கைலாசநாதர் திருக்கோயில் 8

மூலவர் கைலாச நாதர் லிங்க உருவத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்ர வடிவங்கள் உள்ளன. சிவனுக்கு ஆஷூதோஷ என்ற திருநாமமும் உண்டு. அதன் பொருள் எதை விரும்பி சிவனிடம் கேட்கிறோமோ அதை முழு மனதுடன் ஆனந்தமாக வழங்குவார் என்பதாகும். அம்பாள் சவுந்திர நாயகி சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் சௌந்தரிய நாயகி அம்பாள் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்னகை பூத்த முகத்தவளாகக் அருளுகிறாள். சிவனின் வாகனமான நந்தி பிரதான சன்னதியின் முன் பிரதோஷ நந்தி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஊர் இராஜபதி. தலமரம் நெல்லி. தீர்த்தம் பாலாவி. இறைவனுக்கு இங்கு சிவனுக்கு ஈசானம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் அகோரம் என 5 முகங்கள் இருப்பதினால் சிவனைச் சுற்றிலும் பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர். பொதுவாக சிவன் கோயில்களில் நவகிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும். காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இதை தென் காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது.

கோயில் நுழைவு முன் மண்டபத்தில் அதிகார நந்தியும் எதிரே பைரவரும் வீற்றிருக்கின்றனர். விநாயகர் 63 நாயன்மார்கள் ஆதிகைலாசநாதர் காளத்தீஸ்வரர் வள்ளி தெய்வயானை சமேத முருகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கைலாச நாதர் அம்பாள் நித்ய அக்னி எனப்படும் விநாயகர் ஆகிய மூவருக்கு மட்டும் மூன்று கலசங்கள் வைத்து தினசரி யாகம் நடத்தி பூஜைகளும் ஆராதனைகளும் நடக்கிறது. சுமார் 4 1/2 அடி உயரத்தில் கண்ணப்ப நாயனாருக்கு தனிச் சன்னதி உள்ளது. இவருக்கு மிருகசீரிட நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு நடந்து வருகின்றன. நவகிரகத்தில் எந்த கிரக தோஷம் இருக்கிறதோ அந்த கிரக லிங்கத்திற்கு பக்தர்களே தங்கள் கைகளால் அபிஷேகம் பூஜை செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இக்கோயில் கேது பகவானுக்கு உரியது. கேது பகவான் தலம் என்றும் கேது கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

உரோமச முனிவர் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது. அங்கே சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார். பின் அந்த இடத்தில் சந்திரகுல பாண்டிய மன்னன் கோயில் எழுப்பினார். அக்காலத்தில் அரசர்கள் இத்தல ஈசனை வணங்கிய பின் போரில் வெற்றி பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இக்கோயில் அழிந்து போனது. இங்கிருந்த நந்தி விக்கிரகம் தற்போது ஓட்டப்பிடாரம் என்னும் ஊரில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அழிந்த கோயிலைப் பற்றிய தாக்கம் நீண்ட நாட்களாக அப்பகுதி சிவனடியார்கள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியார்கள் ஒன்று கூடி சிறப்பான ஓர் கோயிலை அந்த இடத்திலேயே எழுப்புவதற்கு முடிவெடுத்து அதற்கென ஒரு குழுவை அமைத்தனர். சிவனடியார்களின் பெருமுயற்சியாலும் பங்களிப்புடனும் அழிந்து போன இப் புனித ஸ்தலம் 2008 ம் ஆண்டு திருப்பணி தொடங்கி அழகிய வடிவமைப்பில் கட்டப் பெற்றுள்ளது. இதன் கும்பாபிஷேகம் 2011ல் நடந்தது. இத்தனை பெருமைகளைக் கொண்ட இந்த சிவன் கோயிலிற்கு ஆரம்பத்தில் ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. பின்பு 7 நிலை ராஜ கோபுரம் கட்டப்பட்டு 14.06.19 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.