கர்லா குகைக் கோயில்

பண்டய இந்தியாவின் பௌத்த சமயக் குடைவரைக் குகைகள் ஆகும். மூன்றடுக்கு கொண்ட இக்குகைகளின் வளாகம் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணோவாலாவிலிருந்து 11 கீமீ தொலைவில் உள்ள கர்லி கிராமத்தின் மலையில் அமைந்துள்ளது. இப்பௌத்தக் குடைவரைக் கோயில்களை மேற்கு சத்ரபதி மன்னர் நகபானர் கிபி 160ல் எழுப்பினார். இக்குகைக் கோயில் கிமு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. பசால்ட் பாறையை அகற்றி இதுவரை கட்டப்பட்ட பிரமாண்டமான குகைக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். 148 அடி நீளமும் 46 அடி உயரமும் உடையது. நுழைவாயிலில் சிங்க சிற்பங்களால் முடிசூட்டப்பட்ட இரண்டு 50 அடி உயரமான தூண்கள் உள்ளன. வளாகத்தில் பிரதான பிரார்த்தனை மண்டபம் உள்ளது. கர்லா குகைகளின் குடைவரைக் கோயில்களின் வளாகம் ஒளியும் காற்றும் புகும்படியான கற்களால் ஆன ஜன்னல்கள் கொண்டுள்ளது.

இதன் முதன்மைக் குகையில் கிமு முதல் நூற்றாண்டில் பிக்குகள் பிரார்த்தனை செய்ய 14 மீட்டர் உயரம் 45 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண்களில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிங்கம் யானை போன்ற விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. பிக்குகள் தங்குவதற்கான இடங்கள் இக்குகை வளாகத்தில் குடையப்பட்டுள்ளது. குகைகள் வளைவுகளுடன் கூடிய நுழைவு வாயில்கள் கொண்டது. இங்குள்ள தூண்களில் இக்குடைவரைக் குகைகளை எழுப்பதற்கு நன்கொடை தந்தவர்களின் பெயர்கள் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளது. குகையின் வெளிமுகப்பில் உள்ள மரச்சிற்ப வளைவுகளில் சிக்கலான விவரங்கள் உள்ளன. குகையின் மையப்பகுதியில் உள்ள பெரிய லாட வடிவ தோரணத்தில் அழகிய பூவணி வேலைபாடுகள் கொண்டுள்ளது. மூடிய கல் முகப்பிற்கும் தோரணத்திற்கும் இடையே அசோகத் தூண் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மழை நீரை தேக்கி வைத்து குடிப்பதற்கு பாறையை குடைந்து கிணறு போன்று வெட்டப்பட்டுள்ளது.

இவ்விகாரை 15 மீட்டர் உயரமுள்ள இரண்டு பெருந்தூபிகளுடன் இருந்தது. அதில் ஒன்று சிதிலமைடந்துள்ளது. நன்குள்ள வேறு ஒரு தூபியில் மும்பைப் பகுதியின் கோலி இன மக்கள் வணங்கும் தெய்வமான இக்வீராவின் சிற்பம் காணப்படுகிறது. ஒரு பெரிய குதிரைவாலி வளைவில் அமைக்கப்பட்ட சூரியன் சாளரத்தில் ஒளிரும் ஒளி அற்புதமாக பரவுகிறது. சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு ஒரு காலத்தில் ஓவியங்களும் இருந்தன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.