இராமானுஜரின் ஐந்து குருக்களில் திருக்கோட்டியூர் நம்பியும் ஒருவர். இவரிடத்தில் அஷ்டாக்ஷர மந்திரோபதேசம் பெறுவதற்காக 36 முறை அலைந்தார். அத்தனை முறையும் இன்னும் உனக்கு பக்குவம் வரவில்லை என்று இராமானுஜரை திருப்பி அனுப்பி விட்டார் குருவாகிய நம்பி. அதனால் தினமும் தன்னுடைய குருவை சந்திக்க வேண்டும் என்று திருக்கோஷ்டியூரிலேயே தங்கி தினமும் குருவை தரிசித்தார் இராமானுஜர். மார்கழி மாதம் ஒரு நாள் அதிகாலையில் இராமானுஜர் வீதியில் சங்கீர்த்தனம் செய்து கொண்டே தன்னுடைய குருவை பார்க்க சென்று கொண்டிருந்தார். மார்கழி மாதம் என்பதினால் ஒவ்வொரு வீட்டு வாசலில் கோலம் போட்டு அதில் ஒரு பூ வைத்து விளக்கு வைப்பார்கள். இராமானுஜர் குருவின் வீட்டு வாசலில் வந்து நின்றார். அப்போது நம்பியின் வீட்டு வாசலில் அவரது பெண் இருட்டில் கோலம் போட்டு கையில் விளக்குடன் நிற்பதைப் பார்த்ததும் ‘ஆ’ என்று கத்தி மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அந்தப் பெண் பயந்து வீட்டின் உள்ளே ஓடிச் சென்று நம்பியிடம் நமது வீட்டு வாசலில் ஒருவர் திருப்பாவை பாடிக் கொண்டே வந்து நின்றார். வந்தவர் என்னைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என்று சொன்னாள். இதனைக் கேட்ட நம்பி அவர் என்ன பாட்டு திருப்பாவையில் பாடிக் கொண்டு வந்தார் என்று கேட்டார். பந்தார் விரலி பாடல் என்றாள்.
பந்தார் விரலி பாடலின் அர்த்தம் என்ன என்றால் கையில் விளக்குடன் அந்த மகாலக்ஷ்மியின் தரிசனம் எனக்குக் கிடைக்கிறது என்று அர்த்தம். அப்போது திருக்கோஷ்டியூர் நம்பி தன் மகளிடம் சொல்கிறார். அவன் மேல் ஒன்றும் குறையில்லை. அந்தப் பாட்டில் மகாலட்சுமி எதிரில் வந்தாய் என்ற வார்த்தையை அவன் பாடும் போது அவன் முன் நீ கையில் விளக்குடன் நின்றிருப்பாய். அந்தப் பாட்டில் அவன் இலயித்து இருந்ததால் உன்னைப் பார்த்ததும் மகாலட்சுமி நிற்பது அவன் கண்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆகையால் அவன் அப்படியே மயங்கி விழுந்து விட்டான் என்றார்.
இதுபோல் எந்தப் பாட்டு நாம் பாடினாலும் அந்தப் பாட்டில் நம்மை ஐக்கியப்படுத்தி இலயித்துப் பாடும் போதுஅதன் பலன் முழுமையாக இருக்கும். மந்திரங்கள் நாம் ஜெபிக்கும் போதும் மந்திரத்தின் தெய்வத்தை நினைத்துக் கொண்டே தன்னை அதில் ஐக்கியப்படுத்தி ஜெபம் செய்வதினால் அந்த மந்திரத்தின் சித்தி விரைவாக கிடைக்கும்.
திருப்பாவை பாடல் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: மதம் கொண்ட வலிமையான யானையை தன்னிடத்தே கொண்டனும் போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! ((நப்பின்னை என்றாள் கண்ணனுக்கு முறைப்பெண் என்று பொருள்) வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத நீ உனது செந்தாமரை மலர் போன்ற கைகளில் உள்ள வளையல்களின் ஓசைகள் ஒலிக்கும் கைகளால் மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.
விளக்கம்: பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். ஏன் என்றால் நமது வீட்டில் அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் எதற்கடா அதெல்லாம் என்பார். அதையே அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொன்னால் அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்க மாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்து விட்டால் அவனால் தப்பவே முடியாது. கண்ணனின் மனைவி நப்பின்னையை (மகாலட்சுமியை) எழுப்பி கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
இந்த திருப்பாவைப் பாடலை தினமும் இராமானுஜர் இலயித்து பாடியது போல் பாடி பரந்தாமனை வணங்கினால் வாழ்வில் குன்றாத செல்வமும் குறையாத மகிழ்வும் தந்து நம்மை உய்விப்பான் மாலவன்.




























