ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 350

கேள்வி: மகாபாரதத்தில் வரும் விதுரரை பற்றி சொல்லுங்கள்:

விதுர நீதி என்று ஒரு நீதியே இருக்கிறதப்பா. விதுரனும் ஒரு மகான்தான். அதுபோல் திருதராஷ்டிரனுக்கு விளக்கம் எல்லாம் தந்தது இவன்தான். இதுபோல் அன்றே இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் நடப்பதை எல்லாம் கண்டு உணரும் ஞான திருஷ்டி பெற்றவனப்பா. இந்த சமுதாயத்தில் வாழ்ந்தாலும் பற்றற்று வாழக்கூடிய தன்மையை ஒரு மனிதன் பெற்று விட்டால் ஜனகனைப் போல யோகியாகிறான் ஞானியாகிறான். யோகியாக வேண்டும் ஞானியாக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. ஆனால் சிறு துன்பம் வந்தாலும் கூட சோர்ந்து போய் விடுகிறான். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எவன் ஒருவனால் அதிகமதிகம் அவமானங்களை தாங்க மனம் இடம் தருகிறதோ எவனொருவனால் அதிகமதிகம் பிறரால் ஏமாந்தவன் என்கிற பட்ட நாமத்திற்கு ஆளாக நேரிடுகிறதோ எவனொருவனால் பிழைக்கத் தெரியாதவன் என்று பலரால் கூறப்படுகின்ற நிலை ஏற்படுகிறதோ சராசரி உலகியல் செயல்கள் எல்லாம் பாவங்கள் என்று வெறுத்து ஒதுக்கி எவனொருவன் எம் வழியில் வருகிறானோ அவனுக்குத்தான் ஞான வாழ்க்கை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும். அப்படி வாழ்ந்தவர்களில் விதுரனும் ஒரு உயர்ந்த ஞானியப்பா.

ஆணி மாண்டவ்யர் மிகப்பெரிய ஞானி. மகாபாரத கால கட்டத்திற்கு முன்னால் இருந்து இன்றளவும் வாழ்ந்து வருகின்ற அற்புத ஞானி. அடர்ந்த வனத்திலே தவம் இருந்து வருகின்ற வேளையில் ஒரு முறை காசி மன்னனின் காவலர்கள் சில திருடர்கள் கூட்டத்தை தேடி வருகின்றனர். காரணம் அந்த திருடர்கள் அரண்மனையில் இருந்த தங்க நகைகள் எல்லாம் கொள்ளையடித்து தப்பித்து விட்டனர். அதனால் அந்த கொள்ளை கூட்டத்தை தேடி காவலர்கள் மற்றும் மந்திரிகள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வேளையில் இந்தக் கொள்ளைக் கூட்டமானது ஒரு அடர்ந்த வனத்திலே புகுந்து தப்பித்து ஓடி சென்று கொண்டிருக்கிறார்கள். அது சமயம் அந்த வனத்திலே கடும் தவத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆணி மாண்டவ்ய மகரிஷி. அவரைப் பார்த்த அந்த கொள்ளை கூட்டம் தாங்கள் கொள்ளை அடித்து வந்த தங்க நகைகள் எல்லாம் அந்த ஞானியின் மேல் ஆபரணமாக போட்டு விட்டு சில ஆபரணங்களை அவர் அமர்ந்திருக்கின்ற அந்த மரத்தின் அருகில் போட்டுவிட்டு தப்பித்து ஓடி விடுகிறார்கள். மறுபுறம் இந்த கொள்ளை கூட்டத்தை தேடி வருகின்ற காவலர்களும் அமைச்சர்களும் அதே வனத்திற்கு உள்ளே வருகிறார்கள். இந்த ஞானியை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இவர்தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும் கொள்ளைக் கூட்டத்தினரை தப்பிக்க வைத்து விட்டு இவர் மட்டும் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் தவத்தில் இருப்பது போல் நம்மிடம் நடிக்கிறார் என்று நினைக்கிறார்கள். இந்த நகைகள் எல்லாம் இவர்தான் திருடி வந்து யாருமில்லாத இந்த வனத்தில் அமர்ந்து தன் உடம்பில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாது போல் தவத்தில் இருப்பது போல் நடிக்கிறார் என்று அந்த ஞானியை அப்படியே தூக்கிச் சென்று மன்னனின் முன்னால் நிறுத்துகிறார்கள்.

அப்போது கூட அந்த ஞானி தவத்தில் இருந்து சிறிதும் பிசகாமல் இறைவனின் திருவடியை எண்ணி தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். ஊர் மக்களுக்கெல்லாம் தெரிகிறது இவர் ஒரு மிகப்பெரிய ஞானி இவரை பார்த்தால் திருடன் போல் தெரியவில்லை. இவருக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் மனதிற்குள்ளே புலம்பி வருகிறார்கள். மன்னனும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அவரை கழு வில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார். காவலர்கள் உடனே ஆணி மாண்டவ்யரை கழு வில் ஏற்றி தண்டனை கொடுக்கிறார்கள். அப்பொழுதும் அந்த ஞானி தவத்தில் இருக்கிறார். அந்தக் கழு ஏற்றப்பட்ட அந்த மரத்தோடு தொடர்ந்து தவத்தில் இருக்கிறார். அந்த மரத்தோடு தான் அவர் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் தவத்திலிருந்து இயல்பு நிலைக்கு வரும் பொழுது கழுமரம் ஏற்றப்பட்டு நமக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறார். ஆனால் அரசன் மீதும் காவலர்கள் மீதும் அவருக்கு கடுகளவும் கோபமோ வருத்தமோ இல்லை. எந்த ஒரு வினைப் பயன் என்னை இவ்வாறு தாக்கியிருக்கிறது. நான் செய்த பாவம்தான் என்ன? என்று எமதர்மராஜனிடம் சென்று கேட்கிறார். எமதர்மராஜனும் அவரின் முன் வினைப் பயன் ஒன்றை உரைக்கிறார். அதாவது சென்ற பிறவியில் சிறுவனாக சிறுபிள்ளையாக நீ இருக்கும் பொழுது சிறு சிறு பூச்சி இனங்களை துன்புறுத்தி இருக்கிறாய். அந்த உயிர்களின் துன்பத்தின் விளைவு தான் இன்று உமக்கு இந்தக் கழு வல் ஏற்றி தண்டனை கொடுக்க வேண்டும். என்ற விதியாக மாறி இருக்கிறது. அந்த விதிப்படி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று மாண்டவ்யரிடம் எமதர்மராஜன் கூறுகிறார். மாண்டவ்யருக்கோ கடும் கோபம் வந்துவிட்டது.

நான் செய்த தவத்தை ஏற்றுக் கொண்டாவது என் முன்வினைப் பயனை நீங்கள் என் கணக்கில் இருந்து கழித்திருக்கலாம். நீங்கள் அதை செய்யவில்லை. எனவே நீங்கள் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து துன்பத்தை அனுபவியுங்கள் என்று எமதர்மராஜனுக்கு சாபம் விடுகிறார். அந்த சாபத்தின் விளைவாகத்தான் எமதர்மராஜன் மீண்டும் பிறவி எடுத்து மகாபாரத காலகட்டத்தில் விதுரராக பிறக்கிறார் என்ற ஒரு புராண சம்பவமும் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.