பாம்பு கோவில்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது நாம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வெமுலவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு ஒரு கோவில் இருக்கிறது. பாம்பு வடிவத்தில் அமைந்த ஆலயம் இது. நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது. பிரமாண்ட வடிவம் கொண்ட பாம்பின் வால் பகுதியில் இருந்து கோவில் பிரவேசம் தொடங்குகிறது. அந்த இடத்தின் வெளிப்பகுதியில் தூணை பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிவருவது போன்ற சிற்பம் வடித்து வைக்கப்பட்டுள்ளது. வளைந்து நெளிந்து கிடக்கும் பாம்பு உருவம் சிமெண்டால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாம்பு வயிற்றுப் பகுதியில் இருந்து உள்ளே செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பாம்பின் வடித்திற்குள் நுழைந்ததும் பக்த பிரகலாதனின் வாழ்க்கை வரலாறு அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கிறது. பக்தபிரகலாதன் பிறந்தது முதல் விஷ்ணு பக்தன் என்பதால் இரண்யகசிபு அவனை கொல்வதற்கு எடுக்கும் முயற்சிகள் மற்றும் இறுதியில் தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்வது வரை சிற்பமாக வடித்து வைக்கப்பட்டுள்ளது. நாகர் வடிவ சிலையில் சுரங்கப்பாதை முடிவுறும் இடத்தில் நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்யும் சிலை அமைந்துள்ளது. இங்கே நாகதேவதைகளின் பழமையான சிலைகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. பாம்பின் உடலுக்குள் செல்வது போல் அமைந்த சுரங்கத்தில் சூரிய வெளிச்சமும் காற்றும் வரும் வகையில் ஆங்காங்கே வட்ட வடிவ ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.