பாதாமி குகைக்கோயில்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாதாமி நகரில் பாதாமி குகைக்கோயில்கள் அமைந்துள்ளன. கர்நாடகத்தின் இரட்டை நகரங்களான ஹூப்ளி தார்வாடுக்கு வடகிழக்கில் 110 கிமீ தொலைவில் இக்கோயில்கள் உள்ளன. வரலாற்று நூல்களில் வாதாபி வாதாபிபுரி வாதாபிநகரி என்ற பெயரில் பாதாமி சாளுக்கியரின் தலைநகரமாக 6 ஆம் நூற்றாண்டில் விளங்கியது. இரு செங்குத்தான மலைச்சரிவுகளுக்கு இடையே அமைந்த பள்ளத்தாக்கின் இறுதிப்பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. பாதாமி நகரின் தென்கிழக்குப் பகுதியில் செங்குத்தான மலைச் சரிவில் இக்குகைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. இங்கு நான்கு குகைக் கோயில்கள் உள்ளன. முற்காலச் சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்ட சாளுக்கிய அரசர்களின் தலைநகரான பாதாமியில் அமைந்துள்ள நான்கு குகைக்கோயில்களும் ஆறாம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டவை. நான்கில் மூன்றாவது குகையில் மட்டுமே அக்குகை கட்டப்பட்ட ஆண்டுக்கான சான்றுள்ளது. இக்குகையில் காணப்படும் கன்னட மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் சாளுக்கிய அரசன் மங்களேசனால் கிபி 578/579 இல் இக்குகையின் கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து இக்குகைக் கோயில்களின் காலம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.

முதல் இரண்டு குகைக் கோயில்களிலும் காணப்படும் கலை வேலைப்பாடுகள் ஆறாம் ஏழாம் நூற்றாண்டின் வடதக்காண பாணியிலும் மூன்றாவது கோயிலில் நாகர மற்றும் திராவிடக்கலை ஆகிய இரு பாணிகளிலும் உள்ளன. மூன்றாம் குகையில் நாகர திராவிட பாணிகளின் கலவையான வேசரா பாணி வேலைப்பாடுகளும் கர்நாடாகத்தின் அதிமுற்கால வரலாற்றுச் சான்றுகளாக அமையும் எந்திர சக்கர வடிவ வேலைப்பாடுகளும் வண்ணச் சுவரோவியங்களும் காணப்படுகின்றன. முதல் மூன்று குகைகள் இந்து சமயம் தொடர்பான சிற்பங்களை குறிப்பாக சிவன் திருமால் குறித்த சிற்பங்களையும் நான்காவது குகை ஜைனத் திருவுருங்களையும் கருத்துக்களையும் சித்தரிக்கின்றன. பாதாமியில் புத்தர் கோயிலமைந்த இயற்கைக் குகை ஒன்றும் உள்ளது. இக்குகைக்கோயிலுக்குள் தவழ்ந்துதான் செல்ல முடியும்.

நான்கு குகைக் கோவில்களில் முதலாவது சிவனுக்காகவும் இரண்டாவதும் மூன்றாவதும் திருமாலுக்காகவும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமணக் கோவில் ஆகும். முதன்மையான நான்கு குடைவரைக் குகைக்கோயில்கள் வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் 27 சிற்பங்களுடைய மற்றொரு குகையொன்று 2013 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் இக்குகையிலிருந்து நீர் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. விஷ்ணு மற்றும் பிற இந்துக் கடவுளரின் சிற்பங்களுடன் தேவநாகரியில் அமைந்த கல்வெட்டும் இங்குள்ளது. இச்சிற்பங்களின் காலம் அறியப்படவில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.