பசுபதீஸ்வரர்

மூலவர் பசுபதீஸ்வரர். அம்மாள் திரிபுரசுந்தரி. தல விருட்சம் கொன்றை. புராண பெயர் திருஆமூர் கடலூர் மாவட்டம். பழமையான ஆலயம் தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம். இத்தலத்தின் சிறப்பை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார். சுவாமி சன்னதிக்கு எதிரில் அப்பர் சுவாமிகள் நின்ற திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார். அதில் உழவாரப்படை இடது தோளில் சார்த்தப் பட்டிருக்கிறது. தெற்கு பிரகாரத்திலும் அப்பர் திருவுருவம் உள்ளது. அப்பரின் குருபூஜை சித்திரை சதய நட்சத்திரத்திலும் அப்பரின் ஜெயந்தி நாள் பங்குனி மாதம் ரோகிணியிலும் நடக்கிறது. அப்பரின் தாயார் மாதினியார் தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. அப்பரின் அக்காள் திலகவதியாருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு புளிப்பு துவர்ப்பு கசப்பு உவர்ப்பு கார்ப்பு என்ற அறு சுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிபி 7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.

திருவாமூர் என்ற இந்த தலத்தில் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார். தாயார் மாதினியார். சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக் கொண்டார். திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான  சைவ சமயத்திற்கு மீட்டுத்  தரவேண்டும் என சிவபெருமானிடம்  வேண்டிக் கொண்டார். இதையடுத்து திருநாவுக்கரசரை சூலை நோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர் சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கிபி 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

தனித் தேவாரத்திருப்பதிகம் இக்கோயிலுக்கு இல்லை என்றாலும் அப்பர் சுவாமிகள் பாடியருளிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து இறைவரைக் குறித்தே அருளிச் செய்யப் பெற்றதாகும். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமான் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். 3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம் 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.