ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 249

கேள்வி: தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றலாமா?

தீபத்தை ஏற்றுவதின் பொருள் இருள் மாயா சக்தி. இருள் அசுர சக்தி. ஔியே தெய்வ சக்தி. எனவே ஔியைத்தான் ஆதிகாலத்தில் தெய்வத்தின் வடிவமாக மனிதன் பார்த்து வழிபாடு செய்து வந்தான். ஔி அக்னியாக மின்னலைக் கண்டு அதும் தெய்வ அம்சமாக இப்படி தீபத்திலும் இறை சக்தியை கண்டு வணங்கி வந்தான். எனவேதான் இன்றும் தற்காலத்திலே எத்தனையோ எண்ணையில்லா விளக்குகள் மனிதன் கண்டு பயன் படுத்தக்கூடிய நிலை இருந்தாலும் முந்தைய கால தீபம் ஏற்றுகின்ற முறையும் இருந்து வருகிறது. இவற்றில் கலப்பில்லா நெய் தீபம் எல்லாவற்றிலும் சிறந்தது. தீபத்தை ஏற்றுவதின் மூலம் ஒரு மனிதன் அந்த சுற்று வெளியை தூய்மைப் படுத்துகிறான். எனவே அந்த தீபத்தீல் அவன் இடுகின்ற பொருளுக்கும் அந்த சுற்று வெளிக்கும் பரவெளிக்கும் தொடர்பு இருக்கிறது. பொதுவாக தூய்மையான நெய்தீபம் அனைவருக்கும் ஏற்றது. எந்த நிலையிலும் அது ஏற்புடையது. அது இல்லாத நிலையிலே இலுப்பை எண்ணையைக் கொண்டு ஏற்றலாம். எள் எண்ணையிலும் ஏற்றலாம். தேங்காய் எண்ணையில் தாராளமாக ஏற்றலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் காலமோ அல்லது இந்தந்த நட்சத்திரங்களில்தான் இந்தந்த தீபங்கள் ஏற்ற வேண்டும் என்பதல்ல. ஆனால் தீபத்தை ஏற்றுகிறேன் என்று ஆலயத்தை அசுத்தப் படுத்தினால் அது கடுமையான தோஷத்தை செய்கின்றவனுக்கு ஏற்படு்த்தும். ஆலயத்தை தூய்மைமாக பராமரிப்பதும் பக்தியில் ஓர் அங்கம்தான்.

கேள்வி: குடும்ப ஒற்றுமைக்கு என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும்:

கருத்து வேறுபாட்டை பகை என்று எண்ணுகின்ற குணம் மனிதர்களிடம் என்றென்றும் இருக்கிறது. கருத்து வேறுபாடு என்பது வேறு. அதை பகையாக்க முயற்சி செய்யாமல் இருப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மையைத் தரும். அதே சமயம் பாவ வினைகள்தான் இது போன்ற உறவு சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து வாழப்பழகி விட்டால் இல்லத்தில் பெரிதும் குழப்பம் இராது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.