பத்துக் கரங்களில் ஆயுதமேந்தியபடி நடனமாடும் சிவன்

இரவனபாடி குடைவரைக் கோயில் ஐஹோளே கர்நாடக மாநிலத்தில் இந்த சிலை உள்ளது. வலது முன்கை மார்பை அணைத்தபடி இருக்க இடது முன்கை பக்கவாட்டில் விரிந்துள்ளது. உயரமான தலையலங்காரம் இடையில் மடிப்புடன் அமைந்த ஆடை அணிந்து சிவன் ஆடும் நடனத்தை பார்வதி கணபதி முருகன் (முகம் சிதைக்கப் பட்டுள்ளது) தேவலோகப் பெண்கள் மற்றும் சப்த_மாதர்கள் கண்டுகளிக்கிறார்கள். இங்கு சிவன் காட்டும் ஆடல் அந்தகாசுரனை அழித்த பின்பு வெற்றிக்களிப்புடன் ஆடும் நடனம்.

சிவபார்வதி

அர்த்தநாரி நடேஷ்வர் ஆலயம். வேலப்பூர் மஹாராஷ்டிர மாநிலம். இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் யாதவ் ஆட்சியாளர் ராமச்சந்திரதேவ் ஆட்சியின் போது பிரம்மதேவ்ரெய்னா மற்றும் பைதேவ்ரெய்னா என்ற இரண்டு சகோதரர்கள் ஹேமதபந்தி பாணியில் கட்டப்பட்டது. கிருஷ்ண தேவராயரால் 13ஆம் நூற்றாண்டில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

நீரினில் மூழ்கியிருக்கும் சிவலிங்கம்

புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல். இங்கு குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் நவால்சுனை என்ற ஒரு சுனை உள்ளது. இந்த சுனையானது சுமார் 10 அடி ஆழம் கொண்டது. இதன் அடியில் ஒரு பக்கத்தில் குடவறையில் சிவலிங்கம் உள்ளது. இந்த சுனையில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் இந்த சிவலிங்கம் தண்ணீரிலே மூழ்கிய நிலையிலேயே இருக்கும். மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சுனையின் உள்ளே தண்ணீருக்குள் ஒரு மண்டபத்தில் சிவலிங்க திருமேனியாய் காட்சியளிக்கும் இறைவனுக்கு 28 வருடத்திற்கு ஒருமுறை பூஜை நடத்தபட்டு வருகிறது.

இந்த சுனையில் 2018 ம் ஆண்டு முழு கொள்ளளவு நீரையும் மின் மோட்டார் மூலம் நீர் முழுவதும் வெளியேற்றபட்ட பின்பு சிவலிங்க திருமேனியாய் காட்சியளிக்கும் இறைவனுக்கு பூஜைகள் நடைபெற்றது. பூஜை வழிபாடு ஆரம்பித்தவுடன் பாதாளத்தில் இருக்கும் இறைவனின் மீது சூரிய ஒளி பட ஆரம்பித்தது. பல நூற்றாண்டுகளாக நீரினில் மூழ்கியிருக்கும் இந்த இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது துளி கூட பாசியடையாமல் இருந்தது. சுற்றெங்கிலும் இருக்கும் பாறை மலை எல்லாம் பாசிபடர்ந்துள்ள நிலையில் இந்த சுனையின் உள்ளே இருக்கும் சிவலிங்க திருமேனி மட்டும் புதிதாக காட்சியளிக்கிறது. பூஜைகள் முடிந்து அடுத்த சிறிது நேரத்தில் மழை பெய்து சுனை தண்ணீரில் நிரம்பி சிவலிங்கம் மறைந்தது. குடவறை சிவலிங்கம் 1876 ம் ஆண்டு புதுக்கோட்டை மன்னரின் மனைவி சுனை நீரை இறைத்து வழிபட்டதாக கல்வெட்டு உள்ளது. அதன் பிறகு யாரும் நார்த்தாமலை குடவறை சிவலிங்கத்தை பார்த்து வழிட்டதாக கல்வெட்டுகள் இல்லை. இதன் ஒரு பக்கத்தில் குடவறையிலேயே ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த குடவறையும் அதில் மலையையே குடைந்து சிவலிங்கம் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கும் வரலாற்று ஆய்வாளர்கள் இது பல்லவர்கள் அல்லது முத்தரையர் மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.