திருச்செந்தூர் கோவில்

டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோயிலை ஆக்கிரமித்தனர். பீரங்கித் தளவாடங்களுடன் கோயிலை தங்கள் கொத்தளமாக மாற்றினர். இது கண்ட அப்பகுதி மக்கள் பீதியும் வருத்தமும் கோபமும் அடைந்தனர். திருமலை நாயக்கர் மன்னரிடம் முறையிட்டனர். மன்னர் திருமலை நாயக்கர் சரக்குகளுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் திருச்செந்தூர் கோயிலை உடனடியாகக் காலி செய்யுமாறும் டச்சுக்காரர்களுக்கு உத்தரவிட்டார். டச்சுக்காரர்கள் அந்த உத்தரவை மதிக்காமல் சுற்றுவட்டாரத்திலுள்ள ஊர்களுக்குச் சென்று அவற்றைக் கொள்ளையிட்டு சூறையாடவும் தொடங்கினர். தாங்கள் வெளியேற வேண்டுமானால் 40000 டச்சு நாணயங்கள் பணயமாகத் தரப்படவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தனர். தங்களால் இயன்ற அளவு பணயத் தொகை கொடுப்பதாகச் சொல்லிய ஊர்மக்களின் வேண்டுகோளை டச்சுக் காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆக்கிரமிப்புக்கும் அச்சுறுத்துதலுக்கும் எதிராகத் திருச்செந்தூர் மக்கள் திரண்டெழுந்து போரிட்டனர்.

சுப்பிரமணிய சுவாமியின் திருவுருவச் சிலை உள்ளிட்ட கோயில் சொத்துக்கள் பலவற்றைக் கொள்ளையிட்ட டச்சுக்காரர்கள் மக்கள் கிளர்ச்சி தொடங்கும் முன் தப்பிக்கத் திட்டமிட்டு கப்பல்களில் கிளம்பத் தொடங்கினர். போரைத் தவிர்க்க விரும்பிய திருமலை நாயக்கர் தமது தூதராக வடமலையப்ப பிள்ளை என்பவரை அனுப்பி கோயில் சொத்துக்களைத் திருப்பித் தருமாறு டச்சுக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மன்னரின் மனக்கருத்தை அறிந்த டச்சுக்காரர்கள் பணயத் தொகையை 100000 டச்சு நாணயங்களாகக் கூட்டினர்

கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக்காரர்கள் கப்பல்களில் ஏறித்தப்புவதற்கு முன் கோவிலை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர். அது முடியவில்லை. விக்கிரகங்களை உருக்கித் தங்கத்தை எடுத்துச் செல்லலாம் என்று முயன்ற போது விக்கிரகங்களை உருக்க முடியாமல் அப்படியே எடுத்துக் கப்பலில் போட்டனர். கப்பல் கிளம்பியவுடன் சிறிது நேரத்தில் பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சூறைக் காற்று அடித்தது. கப்பல் நிலைகுலைந்து மூழ்கும் நிலைக்கு வந்தது. உடன் வந்தவர்கள் முருகனுடைய செயல் இது முருகனுடைய விக்கிரங்கள் இருக்கும் வரை நம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று கூறினார்கள். பயந்து போன டச்சுக்காரர்கள் முருகன் விக்கிரகங்களை கடலிலேயே எறிந்தனர். உடனே கடல் கொந்தளிப்பு சூறாவளி அடங்கியது. அங்கிருந்து உடனே தங்கள் நாட்டிற்கு ஓடிவிட்டனர்.

அப்போது திருநெல்வேலியில் ராஜப் பிரதிநிதியாக இருந்த வடமலையப்பபிள்ளை தீவிர முருக பக்தர். சுவாமியின் உருவச் சிலையை டச்சுக்காரர்கள் கொள்ளையிட்டது பற்றிக் கேள்விப்பட்டுப் பெரிதும் வேதனையுற்ற அவர் அதே போன்ற பஞ்சலோக விக்கிரகங்களை வடிவமைத்து பிரதிஷ்டை செய்வதற்காக திருச்செந்தூருக்கு எடுத்து வந்தார். அப்போது வடமலையப்பரது கனவில் முருகப் பெருமான் தோன்றி கடலில் சென்று தனது திருவுருவச் சிலையை மீட்குமாறு ஆணையிட்டார். அதன் படி கடலில் ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் ஒன்று முழுகாமல் மிதக்கும் என்றும் அந்த இடத்தைச் சுற்றி வானில் கருடன் வட்டமிடும் என்றும் அங்கு தான் சிலை கிடைக்கும் என்றும் கனவில் முருகர் கூறினார். வடமலையப்பர் கடலில் இறங்கியபோது அந்த அடையாளங்களுடன் இருந்த இடத்தில் தெய்வச் சிலைகள் கிடைத்தன. அவற்றை மகிழ்ச்சியுடன் எடுத்து வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.

காலனிய வரலாற்றை எழுதிய எம்.ரென்னல் என்பவரது நூலில் (A Description, Historical and Geographical, of India – published in Berlin, 1785) திருச்செந்தூர்க் கோயில் பற்றிய செய்திகள் உள்ளன. டச்சுக் கம்பெனியின் படைத்தலைவர் ஒருவரிடமிருந்து தனக்குக் கிடைத்த விவரங்கள் இவை என்று அவர் குறிப்பிடுகிறார். 1648ல் மீண்டும் திரும்பி வரும் போது கடற்கரையில் இருந்த கோயிலை அழிக்க முயற்சி செய்தனர். பீரங்கிகள் கொண்டு கனரக வெடிகுண்டுகள் அந்தக் கோயில் மீது பொழியப்பட்டன. ஆயினும் அதன் கோபுரம் இவற்றுக்கு சிறிது கூட அசைந்து கொடுக்கவில்லை. லேசான சேதாரம் மட்டுமே ஏற்பட்டது.

வடமலையப்பபிள்ளை கட்டிய மண்டத்தில் இன்றும் ஆவணி மாசி மாத விழாக்களின் போது அவர் பெயரில் கட்டளைகள் நடைபெறுகின்றன. அந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் மேற்சொன்ன தகவல்கள் உள்ளன. வென்றிமலைக் கவிராயர் எழுதிய திருச்செந்தூர் தலபுராணத்திலும் பிள்ளையைப் புகழ்ந்து எழுதப்பட்ட வடமலை வெண்பா என்ற நூலிலும் இந்த தெய்வச் செயல் பற்றிய செய்திகள் உள்ளன.

One thought on “திருச்செந்தூர் கோவில்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.