும் ஏற்படுத்தி பிரயாணம் என்பது மிக மிக எளியாக இருப்பது போன்ற சூழல் ஏற்படும். இப்பொழுது நகர்ப்புறங்களிலே நகருக்குள் சுற்றுவதற்கு சிறு சிறு வாகனங்கள் இருப்பது போல அதே நகர்ப்புறங்களுக்கு சென்று வர வானத்திலே பறப்பதற்கு வாகனங்கள் வந்துவிடும். அந்த வாகனத்தை அவனவன் இல்லத்திலிருந்து அவனவனே இயக்குகின்ற நிலை மிக பரவலாக எதிர்காலத்தில் வந்துவிடும்.